அத்தியாயம் 95-3
கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின் புதிய இல்லத்துக்கான முதல் கல்லை அடிநாட்டினாள்… அதன் பின் பள்ளியில் சேர்ந்தாள்… அவளின் அறிவுக்கு அவள் போகாமல் விட்ட நாட்களெல்லாம் கணக்கில் வருமா என்ன… நேரடியாக ஆறாம் வகுப்பிலும் சேர்ந்திருந்தாள் கண்மணி… நாராயணன் ஒரு புறம் கண்மணியின் மேல் இருந்த பாசத்தில் அவளை தன் வட்டத்துக்குள் கொண்டு வந்திருக்க… கண்மணி படித்த பள்ளிக்கூடத்தை மட்டும் விடுவாரா என்ன… அதையும் தனக்கு கீழ் கொண்டு வந்தார்… அதே நேரம் கண்மணியை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யவில்லை… அவளை அவள் போக்கிலேயே விட்டு தன் பாசத்தைக் காட்டினார் நாராயணன்…
நட்ராஜோ தன் மொத்த பொறுப்பையும் மகளிடம் விட்டு விட்டு… அவளே ராணி… மகாராணி என்னும் அளவுக்கு வளர்க்க ஆரம்பித்திருந்தார்…
வைதேகியிடமும் அர்ஜூனிடமும் மட்டுமே அவளிடம் ஓரளவுக்கு இயல்பாக பேசிக் கொண்டிருக்க… கண்மணி இயல்புக்குத் திரும்புகிறாள் என ஒவ்வொருவருமே எண்ணிக் கொண்டிருக்க… அவளின் பதிமூன்றாவது அகவையில்தான் தெரிந்தது கண்மணி இன்னுமே அவர்களிடம் நெருங்கவில்லை… விலகித்தான் இருக்கிறாள் என்பது…
கண்மணியின் முகத்திலும் தேகத்திலும் குழந்தைப் பருவத்தில் இருந்து இளங்குமரிக்கான மாற்றங்கள் மெல்ல ஏற்பட்டிருக்க… உயரம் கூடியவள்… அதே நேரம் உடல் மெலியவும் ஆரம்பித்திருக்க… வைதேகியும் சுதாரிக்க ஆரம்பித்தவர்…. அவளிடம் சொல்ல வேண்டியவைகளைச் சொல்ல ஆரம்பித்து… அவளின் உணவு முறைகளையும் மாற்ற ஆரம்பித்திருக்க… கண்மணி எல்லாம் கேட்டுக் கொண்டாள் தான்…
நாட்கள் செல்லச் செல்ல… கண்மணி சிறுமி என்ற பருவத்தைக் கடந்திருந்தாள் என்பதை அவள் உயரமும்… உடல் வளர்ச்சியும்… முகமும் மறைக்காமல் சொல்ல.…
“கண்மணியிடம் இத்தனை மாற்றங்கள் தெரிந்தும்… அவள் இன்னும் பூப்பெய்தவில்லையே“ எனக் கவலை கொண்டவராக…. கண்மணியை மருத்துவரிடம் கூட்டிச் செல்ல நினைத்து… கண்மணியை மருத்துவரிடம் அழைத்துப் போவதற்காக அவளிடம் பேச
“எதுக்கு பாட்டி… “ஒரு வருசத்துக்கு முன்னாடியே நான் பெரிய பொண்ணாகிட்டேனே… நான் மேனேஜ் பண்ணிக்கிட்டேன்… ஹான் நீங்க சொன்னதையும் காதுல வாங்கிட்டேன்… “
வைதேகி வாயடைத்துப் போய்ப் பார்க்க… அதிர்ச்சியில் அவருக்கு மூச்சு நில்லாமல் இருந்ததே என்பது வரை சந்தோசம்… கண்ணில் வந்த நீரை உள்ளிழுத்துக் கொண்டவராக
“சடங்கு செய்யனும்டா…. தோஷம் கழிக்கனும்டா” என்ற போதே
“எனக்கு ஏதும் தேவையில்லேன்னா… தேவையில்லதான்…” கண்மணி ருத்ர அவதாரம் எடுத்திருக்க… வைதேகியும் என்ன செய்வார்… கண்மணியிடம் போராடவில்லை… ஆனாலும் அவருக்கு நிலை கொள்ளவில்லை…. நாராயணனிடம் சொல்ல…
“இப்போ என்ன பண்ணச் சொல்ற… அதான் என் பேத்தி சமாளிச்சுட்டாள்ள… அவதான் வேண்டாம்னு சொல்றாளே… ஏன் அவளைக் கட்டாயப்படுத்துற” வழக்கம் போல தன் பேத்திக்கு ஜால்ரா அடித்திருக்க… அர்ஜூனோ அதைவிட…
“பாட்டி இந்தியாலதான் இதெல்லாம் பெரிய விசயம்… என் பொண்டாட்டி இப்போவே அமெரிக்கவாசி ஆகிட்டா” அவனும் இதை இலேசாக எடுத்துக் கொள்ள…
”என்ன பேசறேள்… கன்னித் தீட்டு கழிக்காமல் இருக்கலாமா… அவ என்ன அனாதையா என்ன… நாளைக்கு அவ குழந்தை குட்டியோட புருசனோட நல்லா வாழனும்… “
“எல்லாம் பண்ணின உன் பொண்ணு நல்லா வாழ்ந்துட்டாளா… அடிப்போடி…” என நாராயணன் அவளைக் கடியத்தான் செய்தார்… வைதேகியால் சுலபமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை..… விட்டு விட முடியவில்லை…
தன் வீட்டு பணிப்பெண்களை வைத்து அனைத்து ஏற்பாடுகளையும் தானே செய்தவராக… கண்மணியையும் அழைத்தவராக… அவளுக்கு காது குத்தும் ஏற்பாடைச் செய்திருப்பதாகச் சொன்னவர்…
“பெரிய பொண்ணாயிட்ட… கண்டிப்பா காது குத்தனும்… இவ்ளோ நாள் இப்படி இருந்திருக்கலாம்… இனி அப்படி இருக்கக் கூடாது… “ என்றவர்… எண்ணங்களில் தன் மகள் ஆசையாகப் போட்டிருந்த மூக்குத்தியைக் கூட கடைசியாக கழட்டி வைத்துச் சென்றதை நினைத்து கண்ணீர் வந்து விட… அதைத் தன் பேத்தியிடம் சொன்னவர்…
“நீயும் குத்திக்கிறியா கண்மணி… ஆனா அவ குத்திருக்கான்னு வேண்டாம்னு சொல்வியே..”
