top of page
Writer's picturePraveena Vijay

கண்மணி... என் கண்ணின் மணி-78-2

அத்தியாயம் 78-2


/*கல்யாணம் என்பது பூர்வ பந்தம்

உடலோடுயிர் குடியேறிட வாழும் சொந்தம்

சம்சாரம் என்பது ஆதி அந்தம்

ஒன்றாகிடும் உறவாடிடும் அன்பால் என்றும்

ஏழேழு ஜன்மமே மணமாலை பந்தமே

ஆயிரம் காலமே வாழுமே!


வெளிச்சமாகும் வீடு பெண் விளக்கேற்றினால்

வெற்றியாகும் வாழ்வு பெண் வழிகாட்டினால்

விலகி போகும் மோகம் பெண் விரல் தீண்டினால்

தெய்வம் கூட இளகும் பெண் வரம் வேண்டினால்

இங்கு ஆணின் பின்பலம் என்றும் ஆகும் பெண்பலம்

நீ ஏது நான் ஏது இங்கே? நம்மையெல்லாம் சுமந்தவள் யாரடா*/


ஒரே நாளில் அடுத்தடுத்த சில மணி நேர இடைவெளியில்… மருத்துவமனை வாசம்… முதலில் கண்மணி… இப்போது ரிஷி… கண்மணிக்காவது கையில் அரிவாள் வெட்டு… ஆனால் ரிஷிக்கு அப்படி இல்லையே … விடையறியா கேள்வியோடு… என்ன ஆனது … அவர்களால் அனுமானிக்க முடியாத நிலை ரிஷியின் நிலையாக இருக்க… விக்கிக்கு அவனையுமறியாமல் பதற்றம் அதிகரிக்க… எப்படியோ தன் நண்பனை மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்து விட்டான்…


மருத்துவமனைக்கு வந்த போது கூட ரிஷிக்கு மயக்கம் தெளியவில்லை…. உடனடியாக தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு…. மருத்துவர்கள் அவனுக்கு சிகிச்சை அளிக்க ஆரம்பிக்க… கண்மணியும் விக்கியும் அந்த அறைக்கு வெளியே காத்திருக்க ஆரம்பித்திருந்தனர்…


வெளியேப் போடப்பட்டிருந்த இருக்கைகளில் ஒன்றில் விக்கி அமர்ந்திருக்க… கண்மணியோ… உட்காரவில்லை…


தொய்ந்த பாவனையோடு… ஒரு வித அலைப்புறுதலோடு… நின்று கொண்டேதான் இருந்தாள்…


கண்மணியின் முகமெங்கும் அப்படி ஒரு சிவப்பு..… வரும் வழி எங்கும்… அவளது கண்களில் இருந்து கன்னங்களில் வழிந்த நீரைத் துடைத்து துடைத்தே அவள் முகம் அப்படி ஆகியிருந்ததோ என்னவோ… இதோ இப்போதும் அவள் கண்கள் அழுகையை நிறுத்தவில்லை… கன்னங்களில் தாரை தாரையாக நீர் வடிந்து கொண்டே இருக்க அதைத் துடைத்தபடியே… ரிஷி அனுமதிக்கப்பட்டிருந்த அறையை நோக்கியே பார்வையை வைத்திருக்க..


விக்கிக்கோ அவளிடம் என்ன பேசுவது என்றே புரியவில்லை… காரில் வந்த் போது அவள் பெருங்குரலெடுத்தெல்லாம் அழவில்லை… கண்களில் மட்டுமே கண்ணீர் கரை புரள… அதைத் துடைத்தபடியே… அதே நேரம் ரிஷியிடம் என்னென்னவோ ஏதேதோ அவனிடம் பேசியபடியே… அவனை எழுப்ப முயற்சித்துக் கொண்டே வர… அவள் குரல் கேட்டாலாவது ரிஷி விழி திறப்பான் என்று விக்கி எதிர்பார்க்க… ரிஷி மயக்க நிலையில் இருந்து மீளவே இல்லை… கண்மணி அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல்… அவனை எழுப்ப முயற்ச்சித்துக் கொண்டே வர… எதுவுமே முடியாமல் போக…. மருத்துவமனை வந்து ரிஷி அறைக்குள் சென்ற போதோ… அவன் நிலை தாங்க முடியாமல்… தன்… உணர்வுகள் எல்லாம் கடந்தவளாக… வெடித்து விட்டாள் அவளையும் மீறி… அவள் இயல்பையும் மீறி…


இவனுக்கோ எப்படி சமாதானப்படுத்துவது எனப் புரியவே இல்லை… தான்தான் இதற்கெல்லாம் காரணமோ… விக்கிக்கு குற்ற உணர்வு இன்னும் அதிகம் ஆக… அதில் அவனும் மன அழுத்தத்தோடு இருக்க… விக்கியின் அலைபேசிக்கோ… அடுத்தடுத்து அழைப்புகள் வந்து கொண்டே இருந்தன…


”யாருக்கு என்ன சொல்வது…“ பதில் தெரியாமல் அனைத்து அழைப்புகளையும் எடுக்காமல் விட்டவன்… ஒருகட்டத்தில் அலைபேசியை எடுத்தவன்… ரிதன்யாவிற்கு மட்டும் அழைத்து


”ரிது… கண்மணியும் ரிஷியும் இங்கதான் கம்பெனில இருக்காங்க… ஒரு பிரச்சனையும் இல்லை… பேசிட்டு இருக்காங்க… காலையில அங்க வந்துருவாங்க… அங்க எல்லாரையும் தூங்கச் சொல்லு” எனத் பொய்த்தகவல் சொல்ல ஆரம்பித்தான்… ஒரு காலத்தில் ரிதன்யாவிடம் ரிஷியைப் பற்றி எப்படியெல்லாம் சமாளித்திருப்பான்… அது இன்று கை கொடுக்கத்தான் செய்தது… என்ன!!! அன்றிருந்த மனநிலைதான் இன்று இல்லை…


“உண்மைதானே சொல்றீங்க விக்கி… பொய் சொல்லலையே… அண்ணாகிட்ட கொடுங்கறீங்களா… அப்போதான் நான் நம்புவேன் “ அன்றைய ரிதன்யா இன்றும் அப்படியே…


விக்கிக்கு கண்கள் ஈரம் கோர்க்க… சட்டென்று தன்னைக் கட்டுப்படுத்தியவனாக… தன் குரலில் வலுக்கட்டாயமாக இயல்பைக் கொண்டு வந்தவனாக….


