மருத்துவமனையில் மைனர் ஆபரேஷன் என்ற அளவில் கொண்டு வந்து நிறுத்தி இருந்தது கண்மணி மூலமாக ஏற்பட்ட கண்ணாடிக் கீறல்…
வெறும் கண்ணாடி வளையல் கீறல்தானே என அடுத்தடுத்து தனக்கு நடந்த நிகழ்வுகளால் ரிஷி அதைக் கண்டு கொள்ளாமல் போக… அந்தத் துகளோ முக்கிய நரம்பில் கண்ணாடித் துகள் பதிந்து… செல்களை பாதிப்படைய வைத்திருக்க… அறுவைச்சிகிச்சை செய்தே சரி செய்ய வேண்டிய சூழ்நிலை… அறுவைச் சிகிச்சையும் முடிந்து… காலையில் வந்தவர்கள் மதியம்தான் கிளம்ப முடிந்திருந்தது…
ஓரளவு ரிஷிக்கு மயக்கம் சரியான பின்… மருத்துவர்களும்… ரிஷியைக் கண்காணித்து விட்டு… அவனைக் கிளம்பச் சொல்ல… வரவேற்பறையில் ரிஷியை அமர வைத்து விட்டு மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகள் வாங்க மருத்துவனையின் மருந்தகத்திற்கு சத்யா சென்று விட்டான்…
ரிஷிக்கு பெரிதாக மயக்கமெல்லாம் இல்லை… சிறிய அளவில் வலி மட்டுமே… முகம் சுருக்கி வேதனையை சமாளித்தபடி களைப்பாகவும் அமர்ந்திருந்தவனின் அருகில் அமர்ந்திருந்த பெண்ணும் அதே நிலையில்தான் இருந்தாள்… ஆனால் கண்கள் மூடி அமர்ந்திருந்தாள்…
ரிஷிக்குத் தேவையான மருந்துகளை போதுமான அளவு வாங்கி திரும்பிய சத்யா.. ரிஷியை அழைக்க அவன் அமர்ந்திருந்த இடத்திற்கு வர… அங்கு வந்தவனுக்கோ மிகப் பெரிய அதிர்ச்சி… அருகில் இருந்த பெண்ணைப் பார்த்து…
அது வேறு யாருமல்ல… நேத்ரா… தனசேகரின் இறப்பு அவளுக்கு தெரியுமா… இவள் இன்னுமா இங்கு இருக்கிறாள்… இவள் ஏன் இப்படி இருக்கிறாள்… என்று யோசித்தவனாக ரிஷியின் அருகே போனவன்… ரிஷியிடம் ஏதும் சொல்லாமல் ரிஷியை அழைத்துக் கொண்டு வெளியே வந்து விட்டான்…
ரிஷியிடம் சொல்லலாமா வேண்டாமா என சத்யா யோசனையுடன் ரிஷியுடன் நடந்து வந்து கொண்டிருக்க… ரிஷியே… சத்யாவிடம்… அந்தப் பெண்ணைப் பற்றி பேச ஆரம்பித்திருந்தான்
“சத்யா… என் பக்கத்தில இருந்தாங்கள்ள… அவங்களுக்கு கர்ப்பப்பைல ********* ஃபைனல் ஸ்டேஜாம் சத்யா… அவங்களுக்கு ஒரே பையனாம்… சிங்கிள் மதராம்… இந்த உலகத்தில எல்லாருமே பிரச்சனைலதான் இருக்காங்க…” ரிஷி வருத்ததோடு சொல்ல…
அமைதியாக ரிஷி சொன்னதைக் கேட்டபடியே நடந்து வந்த சத்யா… ரிஷி சொல்லி முடித்தபோது
“அவங்க யாருன்னு தெரிந்தால்…. நீங்க இவ்வளவு வருத்தப்பட்ருக்க மாட்டீங்க… ஆர்கே” சத்யா சொன்ன விதத்திலேயே ரிஷிக்கு அது யார் என்று தனியாக விளக்கம் தரத் தேவையில்லாமல் போனது… ஏனோ ரிஷிக்கு இப்போதெல்லாம் விளக்கம் என்று தனியாகத் தேவைப்படாமல் எதையுமே சட்டென்று புரிந்து கொள்ளும் மனப்பாங்கு வந்திருந்தது…
