அத்தியாயம் 95-2
“கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை அலைகழித்திருக்க… மருது ’மணி’ என்று தானே அழைப்பான் யோசித்தாலும்…. “மருது” அவனை எங்கெங்கோ தேடி அலைந்தாள் நினைவுகளில்…
“நீ அவனைக் கொல்லல… அவன் அந்த இன்சிடெண்ட்ல சாகலை… அவன் அந்த துரையோடு தப்பி ஓடி விட்டான்…” கிருத்திகா சொல்லியும் அவளால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை… அதே நேரம் அவன் உயிரோடு இருக்கிறானா… என்னை விட்டு விட்டு எங்கே இருக்கின்றான்… இப்படித்தான் நினைத்தாள் கண்மணி… அவளின் நினைவுகள் முழுவதும் இந்த எண்ணங்களே இருக்க…
“மருதுகிட்ட இருந்து காப்பாத்துங்க” ஒரு நேரம் அப்படி அலறுபவள்… இன்னொரு நேரம் அவனைத் நினைவுகளில் தேடி கதறுவாள்…
“என்னை விடுங்க… நான் மருதுவைப் பார்க்கப் போகனும்”
“அவன் சாகலைதானே… அவன் என்னை விட்டுப் போக மாட்டான்”
”இதோ என்னைக் கூப்பிட்றான்… ” என்று ஓடியவள்… எங்கும் தேடிப் பார்க்க… மருதுவின் முகம் மட்டும் அவள் கண்ணில் படவே இல்லை…
“கண்மணி” மீண்டும் அவன் குரல்… இதோ அவன் தான்… அவனுக்காக காத்திருக்கின்றான்… ஓட நினைத்தவள்…. இப்போது தயங்கி நின்றாள் அந்த இடத்தைப் பார்த்து… கால்கள் பின்னிக் கொண்டன…
“மருது இல்லை அவன்… ஆனால் அவன் பின்னால் நிற்பவன் மருதுவா… தன் முன்னால் நின்றவனை கொலை வெறியோடு வெறிக்கும் அந்தக் கண்கள்…” நிஜத்தில் மயங்கியவள்… நினைவிலும் மயங்கினாள்…
”கண்மணி…” தன் முன் சுவரை வெறித்தபடி அமர்ந்திருந்த கண்மணியை கிருத்திகா அதட்டியவளாக…
“மருது நல்லவன் இல்லை… உனக்கு இப்போ புரியலைனாலும்… போகப் போகப் புரியும்… “
சொன்னவளை கண்மணி முறைத்தவளாக
”என்னை விடுங்க.. மருதுவைப் பார்க்கப் போகனும்… அவன் நல்லவன் தான்… நல்லவன் தான்…” கத்த ஆரம்பித்திருக்க….
“அவன் உயிரோட இருக்கிறான்னு நம்புறியா… அவனைப் பார்க்கப் போகனும்னு சொல்ற” கிருத்திகா கேட்க
கண்களில் கண்ணீர் மட்டுமே அவளிடமிருந்து வர… இதையெல்லாம் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த நட்ராஜோ… குற்ற உணர்வில் குறுகிக் கொண்டிருந்தார்…
“உனக்கு ஏதும் ஆகலை அதை எப்படி நம்புறீயோ… அதே போலத்தான் மருதுவும் உயிரோட இருக்கிறான்…
கண்மணி நிமிர்ந்தாள்…
“எனக்கு ஏதும் ஆகியிருந்தால் கூட நான் கவலைப்பட மாட்டேன்… நான் என்ன தப்பு பண்ணினேன்…” அவளின் நிமிர்வு கிருத்திகாவுக்கு சிறு நம்பிக்கை ஒளியைத் தந்திருக்க.. மனதில் நிம்மதி பரவ ஆரம்பித்திருந்தது…
அவளை கைக் குழந்தையாக விட்டுச் சென்றபோது தவித்த மனதில் இப்போது அவளை இந்த நிலையில் பார்த்த போது குற்ற உணர்வில் குறுகி குன்றிய மனதில்… விசாகனிடம் ஒவ்வொரு இரவும் கண்ணீர் வடித்து கனமாகியிருந்த மனதில் மீண்டும் நிம்மதி வர ஆரம்பித்திருக்க… நட்ராஜையும்… நாராயணனையும் அழைத்தவள்…
“நான் கண்மணியைக் கூட்டிட்டுப் போறேன்… இப்போதுமே என் உரிமை அவகிட்ட இல்லதான்… உங்க ரெண்டு பேர்ல யார் கூட அவ இருக்க ஓகே சொன்னாலும் அவளை உங்ககிட்ட ஒப்படைக்கின்றேன்… ஆனால் அவளுக்குப் பிடிக்காத பட்சத்தில் நான் அவளை என் பொண்ணா தத்தெடுத்துப்பேன்.. “
இருவருமே அதிர்ச்சியாகப் பார்க்க
“கவலைப்படாதீங்க… உங்க ரெண்டு பேருக்கும் அவ எவ்வளது தேவைனு எனக்கும் புரியும்… அவ மனசை மாற்ற ட்ரை பண்றேன்… ஆனால் அது முடியாத பட்சத்தில… என்னை நீங்க தடுக்கக் கூடாது” என்றவள்…
”அதுவரை கண்மணி என் கூடவே இருக்கட்டும்… நான் பார்த்துக்கிறேன்… எவ்ளோ நாள் ஆனாலும்… எவ்ளோ மாதம் ஆனாலும்… எவ்ளோ வருசம் ஆனாலும்”
கண்மணியைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று பார்த்துக் கொள்வதற்கு அவர்களின் சம்மதத்தையும் பெற்றவள்… அதற்கு முன் கணவனிடமும் சம்மதம் பெற்றிருந்தாள்…
மருத்துவமனையில் இருந்து கிருத்திகா வீட்டுக்குச் செல்ல கண்மணியும் ஒன்றும் சொல்லவில்லை… அதே நேரம் கிருத்திகாவையும் அவள் மருத்துவராகவே பார்த்தாள்…
“எனக்கு கோவிலுக்குப் போகனும்… எங்க ஏரியா கோவிலுக்கு“ என்று மட்டும் சொல்ல… கிருத்திகாவும் கூட்டிச் சென்றாள்..
அவளுக்குப் பிடித்த அம்மன் கோவிலுக்குச் சென்றவள்… அம்மனை மட்டுமே பார்த்தபடி நின்றவள்..
