top of page

கண்மணி... என் கண்ணின் மணி- 88-3




அத்தியாயம் 88-3


/* பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே

என் பிரியத்தை அதனால் குறைக்க மாட்டேன்


எரியும் உடலென்று தெரியும் பெண்ணே

என் இளமைக்கு தீயிட்டு எரிக்க மாட்டேன்


கண்ணிமையும் சாமரங்கள் வீசும் காற்றில்

என் காதல் மனம் துண்டுத் துண்டாய் உடையக் கண்டேன்


துண்டு துண்டாய் உடைந்த மனத் தூள்களையெல்லாம்

அடித் தூயவளே உனக்குள் தொலைத்து விட்டேன்

*/


’கண்மணி’ இல்லம் அதன் மகாராணி இல்லாமல் பெயரளவில் மட்டுமே அந்தப் பெயரைத் தாங்கியிருந்தது அடுத்த சில மணி நேரங்களில்…


ஆம் கண்மணி அழைத்த… அடுத்த பத்தே நிமிடத்திலேயே…. கண்மணி சொன்னவாறு அர்ஜூன் அங்கு வந்திருக்க… நட்ராஜ் எவ்வளவோ தடுத்தும்… பேசிப் பார்த்தும் கேட்காமல் கண்மணி அவனோடு சென்று விட்டாள்…


நட்ராஜ் அதிர்ச்சியில் அப்படியே அமர்ந்து விட்டார்… எத்தனை நிமிடங்கள் அப்படியே அமர்ந்திருந்தார் அவருக்கே தெரியவில்லை… அவரே நிதானம் வந்து ரிஷியைப் பார்க்க… அவனோ…. கண்மணி தூக்கி வீசி எறிந்து போயிருந்த இவன் வாங்கிக் கொடுத்த அவளது மூக்குத்தியை கையில் வைத்தபடி அதன் திருகாணியைத் தேடிக் கொண்டிருக்க…


“ரிஷி” வேகமாக மருமகனின் அருகில் போக… அவரைப் பார்க்காமல்


“மாமா… இதோட இன்னொரு பார்ட் காணோம்… தேடிட்டே இருக்கேன்… கண்ணுக்கே தெரியமாட்டேங்குது…” என்ற மருமகனைப் பார்த்து கதிகலங்கித்தான் போனார் நட்ராஜ்…


”ரிஷி… என்ன நடந்துச்சுப்பா உங்க ரெண்டு பேர்க்கும் இடையில… எனக்கு ஒண்ணுமே புரியல… இவ்வளவு கோபம் உன் மேல ஏன் அவளுக்கு… உனக்கு தெரியாமலா இருக்கும்” ரிஷியிடம் கேட்க


அவனோ…


“மாமா… நல்ல வேளை தாலியைக் காட்டி இது நான் கட்டினதுதானேன்னு கேட்கலை… கேட்ருந்தா மூஞ்சிலேயே தூக்கி வீசி எறிஞ்சுட்டு போயிருந்துருப்பா…” ரிஷி அவர் கேட்டதுக்கு பதில் சொல்லாமல்… அவனாக ஏதோ பேசிக் கொண்டிருக்க


”ரி… ஷி… ரிஷி” நட்ராஜ் அவனைப் பிடித்து உலுக்க…


”ப்ச்ச்… நான் நல்லாத்தான் இருக்கேன் மாமா…” கலங்கிய கண்களைத் துடைத்தவனாக…


“நீங்க கேட்டது காதில் விழுந்தது…. பிரச்சனை இருந்ததால் தானே சொல்றதுக்கு… அப்படி ஏதுமே இல்லையே” என்றபடியே


“அப்புறம் ஏன் இப்படிலாம் பண்றா… கேட்டால்… தெரியல மாமா… எனக்குமே தெரியலையே மாமா… “ என்றவனின் பார்வை அவரிடம் இல்லாமல் இப்போதும் தரையிலே தேடும் பணியைத் தொடர்ந்து கொண்டிருந்தது…


“ஆனால் ஒண்ணு மட்டும் தெரியுது… என் மேல கோபமா இருக்கா அது மட்டும் உண்மை… ஆனால் அதே நேரம் அவ பிரியமும் என் மேல மட்டும் தான்… அதுவும் உண்மை..”


“இப்போ எதுக்கு இவ்ளோ ஃபீல் பண்றீங்க… எங்க போயிருக்கா… அவங்க தாத்தா வீட்டுக்குத்தானே… கோவிச்சுட்டு பொறந்த வீட்டுக்கு எல்லாரும் போவாங்க… என்ன இவ தாத்தா பாட்டி வீட்டுக்கு போயிருக்கா… அவ்ளோதான்… தாத்தா வீடும் பிறந்த வீட்ல தானே சேரும்… என் மேல கோபம்லாம் அவளுக்கு ஒரு நாள் தாங்காது…. நாளைக்கே ரிஷிக்கண்ணான்னு வருவா பாருங்க… “


நம்பிக்கையோடு பேசிய மருமகனை… நட்ராஜ் கலங்கிய கண்களுடன் பார்த்தபடி இருக்க


“சாரி மாமா… என்னால உங்களுக்கும் கஷ்டம்…”


“நாளைக்கு வந்தவுடனே உனக்கு என் மேல கோபம் இருந்தா என் மாமா வீட்டை போவியான்னு அவளைக் கண்டிக்கிறேன் போதுமா… இருந்தாலும் கொஞ்சம் ஓவராத்தான் இன்னைக்கு நடந்துகிட்டா…” இயல்பாகப் பேசியவன்…. அவனுக்குள் பேசினானா… இல்லை நட்ராஜுக்கு எடுத்துச் சொன்னானா அவனுக்கே தெரியவில்லை



அப்படி அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே அவன் முகம் பிரகாசமாகி மாற ஆரம்பித்தது…


“மாமா… இதோ… திருகாணி… கிடச்சுருச்சு…. நாளைக்கு வந்து அவ கேட்கும் போது இருக்கு அவளுக்கு” என்றபடி மூக்குத்தியை எடுத்து பத்திரப்படுத்தியவன்… இப்போதும் கலங்கி நின்றிருந்த நட்ராஜைப் பார்த்தபடி


“இங்க பாருங்க மாம… உடனே எமோஷனல் ஆகி… உங்க உடம்பைக் கெடுத்துக்காதீங்க… நான் பார்த்துக்கறேன்… அவ என்னை விட்டு போக மாட்டா போக முடியாது… அதே மாதிரி உங்கள விட்டும் அவளை போக விட மாட்டேன்… நான் இருக்கிற வரை நட்ராஜ் பொண்ணு அந்த அடையாளத்தை யாருக்கும் விட்டுத் தர மாட்டேன்… எத்தனை நாராயணன் எத்தனை அர்ஜூன் வந்தாலும்…” ரிஷி மாமானருக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்க


ரிஷிக்கு உண்மையிலேயே வருத்தம் இல்லையா… இல்லை இல்லாதது போல் காட்டிக் கொள்கிறானா… இல்லை தன் மகள் இப்படி பண்ணி விட்டு போனதில் சித்தம் கலங்கி பேசுகிறானா… ரிஷியின் இயல்பான பாவனையில் நட்ராஜ் மருமகனைக் கலக்கமாகப் பார்த்த போதே…. ரிஷி இயல்பாகத்தான் இருக்கிறான் என்பதை அவனின் அடுத்த சில வார்த்தைகளிலேயே புரிந்துக் கொண்டார்


“மாமா… எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு… எனக்குத் தெரிந்தவங்க ஒருத்தவங்க ஆஸ்திரேலியா போறாங்க… ஃபேபியோ கிட்ட தான் அவரை அனுப்புறேன்… சோ போறவருக்கு நான் முக்கியமா சில டீடெயில்ஸ்லாம் சொல்லி அனுப்பனும்… நான் கிளம்பட்டுமா… பாருங்க கண்டதை நினைத்து உடம்பையும் மனசையும் கெடுத்துக்காதீங்க… நான் பார்த்துக்கிறேன்… என்னை நம்புறீங்கள்ள…” என்று கேட்க