“ஹ்ம்ம்.. ஓ இவங்கதானா அது“ என்றவன்…
“அவங்க பையன் ஊட்டில இருக்கானாம் சத்யா… நாட்களை எண்ணிட்டு இருக்கேன்னு சொன்னாங்க… உங்க முதலாளி இறந்தது அவங்களுக்கு தெரியுமா சத்யா” ரிஷி நிதானமாகப் பேச…
சத்யா வியந்து அவனைப் பார்க்க… ரிஷி இதழ்கடையோரம் ஏளனப் புன்னகை
”என்னடா இவனுக்கு கோபம் தானே வர வேண்டும்… பதிலா இப்படி பொறுமையா பேசுறானேன்னு பார்க்கறீங்களா… அந்தப் பொண்ணு என்ன தப்பு பண்ணுச்சு… அது அவங்களோட இயல்பு… நான் நல்லவனு வேசம் போடலையே… உங்க முதலாளீ மாதிரி…” பற்களுக்கு இடையே வார்த்தைகள் கூட கடித்துக் குதறப்பட்டு வந்திருக்க… சத்யா இப்போது மௌனித்தான்தான் இருந்தும்…
”ரிஷி இன்னும் சாரையே குறை சொல்லிட்டு இருக்கிறத விட்டுட்டு… மேற்கொண்டு ஆக வேண்டியதைப் பார்க்க முயற்சி பண்ணுங்களேன்… அவரோட கனவே அந்த தொழிற்சாலையும் அங்கிருக்கும் மக்களும் தான்… உங்க அப்பாவை புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்களேன்…”
”புரிஞ்சு… அட போங்க சத்யா நீங்க வேற… அப்புறம் என்னது அது… கனவா… நல்ல காமெடி பண்றீங்க… அந்த ஆள் கனவு கண்டால்… நான் நிறைவேற்றனுமா என்ன… எல்லாம் நாசமா போகட்டும்…. கனவாம் அவரைப் புரிஞ்சுக்கனுமாம்….” என்று அவன் ஏளனமாகச் சொல்லி முடித்திருக்க… அதே நேரம் நேத்ராவும் அங்கு எதேச்சையாக வந்திருக்க… ரிஷியைப் பார்த்ததும் புன்னகைத்து வைத்தாள் நேத்ரா… ஏதோ இவனுக்கும் அவளுக்கும் நெடுநாள் பழக்கம் இருந்தது போல… புன்னகைத்தவள்… அவர்களைக் கடந்தும் சென்றிருக்க…
சத்யா… அவனிடம்…
“உங்களைப் பார்த்து..இவ்ளோ ஸ்னேகமா ரொம்ப நெருங்கினவங்க மாதிரி சிரிக்கிறாங்க…. எப்படி ரிஷி” என்று ஆச்சரியாமாகக் கேட்க
“என்கிட்ட வந்து உட்கார்ந்த போது களைப்பா தெரிஞ்சாங்க…. தாகமா இருந்திருக்கும் போல… எழப் போனவங்க தடுமாறினாங்க… உட்காரச் சொல்லிட்டு… தண்ணிர் எடுத்துக் கொடுத்தேன்… “ என்றவன்..
“நமக்குத்தான் எங்க போனாலும் இந்த பாழாப்போன மனசு கேட்க மாட்டேங்குதே??? இந்த மாதிரி ஒருத்திக்கு உதவி பண்ணித்தான்… இதோ இந்தக் காயத்தைக் கூட வாங்கிட்டு வந்திருக்கேன்… ” விரக்தியாக முடித்தவன்…
என்ன நினைத்தானோ… தன்னைக் கடந்து சென்று கொண்டிருந்த நேத்ராவைக் கைதட்டி அழைத்தான்….