”எனக்கு மருதுவை ஏன் நல்லவனா காண்பிச்ச… அவன் எனக்கு எப்போதுமே நல்லவன் தான்… கிருத்திகா மேடம் சொல்றது எல்லாம் புரியலைனாலும்… அவன் தப்பானவன்றது புரியுது… மருது உயிரோட இருக்கின்றான்னு சொல்றாங்க… அவன் அப்படி இருந்தாலும்… இனி நான் அவனைப் பார்க்கவே கூடாது… நான் பார்க்கவும் மாட்டேன்…”
கண்களைத் திறந்த போதே அவள் முன் நிறைமாத கர்ப்பிணி நின்றிருக்க… ஆனால் அவள் முகமெங்கும் அம்மைத் தழும்புகள்…
கண்மணி பயந்தவளாகப் கிருத்திகாவின் கைகளைப் பிடிக்க… அந்தப் பெண்ணின் தாய் கண்மணியைப் பார்த்தபடி…
”உங்க பொண்ணுக்கும் அம்மா வந்து இறங்கி இருக்காளா… என் பொண்ணுக்கும் வந்து இப்போதான் தண்ணி ஊத்தி கூட்டிட்டு வந்தேன்” என்று அவர் மகளைக் காட்டிச் சொல்ல
கிருத்திகா தலை ஆட்டியவராக… அந்தப் பெண்ணைப் பார்த்தபடி…
“எத்தனை மாதம்” எனக் கேட்க…
“ஒன்பதாவது மாதம்… சுகப்பிரசவம் ஆகனும்னு அம்மன்கிட்ட வேண்டிருக்கேன்மா… தாயும் பிள்ளையுமா சுகமா வரணும்… ஆனால் அம்மன் அருள் இருக்கு… கண்டிப்பா நல்லா வருவாங்க…” கொஞ்சம் கூடப் பயப்படாமல் சொல்ல
கிருத்திகா ஆச்சரியமாகப் பார்க்க… அப்போது…
“நீ போடா… பிரகாரத்தை சுத்திட்டு வா…” என தன் பெண்ணை அந்தப் பெண் அனுப்ப… கண்மணியும் பிரகாரத்தைச் சுற்றப் போனாள்…
அவளுக்கு அந்தப் பெண்ணைப் பார்த்தாலே பயமாக இருக்க… அதுவும் இல்லாமல் அவள் மேடிட்ட வயிறு அவளைக் கலவரப்படுத்த
“இதெல்லாம் பார்த்தா பயமா இல்லையா… “ கண்மணி வெகு நாட்களுக்குப் பின் இயல்பாக பேச ஆரம்பித்திருந்தாள்… அவள் முகத்தையும்… நிறை மாத வயிற்றையும் மாறி மாறி பார்த்தபடி கேட்க…
”எதுக்கு பயப்படனும்… அம்மன் என் கூடவே இருக்கா… எனக்கு ஏதோ ஆபத்து… அதுதான் என்னைப் பாதுகாக்க அவ என் மேல இறங்கியிருக்கா… அவ இறங்குனதுனால எல்லா ஆபத்தும் பனி போல என்னை விட்டு விலகிரும்”
கண்மணியும் அம்மனை நம்புவள் தான்… கையெடுத்து கும்பிடுபவள்தான்… இந்த அளவுக்கு இல்லை… அமைதியாக வந்து விட்டாள்… கோவிலை விட்டு கிருத்திகாவுடன் வெளியே வந்தவள்…
“எனக்கு… அந்த இடத்துக்குப் போகனும்” அவளுக்குப் பிடிக்காத இடம் இதுவரை அதன் அருகிலேயே செல்ல பயப்படுபவள்… இன்று அந்த இடத்தை தைரியமாக எதிர்கொள்ளத் துணிய நினைத்தாள்…
எப்போதும் போல் இப்போதுமே அவளுக்கு அந்த இடம் மனதுக்குப் பிடிக்காத ஒரு உணர்வைக் கொடுக்க… கால்கள் பின்னிக் கொல்ல ஆரம்பித்திருக்க… இருந்தும் சமாளித்தபடி கிருத்திகாவின் கைகளைக் இறுகப் பற்றிக் கொண்டவள்…
“போகலாமா” எனக் கேட்டபடி கிருத்திகாவை ஒன்றி நடந்தவளின் கண்கள்… அங்கு இருந்த அனைவரின் கண்களையும் பயத்தோடு பார்க்க ஆரம்பிக்க… ஒரு கட்டத்தில் மயங்கவும் ஆரம்பித்திருக்க… மயங்கி விழித்த போதோ அவள் கிருத்திகாவின் வீட்டில் இருந்தாள்…
-------------
தொலைக்காட்சியில் ஏதோ ஓடிக் கொண்டிருக்க… நித்தின் அங்கிருந்த சோபாவில் ஏறி இறங்கி ஓடிக் கொண்டிருக்க… மரகதம் அவன் பின்னால் மதிய உணவை ஊட்டுவதற்காக ஓடிக் கொண்டிருக்க… கண்மணி எதையும் கவனிக்காமல் தொலைக்காட்சியையே வெறித்துக் கொண்டிருந்தாள்…
“அம்மாதான் ஊட்டனும்… அம்மாதான் ஊட்டனும்” நித்தின் பிடிவாதம் பிடித்திருக்க… கண்மணி யாரையுமே கண்டுகொள்ளாமல்… தன் நினைவுகளோடே இருக்க
”பாப்பா… தம்பிக்கு ஊட்றியா” மரகதம் அவளை நித்தினுடன் பழக வைக்க முயல…
“இல்லை” என்று மறுத்து தலையாட்டியவள்… வேறு புறம் திரும்பி இருக்க
“அய்யே… இந்தக்கா வேண்டாம்.. போர்… அக்லி” என நித்தின் அவள் முகத்தில் இருந்த காயங்களைப் பார்த்தும்.. அவள் பேசாமல் இருந்ததையும் கவனித்தும் கண்மணியைப் பிடிக்கவில்லை அவனுக்கு…
இன்று அவனின் அடம் அதிகரித்து இருக்க
“அம்மாதான் வேணும்… அம்மாதான் வேணும்” எனும் போதே… கிருத்திகா வந்திருக்க…
“அம்மா.. சாப்பிடவே மாட்டேங்கிறான்” என்றபோதே… கிருத்திகா… கண்மணியைப் பார்த்தாபடியே… உள்ளே சென்றவள்… உடை மாற்றி திரும்பி வந்தவள்… மரகதத்திடம் இருந்து சாப்பாட்டை வாங்கியவள்…
“கண்மணி சாப்பிட்டியா”
“எனக்கு வேண்டாம்… பசிக்கல மேடம்” என்றவள்…
“என்னை எப்போ இங்கயிருந்து அனுப்பி வைப்பீங்க… “
கிருத்திகா அவளிடம்
“எங்க அனுப்பி வைக்கனும்னு நீ சொன்னாதானே அனுப்பி வைக்க முடியும் கண்மணி…”
பதிலேதும் சொல்லாமல் பவித்ராவின் புகைப்படத்தை வெறித்தவள்….
“நான் தான் சொன்னேனே… ஏதாவது இரு ஆஸ்ரமம்…” என்றவளிடம்
”அதுக்கும் வழி இல்லை… உன் தாத்தா…. உன் அப்பா இவங்க சம்மதம் சொல்லல…”
கண்மணி அவளை முறைக்க முடியாமல்
“அந்தக் கந்தம்மாள் மட்டும் வரட்டும்… என்னை அதுகூட கூட்டிட்டுப் போகச் சொன்னா… கூட்டிட்டுப் போகல… ” எனும் போதே அவள் குரல் உயர்ந்திருக்க… கிருத்திகாவிடம் பேசி இனி பயன் இல்லை என்பதை உணர்ந்தவளாக….கிருத்திகாவைப் முறைத்தவள்… வேறெதுவும் சொல்லாமல் அமைதியாக தரையைப் பார்த்து யோசனையுடன் அமர்ந்திருக்க…
”என்ன யோசிக்கிற… நான் கந்தம்மாவும் இல்லை…. இல்லை நீ அந்த கந்தம்மாள் வீட்ல வளர்ந்த கண்மணியும் இல்ல… இந்த வீட்டை விட்டு போறது… நைட்ல தனியா கிளம்புறதுன்னு யோசிக்க வேண்டாம்” எனக் கண்மணியிடம் சொல்லியபடி நிதினுக்கு ஊட்ட ஆரம்பித்திருக்க… அதே நேரம் விசாகனும் போன் செய்திருக்க… விசாகனிடம் மட்டும் கண்மணி பேசியிருப்பாளா என்ன… தன் கவனத்தை வேறுபுறம் திருப்ப ஆரம்பிக்க… அப்போது
“அப்பா…. அப்பா… நீங்க எப்போ வருவீங்க… அப்பாதான் ஊட்டனும்” நித்தின் இப்போது கிருத்திகாவிடம் பிடிவாதம் பிடித்திருக்க… கண்மணி முதன் முதலாக அவள் கவனத்தை நித்தினை நோக்கித் திருப்பியிருந்தாள்…
”டேய் உனக்கு அம்மா வேண்டாமா….” கிருத்திகா செல்லமாகக் கோபிக்க…
“நீங்க ஒரு வாய்… அப்பா ஒரு வாய்…” என்றபடி நித்தின் சமாளிக்க… கண்மணியின் இதழோரத்தில் சிரிப்பு இலேசாகத் தொட்டிருக்க… அவளையுமறியாமல் அவனைப் பார்த்தபடி இருந்தவள்… அடுத்த நிமிடமே மீண்டும் தன் நினைவுகளுக்குள் சென்றிருந்தாள்…
“மணி…” அவன் அழைப்பது இப்போதும் காதில் விழ ஆரம்பித்திருக்க… காதை இறுக மூடிக் கொண்டாள்…
அவனை விட்டு வெகு தூரமாக ஓடிப் போக நினைத்தாலும்… அவன் நினைவுகளைத் தூரமாக விலக்க நினைத்தாலும்
“முதன் முதலாக… அவனை மருத்துவமனையில் சந்தித்த போது…. நாராயணனிடம் இருந்து அவளைக் காப்பாற்றியது… அவளுக்காக சாலையில் ஓடி வந்து…. அவள் பிறப்பின் ரகசியத்தைச் சொன்னது… நட்ராஜிடம் அவளுக்காக மண்டியிட்டு போராடியது… ”
“நீ எப்போதுமே எனக்காக இருப்பியா மணி..”