நட்ராஜ் அவரையுமறியாமல் தலை அசைக்க


புன்னகத்தவன்… அதே திருப்தியோடு… கிளம்பியும் இருந்தான்


நட்ராஜுக்கு மகள் அவரை விட்டு போன கவலையை விட… மருமகன் அவளை புரிந்து வைத்துக் கொண்டிருக்கின்றான்… அந்த நிம்மதி மேலோங்கி இருக்க… நட்ராஜும் கம்பெனிக்கு கிளம்பி விட்டார்…


---


சென்ன விமான நிலையம்…


ரிஷியின் கைகளைப் பிடித்தபடி நின்றிருந்த ஹர்ஷித்தின் கண்களில் கலக்கம்… கண்ணீர்…


இருவரும் சேர்ந்தே வளர்ந்தவர்கள் இல்லைதான்… இது நாள் வரை ரிஷி தன் உடன் பிறவா அண்ணன்… தான் ரிஷியின் பொறுப்பு என பழக்கப்பட்டவனுக்கு… இன்று யாரோ ஒருவரிடம் செல்வது ஒரு மாதிரி மனதுக்கு கஷ்டமாக இருந்தது… அதில் அவன் முகம் கவலையில் சோம்பியிருக்க


“டேய்… என் தம்பி என்னை மாதிரி இல்லை… தைரியமானவன்… கெத்தானவன்னு நான் பெருமையா இருந்தால் என்ன இது” ரிஷி அவன் கண்களைத் துடைத்தபடி சிரிக்க…


“நான் உன்கூட சேர்ந்து இருந்தது இல்லண்ணா… அதுக்கு அதிர்ஷ்டமும் இல்லை… ஆனால் நீதான் என் குரு… உன்கிட்ட இருந்துதான்… நீ என்கிட்ட உன்னைப் பற்றி சொல்லி… அது மாதிரிலாம் இருக்கக் கூடாதுன்னு சொல்லி சொல்லி என்னை வளர்த்து விட்ருக்க அண்ணா… எனக்குனு அம்மா அப்பா இல்லைனாலும்… அனாதைனு தெரிந்தும்.. நீ எனக்காக இருக்கேன்ற அந்த ஒரு நம்பிக்கை நீ கொடுத்தேல்ல.. அதுதாண்ணா என்னோட தைரியம்… திமிர் எல்லாம்… நமக்காக உண்மையா ஒருத்தர் ஒரே ஒருத்தர் இருக்கார்னா அது கொடுக்கும் எல்லாமேண்ணா… இந்த உலகத்தை ஜெயிக்கலாம்…”


ஹர்ஷித்தின் இந்த தைரியம்… தன்னம்பின்ன பேச்சுதான் ரிஷிக்கு மிகவும் பிடிக்கும்.. அதிக் இன்னும் பெரிதாக புன்னகைத்தவனாக…


“டேய் டேய் பெரிய மனுசன் மாதிரி பேசினது… இருந்ததெல்லாம் போதும்… இன்னொரு நம்பிக்கையா ஃபேபியோன்னு ஒருத்தர் இந்த உலகத்துல இன்னொரு மூலைல உனக்காக காத்துட்டு இருக்கிறார்… அவர் உனக்கு இந்த உலகத்தை ஜெயிக்கிற வித்தையெல்லாம் கத்துதருவார்… உன் அண்ணனுக்கு அதுக்கெல்லாம் திறமை கிடையாது...” அவன் கேசத்தைக் கலைத்தபடி ரிஷி இலகுவாக பேசிக் கொண்டிருக்க


“அண்ணா… நான் ஒண்ணு சொல்லவா… இந்த உலகத்திலேயே ரொம்ப ரொம்ப லக்கியான… நான் பொறாமைப் பட்ற ஆள் யார் தெரியுமா” ஹர்ஷித் கேட்க


“அடேங்கப்பா… என்ன இவ்ளோ பீடிகை… சொல்லு யாரு” ரிஷி அவனை வம்பிழுக்க


“வேற யாரு… கண்மணி அண்ணிதான்… உங்கள மாதிரி ஒருத்தவங்க கிடைக்க கொடுத்து வச்சுருக்கனும்… ” எனும் போதே வேகமாக அவன் வாயை மூடியவன்… சுற்றும் முற்றும் பார்த்தபடி…



“டேய்… சும்மா இருங்கடா… இந்த உலகத்திலேயே என்னையும் பெருசா பேசி மதிக்கிறதுனு ரெண்டே ரெண்டு பேர்தான்… ஒருத்தி ஆஸ்திரேலியால இருக்கா… இன்னொருத்தன் நீ…. கார்லாவாவது ஆஸ்திரேலியாலதான் இந்த மாதிரி வசனம் பேசினா…. ஆனா நீ இந்தியால சென்னைல பேசுற… எவனாச்சும் கேட்டான்… அதுவும் கண்மணி கொடுத்து வச்சுருக்கனும்னு நீ சொன்னது தெரிஞ்சது… கூட்டமா வந்து அடிக்கப் போறாங்க… நான் என்னமோ ஆள் செட் பண்ணி பேச வச்ச மாதிரியே பேசுறியேடா… தலைவி பெரிய இடம்டா…” ரிஷி போலியாகப் பயந்தவன் போல… அவனிடம் கிண்டல் பாவனையில் பேசினாலும்…. அவன் கண்களில் அவன் கண்மணியின்பெருமிதம் பொங்கி வழியத்தான் செய்தது… காலையில் அவளிடம் கிடைத்த அவமானப் பரிசெல்லாம் ஒரு மண்ணுக்கு கூட அவனை இம்சிக்க வில்லை… கால் தூசு மண்ணாக கடந்தும் வந்து விட்டான்…


ஹர்ஷித்துடன் இயல்பாகப் பேசிக் கொண்டிருந்தவன்… அதன் பின் பல அறிவுரைகள் சொல்ல ஆரம்பித்திருக்க… ஹர்ஷித்துக் கேட்டுக் கொண்டிருக்க… அப்போது ரிஷியின் அலைபேசியில் அழைப்பு வர… எடுத்துப் பார்த்தவன்… ஹர்ஷித்தை தீவிரமாக நோக்கினான்…


“ஹர்ஷித்… நான் என்ன சொன்னாலும் கேட்பியா” ரிஷி தயங்கிக் கேட்க


“சொல்லுங்கண்ணா” ஹர்ஷித்தும் இயல்பாகக் கேட்ட போதே…


“யமுனா வந்திருக்கா… உன்கூட பேசனுமாம்…” ரிஷி சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஹர்ஷித்தின் உடல் விறைக்க ஆரம்பித்திருக்க… அவனது முகமோ பாறை போல இறுகியிருந்தது.