“ஆர்கே… ஸ்டிட்ச் பிரிஞ்சுறப் போகுது” சத்யா அவனிடம் எச்சரித்த வார்த்தைகளை எல்லாம் லட்சியம் செய்யாமல்… கைகளைத் தட்டி நேத்ராவை அழைத்தவன்… அவள் திரும்ப
“தனசேகர் இறந்துட்டான் தெரியுமா உங்களுக்கு…” நேத்ரா அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள்… அவள் கேட்ட தனசேகர் என்ற பெயரால்…
கேசவன் மிரட்டியதால் தான் இங்கு வந்தாள்… அவளைப் பொறுத்தவரை சின்ன பொய்… சொல்லியும் விட்டு… இங்கிருந்து கிளம்ப நினைத்த போதுதான்… தனசேகர்… ஹர்ஷித்துக்கென சொத்துப் பத்திரத்தோடு வந்து… தன் வாழ்க்கையில் இனி தலையிட வேண்டாம் எனச் சொல்லிச் சென்றிருக்க… தனசேகரின் இந்த குணம் அவளை அதிர்ச்சி அடையச் செய்திருக்க… அடுத்த அதிர்ச்சி… அவளின் நோய்… இப்போது அடுத்த அதிர்ச்சி… தனசேகரின் மரணம்… அதிர்ச்சி அதிர்ச்சி மேல் அவளுக்குமே… அதிர்ந்து நின்றிருக்க..
”தெரியுமா தெரியாதா…” அதுவரைக் களைப்பாக இருந்தவனா எனும் அளவுக்கு ரிஷி சத்தமாகக் கேட்க…
நேத்ரா தன்னையுமறியாமல் தெரியாதென்று தலையை ஆட்ட
“அப்போ தெரிஞ்சுக்கங்க… அவர் இறந்து 15 நாள் ஆகிருச்சு… அவர் இறந்த நாளை நினைத்து சந்தோசமாக் கொண்டாடுங்க… “
கத்திச் சொன்ன ரிஷியை… பைத்தியக்காரனா என்பது போல அவள் பார்க்க.. சத்யாவும் கிட்டத்தட்ட அதே பார்வை தான் ரிஷியைப் பார்த்து வைத்திருக்க
“நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்… அந்தாளோட மகனா வாழ்ந்த நாட்கள் இனிமேல கிடையாதுன்னு… “ என்ற ரிஷியை பார்த்தன நேத்ராவின் விழிகள்… கூடவே அந்த அழகிய விழிகளில் கண்ணீரும் சேர்ந்திருக்க…
“நான் உங்ககிட்ட தனியா பேசலாமா” என்று அவன் முன் நின்றிருந்தாள்
----
”என்ன சொன்னாங்க ரிஷி… அவங்க பையன உங்ககிட்ட பார்த்துக்கச் சொல்லி சத்தியம் வாங்கினாங்களா” என்று கண்மணி கேட்டாள் கணவன் அமைதி ஆகி விட்ட காரணத்தால்….
தலையை மறுத்தவாறு இடவலமாக ஆட்டிய ரிஷி…
“அவங்களுக்கும் என் அப்பாக்கும் எந்த சம்பந்தமுமே இல்லைன்ற உண்மையைச் சொன்னாங்க கண்மணி…” ரிஷி இப்போது அழவில்லை… ஆனால் அவன் குரலிலேயே தெரிந்தது… அவன் குற்ற உணர்வில் தனக்குள் மறுகிக் கொண்டிருக்கின்றான் என்று…
“யெஸ்… கேசவன் திருமூர்த்தி இவங்க இரண்டு பேரும் அப்பாவை ஏமாத்துறதுக்காக ப்ளான் பண்ணியே இவங்கள கூட்டிட்டு வந்திருக்காங்க… திருமூர்த்தி அந்த ராஸ்கள்ல் பண்ணிய தப்பை என் அப்பா பண்ணினதா மாத்திட்டாங்க…”
அதிர்ச்சியோடு கண்மணி… ரிஷியைப் பார்த்தவள்…
