top of page

கண்மணி... என் கண்ணின் மணி- 90-2

அத்தியாயம் 90-2


அன்று இரவு வழக்கம் போல டைரி எழுதிக் கொண்டிருக்கும் போதே வயிற்றில் இருந்த குழந்தை வழக்கத்திற்க்கு மாறாக அதிகப்படியாகத் துள்ள…


“குட்டிம்மா அப்பாவை மிஸ் பண்றியா… இல்லை அர்ஜூனைப் பற்றி அம்மாவோட ஆசையெல்லாம் அப்பாக்கு எழுதி தெரியப்படுத்துனதுல சந்தோசத்தில துள்றியா…” என மகளோடு பேசியபடியே மருதுவை அழைத்தாள்…


ஆம் அன்றையை சண்டைக்குப் பிறகு… நட்ராஜிடம் அர்ஜூனைப் பற்றி கூட… அவள் வாய் திறக்கவில்லை… இதோ இன்றுதான் எல்லாம் எழுதியிருந்தாள் தன் டைரியில்


அவள் கையில் இருந்த ஹேண்டி கேமைப் பார்த்த மருது


“வழக்கம் போல வீடியோ எடுக்கனுமா” என்றபடி


“சரி ஸ்கிரிப்ட்லாம் ரெடி பண்ணிட்டீங்களா” என நக்கலாகக் கேட்க


“டேய் கிண்டல் பண்ணாதடா… உங்க அண்ணனுக்கு கண்டிப்பா இந்த மீட்டிங் சக்ஸஸ்ஃபுல்ல முடிஞ்சிருச்சுனா… கண்டிப்பா அவருக்கு டெமோ டைம் கொடுப்பாங்க…. அவர் அதை கண்டிப்பா சக்சஸ்ஃபுல்லா முடிச்சுக் காட்டுவார்… அப்போ அவருக்கு ஃபங்ஷன் வச்சு அவார்ட் கொடுப்பாங்க… “


“யக்கோய்… என்ன ஸ்கிரிப்ட் இவ்ளோ ஸ்பீடா இருக்கு..”


“கேளுடா… அப்போ என் ஹஸ்பெண்ட்டுக்கு இந்த ஸ்பீச்சை சர்ப்ரைஸ் கிஃப்ட்டா கொடுக்கனும்… நீதான் கொடுக்கனும்… ஓகேவா…” என்றபடி வீடியோக்கு முன் பேச ஆரம்பித்தவள்…


“ஃபர்ஸ்ட்… என் செல்லக்குட்டி அர்ஜூனைப் பற்றி சொல்லிறேன்” என்றபோது மருது சிரித்தபடி


“மருமகனுக்குத்தான் ஃபர்ஸ்ட் வீடியோவா… சொல்லுங்க சொல்லுங்க… என்ன… நம்மளப் பார்த்துதான் உங்க மருமகப்பிள்ளை பயப்படுவாரு… பார்த்துக்கலாம்… சரி பேசுங்க…” என்க… பவித்ரா அர்ஜூனை மருமகனாக்கும் தன் ஆசையை சொல்லி முடித்தவள்…


“டேய் அடுத்து சர்ப்ரைஸ் வீடியோ… அதுல உங்க அண்ணாகிட்ட அப்படியே அர்ஜூனை மருமகனா வேணும்னு உங்க அண்ணன்கிட்ட ப்ராமிஸ் கேட்கப் போறேன்… அப்போ அவரால தட்ட முடியாதுல…” என்றபடி பேச ஆரம்பித்து முடித்தும் விட்டிருக்க


”அக்கா மணி 12 ஆகிருச்சு… அண்ணா 11 மணிக்கு போன்ல பேசும் போதே போய்த் தூங்கச் சொன்னார்ல…” என்ற போதே… பவித்ராவுக்குள் இபோது ஏதோ தோன்ற…


“ஏய் மருது… பாப்பாகிட்ட பேசு… விசில் அடி… “ என்றவளின் குரலில் பதட்டம் வந்திருக்க…


மருதுவும் அவள் வயிற்றில் இருந்த குழந்தையிடம் பேசிப் பார்க்க… அந்த நள்ளிரவிலும் விசிலடிக்க… பவித்ரா முகம் முற்றிலும் மாறி இருந்தது….


“குழந்தையோட அசைவே தெரியலடா… ஆனால் இன்னைக்கு அதிகப்படியா ஆக்டிவா இருந்த மாதிரி ஃபீல் எனக்கு… இப்போ திடீர்னு சுத்தமா அசைவே இல்லாத மாதிரி ஃபீல்” பவித்ராவின் முகத்தில் வியர்வை அரும்புகள் பூத்திருக்க


மருதுவோ


“அக்கா நீ வீடியோ பேசினதுல… பாப்பா டையர்ட் ஆகித் தூங்கிருக்கும்… தூங்கிட்டு காலையில எழுந்து பாரு… பாப்பாவும் சும்மா ஜிவ்வுனு டான்ஸ் ஆடும்” என்று மருத்துவரான பவித்ராவுக்கே அறிவுரைகள் கூறி இருக்க…


பவித்ரா அமைதியாகப் படுக்க முயற்சித்தாலும்… ஏனோ மனம் கனத்திருக்க… அப்போது வயிற்றில் இருந்த குழந்தையின் அசைவு மீண்டும் வந்திருக்க… தன் மகளின் அசைவை உணர்ந்த அந்தத் தாயின் உள்ளத்துக்கு மீண்டும் நிம்மதி வந்திருக்க…


“நாளைக்கு ஒரு செக்கப் எடுத்துக்கனும்… “ என்று நினைத்தபடியே கண்களை மூட நிம்மதியாக உறக்கமும் வந்திருந்தது…


---

டிசம்பர் 29 இரவு 8 மணி :


நட்ராஜுக்கு ஏதுமே ஓடவில்லை… அதுவும் பவித்ராவிடம் பேசியதில் இருந்து மனமும் உடலும் அவளைப் பார்க்க வேண்டும் என்றே பரபரத்திருக்க… மீண்டும் ஹோட்டல் வரவேற்பறைக்கு வந்தவனுக்கு… இரவு 8 மணி ஆகிவிட்டது… பவித்ராவை தொந்தரவு செய்கிறோம் என்றெல்லாம் கவலைப்பட வில்லை…


இவன் சென்னைக்கு அழைக்க… கடைக்காரரும் பவித்ராவிடம் சொல்லி விட்டுப் போக… மருதுவையும் பவித்ரா அழைத்து வந்திருந்தான்


பவித்ரா வந்த அடுத்த சில நிமிடங்களில் நட்ராஜ் அழைக்க… பவித்ரா எடுத்துப் பேச… பேசியவள் குரலில் வழக்கமான சுரத்தில்லைதான்… ஆனாலும் பேச


“அழுதியா… எதுக்குடி அழற… “ எனும் போதே நட்ராஜின் குரல் கம்மியிருக்க.. இருந்தும் சமாளித்தவனாக…


“இதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன்… நான் டிக்கெட் புக் பண்ணிட்டேன்… டிசம்பர் 31 அங்க இருப்பேன்… ”


“ஹ்ம்ம்ம்… ஜனவரி 1 ஆபரேஷன் பண்ணலாம்னு எங்க ஹெட் சொன்னாங்க… ஆனால் பயமா இருக்கு ராஜ்… அதுவரை பாப்பாக்கு ஏதும் ஆகாமல் இருக்கனுமே… எனக்கு அவ வேணும்” பவித்ராவின் கண்கள் கலங்கி இருக்க


“இங்க பாரு… இந்தக் குழந்தை போனா என்னா… இன்னும் பத்து புள்ள பெத்துக்கலாம்டி… ஏண்டி அழற… எனக்கு நீ முக்கியம்… சும்மா அழுதுட்டு இருக்காத… பிபி வேற இருக்குனு சொன்ன “ என்ற போதே


“உனக்கு கொஞ்சம் கூட வருத்தம் இல்லையா ராஜ்… “


“ப்ச்ச்… வருத்தப்பட்டு என்ன ஆகப் போகுது… நமக்கு கொடுப்பினை இல்லை… இல்ல அந்தக் குழந்தைக்கு கொடுப்பினை இல்லைனு மனசைத் தேத்திக்க வேண்டியதுதான்…”


பவித்ரா ஏதும் பேசாமல் இருக்க…


“ஏய்… என்ன…” மனைவியிடம் அழுத்த


“என் அப்பாவாச்சும் என்னை 23 வயசுலதான் தள்ளி வச்சாரு…. எனக்காக இறங்கலை… நீ இப்பவே அப்படித்தான் இருக்க… உங்களுக்கெல்லாம் பாசமே இருக்காதா… ரொம்ப ஈஸியா சொல்ற… போனா போகுதுனு… அது ஒரு உயிர் ராஜ்… அதுக்கும் வருங்காலம் இருக்கு… என் டைரிய எடுத்துப் பாரு… நான் மேரேஜ் வரை அந்தக் குழந்தைக்கு கற்பனை பண்ணிப் பார்த்திருக்கேன்… ஏன் வளைகாப்பு வரை…” என்றவளிடம்


