top of page

கண்மணி... என் கண்ணின் மணி- 94-3

அத்தியாயம் 94-3


சில வாரங்களுக்குப் பிறகு…


வீட்டில் கண்மணி மட்டுமே இருந்தாள்… சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க… மணி 11 க்கும் மேலாக ஆகியிருக்க…


நட்ராஜுக்காகவும் மருதுவுக்காகவும் காத்திருந்தாள் கண்மணி….


இப்போதெல்லாம்… மருது முன்னே இருந்தது போல இல்லை… நட்ராஜோடு வருபவன் அதன் பின் எங்கும் செல்ல மாட்டான்… ஆனால் இப்போதெல்லாம் நட்ராஜை விட்டு விட்டு… சினிமாவுக்குப் போகிறேன் என்று இரவு வீட்டில் தங்குவதே இல்லை…


கம்பெனியில் வாசுவுக்கு பதில் எப்போது துரை வந்தானோ… அதில் இருந்தே மருது இவளோடு செலவழிக்கும் நேரம் குறைவாக மாறி இருந்தது…


இதற்கிடையே… கம்பெனிக்கும் வரக் கூடாது என நட்ராஜ் சொல்லி விட… பெரும்பாலும் கண்மணி தனிமையிலேயே தன் பொழுதுகளை செலவழிக்க ஆரம்பித்திருந்தாள்…


கம்பெனிக்கு சென்றிருந்தால் கூட அவனோடு நேரம் செலவழித்திருப்பாள்… அதற்கும் ஆப்பு வைத்திருந்தான் நட்ராஜ்


கம்பெனிக்கு அவளை வரக் கூடாது என்று நட்ராஜ் சொன்னதற்கு காரணம் அன்று மருதுவுக்காக தன்னையே எதிர்த்து கண்மணி பேசிய காரணம் மட்டுமல்ல… கந்தம்மாளும் காரணம்….


”ராசு… உன் மவ அந்தப் பையனோட பேசுற விதம்… பழகுற விதம் ஏதும் எனக்குப் பிடிக்கல… தேவையில்லாத எதையும் இழுத்து விட்ருவா போல அந்த சிறுக்கி” எனும் போதே


“ம்மா… மருதுவை எனக்கு சின்ன வயசுல இருந்து தெரியும்… அவன் எப்படிப்பட்டவன்னு எனக்கு பாடம் எடுக்காத… பவித்ராவையே அவன நம்பி விட்டுட்டு போயிருக்கேன்… அவனப் போய் சந்தேகப் படாத” என கோப முகம் காட்டினான் தான் தாயிடம்


“அவன் நல்லவனா இருக்கட்டும்… அவன நான் சொல்லலயே… இந்த ஆடுகாளி இருக்காளே… அவளத்தான் சொல்றேன்…. “ எனும் போது… நட்ராஜ் அமைதியாகத்தான் இருந்தான்… கண்மணி மருதுவிடம் அதிகமாக உரிமை எடுத்துக் கொண்டிருப்பது புரியாமல் இல்லை அவனுக்கும்…


“ஹ்ம்ம்… சீக்கிரம் ஒரு வழி பண்ணிடறேன்மா… ஹாஸ்டல்ல சேர்த்து விட்றலாம்னு இருக்கேன்… உன்கூடத்தான் வர மாட்டா…. இங்க எல்லாரும் அவளப் பார்த்துக்கிறது என்னோட கடமை அதுன்னு எனக்கு நியாயம் சொல்ல வருவாங்க… படிக்கிறதுக்குனு அவள அனுப்பி வச்சுட்டா எவனும் என்கிட்ட வந்து நியாயம் பேச முடியாது..”


“அப்போ அதை செய்ய வேண்டியதுதானேடா…. நான் டிசி வாங்கிட்டு வந்து தர்றேன்…. ஸ்ஸுகூலுக்கும் போகாம… படிக்கவும் இல்லாமல் வெட்டியா அவன் பின்னாடியே சுத்திட்டு இருக்கா… நாளைக்கு ஏதாவதுனா உன்னைத்தான் சொல்லுவாங்க… பார்த்து சூதானமா இருந்துக்க” கந்தம்மாள் ஓதி விட்டுப் போயிருக


நட்ராஜும் கண்மணியின் கல்வியைத் தொடர்வதற்காக விசாரிக்க ஆரம்பித்திருந்தான்தான்… ஆனால் அனைவருமே அடுத்த கல்வியாண்டில் சேர்த்துக் கொள்வதாகச் சொல்லிவிட… ஏப்ரல் மாதம் வேறு நடந்து கொண்டிருக்க… இன்னும் ஒரு மாதம் தானே… பார்த்துக் கொள்ளலாம்… என நட்ராஜ் கொஞ்சம் மெத்தனமாக இருந்து விட்டான்…


ஒரு வழியாக… மகளின் பாதுகாப்பை… வளர்ப்பை ஒழுங்குபடுத்த நினைத்தான் தான் நட்ராஜ் கண்மணியின் தந்தையாக… ஆனால் அப்போதும் தன்னைத் திருத்திக் கொள்ள நினைக்கவில்லை அவன் பவித்ராவின் கணவனாக மட்டுமே இருந்தான்…


இதற்கிடையே துரை அவன் கம்பெனியில் சேர்ந்திருக்க… மருதுவும் துரையும் பழகிய விதத்தில்… மருது அவன் இயல்பில்தான் இருக்கின்றான் என முற்றிலுமாக நம்பினான் நட்ராஜ்… தன் மகள் விசயத்தில் மட்டும் அவனைக் கண்காணித்தவன்… மற்ற விசயங்களில் எல்லாம் கோட்டை விட்டும் விட்டான்…


---


தந்தைக்காகவும் மருதுவுக்காகவும் காத்திருந்து…. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த கண்மணி பசி தாங்காமல்… வீட்டு வாசலில் அமர்ந்திருந்தபடி… உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே நட்ராஜ்... மருது வந்திருக்க…. கூடவே துரையும் அவர்களோடு வந்திருந்தான்…


கண்மணி வாசலை விட்டு விலகி வழிவிட… முழுப்போதையில் இருந்த நட்ராஜை வீட்டுக்குள் கூட்டிச் சென்று படுக்க வைத்த இருவரும் வெளியே வந்தவர்களாக… கண்மணியின் முன் வந்து நின்றிருக்க…


”நீ என்ன இன்னைக்குமா படத்துக்கா போற…” தன் முன் வந்து நின்ற மருதுவிடம் கண்மணி கேட்க


”இல்ல” துரை பதில் சொல்ல…


“உன்கிட்ட நான் பேசல… நீ பேசாத என்கிட்ட “ கண்மணி அவனிடம் எகிறிய போதே… மருது அவளிடம்


“மணி… “ அதட்ட… அவன் கோப முகத்தில் கண்மணி அடங்கியிருக்க


“துரை என்கூட இங்கதான் தங்கப் போறான் இன்னைக்கு… நீ போய்த் தூங்கு” எனச் சொல்ல… கண்மணி வேறொன்றும் பேச வில்லை…


துரை புன்முறுவல் புரிந்தபடி… கண்மணியைப் பார்த்து…


“மணி பாப்பா… நைட் தூங்குனேன்னா இடையில எழுந்து வந்துர மாட்டியே… மருதுன்னு வந்து பாதி ராத்திரில வந்து நிக்க மாட்டியே”


“டேய்” மருது எரிச்சலோடு அவனை அதட்ட…


“அது பாட்டுக்கு மருதுன்னு நடுராத்திரி உன் வீட்டுக் கதவைத் தட்டிறப் போயிருதுடா” என்றபடி யோசித்தவனாக…


“ஓய்… இங்க வா” கண்மணியை அழைக்க… கண்மணியும் அவனருகே வர


“மணிப்பாப்பாக்கு இந்த சாக்லேட்” என அவன் சட்டைப்பையில் இருந்த சாக்லேட்டைக் கொடுக்க… மருது பதறி அவனைப் பார்க்க… அதே நேரம் கண்மணி மருதுவைப் பார்க்க


“டேய்… ஹார்ம்லெஸ் தாண்டா… படுத்தான்னா காலையிலதான் எழுந்துப்பா… நமக்கும் பயமில்ல… வாங்கிக்கக் சொல்லு” என்று மருதுவை அடக்க… மருது இப்போது கண்மணியிடம்… வாங்கிக் கொள் என்று பார்வையாலேயே சொல்ல…


கண்மணியும் வாங்கிக் கொண்டாள் தான்… ஆனால் அந்த சாக்லேட் அவள் இதுவரை சாப்பிடாத … பார்க்காத மாதிரியாக இருக்க… அதையே அப்படியும் இப்படியுமாகத் திருப்பிப் பார்த்தபடி இருக்க


“ஃபாரின் சாக்லேட்… டேஸ்ட் டிஃபரெண்டாத்தான் இருக்கும்…. சாப்புடு மணிப்பாப்பா” என்றபடி அவள் கையில் இருந்ததை வாங்கி… கவரைப் பிரித்து… ஊட்டப் போக… வேகமாக மறுத்தபடி அதை தன் கையில் வாங்கி வாயிலும் போட்டிருக்க…மருதுதான் கொஞ்சம் பதட்டமாக இருந்தான்…


“டேய்… போதை தெரியுறதுக்கு முன்னாடியே தூங்கிருவா… நாம என்ன சாக்லேட் சாப்பிட்டோம்னே தெரியாம அதுவும் தூங்கிரும் விடு… நீ ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுற…” மருதுவை இழுத்துக் கொண்டு துரை நடக்க ஆரம்பிக்க… கண்மணிக்கு கண்கள் மயங்க ஆரம்பித்திருக்க… படுக்கையில் விழுந்தவள்… தனக்கு என்ன நடக்கிறது… தான் என்ன சாப்பிட்டோம் என்று அறியும் முன்னரே உறங்கவும் ஆரம்பித்திருந்தாள்…


அன்று மட்டுமல்ல… துரை அங்கு வந்து தங்கும் போதெல்லாம் இது நடக்க ஆரம்பித்திருக்க… அவன் கொடுப்பது போதை சாக்லேட் என அறியாமலேயே கண்மணியை அந்த இனிப்புக்கு பழக்க ஆரம்பித்திருந்தான் துரை….


