கண்மணி... என் கண்ணின் மணி- 44-1

அத்தியாயம் 44-1

/*நீ அந்த மாணிக்க வானம் இந்த ஏழைக்கு நீ ரொம்ப தூரம்

உன்னிடம் நான் கொண்ட மோகம் இந்த ஜென்மத்தில் தீராத பாவம்

மேடைக்கு ராஜாபோல் வேசங்கள் போட்டாலும் ஏழைக்கு பல்லாக்கு ஏறும் நாளேது*/


ரிஷியும் நட்ராஜும் ஆஸ்திரேலியா கிளம்பும் தினமும் வந்திருக்க… இதோ லட்சுமியைத் தவிர ரிஷியின் குடும்பம் நட்ராஜோடு ஏர்போர்ட் நோக்கிய பயணத்தில்…


ரிஷி ஓட்டுனர் இருக்கையின் அருகில் அமர்ந்திருக்க… மற்ற அனைவரும் பின்னால் அமர்ந்திருந்தனர்…


அனைவருமே அமைதியின் உருவமாக பயணித்து கொண்டிருக்க… ரித்விகா மட்டுமே அங்கு பேசிக் கொண்டிருக்க… எவ்வளவு நேரம் அவள் ஒருத்தியே பேசிப் பேசி மற்றவர்களிடம் இருந்து பதிலை வாங்குவது… ரித்விகாவும் ஒரு கட்டத்தில் ஓய்ந்து அமைதி ஆகி… வேடிக்கை பார்க்க ஆரம்பித்திருந்தாள்…


ஒருவழியாக விமானநிலையமும் வந்திருக்க.. அனைவரும் இறங்க ஆரம்பித்த தருணத்தில் சரியாக ரிஷியின் அலைபேசி ஒலிக்க… எடுத்துப் பார்க்க… சத்யாவாக இருக்க… ரிஷி மற்ற அனைவரையும் முன்னே செல்லச் சொல்லிவிட்டு… சத்யாவோடு பேச வசதியாக தனியிடம் நோக்கிச் சென்று விட்டான் …


அலைபேசியை காதில் வைத்தபடியே ரிஷி அவர்களை விட்டு சென்று கொண்டிருந்தபோதே


”அண்ணி… நோட் பண்ணீங்களா… அண்ணாவோட ரிங் டோன் மாறிருச்சு கேட்டீங்களா…” இப்போது இதுதான் முக்கியம் என்பது போல ரித்விகா தன் அண்ணியிடம் கிசுகிசுத்தவள்…


“ஃபீலிங்க்ஸ் ஆஃப் ஆஸ்திரேலியா போல… உங்க ஞாபகம் வரும்னு எங்க அண்ணன் ரிங்டோனை மாத்திட்டாங்க போல… அப்படியா அண்ணி…” தன் அண்ணியை ஓட்ட ஆரம்பிக்க... கண்மணி இதற்கெல்லாம் பதில் சொல்லி விடுவாளா என்ன… மென்னகை மட்டுமே பதிலாக ரித்விகாவிற்கு கிடைத்தது


“ஆனால்… எங்க அண்ணா முகத்தைப் பார்த்தால் ஃபீலிங்ஸ் இருக்க மூஞ்சி மாதிரியும் தெரியலை… என்னவோ போங்க…. எங்க உங்க ஃபேஸ் காட்டுங்க பார்க்கலாம்… அதுலயாவது ஏதாவது ஃபீலிங்க்ஸ் இருக்கான்னு” என்ற ரித்விகா… தன் அண்ணி கண்மணியைப் பார்க்க…


அவள் அண்ணி இவளைக் கவனித்தால் தானே… அவளோ சற்று தள்ளி நின்று அலைபேசியில் பேசிக் கொண்டிருந்த அவள் கணவனை அல்லவா பார்த்துக் கொண்டிருந்தாள்…


அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாலும் எதையோ யோசிக்க ஆரம்பித்திருந்த அவனது முகம் , நெறிந்த புருவ முடிச்சு என அவனின் தீவிர பாவத்தை கண்மணிக்கு உணர்த்த ஆரம்பிக்க… ரித்விகா பேசுவதைக் கேட்டுக் கொண்டே நடந்து போய்க் கொண்டிருந்தவள் ரித்விகாவிடம் கவனம் சிதறி… தன் கணவனைப் பார்த்து அப்படியே நின்று விட்டாள்…