“நான் யாரையும் பார்க்க விரும்பலை… எனக்கு யாரும் தேவையில்ல…. யார் அவங்க எனக்கு… அவங்க எதுக்கு என்னைப் பார்க்கனும்… எனக்கு யார்கூடவும் அட்டாச்டா இருக்க விருப்பம் இல்லை… சொன்னால் யாரும் புரிஞ்சுக்க மாட்டாங்களா“ அவன் குரல் உயர்ந்திருக்க… ஏர்போர்ட் என்று கூட அவன் பார்க்க வில்லை


“டேய்… எதுக்குடா கத்துற…” என ரிஷி, ஹர்ஷித்தை அடக்கியவனாக…


“பாவம்டா அந்தப் பொண்ணு… அவ அப்பா பண்ணின பாவத்துக்கு அவ என்ன பண்ணுவா… மேரேஜ் ஆகப் போகுதுடா… ஏற்கனவே நான் வேற அவ அப்பா பண்ணின தப்புக்கு அவளை பலிகடா ஆக்கி அவ மனசைக் காயப்படுத்திட்டேன்…. நீயும் பண்ணாத… நான் சொன்னால் கேளுடா… ரொம்ப நல்ல பொண்ணுடா… உன்னை அவ, அப்பாவோட பையனா அவ பார்க்கலை… அவளோட தம்பியா பார்க்கிறா… ஏண்டா அவளை அவாய்ட் பண்ணிட்டே இருக்க… ப்ளீஸ்டா ஒரு தடவை… பேசிட்டு போடா… இவ்ளோ நாள் உன்னை வற்புறுத்தி இருக்கேனா… கல்யாண ஆகப் போகுதுடா… நீ போறேன்னு ஃபீல் பண்ணிட்டு இருக்காடா… அட்லீஸ்ட் உன் கூடப் பேசினால் கொஞ்சமாவது சந்தோசப்படுவாதானே” ரிஷி கொஞ்சம் கெஞ்சல் கொஞ்சம் மிரட்டலுடன் அவனிடம் கேட்க


ஹர்ஷித் ரிஷியை முறைத்தபடியே அமைதியாக நிற்க


“உண்மையைச் சொல்லவா… நீ அப்படியே உங்க அண்ணியோட காப்பி… உங்க ரெண்டு பேருக்கும் சின்ன வயசுல கிடைத்த அனுபவம் இந்த அளவுக்கு உங்களை மாத்திருக்குமோ தெரியலை…” என்றபடியே


“வரச் சொல்லவா… ப்ளீஸ்…ப்ளீஸ் .. எனக்காக” ரிஷி கெஞ்சலைக் கூட கண் சிமிட்டி அழகாகக் கேட்க…


“நீ பேசியே மயக்கியிருவ அண்ணா…” என்றவன் நேரடியாகச் சொல்லாமல் மறைமுகமாக சொல்லி இருக்க… ரிஷி அவனைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டான்…


சற்று முன் தன்னை அலைபேசியில் அழைத்த பார்த்திபனுக்கு ரிஷி மீண்டும் அழைக்க… அடுத்த சில நிமிடங்களில் பார்த்திபனும் யமுனாவும் அங்கு அவர்கள் முன்னால் நின்றிருக்க…


யமுனா கண்களில் கண்ணீருடன் ஹர்ஷித்தைப் பார்த்தபடி


“நீ என் அப்பா கூட இருக்க வேண்டாம்… எங்க கூட இருக்கலாமே ஹர்ஷித்… பார்த்திபன் உன்னைப் பார்த்துப்பாரு..” என ஹர்ஷித்தின் கைகளைப் பிடிக்க…


அவனோ அவளிடமிருந்து தள்ளி வந்தவனாக


“அண்ணா சொன்னாரு… அதுனால உங்களை வரச் சொல்லி சம்மதம் சொன்னேன்… அவ்ளோதான்… ”


என்றவன்…


“தப்பா எடுத்துக்காதீங்க… உங்க அப்பாக்கு என்னை மாதிரி இன்னும் எத்தனை பேரோ… அத்தனை பேரையும் தம்பியா தத்தெடுக்க தயாரா என்ன… இதெல்லாம் தேவையில்லாத பாசம்… சரியா… செண்டிமெண்டல் இடியட்டா இருக்காதீங்க… ” என்றவன் … பின் என்ன நினைத்தானோ தெரியவில்லை


“திருமண வாழ்த்துக்கள்…” இருவருக்கும் தன் திருமண வாழ்த்துக்களை முகமலர்ச்சியுடன் சொல்ல…


ரிஷி அவன் காதில் ஏதோ சொல்ல… ரிஷியை முறைத்தான் தான்… ஆனாலும் ரிஷி கண்களாலேயே தன் பிடிவாதத்தைக் காட்ட


“திருமண வாழ்த்துக்கள் அக்கா-மாமா” ஹர்ஷித் உறவு முறையோடு சொல்லி முடிக்க…



யமுனா முகத்தில் அத்தனை சந்தோசம்… அதைப் பார்த்த பார்த்திபனுக்கோ தன்னவளின் முகத்தில் இருந்த ஆனந்தக் கண்ணீரில் இவன் முகம் மலர்ந்திருக்க…


அதே நேரம் ஹர்ஷித்தின் விமானம் வந்ததிற்கான அறிவிப்பும் வந்திருக்க…


“அண்ணா… ஒரு ஹக்” ஹர்ஷித் வேகமாகரிஷியை கட்டிக் கொள்ள… ரிஷியும் அவனை ஆரத்தழுவி இருந்தான்


“ரிஷிண்ணா… நீ எப்போதுமே என் அண்ணாதான்… என் மேல உனக்கு மட்டும்தான் முழு உரிமை… அதை மட்டும் இங்க யாராலும் மாற்ற முடியாது…” ஹர்ஷித் சத்தமாகச் சொல்லியபடி… அவனை விட்டுக் கடக்க.. ரிஷியும் சந்தோசத்துடன் கட்டை விரலை உயர்த்திக் காட்ட… யமுனாவும் பார்த்திபனும் ரிஷி-ஹர்ஷித் இருவரையும் புன்னகையுடன் பார்த்திருந்தனர்…


ஹர்ஷித் சென்ற பின்… ரிஷி இப்போது யமுனாவைப் பார்க்காமல்…. பார்த்திபனை மட்டும் பார்த்தவனாக


“அப்புறம் மாப்பிள்ளை சார் சந்தோஷமா… எங்க வீட்டுப் பொண்ணுக்கு என்னால வாங்கிக் கொடுக்க முடிந்த கிஃப்ட்… ’ஹர்ஷித்தோட வாழ்த்துக்கள்’தான்… யமுனா சிஸ்டருக்கு பிடிச்சிருக்கும்னு நினைக்கிறேன்” என இப்போது யமுனாவைப் பார்க்க


யமுனா கண்களில் மீண்டும் நீர் வந்திருக்க… வேகமாக அவன் முன் வந்து நின்றவள்… அவன் கைகளைப் பிடித்துக் கொண்டபடி


“சாரி அண்ணா… மறக்கணும்னுதான் நினைக்கிறேன்… கோபம் கண்ணை மறச்சுருதுண்ணா…”


“ஏய் லூசு… உன் கோபம் நியாயமானதுதான்…. உன் அண்ணா மேல கோபப்பட்றது உன் உரிமை… தங்கச்சியோட கோபத்தை எப்பாடு பட்டாவது தீர்த்து வைக்கிறது அண்ணனோட கடமை…” என்றபோதே… யமுனா அவன் தோளில் சாய


“சாரி யமுனா… முதன் முதலா உன்கிட்ட கேட்கிறேன்… என்னை மன்னிப்பியா” ரிஷி ஈரம் ஓடிய கண்களோடு யமுனாவைப் பார்த்துக் கேட்க


”உண்மையிலேயே ரித்விகாவும்… ரிதன்யாவும் ரொம்ப கொடுத்து வச்சவங்க அண்ணா…” யமுனா நெகிழ்ச்சியுடன் சொல்ல… அவள் வார்த்தைகளே அவனை மன்னித்து விட்டதற்கான பதிலைக் கொடுக்க… ரிஷியின் மனமும் சமாதானம் அடைந்தது


“வீட்டம்மாவைத் தவிர… மற்ற அனைவரிடமும் பாராட்டுகளும் நெகிழ்ச்சியான தருணங்களும் கிடைக்கும்னு இன்னைக்கு என் ராசில இருக்குமோ எனக்கு… வீட்ல போய்ப் பார்க்கனும்… “ எனத் தனக்குள் நினைத்துக் கொண்ட போதே… அடுத்த நிமிடமே


“அடப்பாவிங்களா… நம்மளையும் இந்த ராசி… ஜோசியம்லாம் பார்க்க வச்சுருவாங்க போல” ரிஷி இப்போது இயல்புக்கு வந்து தலையைச் சிலுப்பியபடியே.. தன்னையேப் பார்த்துக் கொண்டிருந்த இருவரையும் பார்த்து இப்போது வேறு வழியின்றி அசட்டுச் சிரிப்பை சிரித்து வைக்க… அதில் அழகாக கன்னக் குழி விழ….


