கண்மணி... என் கண்ணின் மணி -37-5

அத்தியாயம் 37- 5


/*நெஞ்சில் என்னை நாளும் வைத்து

கொஞ்சும் வண்ணத் தோகை ஒன்று

மஞ்சள் மாலை மேளம் யாவும்

கண்ணில் காணும் காலம் உண்டு


பூவைச் சூடி பொட்டும் வைக்க

மாமன் உண்டு மானே மானே

உள்ளம் தன்னை கொள்ளை கொண்ட

கள்வன் இங்கு நானே நானே*/


ரிஷியைத் தேடி மாடி ஏறியவள்… பூட்டி இருந்த அவனது அறையைப் பார்த்தபடியே மொட்டை மாடிக்குப் போனவள்… அங்கு கைப்பிடிச்சுவரில் கை வைத்தபடி வெளியே வெறித்தபடி இருந்தவனைப் பார்த்தபடி அவனருகில் போக… கண்மணி வந்த அரவம் உணர்ந்து திரும்பி பார்த்த ரிஷி…


“வாங்க மேடம்… ரொம்ப நேரமா உங்களத்தான் எதிர்பார்த்துட்டு இருந்தேன்… சீ…க்கிரமா வந்துட்டீங்க”


சொன்னவன் மீண்டும் திரும்பி வெளியே வெறிக்க ஆரம்பித்து விட…


ரிஷியின் அருகே வந்தவள்.. அவனைப் போல வெளியே பார்க்காமல்… அவனைப் பார்த்தபடி சுவரில் சாய்ந்து கொண்டவள்… கைகளைக் கட்டிக்கொண்டபடியே…


”எங்க அப்பாக்கு அந்த மாமரத் திண்டு… அவர் மருமகனுக்கு இந்த மொட்டை மாடி சுவர்…” கிண்டல் செய்தாள் கண்மணி…


“ஹ்ம்ம்ம்… நக்கல்… என்னை ஓட்டு… கிண்டல் பண்ணு அதென்ன என் முதலாளிய இழுக்கிற “ என்று தன் முதலாளியை விட்டுக் கொடுக்காமல்… அவர் மகளை முறைக்க…


இன்னும் கிண்டலாக இப்போதும் இதழ் வளைத்தவளை… அமைதியாகப் பார்த்தபடி நின்றவன்…


“அதெல்லாம் ஒரு சுகம்… உங்களுக்கெல்லாம் அது புரியாது… புரியவும் வேண்டாம்… எங்க மாதிரி… மரண அடி வாங்கினவங்களுக்குத்தான் அந்த அருமை தெரியும்” குரல் அவன் வார்த்தைகளுக்கு ஏற்ப… அவன் அனுபவித்த வேதனைகளுக்கு ஏற்ப அபிநயம் பிடித்து கரகரத்திருக்க… சட்டென்று தொண்டையைச் செறுமி… தன்னைச் சமாளித்து… அவளைப் பார்க்க…


ரிஷி சட்டென்று திகைத்து நின்றான்… கண்மணியின் பார்வையில்… ஒரு சிறு பார்வையில் இப்படி வெறுமையைக் காட்ட முடியுமா… அவன் திகைத்து நின்றபோதே… கண்மணி சட்டென்று மாறி… அவனையே பார்க்க


தன்னையே பார்த்தபடி நின்றவள் பார்த்த பார்வையில்… நாம் தான் அவளை வருத்தப்பட வைத்துவிட்டோமோ… என்று தோன்ற


இப்போது என்ன நினைத்தானோ… அவளைப் போலவே சுவரில் சாய்ந்தபடி திரும்பி நின்று அவள் பக்கவாட்டில் நின்றான்


இப்போது ரிஷியின் தோள் அவள் மீது பட்டும் படாமலும் உரச.. இருவருமே அதை உணர்ந்தாலும் விலகவெல்லாம் நினைக்கவில்லை…


அருகில் வைத்திருந்த டப்பாவை எடுத்தவள் அதைத் திறக்கப் போக… அவளிடமிருந்து வாங்கியவன்… இருவருக்கும் இடையே நிலவிய அமைதியான நிலையை மாற்ற முயன்றவனாக


“சும்மா சொன்னேன்… நானும் ரிதன்யாவும் வரும் போதே சாப்பிட்டுதான் வாங்கிட்டு வந்தோம்… ” அவன் சொன்னவுடன் இவளோ…


“ஆனால்… நான் சாப்பிடலயே” கண்மணியோ பாவமாக முகத்தை வைத்துச் சொல்ல… பார்த்துச் சிரித்தவன்…


