கண்மணி... என் கண்ணின் மணி- 77

அத்தியாயம் 77


நட்சத்திரங்கள் அற்ற இருண்ட வானம்… அதில் மின்னிக் கொண்டிருந்த மின்னல் ஒளி… பேரிடி… இதோடு வீசிய பலத்த காற்று என நகரமே இயற்கையால் கட்டுப்பட்டிருக்க… ரிஷியோ அவை அனைத்துக்கும் சவால் விட்டவனாக ஆர் கே இண்டஸ்டிரீசை நோக்கி சென்று கொண்டிருந்தான்…


இருசக்கர வாகனத்தில் படு வேகத்தோடு வந்தவனின் ஆக்ரோஷத்தில்… வேகத்தில்… கம்பெனியின் வாயில் காவலாளி… வேக வேகமாக ஓடோடி வந்து பிரதானக் கதவைத் திறந்து விட… உள்ளே நுழைந்தவன் வண்டியை நிறுத்தியும் நிறுத்தாமலும்… காவலாளியைப் பார்க்க…


அவனது பார்வை புரிந்தவனாக…


“சார்…. ஒரு யூனிட் மட்டும் கிளம்பல சார்… நீங்க சொன்னதை சொன்னேன்… ஜெனரேட்டர் எல்லாம் ஸ்டாப் ஆகிருச்சு… இவங்க மட்டும் பவர் இருக்கிற வரை வேல பார்க்கிறோம்னு சொல்லிட்டாங்க… பத்து பேர்தான் இருப்பாங்க அதிகமா இல்லை” ரிஷி அனைவரையுக் கிளம்பச் சொல்லி… கம்பெனியை மூடச் சொல்லி இருந்ததால்… காவலாளி இவ்வளவு விளக்கம் கொடுக்க…


அவனிடம் பதிலேதும் பேசாமல்… மின்சாரம் இருந்த யூனிட்டை நோக்கிச் செல்ல… அங்கு இருந்த தொழிலாளார்கள்… ரிஷியைப் பார்த்ததும்… ரிஷியை நோக்கி வந்தனர்…


“எல்லோரும் கிளம்புங்க… நாளைக்கு வாங்க” கொதிநிலையில் இருந்த தன் மனநிலையை அவர்களிடம் காட்டிக் கொள்ளாமல்… வந்தவர்களிடம் சொல்ல ..அங்கிருந்தவர்களோ அவனது நிலை அறிவார்களா என்ன…


”சார்… கொஞ்ச வேலை இருக்கு… மெஷின் வொர்க் இல்லாமல்… நாங்களே பண்ணலாம்னு” எனும் போதே… ரிஷியின் பார்வை அவனிடம் மையம் கொள்ள.. அதில் தகித்த உக்கிரத்தில்… தானாகப் பேச்சை நிறுத்தியவன்


சரி சார் கிளம்புறோம்…” என்றபடி மற்ற நபர்களையும் கூட்டிக் கொண்டு வெளியேறியது மட்டுமல்லாமல்… சத்யாவுக்கும் தகவலைச் சொல்லி விட்டுத்தான் கிளம்பினான்…


அங்கு சத்யாவோ யோசனைக்குச் சென்றிருந்தான்…


“ரிஷிக்கு இப்போது கம்பெனியில் என்ன வேலை… அதுமட்டுமில்லாமல்… புயல் என்ற செய்தியைக் கேட்டு… விடுமுறை விடச் சொன்னதே அவன் தான்… அவ்வாறு சொல்லிவிட்டு… அவன் மட்டும் இப்போது ஏன் வந்திருக்கின்றான்” யோசனையுடன் இருந்த போதே… அலைபேசி அழைக்க… அவனே… அதாவது அவன் யோசனையின் நாயகன் ரிஷியே