“இந்த அதீதக் கற்பனையும்… அளவுக்கு மீறிய திங்கிங்கும் தான் இவ்ளோ பிரச்சனைக்கும் காரணம்… இதுல என்னை வேற பழி போடறியா… எனக்கு நீ முக்கியம்… அவ்ளோதான்… இந்த ஆபரேஷனுக்கு ஒத்துகிறது கூட உனக்காகத்தான்” என்ற நட்ராஜின் குரலில் இருந்த கடினத்தில்… பவித்ரா வேறெதுவும் சொல்லாமல


“எனக்கு ஒண்ணும் இல்லை ராஜ்… ஜஸ்ட் சி செக்‌ஷன் தான்… ஓகேவா… என்னை நினைத்து கவலைப்பட்றதுக்கு ஒண்ணும் இல்லை… ரிலாக்ஸ்டா வா… ஓகேவா… நானும் இப்போ ஓகே… உன்கிட்ட பேசின பின்னால கொஞ்சம் ஆறுதலா இருக்கு… காலையில இருந்து உன்கிட்ட சொல்லலாமா வேண்டாமான்னு டென்சன்ல இருந்தேன்… நீ எப்படி எடுத்துக்குவியோன்னு… இப்போ தெளிவா இருக்கேன்… ஓகேவா..” எனும் போது பவித்ரா வலிய வரவழைத்த புன்னகையோடு முடித்தவளாக… வெளியே வந்தவள்… மருதுவோடு தங்கள் வீட்டை நோக்கி அந்தத் தெருவில் நடந்து வந்து கொண்டிருந்த வரும் போதே அவள் வயிற்றில் கடும் வலி வந்திருக்க…. அங்கேயே சரிந்திருக்க…


மருதுவுக்கு என்ன செய்வதென்றே தெரியாத புரியாத நிலை…


“அக்கா.. பவி அக்கா…” என பவித்ராவை தன் மடியில் தாங்கியிருக்க..


“டேய்.. ஒரு மாதிரி மூச்சு விடவே சிரமமா இருக்கு…” என்ற போதே மருது பதறியவனாக


“நான் என்னக்கா பண்ணனும்… கிருத்தியக்காக்கு போன் பண்ணவா…” என்றபோதே…


அவன் கையைப் பிடித்தவளாக…


”எங்க ஹாஸ்பிட்டலுக்கு போகலாம்… கிருத்திகிட்ட” எனும் போதே அவள் அரை மயக்க நிலைக்குப் போயிருக்க… அதே நேரம் வயிற்றில் வலியும் வந்திருக்க… பவித்ராவின் நிலை மிகவும் மோசமாகி இருந்தது போல மருதுவுக்குத் தோன்ற… மருது இப்போது அழ ஆரம்பித்திருந்தான்


“டேய்… எனக்கு ஒண்ணும் இல்லை… குழந்தைக்குத்தான் ஏதோ பிரச்சனை… இங்க லேடிஸ் யாராச்சும் இருக்காங்களானு முதல்ல பாரு…. ” எனச் சொல்லி… அவனைத் தைரியப்படுத்த


மருது சுற்றி முற்றிப் பார்க்க… ஈ காக்கை கூட இல்லை… சற்று தள்ளிதான் வீடெல்லாம் இருக்க… ஆனால் பவித்ராவை விட்டு போயாக வேண்டுமே…. அவளை விட்டும் போக முடியாமல் இருக்க…


“மருது… நீ பேசுடா… பாப்பா உன் குரலுக்கு எப்போதுமே ரிப்ளை பண்ணுவாள்ள… “ பவித்ரா வலியோடு கேட்க…


”நான் பேச மாட்டேன்க்கா… உன்னை இவ்வளவு கஷ்டப்படுத்துற அந்தக் குழந்தை வேண்டாம்கா…” என்ற போதே… பவித்ராவின் கண்களில் கண்ணீர் வந்திருக்க… அதே நேரம் அங்கு எதேச்சையாக ஒரு மூதாட்டி போக… வேகமாக மருது அந்த மூதாட்டியை கத்தி அழைத்திருக்க…


அடுத்த சில நிமிடங்களில் பவித்ராவுக்கு பெண்கள் அரண் கிடைத்திருக்க… மருத்துவரான பவித்ராவுக்கே அவர்கள் கைவைத்தியம் செய்து ஓரளவு தேற்றியிருக்க… மருதுவும் இப்போது ஆம்புலன்ஸுக்கு போன் செய்திருக்க

“தப்பா எடுத்துக்காத தாயி… சின்ன உசுரோட நாடித் துடிப்பு தெரியவே இல்லை… அது உள்ள இருக்கிற வரை உனக்குதான் ஆபத்து தாயி… பெரிய உசிருதான் முக்கியம்… முதல்ல குழந்தையை வெளிய எடுக்கிற வழியைப் பாரு…” என்று அவளுக்கு அறிவுரை சொல்ல


“இல்ல என் குழந்தைக்கு ஒண்ணும் ஆகலை… அவ கண்டிப்பா நல்லபடியா வருவா…” பவித்ரா அப்போதும் நம்பிக்கையுடன் சொன்னபோதே… ஓரளவு நாரமலாகியும் இருக்க


“அக்கா… உங்க அப்பா அம்மாகிட்ட சொல்லிக் கூட்டிட்டு வரவா” என மருது வேகமாகக் கேட்க… வேதனையோடு மறுத்தவள்…


“உங்க அண்ணா போன் பண்ணினார்னா… சீக்கிரம் கிளம்பி வரச் சொல்லுடா… அவர் டிக்கெட்டை கேன்சல் பண்ணிட்டு இருக்கிற ட்ரெயின்ல உடனே வரச் சொல்லு… அவருக்கு ஃபளைட் ட்ராவலை சொல்லிக் கொடுக்கவே இல்லைடா… பரவாயில்ல இன்னும் ரெண்டு நாள் இருக்குல… ட்ரெயின்ல வந்துறலாம்… கிருத்திக்கு நான் ஹாஸ்பிட்டல்ல இருந்து போன் பண்ணிக்கிறேன்” எனும் போதே கண்கள் கலங்க ஆரம்பித்திருந்தது பவித்ராவுக்கு…


அடுத்த சில நிமிடங்கள் ஆம்புலன்சும் வந்திருக்க… அவள் பயந்தது போல பெரிதாக இல்லாததாலும்… ஓரளவு சரி ஆகி இருந்த காரணத்தாலும் பவித்ரா வீட்டுக்கு போக வேண்டுமென்று அடம்பிடித்திருக்க மருதுவும் அவளைக் கூட்டிக் கொண்டு போக


அவளுக்கான மாற்றுடைகளை எடுத்துக் கொண்டவள்… பிரசவத்திற்குத் தேவையான பொருட்களையும் எடுத்து வைத்தாள்… பின் டைரி… கேமெரா இவற்றை மருதுவிடம் கொடுத்தவள்….


“இதை உங்க அண்ணாகிட்ட வந்தவுடனே கொடுத்துரு… அப்புறம்… இதெல்லாம் என்றவள்…


”இந்த ஃபோல்டர்ல அவருக்குத் தேவையான எல்லா டீடெயில்ஸும் இருக்கு… அவர் மீட் பண்ண வேண்டிய க்ளைண்ட்ஸ் லிஸ்ட்… பிஸ்னஸ் பற்றி எல்லாமே இருக்கு… இப்போ போன சான்ஸ் என்னால அவருக்கு மிஸ் ஆகிருச்சு… பரவாயில்லை…” எனும் போதே… குரல் தடுமாற…


“அக்கா ஏன்க்கா இப்படிலாம் பேசுற… ” மருதுவின் கண்கள் கலங்க


“எனக்கும் ஒண்ணும் இல்லடா.. ஜஸ்ட் ஒரு முன்னெச்சரிக்கைதான்… உங்க அண்ணாக்கு சிஸ்டம் பற்றி ஒண்ணும் தெரியாது… இந்த ஃபோல்டர்ல… அவர் எப்படி எப்படியெல்லாம் ட்ரை பண்ணினால் சக்ஸஸ் ஆகலாம்னு அனலைஸ் பண்ணி எழுதி வச்சுருக்கேன்… அவருக்கே தெரியாது… நான் தான் ஒவ்வொரு வேயா அதுல இருந்துதான் ட்ரை பண்ணிட்டு இருக்கேன்… இன்னும் ஆயிரம் வழி இருக்குடா உங்க அண்ணா சக்ஸஸ் ஆகிறதுக்கு…. அவருக்கு அதைச் சொல்றதுக்குத்தான் ஆள் இல்லை… சோ அவர் கண்டிப்பா ஜெயிப்பார்… புரியுதா… இருபது வருசத்துக்கு முன்னோக்கி அனலைஸ் பண்ணி இருக்கேன்… முடிந்தால் நீயும் யூஸ் பண்ணிக்கோ…” என்றபடி சிரிக்க… மருதுவோ சிரிக்கவில்லை…


அவன் கைகளில் அனைத்து பொருட்களையும் கொடுத்தவளாக வெளியே வந்தவள்… வீட்டை விட்டு வெளியே வந்து கதவைப் பூட்டப் போக… அவளின் கைகளில் வளையல்கள் குலுங்க…