அவளிடம் சத்தியம் கேட்டது…கடைசியாக அவன் அவளிடம் நடந்து கொண்டது… பார்வை நிலைகொண்டது ஓரிடத்திலேயே…
“கண்மணி” என்று அழைத்தபடி கிருத்திகா அவள் முன் அமர…
“இங்க பாருடா…” என்ற கிருத்திகாவிடம்
“கண்மணி… அப்டியே கூப்பிடுங்க…” என்றவள்…
“உங்கள யார் இங்க எனைக் கூட்டிட்டு வரச்சொன்னது… என்னை அந்த மெண்டல் ஹாஸ்பிட்டலியேயே விட்ருக்க வேண்டியதுதானே… யார் நீங்க எனக்கு முதல்ல… நீங்க அந்த லேடியோட ஃப்ரெண்ட்.. அதுவே எனக்கு உங்களப் பிடிக்கல … என்னை அனுப்புங்க… நான் போகனும்னு நினைத்தால்… என்னை யாருமே தடுக்க முடியாது… புரியுதா… நான் நாளைக்கு இங்கயிருக்க மாட்டேன்… என் வழிய நான் பார்த்துப்பேன்… யார் என்னைத் தடுப்பீங்கன்னு பார்க்கலாம்” எனும் பொதே… அங்கு வந்திருந்தார் கந்தம்மாள்…
“சொன்னேனே… இவளை எல்லாம் அடக்க ஆளே கிடையாதுன்னு… எப்டி பேசுறான்னு பாரும்மா… ஆட்டம் போட்டதெல்லாம் போட்டுட்டு… என்ன பேச்சு … அந்த ரத்தம் கூட காயல… என்ன பேச்சு பேசுறா…”
கண்மணி பல்லைக் கடித்துக் கொண்டு முறைக்க…
“முறைக்காத… கண்ணை நோண்டிருவேன்…”
“ஏம்மா… என்ன சொன்ன நீ… என் பையன் நல்லாயிருவான்னு சொன்ன… இன்னும் மோசமானதுதான் மிச்சம்.. அந்த ஆத்தா அவன் வாழ்க்கையை பாதி நாசமாக்கிட்டு போனா… அவ பெத்த மக… மிச்சமிருக்கிற வாழ்க்கையை நாசாமாக்கிருவா போல…”
“நா பெத்த மகனை இப்படி ஆக்கி வச்சுட்டாளுங்களே ஆத்தாவும் மகளும்… நல்லா இருப்பாங்களா.. பல்லைக் காமிச்சுட்டு அவன் பின்னாடி போனா… எவன் தான் சும்மா இருப்பான்… இவ ஆடுனா… அனுபவிக்கிறா…”
கண்மணிக்கு அப்படி ஒரு ஆத்திரம் வந்திருக்க… சட்டென்று அங்கிருந்த பூச்சாடியை சுவற்றை நோக்கித் தூர தூக்கி எறிந்திருக்க…
”நீயெல்லாம் இந்த திமிர்லாம்… இதெல்லாம் அடக்கினாதான் நீ நல்லா இருப்ப… எங்க.. நீ நல்லா இருக்கப் போற” கண்மணி வேகமாக அவளை நோக்கி வந்திருக்க அதுவும் கையில் வேறு உடைந்த பூஜாடியைம் எடுத்துக் கொண்டு ருத்திர தாண்டவ அவதாரம் வேறு……
கிருத்திகாதான் சுதாரித்து கந்தம்மாளை திட்டி அங்கிருந்து இழுத்து வந்த போதே…. நாராயணனும் வைதேகியும் வந்திருக்க
”வந்துட்டாங்க… பெரிய மனுஷங்க… பேத்தி பேத்தினு… என்ன தெரியும் இவங்களுக்கு…. இவளப் பற்றி… என் மகனை எல்லார் வாயிலயும் விழ வச்சுட்டு… நல்ல பேராடா வாங்கிருவீங்க நீங்க எல்லாம்… ”
“என் மகன் ஹாஸ்பிட்டல்ல இருக்கான்… நல்லாவே இருக்க மாட்டிங்க யாருமே…” எனும் போதே கண்மணியும் வெளியே வந்தவளாக
“கெழவி… இன்னும் ஒரு நிமிசம் இங்க இருந்த… உன்னை கொலையே பண்ணிருவேன்… ஓடிப் போயிரு… போ உனக்கு என்ன… நீ உன் புருசனோட நல்லா வாழு” கண்மணியும் ஆரம்பித்திருக்க… அவளை அடக்க காவேரியும் போராடிக் கொண்டிருக்க… நாராயணனும்… வைதேகியும் கண்மணியை ஆச்சரியமாகப் பார்த்தனர்…
தாங்கள் என்ன பேசினாலும்… தலையாட்டலில்… இல்லை ஒரு வார்த்தையில் பதில் சொல்பவள்… கந்தம்மாளிடம் பேசும் விதம் பொறாமையாகக் கூட வந்திருக்க… இதே போல உரிமையை தங்களிடம் காட்டுவாளா..
கந்தம்மாளை வழி அனுப்பி வைத்து விட்டு.. நாராயணனையும் வைதேகியும் தனியே அழைத்து சென்ற கிருத்திகா
“அவளுக்கு கொஞ்சம் டைம் கொடுங்க… அவ கொஞ்சம் கொஞ்சமா வெளில வருவா… மருது இறந்துட்டான்னு நினச்சுட்டு இருந்தா… ஆனா இப்போ அந்த எண்ணம் மாறிருக்கு தானே… இதை விட… அந்த துரையால தனக்கு ஒண்ணும் ஆகலேன்னு அவ நம்பினதுதான் நமக்கு பெரிய ரிலீஃப்… ” என்றபடியே பெருமூச்சு விட்டவளாக..
“அர்ஜூன் அதைவிட… அவனை கன்வின்ஸ் பண்ணி யூ எஸ் அனுப்புறதுக்குள்ள போதும் போதும்னு ஆகியிருச்சு… அவனுக்குமே இது சைக்கலாஜிக்கலா அஃபெக்ட் பண்ணியிருக்கு… கண்மணியை ப்ரொடெக்ட் பண்ணனும்னு நினைக்கிறான்… அதுனாலதான் அவளோட இந்த நிலைக்கு காரணமான நட்ராஜை மேல அதிகமா வெறுப்பக் காட்டுறான்” என்ற போதே நாராயணன்… கிருத்திகாவிடம்
“எனக்கு என் பேத்தி சந்தோசம் மட்டும் தான் முக்கியம்… அவ என்ன ஆசைப்பட்றாளோ அது தான் இங்க நடக்கனும்… இனிமேல் நடக்கனும்” என்று சொல்ல
“அப்டியா… அவ ஏதாவது அனாதை விடுதில சேர்த்துவிடுங்கன்னு சொல்றா… அதுதான் அவ சந்தோசம்னு சொல்றா…. சேர்த்து விட்றலாமா” கிருத்திகா சொன்ன போதே… வைதேகி பதறி பார்க்க…
நாராயணனோ… அப்படி எல்லாம் பதறவில்லை… மாறாக
“போகட்டும்… நானே ஆஷ்ரமம் கட்டித் தர்றேன்… என் பேத்திக்குத் துணைக்குப் பத்து பேரை வேலைக்குப் போட்றேன்… அவ ஆசைப்பட்ட மாதிரி இருக்கட்டும்… என் பொறுப்புல பாதுகாப்புல இருப்பாள்ள…” என்றவரை வைதேகியும் கிருத்திகாவும் முறைக்க…
“என் பேத்திக்காக நான் எதையும் செய்வேன்… இனி அவளை கஷ்டத்துல விட மாட்டேன்… அவ என்னைத் தாத்தான்னு கூப்பிடலைனா கூடப் பரவாயில்லை… நான் பண்ணின பாவத்துக்கெல்லாம் எனக்கு அதுதான் தண்டனைனா நான் சந்தோசமா ஏத்துக்கிறேன்” எனக் கண்களைத் துடைத்திருக்க…
வைதேகியோ இப்போது அழ ஆரம்பித்திருந்தார்
“என் பேத்தி என்னோட கூட பேச மாட்டேங்கிறா கிருத்தி… அவ என் பேத்தினு தெரியுறதுக்கு முன்னாடி கூட அவ்ளோ பேசுனா… பாவி என் பேத்தினு கொஞ்ச ஆரம்பிச்சேனோ அவளுக்கு எல்லாம் நடந்திருச்சு… அவள் என்னைக் குணப்படுத்தினா… அவளுக்கே இப்படி” என்றவரிடம்…
”கண்மணி சீக்கிரம் நார்மலுக்கு வருவா… என்ன நாம கொஞ்சம் காத்திருக்கனும்” என்று அவர்களையும் ஆறுதல் சொல்லி அனுப்பி இருக்க… நட்ராஜ் தான் கிருத்திகாவின் இப்போதைய கவலை…
நட்ராஜ் இன்னுமே மோசமான நிலைக்கு மாறியிருக்க… யாரையும் அவன் அருகிலேயே விடவில்லை… ஏன் கண்மணியைக் கூட வந்து பார்க்கவில்லை…. இவளாகப் போய்ப் பேசியும்
“என் பொண்ணுக்கு நான் அப்பான்னு ஒருத்தன் இல்லை… அதுக்கு நான் தகுதியில்லாத ஆளு… அவ பவித்ராவோட பொண்ணு… அவங்க பேத்தியாவே கூட்டிட்டுப் போகச் சொல்லிருங்க… நான் வாழவே தகுதி இல்லாத கேவலமான அற்ப ஜந்து… என் வாழ்க்கைல ரெண்டு முறை தேவதைங்க பார்வை பட்டும்… வாழ்க்கைல சந்தோசம் கிடைக்காத அளவுக்கு துரதிர்ஷ்டம் பண்ணின பாவி… அவங்க கஷ்டப்பட்டப்போ அவங்களை காப்பாத்த முடியாத பாவம் பண்ணினவன்… எதுக்காக நான் இருக்கனும்… என்னை விட்ருங்க… ” நட்ராஜ் அழ ஆரம்பித்திருக்க…
