top of page

சந்திக்க வருவாயோ? 28

அத்தியாயம் 28:


/*சகியே.. சினேகிதியே காதலில் காதலில் காதலில் நிறமுண்டு

சகியே.. சினேகிதியே என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு

அந்திவானம் அரைக்கும் மஞ்சள்

அக்கினிக் கொழுந்தில் பூத்த மஞ்சள்

தங்கத்தோடு ஜனித்த மஞ்சள்

கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள்

மஞ்சள்; மஞ்சள்; மஞ்சள்;

மாலை நிலவின் மரகத மஞ்சள்

எல்லாம் தங்கும் உந்தன் நெஞ்சில்*/


புதன் கிழமை… கிட்டத்தட்ட 8 மணி அளவில்…


எலுமிச்சை மஞ்சள் நிறத்தில்... இளம் ஆரஞ்சு நிற மெல்லிய கோடுகள் கம்பிகளாக ஊடுருவியிருந்த ஷிஃபான் புடவையை கட்டி ஒருமுறைக்கு இருமுறை தன்னை அந்த ஆளுயரக் கண்ணாடியில் சரிபார்த்த சந்தியாவுக்கு…. அப்போதும் தான் கட்டிய விதம் திருப்தி அளிக்கவில்லை…. சில்க் காட்டன் புடவையையே அநாயாசமாக யார் உதவியும் இன்றி நேர்த்தியாக உடுத்துபவள் அவள்… இப்போதும் அவள் நேர்த்தியாகத்தான் கட்டியிருந்தாள்… இருந்தாலும் ஏனோ குறை இருப்பதாக தோன்ற…. மீண்டும் ஒருமுறை சரி செய்து கட்டி மறுபடியும் தன்னைப் பார்க்க… அப்போதும் ஏனோ பிடிக்க வில்லை…. இருந்தும் அப்படியே விட்டு விட்டாள்… பின்னே இது மூன்றாவது முறை…. அவிழ்த்து மீண்டும் கட்டியது….


”ஊப்ஸ்” என்று களைத்தவளாக தன் ட்ரெஸ்ஸிங் டேபிள் முன் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தவள்…. இரு புருவங்களுக்கு இடையில் சிறு பொட்டை வைத்தபடி….“நாம கொஞ்சம் அழகா இருக்கோம்னு… மேக்கப் விசயத்தில மெத்தனமா இருந்துட்டோமோ… ஒரு ஐ லைனர்…. லிப்ஸ்டிக்…. ஒரு ஃபவுண்டேஷன் கூட…. போடற பழக்கம் கூட இல்லையே” நினைத்தபடி உதட்டைச் சுழித்தவள்… அடுத்த சில நிமிடங்களில்…. ஹாலுக்கு வந்திருந்தாள்…


”அம்மா…” என்று இவள் குரல் கேட்ட அடுத்த நொடியே… வசந்தியும் கிச்சனில் இருந்து வெளியே வர… அதே நேரம் சந்தோஷும் காலை உணவுக்காக டைனிங் டேபிள் முன் காத்திருக்க…


“தோ… ரெண்டே நிமிசம் ” என்று இருவருக்கும் பொதுவாகச் சொன்ன வசந்தி … சந்தியாவைப் பார்க்க… அப்படியே நின்றுவிட்டார் மகளின் அழகில்…

சந்தியாவை வைத்த கண் வாங்காமல் பார்த்தவர்… இப்போது சந்தியாவின் அருகே வந்து…


”யார் கண்ணு பட்டாலும் படலாம் … பெத்தவ கண்ணு படக்கூடாதுன்னு சொல்லுவாங்க….” என்று தன் மகளை நெட்டி முறித்து சுற்றிப் போட … இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த சந்தோஷ் முகத்தில் இளம் முறுவல் பூக்க… இளையவள் முகத்திலோ… அலட்ச்சியமான பாவம் … ”இது ஒண்ணுதான் இப்போ குறைச்சல்…” என்ற விதத்தில்


மகளுக்குச் சுற்றிப் போட்டவர்…. அதே கையோடு வாங்கி வைத்திருந்த மல்லிகைப் பூ சரத்தை எடுத்து வந்து சந்தியாவின் கையில் கொடுக்க…


“ம்மா… நான் ஆஃபிஸுக்கு பூ வச்சுட்டு போக மாட்டேன்னு தெரியும்ல…” என்று மறுத்தபடி… டைனிங் டேபிளை நோக்கி நகரப் போக…


“சந்தியா… அம்மா சொல்றதைக் கேளு… முன்ன எப்படி யெல்லாமோ இருந்திருக்கலாம்… இப்போ அதுவும் நிச்சயம் ஆன பொண்ணு…. அது மட்டும் இல்லாம… பூ வேண்டாம்னுலாம் சொல்லகூடாது…. “ என்ற போதே…


