கண்மணி... என் கண்ணின் மணி-44-2

அத்தியாயம் 44-2


/*

கண்மணி என் கண்மணி

கண்ணிலே காதல் தீயடி


கண்மணி என் கண்மணி

கண்ணிலே காதல் தீயடி


உன் தீண்டலால் நிலை ஆகினேன்...

உன் பார்வையால் கைதானினேன்


நாடி நரம்பில் நீதானே

தேடி களைத்ததேன் ஜீவனே


நெஞ்சுக்கள் கனக்கிறதே இது என்ன மாயமோ

சொல்லுக்குள் வரிகள் இல்லை தவிக்கின்றேன் நான்


கன்ணுக்குள் என் உயிரே

இதுதான் காதலா

சொல்லடி என் சகியே நிஜம் தானே


துயிலை மறந்த இரவுகள் கனவைத் தொலைத்ததேன்

தரையில் விழுந்த மீனைப் போல துடித்து பிழைக்கிறேன்


மனதை தொலைக்கும் நினைவுகள் போதும் போதுமே


நெஞ்சம் எறிக்கும் தனிமையும் என்னைச் சிதைப்பதேன்*/


அவள் எழுவதற்கு முன்னரே ரிஷி எழுந்து போய்விட்டான்…


தெரிந்ததும் சட்டென்று கண்களில் ஈரம் படர ஆரம்பித்தது தான்… ரிதன்யா இருப்பதை உணர்ந்து.. சட்டென்று… தன்னைச் சமாளித்து ரிதன்யா அறியாமல் குனிந்து கண்களின் ஓரத்தைத் துடைத்தவள்… எழ முயற்சிக்க… சுத்தமாக எழ முடியவில்லை… இருந்தும் தானே எழ முயற்சிக்க


ஏழு மாத கர்ப்பிணியான அவளின் நிலை உணர்ந்து ரிதன்யாதான் சுதாரித்தவளாக…


“பார்த்து அண்ணி” என்று கண்மணியின் கரம் பிடித்து எழுந்து அமர வைத்தாள்…


“அண்ணா கீழ இருக்காங்க…” கண்மணியின் தேடல் உணர்ந்து ரிதன்யாவாகவே சொல்ல… கண்மணி சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க… அதுவோ மணி 5 எனக் காட்டிக் கொண்டிருந்தது


ரிதன்யாவிடம் அதன் பிறகு ஏதும் பேசவில்லை கண்மணி…. ஓய்வறைக்குச் செல்லத் தோன்ற… எழுந்தவளுக்கு சோதனையாக கர்ப்பிணிப் பெண்களுக்கு காலையில் ஏற்படும் தசைப்பிடிப்பு… இப்போதெல்லாம் அடிக்கடி ஏற்படுவதுதான்… இன்றும் அது வந்திருக்க


காலை எடுத்து வைக்க முடியாமல் வலியில் முகத்தை சுழித்தவளைப் பார்த்த ரிதன்யாதான் பதறி விட்டாள்…


“அண்ணி… என்னாச்சு… என்ன பண்ணுது… அம்மாவைக் கூப்பிடட்டுமா” என்று படபடத்தவளிடம்


“ரிதன்யா…ஒண்ணுமில்ல… ஜஸ்ட் லெக் க்ராம்ப்ஸ் தான்…” என்ற படியே மீண்டும் காலை கீழே தரையில் ஊன்ற முயற்சிக்க காலை அசைக்கவே முடியவில்லை.. ஒரே புறம் படுத்து விட்டாளோ… இன்று வழக்கத்துக்கும் மாறாக அவளின் வலி அதிகமாகவே இருக்க…


எவ்வளவோ முயன்றும் வலி தாங்க முடியவில்லை… அதில் அவளையுமறியாமல்…


“ரிதன்யா” என்று அழைத்தவளாக பல்லைக் கடித்து ரிதன்யாவின் கைகளைப் இறுகப் பற்றிக் கொள்ள…


தன் அண்ணி தன் கைகளைப் பிடித்த விதத்திலேயே அவள் நிலைமை உணர்ந்த ரிதன்யாவுக்கோ… என்ன செய்வதென்றே தெரியவில்லை… பதட்டத்தில் கண்மணியின் அருகில் அமர்ந்தவள்…


“சொல்லுங்க அண்ணி… இருங்க அம்மாவைக் கூப்டறேன்… உங்க முகமே சரி இல்லை… டெய்லி இப்படித்தான் கஷ்டப்படறீங்களா அண்ணி” அவள் தழுதழுத்த போதே


ரிதன்யாவின் பய முகத்தை கண்ட கண்மணி … வலி இருந்தும்… பெரு மூச்சு விட்டு… தனக்குள் சமாளித்துக் கொண்டவள்.. முகத்தை இயல்பாக்கியபடி…