கிருத்திகாவுக்கு நட்ராஜிடம் எவ்வளவு சொன்னாலும் புரிந்து கொள்ளாமல் மீண்டும் மீண்டும் தன்னை புதைக்குழியில் தான் புதைத்துக் கொண்டிருந்தான் நட்ராஜ்…
அன்றைய இரவு…
இரவு சாப்பாடு முடிந்த பின்… கண்மணி அறைக்குப் போக… கிருத்திகா அவளைத் தனியே விடவில்லை இன்று… மற்ற பயமெல்லாம் இல்லை… ஆனால் அவளுக்கு இங்கு இருக்கப்பிடிக்கவில்லை என்பதால்… எங்காவது கிளம்பிப் போய்விடுவாளோ என்ற பயமே…
நித்தினை விட்டு விட்டு இவளுடன் வந்து படுக்க… கண்மணி கண்டு கொள்ளவில்லை… படுத்து உறங்கியும் விட… அன்றைய இரவோ நித்தினுக்கு கடுமையான காய்ச்சல் வந்திருக்க… மொத்த குடும்பமும் பதறியிருக்க
கண்மணிக்கு முதன் முதலாக கந்தம்மாள் சொல்லும் தன் அதிர்ஷ்டம் பற்றிய சந்தேகம் வந்திருந்தது… ஒரு வேளை தன் கண் பட்டதால் தானோ அவனுக்கு இப்படி ஆனது… கண்மணி உள்ளுக்குள் நொறுங்கினாள் தான்… ஆனால் வேறு மாதிரி அதை வெளிக்காட்டினாள்…
நித்தினை அன்றைய தினத்தில் இருந்து அவளே பார்த்துக் கொள்ள ஆரம்பிக்க… முதலில் அவளிடம் பழகத் தயங்கிய நிதின் அதன் பின் அவளிடம் நெருக்கமாக மாறி இருக்க… கண்மணி நிதினை அப்படி பார்த்துக் கொண்டாள்… அவனுக்கான அனைத்து தேவைகளையும் அவள் பார்த்து பார்த்து செய்ய… கண்மணியையும் கிருத்திகா கவனிக்காமல் இல்லை… அவளைக் கண்காணித்துக் கொண்டே இருந்தவளுக்கு அவளின் நடவடிக்கைகளின் மாற்றம் தெரியாமல் இருக்குமா…
நித்தினுடன் பழக ஆரம்பித்தவள்… கிருத்திகாவுடனும் அந்த வீட்டில் வேலை செய்யும் மரகதத்துடனும் மெல்ல மெல்ல ஓரளவு சகஜமாக பேச ஆரம்பித்திருந்தாள்….
---
நித்தினுக்கு அன்று தேர்வு என்பதால்… அவனுக்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்க…
“என்ன பண்றான் உன் தம்பி… ஏதாவது மண்டைக்குள்ள ஏத்திட்டு இருக்கானா”
“செமையா படிக்கிறான்… என்ன தமிழ் தான் வர மாட்டேங்குது… ஆனாலும் நான் வரவச்சுருவேன்… என்னடா அப்படித்தானே… தமிழ்ல இருக்கிற அத்தனை கடி ஜோக்ஸும் அத்துபடி… ஆனால் தமிழ்தான் வர மாட்டேங்குது” என்றபடி நித்தினுடன் பேசிக் கொண்டிருக்க…
நித்தினோ…
“அக்கா… நான் ஒரு புது ஜோக் சொல்லவா…” என்றவனை தன் மடியில் வைத்துக் கொண்டவள்..
“ஆனா சிரிக்கிற மாதிரி சொல்லனும் நிதின் செல்லம்” என அவன் தலை முடியைக் கலைத்து விளையாட ஆரம்பித்திருக்க… கிருத்திகா அவர்களை விட்டு நகன்றாள் புன்னகையோடு…
மெல்ல மெல்ல கண்மணியின் நாட்களும் நித்தினுடன் செலவழிய ஆரம்பித்திருக்க… கிருத்திகாவிடமும் நெருங்கியிருந்தாள்…
”ஆன்ட்டி… இதைப் பாருங்க… இது நல்லாருக்கா…” அவள் எழுதியதைக் கொண்டு வந்து கொடுக்க…
“தெரியல நீங்க சொன்னதுக்காக எழுதினேன்னா தெரியல… ஆனால் எனக்கு எழுதப் பிடிச்சிருக்கு… நீங்க சொன்ன மாதிரி என்னோட மனசுல இருக்கிற பாரமும் குறையுற மாதிரி ஃபீல்… ” என்று கொடுக்க… கிருத்திகா வாங்கிப் பார்க்க… முத்து முத்தான எழுத்தில் ஒரு சிறுகதை அவள் எழுதி இருக்க… அவளின் எழுத்து நடையும் பிடித்திருக்க
“சூப்பரா இருக்கு கண்மணி…. பவியும் இந்த மாதிரிதான் எழுதுவா… அவளோட கற்பனை உலகமே வேற… ஆனால் அதைவிட…” என்று தன்னை மறந்த உற்சாகத்தில் கிருத்திகா சொன்ன போதே கண்மணி வெடுக்கென்று அந்தப் பேப்பரைப் பறித்தவளாக… அதைக் கிழித்தும் எறிந்திருக்க… கிருத்திகா அதிர்ச்சி ஆகி இருக்க
“நான் என் அம்மா மாதிரி இல்ல… இல்ல… இனி நான் எழுத மாட்டேன்” என்றபடியே எழுந்தும் போக… கிருத்திகா அவளைக் கவலையுடன் பார்த்திருந்தாள்… ஆனாலும் அவளது முயற்சியை விடவில்லை…
--
அன்றைய இரவு… கண்மணியோடு மீண்டும் பேச்சுக் கொடுத்தாள் கிருத்திகா…
“உன் அம்மா இந்த மாதிரி கதையெல்லாம் எழுத மாட்டா… அவளோடது தீஸிஸ்… ரிசர்ஜ்… மோட்டிவேஷன் ஸ்பீச்.. இந்த ஜானர்தான்… உன்னோட எமோஷனல் திங்கிங்லாம் அவளுக்கு வரவே வராது” என ஆரம்பித்திருக்க
“உங்க ஃப்ரெண்டு ஊருக்குத்தான் அட்வைஸ் பண்ணுவாங்களோ… சொந்தமா சொல்லிக்க மாட்டாங்களோ… பெத்தவங்க பேச்சைக் கேட்டு வளரனும்னு தெரியலையா… இவங்கதான் மோட்டிவேஷனல் ஸ்பீச் எழுதுவாங்களாம்” கண்மணி நக்கலாகக் கேட்டாள்…
தன் தோழியைப் பற்றிய அவளது மகளின் ஏளனமான கேள்வியில் கிருத்திகாவுக்கு கோபம் உச்சிக்கு ஏறியதுதான்… ஆனாலும் அடக்கிக் கொண்டவளாக…
“என் ஃப்ரெண்டப் பற்றி என்ன தெரியும் உனக்கு… சரி விடு… “
“ஆனால் நான் ஒண்ணு கேட்கிறேன்… அதுக்கு மட்டும் பதில் சொல்லு… உன் அம்மா உன் அப்பாவை பெரிய ஆளா மாத்துறேன்னு… மாத்திக் காட்றேன்னு சவால் விட்டா… ஆனால் ஒண்ணும் பண்ண முடியல” என்று கண்மணியிடம் தன் பேச்சு சாதுர்யத்தைக் காட்ட ஆரம்பித்திருந்தாள்
கண்மணி நக்கலாகப் பார்த்தபடி…
“ஆன்ட்டி… நீங்க என்ன சாதுர்யமா பேசினாலும் என்னை மாற்ற முடியாது… ”
“நான் பேசவே ஆரம்பிக்கல…” கிருத்திகா சொன்னதும் கண்மணி அவளைப் பார்க்க
“நீ உன் அம்மா மாதிரி இல்லைனு ஓவ்வொரு வார்த்தையிலும் சொல்றேல… உன் அம்மா நாலு பேரோட வாழ்க்கையை…”
“என்னைச் சேர்க்காதீங்க… நான் அவங்களால பாதிக்கப்படல.” கண்மணி பட்டென்று சொல்ல…
“ஒகே… உன் அப்பா… தாத்தா பாட்டி… இவங்க வாழ்க்கையை நாசமாக்கிட்டு போய்ட்டாதான்… ஆனால் நீ என்ன பண்ணிட்டு இருக்க… இப்போ அதே தான் நீயும் பண்ணிட்டு இருக்க… சொல்லப் போனால் என் ஃப்ரெண்டை விட இன்னும் அதிகமா… என்னமோ என் அம்மா மாதிரி இல்லை இல்லைனு சொல்ற… உன் அம்மா பண்ணினததைத்தான் நீயும் பண்ணிட்டு இருக்க… அப்போ நீயும் பவித்ராவும் ஒண்ணுதானே… அவ பொண்ணுனு நிருபிக்கிறதானே” அவ்வளவு தான் கண்மணிக்கு ஆவேசம் வந்திருக்க… கிருத்திகா எவ்வளவு சொல்லியும் அவள் அடங்கவே இல்லை… அங்கிருந்த அத்தனைப் பொருட்களையும் சிதறடிக்க ஆரம்பித்திருக்க…
கிருத்திகாவும் இப்போது அவளை அடக்கவில்லை… அவளே பொறுமையாக அடங்கும் வரைக் காத்திருந்தவள்..