“அம்மா.. வேண்டாம்னா வேண்டாம்… உங்களோட இந்த ரப்பிஷ் மூட பழக்கத்தை எல்லாம் என்கிட்ட திணிக்காதீங்க” என்று ஒரே அடியாகச் சொல்ல… சந்தியாவின் பிடிவாதத்தில்... தாயின் முகம் அதிருப்தியைக் காட்டிய போதிலும்… அதைக் கண்டு கொள்ளாமல் சந்தோஷின் அருகில் அமர்ந்தவள் அவனிடம் எதுவும் பேசாமல்… அதாவது வம்பிழுக்காமல் தொலைக்காட்சியை பார்த்தபடி அமர்ந்திருக்க…


தங்கையின் அமைதியின் காரணம் புரிந்ததுதான்… இருந்தும்… அவளை அப்படியே விடப் பிடிக்க வில்லை…


சந்தோஷ்தான் இப்போது தங்கையிடம் வம்பிழுக்க ஆரம்பித்தான்…


“சந்தியா... சுத்திப் போட்டதோட நிறுத்திட்டாங்க அம்மா…. வெளியில் போறியே காத்து கருப்பு அடிச்சுறப் போகுதுனு…. மந்திருச்சு தாயத்துலாம் கட்டலையா” என்று நக்கலடித்தபடி… முறைப்பான பார்வையை தங்கையிடமிருந்து எதிர்பார்த்திருக்க….


அவளோ தொலைக்காட்சியில் வைத்திருந்த பார்வையை மாற்றாமல் இருக்க…


”ஹா… அதானே… அந்தக் காத்து கருப்பெல்லாம் உன்கிட்ட பயந்த்துதானே போகும்” என்க..


இப்போது வேலை செய்தது அவன் வம்புப் பேச்சு…


அதுவரை அவள் அடக்கி வைத்திருந்த பொறுமையை எல்லாம் காற்றில் விட்டவளாக…


“வேண்டாம்… ஏற்கனவே என் கோபத்தை எல்லாம் அடக்கி வச்சுட்டு சுத்திட்டு இருக்கேன்… வீணா என்கிட்ட மாட்டி… நொந்துக்காத” என்ற போதே இருவருக்கும் நடுவிலிருந்த சந்தோஷின் மொபைல் அடிக்க… அது ‘ரகு’ என்று வேறு காட்ட…


அதைப் பார்த்த நொடியே சந்தியாவின் முகம் உச்சக்கட்ட கோபத்தில் சிவக்க… அதைக் கண்டும் காணாதது போல சந்தோஷ் கேட்டான்


“பேசுறியா சந்தியா… ரகுகிட்ட….”


போனை எடுக்காமலேயே … சந்தியாவிடம் கேட்க… அவளோ.. புன்னகையோடு விசமமும் கலந்த கலவையாக….


“வேற போன் ஆர்ட போட்டுட்டியா என்ன… போன மாதம் தானே இந்த ப்ராண்ட் லேட்டஸ்ட் வந்தப்போ வாங்கின” முகம் மாறாமல் கேட்டவளின்… உட்ப்பொருள் புரிந்த அடுத்த வினாடியே … படக்கென்று.. தன் போனைக் தன்னிடம் கையகப்படுத்தி சந்தியாவிடமிருந்து அதன் உயிரைக் காப்பாற்றியவன்..


“ஏன்… ஏன் இந்த கொலைவெறி உனக்கு” என்ற ரீதியில் பரிதாபமாகத் தங்கையைப் பார்க்க….


“அது… அந்தப் பயம் இருக்கட்டும்…” என்று சிரித்தவள்... தாய் கொண்டு வந்து வைத்த இட்லியில் கவனம் வைத்தபடி… சாப்பிட ஆரம்பிக்க….சந்தோஷோ போனை எடுத்துக் கொண்டு தன் அறைக்கு வந்து ராகவ்வை தன் போனில் இருந்து அழைக்க ஆரம்பித்தான்…


…..

அலை அலையாக காற்றில் அடங்காமல் பரந்த கேசத்தை ஜெல் தடவி அதனை அடக்கி….தன் உருவத்தை அந்த ஆளுயரக் கண்ணாடியில் பார்த்தவன்…

கேஷுவலாக டீசர்ட்… ஜீன் என சாதரணமாகத்தான் இருந்தான்… அதற்கே…

“கலக்குறடா ரகு…“

தனக்குள்ளாக மெச்சிக் கொண்டிருக்கும் போதே… சந்தோஷின் கால் வர… எடுத்தவன்…. சந்தியாவின் அலுவலகத்தின் அருகில் இருக்கும் ரெஸ்ட்டாரெண்ட்டின் விலாசத்தினைக் கேட்பதற்காக அழைத்ததாகக் கூற… சந்தோஷும் முகவரியைச் சொல்லி்விட்டு…