“ப்ச்ச்… இதை மறந்துட்டேன் பாரு…. ஒரு நிமிசம் வெயிட் பண்ணு…” என்றபடி… தன் கைவளையல்களை எல்லாம் கழட்டி… மொத்தமாக அவற்றை ஒரு பையில் போட்டவள்… பூசை அறையில் வைத்து… பின் அங்கிருந்த தெய்வங்களை எல்லாம் கும்பிட்டபடி வெளியேறி… குணா மருத்துவமனைக்கும் சென்றிருந்தாள்…


----


”ஏய் என்னடி சொல்ற…” ராஜ் ஏதோ ஒரு ஸ்டேஷனில் இருந்து அவளுக்கு போன் செய்ய


“இப்போ எதுக்கு கத்துற… கிருத்தி வந்துட்டா… “ என்றபடி…


“ஏய் கிருத்தி… உன் மாம்ஸ்ட்ட பேசுடி… இன்னும் ரெண்டு நாள்ள பண்ணப் போற ஆபரேஷனை இன்னைக்குப் பண்ணப் போறோம்னு… அவர் வரும்போது நானும் பாப்பாவும் அவருக்காக வெயிட் பண்ணிட்டு இருப்போம்னு” என்றவள் உள்ளுக்குள் இருந்த துக்கத்தை எல்லாம் மறைத்தபடி பேச


கிருத்திகாவும் போனை வாங்கியவளாக


“ராஜ்… நான் தான் வந்துட்டேன்ல… நான் பார்த்துகிறேன்“ என்ற போதே


“அவ என்ன இப்படி ஈஸியா பேசுறா… எனக்குத்தான் படபடன்னு வருது கிருத்தி… அவ டாக்டரா இருக்கலாம்… இதெல்லாம் அவளுக்கு சாதாரணமா இருக்கலாம்.. எனக்கு அப்படி இல்லைதானே… நான் சராசரி மனுசன்… ஒரு புருசனா நான் பதட்டப்பட்டா அவ என்கிட்ட டாக்டரா பேசிட்டு இருக்கா… நான் வர்ற வரைக்கும் வெயிட் பண்ணச் சொல்லு… நான் சைன் போட்டாதானே அவளுக்கு ஆபரேஷன் பண்ண முடியும்…” என கடுப்போடு சொல்ல


“ஆமா.. பெரிய இவரு… ரூல்ஸ் பேசுறாரு… கன்செண்ட் டாக்குமெண்ட்ல பேஷண்ட் கான்ஷியஸா இருந்து சைன் போட்டாலே போதும்….. மத்தவங்க சைன்லாம் தேவையில்லைனு சொல்லு” என்ற போதே


“பவி.. மெத்தப் படிச்சிருக்கோம்ன்ற திமிர்ல பேசிட்டு இருக்கேன்னு நினைக்கிறேன்… பொறுமையா டீல் பண்ண மாட்டியா…” எனும் போதே ஸ்டேஷனில் ட்ரெயின் கிளம்பும் அறிவிப்பு வந்திருக்க


“ப்ளீஸ்டி… நான் வந்த பின்னாலதான் எதுவா இருந்தாலும்… சரியா நான் சொல்ற பேச்சைக் கேட்பேல” என்று வைத்துவிட்டு போக…


பவித்ராவோ எதிர்முனையில் அமைதியாக கண்ணீர் விட்டுக் கொண்டிருக்க


“ராஜ் என் மேல கண்டிப்பா கோபப்படுவார் கிருத்தி… அவர் அடுத்த ஸ்டேஷன்ல இருந்து போன் போடும் போது… நான் ஆபரேஷன் தியேட்டர்ல இருப்பேனே” என்றவளிடம்


“சரி விடு… குழந்தையோட ஹார்ட் பீட்… ரொம்பக் குறைஞ்சுருச்சு என்ன பண்றது…” என்ற கிருத்திக…


“இங்க பாரு… ஒண்ணு மட்டும் சொல்றேன்.. இந்த குழந்தை மேல நம்பிக்கை வைக்காத… ஹெட் என்ன சொன்னாங்க… உயிரோட நாம குழந்தையை கொண்டுவந்துட்டாலும்… ரிஸ்க்னு தானே சொன்னாங்க… சோ.. மனசை தயார் படுத்திக்கோ… நல்லபடியா பிறந்தாலும் யாருக்கோ பிறந்த குழந்தைனு ட்ரீட் பண்ணப் பாரு ஓகேவா…”


“ஹ்ம்ம்ம்…” எனத் தலை ஆட்டியவள்….


“ஆனால் என் பொண்ணுக்கு ஒண்ணும் ஆகாது கிருத்தி… நீ பாரு என் பொண்ணுக்கு ஆயுசு கெட்டினு உனக்கே ஒரு நாள் புரியும்… “ என்றவள்


“சரி நான் போய் ஆபரேஷன் தியேட்டர் செக் பண்ணிட்டு வர்றேன்… அனஸ்தீஸீயா டாக்டர் இன்னும் ஒரு மணி நேரத்தில வர்றேன்னு சொல்லிருக்காரு… ப்ரொசீஜர் ஸ்டார்ட் பண்ணச் சொல்லிறேன்… மேம்க்கும் ரெண்டு கேஸ் இருக்கு… அதுல ஒரு பேஷண்ட் என்னோட ரிவ்யூல இருக்காங்க… அவங்க கேஸ் முடிச்சதுக்கபுறம் தான் எனக்கு…… ” என மருத்துவராகவும் பேச ஆரம்பித்தவளிடம் கிருத்திகா அவளிடம் இதற்கு மேல் என்ன பேச முடியும்…


---


பவித்ரா சொன்னது போல… நட்ராஜ் அடுத்து நின்ற ஸ்டேஷனில் இறங்கி…போன் செய்ய… போனை எடுத்தோ கிருத்திகா… அப்போதே நட்ராஜின் உள்ளம் ஏதோ பரிதவிக்க ஆரம்பித்திருக்க…. இருந்தும் காட்டிக் கொள்ளாமல்


“நான் சொன்னதை அவ கேட்கலைதானே… வை” என கிருத்திகாவிடம் அடுத்து ஏதும் பேசாமல் இருக்க…


“மாம்ஸ்… அடுத்த ஸ்டேஷன்ல இருந்து நீங்க போன் பண்ணும் போது உங்களுக்க்கு நான் கண்டிப்பா குட் நியூஸ் சொல்வேன்… எதுக்கும் இப்பவே ஸ்வீட்ஸ் வாங்கி வச்சுக்கங்க” என்ற கிருத்திகாவிடம் விரக்தியான சிரிப்பை வைத்த நட்ராஜூக்கு அதன் பின் வந்த நாட்கள் விரக்தியை மட்டுமே மிச்சமாகக் கொடுத்திருந்தது…


---

மொத்த மருத்துவமனையையுமே நாராயணன் பதற வைத்திருந்தார்… அவரது அதிகாரத்தால்…


குணா மருத்துவமனையே அவரது கோபத்தில் பற்றி எரிந்து கொண்டிருந்தது


“இங்க பாருங்க… என் பொண்ணுக்குத் தப்பான டீரீட்மெண்ட் கொடுத்து…. அவளைக் கொன்னுட்டாங்க… இனி இவனுங்க யாரும் இந்த ஹாஸ்பிட்டலை ஓபன் பண்ணக் கூடாது… இதுக்கு உடனே சீல் போடுங்க… அதுக்கு ஆக்‌ஷன் எடு்க்கச் சொல்லுங்க… என் பொண்ணை அப்போதான் அங்க இருந்து என் வீட்டுக்கு எடுத்துட்டு போவேன்” என்று மேலிடத்துக்கு அழைத்துச் சொல்லி இருக்க…. மொத்த காவல் துறையும்… மீடியாவும் அங்கு குவிக்கப்பட்டிருக்க… மருத்துவமனை நிர்வாகம் நாராயணனிடம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தது…


வைதேகி ஒருபுறம் தன் மகளின் இறந்த உடலைப் பார்த்து கதறிக் கொண்டிருக்க … நாராயணனுக்கு ஆத்திரம் அடங்கவில்லை… கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருக்க


கிருத்திகாவையும் அவர் விட்டு வைக்கவில்லை


“இதுதான் கடைசியில அவளுக்கு நீ ஃப்ரெண்டா இருந்து கொடுத்த பரிசாம்மா… என் பொண்ணோட வாழ்க்கையை அந்த பொறுக்கியோட சேர்த்து வச்சு முடிச்சுட்டதானே… நீ நல்ல இரும்மா… நல்லா இரு… ஒத்த பொண்ணு… அப்போ எங்களை விட்டுப் போனா… இப்போ உலகத்தையே விட்டுட்டு போய்ட்டா… இப்போ சந்தோசம் தானே… நீ உன் புருசனோட நல்லா இரும்மா…” எனும் போதே குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தவர்


“ஒண்ணே ஒண்ணு சொல்லிகிறேன்… என் பொண்ணை என்கூட நான் எடுத்துட்டுப் போகப் போறேன்… தயவு செய்து குறுக்க நிற்காத… நீயும் வந்துறாத… அவனையும் வர விட்றாத..”


