சந்திக்க வருவாயோ?-61-3

அத்தியாயம் 61 (Pre-Final1) – 3

சந்தோஷ் மட்டுமே இரத்தம் கொடுப்பதற்காக போயிருக்க மற்ற அனைவரும்… அறுவைச் சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருந்த அறையின் முன்னால் அமர்ந்திருந்தார்கள்

ஆளுக்கொரு மூலையில் அமர்ந்திருந்தனர்… சந்தியாவும் அங்கு தான்...அங்கிருந்த பெஞ்சில்.... தலையைச் சுற்றி துப்பட்டாவைப் போட்டு முகத்தை மறைத்தபடி தான் அமர்ந்திருந்தாள்

அவளுக்கு யாரையுமே பார்க்கப் பிடிக்கவில்லை… பிடிக்கவில்லை என்பதை விட… பார்க்க முடியவில்லை என்பதே உண்மை…

கைகளைக் ஒன்றோடொன்று கட்டியபடி… குனிந்தவளாக தன் காலின் கட்டை விரலையே பார்த்துக் கொண்டிருந்தாள்… மனதின் அழுத்தத்தை எல்லாம் அதில் கரைத்து விடுவது போல…


கண்ணீரை அடக்கும் பொருட்டு உதட்டைப் பற்களால் கடித்துக் கொண்டிருந்தபடியே அமர்ந்திருந்தாள் சந்தியா.… பற்களால் அழுந்திய உதடுகளில் இருந்து எந்நேரம்.. இரத்தம் வருமோ எனும்படி… தன்னைக் கட்டுப்படுத்த தன் உதடுகளைப் புண்ணாக்க ஆரம்பித்து இருந்தாள் சந்தியா…

சந்தியா தனியே எல்லாம் அமர்ந்திருக்க வில்லை… சந்தியாவின் ஒருபுறம் சிவா இருக்க… அவளின் இன்னொருபுறமோ வசந்தி அமர்ந்திருந்தார்…

வசந்திக்கு மகளின் நிலையைக் கண் கொண்டு பார்க்க முடியவில்லை… மகளுக்கு என்ன சொல்லி ஆறுதல் கூறுவது என்று புரியாமல் மனதால் துடித்துக் கொண்டிருக்க…

சிவாவுக்கோ அதை விட கவலையைக் கொடுத்தது…. சந்தியாவின் அமைதி….. அதிலும்… இங்கு வந்ததில் இருந்து…. அமைதியாக வெறித்தபடி சந்தியா குனிந்து இருந்தது… சிவாவின் மனதை இன்னும் பிசைய

“சந்தியா” என்று சிவா அழைக்க…

திடிரென்று அழைத்த அவன் குரலில் சட்டென்று நிமிர்ந்து அவனைப் பார்த்தவள்… வெற்றுப் புன்னகையைப் படரவிட்டவள்…. ஏன் தன்னை அழைத்தான் என்றெல்லாம் கேட்கவில்லை…

“எந்த தோள்ல சார்… வலது பக்கமா” என்று தன்னை அழைத்தவனிடம் இவள் கேள்வி கேட்க ஆரம்பிக்க

சிவா என்ன பேச வந்தானோ அவனுக்கே மறந்து போனது…. ஆக அவளிடம் கேட்க வந்ததை மறந்து விட்டு

“ஆம்” என்று தலை ஆட்ட…

மீண்டும் அமைதி ஆனவள்… சற்று நேரம் குனிந்தபடி இருந்தவள்… இப்போது நிமிர்ந்து அவனைப் பார்த்து

“ஆபரேஷன் முடிஞ்சதுனா சரி ஆகிரும் தானே… சிவா சார்” என்று கேட்க…

அவள் கையை இவன் ஆறுதலாக அணைக்க…

“அப்போ ஏன் சார்… இப்படி இருக்கீங்க” என்றவள் சொன்ன படியே அவன் கண்களைப் ஆராய ஆரம்பிக்க…

சந்தியாவின் நம்பிக்கையைப் பார்த்து சிவாவுக்கு தைரியம் வர…. நம்பிக்கையாகப் புன்னகைக்க… அந்த நம்பிக்கை புன்னகை தந்த நிம்மதியில் சந்தியா தன் தாயின் தோளின் மீது சாய்ந்து கண்களை மூடினாள்…

உள்ளே அறுவைச் சிகிச்சை இன்னும் நடந்து கொண்டிருந்ததால்… சந்தியாவால் ராகவ்வைப் பார்க்க முடியவில்லை… இவளும் பார்க்க வேண்டுமென்று ஆர்பாட்டம் எல்லாம் பண்ணவில்லை… இத்தனைக்கும் சிவா அழுத்திக் கேட்டான் தான்…

“இல்லை பரவாயில்லை… ஆபரேஷன் முடிந்த பின்னால பார்த்துக்கலாம் சிவா சார்” என்று சொல்லி விட சிவாவும் கட்டாயப்படுத்த வில்லை… மிருணாளினியின் அழுகைச் சத்தம் மட்டுமே அந்த அறையில் வியாபித்திருக்க… மற்ற அனைவரும் சந்தியாவையே பார்த்துக் கொண்டிருக்க… அம்ரீத் கூட இங்கு வந்து சந்தியாவைப் பார்த்து விட்டுத்தான் போனார்..