பார்த்திபன் அவனைப் பார்த்து…


“ரிஷி… நீங்க இப்படி சிரிச்சு ஒரு தடவை கூடப் பார்த்ததே இல்லை… சம்திங்க் டிஃப்ரெண்ட்…” பார்த்திபன் அவனைப் பார்த்து சொல்ல…


“இனி அடிக்கடி பார்ப்பீங்க… அதுக்கு நான் கியாரண்டி….” எனப் பார்த்திபனிடம் அதே புன்னகை முகம் மாறாமல் சொன்னவன்… யமுனாவிடம் திரும்பியவனாக


“யமுனா… நான் உன் அண்ணன் தான்… பார்த்திபன் என் மச்சான் தான்… அதுக்காக அண்ணாவை மேரேஜுக்கு முந்தின நாளே வரச்சொல்லிறாதம்மா… என்னதான் மச்சான்… தங்கை இவங்களைப் பிடித்தாலும்… திருமூர்த்தி என்னோட எதிரிதான்… அது என்னைக்குமே ஒட்டாதுதான்… ஆனால் அதுக்காக மேரேஜ்க்கு வராமல் இருக்க மாட்டேன்…. அம்பகம் ட்ரஸ்டோட ஓனரம்மா கூட கண்டிப்பா வருவேன்” என சொன்ன போதே பார்த்திபன் அப்போதுதான் ஞாபகம் வந்தவனாக…


”ரிஷி… யமுனாவை அவங்க வீட்ல விட்றீங்களா…. எங்க லாயர் உடனே வரச் சொன்னார்… உங்க வீட்டுக்காரம்மாவோட விசயமாத்தான்… இந்த மந்த்ல நாராயணன் அவரோட எல்லா பொறுப்பையும் கண்மணி பெயருக்கு மாற்றி விட பேசிட்டு இருந்தார்…. அது விசயமா இருக்கலாம்… உங்களுக்குத் தெரியாமலா இருக்கும்… யமுனா ஏர்போர்ட்டுக்கு வர்றேன்னு அடம்பிடிச்சதால… வேறு வழி இல்லாமல் கூட்டிட்டு வந்துட்டேன்… ப்ளீஸ் தப்பா எடுத்துக்காதீங்க… இவள வீட்ல விட்டுட்டு போயிருங்க… இப்போதே லேட் ஆகிருச்சு… நான் கிளம்புறேன்… பை பை…” என்றபடி யமுனாவை ரிஷியின் பொறுப்பில் விட்டு… வேகவேகமாகக் கிளம்பிவிட


ரிஷியும் யமுனாவும் மட்டுமே அங்கு…


“என்கிட்ட கார்லாம் கிடையாது… பைக் தான்… நம்பி வருவீங்களா தங்கச்சி…” ரிஷி கிண்டலாக அவளை ஓட்ட…


மறுக்க அவள் என்ன, அவனை பழி வாங்க நினைத்த… அவன் தவறுகளை மன்னிக்காத பழைய யமுனாவா என்ன… சந்தோசமாகத் தலை ஆட்டாமல் என்ன செய்வாள்…


ரிஷியும் யமுனாவை வீட்டில் அவள் வீட்டில் விட்டுவிட்டு… தன் கம்பெனிக்குச் சென்றிருந்தான்…


---


ஆஸ்திரேலியா சென்றிருந்தது… ஹர்ஷித்தை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப அலைந்தது… சொந்த ஊருக்கு சென்றிருந்தது… என கடந்த சில நாட்களாக சென்னையில் இல்லாதது… இங்கு பல வேலைகள்… பல சந்திப்புகள் என சேர்ந்து ஒன்றாக குவிந்திருக்க ரிஷியை அவனது தொழில் தற்காலிகமாக உள்ளிழுத்துக் கொண்டது…


தினகரும் வேலனும் அவனுக்கு அழைக்காதவரை… அலுவலகப்பணிகளில் மூழ்கி இருந்திருப்பான்தான்… சோம்பல் முறித்தபடியே… தினகர் அழைப்பை எடுக்க…


“அண்ணாத்த… முதலாளிக்கு முடியல அண்ணாத்த… இங்க பக்கத்தில ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போய்ட்டு வந்துட்டோம்… இப்போ நல்லா இருக்கிறார்… அவர் உங்க கிட்ட சொல்லக் கூடாதுன்னுதான் சொன்னார்… ஆனால் நீ திட்டுவியே…. அதுதான் சொல்லிட்டோம்… வீட்டுக்கு வர்றியா” என அவனிடம் விசயத்தைச் சொல்ல...


ரிஷி பதிலேதும் பேசாமல் இருந்த போதே


”தல… மணி அக்கா ஏன் போன் எடுக்க மாட்டேங்குது.. உங்களுக்கு ட்ரை பண்றதுக்கு முன்னாடி அக்காக்குத்தான் ட்ரை பண்ணினோம்… எடுக்கவே இல்லை…” வேலன் அலுத்தபடி சொல்ல…


“ஸ்கூல் டைம்டா… அவ எப்படி எடுப்பா” ரிஷி சமாளித்து வைக்க


“முதலாளிகிட்ட மட்டும் பேசினாங்க… அதுக்கப்புறம் தான் முதலாளிக்கு முடியல” தினகர் விடாமல் ரிஷியிடம் மீண்டும் கண்மணியைப் பற்றி சொல்ல…


“சரிடா வைடா… இப்போ அவ உன் போனை எடுக்கலைன்றதுதான் பிரச்சனையா… அவன் அவன் இருக்கிற பிரச்சனைல” என சுள்ளென்று விழ… அதற்கு மேல் தினகர் அழைப்பை தொடர்வானா என்ன… வைத்துவிட்டான் தினகர்…


“என் போனையே எடுக்க மாட்றாளாம்… இதுல இவர் போனை எடுக்கலைனு என்கிட்ட பஞ்சாயத்து வைக்கிறாரு…” கடுப்பாக ரிஷி அலைபேசியைத் தூக்கிப் போட்டவன் அங்கிருந்து கிளம்பியவனாக… ’கண்மணி’ இல்லத்தையும் அடைந்தான்


---

’கண்மணி’ இல்லம்…


”மாமா… எத்தனை தடவை சொன்னாலும் கேட்க மாட்டீங்களா… என்னாலதான் எல்லாம்… எனக்குப் புரியுது… அதுக்காக அப்டியே அவளை விட்ருவேனா என்ன… எங்க போயிருக்கா…. தாத்தா பாட்டி வீட்டுக்குத்தானே… இதுக்குப் போய் இவ்ளோ பண்றீங்க… என்னாலதானேன்னு எனக்கு கஷ்டமா கில்ட்டியா ஃபீல் பண்றேன் மாமா…” என நட்ராஜ் அருகில் அமர…


நட்ராஜ் அவன் கைகளைப் பிடித்துக் கொண்டவராக… அவனையே பார்த்தபடி இருந்தவர்…


“அப்படில்லாம் இல்லைப்பா… என் கவலை என் பொண்ணை நினச்சு இல்லை ரிஷி….” என்றவரின் கண்கள் கலங்கிவிட்டிருக்க


“என்னமோ தப்பா நடக்கிற மாதிரி ஃபீல் எனக்கு… மணி பேசுறது… பண்றது எல்லாம் தப்பு தப்பா இருக்கு… பயமா இருக்கு… அவ மனசுல என்னமோ இருக்கு… ஆனால் அவ சொல்ல மாட்டாளே… இது நாள் வரை நான் சமாளிச்சேன்… இப்போ அது உன்னையும் பாதிக்கப் போகுதோ… அவ அந்த மாதிரி பேசுறாப்பா…”