“என் பொண்ணை எப்படி வளர்த்தேன்… அஷ்டாவதனி… பாலிமேத் னு பேர் வாங்குனவ…. அவளோட அத்தனை திறமையையும் சர்வநாசம் பண்ணிட்டான்… அவ கலகலப்பெல்லாம்… போய்.. அந்த நாயோட பொண்டாட்டியா நாய் மாதிரிதானே அலஞ்சா… இதோ இன்னைக்கு அமைதியா படுத்துட்டா” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே…

“அங்கிள்… நான் என் மனசறிஞ்சு எந்த துரோகமும் பவிக்குப் பண்ணலை… ஆனால் இப்படி ஆகும்னு சத்தியமா நினைக்கலை அங்கிள்… குழந்தைக்குத்தான் பிரச்சனைனு சொன்னா… திடீர்னு அவளுக்கு பிபி ரைஸ் ஆகி … ஃபிட்ஸ்னு எல்லாமே காம்ப்ளிகேட் ஆகிருச்சு…” என தோழியின் உடலைப் பார்த்து கதறிக் கொண்டிருந்தவளை… நாராயணன் கண்டுகொள்ளாமல்… கதறக் கதறக் அவளை அங்கிருந்து அகற்றியவர்…. பவித்ராவின் உடலை மருத்துவமனையில் இருந்து தன் வீட்டுக்கும் கொண்டு செல்ல ஏற்பாடு செய்து விட…


“நான் ராஜ் வந்து கேட்டால் என்ன பதில் சொல்வேன்க… எனக்கு ரொம்ப பயமா இருக்கு விசாகன்… பவி இறந்துட்டான்னு ரெண்டு தடவை அவர் போன் பண்ணும் போது மறச்சுட்டேன்… இப்போ பவி அப்பா அவளோட பாடியை அவர் வீட்டுக்கு எடுத்துட்டு போறேன்னு சொல்றாரே” எனும் போதே


“நான் சொல்லிட்டேன் கிருத்தி… அவர் போனை நான் ஒரு தடவை அட்டெண்ட் பண்ணேன்…”


கிருத்தி அதிர்ச்சியுடன் பார்க்க…


“சொல்லித்தான் ஆகனும் பவி… அதுமட்டுமில்லாமல் அவர் பவிகிட்ட பேசனும்னு சொல்லி என்கிட்ட கத்த ஆரம்பிச்சுட்டார்… வேற வழி இல்லாமல் சொல்லிட்டேன்… என்ன பண்ணச் சொல்ற” என்றவனிடம்


“எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை…”


“ராஜ் வரட்டும்… அவருக்கு ஆறுதலா நாமதான் இருக்கனும்” என்று மனைவியைத் தேற்றிக் கொண்டிருக்க… மருது அவர்களிருவரின் முன் வந்து நின்றவன்


“அக்கா பவி அக்காவை அவங்க வீட்டுக்கு தூக்கிட்டு போய்ட்டாங்க…” என அழ ஆரம்பித்தவன்…


“அண்ணே எப்போ வருவாரு… அண்ணா சீக்கிரம் வந்துருவாரா… வருவாரா… அண்ணாக்கு விசயத்தைச் சொல்லிட்டீங்களா” என்றவனிடம் கணவன் மனைவி இருவரும் தலைஆட்ட… மருதுவின் கண்களிலும் கண்ணீிர் வழிய ஆரம்பித்திருந்தது..

--


ஜனவரி நள்ளிரவு 12 மணி…. உலகமெங்கும் புத்தாண்டை வரவேற்றுக் கொண்டிருக்க… பவித்ர விகாஸ் சோகத்தில் மொத்தமாக மூழ்கி இருந்தது…


பவித்ராவின் இறுதிச் சடங்குகள் நாளை என சொல்லப்பட்டிருக்க… சொந்தம் சுற்றம் என அனைவரும் அங்கு வந்து சேர்ந்திருக்க… வைதேகி மொத்தமாக சுருண்டிருந்தார்…


அன்று டெல்லி போனவள்… ஒரு வாரம் முன்புதான் வந்தார்… நாராயணன் வேண்டுமென்றே மனைவியை வர விடவில்லை இங்கு… அங்கிருந்தே வெளிநாட்டுப் பயணம்… அர்ஜூன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.. அர்ஜூனும் பெற்றோரைப் பார்த்த சந்தோஷத்தில் பவித்ராவையே மறந்துவிட்டான்…


நேற்றுதான் காவேரி… அனைத்து விசயத்தையுமே சொல்லி இருக்க… மகளின் கடிதம் மட்டுமே கடைசியில் அவர் கையில்…. மொத்தமாக ஒடிந்து ஓய்ந்து போனவளாக… தான் ஓவியமாக வளர்த்த மகளின் இந்தக் கோலத்தைக் காண முடியாமல்… அழுகை கூட வற்றி அமைதியாக அமர்ந்திருந்தாள்…


தன் பெற்ற மகளும் இல்லை… அவள் பெற்ற மகளும் இல்லை… ஆம் அப்படித்தான் வைதேகியிடம் நாராயணன் சொல்லி இருந்தார்… அவரின் அந்தஸ்து வெறி அப்போதும் அடங்கவில்லை….


அர்ஜூன்… அமைதியாக தன் அத்தையின் அருகில் அவள் முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தான்…


“ஏன் என்னவாயிற்று தன் அத்தைக்கு… இறந்து விட்டார் எனத் தெரியும்… அவனுக்கு கொஞ்சம் புரிந்தும் புரியாமலும் இருக்க… அன்று தன் அத்தைக்காகத்தானே… நீச்சல் குளத்தில் விழுந்தோம்… பிறகு ஏன்… ஏன் இப்படி எல்லாம் தன் அத்தைக்கு நடந்தது… சுபத்ரா பாப்பா எங்க… அவனின் பார்வை அலங்கரிக்கப்பட்டு படுக்க வைக்கப்பட்டிருந்த பவித்ராவின் வயிற்றில் பதிய… யாரிடமும் கேட்க… தன் பாட்டியிடம் கேட்க…


வைதேகியோ பதிலே இன்றி… இன்னும் வெகுவாக அழ ஆரம்பித்து மயங்கி இருக்க… அதன் பிறகு அர்ஜூனும் அமைதி ஆகி விட்டான்… அப்போது திடிரேன சத்தம்… பவித்ராவிகாஸின் வெளியே பெரும் சப்தம்…


“பவியோட புருசனாம்… பாவி…”


“நம்ம புள்ளையை கொடுமைப்படுத்தியே கொன்னுட்டான்…”


“அவ சேரில இருக்கிறவனாமே… ரவுடியாமே… என்னமோ பண்ணி நம்ம பொண்ணை மயக்கிட்டான்… என்ன சொல்ல… நம்ம புள்ளை நமக்கு இல்லாம போய்ட்டாளே…”


“நம்ம புள்ளையை நிம்மதியா கூட போக விட மாட்டேங்கிறான்…. செத்தா கூட நிம்மதியா இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறான் போல…”


கூட்டத்தில் சலசலத்துக் கொண்டிருந்த போதே… வெளியே கலவரமும் அடங்கி அமைதி ஆகி இருக்க


“அதுதான் சரி… அவனை போலிஸ்ல புடிச்சு கொடுத்துட்டாங்களாம்..”


”அவனுக்கு இதுதான் சரி…”


“தாலியையும் அவன்கிட்டயே தூக்கி எறிஞ்சுட்டாங்களாம்… படுபாவி அவனுக்கெல்லாம் நல்ல சாவே வரக்கூடாது… நம்ம பொண்ணை இந்த நிலைமைக்கு கொண்டு வந்ததுக்கு அவன் ஏழேழு ஜென்மத்துக்கு நிம்மதியா இருக்கக் கூடாது…”


அர்ஜூன் அனைத்தையும் கேட்டபடியே இருந்தவனுக்கு… அன்று நட்ராஜ் தன் தாத்தாவிடம் பேசிய பேச்சுக்கள் தான் ஞாபகம் வர… அந்தச் சிறுவனுக்கு கோபம் கூட அழுகையாக மட்டுமே வந்திருந்தது


---


”டேய் விடுங்கடா… என் பவியை… ஒரு தடவை… அவ முகத்தைப் பார்க்க விடுங்கடா… அவ ஆத்மா உங்க யாரையுமே மன்னிக்காதுடா… என்னை விடுங்கடா… இல்ல என்னையும் கொன்னுடுங்கடா… உங்களுக்குப் புண்ணியமா போகும்” இரும்புக் கம்பியை பிடித்துக் கொண்டு கத்றியவனின் குரலுக்கு செவி மடுக்க அங்கு யாருமே இல்லை…. ஒரு கட்டத்தில் நட்ராஜ் கத்தி கத்தியே மயங்கி சரிந்தும் இருக்க… அவனின் உடல்நிலையும் மோசமாகி இருக்க…. அன்றைய இரவே காவல் நிலையத்தில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தான் நட்ராஜ்…


