கண்மணி... என் கண்ணின் மணி- 75

அத்தியாயம் 75-


ரித்விகா… ரிதன்யா… இருவரும்… ஆவென்று வாய் பிளந்து நண்பர்கள் இருவரையும் பார்ப்பதை தவிர வேறொன்றுக்கும் வழியில்லை அங்கு…


வெகுநாட்களுக்குப் பிறகு நண்பர்கள் நண்பர்களாக சந்திக்கும் தருணம்… இப்படித்தான் இருக்குமா?…. என்பது போல ஒரு சகோதரிகள் இருவரும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருக்க… இவர்களை எல்லாம் யார் கவனிப்பார்கள் என்ற ரீதியில் ரிஷியும் விக்கியும் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவிக் கொண்டிருந்தனர்…


“உன்னையெல்லாம் இன்னொரு தடவை பார்க்கவே கூடாதுன்னு நெனச்சேன்… ராஸ்கல்” என்று ரிஷி நண்பனைக் கட்டிக் கொண்டு… அவனையேத் திட்டியும் கொண்டிருக்க


”ஆனால் நான் ஒவ்வொரு நாளும் உன்னை எப்போடா மறுபடியும் மீட் பண்ணுவேன்னு நெனச்சேண்டா… உன் கூட இருந்த வரை உன் அருமை எனக்குத் தெரியலை…. ஆனால் உன்னை விட்டு போன பின்னாலதான்… நீ என்னோட லைஃப்ல எவ்ளோ முக்கியமானவன்னு புரிஞ்சுக்கிட்டேன்…. ஆனால் நீ என்கூட பேசவே தயாரா இல்லைன்ற நிதர்சனம் புரிஞ்சப்போ…. அவ்ளோ தூரத்துல இருந்து சமாதானப்படுத்த எனக்கு தெரியலைடா… அதுனால நானா விலகிக்கிட்டேன்…. ஆனால் எப்படினாலும் உன்னை நேர்ல மீட் பண்ணும் போது… கைல கால்ல விழுந்தாவது என்னைப் புரியவைக்க ட்ரை பண்ணியிருப்பேன்… நல்ல வேளை என் அதிர்ஷ்டம்… நீ அதே கோபத்தோட இல்லைடா“ விக்கி ரிஷியை விடாமல் இறுகக் கட்டிக் கொள்ள…


</