“அவங்கள தனியா பேச விட்ருந்தாலே… இவ்ளோ பிரச்சனை வந்திருக்காது போல… நாம எல்லோரும் சேர்ந்துதான் பிரச்சனையை பெருசாக்கிட்டோம்… ரெண்டு பேரும் சமாதானமாகிட்டாங்க… அவன் அவன் பொண்டாட்டியோட பேசிட்டு இருக்கான்னுதானே அவங்களுக்கு ஸ்பேஸ் கொடுத்துட்டு… உன்கிட்ட வந்து பேசிட்டு இருக்கேன்” எனும் போதே


“ப்ச்ச்… அப்படியே மேடம் பாச மழைய பொழிஞ்சுட்டு இருப்பாங்களே… இவங்கதான் அண்னாக்கு எல்லாமேன்ற மாதிரி… எங்க அண்ணாவும் அப்படியே அடங்கிப் போய் இருப்பானே… அத்தனையும் ட்ராமா… பிள்ளையையும் கிள்ளி விட்டு…. தொட்டிலையும் ஆட்டுவா… ” ரிதன்யா படபடக்க..


“ஏய்… “ என விக்கி குரலை உயர்த்தி… அவளைக் கடிய ஆரம்பித்த போதே… ரிஷிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் அவர்களை நோக்கி வர…


”சரி சரி… வைக்கிறேன்… காலைல பேசுறேன்… வீட்டுக்கு வேற கிளம்பனும்… ட்ரைவ் பண்ணனும் ” ஏதேதோ வாய்க்கு வந்ததை உளறிவிவிட்டு வேகமாக அலைபேசியை வைத்தபோதே…… மருத்துவர் அவன் அருகில் வந்திருந்தார்


“பேஷண்டுக்கு நீங்க என்ன வேண்டும்…”


”நான் ஃப்ரெண்ட்… இவங்க அவரோட வைஃப்…” கண்மணியைக் கை காட்ட… கண்மணியைத் திரும்பிப் பார்த்து விட்டு… மீண்டும் விக்கியிடம் திரும்பியவர்…


“உங்க ஃப்ரெண்டுக்கு ஒரு பிரச்சனையுமில்லை… அதிர்ச்சி… அதோட டையர்ட்.. சாப்பிடாதது … அதிகப்படியான உழைப்பு…. அப்நார்மல் ஆக்டிவிட்டி எல்லாம் ஒண்ணா சேர்ந்து… ப்ளட் சர்குலேஷன இர்ரெகுலர் பண்ணிருக்கு… பிரீத்னெஸ் ஆல்சோ ஹெவியா இருந்தது… இஞ்செக்‌ஷன் போட்டாச்சு… ஆக்ஸிஜனும் கொடுத்துட்டோம்… இப்போ நார்மலா ஆகிட்டாரு.. ஆனாலும் ஒரு ட்ரிப்ஸ் போட்ருக்கேன்… கொஞ்ச நேரத்துல சரி ஆகிருவாரு… பயப்படாதீங்க… அவருக்கு வேறு எந்தப் பிரச்சனையுமில்லை… கம்ளீட்லி ஹீ இஸ் ஆல்ரைட் “ என்றவர்…


கண்மணியிடம் மீண்டும் திரும்பியவர்…


“என்னம்மா நான் சொல்றது புரியுதா… உன் ஹஸ்பண்டுக்கு ஒண்ணும் இல்லை… தைரியமா இருக்கனும்மா…” எனும் போதே… அவள் உயிர் அவளிடமே திரும்பி இருக்க… இப்போது நிம்மதியில் கண்மணியின் கண்கள் கரைகடந்த நீரை வெளியேற்ற… அவரின் மற்ற வார்த்தைகள் எல்லாம் அவள் காதுகளில் விழவே இல்லை…


“அவங்களுக்கு கொஞ்சம் சொல்லி புரியவைங்க… ரொம்ப எமோஷனலா இருக்காங்க… ” என விக்கியிடம் சொன்னவர்…


“உங்க ஃப்ரெண்ட் அதிகமா ஸ்ட்ரெஸ்ல இருக்கார்னு நினைக்கிறேன்… என்னன்னு பார்த்து சரிபண்ணுங்க… கார்டியாக் அரெஸ்ட் மாதிரி இருக்குமோன்னு தான் ட்ரீட்மெண்ட் ஆரம்பிச்சோம்… ” மருத்துவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கண்மணியின் இதயம் நின்று துடிக்க ஆரம்பித்தது…


மூளை முதல் பாதம் வரை அனைத்து உறுப்புகளும் மரமரத்துப் போனார் போல ஒரு நிலை…. அதுவரை இருந்த கொஞ்ச நஞ்ச தைரியமும்… அவளிடம் இல்லாமல் போனது போல் தொய்ந்தவளின் குளம் கட்டிய கண்கள் இப்போது அசைவின்றி மருத்துவரிடம் நிலைத்திருக்க… செவி மட்டுமே அவளிடம் இயங்கிய பாகமாக மாறியிருக்க…


”இப்போலாம் யங்க்ஸ்டர்ஸ்தான் ரொம்ப பேர் அஃபெக்ட் ஆகுறாங்க… இப்படி வர்றாங்க… நல்ல வேளை… கடவுள் கிருபைல… இவருக்கு அப்படி இல்லை… ஜஸ்ட் மயக்கம் தான்…. எனிவே பார்த்துக்கங்க… கண் முழிச்ச பின்னால் கூட்டிட்டு போகலாம்… நோ வொர்ரி… “ மருத்துவர் கிளம்பி விட….