அடுத்த நாள் பவித்ராவின் இறுதிச் சடங்குகளும் முடிந்து…. நாட்களும் நகர ஆரம்பித்திருந்தது


இதற்கிடையே தன் மகளுக்கு பிரசவம் பார்த்த மருத்துவரைக் கைது செய்ய வைத்ததோடு மட்டுமல்லாமல்… மருத்துவமனை நிர்வாகத்தின் மீதும் புகார் கொடுத்து மருத்துவமனையையே மூட வைத்தும் இருந்தார் நாராயணன்…


---


விக்ரம்… ரிதன்யா கண்களில் கண்ணீர் வந்திருக்க… அர்ஜூனால் அதற்கு மேல் பேச முடியவில்லை… அவன் கண்ணில் கண்ணீர் எல்லாம் வரவில்லை… அதெல்லாம் எப்போதோ அடங்கி இருக்க … வெற்றுப் பார்வை மட்டுமே…


ரிதன்யா குரல் கம்ம


“நட்ராஜ் மாமாவை ஏன் இப்படி பண்ணுனீங்க அர்ஜூன்… “ என்ற ரிதன்யாவிடம்


“அவனை அன்னைக்கே ஜெயில்ல வச்சே கொன்னுருக்கனும்… என் பவி அத்தையோடயே அவனையும் அனுப்பி வச்சு இருக்கனும்… எனக்கு அப்போ வயசு இல்லை” என்ற அர்ஜூனை விக்ரம் அதிர்ச்சியோடு பார்த்தான்


“ஏன் அர்ஜூன்… அவர் மேல இவ்வளவு கொலை வெறி… இதுக்கு மேல அந்த மனுசனுக்கு தண்டனை வேண்டுமா” விக்ரம் சோகமாகக் கேட்க


“அவனால என் அத்தை உயிரில்லா பொணமா வந்தாங்க… ஆனால் கண்மணியை உயிரோட நடைபிணமா மாத்துனவனை மன்னிக்கச் சொல்றீங்களா…” என்றவனை ரிதன்யா கோபத்துடன் பார்த்தவளாக…


“அந்தக் கண்மணியால யாருக்குமே நல்லது நடக்கலை… பவித்ரா அத்தை… நட்ராஜ் மாமா… நீங்க… எல்லோருமே அவளால கஷ்டப்பட்ருக்கீங்க அர்ஜூன்… அன்னைக்கே உங்க தாத்தா நல்ல காரியம் பண்ண நெனச்சுருக்காரு… உங்களாலதான் எல்லாம் கெட்டுச்சு… அவளைக் காப்பாத்துறேன்னு சொல்லி நீங்க எல்லாரும் துன்பத்துல சிக்கினதுதான் மிச்சம்…”


அர்ஜூன் கோபமும் அதிர்ச்சியுமாக ரிதன்யாவைப் பார்க்க…


“ஏய்… ரிது…” என விக்ரம் அவளை அடக்க முயற்சிக்க


“என்னை எதுக்கு அதட்றீங்க விக்கி… இவங்க எல்லாரும் அவ சொந்தம்… கஷ்டப்படட்டும்… ஆனால் என் அண்ணன் என்ன பண்ணினான்… இப்போ அவளால என் அண்ணனும் கஷ்டப்பட்றானே… அவளை அன்னைக்கே வயித்துலயே அழிச்சிருந்திருக்கனும்… என் அண்ணா நல்லா இருந்துருப்பானே… பவி அத்தை உயிரோட இருந்திருப்பாங்க… நட்ராஜ் அங்கிள் பெரிய ஆளா ஆகி இருப்பாங்க… எல்லாமே இந்த அர்ஜூனாலதானே” என இரக்கமில்லாமல் ரிதன்யா அப்போதும் பேச…


விக்கி அவளை முறைக்க… ரிதன்யா கடுப்பாக வேறு புறம் திரும்ப…


“அர்ஜூன் சார்… கண்மணிக்கு என்ன ஆச்சு… அவளைப் பற்றி ஏன் ஏதும் சொல்ல மாட்டேங்கறீங்க” எனும் போதே அர்ஜூன் கண்களை மூடி அப்படியே சாய்ந்து விட… விக்ரமும் ரிதன்யாவும் அமைதியாக ஒருவரை ஒருவர் மட்டுமே பார்க்க முடிந்தது…


”நீங்கள்ளாம் நெனச்சுட்டு இருக்கீங்கள்ள… கண்மணிக்கு ரிஷினா ரொம்ப பிடிக்கும்னு… ஆனால் அது ஒரு மாயைனு எனக்கு மட்டும் தான் தெரியும்… ஏன் அது இப்போ உங்களுக்கும் தெரிய வந்திருக்கும்…” அர்ஜூன் குரலில் எள்ளல் வந்திருக்க


“ஆனால் ரிஷியை விட ஒரு பெரிய மாயைல கண்மணி சிக்கிட்டு இருந்தா..” எனும் போதே விக்ரமும் ரிதன்யாவும் குழப்பத்துடன் அர்ஜூனைப் பார்க்க


“மருதுனு ஒரு மாயை… கண்மணியை தன் ஒரு வார்த்தைல அடக்கிருவான்… ஹ்ம்ம்… அப்படிப்பட்டவன்ட்ட இருந்தே கண்மணி வெளில வந்துட்டா இந்த ரிஷிலாம் என்ன… ” கேட்ட போதே ரிதன்யா கண்களில் முதன் முதலாக கலக்கம் வந்திருக்க


“அந்த மருது வெறும் மாயை மட்டும் அல்ல… கண்மணியோட வாழ்க்கையையே சின்னாபின்னமாக்கி புரட்டிப் போட்டவனும் அவன் தான்… புள்ளி மான் போல துள்ளிட்டு இருந்தவளோட மனசை துடிக்க துடிக்க கொன்னு போட்டவன்… பைத்தியக்காரியா கண்மணியை மாத்தினவன்…. இதுக்கெல்லாம் மூல காரணம் அந்தப் பாவி நட்ராஜ்தான்… அப்படிப்பட்டவனை மன்னிக்கச் சொல்றீங்களா…இல்ல பாவம் பார்க்கச் சொல்றீங்களா…”


“அர்ஜூன்… கண்மணி என் அண்ணனோட மனைவி… அதை மறந்துடாதீங்க… ப்ளீஸ்… அதைவிட அவங்க கேரக்டரையே நீங்க தப்பா பேசறீங்க” என்றவள்…


“விக்கி நான் எதுவும் கேட்கத் தயாரா இல்லை… நான் கிளம்பறேன்… ஏற்கனவே கண்மணியை எனக்குப் பிடிக்காது… இதை எல்லாம் கேட்டால் இன்னுமே நான் அவளை வெறுத்துடுவேன்” எனும் போதே…


விக்கி அவள் கையைப் பிடித்து நிறுத்தியவன்…


“உன் அண்ணனுக்கு இதெல்லாம் தெரியாமலா கண்மணியோட வாழ்ந்துட்டு இருப்பான்னு நினைக்கிற… அவன் கண்மணியை எந்த அளவுக்கு நேசிக்கிறான்னு இப்போதாவது புரிஞ்சுக்க ட்ரைப் பண்ணு… ” என்று அமர வைத்த விக்கி… அர்ஜூனிடம் திரும்பி…


“மருது மாயைனு சொல்லுங்க… ஆனால் ரிஷி கண்மணியோட நிஜம்… இது உங்களுக்கும் சீக்கிரம் தெரிய வரும் அர்ஜூன்… “


”ம்ஹ்ம்ம்ம்…… பெரிய நம்பிக்கைதான்… அப்போ ஏன் அந்த நிஜத்தை விட்டு வந்தாள் விக்கி…” அர்ஜூன் கேட்க… விக்கி பதில் சொல்ல முடியாமல் திணற…


“எனக்குத் தெரியும் விக்கி… கண்மணி ரிஷியை விட்டு கண்டிப்பா வெளிய வந்துருவான்னு… இன்னும் சொல்லப் போனால்… ரிஷிக்கு மருது பற்றி தெரியுமான்றது கூட நிச்சயம் இல்லை… அட்லீஸ்ட் நீங்களாவது அவன்கிட்ட சொல்லுங்க” என்றவன் கண்மணியின் குழந்தைப்பருவத்து நிகழ்வுகளுக்குச் சென்றிருந்தான்… அதே நேரம் இலட்சுமி அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவ மனையில்


”நாராயணன் சம்பந்தி இவ்வளவு மனசாட்சி இல்லாதவரா…” இலட்சுமி நம்ப முடியாதவராக நட்ராஜைப் பார்த்தபடி இருக்க…


“நான் உள்ள வரலாமா…” எனக் கேட்டபடி ரிஷியும் அங்கு வந்திருக்க… நட்ராஜ் தன் மருமகனின் முகத்தைப் பார்க்க முடியாமல்… வேறுபுறம் திரும்ப…


ரிஷி மௌனமாகவே தன் அன்னையில் அருகில் வந்து நின்றவன் மனதில் மருதுவைப் பற்றிதான் எண்ணங்கள் ஓட ஆரம்பித்திருந்தது… இதற்கு மேல் நட்ராஜைப் பேச விடக் கூடாது என்றுதான் உள்ளேயே வந்தான்…