அவரைப் பார்க்கவே கண்மணிக்கும் பாவமாகத்தான் இருந்தது…
என்ன நினைத்தாளோ தெரியவில்லை… ஏன் அந்த மூக்குத்திக்கு ஆசைப்பட்டாள்… அவளுக்கே இன்று வரைத் தெரியவில்லை… ஒருவேளை சிறு வயதில் மனதில் பதிந்த அமுதினியின் ஞாபகத்தினாலா… இல்லை அவள் பார்த்த புகைப்படத்தில் எல்லாம் பவித்ராவின் மூக்குத்தி அவளை ஈர்த்ததாலா இன்று வரைத் தெரியவில்லை
“ஏன் உங்க பொண்ணு தோடு கூட போட்ருந்தாங்க தானே… நான் அப்படியெல்லாம் யோசிக்கலை…” என்றவளிடம்
“அப்போ குத்திக்கிறியாடா..” பேத்தியிடம் அருகே வர… வழக்கம் போல அவரின் அருகாமையை விலகியவளாக
”குத்திக்கிறேன்… ஆனா உங்களுக்காக…” என்றவள்…
“ஆனால்” என்று இழுத்து… தயங்கி பின் சொன்னாள்…
“எனக்கு உங்க பொண்ணோட மூக்குத்தி தர்றீங்களா…” கண்மணியா கேட்டாள்… அதுவும் தன் மகள் அணிந்திருந்த அதே மூக்குத்தி்யை…. வைதேகிக்கு நம்பவே முடியவில்லை… தன் பேத்தி ஆசையோடு அவளிடம் முதன் முதலாகக் கேட்டது… கண்மணி விசயத்தில் சந்தோசப்பட்டாலும் துக்கப்பட்டாலும் ஒன்று நாராயணன் இல்லை அர்ஜூன் இவர்களிடம் சொல்லி விடுவார்…இதையும் சொல்லாமல் இருப்பாரா… ஆசையாக தன் மகளின் மூக்குத்தியை எடுத்த போதே அதில் இருந்த அது வைரக் கல் சிறியதுதான்… ஆனால் அது மிகவும் பழையது…
வைதேகி யோசனையுடன் அவர்களின் ஆஸ்தான ஜோதிடரை அணுக…
“இல்லம்மா பழைய வைரம் வேண்டாமே…” சொல்லி விட… பேத்தி மகளின் மூக்குத்தியை ஆசையாகக் கேட்டாளே… அர்ஜூனிடமும் நாராயணனிடமும் மீண்டும் கவலைப்பட்டிருக்க.. அர்ஜூன் தான் அந்த யோசனைச் சொன்னான்…
“தாத்தா… அன்னைக்கு போலிஸ் கொடுத்த கண்மணியோட ப்ரேஸ்லெட் வைர ப்ரேஸ்லெட்னுதானே சொன்னீங்க… அது அத்தையோடதா இருக்கும்னுதானே சொன்னீங்க.. அதுல ஒரு கல்லை எடுத்து செக் பண்ணிட்டு அத்தையோட மூக்குத்தில செட் பண்ணிருங்க…”
நாராயணன் யோசனையுடன் இருக்க…
“அதை அந்த நட்ராஜ்கிட்ட கொடுக்கலாம்னு இருந்தேன்… அவன் வாங்கிக் கொடுத்ததா இருக்கும்னு” தயங்கிய நாராயணனிடம்
“அந்தாளு பத்து பைசாவுக்கே வழி இல்லாதவன்… கண்ணாடி வளையலுக்கே அவன் யோசிப்பான்… அவர் அத்தைக்கு அந்த ப்ரேஸ்லெட்டை வாங்கிக் கொடுத்திருப்பானா… அப்படியே கொடுத்தாலும்… கண்மணிக்குத்தான் நாம கொடுக்கப் போறோம் …இப்போதைக்கு அவகிட்ட அதை எல்லாம் காட்டாதீங்க… அவள் கிட்ட அப்படியே கொடுத்தாலும்… அந்த ப்ரேஸ்லெட்னு சொல்லாதீங்க.. அது அவளைக் கஷ்டப்படுத்தப் போகுது”
“ஆனாலும் அது அவளோட உரிமை… அவளோட பொருளை அவகிட்டயே கொடுக்கனும்… ஹான் நான் தான் அவளுக்கு அதை மறுபடியும் கொடுக்கனும்…“ என்று வேறு சொல்லியும் முடித்திருக்க… அர்ஜூன் சொன்னது போலவே கண்மணி அணிந்திருந்த காப்பில் இருந்த வைரத்தை எடுத்து அனைத்தும் சரி பார்த்து அதன் பின் பவித்ராவின் மூக்குத்தியில் அதை இணைத்தும் இருந்தார்… அதுமட்டுமல்லாமல்… காது குத்தும் போதே… அதை சாக்காக வைத்து கண்மணியே அறியாமல் அவளுக்கு சடங்கும் சுற்றி கண்மணியின் பூப்புனித நீராட்டையும் முடித்திருந்தார்…
இங்கு…மகளின் புதிய தோற்றத்தில் நட்ராஜுக்கு சந்தோசம் கொண்ட போதும்… மகள் மறைத்த விசயத்தில் நட்ராஜ்ஜுக்கு மிகப் பெரிய கோபமே…
மகளிடம் பேசாமல் அவள் கையால் சாப்பிடாமல் தன் பிடிவாதத்தைக் காட்டினார்தான்… ஆனால் கல்லோடு மோதினால் யாருக்கு நஷ்டம்… அவரே சில நாட்கள் கழித்து பேசியும் இருக்க… கண்மணி அவர் பேசாமல் இருந்ததையும் கண்டு கொள்ளவில்லை… அவர் பேசியபோதும் அவரிடம் பேசாமல் இல்லை…
முதன் முதலாக நட்ராஜ் அன்றுதான் மகளின் நிலையை உணர்ந்தார்… கிருத்திகாவிடம் எல்லாவற்றையும் சொல்லி அழுதிருக்க
“என் பொண்ணு… ஏதோ வாழனும்னு வாழ்றா கிருத்தி… யாரையுமே நெருங்க விட மாட்டேங்கிறா… பவியோட அம்மாவைக் கூட தள்ளித்தான் நிறுத்தி வச்சுருக்கா… எனக்கு அவ வருங்காலத்தை நெனச்சு பயமா இருக்கு கிருத்தி… நான் ஆசைப்பட்றதெல்லாம் என் பொண்ணுக்கு ஒரு சாதாரண வாழ்க்கை… அது கூட கிடைக்காதா… என் பொண்ணு அப்படி என்ன பாவம் பண்ணினா…”
“அந்த அர்ஜூன் என் பொண்ணுக்கு அந்த வாழ்க்கையைக் கொடுப்பான்னா… நான் என் பொண்ணை விட்டு கூட தள்ளி இருக்க தயார்… நீ சொல்லு கிருத்தி… அவன் கால்ல விழுந்து கூட சேவகம் பண்ணத் தயாரா இருக்கேன்”
கிருத்திகா வெறித்தவராக
“அர்ஜூன் அவள நல்லா பார்த்துப்பான் தான்… பாதுகாப்பான் தான்… ஆனால் கண்மணியை கண்மணியா மாத்துவானா அது தெரியல… அவனோட அக்கறைலாம் வேற லெவல்… என்கிட்ட அவன் அவளுக்காக மட்டுமே பேசுவான்…” நட்ராஜின் முகத்தையேப் பார்த்த கிருத்தி..