அதே நேரம் கண்மணியையும் அவன் நெருங்கவில்லை… காரணம் மருதுவின் உறவை எந்தக் காரணத்துக்காகவும் அவன் விடத் தயாரில்லை… இன்னும் சொல்லப் போனால்… கண்மணியை எப்படி மருதுவுக்குத் தெரியாமல் அவனிடமிருந்து பிரிப்பது என நேரம் பார்த்து காத்துக் கொண்டிருந்தான்…


அன்று கண்மணிக்காக மருதுவோடு சண்டை போட்டு… அவனிடம் பேசாமல் சென்ற துரை… அடுத்த நாளே மருதுவைச் சமாதானப்படுத்தும் பொருட்டு நட்ராஜின் கம்பெனியில் தானாகவேச் சேர்ந்திருந்தான்…


நட்ராஜ் தங்களைப் பற்றி தெரிந்து கொள்ளக் கூடாதென்று கைப்பட்டை ஒன்றையும் கையில் சுற்றிக் கொண்டு வந்தும் நின்றான்…


அதே நேரம் மருதுவும் அவனைத் தவிர்க்க நினைத்தான் தான்… அவனுக்கு தன் மனதைப் புரிய வைக்க வேண்டுமென கண்மணியின் பெயரை பச்சைக் குத்தியும் காட்டினான் தான்… அப்போதும் துரை அவனை விடவில்லை…



“இங்க பாரு… இன்னும் எட்டு வருசம் இருக்கு அவ மேஜராக… அதுவரை அவளுக்காக உன் உணர்வுகளை எல்லாம் பொசுக்கிக்க போறியா.. நீ அவளைக் கல்யாணம் பண்ணிட்டு அதுக்கப்புறம் அவளுக்கே அவளுக்கானவனா மாறிக்க… அதுவரை என்கூட … நான் காட்ற வாழ்க்கையை அனுபவி… உன் சந்தோசம் தான் எனக்கு முக்கியம்…. உனக்காக எது வேண்டும்னாலும் பண்ணுவேன்… கண்மணியைக் கூட நான் கண்டுக்க மாட்டேன்… அன்னைக்கு ஏதோ ஒரு வேகத்துல சொல்லிட்டேன்” என ஏதேதோ சொல்லி மருதுவை துரை மீண்டும் மாற்றி இருந்தான்…


”இங்க பாரு… அவ பேரை நான் பச்சைக் குத்திருக்கேன்னு அவ கிட்ட சொல்லிராத… என்னோட காதலை எப்போ சொல்றேனோ அப்போ இதை அவகிட்ட காண்பிப்பேன்…” என்று மருதுவும் துரையிடம் சொல்லி இருக்க… துரை என்ன பைத்தியக்காரனா…. அதைச் சொல்ல… கேட்டுக் கொண்டான்…


மருது என்பவன் கண்மணி என்ற பெண்ணுக்கு மட்டும் நல்லவனாக… உத்தமனாக இருந்தான்… கண்மணியையும் நேசித்தான்… அதே நேரம் அவனின் மற்ற கெட்ட பழக்கங்களையும் விடாமல் தொடர்ந்தான்..

ஆக மருதுவுக்கு ஒரு புறம் துரை என்பவனைச் சார்ந்து அவனது பழக்கவழக்கங்கள் மாறிக் கொண்டிருக்க… கண்மணிக்கும் அவன் மாற்றம் மெல்ல மெல்ல புரிய வர ஆரம்பித்ததுதான்… ஆனாலும் அவனை மாற்ற நினைக்கவெல்லாம் வில்லை… அந்த வயதுக்கு அவளுக்கு அது தெரியவும் இல்லை…


குடிப்பது… சிகரெட் அடிப்பது… இரவு வீட்டுக்கு தாமதமாகவருவது என இவை எல்லாமே அவள் வாழ்ந்த இடங்களில் எல்லோரும் செய்வதுதான்… அதில் பெரிதாக அவள் வருத்தப்படுவதற்கான காரணங்களும் இல்லை அவள் கவலைப்பட்டதெல்லாம் மருது தன்னுடன் அவன் நேரத்தைச் செலவிடவில்லை என்பது மட்டும் தான்… அதே நேரம் அவள் தனிமை… வைதேகியுடன் செலவிடும் நேரத்தை அதிகரித்திருந்தது


அந்த ஏரியாவின் அம்மன் கோவில் திருவிழா வரப் போகிறது என்பதால்… கோவிலில் மராமத்து வேலைகள் நடந்து கொண்டிருக்க…


வைதேகியும் கண்மணியும் அங்கிருந்த தெப்பக் குளத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்…


”சூப்பரா இருக்கு பாட்டி… யாருக்கு இது….” கையில் வைத்திருந்த உடைகளைக் காட்டிக் கேட்க


“உனக்குதாண்டா…” வைதேகி பாசமாகச் சொல்ல…


“இந்த பட்டுப்பாவாடை போடுவேன்... ஆனால் இந்த மாதிரி ட்ரெஸ்லாம் கடையிலதான் பார்த்து இருக்கேன்… ஆனால் இதெல்லாம் போட்டு பழக்கமில்லையே… வீட்ல திட்டுவாங்க” மருதுவின் வார்த்தைகளை நினைவில் வைத்துக் கொண்டாள்


வைதேகி கொடுத்த மற்ற உடைகளை எல்லாம் வேண்டாம் என்று அவளிடமே கொடுத்தவள்… அந்த பட்டுப்பாவாடையை மட்டும் கையில் வைத்துக் கொண்டு சில நிமிடம் பார்த்தவளுக்கு… நட்ராஜ்… நாராயணன் இருவரின் ஞாபகமும் ஒரு சேர வந்திருக்க… வைதேகியிடம் அதையும் கொடுத்தவள்…


”அப்பா திட்டுவாங்க…” சும்மாதான் சொன்னாள்… ஏனென்றால் அவள் என்ன உடை உடுத்துகிறாள்… என்ன சாப்பிடுகிறாள்… எப்படி இருக்கிறாள்… இதெல்லாம் நட்ராஜ் எப்போதுமே கண்டுகொண்டதில்லை… இன்று இந்த உடைக்கா கண்டு கொள்ளப் போகிறான்…


தான் கையில் போட்டிருக்கும் இந்த தங்க கைகாப்பையே என்ன ஏதென்று.. எப்படி இது வந்ததென்று விசாரித்ததில்லை எனும் போது மற்றதெல்லாம் கண்ணுக்குத் தெரியுமா என்ன… மருது மட்டும் ஒருமுறை விசாரித்திருந்தான்…


அவன் கேட்ட போதும்… பழைய ஏரியாவில் இருந்த போது அவளது ஆசிரியர் இவளின் புத்திசாலித்தனத்தைப் பார்த்து அன்புப்பரிசாக கொடுத்தது என்று எப்படியோ சமாளித்திருந்தாள்… நினைத்தபடியே மீண்டும் வைதேகியைப் பார்க்க… வைதேகியும் இயலாமையுடன் அவளைப் பார்த்திருக்க…


“இது என்ன கம்மலா… அடப் பாட்டி. எனக்கு காது குத்தவே இல்லையே…“ என அவள் காதைக் காட்ட…


வைதேகி முதன் முதலாக கண்மணியைப் பார்த்து அவளைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தார்…


”இவள் அப்பா அம்மா என்ன ஆட்கள்… பத்து வயது ஆகி விட்ட பெண் பிள்ளைக்கு காது குத்தாமல் இருக்கிறார்களே…” சந்தேகம் வர ஆரம்பித்திருக்க


”உனக்கு கூடப் பொறந்தவங்க எத்தனை பேர் கண்மணி…”