“இன்னைக்கு மணி உன் பொண்டாட்டியா இருக்கலாம்… நீ அவ புருசனா இருக்கலாம்… நானும் டிஸ்டர்ப் பண்ணலை… பொழச்சுப் போன்னு உனக்கு வாழ்க்கைப் பிச்சை போடறேன்… வாழ்ந்துக்கோ… ஆனால் ஒண்ணும் மட்டும் நிச்சயம்… மணியோட மனசுல இருக்கிற இந்த மருதுவோட இடத்தை யாராலும் நிரப்பவும் முடியாது… அழிக்கவும் முடியாது… உனக்கு நல்ல காலம்னு ஒண்ணு இருந்தா அவ என்னைப் திரும்ப பார்க்காமல் இருக்கிறதுதான்… வேண்டிக்கோ அவ என்னைப் மறுபடியும் பார்த்துறக்கூடாதுனு…” மருது உறுதியாக… இவனைப் பார்த்து ஏளனமாகப் பார்த்துச் சொன்ன வார்த்தைகள் அவன் மனதில் ஓடிக் கொண்டிருக்க… அவன் அர்ஜூனைக் கூட பெரிதாக இதுவரை எடுத்ததில்லை…


யோசித்த போதே… தனக்கே இப்படி என்றால் தன் தாய் எப்படி நினைப்பார்கள்… கண்மணியை தவறாக நினைத்து விடுவார்களோ…. மனம் ஒருபுறம் தவிக்க ஆரம்பித்திருக்க… காட்டிக் கொள்ளாமல்… நட்ராஜை அதற்கு மேல் பேச விடாமல் தடுத்தும் நிறுத்தியிருந்தான்


“ம்மா… வீட்டுக்கு போகலாம்… டிஸ்சார்ஜ் பண்ணிட்டாங்க… நான் ஒரு பத்து நிமிசத்துக்கு முன்னாலேயே வந்துட்டேன்… மாமா உங்ககிட்ட பவி அத்தை பற்றி சொல்லிட்டு இருந்ததால டிஸ்டர்ப் பண்ணலை…” என்றபடி அங்கிருந்த பொருட்களை ஒழுங்குபடுத்தி சேகரிக்க ஆரம்பித்திருந்தான்…


“ரிது எங்கடா” இலட்சுமி கேட்க

“அவ உங்க மருமகளைப் பார்க்கப் போறேன்னு சொல்லிக் கிளம்பிட்டா” மருமகள் என்ற வார்த்தைகளில் அழுத்தம் கொடுத்து சொல்ல… இலட்சுமி மகனை முறைத்தபடி… நட்ராஜிடம் திரும்பியவராக…


“ஏன் சம்பந்தி… கண்மணி அம்மா ஆசைப்பட்ட மாதிரியே அந்த அர்ஜூனுக்கே உங்க பொண்ணைக் கல்………” என இலட்சுமி பேச ஆரம்பித்து முடிக்க வில்லை… அடுத்த நொடி ரிஷி தன் கையில் வைத்திருந்த அத்தனை பொருட்களையும் சுவற்றை நோக்கி சிதறி அடித்திருக்க அது அறை முழுவதும் விரவ ஆரம்பித்திருக்க… இலட்சுமி அதிர்ந்து அப்படியே தன் வார்த்தைகளை நிறுத்தி தன் மகனைப் பார்க்க ஆரம்பித்திருந்தார்…


ஏற்கனவே மகன் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கும் நிலைமைகளை எல்லாம் நினைத்து கவலை கொண்டிருக்க… இப்போது மகனின் கோபம் வேறு பார்த்து இன்னும் பயந்தாலும்… அதிர்ந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் கொதித்தவராக


“இப்போ எதுக்குடா இவ்ளோ கோபம்… அந்த அர்ஜூன்… கண்மணின்னு அவங்க அவங்க வாழ்க்கையைப் பார்த்துருந்துர்ப்பாங்கள்ள… இதெல்லாம் தெரிஞ்சுதான் கண்மணியை மேரேஜ் பண்ணுனியா… நீ எதுக்குடா அவங்க வாழ்க்கைக்கு இடையில போன… கண்மணி அம்மா அவங்க மருமகனா வர ஆசைப்பட்டது அர்ஜூனைத்தானே… இதோ இன்னைக்கு கண்மணி அவங்க அம்மா ஆசைப்பட்ட மாதிரி போய்ட்டாதானே” எனும் போதே நட்ராஜ்…


“அப்படிலாம் இல்ல சம்பந்தி… கண்மணிக்கு ரிஷியை” என ஆரம்பித்த போதே… அவரை நிறுத்தியவராக


”மாமா… என் கண்மணி பற்றி இங்க யாருக்கும் செர்டிஃபிகேட் கொடுக்கனும்னோ… இல்லை யாரும் நல்லவிதமா அவளை நினைக்கனும்னோ அவசியம் இல்லை…” என்றபடி வேகவேகமாக கீழே கிடந்த போருட்களை எடுக்க ஆரம்பிக்க


“என்னடா அவசியம் இல்லை… அவ என் மகனைக் கல்யாணம் பண்ணிருக்கா…இன்னைக்கு என் பையன் வேண்டாம்னு அந்த அர்ஜூன் கிட்ட போய் இருக்கா… எனக்கு அவளைப் பற்றி ஏதுமே தெரியாமல் போச்சேன்னு இப்போ ஃபீல் பண்றேன்… நான் மட்டும் நல்லா இருந்திருந்தால் உனக்கு இந்த கல்யாணத்தையே பண்ணியிருந்திருக்க மாட்டேன்… கந்தம்மாள் பாட்டி சொன்னது போல… கண்மணி… எனக்கெதுக்கு அந்த வார்த்தை எல்லாம்… இங்க பாரு… உனக்கு அவ வேண்டாம்… கண்மணியை விட்ரு... நாம நம்ம ஊருக்கே போயிரலாம்டா… எல்லாத்தையும் கெட்ட கனவா மறந்துட்டு… நாம நம்ம பழைய வாழ்க்கைக்கே போயிரலாம்டா” எனும் போதே


“ஐயோ சம்பந்தியம்மா… என் பொண்ணைப் பற்றி நான் ஏதும் சொல்லவே இல்லையே… நீங்களா ஏதேதோ முடிவெடுத்து பேசறீங்களே” பதறிய நட்ராஜிடம்


“வேண்டாம் மாமா… என் பொண்டாட்டியப் பற்றி இங்கு யாருக்கும் தெரியவேண்டாம்… அந்த அவசியமும் இல்லை…”


“என்னடா அவசியம் இல்லை… சொல்லு… எல்லாத்தையும் சொல்லு…. இன்னும் என்னென்ன இருக்கு எல்லாமே எனக்கு தெரிந்தாகனும்…”


“உங்களுக்கு அது தேவையில்லை… மாமா பவி அத்தையைப் பற்றி சொல்லிட்டீங்கள்ள…. அதோட முடிச்சுக்கங்க… ஒரு வார்த்தை என் கண்மணியைப் பற்றி… அவளோட கடந்த காலத்தைப் பற்றி பேசக்கூடாது” என்றவன்… அதேபோல வேறு ஏதும் பேச விடாமல் மருத்துவமனையில் இருந்து அவர்களை வீட்டுக்கு கூட்டி வந்திருக்க… கண்மணி இல்லாத அந்த வீடு இப்போது இலட்சுமிக்கு மருமகளின் அருமையை தானாகவே மெல்ல மெல்ல அவர் மனசுக்குள் கொண்டு வந்திருக்க… இலட்சுமிக்கு கொஞ்சம் கொஞ்சமாக கோபம் குறைந்திருக்க…. மகனைப் பார்க்க… அவனோ… ரித்விகாவுடன் வம்பிழுத்தபடி சிரித்தபடி பேசிக் கொண்டிருக்க… கண்கள் கலங்கியது இலட்சுமிக்கு…


“நீ வேண்டாம் என்று சொல்லிவிட்டு அந்தப் பெண் போன பிறகும்… இவனால் எப்படி சந்தோசமாக இருக்க முடிகிறது… அவளைப் பற்றி ஒரு வார்த்தை கூட தவறாகவும் சொல்ல விட மாட்டேன்கிறான்… அப்படி என்ன நம்பிக்கை… அப்படி என்ன காதல்.. அதே நேரம் மகன் உள்ளுக்குள் அனைத்தையும் வைத்துக் கொண்டு தங்கள் முன் நடிக்கிறானோ… அந்தப் பயமும் வந்திருக்க… எப்படியோ கண்மணி விலகிச் சென்றபின்னாலும் தன் மகன் இயல்பாக இருக்கின்றானே… தான் பயந்து கண்மணியிடம் அடிக்கடி சொல்வது போல எதுவும் நடக்கவில்லை… தன் மகன் இன்னும் தங்கள் மகனாகத்தான் இருக்கின்றான்” முதன் முதலாக இலட்சுமிக்கு நிம்மதி வந்திருந்தது… அந்த நிம்மதியோடு மகனைப் பார்த்தவள்… அவனைத் தன்னருகே அழைத்தவளாக