”உங்களுக்கு ஒரு கதை சொல்றேன்… புரியும்னு நினைக்கிறேன்”
“வானத்துல ஒரு பறவை சந்தோசமா பறந்துட்டு இருந்ததாம்… அப்போ ஒரு வேடன் விட்ட அம்புல காயம் பட்டு… கிட்டத்தட்ட சாகுற நிலைமைல ஒரு அரண்மனையில விழுந்ததாம்…”
“அந்த அரண்மனையோட இளவரசன் அதைப் பார்த்துட்டு… பரிதவிச்சு… அந்தப் பறவைக்கு காயம்லாம் சரி பண்ணினானாம்… அதே நேரம் அந்தப் பறவை மேலயும் அன்பை வைக்க ஆரம்பிச்சானாம… தான் தான் அந்தப் பறவைக்கு எல்லாமேன்னு அதைக் கண்ணுக்குள்ள வச்சுப் பார்த்துக்க ஆரம்பிச்சானாம்… அந்தப் பறவையும் அவனோடயே இருந்ததாம்… அந்தப் பறவை மேல அவ்ளோ அன்பை வைத்திருந்தவன்… அதுக்கு தங்கக் கூண்டு… செஞ்சு தங்கூடவே வச்சுகிட்டானாம்… அது சிறகடிச்சு பறக்க நினைத்தாலும் அதுக்கு ஏதாவது ஆபத்து மறுபடியும் வந்துருமோன்னு…… தன் வட்டத்துக்குள்ளயே பாதுகாத்து வச்சு அழகு பார்த்தானாம்… அந்தக் கிளி மீதான அவனோட இந்த அன்பைப் பார்த்து அந்த ராஜ்ஜிய மக்களே அந்தக் கிளி மீது பொறாமைப்பட்டாங்களாம்… ”
நட்ராஜ் அமைதியாக இருக்க
”அந்தப் பறவை சந்தோசமா இருந்துச்சா… இதுக்கான பதில் தான் கண்மணியோட நிலைமையும்…”
நட்ராஜ் கண்களில் விரக்தி மட்டுமே…
“என் பொண்ணுக்கு இதுதான் தலை எழுத்தா… அவ சிறகை விரிச்சு பறக்கவே மாட்டாளா..”
கிருத்திகா அமைதியாகத்தான் இருந்தார்… பின் சில நிமிடங்கள் கழித்து
“ஏத்துக்கத்தான் வேணும் நட்ராஜ்… அர்ஜூன் கண்மணியை அவளோட பிரின்சஸா நினைக்க ஆரம்பிச்சுட்டான்… அர்ஜூன் ரொம்பத் தீவிரமா இருக்கான்… அதை மாத்துறது ரொம்பக் கஷ்டம்தான்…”
“என் பொண்ணுக்கு அவனைப் பிடிக்கனுமே… “
“கண்மணிக்கும் அவனைப் பிடிச்சிருக்கு நட்ராஜ்… ஆனால் காதலா மாறுமா… கண்மணியோட குண இயல்புகளை வச்சுப் பார்த்தால் எனக்கு ஒண்ணும் சொல்ல முடியல… ஆனால் அர்ஜூனை முழுசா மனசாற விரும்பனும்ன்றதுதான் என்னோட எண்ணமும்… அதைத்தான் நானும் பவிகிட்ட வேண்டிட்டு இருக்கேன்… அவளுக்கும் அதுதான் விருப்பம்… மருதுவுக்கும் பவியோட விருப்பம் அர்ஜூன்னு தெரியும் நட்ராஜ்… அதுகூட அன்னைக்கு நடந்த சம்பவத்துக்கு ஒரு காரணமா இருக்கலாம்…”
“என் பொண்ணை என்கிட்ட இருந்து அவங்க பிரிச்சுருவாங்களா கிருத்தி… பவிய நான் அவங்ககிட்ட இருந்து பிரிச்சுட்டேன்னு என்னைப் பழிவாங்கிருவாங்களா கிருத்தி….
நட்ராஜூக்கு ஆறுதல் சொல்ல கிருத்திகா நினைத்து அருகில் போன போதே…
“நான் தோத்துட்டே இருக்கேனே கிருத்தி… அப்படி என்ன நான் பாவம் பண்ணினேன்… பவியை என்னவளா ஆக்கிட்டது அவ்ளோ பெரிய தப்பா… அது நான் பண்ணின தப்பாவே இருக்கட்டுமே… என் பொண்ணுமே கஷ்டப்பட்றாளே… எங்களுக்கு சாப விமோசனமே கிடையாதா… ” பேசிக் கொண்டிருந்த போதே… நட்ராஜ் திடீரென்று மூச்சு வாங்க ஆரம்பித்திருக்க… கிருத்திகா பதறிப் போய் மருத்துவமனையில் சேர்த்திருக்க…
கிருத்திகாவிடம் கண்மணி நன்றாகவே வாங்கிக் கட்டிக் கொண்டாள்…
“மத்தவங்ககிட்ட சொல்ல வேண்டாம்… என்கிட்டயாவது சொல்லி இருக்கலாமே கண்மணி… “
செய்தது தவறு என்பதால் அமைதியாக இருக்க…
“நீ புத்திசாலிதான்… இது உன் விசயம் தான்… நீயா முடிவெடுக்கிற தைரியமும் உனக்கு இருக்குதான்… சில விசயங்கள்ள அது தப்புமா… எல்லா விசயங்களிலுமே நீ தனியா முடிவெடுக்க முடியாது… ஏன்னா” எனும் போதே
“நான் பைத்தியக்காரிதான் போதுமா… பைத்தியகாரிதான் நான்… அப்டித்தான் செய்வேன்… பிடிக்கலைதானே அப்போ என்னை விடுங்க.. என் வழியைப் பார்த்துப் போக விடுங்க” என்றவள்… சில நிமிடங்களிலேயே தந்தையின் அருகில் போய் அமர்ந்தவளாக அவரைப் பார்த்தபடி அமர்ந்திருக்க… அவரின் தேவைகளைக் கவனிக்க ஆரம்பித்திருக்க.. கிருத்திகாவுக்குமே அவளைப் புரிந்துகொள்ள முடியவில்லை…
நட்ராஜின் அருகில் இருக்கும் போதுதான் அவர் படும் கஷ்டங்களைக் கண்கூடாகக் கண்டாள் கண்மணி… மருது இருந்த போது அவள் நட்ராஜின் நிலையைக் கண்டுகொள்ளவில்லை… அப்படியே பார்த்திருந்தாலும் அதைப் புரிந்து கொண்டிருப்பாளா… சந்தேகம் தான்
ஆனால் அந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் கண்மணி… கொஞ்சம் நட்ராஜிடம் ஒட்டுதலாக ஆனாள் தான்… எதையும் மறைக்க நினைக்கவில்லை… இடையே நாராயணனுக்கு உடல்நிலை சரி இல்லாமல் போயிருக்க… அவரும் கண்மணியைத் தேட… கண்மணி அவளுக்கே தெரியாமல் நாராயணன் நட்ராஜ் என இருவரின் தேவையாக மாற ஆரம்பித்தி்ருக்க… அர்ஜூனும் அவளோடு அடிக்கடி பேச ஆரம்பித்திருக்க… அர்ஜூனும் அவள் வாழ்க்கையில் முக்கியமான ஒருவனாக மாற ஆரம்பித்திருக்க… கண்மணி மாறினாளா என்றால் அதன் பதில் இல்லை என்பதுதான்