அவர் சொன்ன அனைத்தையும் கேட்டபோது விக்கிக்குமே அதிர்ச்சியாகத்தான் இருந்தது…. இருந்தாலும்… நண்பனுக்கு ஒன்றும் இல்லை என்ற நிம்மதியில் மூச்சு சீராக ஆரம்பித்தது… சுவரில் தலை சாய்ந்து கண்மூடி அப்படியே சில நிமிடம் நின்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவன்… பின் கண்மணி ஞாபகம் வந்தவனாக… வேகமாகத் திரும்பிப் பார்க்க…


அவளோ வெறித்த பார்வையோடு அமர்ந்திருக்க… ஆறுதலாக அவளிடம் பேசத் தோன்றினாலும்… இருவருக்கும் இடையே இருந்த இடைவெளி… சட்டென்று பேச விடவில்லை… அவள் அருகே சென்றவன்… எப்படியோ தன்னைச் சமாளித்தபடி…


“கண்மணி” என அழைக்க.. அமர்ந்திருந்த அந்த நிலையிலேயே கண்மணி… விக்கியை நிமிர்ந்து பார்க்க… பார்த்தவளின் கண்கள் முழுக்க சிவப்பேறி இருக்க… அவளைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது விக்கிக்கு….


“எப்போதுமே திமிரான நேர்ப்பார்வை… முன்னே நிற்பவரை சற்று தள்ளியே நிற்க வைக்கும் ஆராய்ச்சியான கூர்பார்வை,… அதையும் மீறி சில சமயம் அலட்சியப் பார்வை…” என இப்படியே அவளைப் பார்த்து பழகி இருந்த விக்கி முதன் முதலாக கண்மணியிடம் இப்படி ஒரு பார்வையைப் பார்த்திருக்க… அதற்கு மேல் அவனது வீராப்பெல்லாம் அவனிடம் இல்லை…. எங்கோ ஓடிப் போயிருக்க…


”கண்மணி… ஏன் இப்படி இருக்க… கண்ணைத் தொட… அதுதான் அவனுக்கு ஒண்ணும் இல்லைனு சொல்லிட்டாங்களே… உன்னை இப்படி பார்க்கவே முடியலை… நீ யார்னு எப்படிப்பட்ட பொண்ணுனு தெரியாம அந்த டாக்டர்லாம் உனக்கு தைரியம் சொல்லச் சொல்றாரும்மா… ” என்ற போதே… இதழ்கள் துடிக்க ஆரம்பிக்க… அதை அடக்க நினைத்தவளுக்கு… அழுகையில் சிவந்த மூக்கு நுனி… இப்போது விடைக்க ஆரம்பிக்க… என்ன நினைத்தாளோ… கண்மணி அவனிடம் பேசாமல்,… பேச முடியாமல்… வேறுபுறம் திரும்ப…


இவனாகப் போய்ப் பேசியும்… ஆறுதல் சொல்லியும்… அவள் வேறு புறம் திரும்பியது… அவனை… அவமதிப்பது போன்ற பாவனைதான… விக்கிக்கு கோபம் வரவில்லை அவனுக்கு… அவள் நிலை புரிந்ததவனாக மட்டுமே விக்கி அவளிடம் பேசிக் கொண்டிருந்தான்…


“உனக்கு காஃபி வாங்கிட்டு வர்றேன்… அதைக் குடி… நீயும் டயர்டா இருக்கம்மா… நீயும் உன் புருசனும்… இப்படியே மாற்றி மாற்றி ஹாஸ்பிட்டல்ல இருக்கனும்னு முடிவெடுத்துட்டீங்களா…” சற்று உரிமை எடுத்து பேச ஆரம்பித்த போதே… அறையில் இருந்து வெளியே வந்த நர்ஸ்…


”கண்மணி…” என சத்தம் போட்டு அழைக்க… கண்மணி வேகமாக செவிலியரை நோக்கி ஓட


“உங்க பேர்தான் கண்மணியா… அவர் உங்களப் பார்க்கனும்கிறாரு… உள்ள போங்க… “ எனச் சொல்ல கண்மணி வேக வேகமாக உள்ளே போக… விக்கியோ… மருத்துவமனைக் கேன்டீனை நோக்கிச் சென்றான்….


---

மருத்துவமனை அறையில்…


”உனக்கு நான் வச்சிருக்கிற செல்லப் பேரை மாத்த வச்சுறாத கண்மணி… இந்த அழுது வடியுற கண்மணி… என் கண்மணியே இல்லை… எனக்குப் பிடிக்கவே இல்லை” ரிஷி அவளைச் செல்லமாக கடிய… அப்போதும் அவள் தன் முகத்தை மாற்றிக் கொள்ளவில்லை…


“எனக்கும் தான் பிடிக்கலை… என்னைப் பிடிக்கலை… எல்லாத்துக்கும் மேல உங்களை பிடிக்கலை… என்னை அழ வச்சுட்டீங்கள்ள” கண்மணி மூக்கை உறிஞ்சியபடி பேச…


இதழோரப் புன்னகையோடு…. இவர்களைப் பார்த்தபடியே ரிஷியின் ஐவி லைனை கழட்டிக் கொண்டிருந்த செவிலியர்