“ரகு…. அவ இன்னும் நீ வரலைன்ற கோபத்திலதான் இருக்கா போல… எங்களையே முறச்சுட்டுத்தான் திரியுறா… நேரில வேற பார்க்கப் போற... கோபத்தில ஏதாவது உன்னைப் பேசினாலும் மனசுல வச்சுக்காத…” அண்ணனாகவும்… அதே நேரம் ஏதும் பிரச்சனை வந்து விடக்கூடாதென்று முன்னெச்சரிக்கையாகவும் பேச…“நான் பார்த்துக்கிறேன் சந்தோஷ்… “ என்றபடி சில நிமிடங்கள் அவனோடு பேசிவிட்டு வைத்தவன்… அமைதியாக சற்று நேரம் தன்னையே பார்த்தபடி அமர்ந்திருந்தவன் நினைவுகள் இரண்டு நாட்களுக்கு முன்னதாக அதாவது வீடு திரும்பிய தினத்திற்குச் சென்றது


நிச்சயம் முடிந்து… அடுத்த நாள் அதிகாலை 4 மணி அளவில் தன் வீடு வந்து சேர்ந்திருந்தான் ராகவ்.....


உடலும் மனமும் களைப்புற்றிருக்க அவனுக்கு கட்டாய உறக்கம் மற்றும் ஓய்வும் தேவைப்பட... யாரையும் சந்திக்காமல் நேராக தன் அறைக்குச் சென்றவன் உடனடியாக உறங்க ஆரம்பிக்க..... அவன் எப்போது கண் மூடினானோ அப்போதே எழுப்பவும் பட்டான் அவனது தந்தையால்....


இமைகளைக் கூட பிரிக்க முடியாமல் கஷ்டப்பட்டு கண்களைத் திறந்த மகனைப் பார்த்து ஒரு புறம் வருந்தினாலும்.... மறுபுறம் சந்தியாவின் வருத்தம் தோய்ந்த சிவந்த கண்கள் மகனின் மேல் இருந்த பாசத்தை எல்லாம் தூக்கித் தூர எறிந்து விட....


"உன் மனசுல என்ன நெனச்சுட்டு இருக்கடா.... பெரிய மனுசன் ஆகிட்டேனு உனக்கு நினைப்பாடா எத்தனை நாள் நெனச்சுட்டு இருந்த இப்படி எங்களை கூட்டத்தோடு அவமானப் படுத்தனும்னு.." பட படவென்று வார்த்தைகளை அவனிடம் கொட்ட....


ராகவ் கோபத்தின் உச்சத்திற்குச் சென்றாலும் ...... தன்னை அடக்கிக் கொண்டவனாக."என்ன ஆச்சு உங்களுக்கு....... வந்ததும் வராமல்… இந்த நேரத்தில் இப்போ இதைப் பேசனுமா... போய்த் தூங்குங்க... " என்று ஒன்றுமே நடவாதது போல பேச ஆரம்பிக்க. இன்னும் ரௌத்திரமானார் சுகுமார்..


"உண்மையிலயே நீ இப்படித்தானா.... இல்லை சந்தியான்றதுனால இவ்வளவு தெனாவெட்டா.... இந்த அளவுக்கு அந்த பொண்ணு மேல வெறுப்பு இருக்குனா.... அந்த பொண்ணு கூட மேரெஜ்லாம் உனக்கு செட் ஆகாது... இன்னைக்கே அவங்க வீட்டுக்கு போன் பண்ணிறலாம்… இது ஒத்து வராதுன்னு… . ஜாதகம் கன்றாவிலாம் விட்றலாம்..... இஷ்டம்னா நம்ம பொண்ண அவங்க எடுத்துக்கட்டும்.... இது தான் என் முடிவு" என்று சுகுமார் உச்சஸ்தாயில் கத்த...


இவனுக்கும் சுர்ரென்று மண்டையில் ஏறியது..... படுத்திருந்த படுக்கையில் இருந்து விருட்டென்று எழுந்தவன்.... நடந்த எதையும் விளக்க முடியாத ஆத்திரத்தில்


"ரொம்ப சந்தோசம் ஆள விடுங்க..... ” என்றபடி


கார்க்கீயை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறி விட....


அடுத்து சுகுமார் கேள்விக் கணைகளைத் தொடுக்க அந்த அறையில் உயிரற்ற பொருட்களே இருக்க..... மகனின் மேல் இருந்த கோபம் ... இன்னும் கட்டுக்கடங்காமல் போக அவருக்கு கோபத்தில் ரத்த அழுத்தம் அதிகரிக்க....


அங்கேயே ராகவ்வின் அறையிலேயே மயங்கி விழ....


ஒரு வேகத்தில்தான் கீழிறங்கிப் போன ராகவ்... ஆனால் வீட்டை விட்டு வெளியேறாமல்... சிறிது நேரம் தோட்டத்தில் உலாவி விட்டு மீண்டும் தன் அறைக்கு வர.... தந்தை கிடந்த நிலையைப் பார்த்து..... பதறியவன்..... உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையும் அளிக்க.... யாரையும் அதிக நேரம் பதற விடாமல் உடனடியாக கண் திறந்தார் சுகுமார்...


அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவரும்..... ஒழுங்கான தூக்கமின்மையும் மன அழுத்தமும் தான் இந்த அளவுக்கு இவரை ஆக்கி இருக்கிறது...... ஓய்வெடுத்தால் சரி ஆகி விடும்..... எப்போதும் எடுக்கும் மருந்து மாத்திரைகளையே எடுத்தால் போதும் என்று சுகுமாரை வீட்டுக்கு அனுப்பி வைக்க... அதன் பின்னர்தான் அந்த குடும்பம் ஓரளவு நிம்மதி ஆனது ...


அன்று நடந்ததை இன்று நினைத்துப் பார்த்து பெருமூச்சை விட்டவன்… இப்போதும் குழப்பத்தில் தான் இருந்தான்… தான் எடுத்திருக்கும் முடிவு… எவ்வளவு தூரம் அனைவரையும் பாதிக்கும் என்பது தெரியாமல் இல்லை… ஆனால் அன்றைய தின மோசமான நிகழ்வுகள் சந்தியாவுக்கு தெரிந்து விட்டால் தன்னை விட்டு போய்விடுவாள் என்பது திண்ணம்… அது நடக்காமல் இருக்க… தான் எடுத்திருக்கும் முடிவு சரியே … தனக்குள் ஆறுதல் சொல்லிக் கொண்டவனாக…. தனது அறையில் இருந்து வெளியே வந்து …. வரவேற்பறைக்கு வர….


யாசோதாவும்..... சுகுமாரும் வரவேற்பறையில் அமர்ந்திருந்தனர்.....


"அம்மா ... வீட்டுக்கு வர.... லேட் ஆகும்... எனக்காக வெயிட் பண்ண வேண்டாம்..."

தாயிடம் சொல்லியபடியே.. தந்தையைப் பார்க்க.. அவரோ இவன் பக்கமே திரும்பவில்லை… உம்மென்று அமர்ந்திருந்தார்… தன் தந்தையை நீண்ட நாட்களுக்குப் பின் முகத்தோடு முகம் நோக்கியிருந்தான் ராகவ்… அதிலும் தன்னோடு கோபம் என்பது போல் இருந்த அவர் பாவனையில் இவனின் முகம் மென்னகையை தழுவ… வேண்டுமென்றே தந்தையிடம் வம்பிழுக்க ஆரம்பித்தான்…


தந்தையிடம் திரும்பி.... ம்ஹ்ஹும் என்று செறுமியவன்..


"உங்களுக்கு என்ன பண்ணினால் சந்தோஷம்... ஐ மீன்... உங்க மருமககிட்ட சாரி கேட்கனுமா இல்லை அதுக்கும் மேல கால்ல விழனுமா சொல்லுங்க.... என்னை விட அவதானே இப்போ முக்கியம்" என்று நக்கலாகக் கேட்டவன்....


தந்தையின் முக மாறுதலில்... தன் தொணியை மாற்றி...


"இல்லை அவளத்தான் பார்க்கப் போறேன்... முடிந்தால் அவகிட்ட இன்ஃபார்ம் பண்ணிருங்க" என்றவன் சொன்ன அடுத்த நொடியிலேயே வெளியேறி விட்டான்...

மகனின் வார்த்தைகளில் இருந்த குதுகலம் அவனது தந்தைக்குத்தான் புரியவில்லை… மாறாக கவலையில் ஆழ்ந்து விட…


“இவன் ஏன் இப்படி நடக்கிறான்னே எனக்குத் தெரியல யசோதா… இப்போ சந்தியாவ பார்த்து என்ன பிரச்சனை பண்ணி வைக்கப் போறனோ தெரியலையே”


வருத்தம் தோய்ந்த குரலில் மனைவியிடம் முறையிட… சுகுமாரைத் தேற்றினார் யசோதா....


"அவன் நம்ம பையன் ..... கெட்டது செய்ய அவன் நினைத்தாலும் அவனால் செய்ய முடியாது..." என்று ஆறுதல் படுத்த.....


“நமக்காக அவன் இந்த கல்யாணத்தைப் பண்ணினால்...... அவன்லைஃப் நல்லா இருக்குமா.. அவ நல்ல பொண்ணு... அவனுக்கு ஏத்த பொண்ணுனு ஏன் அவன் உணர மாட்டேங்கிறான்...." என்றவர்...


"நான் தப்பு செஞ்சிட்டேனோணு தோணுது யசோ...." என்று கண் கலங்க...