ஆக பவித்ராவின் மரணத்தை மட்டுமல்ல… அவளின் பிறப்பையும் வெறுக்க ஆரம்பித்திருந்தாள் கண்மணி… பவித்ரா போல் தான் இருப்பதை எப்படி வெறுத்தாளோ அதே போல பவித்ராவின் மரணம்… தன் ஜனனம்… அந்த இரண்டும் ஏற்பட்ட அந்த தினம் அதையும் நினைத்து பயப்பட ஆரம்பித்திருந்தாள்…
----
அலைபேசி ஒலித்துக் கொண்டே இருந்தது… கண்மணி தன் பழைய நினைவுகளில் இருந்து மீள முடியாமல் அதைக் கவனிக்காமல் இருக்க… அர்ஜூன் அவளது அறைக்கு மீண்டும் வந்திருந்தான்
“ரித்விகாவுக்கு ஏதோ மேத்ஸ்ல சந்தேகமாம்… உன்னைக் கூப்பிட்டாளாம் எடுக்கலையாம்……” அர்ஜூன் சொன்னபடியே கண்மணியின் முகத்தைப் பார்க்க… அழுதிருக்கின்றாள் என்று நன்றாகவேத் தெரிந்தது… கண்களின் சிவப்பும்…. கன்னத்தில் அழுந்தத் துடைத்ததால் அந்தச் சிவப்பும்… அவன் கண்களுக்கு நன்றாகவேப் பட…
மேஜையின் மீது இருந்த கைசெயினைப் பார்த்தவன்
“சாரிடி… நான் ஏதோ ஒரு வேகத்தில… உன்கிட்ட கொடுத்துட்டேன்… அது இவ்ளோ உன்னைக் கஷ்டப்படுத்தும்னு நினைக்கல” என்ற போதே…. அவனிடமே எடுத்து நீட்டியவள்..…
“இது அம்மாவோடது இல்ல அர்ஜூன்” என்று மட்டும் சொன்னவள்… அவனிடமே திருப்பிக் கொடுத்திருக்க… அர்ஜூன் திகைத்துப் பார்த்தவனாக
“அப்போ யாரோடது… டைமண்ட் ப்ரேஸ்லெட்… இது உன்கிட்ட எப்படி வந்தது…”
”ப்ளீஸ்… அது என்னோடது இல்லை…. அவ்வளவுதான்… என்கிட்ட ஏதும் கேட்காதீங்க… சொல்ற அளவுக்கு பெரிய விசயமும் இல்லை… கொடுத்த நபரும் என் ஞாபகத்தில இல்லை…”
அர்ஜூன் அவளை பார்த்தபடியே… யோசனையுடன் அவள் மூக்குத்தி ஞாபகம் வந்து… அவள் மூக்கைப் பார்க்க… அது இருந்த இடம் வெறுமையாக இருக்க… பதிலேதும் சொல்லாமல் கைச்செயினை வாங்கியபடி சென்றாலும்…
“இவ்ளோ காஸ்ட்லியான ஒண்ணைக் கொடுத்தவங்க யார்னு தெரியலேன்னு சொல்றா… மருதுவா இருக்குமோ… ஆனால் அப்படி இருக்க சான்ஸே இல்லை… அதன் தரம் பார்க்கும் போதே வைரம் அடிக்கடி வாங்கும் பழக்கம் உடையவர்களாகத்தான் இருக்கவேண்டும்… அப்படி நினைத்துதான் தன் அத்தை என்று அடித்துச் சொன்னான்…” அர்ஜூன் குழம்பியவனாக அங்கிருந்து சென்றிருந்தான்…
கண்மணிக்கு மீண்டும் ரித்விகா அழைத்திருக்க
“அண்ணி… வீடியோ கால்க்கு வர்றீங்களா… ஒரே குழப்பமா இருக்கு… ஃபார்முலா எல்லாம் நூடுல்ஸ் மாதிரி சிக்கிகிட்டு இருக்கு” எனும் போதே கண்மணி அனைத்தையும் மறந்து… சிரித்தவளாக
“என்னாச்சு ரித்விக் குட்டிக்கு… சரி வா” என்றவள்…
“அத்தை வீட்டுக்கு வந்துட்டாங்களா… இப்போ நார்மலா இருக்காங்களா… ஸ்கூல்ல இருந்து அழுதுட்டு போன் பண்ணின மேடம். மறுபடியும் அம்மா ஓகே ஆகிட்டாங்கன்னு கால் பண்ண மாட்டிங்களா…” ரித்விகாவைச் செல்லமாகக் கடிந்தும் பேசியபடியே
“சரி என்ன சந்தேகம்… புக்கைக் எடு… ப்ராப்ளத்தைக் காட்டு” என்று ஆரம்பித்திருக்க…
”ஹ்ம்ம்… எல்லாம் ரெடியா எடுத்து வச்சுருக்கேன்… அப்புறம்… அண்ணாலாம் இல்லை… நான் எனக்காகத்தான் பண்ணினேன்… சரியா…”
“என் ரித்விக்குட்டிய நம்பாம யாரை நம்ப போறேன்… சரி வா… அந்த ஃபார்முலா நூடுல்ஸை என்னன்னு ஒரு கை பார்ப்போம்… ” என்று கண்மணி ஆரம்பித்திருக்க…
அதே நேரம் வீட்டிற்கு வெளியில் ரிதன்யாவும் விக்ரமும் பேசிக் கொண்டிருந்தனர்…
“ஏண்டி… இப்போ என்னை என்னப் பண்ணனும்கிற… உன் அண்ணன்கிட்ட இன்னைக்கே அவன் பொண்டாட்டியக் கொண்டு வந்து சேர்க்கனும்னு ஆடுவ போல…”
ரிதன்யா பதிலேதும் சொல்லவில்லை… ஆனாலும் அவள் கண்கள் அந்த இரவில் பளபளத்த போதே… அழுகையை இன்னும் நிறுத்தவில்லை என்பது தெரியாமலும் இல்லை…
“இங்க பாரு… முதல்ல கூட கண்மணி கிட்ட பேச எனக்கு தயக்கம் இல்லை… இப்போ அதுவும் அந்த மருது துரையைப் பற்றி கேட்டப்பின்னால… அவ அந்தத் துரையை பார்த்த பார்வைதான் என்னைப் பார்க்கிறாளோன்னு கொஞ்சம் பதறுது தெரியுமா…” விக்கி வருத்தத்தோடு சொல்ல
”ரொம்ப கஷ்டமா இருக்கு விக்கி… நானும் அவங்கள வார்த்தையால காயப்படுத்திட்டேன்னு…”
அப்போது தன் அன்னையை உறங்க வைத்துவிட்டு ரிஷி வெளியே வந்திருக்க…
“ரிஷி வர்றான்… ஏற்கனவே மனக் கஷ்டத்துல இருக்கான்… நீயும் இப்படி இருந்தா அவன் இன்னும் ஃபீல் பண்ணுவான்… ஜில்…” என்று அவள் கண்களைத் துடைத்து விட்டபோதே
அவர்கள் அருகில் வந்த ரிஷியோ
“நீ இன்னும் போகலையாடா…” என விக்கியைக் கேட்க
“ஏண்டா வீட்டுக்கு வந்த மாப்பிள்ளைய இவ்ளோ கேவலமா நடத்துறது இந்த வீடாத்தான் இருக்கும் போல…”
”இன்னும் நீ ஃப்ரெண்டுதான்… அதை விட எங்க வீட்டு மாப்பிள்ளையே ஆனாலும் என் ஃப்ரெண்டுதான்…அப்புறம் தான் என் தங்கச்சியோட புருசன்… வீட்டுக்கு மாப்பிள்ளை தான்” ரிஷி சொல்ல…
“நண்பேண்டா” என்று அவனைக் கட்டிக் கொள்ளப் போகும் போதே… ரிஷி அவனை முறைத்தவனாக..