ஒவ்வொரு நிமிடமும் கனமான நினைவுச் சுமைகளை தாங்கிய நிமிடங்களாக அடுத்த நிமிடத்திற்கு கடினப்பட்டு பயணித்துக் கொண்டிருக்க…

அந்த அறுவைச் சிகிச்சை அறையில் இருந்து வெளியே வந்த செவிலிபெண்.. பரபரப்பாக வர… சந்தியாவைத் தவிர அனைவரும் ஒரே நேரத்தில் எழுந்திருக்க… சிவா அந்த நர்ஸிடம்…

“சிஸ்டர்… ராகவ் எப்படி இருக்காரு…” என்று கேட்க

“ஆபரேஷன் போயிட்டு இருக்கு சார்… அதுவரை ஒன்றும் சொல்ல முடியாது” என்று அந்த செவிலிப்பெண் சொல்லிவிட்டு நகன்று விட்டார்…

இவர்களின் உரையாடல் அனைத்து ஹிந்தியில் இருக்க.. திடீரென

“ஏன் சார்… இவ்ளோ லேட் பண்ணுனீங்க… ஏகப்பட்ட ரத்தம் வெளியேறி இருக்கு… டாக்டர் தான் அல்ரெடி சொல்லி இருப்பாரே” என்றபடி தமிழ்க் குரல்…

சிவாவின் தோரணையான தோற்றத்தில்… அவனைத் தயங்கிப் பார்த்தவளாக…

“ரொம்ப கிரிட்டிக்கலாத்தான் இருக்கு போல சார்… உள்ள அப்டித்தான் பேசிக்கிட்டாங்க… வெளில ஒண்ணும் சொல்ல மாட்டாங்க” என்று உண்மையைப் போட்டு உடைத்திருந்தாள் அங்கு அறுவைச் சிகிச்சைகளுக்கு உதவியாக எடுபிடி வேலைக்கு இருக்கும் பெண்… அவர்கள் எல்லாம் உள்ளொன்றும் வெளியொன்றும் வைத்து பேசத் தெரியாதவர்கள்… பட்டென்று போட்டு உடைத்து விட்டாள்…

அவள் பூர்வீகம் தமிழ்நாடு என்பதால் நிரஞ்சனா தமிழ் என்பதைக் கண்டுபிடித்து நிரஞ்சனாவோடு பேசியிருந்தாள்… அறுவைச் சிகிச்சை நடைபெறும் ராகவ்வுக்கு திருமணம் முடிந்து ஒரு மாதம் தான் ஆகி இருக்கின்றது என்று நிரஞ்சனா மூலம் தெரிந்தும் கொண்டாள்…

இப்போது அந்த உதவிப் பெண்ணுக்கு பரிதாபம் ஒருபுறம் இருந்தாலும்… உள்ளே இருப்பவனின் மனைவி யாரென்று தெரிய வேண்டும் என்ற ஆர்வமும் இருந்தது… கதறி அழுது கொண்டிருக்கும் அந்தப் பெண்ணா.. அமைதியாக இருக்கும் இந்தப் பெண்ணா…

நிரஞ்சனாவைப் பார்க்க… நிரஞ்சனா சந்தியாவைப் பார்க்க… சந்தியாவைப் பார்த்த அந்தப் பெண்ணின் பார்வையில் அப்படி ஒரு பரிதாபம் வந்திருந்தது…

சந்தியா கண்களைத் திறக்கவே இல்லை… சந்தியாவுக்கு நன்றாகவேத் தெரிந்தது… தன்னை அந்தப் பெண் … உறுத்து விழிக்கிறாள் என்று…

சந்தியா ஏதாவது கேட்பாள் என்று அந்தப் பெண்ணும் அவளையேப் பார்க்க… சந்தியா கண்களைத் திறந்தால் தானே…

சந்தியாவைப் ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டு… வேக வேகமாக எட்டுக்கள் எடுத்து வைத்து சென்றவள்… அதே வேகத்தில்… இரத்தம் அடங்கிய பாட்டிலோடு வந்திருந்தாள்… யாருக்கும் தெரியாமல் நடக்கும் அறுவைச் சிகிச்சை என்பதால் எல்லாவற்றுக்கு நேரடியாக அந்தப் பெண்ணே அடிக்கடி வெளியே வந்து கொண்டிருந்தாள்…

அப்படி ஒரு முறை மீண்டும் வந்த போது… வசந்தியிடம்

“உன் பொண்ணாம்மா… “ என்று கேட்டவள்…

“அந்த பாய்கட் வச்சிருந்த பொண்ணு சொன்னுச்சு… கல்யாணமாகி ஒரு மாசம் தான் ஆகி இருக்காமே… அதெல்லாம் ஒண்ணும் ஆகாதுன்னு சொல்லி வைங்க” அவளுக்கு சந்தியா கண் திறந்து பார்க்க வேண்டும் என்ற எண்ணமோ… ஏதோ தெரியவில்லை அந்த பணிப் பெண் அப்படிச் சொல்லிவிட்டுப் போக…

சந்தியா அப்போது கண்களைத் திறக்கவே இல்லை…. ஆனால்

வெற்றுக் கூடாக இருந்த இதயத்தில்… இப்போது ஏதேதோ என்ணங்களால் வெகு வேகமாக அடைக்கப்பட… அத்தனையும் தேவையில்லாத எண்ணங்கள்… அந்த எண்ணங்கள் தந்த கனம் தாங்காமல்… கண்கள் கண்ணீரை வெளியேற்றத் தயாராக இருக்க… பிடிவாதமாக அடக்கி அதை உள்ளுக்குள் இழுக்க… முடியவில்லை அவளால்…