கண்மணி என் கண்ணின் மணி -66

Updated: Jan 8

அத்தியாயம் 66


/*விழியில் ஒரு கவிதை நாடகம்

வரையும் இந்த அழகு மோகனம்

நினைவில் இந்த தலைவன் ஞாபகம்

நிலவுகின்ற பருவம் வாலிபம்


தொட்ட இடம் யாவும் சர்க்கரையும் பாலும்

கொண்டு வரும் தேகம் என்னை வந்து கூடும்


இனி ஆதி அந்தம் எங்கும்

புது ஆசை வெள்ளம் பாயும் உறவிது


ஓர் பூமாலை அதில் தேன் இவ்வேளை...

மன்னன் மார்பில் தவழ்ந்திடும் போது

என்னை நானே நினைப்பது ஏது

இந்த வானம் பூமி யாவும் மயங்கிட

ஓர் பூ மாலை அதில் தேன் இவ்வேளை...*/காலை 8 மணி சிட்னி இண்டெர் நேஷனல் ஏர்போர்ட்


நட்ராஜ் மற்றும் கார்லா குடும்பத்தினரை… ஏர்போர்ட்டுக்கு வெளியே காத்திருக்கச் சொல்லிவிட்டு… ரிஷி மட்டுமே ஏர்போர்ட்டுக்குள் வந்திருந்தான்… அதற்கு காரணமும் இருந்தது…


நட்ராஜுக்கு இவன் அளவுக்கு பெரிதாக அடி இல்லையென்றாலும்… முந்தைய தினம் தான் அடிப்பட்டிருக்க… இன்னும் நெற்றியில் கட்டுடன் தான் இருந்தார்… ஏற்கனவே கோபத்தில் தான் வருவாள் கண்மணி… ரிஷிக்கும் தெரியும்… இதில் அவள் தந்தையையும் இந்தக் கோலத்தில் பார்த்தால்… இன்னுமே அவளுக்கு குழப்பம் ஆகும்… அதனாலேயே காருக்கு வருவதற்கு முன்னாலேயே அவளை… அவள் கோபத்தை எல்லாம் சமாளித்துக் கூட்டி வர வேண்டும்… என்று முடிவெடுத்தவன்… மற்றவர்களை எல்லாம் விட்டு விட்டு தனியே வந்தவன்… இதோ அவளுக்காக அவள் வருகைக்காகக் காத்திருந்தான்… அவள் வரும் விமானம் வந்து விட்ட தகவலும் அங்கு ஒலிபரப்பட்டிருக்க… அவனையுமறியாமல் அவனுக்குள் ஒரே பரபரப்பு.


கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு தன்னவளைப் பார்க்கப் போகிறான்… திடீரென மீண்டும் பதின்ம பருவத்துக்குப் போன உணர்வு ரிஷிக்கு வந்திருக்க…


அவனுக்குள் ஏதேதோ உணர்வுகள்… உற்சாகப் பந்துகளாய் அவனின் ஒவ்வொரு அணுவும் அவனுக்குள் துள்ளிக் குதிக்க ஆரம்பித்திருக்க… உறக்கமா வந்திருக்கும்… உறக்கம் தழுவாத கண்களில் அவனவள் நினைவுகள் மட்டுமே அவனைத் தழுவி இருந்தன… எப்போதுடா… அவளைக் கண்களில் நிரப்புவோம் என்றபடியே பேருக்கு படுத்திருந்தவன்… அதிகாலையிலேயே எழுந்து… என்ன செய்வதென்று தெரியாமல்… என்னென்னவோ செய்து நேரத்தைக் கடத்தி…. இதோ இங்கும் வந்து விட்டான்…


கண்மணியைப் பார்க்கப் போகும் மகிழ்ச்சி… அவள் தன்னோடு இருக்கப் போகிறாள் என்ற உற்சாகம் இது எல்லாமே ஒருபக்கம் இருந்தாலும்… அவள் அவளின் கடந்தகாலம்… இவற்றையும் தனக்குள் ஒருபக்கம் வைத்திருந்தான் தான்… அவளாகச் சொல்லும் வரை… தானும் கேட்கப்போவதில்லை… அது தேவையும் இல்லை… என்று நேற்றே முடிவெடுத்திருக்க… அந்த எண்ணங்களை நேற்றே ஒதுக்கியும் விட்டான்...