"அதெல்லாம் இல்லங்க... அவனுக்குத் தெரியும்.... அவன் பிடிவாதக்காரன் தான்... ஆனால் உங்களை எப்போதும் அவமானத்தில் நிற்க விட மாட்டான் கல்யாணம் நடந்தால் எல்லாம் சரி ஆகிரும் … ஹ்ம்ம்... எல்லா அம்மா அப்பாக்கும் பொண்ண நெனச்சுத்தான் வருத்தம் இருக்கு..... இன்னொரு வீட்டுக்கு போறாளே என்ன ஆகுமோ.... எப்படி புது இடம் அவளுக்கு செட் ஆகுமோ என்று.... இங்க அப்படியே தலைகீழ்" என்று யசோதா சிரிக்க...இப்போது இருவருக்குமே மிருணாளினி மேல் கவனம் போக... அவளைப் பற்றி பேச்சு திரும்ப… ராகவ்... சந்தியாவை மறக்க வைத்தது மிருணாளினியின் மேல் இருந்த பாசம்…


….


இரண்டு மணி நேரமாக கணிப்பொறியின் பொறிக்குள் தானாகவே சிக்கிக் கொண்டு… சுகமாகவே அதில் மூழ்கினாள்…. கடந்த இரண்டு நாட்களாக இதைத்தான் செய்து கொண்டிருக்கிறாள்.. வெளி உலக கோபங்களும் வருத்தங்களும்… இந்த இயந்திரத்தோடு இவளுக்கு இருக்கும் உறவுக்கு அப்பாற்பட்டது… உணர்வுகள் இல்லாத உறவு…. தீர்வுகளைத் தேடி வெறியோடு…. பயணிக்கும் பயணம்… இவள் சோர்ந்தாலும் … தான் களைப்படைய மாட்டேன்… என்று இவளை கை பிடித்து அழைத்துச் செல்லும் தன் இனிய இயந்திரத்தின் முன் அமர்ந்திருந்தவள்… முகம் இப்போது புன் முறுவல் பூத்தது….


ஆம் 120 செகண்டில் வந்து கொண்டிருந்த தகவல் வரிசை… இவள் சரிப்படுத்திய மற்றும் மாற்றி அமைத்த குறீயிடுகளால்(Code) இப்போது 10 செகண்டுக்கும் குறைவான நேரத்தில் வந்திருக்க..


‘யாஹூ…. லவ் யூ பேபி…“ என்று கணினியிடம் கொஞ்சிக் கொண்டிருந்தவளின்.. பக்கவாட்டில் நிழலாட…

நிமிர்ந்து பார்க்க


“சந்தியா உன் கூட தனியா பேசனும்....” என்று தன் அருகில் வந்து நின்ற ஹரியைப் பார்த்து…. உள்ளம் சற்று திடுக்கிட்டாலும்.... முக மாறுதலின்றி புன்னகைத்தவாறே


"சொல்லுங்க ஹரி...." என்று தன் அருகில் இருந்த நாற்காலியைக் காட்ட.....


"தனியான்னு சொன்னேன்.... " தன் வார்த்தைகளில் அழுத்தம் கூட்ட... எரிச்சலை மனதில் அடக்கியபடி… வெளியிலோ … அமைதியாக அவனைப் பார்த்தாள்…


இருக்கின்ற பிரச்சனையில் இவன் வேற என்று மனதுக்குள் தோன்றினாலும்…. இனி இதைத் தொடர விடக் கூடாது என்று உறுதி கொண்டவளாக… எழுந்தவள்


“கீழ செகன்ட் ஃப்ளோர் போகலாமா…. காஃபி சாப்பிட்டே பேசலாமா” எனக் கேட்க… அவனோ… அதை மறுத்தவனாக… அவர்கள் அலுவலகத்துக்கு அருகில் இருந்த ரெஸ்டாரெண்ட்டுக்கு அழைக்க… இதை எப்படி தவிர்ப்பது என்ற குழப்பத்தில் இப்போது சந்தியா விழிக்க…


அந்த அழகிய முகத்தின் குழப்பத்தைக் கூட ரசித்த ஹரியின் முகம் புன்னகையில் விரிந்தது…


”சந்தியா… இங்க இருக்கிற மக்கள் அங்கேயும் இருப்பாங்க… நான் ஒண்ணும் தனியா ஆளில்லாத காட்டுக்கு கூட்டிட்டுப் போகலை” என்று அவள் மனத்தில் நினைத்ததை புட்டு வைக்க…

இலேசாக அசடு வழிந்தாலும்… அதைக் காட்டிக் கொள்ளாமல்…


“அ… அப்படிலாம் இல்லை ஹரி… ஏதாவது ட்ரீட்னா போகலாம்… ஒண்ணுமே இல்லாம எதுக்கு காசை செலவழிப்பானேன்… தனியா பேசனும்… அவ்வளவுதானே” நாசுக்காக மறுக்க…


”ட்ரீட் தான் சந்தியா….” என்ற போதே… தன் திருமணத்திற்காக இவன் தன்னிடம் ட்ரீட் கேட்கிறானோ என்ற முட்டாள் தனமான எண்ணம் வர….