“பத்து நிமிசம் டைம் தர்றேன்… ஒழுங்கா இடத்தைக் காலி பண்ணிருக்கனும்” என்றபடியே… நட்ராஜ் வீட்டை நோக்கிப் போக…
“அண்ணா… மாமா அவங்க வீட்டுக்குப் போகல… கடைக்குப் போயிருக்காங்கன்னு நினைக்கிறேன்… மாமா வீட்ல ரித்விதான் படிச்சுட்டு இருக்கா… நம்ம வீட்ல பேசிட்டு இருக்கோம்னு… நான் தான் அவள அங்க படிக்கச் சொன்னேன்” என ரிதன்யா சொல்ல… ரிஷி இப்போது நின்றிருந்தான்… அதே நேரம் தன் போனை எடுத்தவன்… நட்ராஜுக்கு அழைத்தவனாக
“மாமா… எங்க இருக்கீங்க… ஏன் வெளில கிளம்புனீங்க… நைட் பத்து மணிக்கு மேல எங்கேயும் போக மாட்டீங்களே” அவன் குரலில் இருந்த பதட்டத்தில்…..
“ரிஷி இங்க நம்ம இடத்தைப் பார்க்க வந்தேன்… இடம் சுத்தம் பண்ண ஆளுங்க வரசொன்னோமே… சம்பந்திக்கு திடீர்னு முடியாமல் போனதுல… ஹாஸ்பிட்டல் வீடுன்னு… அதைப் பார்க்கல… பூமி பூஜைக்கு ஒரு நாள் தான் இருக்கு”
“ப்ச்ச்… மாமா வீட்டுக்கு வாங்க… ரொம்ப முக்கியமா அது….” என்றவனிடம்
“எனக்கு முக்கியம் மாப்பிள்ளை… என் பொண்ணு வாழப் போற வீடு… என் மாப்பிள்ளை முதன் முதல்ல ஒரு சொத்து வாங்கிருக்காரு… அதுவும் என் பொண்ணுக்கே பொண்ணுக்காக… எனக்கு எவ்வளவு முக்கியம் தெரியுமா…”
”சரி… நான் வரட்டுமா…” கேட்க…
“வேண்டாம் வேண்டாம்… இதோ கிளம்பிட்டேன்… பத்து நிமிசத்துல அங்க இருப்பேன்… இன்னைக்கு நைட் கட்டிட வேலைக்கு ஆளுங்க வர்றாங்கள்ள..… அவங்களுக்கு ஷெட் போட்ருக்காங்க… அதை மட்டும் பார்த்துட்டு வந்துறேன்… எல்லா வசதியா இருக்கான்னு… உங்க ஊர்ல இருந்து ஆளுங்கள சத்யா அனுப்பி வச்சுருக்காரு…. நாமதானே எல்லாம் பார்க்கனும்..” நட்ராஜ் சொல்ல
ரிஷி வைத்தவனாக நட்ராஜ் வீட்டுக்குள் போக… அவனை எதிர்பார்க்காத ரித்விகாவோ விழித்தாள் தான்… அதே நேரம்… வேகமாக அழைப்பையும் கட் செய்ய முடியாதவளாக
“நான் படிக்கனும்…” ரிஷியைப் பார்த்துச் சொல்ல…
“நம்ம வீட்டுக்குப் போ… மாமா தூங்கனும்ல ” என்றபடி… தொலைக்காட்சியை ஆன் செய்ய…
தொலைக்காட்சியில்
‘காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்” பாடல் ஓட ஆரம்பித்திருக்க…
ரித்விகா களுக்கென்று சிரித்தவளாக
“இப்போ இந்த டைம்ல எந்த சேனல் மாத்தினாலும் இந்த மாதிரிதான் பாட்டு போடுவாங்க… உனக்குப் பிடிச்ச குத்துப் பாட்டெல்லாம் போட மாட்டாங்க” ரிஷி முறைத்தான் தன் தங்கையைப் பார்த்து……
“ஓகே… ஓகே… நீ தீபம் ஏற்று… நான் என் பார்ட்டனரோட நான் கண்டினியூ பண்றேன்…” என்றவள் சொன்ன பார்ட்னர் யார் என அவனுக்குத் தெரியாதா…
”மேட்ட்டம் லைன்ல இருக்காங்களா என்ன… அவங்க ஃப்ரீயா இருந்தா… அவங்க கொஞ்ச நாளைக்கு முன்னால என்கிட்ட ஒரு சப்ஜெக்ட்ல ட்வுட் கேட்டாங்க…. டைம் இருக்கான்னு கேளு… சொல்லித் தர்றேன்னு சொல்லு ” அமர்ந்திருந்த நாற்காலியில் இன்னும் இலகுவாக அமர்ந்தபடி… கால் மேல் கால் போட்டபடி… கேட்க…
ரித்விகா வேகமாக தன் அண்ணியைப் அலைபேசியில் பார்க்க… அவள் ரித்விகாவை முறைத்த போதே… ரித்விகா தன் அண்ணனிடம் கோப முகம் காட்டியவளாக
“என் பார்ட்னருக்கு… நீ சொல்லித்தரப்போறியா… அவங்க எவ்ளோ பெரிய ஜீனியஸ் தெரியுமா… அவங்களுக்குத் தெரியாதது எதுவுமே இல்லை” ரித்விகா தன் அண்ணிக்கு சப்போர்ட்டாக பேச ஆரம்பித்திருந்த போதே…
“அப்புறமா கால் பண்ணு ரித்வி… நான் பேசுறேன் “கண்மணியோ பட்டென்று வைத்திருக்க… ரிஷிக்கு ஒரு நிமிடம் உடல் இறுகியதுதான் தன் மனைவியின் அவமதிப்பில்…. இருந்தும் தன்னை மாற்றிக் கொண்டவனாக
”என்ன வச்சுட்டாளா… தெரியுமே… அப்புறம் அவ்ளோ ஒண்ணும் உன் பார்ட்னர் புத்திசாலி இல்ல… அவகிட்டயே கேட்டுப் பாரு…” என்றபடியே
“கெளம்புங்க…கெளம்புங்க… இந்தா இதையும் எடுத்துட்டுப் போ இந்த மேத்ஸ் புத்தகத்தைப் பார்த்தாலே அலர்ஜிதான்… ஒரு பாட்டை ஃபீல் பண்ணி பார்க்க முடியுதா…” ரிஷி ஒவ்வாத முக பாவனையைக் காட்டி… கணக்கு டீச்சர் மேல் இருந்த கோபத்தை டீச்சரிடம் காட்ட முடியாத கோபத்தில் கணக்குப் பாடத்தில் காட்டி ரித்விகாவைக் கிளம்பச் சொல்ல…
“உன்னை… இவருக்கு அப்படியே கணக்கு மட்டும் தான் அலர்ஜி“ ரித்விகா முணுமுணுத்த போதே ரிஷி அதைக் கேட்டு முறைத்துப் பார்க்க…
“என்ன முறைக்கிற… எங்க தமிழ்ல நாலு வார்த்தை எழுதிக் காட்றேன்… ஒழுங்கா படிச்சுக் காட்டு… மெய்யெழுத்தும் துணைக்காலும் இருக்கிறதே உனக்குத் தெரியாது… “ என கடுகடுக்க…