”எப்படி ரிஷி… ஒரு இடத்தில கூடவா மாமாவால கண்டுபிடிக்க முடியலை… ஒரு சம்பந்தமுமே இல்லாத ஒரு பெண்ணை அவர் கூட சம்பந்தப்படுத்தி… அதை விட… ஆதாரமே இல்லாத ஒரு விசயத்தை நம்பி… அந்தப் பையனுக்கு சொத்தெல்லாம் எழுதி வைக்கிற அளவுக்கு… அந்த அளவுக்கு அவர் என்ன“ ஆரம்பித்தவள்… சட்டென்று நிறுத்தி விட்டாள்…
தன் மாமானாரை நினைத்து இப்போதுதான் கோபப்பட்டு கண்மணி பேச
“முட்டாளான்னு கேட்க வந்தியா கண்மணி… உன் கோபம் எனக்கும் புரியுது…
“அந்த அளவுக்கு பிரஷர் கொடுத்திருக்காங்க கண்மணி… யோசிக்கவே அவரை விடவில்லை… எங்க அடிச்சா அவர் எமோஷனலா ப்ளாக் ஆவாரோ அதைக் கண்டுபிடித்து கரெக்டா பண்ணியிருக்காங்க… நானும் அதற்கு ஒரு காரணம்… நான் பொறுப்பா வந்துருவேனான்னு அப்பாக்கு பெரிய சந்தேகம்… எனக்கு ஒரு சின்ன பிரச்சனைனாலும் அப்பா ஓடி வந்திருவாரு கண்மணி… என்னை சின்னப் பிரச்சனையைக் கூட அவர் ஃபேஸ் பண்ணவே விட மாட்டாரு… நானும் அப்படியே பழகிட்டேன்… ஆனால் போகப் போக ஏதோ ஒரு இடத்தில் அப்பாக்கு என் வருங்காலத்தை நினைத்து பயம் வந்திருக்கு அப்போதே… அவர் இல்லாம போய்ட்டா என்னால இந்த உலகத்தை எதிர்கொள்ள முடியாதோன்னு அவருக்கு தோணிருக்கு… எல்லாருமே என்னை சூதுவாது இல்லா பிள்ளைனு சொல்லச் சொல்ல அவரும் அப்படியே நம்பிட்டாரு…. அதை அடிக்கடி அவங்ககிட்ட சொல்லி புலம்பி இருப்பார் போல… மெல்ல மெல்ல அப்பா எங்க மூணு பேர் மேலயும் வைத்திருந்த பாசம் தெரிய அதை வைத்தே அவரை மடக்கிட்டாங்க…” சொன்னவன்
“இப்போ அவர் இல்லை… நான் என்ன ஆகிட்டேன்… செத்தா போயிட்டேன்… உயிரோடத்தான் இருக்கேனே… அப்படி என்ன பாசமோ… என்னமோ அவர்க கைக்குள்ளேயே வச்சு என்னைக் காப்பாத்திட்டு இருந்த மாதிரியும்… என்னை விட்டுட்டு போயிட்டா… அடுத்த நொடி எனக்கு வாழத் தெரியாத மாதிரியும்…”
எரிச்சலோடு சொன்னவன்…
“ஆனால் என் அப்பா அவர் கண்ணுக்குள்ள வச்சு பொத்தி பொத்தி வளர்த்த அவங்க செல்லப் பையன் ரிஷி செத்துப் போய்ட்டான் தானே கண்மணி… இனி அவன் எங்கு தேடினாலும் கிடைக்க மாட்டான் தானே… எனக்கு அவன் கிடைப்பானா கண்மணி“ உடைந்தவனை கண்மணிக்கு தேற்றக் கூட முடியவில்லை… அவன் தனக்குள் எந்த அளவுக்கு உடைந்திருக்கின்றான் உணர்ந்தவளாக
“ரிஷி… இங்க யாரோட உயிரும்… யாரையும் சார்ந்து இல்லை ரிஷி… அதைப் புரிஞ்சுக்கங்க… அவங்கவங்க வாழ்க்கை… அது தனித்தனிதான்…”
“ஹ்ம்ம்ம்… அப்படியா…” நக்கலாக அவளைப் பார்த்துக் கேட்டவன்