“இந்த பிடிக்காத பையனுக்காகத்தான்… வெளிய அவ்ளோ கண்ணீர் விட்டியாம்மா” கண்மணியைப் பார்த்து இந்த வார்த்தைகளைக் கேட்க… கண்மணி மற்றவர்களிடம் என்று சட்டென்று பேசி இருக்கின்றாள்… அமைதியாக ரிஷியைப் பார்க்க…


“கரெக்டா சொன்னீங்க சிஸ்டர்…. ஒரு மணி நேரம் கூட ஆகலை… அதுக்குள்ள உங்களுக்குக் கூட தெரியுது பாருங்க” எனும் போதே… கண்மணி அவன் தோளில் செல்லமாக அடி போட ஆரம்பிக்க…


”ஆ… அம்மா… பேஷண்ட்னு கூட பார்க்காமல் அடிக்கிறாளே” ரிஷி அவள் கையைப் பிடித்து தன் வசப் படுத்தியவன்… அவளையும் தன்னோடு சேர்த்துக் கொள்ள… அவன் தோளில்… முகம் பதிக்க… அதே நேரம் அவள் கண்களில் இருந்துக் கண்ணீர் தெரித்து விழ… ரிஷியும் அவளை… தன் மனைவியின் நிலை உணர்ந்தவனாக… அமைதியாக இருந்தான்… அன்று தனிமை என்பது ஏனோ இருவருக்குமே எட்டா கனியாக இருந்தது … அதனால்..உள்ளே கொந்தளித்துக் கொண்டிருந்த உணர்வுகளை எல்லாம்… வெளிக்காட்ட முடிய இயலாத நிலை… இடம்… என மௌனமே அங்கு ஆட்சி செய்ய ஆரம்பித்திருக்க அதே நேரம் கண்ணில் ஈரத்தோடு இன்னும் இருக்கும் மனைவியின் நிலை தாங்க முடியாதவனாக


“ஹேய் ரவுடி… இப்போ என்ன ஆச்சுனு… இவ்ளோ அழுகை… நல்லாதானேடி இருக்கேன்… வேற ஏதும் எனக்கு” என்ற போதே… அவன் உதடுகளில் கை வைத்து… அவன் வார்த்தைகளை நிறுத்தியவள்…


“அப்போ நான் சொன்னப்போ… நீங்க எவ்ளோ ஃபீல் பண்ணியிருப்பீங்கன்னு இப்போ எனக்குத் தெரியுது ரிஷி” இதழ்கள் நடுங்க சொன்ன போதே… செவிலியர் குறுக்கிட்டார்…


”டாக்டர்… ட்ரிப்ஸ் முடிந்த பின்னால போகலாம்னு சொல்லிட்டாரு… டேப்லட் மட்டும் அடுத்த ரெண்டு வேளைக்கு எடுத்துக்கங்க… ரெஸ்ட் எடுங்க தம்பி… பொண்ணு தவிச்சுப் போயிருச்சு…. உடம்பப் பார்த்துக்கங்க தம்பி… அந்தப் பொண்ணு அவ்ளோ வருத்தப்படுது,,, நீங்க என்னடான்னா சிரிச்சுட்டு… அவங்களயே கிண்டல் பண்ணிட்டு இருக்கீங்க“ என்று அக்கறையாகச் சொன்னவரிடம் சிரித்தான் தான் ரிஷி… ஆனாலும் அந்தச் சிரிப்பின் பின் இருக்கும் அவன் வலி அவனுக்கு மட்டுமே தெரியும்…


அந்த செவிலியர் போனபின்… தன்னவளிடம் திரும்பியவன்…


“என்ன ஒரு சப்போர்ட்…. இந்த பொண்ணாலதான் நான் இங்க இருக்கேன்னு… அவங்களுக்குத் தெரியவா போகுது…” அமர்ந்திருந்த ரிஷி பெருமூச்சு விட்டபடி சொல்ல…


“யாருக்குமே தெரிய வேண்டாம் ரிஷி… எனக்கு… எனக்கு மட்டும் தெரிந்தால் போதும்… என் ரிஷிக்கண்ணாவோட அன்பு எனக்கு மட்டும் தெரிந்தால் போதும் “ கண்மணியின் குரலில் அழுத்தம் மட்டுமே…


அவளையே விழி அசைக்காமல் பார்த்தபடியே ரிஷி இருக்க… அவளோ…


அவன் கலைந்திருந்த கேசத்தை சரி செய்தபடி… அவன் முகத்தை அழுந்தத் துடைத்தவள்… அவனைப் பார்க்க… அவனும் முகம் மலர்ந்து விகசிக்க… ரிஷியின் மலர்ந்த முகத்தைப் பார்த்த பின் தான் கண்மணியும் முழுமையாக சரியானாள்…


--

“உள்ள வரலாமா…” அறைக்குள்ளேயே வந்துவிட்ட விக்கி வேண்டுமென்றே கேட்க…


விக்கியின் குரல்… அடுத்த நொடியே கண்மணியின் முகம் மாறியிருந்தது… அவளின் மாற்றம் ரிஷிக்கும் தெரியாமல் இல்லை… அவளைத் தன் கையணவில் வைத்துக் கொண்டபடியே…


“வாடா… உள்ள வந்துட்டதானே… அப்புறம் என்ன… நமக்குதான் மேனர்ஸ்னா என்னன்னு சுட்டுப் போட்டாலும் வராதே… புதுசாவா வந்துறப் போகுது” ரிஷி விக்கியைக் கலாய்க்க…


விக்கி சிரித்தாலும்… அவன் முகத்தில் உண்மையான வருத்தம் அப்பட்டமாகத் தெரிய… சமாளித்தவனாக… கண்மணியைப் பார்க்க… கண்மணியோ அவன் புறம் திரும்பவே இல்லை…