“வார்ம் வாட்டர் மட்டும் எடுத்துட்டு வாங்க… யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்” கண்மணி சொல்லி முடிக்கவில்லை…. ரிதன்யா அவள் அன்னைக்கு அலைபேசியில் அழைப்பும் விடுத்திருந்தாள்… விசயத்தையும் சொல்லியும் முடித்திருந்தாள்


---


”ம்மா… இந்த லிஸ்ட்லாம் ஒகே தானே… என் மாமாக்கு ஒண்ணும் தெரியாது... அப்புறம் அவரை ஏதாவது சொன்னீங்க… அவ்ளோதான் பார்த்துக்கங்க” என்று ரிஷி தன் அன்னையுடன் செல்லமாக வம்பளந்து கொண்டிருக்க… அவன் அருகில் விக்ரம் நின்றிருந்தான் …


நேற்றைய இரவை உறக்கத்துக்கு தாரை வார்க்காமல்… தன்னவளுக்கு சமர்ப்பித்து… அலைபேசி வாயிலாக அவளோடு பேசிக் கொண்டிருந்தவன்… அடுத்து அதிகாலையிலேயே இங்கும் வந்து ஆஜாராகி இருந்தான்….


நண்பன் வீட்டு விசேஷம்… அவனது மனைவிக்கு வளைகாப்பு… அந்த வீட்டின் மூத்த மாப்பிள்ளையாக பொறுப்பை இப்போதே ஏற்றிருந்தான் விக்ரம்…


“ரிஷிக்கண்ணா… உங்க மாமனாரை நாங்க என்ன சொல்லப் போகிறோம்.. அவர் பொண்ணுக்கு அப்பாவா வந்து நின்றால் போதும்… நமக்குத்தான் பிரச்சனையே… மணியோட ஃபங்கஷனை ஒழுங்கா நடத்தனும்… அவங்க தாத்தா பாட்டி… மாப்பிள்ளையோட வீட்ல… யாரும் நம்மள ஏதும் குறை சொல்லிடக் கூடாது… நாமதான் எங்கேயாவது சொதப்பிருவோமான்னு பயமா இருக்கு… கல்யாணத்தப்போ எனக்கு ஒண்ணும் முடியலை… இப்போ என் மருமகளுக்கு நான்தான் எல்லாத்தையும் குறை இல்லாமல் பார்த்துக்கனும்” என்ற இலட்சுமியை


”ம்மா… நார்மலா இருங்க… ரிலாக்ஸ் கூல்… நீங்க இப்படிப் பதட்டப்பட்டா எப்படி… இப்போதான் சரியாகி இருக்கீங்க… எல்லாத்தையும் இழுத்துப் போட்டுக்காதீங்க… நான் பார்த்துக்கறேன்” என்றவனைப் பார்த்த விக்ரம்


“கண்மணி எழுந்து என்ன சொல்வாளோன்னு ஒரு பதட்டம் கூட இல்லையாடா உனக்கு… அவகிட்ட சொல்லாம இந்த ஏற்பாடெல்லாம் பண்ணனுமா?“ என்ற போதே…


“சொல்லிருக்கலாம்தான்… ஆனால் நாம சொன்னா அவ அதை வேண்டாம்னு சொல்லிட்டு… அது ஏன் வேண்டாம்னு சொன்னதுக்கு காரணமா இன்னொரு பெரிய லெக்சர் கொடுப்பா… அவ ஒண்ணு சொல்லிட்டா இங்க யாரும் அடுத்து அதை மறுத்து பேசக்கூட நினைக்க மாட்டாங்க… அவளுக்கு பிடிக்கலை விட்ரு… அவ்ளோதான்… இவங்க எல்லோருடைய வார்த்தையும் அதுவாகவேத்தான் இருக்கும்…”


“என் கூட வாழ மாட்டேன்னு அவ சொன்னப்போ இவங்க எல்லோரும் பேசினாங்கதான்… ஆனால் என்னோடு வர வைக்க முடிந்ததா இல்லை இவங்க யார் வார்த்தையாவது ஒரு மரியாதைக்காகக் கூட கேட்டாளா அவ…. அவகிட்டலாம் சொல்லி… சம்மதம் வாங்கி… சான்சே இல்லை… அடமண்ட்…” என்றவன்


”இப்படி அதிரடியா ஏதாவது பண்ணினால் தான் கொஞ்சம் அடங்குவா… “ ரிஷி முடிக்க


“அவளைப் பற்றியும் தெரியும்… அவ பிடிவாதமும் உனக்குத் தெரியும்… இவ்ளோ சொல்ற நீ…. இப்போ உனக்கு வளைகாப்புனு போய் நின்னால்… அவகிட்ட சொல்லாமல் இ