கண்மணி... என் கண்ணின் மணி -36-3

அத்தியாயம்: 36-3


ரிஷியின் இப்போதைய புதிய அறையில் ரிஷி, கண்மணி மற்றும் ரித்விகா மட்டுமே…


ரிஷி அவன் வேலையில் மூழ்கி விட… ரித்விகாவும் கண்மணியும் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்திருக்க… ரித்விகா தான் எடுத்த புகைப்படங்களை பார்த்தபடி… அதில் மாற்றங்களைச் செய்தபடி… சோஷியல் மீடியாவில் பகிர்ந்தபடி அதில் மூழ்கி இருக்க… கண்மணி அவள் செய்வதை எல்லாம் பார்த்தபடி இருந்தவள் ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல்…


“நாம இங்க எதுக்கு வந்தோம்னு ஞாபகம் இருக்கா ரிதிம்மா” என்று ரித்விகாவின் காதில் கிசுகிசுக்க…


”ப்ச்ச்… அண்ணி… அதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை… நீங்க தான் ரொம்ப பில்டப் பண்றீங்க… எங்க அண்ணாக்கு ஓவர் ஹைப் கொடுத்து… ரொம்பத்தான் பில்டப் கொடுத்து பெரிய ஆளாக்குறீங்க” என்ற படி மீண்டும் தன் வேலையில் கவனம் வைக்க…


முறைத்தபடியே எழுந்த கண்மணி…


”அப்போ நான் போறேன்…” என்றவளை இப்போது ரித்விகா நிமிர்ந்து பார்க்க… உதட்டசைவில்


“கேட்டு வை… நான் வருகிறேன்” என்று கண்மணியும் சொல்ல… சரியாக அதே நொடியில் ரிஷியும் நிமிர்ந்தான்…


கண்மணி சொல்லி விட்டு… அறை வாசலை நோக்கி நடக்க… ரிஷி இருவரின் மௌன பாஷையின் காரணம் புரியாமல்… என்னவாக இருக்கும் என்று கண்மணியையே… அதுவும் அவள் கண் மறையும் வரை வேறு பார்த்தபடியே… இருக்க… இப்போது ரிஷி சரியாக ரித்விகாவிடம் மாட்டினான்…


“ம்ஹ்ம்க்கும்…. அந்தப் பக்கம் கடைசி வரை திரும்பவே இல்லை போல… நீ இன்னும் ட்ரெயினிங் எடுக்கனும்ணா… ஹீரோ பார்த்தார்னா… ஹீரோயின் மேக்னடிக் இழுத்த மாதிரி திரும்பனும்… வேஸ்ட்ணா நீ” என்று தன் அண்ணனை மொத்தமாக பங்கம் செய்ய


அதைக் கண்டு கொள்ளாமல்…


“அப்படி என்ன விசயம்… அவளும் நீயும் சைகைளையே பேசறீங்க…” என்று நிறுத்தியவன்


“அதுனாலதான் பார்த்தேன்” என்று கூடுதல் விளக்கம் தர…


அண்ணனைப் போலத்தானே தங்கையும்… அவனின் கூடுதல் விளக்கத்தை புறம் தள்ளியவள்…


“அண்ணி என்கிட்ட சைகைல பேசுனதுனால… அவங்க வீட்டுக்காரரா பொசசிவ்னெஸ் போல” தன் அண்ணனை விடாமல் ஓட்ட…


”ஊப்ப்ப்ப்ப்ப்…. முடியல ரிதி… உன் கவுண்டர்க்குலாம் பதில் கொடுக்கிற ரிஷி அண்ணா இப்போ இல்லை… இல்லைன்றத விட எனக்கு நேரம் இல்லை… என்ன விசயம் சொல்லு…“ தோல்வியை ஒத்துக் கொண்டானா???… இல்லை கண்மணியைப் பற்றிய பேச்சை திசை மாற்றினானா???… ரித்விகாவும் இப்போது அவள் அண்ணனை ஓட்டுவதை விட்டு விட்டு…


“ஒண்ணுமில்லண்ணா… சும்மா ஒரு சின்ன விசயம்… எங்க ஸ்கூல்ல எல்லாரும் எக்ஸ்கர்ஷன் போறோம்… பேர் கொடுக்க சொல்லிருக்காங்க… நானும் பேர் கொடுக்கப் போனேன்… ஆனான் அண்ணிதான்… உங்ககிட்ட கேட்டுட்டு கொடுக்கச் சொன்னாங்க… இதுக்கெல்லாம் உங்ககிட்ட கேட்க சொல்றாங்க… நான் சொன்னேன்… பேர் கொடுத்துட்டு உங்ககிட்ட இன்ஃபார்ம் பண்ணிக்கலாம்னு… ஆனால் விடல அண்ணி… சொல்லுண்ணா… இதெல்லாம் ஒரு மேட்டரா என்ன…”


”நீ எங்கேயும் போக வேண்டாம்…”


மொபைலைப் பார்த்தபடியே இதெல்லாம் சொல்லிக் கொண்டிருந்த ரித்விகா… தன் அண்ணனின் அழுத்தமான குரலில் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்…


”என்ன சொல்ற… ஏன் போகக் கூடாது…”