கண்மணி யோசித்தாள்… தனக்கு தம்பி தங்கை… அண்ணன் அக்கா… இப்படி எல்லோரும் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் … அப்படி ஒரு குடும்பத்தை யோசித்த போதே பவித்ரா நட்ராஜ்… கூட்டமாக தாங்கள் அனைவரும்… அவள் கண்முன் அந்த காட்சி தெரிய ஆரம்பித்திருக்க… முகம் முழுநிலவென ஜொலிக்க ஆரம்பித்திருக்க


‘எனக்கு ஒரு அக்கா… ஒரு தம்பி… அப்புறம் ஒரு அண்ணன்…” என்றபடியே காசா பணமா.. தங்கச்சியையும் சேர்த்துக்கலாம்… நினைத்தவளாக


“ஹான் தங்கச்சியும் சேர்த்துக்கங்க… “ என்க… வைதேகி அவளை ஒரு மாதிரியாகப் பார்த்தபடியே


“அவங்கள்ளாம் உன் கூட வரமாட்டாங்களா… ஏன் கேட்கிறேன்னா… அவங்களுக்கும் ஏதாவது வாங்கிட்டு வருவேன்ல” வைதேகியும் சமாளிக்க


“அவங்களாம் என் கூடவும் அப்பா கூடவும் இல்லை… எங்க அம்மா கூட இருக்காங்க…” அடுத்த நிமிடமே அவர்களைத் தன் தாயோடும் சேர்த்து விட்டிருந்தாள் கண்மணி…


வைதேகி கேட்டார் இப்போது…


“அம்மா எங்க இருக்காங்க… அப்பா கூட இல்லையா…”


“அவங்க தனியா இருக்காங்க… ஆனா அப்பாக்கும் அம்மாக்கும் சண்டைலாம் இல்லை… ஆனா சேர்ந்து இல்லை… ஏன் எதுக்குனுலாம் கேட்காதீங்க… எனக்கும் தெரியாது… அவ்ளோதான் சொல்ல முடியும்… ஸ்டோரி முடிந்தது“ கண்மணி அழகாகக் கதைத் திரித்து முடித்திருக்க… வைதேகிக்குத்தான் மொத்தக் குழப்பம் வந்திருந்தது…


மகள் இறப்பால் சித்தம் கலங்கி குழம்பியிருந்த வைதேகி… பேத்தியின் பேச்சாலும் குழம்பினார்தான்… ஆனால் யோசிக்க ஆரம்பித்திருக்க… ஏற்கனவே கண்மணியால் மெல்ல மெல்ல இயல்புக்கு வந்தவர்… முற்றிலுமாக கண்மணியை மட்டுமே யோசிக்க ஆரம்பித்திருக்க… கண்மணியின் வார்த்தைகள் எல்லாமே அவருக்கு முக்கியமாகப் பட ஆரம்பித்திருக்க… கண்மணியைப் பற்றியும் அவள் குடும்பத்தைப் விசாரிக்கவும் முடிவு செய்தார்…


---


அன்றைய இரவு … நட்ராஜை வீட்டில் விட்டு துரையுடன் சென்றிருந்த மருது வெகு நேரமாக வீடு திரும்பாமல் இருக்க… கண்மணிக்கு உறக்கமே வரவில்லை…


மருது இரவு வரவில்லை என்றால்… எப்போதுமே சொல்லிவிட்டுத்தான் போவான்… இன்று அப்படி ஒன்றும் சொல்லவில்லையே…


படுத்தாலும் உறக்கம் வரவில்லை… நெருடலாகவே இருக்க… மருதுக்கு ஏதோ ஆயிற்றோ… மனம் தவிக்க ஆரம்பித்திருக்க…. வீட்டை விட்டு வெளியேறி அவளுக்குத் தெரிந்த அத்தனை இடங்களிலும் அவனைத் தேட ஆரம்பித்திருந்தாள்…


எங்குமே மருது இல்லை… கோவிலுக்கு பின்புறம் உள்ள ஏரியாவுக்கு வந்திருக்க… அந்த இடத்தைப் பார்த்தாலே அவளுக்குப் பிடிக்காதுதான்… ஆனாலும் அங்கேயும் தேட… அங்கும் இல்லை மருது…


அந்த இடத்திற்கு வந்தால் ஏன் அப்படி ஆகிறோம் என அவளுக்கே தெரியவில்லை… நகர முடியவில்லை… அந்தக் கணமே மயக்கமும் வர ஆரம்பித்திருக்க… அடுத்து விழித்ததோ… மருதுவின் கரங்களில் தான்…


“ஏய்…. இந்த நடு ராத்திரில ஏன் இங்கலாம் வர்ற…” மருது கோபமும் அக்கறையுமாகக் கலந்து கேட்க


அவன் கண்களையே பார்த்தவள்… அடுத்த நிமிடமே எழுந்து உட்கார்ந்தவளாக… மீண்டும் இப்போது அந்த இடத்தையே பார்க்க… எப்போது பார்த்தாலும் அந்த இடம் அவளுக்கு பிடிக்காத இடம்… வேகமாக மருதுவோடு எதிர் திசையில் நடக்க ஆரம்பித்தவள்…


“எல்லாம் உன்னாலதான்… நைட் வர மாட்டேன்னு சொல்லவே இல்லையே… அதான் உன்னைத் தேடி வந்தேன்… அப்புறம் இந்த இடத்துக்கு நீ இனி வராத… இங்க உனக்கு ஏதோ ஆபத்து நடக்கப் போற மாதிரி எனக்கு ஃபீலாகுது ”


”லூசு மாதிரி பேசாத… அதை விடு்… அதுக்காக இந்த அர்த்த ராத்திரியில என்னைத் தேடி வருவியா…”


“எனக்கு நீ முக்கியம்னு உனக்குத் தெரியாதா… உனக்கு ஏதாவது ஆச்சுனா என்னால தாங்க முடியாதுன்னு உனக்குத் தெரியாதா…”


மருது அவளைப் பார்த்து திகைத்து விழிக்க…


“எனக்கு நீ மட்டும் தான் இருக்க மருது…” கண்கள் கலங்கி இருக்க… மருதுவுக்கே ஒரு மாதிரியான நிலை… பாதிப் போதை வேறு… சற்று முன் அனுபவித்த பெண் சுகம் என அவன் வேறு நிலையில் இருந்தாலும்… கண்மணி என்று வரும் போது அவன் வேறு மருதுவாகிற்றே… கண்மணிக்கு அவன் எப்படியோ அதே போல கண்மணியும் அவனுக்கு முக்கியம்…


“வா வீட்டுக்கு போகலாம்…” என்றவன்….. துரையிடம் கூடச் சொல்லிக் கொள்ளவில்லை… கண்மணி அந்த இரவில்… தனியாக இருக்கிறாள்… அவன் மட்டும் இங்கு இல்லை… இவனைப் போல இன்னும் குடித்து விட்டு பெண்களோடு கூத்தடிக்கும் கூட்டம் சில மீட்டர் தூரத்தில் இருக்கின்றனர்…


அவர்களிடம் இவள் மாட்டினால்… சிறுமி என்று கூட பார்க்கமாட்டார்கள்… இந்த சில மாதங்களில் அவன் பார்த்திருக்கின்றானே… ஏன் அவனுமே அப்படித்தானே… அந்த கேவலமான கூட்டத்தில் ஒருவன் தானே…


”தன் வீட்டுப் பெண்” எனும் போது மருதுவுக்குத் துடிக்க… வேகமாக கண்மணியோடு அந்த இடத்தை விட்டு கண்மணியைக் கூட்டிக் கொண்டு கிளம்பிவிட்டான் மருது…


---

அடுத்த நாள் காலை… நட்ராஜுக்குத் தெரியாமல் கண்மணிக்கு அர்ச்சனை விழுந்து கொண்டிருந்தது மருதுவிடமிருந்து…


‘நீ ஒழுங்கா இருந்தா நான் ஏன் அங்க வந்திருக்க போறேன்…. இங்க பாரு… கல்யாணம் பண்ணிட்டு இப்படி நடந்து பாரு… அப்புறம் இருக்கு உனக்கு… வீட்ல இருக்கிற விளக்கமாறு செருப்பெல்லாம் பிஞ்சிருக்கும்… எங்க ஏரியால எல்லாம் எல்லாரும் அவங்க புருசனுங்களை அப்படித்தான் கொஞ்சுவாங்க… “ கோபத்தில் கண்மணி அவனிடமே எகிறி இருக்க..