”ரிஷி… எனக்கு கண்மணியைப் பற்றி முழுசா எல்லாம் தெரியனும்டா… நான் உன் அம்மான்ற கோணத்துல மட்டும் தான் யோசிச்சேன்… கண்மணியோட கோணத்துல இருந்து என்னால யோசிக்க முடியலை அந்த சூழ்நிலைல… இப்போ யோசிச்சு பார்க்கும் போது அவ ரொம்ப கஷ்டப்பட்ருப்பா தானே… ஏதேதோ நினைக்கத் தோணுதுடா… அவ என்னை நம்ம குடும்பத்தை பார்த்துகிட்டதெல்லாம் நான் மறக்கலைடா… நீன்னு வர்றப்போ அவளை… அவ நிலைமையை நினைக்க முடியல…” எனும்போதே


”என்ன இருந்தாலும் நீங்க கண்மணியோட மாமியார் தானேம்மா… அம்மா இல்லைனு காட்டிட்டீங்கதானே… அவளுக்குத்தான் அந்த பாக்கியம் இல்லையே…” என்ற ரிஷியின் வேதனையான குரலில் மனம் குமைந்து இலட்சுமி தலை குனிந்தார்தான்…


அதே நேரம் நட்ராஜும் அங்குதான் இருந்தார்…


“சம்பந்தி சொல்லுங்க… என் மருமகளை எப்படி காப்பத்துனீங்க… அவளை எப்படி வளர்த்தீங்க” எனும் போதே இப்போது குற்ற உணர்ச்சியில் நட்ராஜ் தலைகுனிந்திருக்க… இருவரையும் விரக்தியான பார்வையில் பார்த்தவன்


“ம்மா… அதெல்லாம் எதுக்குமா… இப்போ நடக்கிறதைப் பாருங்க… உங்க மருமக இங்க வரனும்… அதை யோசிங்கம்மா” என்று ரிஷி பேச்சை மாற்ற…


“இல்லடா… எனக்குத் தெரியனும்… கண்மணியைப் பற்றி எல்லாமே…”


“வேண்டாம்மா… நீங்க ரொம்பக் கஷ்டட்ப்படுவீங்க… அவளைப் புரிஞ்சுகிட்டால் மட்டுமே உங்களுக்கு கஷ்டம் இருக்காது” எனத் தடுமாறியவனிடம்


“ஏண்டா…. அவ என்ன தப்பா பண்ணினா… இதுல என்ன அவளைப் புரிஞ்சுகிற வேண்டியிருக்கு”


நட்ராஜ் அவனிடம்…


”ஏன் ரிஷி… என் பொண்ணைப் பற்றி உங்க அம்மாகிட்ட சொன்னா… இப்படிப்பட்ட பொண்ணை என் பையனுக்கு கட்டி வச்சீட்டீங்களான்னு என்னை… என் பொண்ணை மறுபடியும் திட்டிறப் போறாங்களோன்னு பயப்பட்றியா… இல்லை என் பொண்ணு இப்படியெல்லாம் கஷ்டப்பட்டாளான்னு மனசு தாங்காமல் மறுபடியும் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகிற சூழ்ந்லை வந்துரும்னு நினைக்கிறியா…” என நட்ராஜ் கேட்க… ரிஷி இப்போது அமைதி ஆகி இருக்க… இலட்சுமிக்கு மேலுமே கலவரம் வந்திருக்க…


ரிஷி அவர்கள் இருவரிடமும் ஏதும் பேசாமல்…. தன் அறைக்குச் சென்றவன்… வரும் போது… கையில் கிருத்திகா அனுப்பி இருந்த வாழ்த்துக் கடிதத்தோடு வந்தவன்…


“அம்மா எனக்கு ஒரு சத்தியம் பண்ணிக் கொடுங்க… நானும் மாமாவும் கண்மணியைப் பற்றி சொல்றோம்… ஆனால் அவ உங்க மருமகள்… இந்த ரிஷியோட கண்மணி இதுல எங்கேயும் நீங்க தடுமாறக் கூடாது… அப்படி ஒரு எண்ணத்தோட கண்மணியோட கடந்த கால வாழ்க்கை பற்றி கேட்க முடியும்னா கேட்கலாம்… நான் சொல்ல தயார்”


இலட்சுமி அமைதியாக இருக்க…


“சோ… உங்களால அப்படி நினைக்க முடியாது…. சரி விடுங்க” என்று நிதானித்தவன்… பின்


”அப்போ இதைப் பார்த்தா நீங்க நினைப்பீங்களா… அவ என்னோட கண்மணின்னு… எனக்காக மறுஜென்மம் எடுத்து வந்திருக்கானு..” என அவர் கையில் கிருத்திகாவின் வாழ்த்து மடலை கொடுக்க… நட்ராஜுமே புரியாமல் பார்க்க


இலட்சுமி அந்த வாழ்த்து மடலைப் பார்க்க…


ரிஷியின் மூன்றாவது பிறந்த நாளுக்கான வாழ்த்து மடல்… கிருத்திகாவிடமிருந்து அனுப்பப்பட்டிருக்க… ரிஷியின் பெயரோடு கண்மணியின் பெயர் அப்போதே சேர்ந்து இருந்த அந்த வாழ்த்து அட்டையை நட்ராஜுமே புரியாமல் பார்க்க…


”ஆஸ்திரேலியால இருந்து வந்த பின்னால நான் கிருத்திகா ஆன்ட்டிய மீட் பண்ணேன் மாமா… அப்போதான் என் அப்பா கண்மணியை எனக்காக காப்பாத்திருக்காங்கனு தெரிஞ்சுகிட்டேன்…”


ரிஷி கண்மணிக்கும் தனக்குமான தன் தொடர்பின் நினைவுகளோடு கண்மணியைப் பற்றி சொல்ல ஆரம்பித்திருந்தான்…


---


ஜனவரி 1…


”கிருத்தி… அழுதுட்டே இருந்தா என்ன அர்த்தம்… இனி பவித்ரா உயிரோட வரப் போறதில்ல.. ராஜையும் நாம இப்போதைக்கு வெளிய எடுக்க முடியாது… பவி எதுக்காக பாடுபட்டாங்களோ.. அந்தக் குழந்தையோட உயிர் இப்போ ஊசலாடிட்டு இருக்கு… யாருமே அந்தக் குழந்தையை கவனிக்கலை… ”


விசாகன் கிருத்திகாவிடம் சொல்ல… கிருத்திகா அவளாக இருந்தால் தானே அவன் சொல்வதை எல்லாம் கேட்பதற்உ


“எனக்கு என்ன பண்றதுனே தெரியலை விசாகன்… பவி என்கிட்ட நல்லாதானே பேசிட்டு போனா… என்னாச்சு அவளுக்கு… எனக்கே புத்தி கலங்கின மாதிரி இருக்கே… அப்போ ராஜுக்கு…”


“ராஜும் இல்லை… இப்போ அந்தக் குழந்தைக்கு கார்டியன் யாருமே இல்லை… அது உனக்குப் புரியுதா இல்லையா.. முதல்ல வேற ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணனும்… ” என்று அவளை உலுக்க… அவனைக் கட்டிக் கொண்டு அழுதவளை… பவியின் குழந்தையை வைத்துதான் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வந்தான்… ஒரு வழியாக அவளும்… அவனுக்கு பதில் சொல்ல ஆரம்பித்திருக்க


”அந்த மருது எங்க” என்று விசாகன் கேட்க


“ராஜோட அம்மா அப்பாவை கூட்டிட்டு வரப் போயிருக்கான்…” கிருத்திகா குரல் கம்மச் சொல்ல…


”சரி வா… அந்தக் குழந்தையைப் போய்ப் பார்ப்போம்… இப்போ என்ன நிலைல இருக்குனு…” என்ற போதே குழந்தை நல மருத்துவர் கிருத்திகாவிடம் வந்தவராக


“கிருத்தி… பவியோட குழந்தைக்கு உடனே ட்ரீட்மெண்ட் பண்ணனும்…. ஆனால் அதுக்கு ரொம்ப செலவாகும்… பிரீமெச்சூர்ட்… இதெல்லாம் விட இங்க முடியாது… நம்ம ஹாஸ்பிட்டலையே மூடப்போறாங்களாம்… உடனடியா அந்தக் குழந்தையை வேற ஹாஸ்பிட்டல்ல சேர்க்க ட்ரை பண்ணு…”


எனக் கையில் பவித்ராவின் குழந்தையைக் கொடுக்க…. வாங்கிக் கொண்ட கிருத்திகா குழந்தையை வாங்கிய அடுத்த நொடி.. பதறி குழந்தையைப் போடப் போக… வேகமாக விசாகன் வாங்க… அவனுக்குமே அதிர்ச்சிதான்


ஏழுமாதக் குழந்தை… உள்ளங்கையில் அடங்கியிருக்க… முகம் மட்டுமே ஓரளவு வளர்ச்சி அடைந்த நிலையில்… எலும்பை தோல் போர்த்தியிருக்க…