“நான் போன வாரமே… என் மேரேஜ் ட்ரீட் கொடுத்துட்டேன் ஹரி…” என்றவளை முறைத்தவன் பார்வை முறைப்போடு அவளை முழுதாகவும் அளவெடுக்க…. சந்தியாவின் உள்ளம் உணர்த்திய சமிக்ஞையில்… தேகம் ஒவ்வாத உணர்வை உணர வைத்தது… அவளையும் அறியாமல்…


ஹரியின் பார்வையிலும் விரசம் இல்லைதான்…. ஆனாலும்… சந்தியாவுக்கு அவன் உரிமையோடு தன்னை நோக்கும் அந்த சிறு பார்வை கூட தாங்க முடியவில்லை… மொத்த இரத்த ஓட்டமும் ஒரே இடத்தில் கூடி சுருங்கியது போல…தன்னைக் குறுக்கிக் கொள்ள வேண்டுமென்ற … ஓர் உணர்வு… அந்தப் பார்வையைத் தடுக்கும் விதமாக வேகமாக மீண்டும் தன் இருக்கையில் அமர்ந்தவளை… ஹரியும் கண்டு கொண்டவனாக…

“உன் மேரேஜ்க்கு ட்ரீட் கேட்க்கிற அளவுக்கு முட்டாள்னு நினைக்கிறியா சந்தியா…. நான் எவ்வளவு பிரிலியண்ட்னு உனக்குத் தெரியும்… ஹான் என் டீம்ல இருந்த உனக்குத் தெரியாதா… அண்ட் என்னோட ஜீனியஸ் லெவல் பிடிச்சதுனாலதான் உங்க வீட்ல வந்து பேசச் சொன்ன” என்ற போதே…


”ஹரி…” என்று பல்லைக் கடிக்க…


“எனக்கு உன்கிட்ட பேசனும் சந்தியா… அது மட்டும் இல்லை…. நான் கம்பெனி ஸ்டார்ட் பண்ணிருக்கேன்…. 2 மந்த்ஸ்ல எல்லா ப்ராசெஸ்ஸும் முடிஞ்சுரும்… இதுவரைக்கும் யார்கிட்டயும் சொல்லலை… என் பெட்டர் ஹாஃப்கிட்ட.. என்னோட ஃப்யூச்சர் பற்றி என் ஃப்யூச்சர் கிட்ட தான் ஃபர்ஸ்ட் சொல்றேன்…. அதுக்கான ட்ரீட் தான் இது…” என்று தன் உரிமையை… தனக்கு அவள் யார்… என்பதை ஒரே வார்த்தையில் ஹரி முடிக்க

சந்தியாவுக்கு நாராசமாக ஒலித்தது…


சில வார்த்தைகள் சில பேர் பேசினால் மட்டுமே தித்திக்கும்… அதிலும் ஹரி பேசிய வார்த்தைகள் சில பேர் கூட இல்லை… ஒருவன் பேசினால் மட்டுமே அவள் மனம் சிறகடிக்கும்… அந்த அவனோ இவளை அலட்ச்சியப் படுத்திக் கொண்டிருக்கிறானே…. ராகவ்வை நினைக்கக் கூடாது என்று நினைத்தாலும்… கோபத்தில் மனம் கொந்தளித்தது… கூடவே மனம் ஏனோ கனக்கவும் செய்ய… நினைவுகள் அவனிடமே ஓடிக் கொண்டிருக்க… அதைத் தவிர்த்தவள்…


இப்போது தன் முன் நிற்கும் ஹரியின் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்….

அவன் தனக்கு ஒன்றுமில்லை… என்று அவனுக்கு உணர்த்தி விட .. காட்டி விட.. முடிவெடுத்தாள்..… அதன் முடிவு…


“ஒக்கே போகலாம் ஹரி…. பேசலாம்… ஆனால் என் ஃப்ரெண்ட் நிரஞ்சனாவும் கூட வருவா…” என்ற போது மறுத்துப் பேச ஹரி முயல.. அதற்கு இடம் கொடுக்காமல்


“நாம தனியா பேசுறதுக்கு அவ எந்த விதத்திலும் இடைஞ்சலா இருக்க மாட்டா… எனக்கும் உங்ககிட்ட பேச விசயங்கள் இருக்கு… நிரஞ்சனா வர சம்மதம்னா நீங்க கொடுக்கிற ட்ரீட்டுக்கு வருகிறேன்…” தீர்க்கமாக தன் முடிவைச் சொன்னவள்…. அத்தோடு முடிக்காமல்


”அண்ட் கங்கிராஜிலேஷன்ஸ் … யூ ஃபுல்லி டிசெர்வெட் டு திஸ் அன் மை பெஸ்ட் விஷ்ஷெஸ்” என உளமாற வாழ்த்த … இப்போது மனம் கவர்ந்தவளின் வாழ்த்துக்களில் ஹரியின் முகம் ஆயிரம் வாட்ஸ் விளக்குகளால் சூழப்பட்டிருக்க….