“டேய்… காஃபி வாங்கிட்டு வந்துருக்கேன்… ஏற்கனவே ஹாஸ்பிட்டல் போய்ட்டு வந்த பொண்ணை வேற டென்சன் பண்ணி வச்சுருக்க… மறுபடியும் ஹாஸ்பிட்டல் தேட வச்சுறாதா… குடிக்கச் சொல்லு…” கண்மணியிடம் நேரடியாகப் பேசாமல் ரிஷியிடம் பேசியபடி கொண்டு வந்த காபிக் குவளையை நீட்ட…


“இல்ல… எனக்கு வேண்டாம்” கண்மணியும் விக்கியிடம் பேசாமல் ரிஷிக்கு பதில் சொல்ல…


”ஹப்பா… முதன் முதலா பார்த்தப்போ இதுங்க ரெண்டுக்கும் ஆரம்பிச்சது… இப்போ வரைக்குமா… முடியலடா சாமி… ” ரிஷி மனதுக்குள் மட்டுமே நினைத்து சலிக்க முடிந்தது… வெளியில் சொல்வானா என்ன… அமைதியாக நண்பனைப் பார்க்க


அதே நேரம்… விக்கியோ… இவனைப் பார்க்கவில்லை…


”ஹலோ மணி… இவ்ளோ கோபம் இருக்கவ… அப்போ ’விக்கி’ னு கூப்பிடாமல்… கதறாமல் இருந்திருக்கனும்… அப்போ மட்டும் என் பேர்… நான் தேவை… இப்போ தேவையில்லை ” விக்கி மூக்கை விடைத்துக் கொண்டு சத்தமாகக் கேட்க… கோபமாகக் கேட்டாலும்… அதில் உரிமையான கோபம் மட்டுமே….


கண்மணி புருவம் உயர்த்தினாள் …


அதைக்கண்ட ரிஷியோ படபடத்து… இப்போது வேகமாக…


“டேய் மச்சான்… என் பொண்டாட்டி கிட்ட நானே இவ்ளோ குரல் உயர்த்திப் பேசினது இல்லை… உனக்கு யார்டா இவ்ளோ உரிமை கொடுத்தா… அப்பா சாமி… கூட்டிட்டு வந்த மாதிரி… அதே நல்ல பிள்ளையா வீட்ல கொண்டு போய் விட்ரு… இப்போதான் எல்லா புயலும் அடங்கி… கொஞ்சம் சரி ஆகி இருக்கு… உனக்கு அது பொறுக்கலையா…” எனும்போதே கண்மணி அவனை முறைக்க…


”அம்மு… என்னைப் பார்த்தால் பாவமாத் தெரியலையா உனக்கு… உன்னைச் சமாதானப்படுத்தவெல்லாம் எனக்கு ஏழாவது அறிவு வேணும்.. நான் ஆறுக்கே திண்டாடுறவன்…. ” ரிஷி உண்மையாகவே புலம்பினான் தன்னவளிடம் பரிதாபப் பார்வையோடு…


நண்பனின் பரிதாப வார்த்தைகளில் விக்கியும் அதோடு விட்டு விட்டான்…


“சரி… சரி… நான் பில் எல்லாம் கட்டிட்டேன்… கீழ வந்துருங்க… கார்ல வெயிட் பண்றேன்” என்றபடி அவர்களுக்கு தனிமை கொடுத்தவனாக அறையை விட்டு வெளியேறியவனுக்கு… ஏனோ மனம் கனத்தது… கண்மணி… தன்னிடம் கடைசி வரை சகஜமாக பழக மாட்டோளோ… என்ற எண்ணம் தோன்றியதில்…


அறை வாசலுக்கு வந்தவன்… அவனையுமறியாமல் அவர்களைத் திரும்பி பார்க்க… கண்மணி ஏதோ பேசிக் கொண்டே இருக்க…. ரிஷி அவளை மட்டுமே பார்த்தபடி… அவள் வார்த்தைளை கவனமுடன் தீவிர பாவனையில் கேட்டுக் கொண்டிருக்க… ரிஷி… கண்மணி…’ அந்த இளம் தம்பதியரிடம் அவன் பார்வை நிலைக்க ஆரம்பித்தது…


அவன் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த ரிஷி… அவன் நண்பனாக இருந்த ரிஷி அல்ல… மாறி விட்டான்… தன்னையே மாற்றிக் கொண்டிருக்கின்றான்… இல்லையில்லை அவனது வாழ்க்கை அது கொடுத்த வலிகள் என அவனை நன்றாகவே மாற்றி விட்டது…


அதே போல…


இப்போது அவன் பார்க்கும் இந்தக் கண்மணி… அன்றும் இன்றும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றாள்… ஆனால் பார்க்கும் இவன் கோணம்தான் இன்று மாறி இருக்கின்றது…


வாழ்க்கை ஓட்டத்தில் குண இயல்பு மாறியதால்… அவன் நண்பன் ரிஷி… இன்று அவனை விட்டு வெகு தூரமாக விலகிச் சென்று… வேறொரு ஆளாகத் தெரிகின்றான்…


அதே நேரம்… பார்க்கும் கோணம் மாறியதால்… யாரோ ஒரு கண்மணி… அவள் கஷ்டப்படும்போது… இவன் மனமும் வாடியது… தன் குடும்பத்தில் ஒருத்தியாக அவளை நினைக்கத் தோன்றியதை அவனால் தவிர்க்க முடியவில்லை…


வாழ்க்கையும் விசித்திரம்… மனமும் விசித்திரம்… அவை பின்னே இருக்கும் ரகசியங்களும் விசித்திரம்… ரிஷி-கண்மணி மட்டுமல்ல இன்று விக்கியும் புரிந்து கொள்ள ஆரம்பித்திருந்தான்