அதே நேரம் அந்த துரை மற்றும் மருதுவுக்கு முடிவு கட்டிவிட்டுத்தான்… தன் மனைவியிடம் கணவனாக நெருங்குவது!!! என தனக்குள் முடிவெடுத்தும் இருந்தான் ரிஷி… ஆனால் அவனால் கண்மணியை இனி விட்டு விலகி இருக்க முடியாது… மனதளவிலும்…. உடலளவிலும்… அப்படி இருக்க… தான் எடுத்திருக்கும் இந்த முடிவு எந்த அளவுக்கு சாத்தியம் ஆகும் எனத் தெரியவில்லை…


எப்படியோ தன் மனைவிக்கு நடந்த அநியாயத்துக்கு கணவனாக ஒன்றையும் செய்யாமல்… அவளை நெருங்கக் கூடாது… அவளிடம் உரிமை எடுக்கக் கூடாது.. இதுதான் கண்மணி கிளம்பி விட்டாள் என்று தெரிந்ததும் அவன் எடுத்த முடிவு…


இந்த ஆறு வருடங்களில் ரிஷியாகத்தான் வாழ்ந்திருந்தான் ரிஷிகேஷ் உணர்வுகள் மறந்து மரத்து… ஆனால் மனைவியோடு இங்கு கடக்கப் போகும் இந்த இரு வாரங்கள் அவனால் அப்படி இருக்க முடியுமா அதுவும் கண்மணியின் ரிஷியாக… அவனுக்கே சவாலான விசயம் தான்… நினைத்தபடி பெருமூச்சை விட்டபோது… அவனைச் சுட்ட அவன் மூச்சுக் காற்றின் வெப்பமே… அவனின் ஏக்கத்தை, தாபத்தை ரிஷிக்கே உணர வைத்ததுதான்…


“எப்படியோ சமாளிக்க வேண்டும்” கையில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை திறந்து… ஒரே மூச்சில் குடித்து முடித்தவன்… தன்னைக் கட்டுக்குள் கொண்டு வந்திருந்த போதே… அதோ… அவனின் கண்மணி… வந்துவிட்டாள்… அவனை நோக்கி…


மிக மிகச் சாதாரணமாக வந்திருந்தாள்… சல்வார் அணிந்திருந்தவள்.. கூந்தலை குதிரைவால் போல உயர்த்திக் கட்டியிருந்தாள்… கையில் ஹேண்ட் பேக்… அவன் பார்க்கும் அதே ’கண்மணி’ இல்ல கண்மணியாக ஆஸ்திரேலியாவிலும்…. பெரிய வித்தியாசம் எல்லாம் இல்லை


ஆனால் அவன் கொடுத்த இளம் சிவப்பு நிற மூக்குத்தி அவனின் கண்மணியாக அவனிடம் புதிதாகப் பதிவு செய்திருக்க…. அதில் மெய்மறந்தவனாக…. அவளைப் பார்த்து கைகளைக் கூட அசைக்க முடியாமல்… அவளையே பார்த்துக் கொண்டிருக்க… கண்மணியும் இவனைத் தேட ஆரம்பித்து… அவள் பார்வை வட்டத்தில் ஒரு கட்டத்தில் இவனும் விழுந்திருக்க… நொடியில் சட்டென்று அவள் கண்களில் அப்படி ஒரு பளபளப்பு… அடுத்த நொடியே அப்படிப் பார்த்தது அவள்தானா எனும் அளவுக்கு இயல்பாக அவனைப் பார்த்தபடியே வந்தவளை பார்த்து ரிஷியின் உதடுகள் பெரிதாக விரிந்தன…