”உன்னால… அவங்க வாழ்க்கை இதோ இந்த மாதிரி சீர் இழந்து இருக்கு… அவங்க வாழ்க்கைல நீ இன்னொரு பவித்ரா இல்லைனு காட்டு… உன்னால அவங்க நல்லாதானே இருக்கனும்… அதை நடத்திக் காட்டு”
கண்மணி இகழ்ச்சியாக சிரித்தாள்…
“என்ன இப்படியெல்லாம் பேசினா… நான் அவங்களோட போயிருவேன்னு நினைக்கிறீங்களா” என்றவள் அதற்கு மேல் அங்கு நிற்கவில்லை… வேகமாகத் தன் அறைக்குள் சென்று படுத்தாள் தான்… ஆனால் அவள் எண்ணங்களோ அவளை அலைகழிக்க ஆரம்பித்திருந்தன…
நட்ராஜ்… பவித்ரா… நாராயணன்… வைதேகி… கந்தம்மாள்… மருது என சுற்ற ஆரம்பித்திருக்க… கடைசியாக நட்ராஜ் நாராயணனிடம் வந்து நட்ராஜிடம் முடிந்திருந்தது….
தன் தந்தையைப் பார்க்க… அவரோடு வாழ… ஓடி வந்த தினம் ஞாபகம் வந்திருக்க… அவர் அன்பைத் தேடி ஓடி வந்தோமே தவிர அவரைப் பற்றி என்றாவது நினைத்திருக்கின்றேனா…
வந்தேன்… அவர் அன்பு கிடைக்கவில்லை… வேறொரு இடத்தில் கிடைத்தது… போதும் என வாழ்க்கையை அனுபவிக்க ஆரம்பித்து விட்டேன்… அவரை அவர் வாழ்க்கையை மாற்ற நினைத்தேனா… யோசிக்க ஆரம்பித்தவள்…
அடுத்து சந்தித்தது நட்ராஜைத்தான்…
-------
மாதம் ஒன்று கடந்திருந்தது… நட்ராஜ் தன் மகளிடம் கேட்ட கால அவகாசமும் இன்றோடு முடிந்திருந்தது….
தன் வீட்டைச் சுற்றிப் பார்த்தார்… மரம் செடி.. கொடி என குப்பையாக காடாக கிடந்த இடத்தை சீர்படுத்தி… சுத்தப்படுத்தி… அந்த இடத்தைச் சுற்றிலும் சுற்றுச் சுவர் கட்டி… எல்லாவற்றையும் விட… பாதுகாப்புக்கு உகந்தவாறு பெரிய இரும்புக் கதவை வைத்தவர்… தன் மகள் பெயரையும் பதித்திருந்தார்
“கண்மணி இல்லம்”
“ஹ்ம்ம்… இப்டித்தான்…. சரியா இருக்கு… காலத்தாலும் அழியக் கூடாது” தன் மகளின் பெயரை அங்கு பதித்தவரின் முகத்தில் சந்தோசமும்… தன் அப்பாதான் வேண்டும் என்று மகள் சொன்ன பெருமையும் மட்டுமே… அதுவே அவருக்கு புது தேஜசைக் கொடுத்திருந்தது…
“கண்மணி இல்லம்” அந்த ஏரியாவிலேயே வித்தியாசமான பகுதியாக மாறி இருந்தது… சொல்லப் போனால் அந்த ஏரியாவின் இன்னொரு அடையாளமாக மாறும் இடமாகவும் மாறப் போகும் அத்தனை அம்சமும் இருந்தது…
அங்கு நின்று கொண்டிருந்த கொத்தனாரை அழைத்தவர்….
”ரொம்ப நன்றி கணேசக் கொத்தனாரே…”
”வீட்டை மராமத்து பண்ணிக் கொடுத்ததுக்கு…” என்ற போதே
“பூமி பூஜைக்கு நாள் பார்த்துறலாமா…. ஐயர் கிட்ட பேசனும்” அந்தக் கொத்தனார் கேட்க… நட்ராஜ்… தன் வீட்டை வெறித்தார்…
தானும் தன் மனைவியுமாக கட்டிய வீடு… அவர்கள் சந்தோசமாகத்தான் கட்டினார்கள்… ஆனால்… என யோசித்தவர்… அதை எல்லாம் விட்டு விட்டு…
“எனக்கென்ன குறைச்சல்… இனி என் மகள் இருக்கிறாள்… என் தேவதை இன்னொரு தேவதையை எனக்காக விட்டுத்தான் சென்றிருக்கின்றாள்… என் மகள்… என்னிடமே வர ஆசைப்படுகிறாள்…” பெருமையாக நிமிர்ந்து நின்றவர்…
“இங்க பாருங்க… அத்தனை தோஷமும் கழிச்சுட்டு… வாஸ்து சாஸ்திரப்படி… இந்த வீட்டைக் கட்டனும்… “
“எல்லாம் பேசிட்டேன் நட்ராஜ்… அவர் என்ன சொன்னார்னா… அவர் சொல்றபடி… இந்த தெற்கு மூலைல ரெண்டு வீட்டைக் கட்டி… இரண்டு மூணு குடும்பத்தை… குடும்பம் முக்கியம்… புதுசா கல்யாணமானவங்களும் அதுல சேர்த்துக்கலாம்…. இதுதான் தோஷ பரிகாரம்…” என்ற போது…
“ஹ்ம்ம்… புரியுது… என் பொண்ணுதான் முதல் கல்லை எடுத்து வைக்கனும்… அவள நாளைக்கு கூட்டிட்டு வந்துருவேன்… எவ்ளோ நாள் ஆகும்… இந்த வேலை எல்லாம் முடிய… என்ன செலவானாலும் பரவாயில்ல… ஆனால் வேலையும் பொருளும் தரமா இருக்கனும்” நட்ராஜின் வார்த்தைகளில் மட்டுமல்ல வாழ்க்கையும் தெளிவாக மாறத் தொடங்கியிருந்தது….