ஒரே நாள்… ஒரே நேரம்… ரிஷியும் தானும் ஒன்றாகத்தான் இந்தக் கண்மணியைச் சந்தித்தோம்… இல்லை அப்படிக் கூட சொல்லமுடியாது இவன் தான் கண்மணியை முதலில் பார்த்தான்…. அதே நேரம் இன்னொன்றும் தோன்றியது…. அப்போதும் அவள் இவனைப் பார்க்கவில்லை… இப்போதும்… அதேபோல் அன்றும் கண்மணி ரிஷியைத் தான் பார்த்தாள்… இன்றும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருக்கின்றாள்…


என்ன அப்போது கண்மணி தன் நண்பனை முறைத்துப் பார்த்தாள்… இப்போது காதலோடு… அவனே தன் உரிமையெனப் பார்க்கின்றாள்…


நண்பனை முறைத்த கண்மணியின் முதல் பார்வை கண்டு… அந்த நொடியில் இருந்து அவளை அவள் குணத்தை தானே அனுமானித்து… தள்ளி வைத்த விக்கி… இன்று… அதே பெண்ணின் தன் நண்பனின் மீதான காதல் பார்வையில்… இருவரும் இதே போல் எப்போதும் இருக்க வேண்டும் என மனம் நிறைந்து…மனதாற வேண்டிக் கொண்டு… வாழ்த்த ஆரம்பித்தவன்… காதல் மனம் அவனையுமறியாமல் அவன் துணையை நாட ஆரம்பித்திருக்க… ரிதன்யாவுக்கு… அலைபேசியின் வழியாக அழைக்கவும் செய்திருந்தான்…


“விக்கி” அலைபேசியை எடுத்து ஆச்சரியமாகப் பேசியபடியே நேரத்தைப் பார்க்க… அது அதிகாலை 4 எனக் காட்ட…


“என்ன… இந்த டைமுக்கு”… ரிதன்யா அதே ஆச்சரியத்துடன் கேட்க


“தூங்கிட்ட்டு இருக்கியா… பரவாயில்ல… எழுந்துக்கோ… இப்போ நான் உன்னைப் பார்க்க வந்துட்டு இருக்கேன்… அதுனால என்னைப் பார்க்க ரெடியா இரு“ விக்கி துள்ளலாகப் பேச


ரிதன்யாவோ படபடத்து எழுந்து அமர்ந்தாள்…


“ஏன்… அண்ணா… அண்ணாவை கூட்டிட்டு வர்றீங்களா… நீங்க அவர்கூட வர்றீங்களா… என்னாச்சு”


“அடங்குடி… அண்ணா… அண்ணான்னு… அவனைப் பார்த்துக்க அவன் பொண்டாட்டி இருக்கா… ”


“ப்ச்ச்… விக்கி… என்ன விளையாடிட்டு இருக்கீங்க… அதுவும் இந்த டைம்ல… ”


“உன் அண்ணனுக்குத்தான் ட்ரைவர் வேலைப் பார்த்துட்டு இருக்கேனே… இதுல உன்கூட போன்ல விளையாட்றாங்களா என்ன… ஆனால் நேர்ல பார்க்கும் போது… இதே டையலாக்க சொல்லு… அப்போ இருக்குடி உனக்கு… ”


ரிதன்யா… அலைபேசியை எடுத்து தன் முன் வைத்து பார்த்துவிட்டு….


“என்னாச்சு… சார்… கனவுல டூயட் பாடிட்டு… அதே மூட்ல… எனக்கு போன் போடறீங்களா…” ரிதன்யாவின் மனநிலையும் மாறி இருக்க… உல்லாசமாகக் விக்கியிடம் கேட்டாலும்… மனதில் ஒரு ஓரம் அவள் அண்ணன் பற்றிய நினைவே இருக்க… அதன் காரணமாக


“கண்மணியும் அண்ணா கூட…” என ஆரம்பிக்க


“ரிது… அவங்களை விடவே மாட்டியா நீ… உன் அண்ணா… அண்ணிய விடத்தான் வீட்டுக்கு வர்றேன்… மேடம் உங்க தரிசனம் தர்றீங்களா… அந்த தரிசனத்தோட… அந்த எனர்ஜியோட என் தாத்தாவைப் போய்ப் பார்ப்பேனாம்… அப்புறம் என் ரிதுவை என் கூடவே வச்சுக்கப் போறேனாம்” விக்கி காதலோடு உருக…


“கல்யாணம் தாலி அதெல்லாம்… கிடையாதா… நேரா… ” என கிசு கிசுக்க ஆரம்பித்தவளிடம்… விக்கி காதலனாக கசிந்துருகிக் கொண்டிருக்க…


அடுத்த சில நிமிடங்களில்… ரிஷி-கண்மணி இருவரும் மருத்துவமனைக்கு வெளியே வந்திருக்க.. ரிதன்யாவிடம் பேசிக் கொண்டிருந்த அழைப்பைத் துண்டித்து விட்டு… கண்மணி-ரிஷி இருவரையும்… தன் வாகனத்தில் ஏற்றிக் கொண்டவன்… ’கண்மணி’ இல்லத்தில் அவர்களை வந்து விட்ட போது… மணி ஐந்தைக் கடந்திருந்தது இருந்தது


----

இரவெல்லாம் காற்று வீசி… பின் மழை அடித்து… மெல்ல மெல்ல தூவானப் பொழுதாக மாறியிருந்தது அந்த இளங்காலை… இன்னும் எங்கும் இருள் சூழ்ந்திருக்க…. மக்களின் நடமாட்டம் அதிகமாக இல்லை…


கண்மணியையும் ரிஷியையும் இறக்கி விட்ட விக்கி … பின் தானும் காரை விட்டு இறங்கி… அவர்களோடு சேர்ந்து கூடவே வர… ரிஷி அதைக் கவனித்து… நின்றவனாக