அதே நேரம்…


சந்தியாவின் மொபைலிலோ… சுகுமாரின் குறுந்தகவல்…


’ராகவ் அவளைச் சந்திக்க வருகிறான்’ என்ற செய்தியைத் தாங்கி..


அதைப் பார்த்த மறுகணமே


அதுவரை இருந்த இறுக்கமான மனநிலை எல்லாம் அவளிடம் கட்டவிழ்த்துக் கொண்டு ஓடத் தயாரானது போலிருக்க…. ராகவ் தன்னைப் பார்க்க வருகிறான் என்ற விசயமே… அவளுக்குள்… இரத்த ஓட்டத்தை உடலெங்கும் புது வேகத்தில் திசை மாற்றி அனுப்பியது போல உணர்வு… ஆனாலும் அந்த உணர்வுகளை எல்லாம் தனக்குள் அடக்க முயன்றாள்... அவன் மேல் இருந்த கோபம் என்ற கேடயத்தால்… முடிந்ததா அவளால்... என்பது கேள்விக்குறியே…


12:30 மணி அளவில் அங்கும் இங்குமாக… மக்கள் கூட்டம்…. பெரும்பாலும்…. அனைவரும் இளைஞர்கள்… அதிலும் அருகில் இருக்கும் தகவல் தொழில் நுட்ப பூங்காவில் பணி புரியும் ஊழியர்களே…. ராகவ் தனது பைக்கை நிறுத்திவிட்டு… தன் மொபைலை எடுத்தவன் சந்தியாவின் மொபைல் எண்ணைத் திரையில் பார்த்தபடி…


”வருவாளா… வர மாட்டேன்னு சொல்லி அசிங்கப்படுத்துவாளா… ரகு… இன்னைக்குத்தாண்டா தெரியும் உன் சாமர்த்தியம்…” தனக்குள் சொல்லிக் கொண்டவனாக… அவளது எண்ணை அழுத்தப் போக… சந்தியாவும் நிரஞ்சனாவும் யாரோ ஒருவனுடன் காரில் இருந்து இறங்க… முகம் தானாக யோசனையில் சுருங்கியது…

சந்தியா நிரஞ்சனாவுடன் முன்னால் வர… அவர்கள்.. இருவரை விட்டு சற்று தள்ளி பின்னால் வந்த இளைஞன்… இப்போது வேகமாக.. சந்தியாவின் அருகில் நெருங்கி வந்து அவளிடம் ஏதோ சொல்ல… சந்தியாவும் அதைக் கேட்டு தலையை ஆட்ட…. ரகு கூட இந்த அளவு சந்தியாவிடம் உரிமை உணர்வோடும் அக்கறையோடும் பேசியதில்லை… அதிலும் அந்த இளைஞன் வைத்திருந்த மீசை வேறு இவனை நேரம் காலம் தெரியாமல் இம்சைப் படுத்தியது…


“நான்லாம் சைட் அடிக்கனும் நினைத்தால் கூட… மீசை வச்சிருக்க பையனாப் பார்த்துதான் சைட் அடிப்பேன்” தன்னவள் சொன்ன வார்த்தைகள் வேறு கொஞ்சம் அதன் பங்குக்கு கலவரத்தைக் கூட்ட…. இருந்தும் மனம் ஒருபுறம் அவனைச் சமாதானப்படுத்தும் விதமாக சில விசயங்களையும் அவனுக்கு எடுத்துக் கொடுத்தது…


”அவன் அவளது அலுவலகத் தோழனாக இருப்பான்… இல்லை நிரஞ்சனாவின் தோழனாக இருப்பான்…. ஆனாலும்… அங்கும் இடித்தது… அவன் நிரஞ்சனாவிடம் அவ்வளவாக பேசவில்லை… அவன் பார்வை பேச்சு அனைத்தும் சந்தியாவிடமே இருக்க..” பார்த்த ராகவ்வின் மனதிற்கு அது அத்தனை உவப்பாக இல்லை…


அவன் அணிந்திருந்த பார்மல் ஷர்ட் கூட சந்தியா அணிந்திருந்த நிறத்திற்கு ஏற்ப அதே கலரில் ஆனால் அடர் நிறத்தில் இல்லாமல் இளம் நிறத்தில் இருக்க… தன்னைக் குனிந்து பார்த்தான்…. இளம் ஆரஞ்சு வண்ணத்தில் அணிந்திருந்தான் …


மனதினுள்… சிறு உற்சாகம்…


உனக்கும் லைட்டா வைப்ரேஷன் வொர்க் ஆகுதுடா….” என்று சொல்லி சமாதனப்படுத்திக் கொண்டாலும்