தன் கைகளைப் பிடித்திருந்த அவரது நடுங்கும் கரத்தை அழுத்தமாகப் பற்றி அவரைச் சமாதானப்படுத்தியவன்


“நான் பார்த்துக்கிறேன்… மாமா.. அவ ரொம்பத் தெளிவான பொண்ணுமாமா… எது பண்ணினாலும் காரணம் இருக்கும்” என்ற போதே அவன் குரல் கம்ம ஆரம்பிக்க… நட்ராஜ் முன் காட்டக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காக… வேறு திசை நோக்கி பார்த்தபடி சில நிமிடம் இருந்தவன்…


“ஆனால் ஒண்ணு மாமா… அவ சொன்னாளே… ஆயிரம் காரணம்.. அதெல்லாம் என்னன்னு தெரியாது… ஒரு விசயத்துல எனக்கும் அவளுக்கும் எப்போதும் பிரச்சனைதான்.. நான் பேசித் தீர்த்திருக்கனும்… விட்டுட்டேன்” அவனது கைகளின் அழுத்தம் அதிகரிக்க… நட்ராஜ் அவனைத் திகிலாகப் பார்க்க


“ஆமாம் மாமா…. உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை… விக்கியை அவளுக்குப் பிடிக்காது மாமா… ரெண்டு பேருக்குமே செட் ஆகாது… அவங்க ரெண்டு பேர் விசயத்தில அஜாக்கிரதையா இருந்துட்டேன் மாமா…”


“விக்கி வந்த அன்னைக்கு அவ கை அடிப்பட்டப்போ உன் கூட பேசாமல் இருந்தாளே… அதைச் சொல்றியா” நட்ராஜ் கேட்க


“அதுவும்… ” என்றபடி விக்கி-கண்மணி இருவரின் ஆரம்பகால கட்ட பிரச்சனைகளை நட்ராஜுக்கு விவரித்து முடித்தவனாக


“அவங்க மீட் பண்ண நாள்ள இருந்தே அவனுக்கு கண்மணியை பிடிக்கலை… என்னமோ அப்படி ஆகிருச்சு… அதேபோல நாம ஆஸ்திரேலியால இருந்தோமே… அப்போ எனக்கும் கண்மணிக்கும் விக்கி சம்பந்தமா பெரிய பிரச்சனை… என் கூட அவளும் பேசலை… நானும் பேசலை… விக்கியை அறஞ்சுட்டா மாமா… ஏன்னு கேட்டது பிரச்சனை… “ என நெற்றியைத் தேய்த்தவன்…


“விக்கியை பற்றி பேசினாலே சண்டை வருதுன்னு ரெண்டு பேருமே அதைப் பேசாமலே விட்டுட்டோம் மாமா… இதெல்லாம் ஒரு பிரச்சனை இல்லைதான்… ஆனால் அவனே எங்க வீட்டு மாப்பிள்ளை ஆனதுல அவளுக்கு பிடிக்கலையோ… “ என்றபடி நட்ராஜைப் பார்த்தவன்


“நான் என்ன மாமா பண்றது… ரிதன்யாவும் விக்கியும் லவ் பண்ணும் போது என் பொண்டாட்டிக்கு உன்னைப் பிடிக்காது… அதுனால என் தங்கச்சியை விட்டு விலகிருன்னு சொல்ல முடியுமா என்ன… அதைத்தான் இவ எதிர்பார்த்தாளா என்னா… அப்படிப்பட்ட குணமுள்ள பொண்ணா கண்மணி… சோ அதுவும் ஒரு காரணமா இருக்க முடியாது… ”


”தலையை வலிக்குது மாமா… ஆனால் பாருங்க… அவளே ரெண்டு நாள்ள வருவா… அது மட்டும் நிச்சயம்… அதுவரைக்கும் மேடம் அவங்க தாத்தா வீட்ல என்ஜாய் பண்ணட்டும்” என இப்போது நம்பிக்கையுடன் புன்னகைக்க… அந்த நம்பிக்கையுடன் கூடிய புன்னகை நட்ராஜையும் தொற்ற…


“சரி தூங்குங்க… நான் அவளைப் போய் பார்த்துட்டு வர்றேன்… என்ன அங்கேயும் என் பொண்டாட்டிக்கிட்ட மாலை மரியாதையுடன் தடபுடலா எனக்கு பாராட்டு மழை நடக்கும்… பரவாயில்லை… அட்லீஸ்ட் பார்த்துட்டாவது வர்றேன்… நாராயணன் தாத்தா, வைதேகிப் பாட்டி கண்டிப்பா ஏதாவது அவளுக்கு அட்வைஸ் பண்ணிருப்பாங்கன்னு நினைக்கிறேன்…” என்றபடியே


“நம்மாளு யார் சொன்னாலும் கேட்க மாட்டாதான்… அவளைத் தப்பு சொல்லக் கூடாது… நீங்க எல்லோரும் அவளை அப்படி வளர்த்து விட்ருக்கீங்க… “ எனும் போதே நட்ராஜ் பரிதாபமாக முகத்தை வைத்திருக்க


“இனி யாரை… என்ன சொல்லி என்ன பிரயோசனம்… இனிமேலா மாற்ற முடியும்… அதைவிடுங்க.. மத்தவங்ககிட்ட இருந்து நாலு வார்த்தை அட்வைஸ் கிடைக்கும் போது அட்லீஸ்ட் யோசிக்கவாவது செய்வாள்ளா… ”


பவித்ராவின் தந்தையை… தன் மருமகன் எப்படி இயல்பாகப் பார்க்கின்றான்… பழகுகின்றான்… நட்ராஜுக்கு அது மட்டுமே இப்போது நிம்மதியைக் கொடுக்க… அது சில நிமிடத்திலேயே பறிபோகப் போகிறது என்பது அறியாமல் உறங்கவும் செய்திருந்தார்…


---


’பவித்ர விகாஸ்…’


வழக்கம் போல ரிஷி அங்கு போனவன்…. வாசலில் உள்ள காவலாளிகளிடம் சிரித்தபடியே… கடந்து போக நினைத்த போதே


“சார்… சார்…” ரிஷி வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டிருக்க


ரிஷியின் புருவம் சுருங்க… ஹெல்மெட்டைக் கழட்டியவனாக… காவலாளி தடுத்து நிறுத்தியதில் வந்த கோபத்தில் முகம் கடுக்க அவர்களைப் பார்க்க


”என்ன.. யார்னு தெரியலையா… எப்போதும் வண்டியை பார்த்தே விடுவீங்க தானே…” என்றபடியே உள்ளே போக முயற்சித்தான்…


”தெரியும் சார்… நீங்க வந்தால் உள்ள விடக் கூடாதுன்னு முதலாளி ஆர்டர் போட்ருக்காரு” எனும் போதே


“உங்க அர்ஜூன் முதலாளி சொன்னாரா… தாத்தாவைக் கூப்பிடு…” ரிஷி அர்ஜூனைத்தான் தவறாக நினைத்தான்…


“சொன்னதே பெரிய ஐயாதா சார்” காவலாளி சொல்ல… ரிஷிக்கு அன்றைய தினத்தின் மிகப்பெரிய அதிர்ச்சியே அதுதான் என்பது போல அவன் கண்கள் உணர்ச்சி வேகத்தில் கொப்பளிக்க


வேகமாக நாராயண குருக்களுக்கு தன் அலைபேசியில் இருந்து அழைக்க… அவரோ எடுக்காமல் இருக்க… இவனோ விடவில்லை… மீண்டும் மீண்டும் அடிக்க… ஒரு கட்டத்தில் அவர் எடுத்தார்