“டேய்… நீ வீட்டுக்கு கிளம்பு… நான் ஓகே தான்” என்ற போதே விக்கி முறைக்க…


“வீட்டுக்கு கூப்பிடாமல்… போகச் சொல்கிறானே… இவ்ளோ கல் நெஞ்சக்காரனா இருக்கானேன்னு நினைக்கிறியா” என ஆரம்பித்த போதே கண்மணியைப் பார்த்த ரிஷி…


“நீ வீட்டுக்கு போம்மா… நான் இவனை அனுப்பிட்டு வர்றேன்” எனக் கண்மணியிடம் பதவிசாகப் பேசி அவளை முன்னால் போகச் சொல்ல… கண்மணியும் ரிஷியிடம் தலை ஆட்டியவளாக… நடந்தவள்.. சில அடி எடுத்து வைத்தபடி… மீண்டும் திரும்பி்ப் பார்க்க… அதுவும் விக்கியைப் பார்க்க


“ஐந்து நிமிசத்துல அனுப்பி வச்சுறேன்மா உன் புருசனை… ப…த்…த்திரமா… கவலைப்படாமல் போம்மா“ விக்கி சொன்ன விதத்தில் கண்மணி சிரிக்கவெல்லாம் இல்லை…


மாறாக…


“தேங்க்ஸ்…”


“எல்லாத்துக்கும்”


இரண்டே இரண்டு வார்த்தைகள் தான் என்றாலும்.. உணர்ந்து உளமார்ந்த நன்றி உணர்வோடு சொன்னவள்… அடுத்த நொடியே… வேக அடி எடுத்துக்கள் ’கண்மணி’ இல்லத்தை நோக்கி நடக்க…


விக்கியோ ரிஷியிடம்


“ஹப்பா… பேசிட்டாடா…. ஹ்ம்ம்.. ரெண்டு வார்த்தை… “


“அது எப்படிடா உன்கிட்ட மட்டும்…. வாய் ஓயாமல் பேசுறா… எப்படிடா..” ஆச்சரியமாக கேட்டபடியே… ரிஷியைப் பார்த்தவனுக்கு ரிஷி என்ன பதிலா கொடுக்கப் போகிறான்… அவன் கண்கள் காதலோடு விரிய ஆரம்பித்திருக்க


“விடு விடு… உனக்கென்னப்பா… உன் கதைதான் நல்லா போகுதே… இனி என்ன பேசி… என்ன விளக்கி…. நான் என் கதைய பார்க்கிறேன்” என்றவனிடம் ரிஷி கேள்வியாகப் புருவம் உயர்த்த


“ஊருக்குப் போறேண்டா… தாத்தாகிட்ட பேசப் போகிறேன்… எப்படியும் இந்த வாரத்திலேயே நல்ல நாள் பார்த்து…. உங்க வீட்டுக்கு வந்து பேசுறேன்” விக்கி கனவுகளோடும்… அதே நேரம் கொஞ்சம் சஞ்சலத்தோடும் சொல்லிக் கொண்டிருக்க…


“பொறுமையா டீல் பண்ணுடா… “ ரிஷி சொல்லு முடிக்கவில்லை விக்கி பொங்கி விட்டான்


”பொறுமையா… மச்சான் நீங்க இன்னைக்கு டீல் பண்ணுனீங்களே… அந்த அளவுக்கு பொறுமையா டீல் பண்ணினால் போதுமா.. “ ரிஷி முறைக்க


“முறைக்காதடா… ஆனால் பொறுமை இந்த கூல் இதையெல்லாம் பற்றி நீ இனி பேசாத… அதெல்லாம் பற்றி பேச… ஒரு காலத்தில ரிஷின்னு என் ஃப்ரெண்ட் இருந்தான்… அவனுக்கு மட்டும் தான் அந்தத் தகுதி இருக்கு… சரி சரி கிளம்பு…” என ரிஷியைக் கிளப்ப


“டேய்… என்னை எங்க கிளப்புற… ஆமா… நீ எதுக்கு நிற்கிற… நீயும் கிளம்பு” ரிஷி விக்கியை விரட்ட


“எங்களுக்கு கிளம்பத் தெரியும்… ரிதுவை வரச் சொல்லி இருக்கேன்… பார்த்து பேசிட்டு கிளம்புறேன்” என்றபடியே ரிதன்யாவுக்கு அழைக்கப் போக…


பட்டென்று நண்பனின் அலைபேசியைப் பறித்தவன்…


“தூங்கிட்டு இருக்க புள்ளையை ஏன்டா டிஸ்டர்ப் பண்ற… பேசாத மாதிரி….. பார்க்காத மாதிரி சீன் போடற… நைட் உன்கூடத்தானே டின்னருக்கு வந்தா… போ… இப்போ போய் ஊருக்கு கிளம்பு… தாத்தாகிட்ட பேசி… வீட்டுக்கு வந்து பொண்ணு கேட்கிற வழியப் பாரு… அதை விட்டுட்டு… என்கிட்டயே… என் தங்கச்சி கூட தெருவுல நின்னு பேசப் போறேன்னு சொல்ற” நண்பன் பாதி… சகோதரன் பாதி என ரிஷி உரிமையும் நட்பும் கலந்து மிரட்ட


“டேய்… “ விக்கி அதிர்ந்து பார்க்க


“என்ன டேய் … கெளம்பு… கெளம்பு… என் தங்கச்சிய எல்லாம் அனுப்ப முடியாது… ”


“அடப்பாவி… பழி வாங்குறியாடா… என்னாலதான் இவ்ளோ பிரச்சனைனு… உன்னை “ என விக்கி கதற ஆரம்பித்தவனாக…


“மச்சி… மச்சி… என்னைப் பார்த்தால் பாவமா தெரியலை… உனக்கு ’சாரதி’ வேலை எல்லாம் பார்த்தேனே.. அதெல்லாம் கொஞ்சம் நெனச்சுப் பாருடா… அட்லீஸ்ட் அத்தை கையால ஒரு காஃபி.. “ கெஞ்சலில் முடிக்க