---
”ஏண்டா… இப்படி ஒரு முடிவை எடுத்த… நாங்க வேண்டாமாடா” வைதேகி அழ ஆரம்பித்திருக்க
நாராயணன் அமைதியாகப் பேத்தியைப் பார்த்தவர்…
“உனக்கு என்ன தோணுதோ… அதைப் பண்ணுடா… ஆனால் நாங்க உன் தாத்தா பாட்டி… அந்த உரிமையை மட்டும் கொடுடா” நாராயணன் சொல்ல
“ஏங்க இப்படி இருக்கீங்க… இவ்ளோ பெரிய வீடு… நம்ம பேத்தி உள்ள கூட வர மாட்டேன்னு இப்படி வெளிவாசல்ல… நிக்கிறா அவளை உள்ள வான்னு சொல்லாமல் இப்படி பேசுறீங்க…”
நாராயண குருக்கள் வைதேகியிடம் திரும்பியவர்
“இந்த சாம்ராஜ்யமே அவளோடதுதான் வைதேகி… அவளோட உரிமை கண்டிப்பா அவளை இங்க வரவைக்கும்… என்ன நாம அதுக்கு எவ்ளோ நாள் காத்திருக்கனும்னு தெரியல… “ என்றவரிடம் கண்மணி இப்போது பேச ஆரம்பித்தாள்
“நான் பவித்ராவோட பொண்ணு எப்போதுமே இல்ல… என்னைக்காவது அது தோணுச்சுனா அன்னைக்கு இந்த வீட்டுக்கு வருவேன்… வைதேகிப் பாட்டிகிட்ட என்ன சொன்னேனோ அதேதான்… அவங்ககிட்ட நான் எப்படி பேச மூன்றாம் மனுசியா பேச ஆரம்பிச்சேனோ… அந்த பாசம் உங்களுக்குமே… அப்படித்தான் இந்தக் கண்மணியும் இங்க வருவா போவா… பவித்ராவோட பொண்ணா ஒரு போதும் வரமாட்டா..”
சொன்னவள் கிளம்பி விட வைதேகிதான் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிக் கொண்டிருக்க… நாராயணன் தான் சமாதானப்படுத்த ஆரம்பித்திருந்தார்…
“அழாதடி… கண்டிப்பா ஒரு நாள் என் பேத்தி என் வீட்டுக்குள்ளா காலடி எடுத்து வைப்பா… அப்போ அவ அந்த நட்ராஜ் மகளா இருக்க மாட்டாள்.. கண்டிப்பா அது நடக்கும்…”
வைதேகி புரியாமல் பார்க்க… தன் அலைபேசியில் வைத்திருந்த அர்ஜூனின் புகைப்படத்தைக் காட்ட…
“இதெல்லாம் நடக்குமாங்க…” வைதேகி சந்தேகத்துடன் கேட்க…
“நடத்திக் காட்டுவான் இந்த நாராயணன்…” என்ற அவரின் நிச்சயமான வார்த்தைகளில்…
“அர்ஜூனுக்கும் பிடிக்கனும்… கண்மணிக்கும் பிடிக்கனும்… சும்மா இருங்கோ இதெல்லாம் கத்தி மேல நடக்கிற மாதிரி… இப்படிலாம் ஆசை வைக்காதிங்க…” வைதேகி கணவனைத் தெரிந்தவராகப் பயந்தவராகப் பேச….
“உன் பயம் புரியுது… என் பேத்தி என் பேரனுக்குத்தாண்டி… அவன் அப்போதே என் பேத்திக்காக போராடுனவன்… இதோ இன்னைக்கு வரைக்கும் சுபத்ரானு பரிதவிச்சுட்டு இருக்கான்… அவன் ஏன் வேண்டாம்னு சொல்லப் போறான்… அதுனாலதான் அன்னைக்கு அவ்ளோ அவசர அவசரமா அவனை யூ எஸ்க்கு திருப்பி அனுப்பி வச்சேன்… என் பேத்தியோட இந்த நிலைமை… அவங்களோட வருங்கால வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாதுனு… ப்ச்ச்… ஆனாலும் அன்னைக்கு அவனை அன்னைக்கு ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டுப் போயிருக்கக் கூடாதுதான்” நாராயணன் அன்றைய ஞாபகத்தில் பேச ஆரம்பிக்க…
வைதேகியோ நடந்ததப் பற்றி எல்லாம் யோசிக்காமல்… நடக்கப் போவதை மட்டுமே யோசித்தார்
“அர்ஜூன் ஓகே… ஆனால் கண்மணி… அவ சரின்னு சொல்லனுமே” வைதேகி படபடப்பை மறைத்தபடி சொல்ல
“அதெல்லாம் அர்ஜூன் பார்த்துப்பான்… ஆனால்” என நிறுத்தியவர் அங்கும் கொக்கி வைத்தவராக
“என் பேத்திக்கு பிடிக்கலைனா… இல்ல அவ இன்னொரு வாழ்க்கையை தேர்ந்தெடுத்தா கூட என் சப்போர்ட் இருக்கும்… அர்ஜூனைக் கூட அதுல தலையிட விட மாட்டேன்… எனக்கு என் பேத்தி எது பண்ணினாலும் சம்மதம்தான்… அவளை யாரும் கட்டுப்படுத்தக் கூடாது… விடவும் மாட்டேன்… அவ சந்தோசம் மட்டும் தான் முக்கியம்… ஏன் இப்போ அவ அந்த நட்ராஜோட போறேன்னு சொன்ன போது கூட நான் ஒண்ணும் சொல்லலையே… எங்க இருந்தாலும் அவ என் பேத்தி… என்னோட பாதுகாப்பு அரண் அவளைச் சுத்தி இருக்கும்” என்றவர் அர்ஜூனையும் தள்ளி நிறுத்தியிருந்தார்தான் தன் கண்மூடித்தனமான பேத்தி பாசத்தால்..
---
நட்ராஜ் வீட்டுக்கு கிளம்பிச் செல்வதால் கண்மணியைப் பார்க்க நாராயணனும் வைதேகியும் கிருத்திகாவின் வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தனர்… நட்ராஜும் வந்தான் தான்… ஆனால் கிருத்திகா வீட்டுக்குள் செல்லவில்லை
ஆட்டோவில் இருந்த நட்ராஜ் இருந்த இடத்திற்கே போய் கிருத்திகா அழைக்க
“கிருத்தி… எனக்கு உன் கூட பேச இஷ்டம் இல்லை… என் பொண்ணோட டாக்டர்… அந்த வகையில உங்க கூட பலமுறை பேசிட்டேன்… நீங்க சொன்ன மாதிரி என்னை மாத்திக்கிட்டேன்… அந்த ஒரு மாதம் என் பொண்ணை உங்க ஃப்ரெண்டோட பொண்ணா பார்த்துகிட்டதுக்கு நன்றி… “ அவளிடம் பேசப் பிடிக்காமல் வேறு புறம் திரும்ப
“ராஜ்…”
“ப்ளீஸ்… எனக்கு உன்னைப் பார்த்தால் என் பவி ஞாபகம் வருது… அது என்னை மாத்திருமோன்னு பயமா இருக்கு… நான் இனிமேல் என் பொண்ணுக்காக வாழனும்… வாழப் போறேன்” எனச் சொன்ன போதே
“மிஸ்ட்ர் நட்ராஜ்… உங்க பொண்ணோட டாக்டராத்தான் இப்போதும் கூப்பிடறேன்… கொஞ்சம் வர்றீங்களா…. இந்த தடவை ஹாஸ்பிட்டல் இல்லை… என் வீடு அவ்ளோதான்… இப்படிப்பட்ட நட்ராஜைப் பார்க்க எனக்குமே விருப்பமில்லை” என முறைத்தபடி உள்ளே செல்ல,,,
நட்ராஜும் வேறு வழி இல்லாமல் உள்ளே வர… அங்கு இவருக்கு முன்பாகவே நாராயணனும்… வைதேகியும் இருக்க… தன் மனைவியின் தோழியை முறைக்க… நாராயணனுக்குமே அந்த சூழ்நிலை ஒவ்வாத சூழ்நிலையாக இருக்க.. கண்மணிக்காக மூவரும் ஒரே இடத்தில் நிற்க வேண்டிய சூழ்நிலை… தவிர்க்கவில்லை மூவருமே…