பவித்ராவின் குழந்தையாக நம் நாயகி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்க… கிருத்திகா இன்னுமே பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்திருக்க அவள் உடலெங்கும் நடுக்கமும் சேர்ந்திருக்க…. விசாகன் தான் அந்த இடத்தில் மிகத் தைரியமாக இருந்த ஒரே ஜீவன்


”கிருத்தி… ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர்செல்ஃப்… உன் ஃப்ரெண்டோட ஆசை இந்தக் குழந்தை உயிரோட இந்த பூமிக்கு வரனும்ம்றது…” எனும் போதே கிருத்திக்கும் நிதர்சனம் புரிய.. வேறு வழியின்றி… குழந்தையின் உயிருக்காகப் போராட ஆரம்பித்திருந்தாள் கிருத்திகா… அருகில் இருந்த இன்னொரு மருத்துவமனையில் சேர்த்தாலும்… குழந்தைக்கு பிறக்கும் போதே பல பிரச்சனைகள் இருந்திருக்க… அதற்கான சிகிச்சைக்கு அதிக அளவு பணமும் தேவைப்பட்டிருக்க… விசாகன் கிருத்தியே எதிர்பார்க்காத அளவு இலட்சங்களில் அது இருக்க… இருவருமே தடுமாறினர்


“24 ஹவர்ஸ் தான் டைம் கொடுத்திருக்காங்க… பவியைக் காப்பாற்ற முடியாமல் போன மாதிரி அவ குழந்தையையும் மிஸ் பண்ணிருவோமா” கிருத்தி துக்கம் தாளவில்லை…


“மனசைத் தளரவிடாத… இங்க பாரு… இந்த லிஸ்ட்ல இருக்கிறவங்க எல்லோருக்கும் கால் பண்ணலாம்…. கண்டிப்பா நமக்கு ஹெல்ப் கிடைக்கும்” விசாகன் நம்பிக்கை ஊட்ட … கிருத்திகாவும் நம்பிக்கையுடன் ஒவ்வொருவரையும் தொடர்பு கொள்ள ஆரம்பித்தாள்… பணமும் கிடைத்ததுதான் ஆனால் மிக மிகச் சிறிதளவே… மொத்த சிகிச்சைக்கான பணத்தில் 5 சதவிகிதம் கூடக் கிடைக்காத நிலை…


சிலர் ஏற்கனவே அவர்கள் ஒதுக்கி வைத்திருந்த தொகையை வேறு கருணைக்காரியங்களுக்காகச் செலுத்தி விட்டனர் எனச் சொல்ல… வேறு சிலரோ…. தேதிகளை வைத்து பணம் கொடுக்கும் வள்ளலாக இருந்தனர்… அதாவது பிறந்த நாள்.. திருமண நாள் என அப்படித்தான் கொடை கொடுப்பதாக கூறி விட… ஏதோ பணம் கிடைத்ததே தவிர… அவர்கள் எதிர்பார்த்த தொகை கிடைக்கவில்லை


கொஞ்சம் கொஞ்சமாக மனம் தளர ஆரம்பித்திருந்த சூழ்நிலையில்…


“கிருத்தி… இந்த லிஸ்ட் எனக்குத் தெரிந்தவங்ககிட்ட இருந்து கிடைத்தது…. இவர் பேர் தனசேகர்… இவரோட பையனுக்கு இன்னைக்கு பிறந்தநாள்… தொடர்ந்து 3 வருசமா.. அவர் டொனேசன் கொடுத்துட்டு இருக்கார்… அதுவும் பெரிய தொகை… நாம எக்ஸ்பெக்ட் பண்றதுல கால்வாசிக்கும் மேல… கிடைத்தால் உடனே ட்ரீட்மெண்ட் ஸ்டார்ட் பண்ணிறலாம்… ட்ரை பண்ணிப் பார்க்கலாம்” எனச் சொல்ல…


கிருத்திகாவோ


“இன்னைக்குதான் அவர் பையனுக்கு பிறந்தநாள்னா… அவர் ஏற்கனவே யாருக்காவது கொடுத்திருப்பார்தானே…” கிருத்திகா நம்பிக்கையின்றி சொல்ல


“ஏன் நெகட்டிவா திங்க் பண்ற… போனைப் போடு” என்று விசாகன் சொல்ல… கிருத்திகாவும் தொலைபேசியில் தொடர்பு கொள்ள… தனசேகரும் எடுத்தார்…


கிருத்திகா… பட படவென குழந்தையின் நிலையைச் சொல்ல… மறுமுனையில் யோசிக்கவெல்லாம் இல்லை தனசேகர்…


“கண்டிப்பா நான் உதவி பண்றேங்க… ஆக்சுவலா நான் செக் போட்டு வச்சுருந்தேன்… வழக்கமா கொடுக்கிற ட்ரஸ்டுக்கு அனுப்பலாம்னு இருந்தேன்… ஒரு உயிருக்கு போராட்டிட்டு இருக்கிற குழந்தைக்குனா அந்தக் குழந்தைக்கே கண்டிப்பா செய்றேங்க… உங்க அட்ரெஸ் சொல்லுங்க” அவர்களது தொலைபேசியில் வரும் அழைப்பின் எண்ணைப் பார்க்கும் வசதி இருக்க…. கிருத்திகாவிடம் முகவரியை மட்டும் கேட்க… இந்த முனையில் கிருத்திகா அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை…


வேக வேகமாக முகவரியைச் சொல்ல ஆரம்பிக்கும் போதே


“அப்பா…. எனக்கு இப்பவே பைக் வேணும்…” என மறு முனையில் அடம் பிடிக்கும் சிறுவனின் குரல் கேட்க ஆரம்பிக்க… அந்த அடம் ஒரு கட்டத்தில் பெரும் அழுகையாகவும் மாறி இருக்க… தனசேகரின் மொத்த கவனமும் அந்தக் குழந்தையிடம் போயிருந்தது போல… கிருத்திகாவின் வார்த்தைகளை அவர் செவிமடுக்கவே இல்லை… கிருத்திகாவும் இப்போது அமைதி காத்தவளாக தனசேகரிடமிருந்து வரும் பதிலுக்காக காத்திருக்க ஆரம்பித்திருந்தாள்…


“ஏங்க நேத்தே வரும்னு சொல்லிட்டு ஏமாத்திட்டீங்க… பிறந்த நாள் அதுவுமா நம்ம பையனை ஏன் அழ வைக்கிறீங்க…” என அவர் மனைவியின் குரல் கேட்டிருக்க


“ஏன் இலட்சுமி… நீயும் புரிஞ்சுக்காம பேசுற… இங்க விற்கிற சாதாரணப் பைக்னா வாங்கிக் கொடுக்க எவ்ளோ நேரம் ஆகும்… ஜெர்மன்ல இருந்து இம்போர்ட் பண்ணிருக்கேன் அவனுக்காக… வர லேட்டா ஆகிருச்சு… நாளைக்குத்தான் கிடைக்கும்னு சொல்லிட்டாங்க” எனும் போதே அவர் மகனின் அழுகஅதிகமாகியது


“முடியாது எனக்கு இப்போவே வேணும்… வேணும்… வாங்க வாங்க… நீங்க போன்லாம் பேசக் கூடாது… ” அடம் பிடித்த அவர் பையனின் குரல் அருகில் ஒலித்த போதே.. அடுத்த நிமிடம் தொலைபேசி இணைப்பும் முடிவுற்றிருந்தது…


கிருத்திகா தொடர்ந்து முயல… ரிங்க் மட்டுமே போய்க் கொண்டிருக்க அழைப்பை இணைக்கவே முடியவில்லை… காரணம் தனசேகரின் மகன் ரிஷிகேஷ்… நம் நாயகன்… தந்தை பேசிக் கொண்டிருந்த அழைப்பைக் கட் செய்ததோடு மட்டுமல்லாமல்… அடம் பிடித்து… அவரை உடனே கடைக்கும் அழைத்துச் சென்றிருந்தான்….


கிடைக்கவிருந்த பெரிய தொகையும்… கடைசி நிமிடத்தில் கை நழுவி இருக்க கிருத்திகாவிடம் இருந்த கடைசி நம்பிக்கையும் பொய்த்திருக்க… பவித்ரா-நட்ராஜின் மகளின் நிலையும் மிக மிக கவலைக்கிடமாக போயிருக்க… மருத்துவர்கள் அளித்திருந்த கால அவகாசம் 8 மணி நேரமாக குறைந்திருந்தது…

1,409 views0 comments

Recent Posts

See All

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின் புதிய இல்லத்துக்கான முதல் கல்லை அடிநாட்டினாள்… அதன் பின் பள்ளி

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை அலைகழித்திருக்க… மருது ’மணி’ என்று தானே அழைப்பான் யோசித்தாலும்….

அத்தியாயம் 94-3 சில வாரங்களுக்குப் பிறகு… வீட்டில் கண்மணி மட்டுமே இருந்தாள்… சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க… மணி 11 க்கும் மேலாக ஆகியிருக்க… நட்ராஜுக்காகவும் மருதுவுக்காகவும் காத்திருந்தாள் கண்மணி…. இப்

© 2020 by PraveenaNovels
bottom of page