மனதுக்குள் ஏனோ பலவிதமான எண்ணங்கள்… தன்னவள் அருகில் யாரோ ஒரு அந்நிய ஆடவனைப் பார்க்கும் போது… தேவையில்லாத எண்ணங்கள்… மனம் நேர்மறையாக சிந்திக்க மறந்தால்… எண்ணங்களின் போக்கும் மாறும் போல… அந்த நிலையில் தான் இருந்தான் ராகவ்… தற்போது…


அதே நேரம்… புடவையில் வந்திருந்த சந்தியாவின் தோற்றம் அவன் மனதை மென்சாரலாக நனைத்தது… அதிலும் அவள் சூடியிருந்த மல்லிகைப் பூ சரம்…

ஆம்.. சந்தியா வீட்டை விட்டுக் கிளம்பும் போது தாய் கொடுத்த மல்லிகைச் சரத்தை அணிந்தவளாக…


“உன் முகம் பார்க்க சகிக்கிலை வசந்தி… அந்த ஒரு காரணத்துக்காகத்தான் வைக்கிறேன்… மத்தபடி… வேறு எதுக்காகவும்… யாருக்காகவும் இல்லை ” எனும் போதே… ராகவ் முகம் சந்தியாவின் மனதில் வந்ததை அவளாலும் தடுத்த நிறுத்த முடியவில்லை…


ராகவ் நிலைமையோ… ஒன்றும் சொல்வதற்க்கில்லை… அந்த அளவு தன்னவளின் அழகில் தன்னையே மறந்து அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான்…


மல்லிகைப் பூ … மிதமான ஒப்பனை… மெல்லிய புடவை … அது அவளை தழுவி இருந்த பாங்கு என… இவள் தன்னவள்… இவள் எனக்கே எனக்கானவள்… விழி அகற்றாது… தூரத்தில் இருந்தே ரசித்துக் கொண்டிருந்தவனுக்கு... தன்னை தன் உணர்வுக்கு கொண்டு வரவே சில நிமிடங்கள் ஆகி இருக்க… தன்னைச் சமாளித்து… உள்ளே நுழைய… சந்தியா அந்த இளைஞனுடன் தனியே அமர்ந்திருக்க… நிரஞ்சனா மட்டும் தனியே அமர்ந்திருந்தாள் இன்னொரு மேஜையில்…


சந்தியா குனிந்து மெனுகார்டை நோட்டமிட்டுக் கொண்டிருக்க… அவள் எதிரே அமர்ந்திருந்தவனின் விழிகளோ… சந்தியாவை ஆசையோடும்… எதிர்பார்ப்போடும் நோட்டமிட்டுக் கொண்டிருக்க… பார்த்த ராகவ்வுக்கோ…. அந்த இளைஞனின் மேல் உள்ளத்தில் கோபம் கனன்று எழ ஆரம்பிக்க… அப்போது சாதனாவின் ஞாபகம் வர… இப்போது ராகவ் நிதானித்தான்…


சாதனா தன் மேல் கொண்ட காதல் என்ற பெயரில் நிகழ்த்திய அபத்தங்கள் எல்லாம் நினைவில் வர... அதன் விளைவு… மனம் கோபத்தை தணிக்க…

என்ன நடக்கிறதென்று பார்ப்போம் என்று நிதானித்தது மனம்… கால்கள் தானாகவே நிரஞ்சனா அமர்ந்திருந்த மேஜையை நோக்கிச் சென்றன..


/*கிளையில் காணும் கிளியின் மூக்கு

விடலைப் பெண்ணின் வெற்றிலை நாக்கு

புத்தம் புதிதாய் ரத்த ரோஜா

பூமி தொடாத பிள்ளையின் பாதம்

எல்லாச் சிவப்பும் உந்தன் கோபம்

எல்லாச் சிவப்பும் உந்தன் கோபம்;

சகியே.. சினேகிதியே காதலில் காதலில் காதலில் நிறமுண்டு

சகியே.. சினேகிதியே என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு*/2,852 views2 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின் புதிய இல்லத்துக்கான முதல் கல்லை அடிநாட்டினாள்… அதன் பின் பள்ளி

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை அலைகழித்திருக்க… மருது ’மணி’ என்று தானே அழைப்பான் யோசித்தாலும்….

கண்மணி... என் கண்ணின் மணி- 94-3

அத்தியாயம் 94-3 சில வாரங்களுக்குப் பிறகு… வீட்டில் கண்மணி மட்டுமே இருந்தாள்… சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க… மணி 11 க்கும் மேலாக ஆகியிருக்க… நட்ராஜுக்காகவும் மருதுவுக்காகவும் காத்திருந்தாள் கண்மணி…. இப்

2 Comments


Sagayam Arockiadass
Sagayam Arockiadass
Aug 19, 2020

Nice

Like

vimala starbino
vimala starbino
Mar 23, 2020

wowww

Like
© 2020 by PraveenaNovels
bottom of page