“அதுனாலதான் நான் அப்படிச் சொன்னேன்... கொடு பாக்சை…” என்று திறந்து அதில் இருந்த சாப்பாடை அவளுக்கு ஊட்டி விட ஆரம்பிக்க… அவளும் வழக்கம் போல வாங்கிக் கொண்டாள்… அவனையும் சாப்பிடச் சொல்ல… மறுக்கவில்லை அவனும்… வாங்கிக் கொண்டான்…


சாப்பிட்டபடியே கண்மணி அவனைப் பார்க்க…


”என்ன பார்க்கிற… என்கிட்ட நீ எதையுமே எதிர்பார்க்கலைனு தெரியும்… பட் நான் ஊட்டி விட்டா உனக்கு பிடிக்குனு எனக்குத் தெரியும்… ” என்றவன்… அவளது விழி மின்னலில்…


“அப்படிப் பார்க்காத… அதிகமால்லாம் தெரியாது… ஜஸ்ட் எனக்குத் தெரிஞ்சது இது ஒண்ணு… ஆனால் கண்டிப்பா தெரிஞ்சுக்குவேன்…” இப்போது ரிஷி அவளைப் பார்க்கவில்லை… அதே நேரம் அவன் கவனம் முழுவதும் அந்த இட்லியை பிடுவதில் இருப்பது போலக் காட்டிக் கொண்டவன்…


”நீ இதைக் கூட என்கிட்ட எதிர்பார்க்கலை தான்… ஆனால் எனக்கு பிடிச்சுருக்கு…” என்று கடைசித் துண்டை அவளுக்கு ஊட்டியவனிடம் கண்மணியோ பதில் பேச வில்லை… அவள் கவனம் கணவனின் கண்களில் மட்டுமே இருக்க… வாயோ பேருக்கு கடைசித் துண்டை சாப்பிட்டுக் கொண்டிருந்தது…


இருவருமாகச் சாப்பிட்டு முடித்தவர்கள்.. கை அலம்பி விட்டு மீண்டும் அதே இடத்திற்கு வந்து நிற்க


“ரிஷி” என்றாள் கண்மணி… அவனைப் பார்த்தபடியே… ஆதுரமான குரலில்


“ஹ்ம்ம்” என்றான் அவனும்… ஆனால் அதே நேரம் … சட்டென்றும் திரும்பிப் பார்த்தான்… ஏனென்றால்…


“ரிஷி, ரிஷி சார்… ரிஷிக்கண்ணா… ரிஷிம்மா… ரிஷிப்பா… ரிஷிக்கண்ணு… மிஸ்டர் ரிஷிகேஷ்… மிஸ்டர் ரிஷிகேஷ் தனசேகர்… மிஸ்டர் ஆர்கே..” என வித வித அழைப்புகளில் அவன் பெயரை அழைத்து... ரிஷியை தன் அழைப்பு மழையில் நனைய வைப்பாள் கண்மணி…அதே போல் கண்மணி அவன் பெயரைச் சொல்லும் விதத்திலேயே அவள் எந்த மூடில் இருக்கின்றாள் என்று ரிஷியும் உணர்ந்து கொள்வான்…“ரிஷி சார் “ என்றால் கிண்டல் மட்டுமே இருக்கும்


“ரிஷிக் கண்ணா “ என்றால்… அதில் இவன் மீது அவள் கொட்டிக் கொடுக்கும் அன்பு இருக்கும்


“ரிஷிமா” என்றால் அவனிடமிருந்து ஏதோ எதிர்பாக்கிறாள் என்று அர்த்தம்…


”ரிஷி” என்று அழைத்தால் தீவிரமாக பேசப் போகிறாள்… அப்படி சொல்வதை விட… மற்ற மூன்றாம் மனிதர்களைப் போல போல அவனும் ஒருவன்… என்ற ரீதியில் ஏதோ பொதுவாக ஒரு விசயம் பேசப் போகிறாள்… என்று சொல்லலாம்…


இப்படி ஒவ்வொரு அழைப்புக்கும் ஒரு ஒரு உணர்ச்சி இருக்கும்…


ஆக ரிஷியின் இந்தக் கணிப்புப் படி… ரிஷி என்று அவன் மனைவி இப்போது அழைத்திருக்க…. அடித்த எச்சரிக்கை ஒலியை… கவனமாக புரிந்து கொண்டவன்… வெளிக்காட்டிக் கொள்ளாமல்… ’என்ன’ என்பது போல மட்டும் பார்க்க