“கன்னம் பழுத்திரும் உனக்கு… நான் என்ன பேசிட்டு இருக்கேன்.. நீ என்ன பேசிட்டு இருக்க… என்ன தைரியம் உனக்கு…. நடுராத்திரி பொட்டப் புள்ள தனியா வந்து நிக்கிற…”


“ஏன் என்னாகும்… கண்ண நோண்டுற கும்பல் கூட்டிட்டு போயிருமா என்ன… அதெல்லாம் என்னை ஒண்ணும் என்னை பண்ண முடியாது”


”மணி….” மருதுவுக்கு என்ன பேசுவது… எப்படி அவளிடம் எடுத்துச் சொல்வது எதுவுமே தெரியவில்லை…. புரியவில்லை


“இனிமேல இப்படி வர மாட்டேன்னு என் மேல சத்தியம் பண்ணு” கண்மணியை அதட்ட


“அப்போ நீயும் போக மாட்டேன்னு சத்தியம் பண்ணு” கண்மணி மருதுவிடம் திருப்பிக் கேட்க…


”இங்க பாரு… நான் வேற நீ வேற… அதைப் புரிஞ்சுக்கோ…. ” மருது அவளுக்கு புரியவைக்க முயற்சிக்க


“நீ அவன்… அந்த துரை வந்த பின்னால சரியே இல்லை… என்னை விட்டுட்டு விட்டுட்டு போயிட்ற… நீ இல்லாமல் என்னால இருக்கவே முடியாது மருது… எனக்கு நீ மட்டும் போதும்… வேற யாரும் வேண்டாம்… இந்த உலகத்துல வேற யாருமே வேண்டாம்… என் அப்பா கூட எனக்கு வேண்டாம்… நீ மட்டும் போதும் எனக்கு” கண்மணி அவன் மேல் சாய்ந்து தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்திருக்க… ஒரு பக்கம் மருதுவுக்கு சந்தோசமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் தான் இதற்க்கெல்லாம் தான் தகுதியானவனா… குப்பென்று வியர்த்திருந்தது அவனுக்கு…


“சரி விடு… இனி ஒழுங்கா இருக்கேன்… உன்னை விட்டுப் போக மாட்டேன்...“ என்றபடி அவனையுமறியாமல் சத்தியம் செய்து கொடுக்க… கண்மணி சந்தோசமாக அவன் கைகளைப் பிடித்துக் கொண்டாள்…


“இதுதான் என் மருது…” என்றபடியே…


”அந்த ஊஞ்சல் இருக்குல…அது லூசாகிருச்சு… அதைக் கட்டித்தா…” எனச் சலுகையாகக் கேட்க…. மருதுவும் அதை நோக்கிச் சென்றிருந்தான்…. ஆனாலும் அவன் மனம் குழம்ப ஆரம்பித்திருந்தது…


கண்மணியா… துரையா… எந்தப் பக்கம் முழுமையாகப் போவது… முடிவில் கண்மணி என்ற முடிவுக்கும் வந்திருந்தான்


-----------


கண்மணியோடு அன்று கோவிலுக்கு வந்திருந்தான் மருது…. இந்த இரண்டு நாட்களாக கண்மணியுடன் மட்டுமே நேரத்தை செலவிட்டிருந்தான்…


அந்த ஏரியாவில் இந்தக் கோவில் திருவிழா பெரிய திருவிழா என்பதால் இவர்கள் கம்பெனியையும் திறக்கவில்லை…


திருவிழா களைகட்ட ஆரம்பித்திருக்க…


“ரெண்டு பேரும் நல்ல ட்ரெஸ் எடுத்துக்கங்க… அவளுக்கு பட்டுப் பாவாடை எடுத்துக் கொடு…” என மருதுவிடம் பணத்தைக் கொடுத்து…. தன் கடமை அவ்வளவுதான் என்பது போல மதுவின் இருப்பிடம் தேடிச் சென்று விட்டான்…


மருது கண்மணியைக் கூட்டிக் கொண்டு கடைக்குச் செல்ல… கண்மணியோ அவனிடம்


“மருது… இந்த பணத்தை நீயே வச்சுக்கோ… இதையும் சேர்த்து உனக்கு வேணும்னா நல்ல ட்ரெஸ்ஸா எடுத்துக்கோ… நான் பாட்டிகிட்ட அந்த ட்ரெஸ்ஸை வாங்கிக்கிறேன்… ஆசையா கொண்டு வந்தாங்க தெரியுமா…”


மருதுவும் சரி என்று சொல்லி விட… கண்மணியும் வைதேகியிடம் ஆசையுடன் ஓடி வந்திருந்தாள்… பவித்ரா விகாஸுக்கு….


”பாட்டி… நீங்க அன்னைக்கு கொடுத்தீங்கள்ள… அந்த ட்ரெஸ் கொடுங்க… “ வைதேகியிடம் கேட்க… வைதேகியை பிடிக்க முடியுமா என்ன….


அவளுக்காக எடுத்து வைத்திருந்த ஆடையைக் கொடுக்க…


“நான் இன்னைக்கு இதைக் கோவிலுக்கு போட்டுட்டு வர்றேன்…. நீங்க கண்டிப்பா வரணும்…” வாங்கிக் கொண்டு உடனே கிளம்பியும் இருந்தாள் நாராயணனுக்கு பயந்தவளாக…


வைதேகி… அவளையே பார்த்தபடி நின்றிருந்தவர்… தன் உதவியாளர்ப் பெண்ணிடம்


“இவளப் பார்க்கும் போதெல்லாம் என் பொண்ணு ஞாபகம்தான் வருது… என் பொண்ணு இல்லையேன்ற கவலை இவளைப் பார்க்கும் போது உடனே மறந்து போயிருது… மனசு இலேசாகிருது… நான் இவங்க அப்பா அம்மாவைப் பார்த்து பேசப் போறேன்… அதுக்கு முன்னால இவர்கிட்ட பேசனும்… பவி அவளுக்கு பிடிச்சவனோட போன பின்னால அர்ஜூனை வளர்த்த மாதிரி இவளையும் வளர்க்கலாமான்னு… நான் ஒழுங்கா இருந்திருந்தால் அர்ஜூன் இங்கேயே இருந்திருப்பான்… என்னோட நேரம்…” என்று புலம்பியவர்


“கண்மணி அவளப் பெத்தவங்களுக்குப் பொண்ணாவே இருந்துட்டு போகட்டும்… அந்த உரிமையை எல்லாம் கேட்கல… ஆனா நம்ம வீட்ல இருந்து படிக்கட்டும்… அவங்க அம்மா அப்பாக்கு நாலு பிள்ளைங்க இருக்காங்கள்ள… வசதி வாய்ப்பும் இல்லதானே…. அவங்க குடும்பத்துக்கு தேவையானதை நாம பண்ணிறலாம்… நான் சொல்றது சரிதானே… இப்போவே அவர்கிட்ட போன்ல பேசப் போறேன்” காரியதரிசியிடம் சொல்ல…


அவளோ பேந்த பேந்த விழித்தாள்… வைதேகி என்னவென்று விசாரிக்க ஆரம்பிக்க…


“மேடம்… சார் கிட்ட இதைப் பற்றி எல்லாம் பேச வேண்டாம்…. கண்டிப்பா இதுக்கு ஒத்துக்க மாட்டார்… இன்னும் சொல்லப் போனால் நீங்க இதைச் சொன்னால் இனிமேல் கண்மணிகிட்ட பேச வேண்டாம்னுதான் சொல்வார்…” என இழுக்க…


வைதேகி அதை எல்லாம் கேட்காமல்…. அலைபேசியை எடுக்க ஆரம்பித்திருக்க


“மேடம் மேடம் … நான் சொன்னால் கேளுங்க… சார்க்கு கண்மணியைப் பிடிக்காது… உங்க உடல்நிலைக்காகத்தான் போனால் போகுதுன்னு அந்தப் பாப்பாகிட்ட பேச விட்ருக்கார்… அதைக் கெடுத்துக்காதீங்க மேடம்…” வேகமாக அலைபேசியைப் பறிக்க… வைதேகிக்கு சந்தேகம் வர ஆரம்பித்துருந்தது…


“இந்த வீட்டுக்கு கூப்பிட்டால் கூட பெரும்பாலும் அவாய்ட் பண்ணுவா… அப்டியே வீட்டுக்கு வந்தாலும்…உள்ள வர மாட்டா… அப்போ இவர் அவள மிரட்டிருக்காரா” வைதேகி கேட்க… அந்தப் பெண் தலை குனிய…


“ஏன் அந்தச் சின்னப் பொண்ணு என்ன பண்ணுச்சு இவரை… ஒரே மகளை சீராட்டி பாராட்டி வளர்த்த என் மகளை அநியாயமா அள்ளிக் கொடுத்த பின்னாலும்…நான் இப்படி இருக்கும் போதும் இன்னுமே இவருக்கு இந்தப் பணமும் அந்தஸ்தும் தான் முக்கியமா போயிருச்சா…” அழ ஆரம்பித்த போதே


“மேடம்.. சாரோட கோபத்துக்கு பணம் அந்தஸ்து மட்டும் காரணம் இல்லை… அந்தப் பொண்ணு இந்த வீட்டுக்குள்ள வந்துருமோன்ற பயமும்தான்” தயங்கிச் சொல்ல… வைதேகி கேள்விக் குறியோடு நோக்க


”ஆமாம்மா… அது உங்க பொண்ணோட பொண்ணுதான்…”


வைதேகிக்கு அவள் காதில் விழுந்து கொண்டிருக்கு வார்த்தைகள் உண்மையா தெரியவே இல்லை… நம்பவும் முடியவில்லை… நம்பாமல் இருக்கவும் முடியவில்லை… வெகு நாட்களுக்குப் பிறகு சந்தோச வானில் பறக்க ஆரம்பித்திருக்க… அவரது உடலும் உள்ளமும் பரபரத்திருந்தது