“ப்ளீஸ் வந்துறாதீங்க… எனக்குத் தனியா இருக்கனும்… எனக்குத் தனிமை வேணும்னுதான் வந்தேன்… கெடுத்துறாதீங்க” எடுத்த எடுப்பிலேயே பட படவென பேச… அந்தத் தொணியில் நிலவிய விரக்தி… கடுமை… இயலாமை… வருத்தம்… கோபம் அத்தனையும் அலைபேசியில் கேட்ட சத்யாவுக்கும் கடத்தப்பட்ட்டிருக்க… அதில் வார்த்தைகளின்றி சத்யா திகைத்து நின்றிருக்க… பதில் வார்த்தை சத்யாவிடமிருந்து வரும் முன்னேயே… அதை எதிர்பார்க்கமாலும்.. அலைபேசியை ரிஷி வைத்துவிட,,, சத்யாவுக்கு ஒன்றும் புரியவில்லை…


அவன் அப்படி வைத்து விட… போவதா வேண்டாமா… இல்லை கண்மணிக்கு அழைத்து என்னவென்று கேட்போமா… தன்னைத்தானே குழம்பியவனாக… ஒருகட்டத்தில்… ரிஷிக்கு கோபம் வந்தால் எந்த அளவுக்கு தன்னை வருத்திக் கொள்வான் என நன்றாகத் தெரிந்தவன் அவனே… அதே நேரம் இப்போது தான் போனாலும் ரிஷியின் கோபத்தின் அளவு அதிகரிக்குமே தவிர குறையாது…

கண்மணியிடம் சொல்லி வைப்போம்… என முடிவு செய்தவன்… நள்ளிரவாக இருந்த போதிலும் கண்மணிக்கே அழைக்க முடிவு செய்தவனாக… கண்மணியை அழைக்க ஆரம்பித்திருந்தான் சத்யா…


---


’கண்மணி’ இல்லத்தின் வெளியே புயல் ஆரம்பிக்கப் போகும் அறிகுறிகள் ஆரம்பித்திருக்க… உள்புறமோ… புயல் அடித்து ஓய்ந்ததற்காக அறிகுறிகள்…


எங்கும் அமைதி… எல்லோரிடமும் அமைதி… தனது ஆக்ரோஷத்தை எல்லாம் கொட்டி விட்டு… ஒருவன் மட்டும் அங்கிருந்து சென்றிருக்க… அங்கிருந்த அனைவரிடமும்… மௌனம் மௌனம் மட்டுமே…


அப்போது கண்மணியின் அலைபேசி ஒலிக்க ஆரம்பிக்க… அதுவும் சத்யாவிடமிருந்து…


அதைப் பார்த்த போதே கண்மணிக்குத் துணுக்குற்றது மனம்….


சற்று முன் ரிஷி அவள் கழுத்தை நெறித்த போது வராத நடுக்கம்… இப்போது அவளிடம் வந்திருக்க… அந்த அலைபேசியை எடுக்கவே முடியாமல் கை நடுங்க ஆரம்பித்திருந்தது கண்மணிக்கு….


அவள் மனமெங்கும் தறிகெட்டு ஓடியது ஏதேதோ எண்ணங்கள்…


ரிஷியின் ஆக்ரோஷம்… கோபம்… இதெல்லாம் மற்றவர்களுக்கு வேண்டுமென்றால் வித்தியாசமாகப்பட்டிருக்கலாம்… ஆனால் கண்மணிக்கு அது புதிதல்ல… ஆனால் அவளிடமே காட்டப்பட்ட விதம்தான் புதிது… நினைத்த போதே ரிஷியின் கைகள் இன்னும் அவள் கழுத்தில் அழுத்துவது போன்ற பிரமை…


கண்கள் தானகவே நீரைக் கோர்க்க ஆரம்பிக்க… பிரயத்தனப்பட்டு அடக்கிக் கொள்ள ஆரம்பித்திருந்தாள்