கிருத்திகா ஆரம்பித்தாள்…
“உங்க மூணு பேர்கிட்டயும் ஏற்கனவே பல தடவை சொன்னதுதான்… கண்மணியை இயல்புக்கு கொண்டு வந்திருக்கோம்… ஆனால் அவ பழைய கண்மணியா எப்போ வருவா அது எதிர்காலம் மட்டுமே நிச்சயிக்கும்,.. மே பி இனிமேல அவளை பழைய நிலைக்கு வராமல் போனால் கூட நம்மாள கண்டுபிடிக்க முடியாது… அவ இருபது வயசுல… பத்து வயசு கண்மணியை எதிர்பார்ப்பதும் தேடுறது தவறுதான்…. கந்தம்மாள்கிட்ட அவ பேசுறதை வச்சுதான் கண்மணி மெல்ல மெல்ல சரியாகிட்டு வர்றான்றதே என்னால கண்டுபிடிக்க முடிந்தது…. அவங்க அவங்க இயல்போட இருந்தது என்னோட ட்ரீட்மெண்ட்டுக்கு ரொம்ப யூஸ் ஃபுல்லா இருந்தது… ஆனால் நீங்க ரெண்டு பேரும் இவ்ளோ சடனா சேஞ்ச் ஆனதை கண்மணி அவளுக்கான அன்பா நினைக்கல…. அதுனாலயும் அவ மாறலை… ராஜ்..” எனும் போதே தன்னைச் சரிபடுத்திக் கொண்டவள்…
”மிஸ்டர் நட்ராஜ்…. உங்க பொண்ணு உங்க கூட வர சம்மதம் சொன்னது… அதுக்காக நீங்க மாறுனது… இதெல்லாம் அவள பழைய கண்மணியா மாற்றாது… ஜஸ்ட் உங்க கூட வந்திருக்கா… அவ்ளோதான்… உங்க கிட்ட பாசத்தை எதிர்பார்த்து வந்த அந்தக் கண்மணி இப்பொ வர்ற்வ இல்லை… அதை மட்டும் புரிஞ்சு நடந்துக்கங்க… “
“அங்கிள் நீங்களுமே… உங்களை மன்னிச்சு ஏத்துகிட்டான்னு நினைக்காதீங்க… யாரையுமே அவ பெருசா எதிரியாவும் நினைக்கல… தனக்கு நெருக்கமானவங்கன்னும் நினைக்கல…”
நாராயணனோ…
“எங்கள விடுங்க… அவளுக்குனு ஒரு வாழ்க்கை வரும்போது அவ சகஜமாகிருவாதானே… ”
”உங்க ரெண்டு பேர்கிட்டயும் ஏற்கனவே சொல்லிட்டேன்… அர்ஜூனை இதுல இன்வால்வ் ஆக்காதீங்க… ” வைதேகி நாராயணனிடம் சொல்ல
“நாங்க இல்லை…. அவனுக்கே அவவளைப் பிடிச்சிருக்கு… “அதுனாலதான் சொல்றேன்…” நாராயணன் ஆரம்பித்த போதே நட்ராஜ் எகிற ஆரம்பித்திருந்தான்…
“பத்து வயசுப் பொண்ணு… அவகிட்ட என்ன மாதிரி எக்ஸ்பெக்டேஷன் வச்சுருக்காங்க பாரு கிருத்தி…” கோபத்துடன் கைமுஷ்டி இறுகச் சொல்ல
“ராஜ்… அப்போ உங்க வைஃப் எக்ஸ்பெக்டேஷன் என்ன… இந்தக் குழந்தை கருவில இருக்கும் போதே அந்த எண்ணம் தானே… அதுவே தப்பாச்சே… “
“உங்க சண்டையை விடுங்க… நான் சொல்றதை மட்டும் கவனிங்க… அர்ஜூன்கிட்ட எதுவும் சொல்லாதீங்க… முக்கியமா பவியோட ஆசை… அது ரெண்டு பேருக்கும் தெரிய வேண்டாம்.. இன்னும் சொல்லப் போனால் பவிக்கு அர்ஜூன் மருமகனா வரனும்னு ஆசைனா… கண்மணி அதுக்கு அகைன்ஸ்ட்டாத்தான் நிப்பா… ரெண்டு பேர்கிட்டயும் இதைச் சொல்லாதீங்க .. அவங்க வளரட்டும்… பார்த்துக்கலாம்” என்றவளிடம்
“என் பொண்ணுக்கு பிடிக்கலைனா… யாரும் கம்பெல் பண்ணக் கூடாது…” நட்ராஜ் முகத்தைக் கல் போல வைத்துப் பேச
“அதேதான் அவனுக்கும்… என் பேத்தி என் பேரன் தான் வேணும்னு சொன்னா…. அதுக்கு இவன் தடையா இருக்கக் கூடாது” என்று நாராயணன் நட்ராஜ் வார்த்தைகளுக்கு கிருத்திகாவிடம் பதில் கொடுத்திருக்க
“என்ன… என் பொண்ணை மொத்தமா என்கிட்ட இருந்து பிரிக்கிறதுக்கு ஐடியா பண்றாங்களா கிருத்தி” நட்ராஜும் கிருத்திகாவிடம் முறைக்க
“தயவுசெய்து… கண்மணியோட இப்போதைய சிச்சுவேஷனப் பாருங்க… இதெல்லாம் இன்னும் பத்து வருசம் கழிச்சு நடக்கப் போற விசயங்களுக்காக அடிச்சுக்காதீங்க… “
என்ற போதே…
“என்ன கிருத்தி நீ… நான் எப்படி அமைதியா இருக்க முடியும்… என் பொண்ணு என் கூட வர்றேன்னு சொல்றப்போ இவர் ஏன் அமைதி இருக்கிறார்னு கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியா… சைக்காலஜிஸ்ட்டாம்… அந்த அர்ஜூனுக்கு என்னைப் பிடிக்காது… அவன் என் பொண்ணு பக்கத்துல என்னை நெருங்க விட மாட்டான்… எல்லாம் ப்ளான் பண்ணித்தான் இவர் பேசுறாரு” என்ற போதே நட்ராஜின் குரல் உடைந்திருக்க…
“அப்படி மட்டும் என் பொண்ணை என்கிட்ட பிரிக்க நினச்சாங்க… அதுக்கப்புறம் நான் உயிரோடவே இருக்க மாட்டேன்”
“இவனுக்கு மட்டும் இப்போ பொண்ணு… ஒரு அப்பாவோட வேதனை எப்படி இருக்கும்னு இவனுக்கு இப்போ புரியுதா… பண்ணின பாவமெல்லாம் வந்து சேரத்தான் செய்யும்… என் பொண்ணை என்கிட்ட இருந்து பிரிச்சானே… அப்போ இதெல்லாம் நெனச்சு பார்த்தானா… என் கையால பாவி கொள்ளி வைக்க வச்சானே” இப்போது நாராயணனின் கம்பீரமெல்லாம் அவரது குரலில் இல்லாமல் போயிருக்க
“ஹையோ… கண்மணியோட நிலைமை புரியாமல் பேசிட்டு இருக்கீங்களே…” கிருத்திகா நொந்து கொள்ளத்தான் முடிந்தது… வைதேகியும் நட்ராஜ்… நாராயணன் வார்த்தை போரில் இடையிட்டு பேச முடியாமல் தவித்திருக்க
“அர்ஜூனை… அவனால உங்களுக்கு நடக்கப் போறதை எல்லாம் யோசிக்க நேரம் இது இல்லை… மருதுவால அவ கடந்த கால வாழ்க்கை கொடுத்த காயங்களை எல்லாம் எப்படி மாத்துறதுன்னு மட்டும் யோசிங்க…”
“அவளுக்கு ஏதும் ஆகலேன்னு அவ திடமா நம்புற மாதிரி… மருது விசயத்துல திடமா இல்ல.. நாம சொல்லித்தான் அவன் உயிரோட இருக்கிறான்னு நம்புறா… அவ்வளவே… ரெண்டாவது அவன் நல்லவன்… இவ சொன்னதால அவனை வற்புறுத்துனலதான் அன்னைக்கு நடந்த இன்சிடெண்டுக்கு காரணம்னு நினைக்கிறாளே தவிர துரை மாதிரி அவனையும் கெட்டவன்னு நினைக்கல… தன்னாலதான் மருது இப்படி ஆகிட்டானோன்ற எண்ணம் வேற..”
