கண்மணி... என் கண்ணின் மணி-57

Updated: Dec 3, 2021

அத்தியாயம் 57 :


அழுகை என்ற உணர்ச்சி… கண்மணிக்கு அந்நியமாகப் போயிருந்ததோ என்னவோ… ஓவென்று கதறி அழவேண்டும் போல இருக்க… அவளால் அது முடியவே இல்லை… அழுகைக்கு கூட பழக்கம் இருக்க வேண்டும் போல….


தூரமாக தூக்கிப் போட்டிருந்த அலைபேசியை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் கண்மணி…. கோபத்தை அடக்கினாளா… கோபத்தைக் காட்டத் துடித்தாளா… அழுகையை அடக்கினாளா… அழ நினைத்தாளோ… எதுவுமே அவளுக்கு தோன்றவில்லை…


ரிஷியோடு பேசினால்… தன் கவலை எல்லாம் போய் விடும் என எவ்வளவு சந்தோசத்தோடு… நம்பிக்கையோடும் அவன் அழைப்பை எடுத்தாள்…. மற்றதெல்லாம் மறந்து விட்டு…


ஆனால்… அவனோ?????…


அமைதியாக வெறித்தாள்… சற்று தள்ளி கேட்பாரற்றுக் கிடந்த அலைபேசியை… அதன் நிலை தன் நிலையை நினைவுபடுத்துவது போல் இருக்க… வேகமாக தன் பார்வையை அதிலிருந்து விலக்கி… தன் தாயின் புகைப்படத்தில் மீண்டும் தன் பார்வையை வைத்திருந்தாள்


அலைபேசி் அழைப்பு அப்படியே இருந்தது இருமுனையிலும் அணைக்கப்படவில்லை… கிட்டத்தட்ட 10 நிமிடத்துக்கும் மேலாக அதே நிலையில் தான் இருந்தது… கட் செய்யாமல்தான் இவளும் தூக்கி எறிந்திருந்தாள்… அவனுமே இன்னும் கட் செய்ய வில்லை போல… ஆனால் அடுத்த சில நிமிடங்களில் கண்மணியின் அலைபேசி… தானாக அதன் உயிரை நிறுத்தி இருந்தது… அதன் சார்ஜ் இல்லாத காரணத்தால்…


அந்த அலைபேசியின் நிலைதான் கண்மணிக்கும்… அவளின் மொத்த சக்தியும் அவளுக்கு வடிந்தார்ப் போல உணர்வு… எத்தனை உற்சாகம் அவள் குரலில் அவனோடு பேச ஆரம்பித்த போது…


---


”ரிஷி… நான் வீட்டுக்கு வந்துட்டேன்…” என்றவள் தன் குரலில் மற்றதெல்லாம் மறைத்து உற்சாகத்தை வரவைத்தவளாக அவனிடம் பேச ஆரம்பிக்க…


எதிர்முனையில் பலத்த நிசப்தம்… அழைத்தவன் அவன்தான்… ஆனால் அவனுக்கு முன்னேயே இவளும் பேசி விட்டாள் தான்… இன்னும் என்ன…


“சாரி… வந்த உடனேயே போன் பண்ணலாம்னு தான் நினைத்தேன்… சாரி ரிஷிக்கண்ணா “ இப்போது நிசப்தம் மட்டுமே


“அத்தை… நான் வருவேனோ மாட்டேனோன்னு டேப்லட் கூட எடுத்துக்க்காம முழிச்சுட்டு இருக்காங்க ரிஷிக் கண்ணா…” தன் அத்தையைப் பற்றி செல்ல புகாரை வைக்க அப்போதும் ரிஷியின் புறம் மௌனம் மௌனம் மட்டுமே


ரிஷியின் மௌனம் எப்போதுமே கண்மணிக்கு பிடிக்காது… அவன் அப்படி இருந்தால்… அவன் மனதில் ஏதோ ஒன்று இருந்து அவனை அரித்துக் கொண்டிருக்கிறது என்பது அவள் மட்டுமே உணர்ந்தது…


“ரிஷிம்மா… ஓகே தானே… என்னாச்சும்மா” எனும் போதே அந்த வார்த்தைகளை முடிக்கக் கூட விடவில்லை அவன்…


”விக்கிய அடிச்சியாடி” பட்டென்று தெறித்து விழுந்தன வார்த்தைகள்… ரிஷியிடமிருந்து… ஆக்ரோஷமாகவே..


கண்மணிக்கும் புரிந்தது… இதற்கு காரணம் யார் என்று… விக்கியே ரிஷியிடம் சொல்ல வேண்டாமென்று சொல்லியும்… ரிதன்யா ரிஷியிடம் சொல்லி இருக்கின்றாள் என்பது…


இனி இதில் மறைப்பதற்கு என்ன இருக்கிறது… அறைந்தது உண்மைதானே…


“ஆமாம்… அவர்” என ஆரம்பிக்கும் போதே… அவளைப் பேசவே விடாமல்


“போய் ரிதன்யாக்கிட்ட அவன் நம்பர் வாங்கி சாரி கேளு.. முதல்ல…” சொன்னவனிடம்…


“எதுக்கு….” கேட்டவளின் குரலில் அவளையுமறியாமல் மிரட்டல் தொணி வந்திருந்ததுதான்…


”அவர் பேசினதுக்கு நான் அறைந்தேன்… அவ்ளோதான்…” தன் நிலைப்பாட்டை அவனுக்கு சொல்லி முடிக்க