ரிஷியின் தந்தை முதல் ரிஷியின் காதல் வரை… ரிஷி என்பவனின் வாழ்க்கை ரகசியங்களை… அறிந்தவள் அவளே… அதே போல கணவனாக… ரிஷியின் காதல் முதல் காமல் வரை அனைத்து பக்கங்களும் மனைவியாக அவளே அறிவாள்… தான் மட்டுமே…. கண்மணி என்பவளே அவனின் உச்சக்கட்ட சரணடைதல்… நிம்மதி… உடலளவிலும் மனதளவிலும்… எல்லாம் புரிந்து கொண்டவள்தான்… ஆனால் நிதானம் தவறி விட்டாளே… அவள் தவற விட்ட நிதானத்தின் விளைவு… எங்கு வந்து நிறுத்தியிருக்கின்றது… துடித்த இதழ் கடித்து தன்னை அடக்கிக் கொள்ள நினைத்தாலும்…. முடியவில்லை


’எல்லாம் என்னாலே தான்… தான் கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்கலாமோ…

மருத்துவமனையில் இருந்து திரும்பி வந்த தருணங்களை நினைத்து… கண்மணி மீண்டும் கலங்க ஆரம்பித்திருந்தாள்….


---


கண்மணி கண் விழித்த போதே…. அவள் எங்கிருக்கின்றாள் என்று அவளால் உணர முடியாமல் எல்லாம் இல்லை… தன் தந்தையின் வீட்டில்…. தன் அறையில் உள்ள கட்டிலின் மெத்தையில் படுத்திருக்கின்றோம் என்பதை நொடியில் உணர்ந்தவள் சட்டென்று எழுந்து அமர… அதே நேரம் பலத்த காற்றினால்… மரங்களில் இருந்து வந்த ஓசை… அவள் செவியை அடைய… தூக்க கலக்கம் எல்லாம் மறைந்து சுற்றுப்புறம் பார்க்க… இன்னும் எங்கும் இருள்… இன்னும் விடியவில்லையா… மணியைப் பார்க்க… நள்ளிரவு 12-ஐத்தான் தாண்டியிருந்தது…


கைகளில் வலி சற்று மட்டுப்பட்டிருந்தார்ப் போல உணர்வு…. தன்னை மீட்டெடுத்த போதே… அவள் கண்கள் ரிஷியைத்தான் தேட ஆரம்பித்திருந்தது…


”கண்கள் அவனைத் தேட… செவிகளிலோ… அவன் குரல் மட்டுமே இப்போதும் ஒலித்துக் கொண்டிருந்தது… மருத்துவமனையில் ஏன் அப்படி கத்தினான்… யாரோடு சண்டை போட்டான்… என்ன பிரச்சனை… ”


மனதில் படபடப்பு தானாக வந்திருக்க… ரிஷியினைப் பற்றி நினைப்போடு… யோசனையோடு… வெளியே வந்தவள் அவள் கண்ட காட்சியில் ஒரு நிமிடம் அப்படியே உறைந்து நின்று விட்டாள்… காரணம் அவளது பாட்டி வைதேகி…


“பாட்டி” கண்மணியின் குரல் விசும்பலாக வெளிவர… வைதேகி உறங்கவில்லை… அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து… அவர் மகளின் புகைப்படத்தைப் பார்த்தபடியே இருந்தவர்…… திரும்ப… திரும்பிய வைதேகியின் கண்களிலோ கண்ணீர் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்திருக்க…


வேகமாக தன் பாட்டியை ஓடிப் போய்க் கட்டிப்பிடித்துக் கொண்டவளிடம்…


“என் பொண்ணு எங்கள விட்டு போனதை நெனச்சு இன்னுமே மனசு ஆற மாட்டேங்குது கண்மணி… வீட்டை விட்டு போனதை… உலகத்தையும் விட்டுட்டு போனதை… எங்ககிட்ட என்ன இல்லைனு… இந்த இடத்துல என்ன இருக்குனு.. அப்போதும் தெரியல…. இதோ இப்போ கூட புரியலை“ நிதானமின்றி புலம்ப ஆரம்பிக்க… கண்மணி அவரை தன்னோடு ஆதுரமாக அணைத்துக் கொள்ள.. அடுத்த நொடி சட்டென்று நடப்புக்கு வந்தவர்…


“விடு… இனி எதை மாத்தப் போறோம்… அவ போட்டோவை பார்த்த உடனே நான் புலம்ப ஆரம்பிச்சுட்டேன்… உன்னைக்கூட பார்க்காமல்…” என்று தன் கண்களை துடைத்துக் கொண்டு…