“ஏய் அதெல்லாம் சின்ன வயசுல… இப்போலாம் உங்க பார்ட்டனர் கதைனு ஆர்ட்டிகிள் எழுதுறாளே அதுக்கு ப்ரூஃப் ரீடரே நான் தான்… கேட்டுப் பாரு அவகிட்டயே… என் தமிழ் நாலெட்ஜுக்கு பிச்சை வாங்கனும் நீயும் உன் பார்ட்டனரும் என்கிட்ட..”
“அடேங்கப்பா… அப்படியா… எங்க சொல்லு பார்க்கலாம்… ‘கண்மணி’ ன்ற பேரை… முதல்ல பார்க்கும் போது... படிக்கும் போது…. நீ ஒழுங்கா வாசிச்சிருப்பியா என்ன… ’கணமணி’ ன்னு தானே வாசிச்சிருப்ப… அண்ணிகிட்ட இதெல்லாம் சொன்னேன்…” எனும் போதே…. அங்கிருந்த தினப்பேப்பரைச் சுருட்டி அவள் மீது எறிந்தவன்
“ஓடிப் போயிரு… நீ எனக்குத் தங்கச்சியா… பார்ட்டனராம் பார்ட்னர்… திமிரு…. என் குரல் கேட்டவுடனே… போனைக் கட் பண்றாளா… அவள் கிட்ட சொல்லி வை நேர்ல வந்து பார்க்கும் போது கவனிச்சுக்கிறேன்னு …” அவன் எகிறிய போதே…. ரித்விகா புத்தகங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு கிளம்பியபடியே… தன் அண்ணிக்கும் அழைத்தாள்…
“அண்ணி… லைன்ல இருங்க…. நான் நம்ம வீட்டுக்கு வந்துக்கிறேன்… என்னையவே துரத்திவிட்டுட்டாங்க… அங்க படிச்சா… இங்க போன்னு ரிது துரத்துனா… இப்போ இங்க படிச்சா அங்க போன்னு அண்ணா துரத்துறான்”
கண்மணியின் சிரித்தபடியே
“வா வா… வெயிட் பண்றேன்…” என்று சொல்ல…. ரித்விகா வீட்டை விட்டு வெளியே வந்த போதே… ரிதன்யாவையும் விக்கியையும் பார்த்தவளாக…
“அண்ணி நான் நாளைக்கே பேசுறேன்… இந்த டைம் ஓகே தானே” எனக் கேட்க…
“நீ எப்போ வேணும்னாலும் கால் பண்ணுடா… நான் எடுப்பேன்… ”
“அண்ணி ஸ்கூலுக்கு வருவீங்களா… உங்க ஸ்டூடண்ட்லாம் பாவம் அண்ணி… புதுசா ஒரு மிஸ் அப்பாயிண்ட்மெண்ட் பண்ணியிருக்காங்க… நீங்க இனி வரமாட்டிங்களாமே… அப்படியா அண்ணி… எல்லாரும் நீங்க வர மாட்டிங்களான்னு என்கிட்டயே கேட்கிறாங்க….”
கண்மணி சில நிமிடங்கள் மௌனித்தவளாக
“சரி நான் வைக்கிறேன்… ஏற்கனவே உன்கிட்ட சொன்னதுதான்… என்னோட நோஸ்பின்… சாமி ரூம்ல மேல் ஷெல்ஃப்ல இருக்கு… வைட் ஸ்டோன்.. அதை எடுத்துட்டு வந்து நம்ம பிரின்ஸ்பால் மேடம்கிட்ட கொடுத்துரு… அவங்க என்கிட்ட கொண்டு வந்து தருவாங்க… அப்புறம் அது ரொம்ப பத்திரம்… என் அம்மாவோடது…” என்று கண்மணி சொல்ல… ரித்விகாவும் சரி என்று சொல்லி வைத்தவள் நேராகச் சென்றது விக்கி ரிதன்யாவிடம் தான்…
விக்கியின் அருகே போனவளாக…“மாமா…” என விக்கியிடம் பேச ஆரம்பித்தவள்… பத்து நிமிடம் நின்று அவனுடன் பேசி விட்டு அதன் பின் தன் வீட்டுக்கும் போக…
“அது எப்படிடி… குடும்பமே ப்ரைவசி கொடுக்கக் கூடாதுனு முடிவெடுத்திருக்கீங்களா… உன் அண்ணன் இருக்கானே... ஆனாலும் சகுனிடி… எப்படி பத்து நிமிசம்னு டைம் கொடுத்துட்டு போற மாதிரி போய்ட்டு… பின்னாடியே உன் தங்கச்சிய அனுப்பி இருக்கான்னு பாரு… அவளும் சரியா பத்து நிமிசம் பேசிட்டு போறா பாரு..” விக்கி அலுத்தவனாக…
“ஆனாலும் என் ஃப்ரெண்டோட நிலையைப் பாரு… காதலின் தீபம் சாங்க்லாம் கேட்கிறானாம்… இந்த மாதிரிப் பாட்டெல்லாம் கேட்டால்… வண்டி வண்டியா ஓட்டுவான்… இப்போ” என பெருமூச்சு விட…
அவன் பேசுவதை எல்லாம் கண்டு கொள்ளாமல் ரிதன்யாவோ ஏதோ யோசித்தபடி இருக்க…
“என்ன… யோசிக்கிற…”
“இல்ல எனக்கு ஒரு சந்தேகம்… கேட்டால் தப்பா நினைக்கக் கூடாது” ரிதன்யா இழுக்க…
“என்ன என்ன… மாமாகிட்ட கேளுடா… ஆல்ரவுண்டர் உன் மாமா…” அவளை வேகமாக இழுக்க… அப்போது… அங்கு குடித்தனம் இருந்த வீட்டில் இருந்த பெண்மணி வெளியே வந்திருக்க… விக்கி வேகமாக ரிதன்யாவைப் விடப் போக… ரிதன்யாவோ விலக்கிய அவன் கைகளை மீண்டும் தன் மேல் போட்டுக் கொண்டவளாக…
“மாமா வீட்ல இருந்து பார்த்தால் தான் நாம தெரிவோம்..” எனக் கண்சிமிட்ட… விக்கி இப்போது மொத்தமாகத் தன் கையணைவுக்குள் கொண்டு வந்திருந்தான்…
---
“ரித்விகா… “ என அழைத்தபடி அந்தப் பெண்மணி ரித்விகாவிடம் போயிருக்க…
“தண்ணி வரலை… மோட்டர் போட்டு விடு கண்ணு”…
“ஹான் வரேண்கா… ஆனால் பத்து நிமிசம் தான்… காமன் கரண்ட் பில் அதிகமான உங்ககிட்ட தான் வாங்குவேன்” ரித்விகா கறாராகப் பேசியபடியே வெளியே வந்து மோட்டார் ஸ்விட்சைப் போட்டு விட்டுப் போக