“அப்புறம் ஏன் உங்கப்பா ஏன் இப்படி இருக்கார்… உங்க அம்மா போன பின்னால் நட்ராஜ்னு ஒரு சாம்ராஜ்யம் அதோட அத்தியாத்தை ஆரம்பிக்காமலேயே தன்னை அழிச்சுக்கிட்டதுக்கு என்ன காரணம்… இங்க யார் மேலயும் யாரும் அளவு கடந்த அன்போ, காதலோ… பாசமோ வைக்கக் கூடாது… மீறி வச்சோம்… செத்தோம்… நீ கும்பிடுறியே அந்த சாமிக்குப் பொறுக்காது…” ரிஷி கடுப்போடு சொல்லி முடிக்க
“ப்ச்ச்… இதெல்லாம் என்ன பேச்சு ரிஷி… எங்க அப்பா முட்டாள் தனமா இருந்ததுக்கு கடவுளை எல்லாம் காரணம் சொல்லாதீங்க… அது என் அம்மாவோட விதி… ” என்றவளிடம்
“ஹான் அப்படிங்களா மேடம்… இப்போ எனக்கு ஏதாவது ஆச்சுனா…” ஆரம்பிக்கவில்லை அவன்…. சட்டென்று கண்மணி அவன் வாயை மூட… அவள் கைகளை விலக்கியவன்…
”எனக்கும் இப்படித்தான் சொல்வியா கண்மணி… ரிஷியோட விதி இவ்வளவுதான்னு” சொல்லி முடித்து அவளைப் பார்க்க
கண்மணியோ அவனைக் கொலைவெறிப் பார்வை பார்க்க…
”அவங்கவங்களுக்கு வந்தால் தான் தலைவலியும் வயிறுவலியும்னு சொல்லுவாங்க… அதேதான் இங்கேயும்”
“இப்போ மாமாவைப் பற்றித்தானே பேசிட்டு இருந்தீங்க… சொல்லுங்க… இல்லையா நான் கிளம்பறேன்” பேச்சை வேகமாக மாற்றி படபடத்தவளைப் பார்த்து நக்கலாகச் சிரித்தவன்… மீண்டும் நேத்ராவைப் பற்றி பேச ஆரம்பித்திருந்தான்
---
”அந்த நேத்ரா கர்ப்பத்துக்கு காரணம் யார் தெரியுமா… திருமூர்த்தி… ” ரிஷி சொல்ல கண்மணி ரிஷியை அதிர்ந்து நோக்கினாள்
”அவங்க கர்ப்பமானதும் திருமூர்த்தியத்தான் தேடி வந்திருக்காங்க… கருக்கலைப்பு செய்ய முடியவில்லை… அவங்க கைமீறி போயிருந்த காரணத்தால் திருமூர்த்தி கிட்ட உண்மையைச் சொல்ல வந்திருக்காங்க… கேசவன் அவங்களுக்கு நல்ல பழக்கம்… அவனைத்தான் முதல்ல சந்தித்து சொல்லி இருப்பாங்க போல… அவன் அவங்களை மிரட்டி அனுப்பிட்டான்… நேத்ராவும் பெருசா பிரச்சனை பண்ணலை… தன் வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருந்திருப்பாங்க போல…
ஆனால் அந்தக் கேசவன் இதை வைத்து என் அப்பாவைப் பலிகடா ஆக்கிட்டான்…. பணவெறி… அப்பாவோட தொழில் மேல் அவங்களுக்கு இருந்த பேராசை… மொத்தமா என் குடும்பத்தையே சர்வ நாசம் பண்ணிட்டாங்க கண்மணி… என்ன தப்பு பண்ணினோம் நாங்க… என்னை விடு… அந்த மனுசன்… சாகும் போது கூட கூனிக் குறுகி அவமானப்பட்டு சாகும் படி செஞ்சிருக்காங்க கண்மணி… தன்னோட மனைவிக்குத் துரோகம் பண்ணிட்டோமேன்னு நினைத்தே அந்த ஆத்மா வாழ்க்கையை அதுவாகவே அழிச்சிக்கிருச்சு… நிம்மதியா அது இந்த உலகத்தை விட்டுப் போயிருக்குமா கண்மணி… “