“எப்படிடா இருக்கு” என தன் பேத்தியின் கைகளைப் பார்க்க… கண்மணியோ


‘பாட்டி” என்றபடி வைதேகியின் அருகில் அமர்ந்து ஆச்சரியமாகப் பார்த்தபடி இருக்க… வைதேகியோ இப்போது சிரித்தார்…


“என்ன… பார்வை… பொண்ணுக்காக கூட வராதவங்க… உனக்காக வந்திருக்காங்கன்னா…. “ என்று செல்லமான மிரட்டலுடன் கேட்க


“ஹ்ம்ம்… ம்ம்ம்” வார்த்தைகளின்றி வேகமாக கண்மணி தலை ஆட்டினாள் மேலும் கீழுமாக…… அதில் சந்தோசம்… சந்தோசம்… மட்டுமே…


“தாத்தாவும் வந்திருக்காங்களா” அதே சந்தோசத்தோடு… வெளியே பார்வைத் தேடலை தொடங்கியபடி கண்மணி கேட்க …


“வந்துருக்காரு… ஆனால் கார்ல இருக்கார்… அர்ஜூனும் வந்துருக்கான்… “ என்றபடியே…


“அர்ஜூனும்…. ரிஷிக்கும்… ஹாஸ்பிட்டல்ல அவ்ளோ வாக்குவாதம்” என்ற போதே கண்மணி திகைத்துப் பார்த்தாள்…. இதில் இன்னொரு திகைப்பு அவளுக்கு என்ன என்றால்… ரிஷிக்கும் அர்ஜூனுக்கு வாக்குவாதம் என்றால்… அர்ஜூனும் பேசி இருப்பானே… ஆனால் மயக்க நிலையில் அவள் கேட்டது… உணர்ந்தது எல்லாமே ரிஷியின் குரல் மட்டும் தானே… இதை உணர்ந்த போதே… இதற்குப் பெயர்தான் காதலா… ??? அவளையுமறியாமல் கண்மணியின் தேகம் சிலிர்க்க… அவள் கண்களோ சந்தோசமாக ரிஷியை தேட ஆரம்பித்திருந்தது… இப்போது ரிஷி வந்து நின்றால்… என்ன ஆவது தங்களைச் சுற்றி இத்தனை பேர் இருக்கின்றார்கள் என்றெல்லாம் நினைப்பாளோ என்னவோ… ரிஷி தன் முன்னால் வராமல் இருப்பதுதான் இப்போதைக்கு நல்லது… தனக்குள் நினைத்தவளாக… தன் உணர்வுகளை கடிவாளமிட்டு அடக்கிக் கொண்டிருக்க


வைதேகியோ தன் பேத்தியின் நிலை அறியாமல் பேசிக் கொண்டிருந்தார்

“எனக்கு… இந்த ஈகோலாம் நீன்னு வரும்போது போயிருச்சு கண்மணி… எனக்கு நீ மட்டும் தான் முக்கியம்… உன் அப்பா மேல கூட எனக்கு கோபம் இல்லை… ஆனால் உன் தாத்தா பேச்சை நான் மீற முடியாதே கண்மணி…” விரக்தியான குரலில் சொன்னவர்… அதோடு அந்தப் பேச்சை நிறுத்தியவராக


“இலட்சுமி… அம்மா இலட்சுமி… வாம்மா இங்க… ” வைதேகி குரல் கொடுக்க… இலட்சுமியும் வர… அடுத்த சில நிமிடங்களில் அந்த இடம் மீண்டும் பரபரப்பாகி இருந்தது…


மாமரத் திண்டில் ரிஷி இப்போதும் அமைதியாக அமர்ந்திருந்தான்… கண்மணி எழுந்து விட்டாள் என அனைவரும் அவளைப் போய்ப் பார்க்கப் போக… அவன் போகவில்லை… விக்கியும் நண்பனைப் பார்த்தபடி அவன் அருகிலேயே அமர்