உடனே தன் பேத்தியைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது… அது மட்டுமில்லாமல்… யாரிடமாவது… மனம் விட்டு இந்த விசயத்தைச் சொல்லி கதறி அழ வேண்டும் போல இருந்தது… அந்த அளவுக்கு அவர் மனம் சந்தோசத்தில் துள்ளிக் குதித்திருக்க… அதே நேரம் அர்ஜூன் அவருக்கும் அழைத்திருக்க…


“என் பேரன்.. என் பேரன் அர்ஜூன் கால் பண்றான்… அவன் அவன் கிட்ட சொல்றேன் என் பேத்தியைப் பற்றி சொல்லப் போறேன்…. அதோட இவரைப் பற்றியும் சொல்றேன்… இந்த மனுசன் அவன் சொன்னாதான் கேட்பாரு” என்றபடியே அர்ஜூனின் அழைப்பை ஏற்க…


“அர்ஜூன் கண்மணி பற்றி சொல்லிருக்கேன்ல…”


“ஆமாம்… அதுக்கென்ன”


“அவ வேறயாருமில்லடா… நம்ம பவியோட பொண்ணாம்டா… அவ சாகலையாம்… உங்க தாத்தா மறச்சுட்டார்டா… நீ உடனே வாடா… நீ அவர்கிட்ட பேசினா… அவர் காது கொடுத்துக் கேட்பாருடா” அர்ஜூனின் உலகமும் இப்போது சந்தோச மழையால் நிரம்பி இருக்க


“பாட்டி… தாத்தாகிட்ட இப்பவே பேசறேன்… “ என்ற போதே….


“இன்னைக்கு வேண்டாம்டா…. என்னை பாப்பாகிட்ட போக விட மாட்டார்… எனக்கு அவளப் பார்க்கனும் போல இருக்கு…. சாயங்காலம் அவளப் பார்த்துட்டு வந்து சொல்றேன்… அதுக்கப்புறம் பேசலாம்டா… என் பேத்தி நம்ம வீட்டுக்கு வரனும்டா…”


“கண்டிப்பா பாட்டி… நம்ம சுபத்ரா… நமக்குத்தான் உரிமை… தாத்தா என்ன… வேற யார் வந்தாலும்… நானும் பேசறேன்… பாட்டி… எப்போ போவிங்க…” என அர்ஜூனும் ஆவலுடன் கேட்க… வைதேகிக்கு ஓரளவு நம்பிக்கை வந்திருந்தது…


நாராயணன் யார் பேச்சையும் கேட்க மாட்டார்… ஆனால் அர்ஜூன்தான் அவருக்கு எல்லாமே… கிட்டத்தட்ட அவரின் அடுத்த வாரிசு அவன்தான்… கண்டிப்பாக அவன் பேச்சை கேட்காமல் இருக்க மாட்டார்… அர்ஜூன் மீது முழு நம்பிக்கை வைத்தவராக… கண்மணியை தன் பேத்தியாக சந்திக்கப் போகும் தருணத்திற்காக காத்திருக்க ஆரம்பித்தார்


---


”ஹேய் மருது….. இங்க பாரு…. எங்க பாட்டி கொடுத்த ட்ரெஸ் எப்படி இருக்கு” கண்மணி போட்டு மருதுவிடன் சுற்றிக் காட்ட


மருது எப்போதும் போல சந்தோசமாக அவளைத் தூக்கப் போனவனாக அவளருகில் சென்றவன் இன்று தயங்கினான்…


முதன் முறை தன்னவள்… என்ற கோணத்தில் பார்க்க ஆரம்பித்திருக்க… மனம் தடுமாற அவளை விட்டு தள்ளி நின்றபடி


”அழகா இருக்கடா” என அவளைச் சுற்றி நெட்டி முறிக்க…


“மேக்கப்லாம் எப்படி… ” கண்மணி தன் முகத்தை அப்படியும் இப்படியுமாக திருப்பிக் கேட்க


“ஹான்… இங்க இந்தப் பவுடர் தான் அதிகமா இருக்கு…” மருதுவைத் தாண்டி… துரையின் கைகள் அவள் கன்னத்தைத் துடைத்திருக்க… மருது துரையை முறைத்தான்…


“கம்பெனி லீவ்… நீயும் ரெண்டு நாளா என் ரூம் பக்கம் வரலை… உன்னைப் பார்க்காமல் நான் எப்படி…” என்றவனின் கைகளில் புகைப்படக் கருவி இருக்க… அதைக் காட்டியவனாக


“திருவிழாக்கு அழகழகா பட்சியெல்லாம் வந்திருக்கும்… ஏதாவது சிக்குமான்னு பார்க்கலாம்… அதுக்குதான் இதை எடுத்துட்டு வந்துருக்கேன் “



“நான் வரலை… மணி கூட நான் இருக்கனும்… இனி நீ என்னைத் தேடி வராத… வேற வேலைக்குப் போய்க்கோ” என்றபடி அவனைத் தவிர்க்க…


“உன் கோபமெல்லாம் எவ்ளோ நேரம் இருக்கும்னு பார்க்கிறேன்… கோவில்ல உனக்காக காத்துட்டு இருப்பேன்… வா…” என்று கண்மணியை ஒரு பார்வை பார்த்து விட்டும்தான் கிளம்பினான் துரை…


---


”ஏன் துரையைத் திட்டுன… அவன் கூட சண்டை போட்டுட்டியா… நீ இனிமே அவன் கூட பேச மாட்டியா… இனிமேல் நம்ம கம்பெனிக்கு வேலைக்கு வர மாட்டானா….” என்று கேட்டபடியே.. கோவிலுக்கு வந்து கொண்டிருக்க…


கோவில் முன் அவளை நிறுத்தியவன்…


“எனக்கு நீ மட்டும் போதும்னு முடிவு பண்ணிட்டேன்” என்றபடியே


“உனக்கு என்னைப் பிடிக்கும் தானே… என்னை விட்டு எப்போதும் போக மாட்டேன்னு சத்தியம் பண்ணித் தருவியா” மருது அந்தக் குழந்தைப் பெண்ணிடம் கேட்க…


“எனக்கு நீ மட்டும் தான் வேணும்… ”


“அன்னைக்கு நீ சொன்னேல… என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு… அந்த வார்த்தைல இருந்து எப்போதும் மாறக்கூடாது…” என்று கையை நீட்ட…


தன் கையில் இருந்த ரிஷியின் காப்பினை அணிந்தபடியே மருதுவுக்கும் சத்தியம் செய்து கொடுத்திருந்தாள் கண்மணி… மருது அவள் கைகளைத் தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டான்… புதுவித உணர்வைக் கொடுத்திருந்தாள் கண்மணி அவனுக்கு… அது எந்நாளும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாத உணர்வு… அனுபவிக்க ஆரம்பித்திருக்க… அன்றைய தினத்திலேயே அந்த உணர்வை அனுபவிக்க முடியாமல் போட்டியாக இன்னொருவனும் வந்து சேர்ந்திருந்தான் அர்ஜூன் என்ற பெயரோடு…


மருதுவும் கண்மணியும் பேசியபடியே கோவிலுக்குள் வந்திருக்க… அங்கே வைதேகி நின்றிருக்க…


“நீ பேசிட்டு வா…” என மருது அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டான்…


அதன் பின் வைதேகியிடம் பேசிய கண்மணிக்கோ ஆச்சரியம் தான்…. வைதேகி போல அவள் உணர்ச்சி வசப்படவில்லை… சாதாரணமாகத்தான் இருந்தாள்…


“இல்ல பாட்டி எனக்கு ஏற்கனவே தெரியும்…. தாத்தா திட்டுவாங்கனுதான்” சமாளிக்க…


“இனி யாரைப் பார்த்தும் பயப்பட வேண்டாம்… இனி நம்ம வீட்ல தான் இருக்கனும்… நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்” என்று சொன்னவர்….