இதயத்தில் இருந்த ரிஷியின் உயிர்… அதன் கூட்டை மாற்றி அவன் கண்மணிகளுக்குள் ’கண்மணி’யாக இடம் மாறி இருந்தது… அவளைப் பார்த்த அந்த நொடிகள்…


“அப்பா எங்கே” இவன் அருகில் வந்து நின்றவள்… நட்ராஜைத் தேடியபடியே கேட்க…


“என்னது அப்பாவா???…” இப்போது ரிஷியின் உறைந்திருந்த இதயம் மட்டுமில்லை மூளையும் அதன் வேலையைப் பார்க்க ஆரம்பிக்க… அவளைப் பார்த்து முறைத்தவன்

“ஒருத்தன் உனக்காக கால் கடுக்க ரெண்டு மணி நேரம் … வெயிட் பண்ணிட்டு இருக்கேன்… அது கூட விடு… மூணு மாசமாச்சு என்னைப் பார்த்து… இவ்வளவுதானாடி உன் ஃபீல்…” அதிர்ந்து கேட்டவனின் டீஷர்ட் காலரை எட்டிப் பிடித்து தன் அருகே இழுத்தவள்… அவன் முன் நெற்றிக் கேசத்தைக் கைகளால் விலக்கி அவன் காயத்தைப் பார்த்து… அவனை முறைக்க..


“நான் போகலை… அவனுங்கதான் முதல்ல வம்பிழுத்தாங்க…” வெளியில் சென்ற சிறுவன் போல… சண்டை போட்டு காயத்தோடு வந்து அம்மாவிடம் புகார் சொல்லும் சிறு குழந்தை பாவனையுடன் சொன்னவனிடம்…


“அப்போ இது என்ன” இடது கைக் கட்டைக் காண்பித்தவள்… இப்போது அவன் டிஷர்ட்டை விட்டபடி அவனைத் தள்ளி விட… அவளுக்காக வேண்டுமென்றே தள்ளாடி நின்றவன்...


“ஏர்போர்ட்ல எல்லாரும் பார்க்குறாங்கடி…”


”சார்க்கு எல்லாரும் பார்க்கிறாங்கன்னு… பொண்டாட்டி பக்கத்தில இருக்கும் போதும்... அவ கூட பேசும் போதும் மட்டும் தான் தெரியும்… ஷோவை ஊரே பார்த்துச்சே… அப்போ என்னாச்சு” என்றபடியே

“லக்கேஜ பிடிங்க…” - அவன் கையில் தன் ட்ராலியைத் தள்ளியவள்… அவனுக்காக காத்திருக்காமல் அவனைத் தாண்டி முன்னே போக…

“ஓய்.. முதலாளி பொண்ணா வந்துருக்கேன்னு காட்றியாடி…” தன் கைகளுக்கு ட்ராலியை இடமாற்றியவன்… இரண்டே எட்டுகளில் வேகமாக அவளை அடைந்தவன்…


“சரி விடு… முதலாளிப் பொண்ணுக்கு வேலை பார்த்து… பொண்டாட்டிகிட்ட வசூல் பண்ணிறலாம்…” உல்லாசமாக கண் சிமிட்டியவனின் காயம் பட்ட கையிலேயே அடிபோட்டவளிடம்


“ஆ… அம்மா… அடிக்கிறாளே…“ போலியாகக் கதறியபடியே அவளைப் பார்த்தவன்… அடுத்த நொடிஅதிர்ந்த பார்வையில்…


”கண்மணி… எங்கடி நான் கொடுத்த மூக்குத்தி… போட்டேன் போட்டேன்னு சொன்ன… எங்க காணலை” அவன் பதற்றம் கண்மணிக்குமே தொற்ற…