”பார்த்தீங்களா என் தங்கச்சிய… ’கண்மணி இல்ல’ டெம்பொரரி ஓனர் இவங்கதான் இப்பொ” ரிதன்யா அவன் மார்பில் சாய்ந்தபடி சொல்ல… விக்கியோ…
”அதை விடு… என்ன டவுட்…” விக்கி ரிதன்யாவிடம் பேசிக் கொண்டே சுற்றும் முற்றும் பார்வையினை வைத்தபடி… அவளிடம் அத்து மீறலை ஆரம்பித்திருக்க..
“அது ஒண்ணுமில்ல” என ராகமாய் இழுக்க
“ஒண்ணுமில்லாததுக்கு இவ்ளோ இழுவையா” அவள் தேகத்தில் தன் விரல்களால் இவன் தன் காதல் வீணையை மீட்ட ஆரம்பித்திருக்க… அவன் கைகளைத் தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டவளாக
”என் அண்ணன் நல்லா படிக்க மாட்டான்… நீங்க டாப்பர்… உங்க ரெண்டு பேருக்கும் அது எப்படி அப்படி ஒரு ஃப்ரெண்ட்ஷிப்… அதுவும் ஒரே வீடெடுத்து தங்குற அளவுக்கு…” விக்கிக்கு உச்சி மண்டையில் சுர்றென்று ஆணி அடித்தார் போல உணர்வு…
“ஏய் என்னடி… ஏண்டி” என்ன பேசுவதென்று புரியாமல் தடுமறியவன்…
“நான்லாம் கற்புக்கரசண்டி… ஏக பத்தினி விரதன்… உன் அண்ணன் கூட” எனும் போதே
“என்ன..!!!! என்ன..!!! என் அண்ணனுக்கு என்ன…!!! என் அண்ணனும் அப்படித்தான் நான் சும்மா விளையாட்டுக்கு உங்கள ஓட்டுனேன்னா… அது என்ன அண்ணன் கூட”
“அடச்சீ சொல்ல விடுடி… ரொம்பத்தான் அண்ணனுக்கு சப்போர்ட்டு… உன் அண்ணன் வண்டவாளம்லாம் இறக்குன்னேன்னு வச்சுக்க… நீ மட்டும் இல்லை அந்த பவித்ரா விகாஸ் இளவரசியே ஏழு ஜென்மத்துக்கும் திரும்பி பார்க்க மாட்டா…” என்றபடியே…
”போனால் போகுதுனு உன்கிட்ட அப்போதும் மறச்சேன்… இப்போதும்” என்றவனிடம்
“பொறாமை என் அண்ணா மேல…” ரிதன்யா அவன் கன்னத்தில் குத்த…
“இங்க பாரு… முதல்ல என் கற்பை நிருபிக்க விட்றி” என்றபடியே
“உங்க அண்ணன் இருக்கான்ல… அவனும் நானும் என்னைக்காவது கிரிக்கெட் பார்க்கனும்னு ஹால்ல வந்து படுத்தால் கூட… தலையணைக் கூட்டத்தோடத்தான் வருவேன்… ரெண்டு பேருக்கும் இடையில தலையணைப் பாலம் கட்டிட்டுத்தான் அவன் பக்கத்திலயே படுப்பேன்… அவ்ளோ பெர்ஃபெக்ட் நான்… என்னைப் பார்த்து… அடிப்பாவி… இப்படி ஒரு கேள்வி கேட்டுட்டியே…” விக்கி போலியாக அழ ஆரம்பிக்க…
“ஏன் ஏன் அந்த பில்லோ பாலம்…” ரிதன்யா கேட்க
“அந்த… பஃபல்லோ தூங்குச்சுனா கால மேல போடும்… அதுக்குத்தான் பில்டிங் பாலம் யூசிங் பில்லோ…” அப்பாவியாகச் சொல்ல
“நீங்க என் அண்ணனை ரொம்ப டேமேஜ் பண்றீங்க…. என் அண்ணா இமேஜ் வேற லெவல்க்கு போயிருச்சுனு பொறாமை…”
”அடேங்கப்பா… விக்கி… உனக்கு வந்த சோதனையாடா இது… நீங்க ஒரு ஏழெட்டு வருசம் முன்னாடி அப்படியே பின்னால போங்க ரிதன்யா மேடம்… எங்க அண்ணா ஒரு க்ரீன்சேண்ட்… அவரை நீங்க பத்திரமா பார்த்துக்கங்கன்னு… கெஞ்சுவீங்களே… அந்த அண்ணணோட க்ரீன்சேண்ட் இமேஜையே நாங்க டேமேஜ் பண்ணிட்டோம்… அதை விட இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னால எங்க ரெண்டு பேரையும் எங்க ஃப்ரெண்ட்ஷிப்பை டேமேஜ் பண்ணுனீங்களே… அதை விடவா… நாங்க உங்க அண்ணனை டேமேஜ் பண்ணினோம்…”
ரிதன்யாவுக்கும் தன் அதிகப்படியானப் பேச்சு புரிந்ததுதான்… அதில் தலைகுனிந்தாள் தான்… விக்கியிடம் மன்னிப்பு கேட்டபடியே
“புக்ஸ்ல படிச்சிருக்கேன்… எங்கேயோ கேள்விப்பட்ருக்கேன்… இப்போ நம்ம அனுபவத்துல… அதாவது அந்த மருது துரை விசயம் கேட்ட உடனே கொஞ்சம் பதறுதுல…”
”ஏண்டி கண்மணி அந்த மருதுவோட ரிஷியை கம்பேர் பண்ணல… ஆனால் என்னை அந்தத் துரையோட கம்பேர் பண்ணிட்டாளோன்னு எனக்கே கில்ட்டியா இருக்கு… நீ வேற ஏண்டி… உன் புத்தி இவ்ளோ கேவலமா யோசிக்குமா என்ன”
”வாய்லயே போட்டேன்னு வச்சுக்க….” என்றபடி அவளை செல்லமாக அடித்தாலும்… கொஞ்சம் வேகமாக விக்கி அடித்திருக்க…
“ஆ வலிக்குது” எனக் கன்னத்தை தடவியவளாக… அவனின் தோளில் அடிக்க…
“ஹான் பேசுன பேச்சுக்கு இங்கதான் அடிச்சிருக்கனும்…” என ரிதன்யாவின் உதட்டைப் பார்த்தபடியே… மெல்ல அவளைத் தன்புறம் இழுக்க… ரிதன்யாவுமே அவனிடம் மெல்லத் தன்னை இழந்திருக்க… அப்போது மோட்டார் சத்தம் நின்றிருக்க… விக்கியும் ரிதன்யாவும் சுதாரித்த போதே…
அதே நேரம் ரிஷியும் வெளியே வந்திருக்க… வேகமாக ரிதன்யாவை தள்ளி நிறுத்தி தானும் தள்ளி நின்றவன்…
“ஜஸ்ட் மிஸ்டி… நல்ல வேளை மோட்டார் சத்தம் உங்க அண்ணன் கிட்ட இருந்து நம்மள எஸ்கேப் ஆக்கி விட்ருச்சு..”