“அப்புறம் அர்ஜூன் தெரியாதுல உனக்கு… உன் அர்ஜூன் அம்மாஞ்சி… அவா எல்லாம் வெளிநாட்ல இருக்காங்க… இன்னைக்கு உன்கிட்ட பேசுறேன்னு சொல்லி இருக்கான்” கண்மணி அவரைப் பார்க்க


அர்ஜூனைப் பற்றி… அவளுக்கு அவன் என்ன உறவுமுறை பற்றியெல்லாம் சொல்ல…


“இல்ல நான் இன்னொரு நாள் பேசிக்கிறேன்…” என்று கண்மணி சொல்ல…


“இதுதான் அவன் ஃபோட்டோ… நீ அன்னைக்கு என்கிட்ட கொடுத்தியே அந்த ஃபோட்டோவை அவனுக்கும் அனுப்பி இருக்கேன்…” என்றவாறே தன் அலைபேசியில் இருந்த புகைப்படத்தைக் காட்ட… கண்மணியும் பார்த்தாள் அவ்வளவுதான்…


அதே நேரம் நட்ராஜும் கோவிலுக்கு வந்திருக்க… கண்மணியையும்… வைதேகியையும் பார்த்திருக்க… கோபத்தில் கண்மணியை அங்கேயே அடித்து துவைக்க நினைத்தான் தான் ஆனால்…. வைதேகி இருக்க… ஒன்றும் சொல்லாமல் கிளம்பிவிட்டான் நட்ராஜ்…


-----

”நீங்க போங்க பாட்டி… மருது இங்கதான் இருக்கான்… “ என்ற பேத்தி சொல்ல… வைதேகியும் அங்கிருந்து கிளம்பியிருந்தார்…


மருது மற்றும் கண்மணியின் வயது வித்தியாசம்… மருது கண்மணியிடம் பழகும் விதம் எல்லாம் மருதுவை ஏனோ தவறாக நினைக்க வைக்கவில்லை… ஒரு வேளை அன்று மருதுவை பேத்தியின் அருகில் வைத்துப் பார்த்திருந்தால் சந்தேகம் வந்திருக்குமோ என்னவோ… அது மட்டுமில்லாமல் தன் மகளின் மகள்… தன்னுடைய இரத்தம் மீண்டும் கிடைத்த உற்சாகத்தில் மகிழ்ச்சியில் இருந்தவரின் எண்ணம் எல்லாம் அவளை தங்களோடே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற பேராசை மட்டுமே... மருதுவை எல்லாம் கண்டு கொள்ளவே இல்லை… சென்று விட்டார்


அவர் போன பின்… மருதுவுக்காக காத்திருக்க ஆரம்பிக்க… மருதுவோ வராமல் போயிருக்க… அவனைக் கோவிலுக்குள் தேடி அலைய ஆரம்பித்திருக்க… அப்படி அவள் தேடி அலைந்த போதே அவனோ துரையுடன் வர…


“நீ மட்டும் போதும்னு சொல்லிட்டு… சத்தியம்லாம் வாங்கிட்டு… இப்போ அவனோட பேசிட்டு வர்றான்” என்றபடியே கண்மணி யோசித்துக் கொண்டிருக்கும் போதே…


“ஹேய் பாப்பா… “ அவள் கன்னத்தைப் பிடித்து திருகிய துரை…


“என்ன பார்க்கிற… காலையில சண்டை… இப்போ சமாதானம்… இதெல்லாம் எங்களுக்குள்ள சகஜம்” என்று துரை சொல்ல… கண்மணியும் கண்டு கொள்ளவில்லை வழக்கம் போல…


அவளுக்கு மருதுவிடம் பேச ஆயிரம் விசயம் இருக்க துரையும் அவளுக்கு ஒரு பெரிய விசயமாகத் தெரியவில்லை…. வைதேகிக்கு உண்மை தெரிந்தது முதல் அர்ஜூன் வரை வாய் ஓசாமல் பேசியபடியே வந்திருக்க… வீடும் வந்து சேர்ந்திருந்தனர்


“நீ போய்த் தூங்கு” என்று கண்மணியை மருது அனுப்பி வைத்திருக்க… அவளும் உள்ளே சென்று விட…


மருதுவின் முகத்தைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தான்…


“அர்ஜூன்… அர்ஜூன்… அர்ஜூன்… அது என்ன… அது என்ன… அர்ஜூன் அம்மாஞ்சி… அமெரிக்கால இருக்காளாம்… வாவ் உன் மணி வாய்ல இருந்து அக்ரஹார பாசை வந்துருச்சே… திடீர்னு ஒருத்தன் அமெரிக்கால இருந்து குதிச்சிருக்கான்… காத்திருந்த வண்ணக்கிளி நோக்கு இல்லாம என் சொந்தக் கிளின்னு தூக்கிட்டு போயிருவான் போல அந்த அர்ஜூன் அம்மாஞ்சி…” மருதுவை கிண்டல் செய்து பேசிக் கொண்டிருக்க… மருதுவின் முகம் கோபத்தில் சிவந்தாலும்… பேசாமல் நின்று கொண்டிருக்க


“மருது… நீ மணி மணின்னு அவளுக்காக உயிரை விட்ற… அவ இப்போ உன் மேல உயிரா இருக்கலாம்… ஆனால் காலம் இருக்கே… வயசும் பெரிய வித்தியாசம்… பணமும் இப்போ வரப் போகுது… கூடவே அமெரிக்கா மாப்பிள்ளை பையனும்… இவ உன் பின்னாலேயே சுத்திட்டு இருப்பான்னு நினைக்கிறியா…” துரை கிண்டல் தொணியை மாற்றி தீவிரமாகப் பேச ஆரம்பித்திருக்க


“ப்ச்ச்.. எனக்கு மணியைப் பற்றி தெரியும்… அவ எப்போதுமே மாறமாட்டா… எத்தனை ஜென்மம் ஆனாலும்” மருது வாய் திறந்தான்…


துரை சிரித்தபடியே…


“ஜென்மமா… ரெண்டே நாள் தான்… அவ மாறப் போறதை பார்க்கத்தானே போற… ஏமாந்து போகப் போற மருது… யோசி… மணின்னு நீ உன் நெஞ்சுல பச்சை குத்தி வச்சுருந்தால் மட்டும் போதாது…. அவ மனசுலயும் உடம்பிலயும் நீதான் இருக்கனும்… உனக்கு எல்லாமே எதிரா இருக்கு… உனக்கு உன் மணி வேணும்னா அவள் கிட்ட உன் உரிமைய எல்லா விதத்திலும் நிலைநாட்டனும்“ என்றபடி அங்கிருந்து சென்றவனுக்கு மனம் முழுவதும் அவ்வளவு வஞ்சம் நிறைந்திருந்தது….


”தான் இவன் பெயரை பச்சை குத்தினால்… இவன் அவள் பெயரை அதிலும் நெஞ்சில் குத்துகிறான்… உன்னை அவகிட்ட இருந்து பிரிக்கனும்… அவ உன்னை வெறுக்கனும்… இல்லை சாகனும்… இது ஏதாவது ஒண்ணு சீக்கிரம் நடக்கும்… உன்னை இந்த மணி இல்லாத இடத்துக்கு நான் கூட்டிட்டு போகனும்… அப்போதான் நீ என்னோட மருதுவா முழுசா கிடைப்ப…” எனத் தனக்குள் சொல்லிக் கொண்ட போதே…. அன்று கண்மணியை அவன் தொட்ட நிமிடமும் ஞாபகத்துக்கு வந்து போக…


“உன்னை ஒரு லூசு… பேக்கு… வாயாடின்னு நெனச்சுட்டு கண்டுக்காம இருந்தேன்… ஆனால் இனி அது முடியாது போல… கன்னத்துக் குழி என்னை இன்னைக்கு பாடா படுத்துதேடி…. மருதுவுக்கு அவசரமோ இல்லையோ எனக்கு உன்னைத் தொடனும்னு ஆசை வந்துருச்சே… ஒரு தடவை தான்… அவ்ளோதான்… உன் மேல எனக்கு இருக்கிற ஆசை எல்லாம்… எனக்கு மருதுதான் எல்லாம்”


கண்மணி என்ற சின்னஞ்சிறு மொட்டின் வாழ்க்கையை நாசமாக்க… துரை திட்டமிட ஆரம்பித்திருந்தான் அதற்கு மருதுவையும் தூண்ட ஆரம்பித்திருந்தான்….


---


”பாட்டி… இப்போ எதுக்கு அழறீங்க…”


“தாத்தா அவளைப் பார்க்கக் கூடாதுன்னு சொன்னா என்ன… நீங்க பேசாமல் இருங்க… நான் ரெண்டே நாள்ள அங்க இருப்பேன்… அதுக்கப்புறம் நாராயணனா அர்ஜூனான்னு பார்த்துருவோம்….” அர்ஜூன் நம்பிக்கையுடன் சொல்ல… வைதேகியும் அர்ஜூனுக்காக காத்திருக்க ஆரம்பித்தார்…


போனை வைத்த வைதேகியை நாராயணன் நக்கலாக பார்த்தவராக


“என்ன என் பேரன் மூலமா தூது விடப் போறியா… யார் என்ன சொன்னாலும்… நான் கேட்கப் போறதில்ல… என் பொண்ணையே துச்சமா நினச்சவன் நான்… அவ பெத்த பொண்ணையா ஏத்துக்கப் போறேன்… அவ கருவுல இருந்த போதே அழிக்க நினச்சவன்.. இனிமேலா ஏத்துக்கப் போறேன்” என்றபடி சொல்லிவிட்டு வந்தவரின் எண்ணங்களில் கண்மணியே…


கருவில் இருந்த போது…. அழிக்க நினைத்தவர் தான்… ஆனால் அவளே வளர்ந்து இவரைச் சுற்றி நடமாடும் போது… தன் மனைவியிடம் அவள் பேசுவதை… சில சமயம் கோவிலில் கண்மணியைப் பார்க்கும் போது… என்னதான் வெறுத்தாலும்… அவர் கண்களும் மனமும் பேத்தியிடம் செல்வதை ரசிப்பதை தவிர்க்க முடியவில்லை தான்… தன் மகளின் ஞாபகம் வந்து போகும் போது கண்ணில் நீர் கசிகிறதுதான்… ஆனால் கண்மணியைப் பார்க்கும் போது தன் மகள் மட்டுமே ஞாபகம் வரவில்லையே… அந்த நட்ராஜும் வந்து போகிறானே….