“என்ன ரிஷி…”


“தாத்தா… வாசல்ல நிற்கிறேன்… உ… உள்ள விட மாட்றாங்க… என்ன இது… “ அவன் குரலில் நடுக்கம் பாதி… கோபம் பாதி… எரிச்சல் மீதி என கலவையான பாவனையில் பேச… நாராயணன் இப்போது…


”போனை செக்யூரிட்டிக்கிட கொடு..” என்க


ரிஷியும் நீட்ட…


“அவரை உள்ள விடு… “ என்று நாராயணன் காவலாளிக்கு அனுமதி கொடுத்திருக்க… இப்போது ரிஷி உள்ளே நுழைந்தான்…


நுழைந்த போதே… காலையில் இருந்து கண்மணி கொடுத்த அதிர்ச்சிகளை விட… ஏன் அர்ஜூன் வந்த போது கூட ரிஷி கலக்கம் கொள்ளவில்லை… ஆனால் நாராயண குருக்கள் பேசிய தோரணையில் முதன் முதலாக ஒரு மாற்றம் தெரிய…


இத்தனைக்கும் அவர் அவனிடம் பெரிதாக பேசக் கூட இல்லை… அதிலேயே ரிஷிக்கு வித்தியாசம் தெரியத்தான் செய்தது… எப்போதும் தன் பைக்கை அந்த நடைபாதையில் உரிமையோடு ஒட்டிச் செல்பவனால் இன்று அப்படி முடியவில்லை…


உள்ளே நுழைந்த உடனேயே… பைக்கை அங்கேயே நிறுத்தியபடி…. நடந்து போக ஆரம்பிக்க…


”கண்மணியை பார்க்க விட மாட்டார்களோ… ஒருவேளை தன் மாமனாரைப் போலத் தன்னையும் அவமானப்படுத்தி அனுப்பிவிடுவார்களோ… பவித்ரா அத்தையை சிறை செய்து வைத்திருந்ததை போல… கண்மணியையும் விட மாட்டார்களோ… ” அவன் நடையில் அன்றைய தினத்தில் முதன் முதலாக அவனையும் மீறி தளர்வு வந்திருந்தது…


ரிஷி நினைத்தது போலவே… இடையிலேயே நிறுத்தபட்டிருந்தான்…


“அங்க உங்களை வரச்சொன்னாங்க… இதுக்கு மேல நீங்க போக அனுமதி இல்லை” ரிஷியிடம் சொல்ல… ரிஷி உள்ளுக்குள் கொதித்தாலும்… காட்டிக் கொள்ளாமல்… அங்கு தோட்டத்தில் போடப்பட்டிருந்த இருக்கைகள் நோக்கிச் செல்ல.. கண்களோ அவனையுமறியாமல் அந்த பிரமாண்ட பங்களாவின் உள்ளே தன்னவளை நோக்கி லேசர் பார்வையை செலுத்தியபடி சென்றது வேறு விசயம்..


“உட்காரு ரிஷி” நாராயண குருக்கள் அவர் முன் இருந்த இருக்கையைக் காட்ட… அதில் எல்லாம் அமரவில்லை… இந்த அளவுக்காவது மதிக்கின்றாரே என்ற நிம்மதி ரிஷிக்கு சிறு நிம்மதியைத் தர… அந்த நிம்மதியில்


“தாத்தா… என் இப்படி பண்ணின்னானு தெரியலை… ஒழுங்கான காரணமும் சொல்ல மாட்டேங்கிறா… அவள எங்கூட வரச் சொல்லி நீங்களாவது கேளுங்க…” ரிஷி சட்டென்று எடுத்த எடுப்பிலேயே பேச ஆரம்பித்திருக்க…


நாராயணனோ…


”என் பேத்தி… என்ன முடிவெடுத்தாலும் நான் தலையிட மாட்டேன் ரிஷி… அடுத்தவங்களையும் தலையிட விட மாட்டேன்… உன்னைக் கல்யாணம் பண்ணிட்டு வந்தா… சம்மதம் சொன்னேன்… அர்ஜூன் என்னென்னமோ சொன்னான்… ஆனால் என் பேத்திகிட்ட கேட்டப்போ… அவ சந்தோசமாத்தான் உன்னை மேரேஜ் பண்ணிக்கிட்டேன்னு சொன்னா… அவ்வளவுதான் என்னோட ஆசிர்வாதம் வாழ்த்து மட்டுமல்ல.. அவளுக்கு பிடிச்ச உன்னை என் வாரிசாக்கக் கூட உன்கிட்ட வந்து கேட்டேன்… அர்ஜூனைக் கூட அவ வாழ்க்கைல தலையிட விடலை… எனக்கு என் பேத்தி முக்கியம்… அவ அமைதி முக்கியம்… இப்போ அவளுக்கு நீ தேவையில்லைனு என்கிட்ட சொல்லிட்டா… இவ்ளோ நாள் பழகின உரிமைல சொல்றேன்… அவளை நீ டிஸ்டர்ப் பண்ணாத… ”


ரிஷிக்கு தலை சுற்றியதா… இல்லை உலகம் சுற்றியதா என்று தெரியாத நிலை… கண்மணியைக் கூட அவன் விட்டு விட்டான்…


“இவர் என்ன லூசா… பாசம் இருக்கலாம் இப்படியா கண்ணு மண்ணு தெரியாத பாசம் வைக்கிறது… அவ என்ன செஞ்சாலும் இவர் சரின்னு சொல்லிட்டு நிற்பாராமே” கடுப்போடு அவரைப் பார்த்தவர்


“தாத்தா பெரிய மனுசன் பேசுற மாதிரியா பேசுறீங்க… அவதான் கோவிச்சுட்டு வந்தான்னா… என்ன ஏதுன்னு கேட்டு பிரச்சனையை தீர்த்து வைக்கிறதை விட்டுட்டு… ப்ச்ச்… இதை உங்ககிட்ட எதிர்பார்க்கலை” என்ற போதே


நாராயணன் சிரித்தபடியே எழுந்தவராக…


“இங்க பாரு… இப்போ வரைக்கும் உனக்கு மரியாதை கொடுத்து பேசிட்டு இருக்கேன்னா… ஒரு வேளை என் பேத்தி மறுபடியும் உன்கூட பேச ஆரம்பித்தால்… வாழ ஆரம்பித்தால்… அப்போ உன் முகத்தைப் பார்த்து பேச முடியாதுனுதான்…”


”என் பேத்தி நீ வந்தால் உள்ள விடக் கூடாதுன்னு சொல்லிட்டா… அவ பேச்சுக்கு இங்க அடுத்த வார்த்தை ஏன் அடுத்த எழுத்து கூட நான் பேச மாட்டேன்… நாளைக்கே அவ உன்னைப் பார்க்கனும்னு சொன்னால் உன் கைல கால்ல விழுந்து கூட சமாதானம் பண்ணத் தயாரா இருப்பேன்… சரியா… இப்போ கிளம்பு”


கண்மணியின் மேல் இப்படி பாசப் பைத்தியமாக இருக்கும் அவரைப் பரிதாபமாகப் பார்த்தவன்


“தாத்தா நான் சொல்றதைக் கேளுங்க… என்ன சொல்ல வர்றேன்னு கூட கேட்க நினைக்க மாட்டேங்கறீங்க… சரி விடுங்க… நான் வைதேகி பாட்டிகிட்ட பேசிக்கிறேன்…” என எழுந்தவன் உள்ளே செல்ல முயற்சிக்க…


அடித்த நொடி… ஐந்து பேர் அடங்கிய ஒரு ஆஜானுபாகுவான கூட்டம் வந்து அவன் முன் நின்றிருக்க