ரிஷியின் ஒரு சிறு புருவச் சுழிப்பு பார்த்த நொடி அவனை விட்டு அவளால் நீங்கிச் செல்ல முடியவில்லை… அடுத்த அடி எடுத்து வைக்காமல் நின்று விட்டாள்…


கண்மணியைக் கவனிக்காமல் பேசிக் கொண்டே நடந்து சென்றுகொண்டிருந்த ரித்விகா அப்போதுதான் கண்மணி தன்னோடு வராததைக் கவனித்தவளாக நின்று தன் அண்ணியை அழைக்க…


ரிஷியுடன் வருவதாகக் கூறி மற்ற மூவரையும் முன்னே அனுப்பியவள்… ரிஷியின் அருகேயும் செல்லாமல் இங்கிருந்தபடியே அவனைப் பார்த்தபடியே அவனுக்காக காத்திருக்க ஆரம்பிக்க…


ரிஷியும் தான் நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்தே தன் குடும்பத்தைப் பார்த்தபடியேதான் பேசிக் கொண்டிருந்தான்… இப்போது கண்மணி மட்டும் அவர்களோடு போகாமல் அங்கேயே நின்று இவனுக்காகக் காத்திருக்க ஆரம்பிக்க… அதைக் கவனித்தவனாக


“ஒரு நிமிசம் சத்யா” என்று சத்யாவிடம் சொல்லியபடியே… காதில் இருந்து அலைபேசியை எடுத்தவன்… தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த கண்மணியிடம்… அவளையும் அவர்களோடு போகச் சொல்லி தான் இருந்த இடத்தில் இருந்தே சைகையில் கைகளை ஆட்டிச் சொல்ல… கண்மணியோ… அதைக் கேட்டும்… தான் அவனுக்காக காத்திருப்பதாகவும் அவன் வந்த பின் இருவருமாக செல்லலாம் என்று அதே சைகை மொழியால் அவனுக்கு பதில் அனுப்பி இருந்தாள்….


உடனடி முறைப்பு அவள் கணவனிடமிருந்து அவளுக்கு பறிமாற்றம் செய்யப்பட்டிருக்க… அதை எல்லாம் கண்டுகொண்டால் அவள் கண்மணி ஆகிவிடுவாளா என்ன…


‘நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது’ என அக்மார்க் மனைவியாக உடனடி அலட்சியமும் அவன் கணவனுக்கு பறிமாற்றம் செய்யப்பட்டிருந்தது


ரிஷியும் அதற்கு மேல் அவளைக் கண்டுகொள்ளவில்லை… திரும்பி விட்டான்… காரணம் சத்யாவோடு அவன் பேசிக் கொண்டிருந்த விசயம் அப்படிப்பட்ட விசயம்…


“எப்போ ரிலீஸ் ஆனாங்க சத்யா… அதுவும் சென்னைக்கு வந்துட்டாங்கன்னு வேற சொல்றீங்க…” கட்டை விரலால் புருவத்தை நீவியபடியே யோசிக்க ஆரம்பித்தவன் மனம் முழுவதும்… தான் சென்னையை விட்டும் கிளம்பும் நேரத்தில் இவர்கள் வேறா என்ற எண்ணம் மட்டுமே… ஆனால் அதே நேரத்தில் இன்னொன்றும் தோன்ற மனம் நிம்மதியானது… அது அவன் வார்த்தைகளிலும் வந்தது


”சத்யா… விடுங்க… நாம டென்ஷன் ஆகத் தேவையில்ல… நான் இங்க இல்லாததும் இப்போதைக்கு நல்லதுதான்… அவனுங்க மனசுல இன்னும் பழி வாங்குற எண்ணம் இருந்துச்சுன்னா… என்னைத்தான் அவங்க பாளோ பண்ண நினைப்பாங்க… நானே இங்க இல்லாதப்போ… பெருசா அவங்களால ஏதும் வராதுன்னு தான் நினைக்கிறேன்…


சொன்னபோதே தன் அலைபேசியின் திரையைப் பார்த்து அவர்கள் தன்னை எச்சரித்த விதம் ஞாபகம் வர… மீண்டும் மனம் தவிக்க ஆரம்பித்திருந்தது ரிஷியின் மனம்“ஜஸ்ட் மொபைல் ஸ்க்ரீன்ல பார்த்து அன்னைக்கு சொன்னாங்கதான்… ரித்விகா, ரிதன்யா அப்புறம் மகிளா இவங்களாம் இன்னும் ஞாபகம் இருக்குமா என்ன சத்யா??”