“போகக் கூடாதுன்னா போகக் கூடாது… நீ கெளம்பு” என்ற போதே…


“என்ன ரொம்ப பண்றண்ணா… நீ சொல்லிலாம் நான் கேட்க மாட்டேன்… நான் எங்க ஸ்கூல் டூர்க்கு போக பேர் கொடுக்கத்தான் போறேன்” என்று அலட்சியமாகச் சொல்லியபடி பார்க்க…


ரிஷிக்கு எங்கிருந்து அப்படி கோபம் வந்ததோ… நொடியில் அவன் கண்கள் சிவந்திருந்தது…


“ரிதி…” என்று எச்சரித்தான்…


அவனின் முகமாற்றத்தில் ரித்விகாவுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும்…


“போண்ணா… நீ என்ன வேண்டாம்னு சொல்றது” என்று எழ… அவளுக்கு முன் எதோ ஒரு பொருள் பறக்க… ரித்விகா அப்படியே நின்றாள்… ஆணி அறைந்தார் போல…


----


கண்மணி வெளியில் உள்ள வரவேற்பறையில் தான் இருந்தாள்… ரிஷியின் குரல் உயர… அதைக் கேட்ட அதே கணத்தில்… வேகமாக எழுந்து அறையை நோக்கி வர… அடுத்த அறையில் இருந்த நட்ராஜ்… பார்த்திபன் அனைவருமே அங்கு வர… அப்போதுதான்… ரிஷிகேஷ் தனசேகர்… என்ற பெயர்பலகை வெளியில் வந்து விழுந்திருந்தது…


கண்மணி அதைக் கையில் எடுத்தவளாக உள்ளே நுழைய… ரித்விகா நடுநடுங்கியபடி அழுது கொண்டிருக்க… கண்மணியோ அவளைக் கண்டு கொள்ளவில்லை… மாறாக


“என்னாச்சு ரிஷி…” என்று கணவன் அருகில் போக…


“டூருக்குனுதான் அண்ணி சொன்னேன்… எங்கன்னு கூட கேட்கலை…” ரித்விகா தானாகவே ஆரம்பித்தாள் தான்… ஆனால் அதற்கு மேல் அவளால் பேச முடியவில்லை… அண்ணணின் ஆக்ரோஷ முகம் பார்த்தவளால் அதிலிருந்து வெளியே வர முடியாமல் அழ ஆரம்பித்து விட… இப்போது ரிஷி


“அது எங்க வேண்டும்னாலும் இருக்கலாம்… நீ போகக் கூடாது” ரிஷி மீண்டும் அழுத்தம் திருத்தமாகச் சொல்ல…


“நான் போவேன்” அனைவரும் இருந்த தைரியத்தில் ரித்விகாவும் அடம் பிடிக்க…


“ஏஏய்ய்ய்ய்” ரிஷி உச்சக்கட்ட ஆவேசம் கொண்டவனாக மறுபடியும் மாற… சட்டென்று கண்மணி எதையோ உணர்ந்தவளாக…. ரிஷியின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்… அது மட்டுமில்லாமல்…


“அப்பா… ரிதிய கூட்டிட்டுப் போங்க… நான் இவர்கிட்ட பேசிட்டு வர்றேன்” என்றாள் படபடப்புடன்…


மகள் வார்த்தையை எப்போது நட்ராஜ் தட்டியிருக்கிறார்… ரித்விகாவை அழைத்துக் கொண்டு வெளியேறி விட… சில நிமிடங்கள் அந்த அறையில் அப்படி ஒரு நிசப்தம்…


அவனது கைகளை தன் ஒரு கரத்தால் இறுக்கிப் பிடித்தபடியே… அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை அவனிடம் நீட்ட… இப்போதும் ரிஷி முறைத்தான்


“கையைப் பிடிச்சு வச்சுக்கிட்டா… எப்படி தண்ணி குடிக்கிறது” அவன் சொல்லி முடிக்கவில்லை… வேகமாக அவன் கைகளை விட்டவள்… தண்ணீர் பாட்டிலை திறந்து அவனிடம் கொடுக்க… வாங்கி மடமடவென்று முழுவதும் கொடுத்தவன்… அவளிடம் கொடுக்காமல் தூக்கி எறியப் போன நொடி சரியாக அதைக் கணித்து… அவனிடமிருந்து வாங்கி மீண்டும் மேஜையில் வைத்தவள்… மீண்டும் அவன் கையை பிடிக்கவும் தவறவில்லை.. ரிஷியும் தடுக்கவில்லை… அமைதியாக அப்படியே அமர்ந்தவன்… கண்களை மூடிக் கொண்டான்…


அவன் மணிக்கட்டைப் பிடித்திருந்தவளுக்கு…. அந்தக் கைகளின் வியர்வையும் அதன் சூடும்... அவன் மனக் குமுறலில் அளவைத் தெரிவித்திருக்க…


“ரிஷி… ரிதிம்மா டூர்க்கு வரமாட்டா போதுமா… இதுக்கு இவ்ளோ ஆர்ப்பாட்டமா… நான் பார்த்துக்கறேன்” என்று அவனிடம் மென்மையாக அவனுக்கு புரியும்படி தன்மையாகச் சொல்ல… ரிஷி அப்போதும் பேசவில்லை… இப்போது கண்மணியும் அவனது கைகளை மெதுவாக அழுந்த…