கண்மணியைப் பார்க்கும் போது நட்ராஜ் மட்டும் அவர் ஞாபகத்துக்கு வரவில்லை என்றால்… நாராயணன் பெருமூச்சு விட்டவராக… அப்போதும் தன் அந்தஸ்து… தன் அதிகாரம்… தன் கௌரவம் என தன் அகங்காரத்தை விட வில்லை… அவரது ஈகோ அவரது பாசத்தை தடுத்திருந்தது…


தன் மனைவி இந்த ஒரு வாரமாக பேத்தி வேண்டுமென்று கெஞ்சுகிறாள்… அவளுக்காக இவர் மீது கோபப்படுகிறாள்… அவள் தான் முக்கியம் என்று சண்டை போடுகிறாள்…


ஆனாலும் இரங்கி வர அவர் மனம் நினைக்கவில்லை…. ஏன் அவள் மீண்டும் சித்த பிரமையாகி கலங்கி நின்றாலும் தன் பிடிவாதத்தில் இருந்து இறங்கி வரக் கூடாது என்ற முடிவில் இருந்தவருக்கு… அர்ஜூன் வந்தால் மட்டும் என்ன மாறிவிடப் போகிறது… அவன் நான் வளர்த்த பிள்ளை… என்னை மாற்ற அவர் வருகிறாரா… தெனாவெட்டாக தனக்குள் நினைத்துக் கொண்டார்


----

நட்ராஜ் மருதுவை அழைத்தார்….


“மருது… அவ திங்க்ஸ்லாம் பேக் பண்ணி எடுத்து வைக்கச் சொல்லு… என்ன வேணும்னாலும் கேட்டு வாங்கிக்கச் சொல்லு… ரெண்டு நாள்ள அவ ஹாஸ்டலுக்குப் போகனும்” தடாலடியாக மருதுவிடம் சொல்ல… மருது அதிர்ச்சியோடு பார்த்தான்…


“கண்மணி இனி நம்மோடு இருக்கப் போவதில்லையா” என வாய்விட்டே கேட்டுவிட…


“இங்கயிருந்தால் தேவையில்லாத உறவெல்லாம் அவளுக்கு வந்து சேரும்” என்று வைதேகியை நினைத்து சொல்லி விட்டுச் செல்ல… மருதுவுக்கோ அவனைத்தான் அவர் சொல்லி விட்டுப் போகிறாரோ என்ற சந்தேகம் வந்திருக்க… தன்னிடமிருந்து பிரிக்கத்தான் கண்மணியை விடுதியில் சேர்க்கப் போகிறாரா… கண்மணி இதற்கு முதலில் சம்மதம் சொல்வாளா… அவளிடம் எப்படி சொல்வது… மனம் தவிக்க ஆரம்பித்திருந்தது மருதுவுக்கு…


அப்போது…


“மருது…” எனக் கண்மணி அவனருகே வந்து தயங்க… மருது அவளைப் பார்க்க


“அர்ஜூன் அம்மாஞ்சி இன்னைக்கு வர்றாங்களாம்…. பாட்டி வீட்டுக்கு வரச் சொன்னாங்க… “ அவள் பேச ஆரம்பித்த போதே மருதுவின் முகத்தில் அப்படி ஒரு கொடூர பாவனை…


“அந்த அம்மாஞ்சி வந்தா… நீ எதுக்கு போகனும்”


”இல்ல பாட்டி வரச்சொன்னாங்க… தாத்தா அவருக்குப் பயப்படுவாங்களாம்… தாத்தாகிட்ட அவர் பேசினா கேட்பாங்களாம்” எனும் போதே… வேகமாக அவள் அருகே வந்தவன்…


“உனக்கு நான் முக்கியமா இல்லையா… நான் சொல்றதைக் கேட்பியா மாட்டியா “ மருது உறும…


“நீதான் மருது எனக்கு எப்போதுமே முக்கியம்… ஏன் கேட்கிற” கண்மணி அவன் கோபத்தில் பயந்தவளாகச் சொன்னபடியே…


“ஏன் மருது இவ்ளோ கோபப்பட்ற… என்னாச்சு இப்போ”


“நீ எங்கயும் போகக் கூடாது… புரிஞ்சதா… போனால் நான் உன்னை விட்டு போயிருவேன் நிரந்தரமா” என்று கோப முகத்துடன் வெளியேறி இருக்க… கண்மணியும் மருது சொன்னான் என்பதற்காகவே வைதேகியைப் பார்க்கப் போகவில்லை…


”அம்மாஞ்சியாம்… அந்த பயந்தாங்கொள்ளிக்கு மரியாதை வேற..” மருது இளம் வயது அர்ஜூனை நினைத்தபடி கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருக்க… துரையோ அவனுக்கு தூபம் போட்டுக் கொண்டே இருந்தான்…


---

அன்றைய இரவு ஏழு மணி…


“பாட்டி… வாங்க போகலாம்… சுபாவைப் பார்க்கப் போவோம்… அவ வருவான்னு சொன்னீங்க… ஏன் வரலை…” கண்மணி வராத ஏமாற்றம் தாங்காமல் அர்ஜூன் வைதேகியிடம் தொல்லை பண்ண ஆரம்பித்திருக்க…


நாராயணன் வைதேகியைக் கொலை வெறியுடன் பார்த்து முறைத்தவராக… அதே நேரம் பேரனையும் திட்ட முடியாத நிலையிலும் இருந்தார்… இருந்தாலும் அர்ஜூனிடம் பேசினார்தான்


“அர்ஜூன்… தாத்தா சொல்றதைக் கேளு… உன் பாட்டி தேவையில்லாதத சொல்லி… உன்னை மாத்தி வச்சுருக்கா… உனக்கு அவளை எல்லாம் பிடிக்காது… என்னதான் உன் பவி அத்தை பொண்ணா இருந்தாலும் அவ நம்மாத்து பொண்ணுங்க மாதிரி இருக்க மாட்டாடா..”


அர்ஜூனின் பெற்றோர்களும் நாராயணனின் வார்த்தைகளை காதில் வாங்கியவர்களாக… அதே நேரம் வைதேகியின் மனதையும் நோகடிக்காமல்


“டேய்… தாத்தா சொல்றார்ல… வந்த அன்னைக்கே ஆடனுமா… நாளைக்கு கூட நாம அந்தப் பொண்ணை பார்க்கப் போகலாம்… நீ கேட்டதுக்காக அவ்ளோ தூரத்தில இருந்து உனக்காக நாங்க வந்தோமோ இல்லையா வரல… ஒரு நைட்ல என்ன வந்துறப் போகுது…”


அர்ஜூனிடம் தன்மையாக எடுத்துச் சொல்ல… தான் சொல்லும் … எடுக்கும் முடிவுகளுக்கெல்லாம் மறுவார்த்தை சொல்லாமல் மதிப்புக் கொடுப்பவர்கள் தன் பெற்றோர்கள்… அவர்களை மதித்து உறங்கச் சென்றும் விட்டான்…


ஆனால் படுக்கச் சென்றவனுக்கோ… தன் அத்தை மகளின் நினைவுதான்… பிறக்கும் போதே இறந்து போய் விட்டாள் என நினைத்த ஒரு உறவு மீண்டும்… அதுவும் அவன் எதிர்பார்க்காத நேரத்தில்… அவனின் இளமைத் தேடல்கள், கனவுகள் விரியத் தொடங்கியிருந்த நேரத்தில்…


ஏன் இத்தனை நாள் கழித்து அவளைக் கண் முன் காட்டப் போகின்றான் கடவுள்… எனக்கு அவளுக்கும் உள்ள பந்தம் என்ன… அர்ஜுனின் எண்ணங்கள் அவளின் சுபத்ராவை மட்டுமே வட்டமிட ஆரம்பித்திருக்க… உறக்கம் என்பதோ வரவில்லை…


காலையில் எப்போதடா அவளைப் பார்ப்போம் என்றவாறே படுக்கையில் உழன்று கொண்டிருக்க… சரியாக 4 மணி அளவில்… பவித்ரா விகாஸே அதிர்ந்திருந்தது… காவல் துறையிடமிருந்து நாராயணனுக்கு வந்த தொலைபேசி அழைப்பில்…


“சாரி சாரி டிஸ்டர்ப் பண்ணதுக்கு.. உங்க பொண்ணோட பொண்ணுனுதான்…”


“ஆமா சார் அந்த நட்ராஜோட பொண்ணுதான்… ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிருக்கோம்… உங்களுக்கு அந்தப் பொண்ணுக்கும் தொடர்பு இல்லைதான்… ஆனாலும் உங்ககிட்ட சொல்லனும்னு தோணுச்சு” காவல் நிலையத்தில் இருந்து நாராயணனுக்கு பிரத்தியோகமாக அழைப்பு வந்திருக்க…