“ப்ச்ச்… ” ரிஷி அலுத்தவனாக… அவர்கள் கரங்களைத் தட்டி விட்டவனாக…


தன் கையில் இருந்த அலைபேசியில் இருந்து கண்மணிக்கு அழைக்க… அவள் இப்போது மட்டும் எடுப்பாளா என்னா… ஆனால் அதே நேரம்… அவன் இங்கு வந்திருக்கின்றான்… தோட்டத்தில் இருக்கின்றான் என்பது எல்லாமே அவளுக்குத் தெரியும்… அவனை அவள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறாள் ரிஷி நன்றாகவே உணர்ந்தான்…


”கண்மணி…” தொண்டைச் சவ்வு கிழிய கத்தியவனின் கண்கள் இரத்தச் சிவப்பை கொண்டு வந்திருக்க… அவன் குரல் அந்த மாளிகை எங்கும் எதிரொலிக்க


”நீ பண்றதெல்லாம்… எந்த அளவுக்கு விபரீதமா போய்ட்டு இருக்குனு உனக்கே தெரியும்டி… தெரிஞ்சிருந்தும் கண்ணா மூச்சி ஆடிட்டு இருக்க… ஏய் என்னை விடு… உன் அப்பாவை நினைத்து பாரு… அவர் உன்னை நினைத்து அங்க எந்த நிலைமையில இருக்கார்னு வந்து பாரு… உனக்கே தெரியும் தானே… உன்னை நினைத்து கவலைப்பட்டார்னா அவருக்கு என்ன ஆகும்னு… “


“சரி என் மேல கோபம் தானே… என் கூட இருந்து தண்டனை குடு… சண்டை போடு… இது என்னடி பிடிவாதம்…” ரிஷியின் குரல் தழுதழுக்க


அதே நேரம்… நாராயணனின் பாதுகாவலர்கள் அவனை வெளியே பிடித்து இழுத்து வரப் போக


“விடுங்கடா… நானே போறேன்…” என அவர்களிடமிருந்து திமிறி வெளியே வந்தவன்…


”மூணு நாள் கழித்து வருவேன்… அப்போ நீங்க எங்கூட சண்டைக்கு வரத்தானே போறிங்க… பார்த்துக்கறேன்..”


“ஏய் கண்மணி… நான் பேசுறதை எல்லாம் கேட்டுட்டுத்தானே இருப்ப… உனக்கு டைம் மூணே நாள் தான்.. அதுக்குள்ள அங்க வந்து சேரலை… வருவ… வர வைப்பேன்… இப்போ போறேன்… உன்னைத் தொந்திரவு பண்ணலை….” என்றவன்… குரல் படிப்படியாக குறைந்திருக்க… வாசல் நோக்கி திரும்பி நடந்தான்….


வெளிவாயிலை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்த போதே… அர்ஜூனின் காரும் வந்திருக்க… ரிஷி ஓரமாக ஒதுங்கி நடந்த போதே… அர்ஜூனோ வேண்டுமென்றே… அவன் முன் போய் காரை நிறுத்தி இருக்க… ரிஷி கடுப்பான பார்வையோடு பார்த்தபடியே காரை விட்டு கடந்து செல்ல நினைக்கும் போதே…


அர்ஜூன் அவன் வழியை அடைத்தான்… தன் கார்க்கதவை வைத்து… இப்போது காரை விட்டு இறங்கியவன்… ரிஷியைப் பார்த்து விட்டு… தங்கள் பங்களாவையும் ஒரு அர்த்தப் பார்வை பார்த்தவனாக… நக்கலாக புன்னகைத்தவன்…


“போட்டு வைத்த காதல் திட்டம்

ஓகே கண்மணி…”

”ஒஹோ காதலா… ஐ”


என பாடிக் கொண்டிருந்த அர்ஜூனின் குரல் வளையை ரிஷி இப்போது பிடித்திருக்க….


“அர்ஜூன் வேலை சக்ஸஸ்…”


என அர்ஜூன் அப்போதும் விடாமல் பாடி முடித்தவனாக… ரிஷியின் கைகளை எடுத்து விட்டிருக்க


”ச்சீ.. அசிங்கமா இல்லை உனக்கு…” ரிஷி கடுப்புடன் கேட்க


“தம்பி… அன்னைக்கு உனக்கு அசிங்கமாயில்லையே… என் காதலிய மேரேஜ் பண்ணிக்க… இப்போ மட்டும் எனக்கு என்ன அசிங்கம்… வலிக்குதா உனக்கு… நெஞ்செல்லாம் கொதிக்குதா உனக்கு… இது மாதிரிதானே எனக்கும் இருந்திருக்கும்… அன்னைக்கு நைட் நான் இப்படிதாண்டா அலஞ்சேன்… என்ன சொல்வ என்ன சொல்வ… எனக்கு வயசாயிருச்சுனுதானே… நீ சின்ன வயசுதானே… அதெல்லாம் சமாளிச்சுருவ… நானே பாரு… எப்படி இருக்கேன்” என அர்ஜூன் அவனைத் தள்ளி விட…


“கெளம்பு… கெளம்பு…. போய்… அன்னைக்கு பேசுனியே தகுதி தகுதினு… அது என்ன ஆஸ்திரேலியா ட்ரெண்டிங் ஸ்டாரா… என்ன பண்ற நீ… உன் ஸ்டார் தகுதிக்கு ஏத்த மாதிரி அங்கேயே லேடி ஸ்டாரா பார்த்து மேரேஜ் பண்ணிக்கோ… ” என்றனைப் பார்த்து ரிஷி


“நீ லிமிட் தாண்டி போய்ட்டு இருக்க அர்ஜூன்” எனும் போதே


“ஓ… வெளிநாட்டுப் பொண்ணுலாம் உன் வீட்ல வேலைக்கு சரிப்பட்டு வரமாட்டாங்கள்ள… சரி விடு… இங்கேயே பார்த்துக்கலாம்… மணமகனா நீங்க எந்த மாதிரி பொண்ணை எதிர்பார்க்கிறீங்க சார்….”


ரிஷி… கடுப்பாக அவனை விட்டு கடந்து போக முயற்சிக்க


“உங்க வீட்டுக்கு வேலைக்காரியா வேண்டும்… ஆனா கோடிஸ்வரியா இருக்கனும்… ஊருக்கே திமிரா இருக்கனும்… ஆனால் சார்க்கு அடிமையா இருக்கனும்… அப்புறம்”


வேகமாக ரிஷி கைகளை உயர்த்தி இருக்க…


”என்ன உண்மையைச் சொன்னால் கோபம் வருதா ரிஷிக்கு… கண்மணின்ற பேரை நான் ஒரு காலத்துல சொல்ல மாட்டேன் தான்… அதே போல நீயும் இனி அப்படி ஒரு வார்த்தையை உன் லைஃப்ல இருந்தே தூக்கிரு…. இனி உன் வாய்ல இருந்து அந்தப் பேர் வரவே கூடாது…” என மீண்டும் காரில் ஏறி அமர்ந்தவன்…


ரிஷியை இப்போதும் விடாமல்…


“வரும்போது… ரோட்ல நிறுத்திவச்சுட்டு வந்த உன் பைக் மேல லைட்டா இடிச்சுட்டேன்… அநேகமா நீ அதை உருட்டிட்டுத்தான் போகனும்னு நினைக்கிறேன்… வரட்டா” என சொன்னவன்… வேண்டுமென்றே… தன் காரின் ஆடியோ சிஸ்டத்தை அலற விட்டான்


“இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மணி இன்று யாரடிச்சு விம்முதடி கண்மணி ஒரு வீடு கட்டி வச்சிருந்தேன் கண்மணி அது வெட்ட வெளியாச்சுதடி கண்மணி என்ன ஆனாலும் எண்ணம் மாறாதே உன்ன சேராமல் உள்ளம் வாழாதே”