அவன் கெஞ்சலை எல்லாம் காதே கேட்காத செவிடன் பாவனையில் அலட்சியபடுத்திய ரிஷி…


“தங்கச்சியவே எழுப்பக் கூடாதுன்னு சொல்றேன்… என் அம்மாவை எழுப்பச் சொல்ற… அதுவும் உனக்கு காஃபி போட… இப்போதானே குடிச்ச… அதுவும் என் பொண்டாட்டிக்கு வாங்கிட்டு வந்த காஃபியும் நீதானே குடிச்ச… கேட்டை பூட்டப் போகிறேன்… பைடா… கோவிச்சுக்காதாடா… இப்போ என் ஃப்ரெண்டா மட்டும் இல்லையே நீ… அதுதான் உன்னை விரட்றேன்… பஞ்சு நெருப்பு கதை எல்லாம் என்னையும் பேச வைக்காதாடா” கண் சிமிட்டிச் சிரித்தபடி நண்பனிடம் வம்பிழுத்தத்தாலும் அண்ணனாக கறாராக இருக்க..…


“ராட்சசன்… பெரிய ஊர்ல இல்லாத அண்ணனாம்…” முணங்கியவனாக


வேறு வழியின்றி ரிதன்யாவுக்கு அழைத்துப் பேசாமல்… செய்தியை மட்டும் அனுப்பினான்.. “தங்கையை தூக்கத்தில இருந்து எழுப்பக் கூடாதாம்… உன் அண்ணன் ஆர்டர்” என அனுப்ப ஆரம்பித்து… அவன் தாத்தாவைப் பார்க்க இன்றே ஊருக்குப் போவதாகவும் செய்தியை அனுப்பி வைத்தவன் இப்போது ரிஷியை முறைக்க…


”பார்த்தது போதும்… போடா போடா… ட்ரீம்லயே போய்… எங்கேயாவது மோதிறாத… கவனமா போ…. போய்ட்டு போன் பண்ணு…“ எரிகிற தீயில் இன்னும் கொஞ்சம் எண்ணெய் விட…


“ உன்னை…”


”என்னை…” ரிஷி நண்பனின் கைகளில் மாட்டாமல் ஓட…


“அப்டியே விட்ருக்கனும்… போனால் போகுதுன்னு அந்த பொண்ணுக்காக தூக்கிட்டு போய்க் ஹாஸ்பிட்டல்ல சேர்த்தேன்ல என்னைச் சொல்லனும்…”


“அப்போ… லைட்டா… கண் கலங்கிருந்துச்சே… என்னை ரூம்ல பார்க்க வரும்போது… அது என்ன மச்சி…” ரிஷி கலாய்க்க… அதற்கு மேல் விக்கியால் சாதரணமாக இருக்க முடியவில்லை… நண்பன் இருந்த நிலையை நினைத்து … முகம் கவலையாக மாற


“சரி சரி… செண்டிமெண்ட் சீனெல்லாம் ஸ்டாப் பண்ணு… .. நீ வேற சீன் காட்டாத… அதை விட மேல ரூம்க்கு போனா… என் ரவுகிட்ட இருந்து …. என்ன அடி கிடைக்கப் போகுதோ எனக்கு…” என ரிஷி கண்மணிக்குப் பயந்தவன் போல பாவனையக் காட்ட… விக்கியின் முகம் புன்னகையில் விரியத்தான் செய்தது… இருந்தும் கடுப்பாக


‘நீ…. அவகிட்ட… அடி வாங்கப் போற… நானும் நம்பிட்டேண்டா… போடா போ… வேற ஏதாவது சொல்லிறப் போறேன்…”


ரிஷியை ஓட்டியபடியே… விக்கி ரிஷியிடமிருந்து விடைபெற… ரிஷியோ… … தன் உணர்வுகளை எல்லாம் மறைத்தவனாக… அடக்கியவனாக… விக்கியிடம் எதையும் வெளிக்காட்டாமல்… அவனை வழி அனுப்பி வைத்து விட்டு…. ’கண்மணி’ இல்லத்துக்குள் நுழைந்து… மாடி அறையை நோக்கி வேக அடி எடுத்து வைத்தவன்…. அதற்கு மேல் பொறுமை என்பது இல்லாதாவனாக… படிகளைத் இரண்டிரண்டாக தாண்ட ஆரம்பித்தவன்… வினாடியின் தன் அறையையும் அடைந்திருந்தான்

/* தலைவன் கூடும் போது பெண் விருந்தாகிறாள்

தலைவன் வாடும்போது பெண் மருந்தாகிறாள்

தலைவன் கொஞ்சும் போது பெண் சேயாகிறாள்

தலைவன் துஞ்சும் போது பெண் தாயாகிறாள்

பெண்ணின் பெருமை சொல்லவா

கடல் போன்றதல்லவா

வேர் வாழ நீர் வார்க்கும் மேகம்

அதற்கொரு உவமை தான் பெண்மையே


கல்யாணம் என்பது பூர்வ பந்தம்

உடலோடுயிர் குடியேறிட வாழும் சொந்தம்

சம்சாரம் என்பது ஆதி அந்தம்

ஒன்றாகிடும் உறவாடிடும் அன்பால் என்றும்

ஏழேழு ஜன்மமே மணமாலை பந்தமே

ஆயிரம் காலமே வாழுமே!

*/

1,986 views0 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின்...

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை...

கண்மணி... என் கண்ணின் மணி- 94-3

அத்தியாயம் 94-3 சில வாரங்களுக்குப் பிறகு… வீட்டில் கண்மணி மட்டுமே இருந்தாள்… சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க… மணி 11 க்கும் மேலாக...

Comments


Commenting has been turned off.
© 2020 by PraveenaNovels
bottom of page