நட்ராஜ் அங்கிருந்த சுவற்றில் முட்டிக் கொண்டபடி அழ ஆரம்பித்திருக்க
“ராஜ் நடந்ததை எதுவுமே மாற்ற முடியாது… கண்மணியை மருதுவோட எண்ணங்கள்ல இருந்து மாற்றனும்… நம்மகிட்ட அவ அவனப் பற்றி பேசல… சொல்லலைனு அவ மருதுவை மறந்துருவான்னு நினைக்காதீங்க… அவன் அவ வாழ்க்கைல பெரிய பாதிப்பை ஏற்படுத்திட்டு போயிருக்கான்… உங்களுக்கும் அது புரிய வரும்…”
மூவருமே அவளை அதிர்ச்சியுடன் பார்க்க
“அவ திருமண வாழ்க்கையே கேள்விக் குறிதான்… காதல்னு என்னன்னு புரியாத வயசுல மருது மேல வச்சிருந்த பாசத்தை என்ன சொல்றதுன்னே தெரியல… அதை விட இனி ஒருத்தனை அவ வாழ்க்கைல அந்த அளவுக்கு நேசிப்பாளா… இல்லை அந்த வாழ்க்கைக்குத் தயாராவாளா… இப்போதைக்கு ஏதுமே சொல்ல முடியாது” கிருத்திகா அடுத்தடுத்த குண்டுகளை எல்லாம் தூக்கிப் போட்டிருக்க
நாராயணன்… வைதேகி… நட்ராஜ் என அனைவருமே உறைந்து நிற்க…. கிருத்திகா அதற்காகவெல்லாம் தன் பேச்சை நிறுத்தவில்லை…
”காலம்னு ஒண்ணு இருக்கு… எந்தக் காயங்களையும் மாத்துறதுக்கு… கண்மணியை மாத்துறது கஷ்டம்னு முதல்ல நான் நினைத்தேன்… ஆனால் நித்தின் விசயத்துல நான் ஒண்ணை நோட் பண்ணினேன்…” கிருத்திகா நிறுத்தியவளாக
“கந்தம்மாள் சொல்ற அதிர்ஷ்டம் இல்லாதவன்ற எண்ணம் அவ மனசுல பதிஞ்சுருக்கு… ஆனால் அதே நேரம் அந்த வார்த்தையை மாத்தனும்னும் நினைக்கிறா… நம்மாலதான்… நம்ம பார்வை பட்டதாலதான் அவன் கஷ்டப்பட்றானோ… நித்தின் கிட்ட பழக ஆரம்பிச்சதே இந்தக் காரணத்துனாலதான்…”
“வந்த புதுசுல நித்தின் கூட அவ பேசமாட்டா… பழக மாட்டா… ஆனால் அவனுக்கு ஃபீவர் வந்தப்போ… அவளாவே அவனை வந்து பார்த்துகிட்டா… அவன் அவளோட முகத்துல இருந்த காயத்துனால தள்ளி விலகிப் போனப்போ கூட அவ பாசம் காட்றதை நிறுத்தலை… இதோ இப்போ நித்தினுக்கு அவளை அவ்ளோ பிடிச்சிருக்கு…”
ஆனால் அதே நேரம்…
“நித்தினை விட்டு விலகிப் போறோம்னு அவ ஃபீல் பண்ணவும் இல்லை… அவ அன்கண்டிஷனலா எதிர்பார்ப்பில்லாமல் கொடுத்த அன்பை விட்டு வெளிய வரவும் தயங்கலை…”
கிருத்திகா பெருமூச்சு விட்டவளாக…
“உங்க மூணு பேர்க்குமே அதே நிலைமை தான்… சோ புரிஞ்சுக்கங்க… அவளோட ஃப்யூச்சரை நாம தீர்மானிக்கவே முடியாது… டெஸ்டினிதான்… அது மேல இருக்கிறவன் கைல…”
“மருது அவ முதன் முதல்ல ஹீரோவா நினைத்த ஒரு பையன்… அவனாவே அவகிட்ட அன்பைக் காட்டினான்… இவளும் மத்தவங்க கிட்ட எதிர்பார்த்த அத்தனை அன்பையும் அவன் ஒருத்தன் கிட்டேயே எதிர்பார்த்து இவளோட மொத்த பாசத்தையும் கொடுத்துட்டா…”
“எங்க பாசம்லாம் அவள மாத்தாதா கிருத்திகா…” வைதேகி தழுதழுக்க
“அவ எதிர்பார்த்தப்போ அவளுக்கு நாம அதைக் கொடுக்கலையே…. இன்னைக்கு நீதான் எங்க வாழ்க்கைனு இப்போ நீங்க சொல்றதை எப்படி ஏத்துப்பா…”
”இனி நீங்க அவமேல கோடி அன்பைக் கொட்டிக் கொடுத்தாலும்… அதை அவ மனசு ஏத்துக்கனுமே…”
நட்ராஜ் உடைந்து போயிருக்க… அவனருகில் கிருத்திகா செல்ல
“என் பொண்ணை நான் மறுபடியும் பழைய கண்மணியா பார்க்க முடியாதா… துள்ளித் திரிஞ்சுட்டு இருந்தா…. என்னால எல்லாமே போச்சு… மருது இந்த அளவுக்கு என் பொண்ணோட வாழ்க்கையை திசை மாத்திட்டு போவான்னு நினைக்கல கிருத்தி… 23 வயசுப் பையன்… இவ சின்னப் பொண்ணுனு அசால்ட்டா இருந்துட்டேன்…”
“என் பொண்ணோட வாழ்க்கையையே அழிச்சுட்டுப் போயிட்டான் பாவி… அவன் இல்ல நான் பாவி… ”
“நல்ல பாம்புனு தெரியாமல் வீட்ல வளர்த்து … இன்னைக்கு என் பொண்ணு வாழ்க்கை கேள்விக் குறியாகிருச்சு கிருத்தி… “ துடித்தான் நட்ராஜ்
“இங்க பாருங்க ராஜ்… உங்கள அழ வைக்கனும்னோ… கவலைப்பட வைக்கனும்னோ இதெல்லாம் சொல்லல… அவ மருதுவை காதலிக்கலை… ஆனால் இனிமேல் ஒருத்தன் மேல காதல் வந்தாலும் அதைக் காதல்னு புரிஞ்சுப்பாளா… முழுசா அந்த வாழ்க்கைக்கு தயாராக முடியுமான்னு தெரியலேன்னுதான் சொல்றேன்… இன்னும் சொல்லப் போனால்… மேரேஜ் கூட ஆகலாம்.. குழந்தைங்க குடும்பம்னு கூட ஆகலாம்… ஆனால் அது எல்லாமே மெஷின் மாதிரி ஒரு பொண்ணுக்கு நடக்கும் விசயங்கள்னு அந்த வாழ்க்கையைக் கூட ஏத்துக்கலாம்… அவ உணர்வுகளை எப்போதுமே வெளிப்படுத்த மாட்டா ராஜ்…”
கிருத்திகா சொன்னது நிஜம் தான் என்பது மெல்ல மெல்ல அவர்களுக்கும் புரிய ஆரம்பித்தது கண்மணியின் பதிமூன்றாம் வயதில்…
---
மூவரும் பேசி முடித்த கிருத்திகா அடுத்த சில நிமிடங்களில் கண்மணியிடம் சென்றாள்…
”கண்மணி… கிளம்பலாம்” என்றபடி கிருத்திகா பரபரக்க
கண்மணி நித்தினுடன் வெளியே வந்தாள்…
“டேய்… அக்கா இனி இங்க அடிக்கடி வர மாட்டேன்… ஒழுங்கா இருக்கனும்…” என்ற போதே
“நீ இல்லேனா நான் எப்படி இருப்பேன்… என்ன பண்ணுவேன்னு நான் காட்டினேன்ல… நான் சமத்துதானே…”
“ஹான் அதே… நான் இல்லைனாலும்… நான் உன் பக்கத்துல இருக்கிற மாதிரிதான்… மார்னிங்ல இருந்து நைட் தூங்குற வரை… ஒழுங்கா இருக்கனும்… ஓகேவா…”
”பக்கா “ கண்மணியிடம் கட்டை விரலை உயர்த்திக் காட்டியவனின் தலைக் கேசத்தைச் கலைக்க ஆரம்பித்தவளிடம்
“அக்காக்கு ஒரு ஹக்… ஒரு கிஸ் கொடு” கிருத்திகா தன் மகனிடம் சொல்ல அவனும் கண்மணியை வேகமாக கட்டிக் கொண்டவன்…. முத்தம் கொடுக்காமல் தன் அன்னையைப் பார்க்க…
”கொடுடா” என்ற போதே கண்மணி வேகமாக
“இல்ல ஆன்ட்டி… முகமெல்லாம் இன்னும் தழும்பா இருக்கு… அன்னைக்கே என்னைப் பார்த்தே பயப்பட்டான்… அப்படி இருந்தவன் இவ்ளோ அட்டாச் ஆனதே பெரிய விசயம்…”
கண்மணி முகத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் புன்னகையுடன் சொல்ல… கிருத்திகாவும் அவளிடம் மேலும் ஏதும் பேசவில்லை…
”சரி… நான் என்னோட பேக் எடுத்துட்டு வர்றேன்” என்றபடி உள்ளே நுழைந்தவளின் முகத்தை அங்கிருந்த கண்ணாடியில் பார்த்தவளுக்கு அன்றைய தினம் போல காயங்கள் இல்லைதான்…. இந்தத் தழும்புகளும் மாறக் கூடிய தழும்புகள் தான்… ஆனால் மனதின் அடியில் ஏற்பட்ட காயங்கள் ஆறக் கூடிய காயங்களா… அதற்கான மருந்தை இடாமலேயே புதைத்திருந்தாள் கண்மணி…
---
Comentarios