“சின்னப் பாப்பாவை இப்போ பார்த்தால் அவங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை… ஆனால் ரிதன்யா மகிளா…” என்று சத்யா இழுக்க


விக்கி எத்தனையோ முறை சொல்லி எச்சரிப்பானே… இப்படி தங்கைகள் போட்டோவை எல்லோரும் பார்க்கும்படி அலைபேசி திரையில் வைக்காதே என்று… அடிக்கடி விக்கியின் இந்த அறிவுரை ஞாபகத்திற்கு வந்து குற்ற உணர்ச்சியில் ரிஷியைத் தள்ளும்… இன்றும் அப்படியே


“ரிதன்யா ரித்விகாவை விடுங்க கண்மணி பார்த்துப்பா… ப்ச்ச் மகிளா.. என்னால அவளுக்கும் பிரச்சனை…” என்றவனிடம்


“சார் அதெல்லாம் ஒரு பிரச்சனையும் வராது… இப்போதைக்கு அவங்க ரெண்டு பேரும் வெளிய வர முடியாது வந்தாலும் போலிஸ் கண்காணிப்பு வட்டத்துக்குள்ள தான் இருப்பாங்க… மொத்தமா வெளிய வரும் போதுதான் நமக்கு பிரச்சனை… அதுவும் உங்களை பழி வாங்க நினைத்தால் மட்டுமே… அதெல்லாம் மறந்துருப்பாங்க விடுங்க… ஆயிரம் ரிஷி அவங்க வாழ்க்கைல பார்த்திருப்பாங்க… அவங்க வெளிய வந்துட்டா என்னாகும்னு நீங்கதான் தேவையில்லாமல் கவலைப்படுறீங்க…”


இப்போது சத்யாவின் வார்த்தைகள் ரிஷிக்குமே ஆறுதலாக இருக்க


”இருந்தாலும் அலட்சியமா நாம இருக்கக் கூடாது சத்யா… நானும் இங்கே இல்லை… கேசவனுக்கு வேற திருமூர்த்தி விசயம் தெரிந்தால்… அவனும் நம்மைக் குறி வைப்பான்… இப்போ இவங்களும்… ” என்றவன்


“ஆனால் கண்மணியைத் தாண்டி யாரும் என் தங்கைகளை நெருங்க முடியாது… மகிளா தான் தனியா இருக்கா… பிரேம்கிட்டயும் சொல்லி வைக்கிறேன்… பார்த்துக்கலாம் விடுங்க… அல்ரெடி சொன்னதுதான்… நீங்க கம்பெனிய மட்டும் பார்த்துக்கங்க… நானும் நட்ராஜ் சாரும் வருகிற வரை… அதே போல கண்மணிக்கு சப்போர்ட்டா நீங்க இருப்பீங்கன்னு நினைக்கிறேன்… அவளுக்கு யாரும் தேவையில்லைதான்… அவ அதை விரும்பவும் மாட்டா… ஆனால் அவ பக்கத்தில நீங்க இருந்தால் எனக்கு நிம்மதி.. ரொம்ப அவள ப்ரொடெக்ட் பண்ற மாதிரி நடக்காதீங்க... அவளுக்கு அது பிடிக்காது… அப்புறம் லிமிட்டா பேசுங்க… சில சமயம் கொஞ்சம் சட்டுனு கோபம் வரும்… ஆனால் அது கூட நியாயமாத்தான் இருக்கும்… நீங்க அவகிட்ட கரெக்டா இருந்தால் அவளும் உங்கள சரியா ஹேண்டில் பண்ணுவா… “ ரிஷி கண்மணியைப் பற்றி அடுக்கிக் கொண்டே போக