ரிஷி இவர்கள் அருகில் வர… அப்போது நட்ராஜும் உள்ளே வந்திருக்க…. விக்கி வேறு வழியில்லாமல்… அங்கிருந்து விடைபெற்றும் சென்றான்…
--------
”மாமா… டேப்லட்லாம் போட்டிங்களா” நட்ராஜிடம் ரிஷி விசாரிக்க ஆரம்பித்துருக்க…
“ரித்வி கண்மணியோட அடுத்த வாரிசுப்பா… கரெக்டா எல்லாம் பண்றேனான்னு அவங்க அண்ணிகிட்ட வேற ரிப்போர்ட் போயிருது… “
ரிஷி சிரித்தபடியே… தலைக் கேசத்தைக் கோதிக் கொண்டவன்… பதிலேதும் பேசாமல் எங்கோ பார்த்தபடி இருக்க…
“மாப்பிள்ளை… மணிகிட்ட சொல்லி இருக்கேன்… பூமி பூஜை போடப் போறோம்னு… பார்க்கலாம் வருவான்னு நினைக்கிறேன்”
”அவ வர மாட்டா மாமா… அவளோட அடமண்ட் பிஹேவியர் எனக்கு நல்லாவே தெரியும்… இப்போ என்ன அவ வரலேன்னா என்ன… இந்த இடத்துக்கு ஏற்கனவே அவ கையால கல் எடுத்துக் கொடுத்திருக்காளே… விடுங்க எங்க போகப் போறா… இங்கதானே வந்து சேரனும்…” என்றவனின் குரல் தேய்ந்து ஒலித்த போதே தன்னைச் சுதாரித்தவனாக
”ஆனால் மாமா அப்போ இருக்கு அவளுக்கு… அன்னைக்கு மகள்னு நீங்க சப்போர்ட்டுக்கு அவளுக்காக வந்தீங்க உங்கள என் முதலாளின்னு கூடப் பார்க்க மாட்டேன்” என்றவனின் குரலில் இருந்த தீவிரத்தில் நட்ராஜே கலவரம் கொண்டவராக
“அவ சின்னப் பொண்ணு மாப்பிள்ளை… “ என நட்ராஜ் தயங்கி ஆரம்பித்திருக்க
“ஹ்ம்ம்… உங்க பொண்ணு சின்னப் பொண்ணு… நம்பிட்டோம் மாமா… உலகமும் நம்பிரும்… சிரிச்சுட்டு இருக்கேன்… நார்மலா இருக்கேன்னு ஏதாவது சொல்லிட்டு இருக்காதீங்க… உள்ள எரிஞ்சுட்டு இருக்கு… மொத்தமா கொட்டினா தாங்க மாட்டீங்க… அதை எல்லாம் விட என் தங்கச்சி கிட்ட பேசுறா… என் அம்மாவை விசாரிக்கிறா… உங்ககிட்ட பேசுறா… விக்கி தாத்தாகிட்ட ரிதன்யா மேரேஜ் டேட் தள்ளிவைக்கச் சொல்லிருக்கா… இதை எல்லாம் விட… ” அர்ஜூனுடனான அவளின் வெளிநாட்டுப் பயணத்தை மாமாவிடம் மறைத்தவனாக…
”விடுங்க… ஆனால் நான் மட்டும் அவளுக்கு வேண்டாதவனாம் சொல்லாமல் சொல்றாளாமாம்… உங்க பொண்ணுனு போனால் போகுதுனு பாவம் பார்த்து விட்டு வச்சுருக்கேன்… இல்லேன்னு வச்சுக்கங்க…” எனக் கைமுஷ்டியை இறுக்கியவனாக…
“இப்டி.. இப்டி… ஒரு சொடக்கு போட்ற நிமிசத்துல இங்க வர வச்சுருப்பேன்.. என் பிடிவாதம் அவளுக்கும் தெரியும்” விரல்களால் சொடக்கு போட்டு காண்பிக்க… இயலாமையில் அவன் கொந்தளித்த போதும்…. அவன் கோபம் புரிந்த போதும்… நட்ராஜுக்கோ அவன் அப்போதும் பிடிவாதக் கோபம் கொண்டு சீறும் சிறுவனாகத்தான் அவர் கண்களுக்குத் தெரிந்தான்… அதில் புன்னகை வந்த போதும் அதைக் காட்டமால் உதட்டியேயே மறைத்திருக்க
“மாமா உங்க பொண்ணுகிட்ட சொல்லி வைங்க… அவ எவ்ளோ தூரம் போனாலும் என்ன பண்ணினாலும் விட்டுப் பிடிச்சு அதைப் பார்த்துக் கொஞ்சுறதுக்கு நான் நட்ராஜ்… நாராயணன் இல்லனு… அவளும் அதை சீக்கிரம் புரிஞ்சுப்பா” என்றவன் அதற்கு மேல் நில்லாமல் வேகமாக தன் மாடி அறைக்குச் சென்றவன்… அறைக்கதவைத் திறக்க… நான்கு நாட்கள் ஆகியும் மடிப்புக் கலையாத அந்த படுக்கை அவன் கண் முன் பட… அதைப் பார்த்த படியே மூடிய கதவின் மேல் சாய்ந்தவனுக்கு… மனைவியின் எண்ணங்களும் சூழ்ந்தது…
----
Comments