என அது ஓட ஆரம்பித்திருக்க… வேகமாக அதை நிறுத்தியவன்


”சாரி பாஸ்…. என்னோட பழைய ப்ளே லிஸ்ட்… தப்பான நேரத்தில வந்துருச்சே.. ப்ச்ச் பரவாயில்லை… டெடிகேஷன் டூ ரிஷின்னு வச்சுக்கலாமா” அர்ஜூன் நக்கலாகச் சிரித்தபடியே வண்டியை எடுக்க… ரிஷி அப்படியே நின்றபடியே இருந்தவன் மனதில் கண்மணியின் மேல் மற்ற கோபமெல்லாம் போய்… இப்போது ஒரே கோபம் தான்


“அர்ஜூனை தங்கள் இருவருக்கும் இடையில் கொண்டு வந்து வைத்திருக்கின்றாளே…”


எப்படி வாசல் வந்து சேர்ந்தானோ… பைக்கை எடுத்து கண்மணி இல்லம் வந்து சேர்ந்தானோ… அது அவனுக்கே வெளிச்சம்… வந்தவன் தன் அறைக்குள் வரும் வரை… கலங்கிப் போய்தான் வந்தான்… ஆனால் அந்த அறை அவனுக்கு அவனவளின் காதலை… அவன் மேல் அவள் வைத்திருந்த பாசத்தை எல்லாம் காட்சிகளாக காட்ட ஆரம்பித்திருக்க


“எனக்கு என்ன சொல்றதுனே தெரியலையேடி… ஏன் இப்படி பண்றேனுதான் என்னால் யோசிக்கிறேனே தவிர… நீ என்னை வெறுத்துட்டேன்னு துளி கூட நினைக்க முடியலையே… அப்படி நினைத்தாலாவது எனக்கு கோபம் வரும்… ஆத்திரம் வரும்… ஆனால் அப்படி நினைக்கவே முடியலையே…” என்றபடி… அந்த வெற்றுச் சுவரைப் பார்த்தவன்… அடுத்த நொடி… வேக வேகமாக கீழே இறங்கி கடைத்தெருவுக்குப் போனவன்… மீண்டும் வந்து சேர்ந்த போது….


அவள் மீதான அவனின் காதலின் பிடிவாதம்… பைத்தியக்காரத்தனம் எல்லாம் இதய வடிவங்களாக மாறி இருக்க… ஆம்… அந்த அறை மீண்டும் அவனின் பழைய அறையாக மாறி இருந்தது…


---

இரண்டு நாட்கள் கடந்திருக்க… சொந்த ஊருக்குச் சென்றிருந்த ரிஷியின் குடும்பமும் அன்று பகல் பொழுதில் கிளம்பி சென்னைக்கு இரவு வந்து சேர்வதாக சொல்லி இருந்தனர்…


ரிஷியும் நட்ராஜும் இன்னும் இலட்சுமியிடம் ஏதும் சொல்லவில்லை… ஆனால் இன்று வந்து அவர்கள் கேட்டால் என்ன சொல்வது… ரிஷி முதலில் கவலைப்பட்டாலும்…


“தாத்தா பாட்டி வீட்டுக்கு போய்ட்டு வர்றேன்னு சொன்னா… ஏன் போகக் கூடாதா… இப்படிச் சொல்லி அவர்கள் வாயை அடைத்து விடலாம்… ஆனால் எத்தனை நாள் என்று யோசித்த போதே… அவன் மனசாட்சி அவனுக்கு எடுத்துக் கொடுத்தது


“டேய் மூணு நாள் அவளுக்கு டைம் கொடுத்திருக்க… ஞாபகம் இருக்கா என்ன…” என அவனிடம் எச்சரிக்கை செய்தது


ரிஷி தன் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என யோசிக்க முடியாமல் மீண்டும் மீண்டும் தடுமாறினாலும்… கண்மணியின் காதல் மட்டுமே அவனை நிலைப்படுத்தி… அவனைத் தெளியவும் வைத்தது


இப்படி அவன் இருக்க… அன்றைய தினத்தின் மதிய வேளையில் பார்த்திபன் அவனை அழைத்திருந்தான்…


அவனை அழைத்த பார்த்திபனின் குரலில் பதட்டம் மட்டுமே


“ரிஷி… உங்களுக்கும் கண்மணிக்கும் ஏதாவது பிரச்சனையா….” ஹலோ கூட சொல்லாமல்… எடுத்த எடுப்பிலேயே பார்த்திபன் கேட்க


ரிஷியோ..


“அப்படிலாம் இல்லையே… ஏன் என்னாச்சு” ரிஷி பார்த்திபனிடமும் மறைத்துப் பேச


“ப்ச்ச்… ரிஷி… அப்போ ஏன் அவங்க அர்ஜூன் கிட்ட ’யு எஸ்’ போறதைப் பற்றி பேசுனாங்க… அது கூட பராவாயில்லை… அவங்க போற வரை யாருக்குமே தெரியக் கூடாதுன்னு… முக்கியமா உங்களுக்கு தெரியக் கூடாதுன்னு சொன்னாங்களே”


ரிஷியின் கைகள் அலைபேசியை இறுகப் பிடித்திருக்க…


”அவங்க தாத்தா வீட்டுக்கு போனிங்களா” ரிஷி ஒன்றுமே தெரியாமல்… புரியாமல் கேட்க… அவன் குரலிலும் பதற்றம் வந்திருந்ததுதான்… இருந்தும் பேசிக் கொண்டிருந்தான்


”ரிஷி… ஹோட்டெல் ’ஹாலிடே சீசன்’ ல இன்னைக்கு போர்ட் மீட்டிங் நடந்தது… நீங்க அங்க இல்லாதபோதே ஏதோ பிரச்சனைனு நான் கெஸ் பண்ணேன்….”


ரிஷி அடுத்து ஏதும் அவனைப் பேச விடவில்லை…


“இப்போ கண்மணி அங்க இருக்காளா…. வந்தால் நான் பார்க்க முடியுமா…” ரிஷி பேசியபடியே…. வேக வேகமாக வெளியே வர


“ஹான்… இன்னும் அரை மணி நேரம் இருப்பாங்க… நீங்க வந்தால் பார்க்கலாம்… எங்க இருக்கீங்க… வந்துற முடியுமா…” பார்த்தி கேட்டபோதே அவனிடம் அடுத்து பதில் எல்லாம் சொல்லவில்லை… அவன் பைக்கின் வேகம்தான் அவனின் பதிலைச் சொன்னது


கண்மணியைச் சந்திப்பானா ரிஷி…. ???? காத்திருப்போம்….


/*

எவ்வாறு கண்ணிரெண்டில் கலந்து போனேன் அடி

எவ்வாறு மடியோடு தொலைந்து போனேன்

இவ்வாறு தனிமையில் பேசிக்கொண்டேன் என்

இரவினைக் கவிதையாய் மொழிபெயர்த்தேன்


மேகங்கள் என்னைத் தொட்டு போனதுண்டு

சில மின்னல்கள் என்னை உரசி போனதுண்டு


மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு

மோகனமே உன்னைப் போல என்னை யாரும்


மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை

ஆக மொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல

எரி அமிலத்தை வீசியவர் எவருமில்லை */

1,644 views0 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின் புதிய இல்லத்துக்கான முதல் கல்லை அடிநாட்டினாள்… அதன் பின் பள்ளி

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை அலைகழித்திருக்க… மருது ’மணி’ என்று தானே அழைப்பான் யோசித்தாலும்….

கண்மணி... என் கண்ணின் மணி- 94-3

அத்தியாயம் 94-3 சில வாரங்களுக்குப் பிறகு… வீட்டில் கண்மணி மட்டுமே இருந்தாள்… சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க… மணி 11 க்கும் மேலாக ஆகியிருக்க… நட்ராஜுக்காகவும் மருதுவுக்காகவும் காத்திருந்தாள் கண்மணி…. இப்

© 2020 by PraveenaNovels
bottom of page