மொத்த குடும்பமும்… அர்ஜூன் உட்பட மருத்துவமனைக்குச் சென்றிருக்க… அர்ஜூன் கண்மணியை முதன் முதலாக அங்குதான் பார்த்தான்… முகமெங்கும் இரத்த காயத்துடன்…. ’மருது மருது அப்பா’ என்று அலறிக் கொண்டிருந்த கண்மணியைத்தான்… அவன் பார்த்தது


வைதேகி… அதிர்ச்சியில் மயக்கமாயிருக்க…. நாராயணன் மயக்கம் ஆகவில்லை.. ஆனால்… நடுங்கியபடி இருக்க… இருந்தும் சமாளித்து பேச ஆரம்பித்திருந்தார்


“நட்ராஜ்... அவன் எங்க”


“அவன் இன்னும் போதையிலதான் சார் இருக்கான்… என்ன நடந்ததுன்னே அவனுக்கு இப்போ வரை தெரியல…”


“இந்தப் பொண்ணுக்கு இப்போதான் மயக்கம் தெளிந்தது… ஆனால் மருது அப்பான்னு சொல்லிட்டு கத்திட்டு ஓட ஆரம்பிக்குது… அதான் கட்டி வச்சுருக்கோம்…”


”ட்ரீட்மெண்ட்டுக்கு ஒத்துக்கவே மாட்டேங்குது…”


--


”நடு ராத்திரியில பக்கத்து குடிசை வீட்லருந்து சிலிண்டர் வெடிச்சு நெருப்பு எரிய ஆரம்பிச்சதைப் பார்த்துதான் ஆட்கள் போயிருக்காங்க… அப்போதான்…. இந்தப் பொண்ணையும் காப்பாத்திருக்காங்க… “


--


“அந்த மருதுவும்… அவன் கூட இருந்தவனும் தான் இந்தப் பொண்ணை இந்த நிலைமைக்கு ஆளாக்கியிருக்காங்க…. ஆனாலும் இந்தப் பொண்ணு அவன் பேரைத்தான் சொல்லுது… ஆளுங்க வந்ததும் ரெண்டு பேரும் ஓடிட்டானுங்க… தேடிட்டு இருக்கோம் சார்”


---


“இந்தப் பொண்ணு… ட்ரக் அடிக்டடான்னு டவுட் வேற இருக்கு சார்… ப்ளட் சேம்பிள்ஸ்ல ட்ரக்ஸ் ஃபவுண்ட் பண்ணிருக்கோம் சார்…” என்ற அதிகாரி… தயங்கியபடியே


--

“பாலியல் வன்கொடுமை முயற்சியும் நடந்துருக்கு… டியூட்டி டாக்டர்ஸ்தான் இருக்காங்க… டாக்டர்ஸ் வரச்சொல்லிருக்கோம்… அப்சர்வேஷன்ஸ் முடிச்சுதான் கன்ஃபார்மா எதையும் சொல்ல முடியும்…” என்ற போதே


--


நாராயணன் நெஞ்சில் கைவைத்தபடியே அப்படியே நாற்காலியில் சரிந்திருக்க… அர்ஜூன் தான் சுதாரித்தவனாக…


“மீடியாஸ்க்கெல்லாம் சொல்லலதானே….” கேட்க…


“ரெண்டு மூணு மீடியா…” எனும் போதே


”உடனே ஸ்டாப் பண்ணுங்க… எதுவும் வெளில வரக்கூடாது... முக்கியமா கண்மணின்ற பேர்” என்று அதிகாரத் தொணியில் சொன்ன அர்ஜூன்... இப்போது தாத்தாவைப் பார்க்க….


“டேய் உன் பாட்டி சொன்னபோதே கூட்டிட்டு வந்திருக்கனுமோ…. என்னாலதான் எல்லாமே… கருவிலேயே கொல்ல நினைச்சேன் தான்… ஆனால் இப்படி ஒரு சூழ்நிலைக்கு அவ வரனும்னுலாம் நினைக்கலயே… தப்பு பண்ணிட்டேனே… நம்ம குடும்ப ரத்தமும் இதுல இருக்குனு… அவ முகத்தில இருக்கிற காயத்தை பார்க்கும் என் மனசு துடிக்கும் போதுதான் தெரியுது… என் பேத்திய நான் விட்டுட்டேண்டா” கதறி அழுது கொண்டிருக்க…


“அவன் எங்க… அந்த நட்ராஜ் எங்க” வெறியுடன் போனான் அர்ஜூன் …


பாதி போதையில் கொஞ்சம் தெளிந்திருக்க… அங்கு செவிலியர்களுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்த நட்ராஜை எடுத்த எடுப்பிலேயே.. இழுத்து வெறியோடு அடிக்க ஆரம்பித்திருந்தவன்… தன் சக்தியெல்லாம் வடிந்து ராட்சச தனமாக அடித்தபோதும் அவன் வெறி அடங்கவில்லை… கோபம் அடங்கவில்லை… சுற்றி முற்றி தேடியவன் கண்களில் அங்கிருந்த கத்தி பார்வையில் பட்டிருக்க… அதை எடுத்து நட்ராஜையும் எடுத்து குத்தப் போயிருக்க… நாராயணன் தான் அவனை தடுத்திருந்தார்…


“முதல்ல என்னைக் கொல்லுடா… அப்புறம் அவனைக் கொல்லுடா… அவன் குடிகாரன்… ஆனால் சுய நினைவுல இருந்தே என் பேத்திய இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டுட்டேன்” காலம் கடந்த ஞானதோயத்தில் இருந்தார் நாராயணன்…


ஆனால் அர்ஜூன் அவன் வயது அப்படி… கொத்தாக நட்ராஜை இழுத்துக் கொண்டு வந்து கண்மணி முன் கொண்டு போய் நிறுத்தியவன்…


“பாருடா எங்க வீட்டு இளவரசிய எங்க கொண்டு வந்து நிறுத்திருக்கேன்னு… என் அத்தையைக் கொன்னுட்ட…” நட்ராஜ் ஒன்றுமே புரியாமல் தள்ளாட ஆரம்பித்திருக்க


“போதையில உனக்கு ஒண்ணும் தெரியலயாடா….”


”அவளுக்கு ட்ரக்ஸ் அடிக்கடி கொடுத்து இருக்காங்களாம்டா… ” நட்ராஜ் அதிர்ச்சியுடன் நடுக்கத்துடன் பார்த்த போதே… நட்ராஜின் முகத்தைப் பார்த்தவன்


“ஒண்ணுமே தெரியாதாடா உனக்கு…” அர்ஜூன் இப்போது தளர்ந்து விட்டவனாக... நட்ராஜைத் தள்ளிவிட்டவனாக


“ஏன் தாத்தா…. இவனை... இந்த குடிகாரன நம்பியா நம்ம அத்தை நம்மள விட்டு போனாங்க... இதோ இவளையும் விட்டுட்டு போனாங்க… ஏன் தாத்தா அவள விட்டுட்டீங்க… இதுக்காகவா இப்படி இவளைப் பார்க்கிறதுக்கா நான் அவளை என் உயிரைக் கொடுத்து காப்பாத்தினேன்” அர்ஜூன் தாங்க முடியாமல் கதறி அழ ஆரம்பித்திருக்க…


நட்ராஜ்… தள்ளாடியபடி மகளின் அருகே சென்ற போதுதான் அவளுக்கு ஏற்பட்ட நிலையே புரிந்திருக்க…


“அய்யோ…….” என முகத்தை அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தவனை………..


“அ..ப்…பா” என நைந்த குரலில் கண்மணி கைநீட்டி அழைத்திருக்க… அர்ஜூன் நாராயணன் இருவருமே அதிர்ந்தனர்… அதைக் கேட்டு


நட்ராஜோ…. முதன் முதலாக மகளின் இப்படிப்பட்ட குரலைக் கேட்கின்றான்…


அடித்த போது… அவ மரியாதை செய்த போது… அவளைக் கண்டு கொள்ளாமல் அலட்சியம் செய்து கடந்த போது… அவள் குரலில் இருக்கும் திமிர்… நையாண்டி… கோபம்.. பிடிவாதம்… அத்தனையும் இல்லாமல்… ஐயோ அழும் போது கூட திமிராகத்தானே பேசுவாள்…


”என் மகளின் குரல் நடுங்குகிறதே இன்று… என் செல்லமே” அவளருகில் சென்று அவளைக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்திருக்க… கண்மணியும் அவனைப் பார்த்து அழ ஆரம்பித்திருந்தாள்…

---------------

1,444 views0 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின்...

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை...

கண்மணி... என் கண்ணின் மணி- 94-2

அத்தியாயம் 94-2 நாட்கள் உருண்டோடி இருக்க… மாதமும் ஒன்று கடந்திருந்தது… நட்ராஜ் கண்மணியை ஒரு பொருட்டாகவே மதிக்காமல்… கல்லோ மண்ணோ என்பது...

Comments


Commenting has been turned off.
© 2020 by PraveenaNovels
bottom of page