“என்ன வேணும்னாலும் அவன் பேசி இருக்கட்டும்… அதை நீ என்கிட்டதானே சொல்லிருக்கனும்… அதை விட்டுட்டு… உனக்கு யார் கை நீட்ற உரிமைலாம் கொடுத்தது… 27 வயசுப் பையனை… கை நீட்டி அடிக்கிறது சாதாரண விசயமா… உன்னை ரவுடின்னு சொல்வேன் தான்… அதெல்லாம் எங்கூட மட்டும் தான் இருக்கனும்… எங்கிட்ட மட்டும் தான் இருக்கனும்” நிதானமான குரலில் ரிஷி சொன்னாலும் அழுத்தமான கண்டிப்பு மட்டுமே இருக்க


”உன் அப்பா… உன் தாத்தா பாட்டி… இவங்கள்ளாம் உன்னைக் கேள்வி நீ என்ன செய்தாலும் கேட்காமல் இருக்கலாம்… அதுக்காக நானும் அப்படியே இருப்பேன்னு எதிர்பார்க்காத… விக்கி கிட்ட மன்னிப்பு கேட்கிற…”


”ரிஷி” இடை மறித்திருந்தாள் கண்மணி…


“மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது… விக்கி உங்க ஃப்ரெண்ட்னா அது உங்களோட… நான் அதுக்கு அசிங்கபட முடியாது… நான் போனை வைக்கிறேன்” கண்மணியும் கறாராகவே சொல்ல…


“ஏய்… என்னடி… பேசிட்டு இருக்கேன் நான்… போனை வைக்கிறேன்னு தெனாவெட்டா சொல்ற…” என்று ரிஷியும் எகிற ஆரம்பிக்க…


“நீங்க வைக்கும் போதெல்லாம் தப்பு இல்லை அப்படித்தானே… ப்ச்ச் ரிஷி நான் வைக்கிறேன்… எனக்கு உங்ககிட்ட இப்படிலாம் பேசவே பிடிக்கலை… ப்ளீஸ் வைக்கிறேன்… நாளைக்கு பேசுறேன்… ஆனால் மன்னிப்பு மண்ணாங்கட்டினா… சாரி… பேசாதீங்க ”


இப்போது ரிஷி…


“உனக்கு சாரி கேட்கிறதுல அவ்ளோ பிரச்சனை… அப்படித்தானே கண்மணி… நடு ரோட்ல வச்சு அவனை அடிச்சுருக்க… அவன் எனக்காக மட்டும் தான் உன்னை பேசாம விட்ருக்கான்… அவன் எவ்ளோ கோபக்காரன்னு எனக்கு மட்டும் தான் தெரியும் கண்மணி…”


”இருந்துட்டு போகட்டும்… அது அவனோட… எவன் வந்தாலும் சமாளிச்சுப்பேன்… எனக்கு ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லுங்க… உங்க தங்கச்சி எத்தனையோ தடவை என்னை இன்சல்ட் பண்ணிருக்காங்க… அப்படி பண்ணும் போதெல்லாம்… அவகிட்ட பேச முடியாமல் அவளுக்கு பதிலா சாரி கேட்டுட்டு வந்து என்கிட்ட நிற்பீங்கதானே… ஃப்ரெண்ட் அவ்ளோ முக்கியம்னா… வேதனைப் படுறார்னா… இன்னைக்கு பொண்டாட்டிக்குப் பதிலா ஃப்ரெண்ட் கிட்ட சாரி சொல்லிருங்க… நான்… கேட்க முடியாது”


”கண்மணி… கண்மணி“ என்று மட்டும் ரிஷி சொல்லி நிறுத்தியவன்.. தலையைக் கோதியவனாக…


”ஏன்டி புரிஞ்சுக்க மாட்ற… ரிதன்யாவும் நீயும் ஒண்ணா எனக்கு… அவ எனக்கு தங்கை… ஒரு லிமிட் இருக்கு… உன்கிட்ட எனக்கு அது இல்லை…. புரியுதா புரியலையா உனக்கு”


“புரியல… போதுமா… புரிஞ்சுக்கவும் விரும்பல… உங்களுக்காக, உங்க தங்கை குடும்பம்னு பொறுத்துக்கலாம்… உங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சகிச்சுக்கனும்னு… இந்த கண்மணிக்கு தலை எழுத்து இல்லை… இன்னைக்கு விக்கினு வந்து நிப்பீங்க… நாளைக்கு இன்னொருத்தன்… இன்னும் எத்தனை ஃப்ரெண்டோ… சோ அதை நீங்க புரிஞ்சுக்கங்க… இதுதான் கண்மணி… இப்படித்தான் நான்”


“ஓ அப்படிங்களா மேடம்… நீங்க கண்மணி மட்டும் இல்லை… கண்மணி ரிஷிகேஷ்… என் பொண்டாட்டி இப்படித்தான் இருக்கனும்னு நினைக்கிறது தப்பா…. அதை உங்ககிட்ட எக்ஸ்பெக்ட் பண்ணக் கூடாதா… ”


கண்மணி ஏதோ பேச வரும் போதே…


“நீ என்னை சாதாரண ரிஷிகேஷ்… உங்க அப்பாகிட்ட வேலை பார்க்கிறவன்னு மட்டமா நினைக்கலாம்… என்கிட்ட எதையும் எதிர்பார்க்காமல் இருக்கலாம்… ஏன் உன் புருஷனா கூட நினைக்காமல் இருக்கலாம்… அது உன்னோட பிரச்சனை… ஆனால் என் மனைவியா… என் ஃப்ரெண்டுக்கு நீ ரெஸ்பெக்ட் கொடுக்கனும்.. விக்கிகிட்ட மன்னிப்பு கேட்கணும்… இது என்னோட எக்ஸ்பெக்டேஷன் இல்லை… ஆர்டர்… யோசிச்சுக்கோ…”


கண்மணியின் புருவம் சுருங்கியது…