“இப்போ சொல்லு கண்மணி… என் அப்பாவை அவனுங்க கத்தியால கொல்லல.. ஆனா ஓவ்வொரு அணுவையும் குற்ற உணர்வால குத்திக்கிழிக்க வச்சுருக்கானுங்க… அவங்க மட்டும் நிம்மதியா இருக்கலாமா… சொல்லு…”
”அப்பா மேல தப்பில்லன்னு நேத்ரா சாதரணமா சொல்லிட்டா… ஆனா என் குடும்பம் என்ன ஆச்சு… அப்பாவை இழந்து… அவர் செய்யாத தவறுக்கு நாங்க எந்த இடத்தில வந்து நிற்கிறோம் பாரு… ”
“அப்பா எங்கள பண விசயத்துல நடுத்தெருவுல நிறுத்தல…. சாகும் போது கூட… எனக்கு என் தங்கைகளுக்கு … அம்மாக்கு…. ஏன் அந்த நேத்ராவோடப் பையனுக்கு கூட எல்லாமே ஓரளவு சரி பண்ணிட்டுத்தான் போனார்… நடுத்தெருவுல விடல… ஆனால் எனக்கு வைராக்கியம் அங்கதான் வந்தது… பணம் இழந்த சொத்து… ஃபேக்டரி எல்லாமே எனக்கு அற்பமான விசயமா மாறி இருந்ததுதான்… ஆனால் என் அப்பாவுக்காக… இந்தப் பணம்… சொத்து… ஃபேக்டரி என அப்பா இழந்த அத்தனையையும் மீட்க அப்போதான் முடிவு செய்தேன்… அதே போல அவனுங்களையும் பழி வாங்க முடிவு செய்தேன்… பண்ணிட்டு இருக்கேன்… திருமூர்த்தி கேசவன் கிட்ட நேரடியா மோதுற அளவுக்கு எனக்கு வசதியும் இல்லை… வயசும் இல்லை…. அப்போ… என்னோட பேர்ல என் அப்பா போட்டிருந்த பணத்தை நான் சொந்தம் கொண்டாடல… ட்ரஸ்ட் ஒண்ணு ஆரம்பித்து… எங்க வொர்க்கர்ஸ், அவங்க பசங்களுக்கு அது மூலமா உதவி பண்ண ஆரம்பிச்சோம்… அவங்கள சிதறவிடாமல் எங்க கட்டுப்பாட்டுக்குள்ளேயே கொண்டு வந்தோம்… அடுத்து அவங்கள்ள நம்பிக்கைக்குரியவங்கள வைத்து கேஸ் போட வைத்தோம்…”
கேசவன் அவன்தான் இங்க மெயின் எல்லாத்துக்குமே…. திருமூர்த்தி அவனுக்கு ஒரு பகடைக்காய் அவ்வளவுதான்…. ஜஸ்ட் அவன் திருமூர்த்தியை யூஸ் பண்ணிட்டு இருக்கான்… நேத்ரா பற்றி அப்போது அந்த திருமூர்த்திக்கு தெரியாது… தெரிந்தாலும் அது எங்க அப்பா மாதிரி திருமூர்த்திக்கு நேத்ரா அதிர்ச்சியான விசயம் கிடையாது… திருமூர்த்தி பொண்ணுங்க விசயத்தில் சரி கிடையாது… ஆயிரம் நேத்ரா அவன் வாழ்க்கைல வந்திருப்பாங்க…
”நேத்ரா எனக்குத் தெரியும்னு நான் எங்கேயும் யார்கிட்டயும் நான் காட்டிக்கல… ஆனால் கோர்ட் கேஸ் போட்டது நான்தான்னு கெஸ் பண்ணி… நேத்ரா விசயத்தை வைத்து என்னைப் ப்ளாக்மெயில் பண்ணாங்க… அது மட்டும் இல்லாமல் அவர் நான் அவங்களுக்கு அடங்கிருவேன்னு நினைத்திருப்பாங்க போல…”
”ஆனால் அவங்ககிட்ட பயப்படவில்லை… அப்பாவே போய்ட்டாரு… எனக்கு எதைப்பற்றியும் கவலை இல்லைனு திமிரா சொல்ல… அவங்க அதை எதிர்பார்க்கவே இல்லை… “
”நேத்ராவும் சில நாள்ள இறக்க… அவங்களோட மிகப்பெரிய ஆயுதம் வீணாகியே போயிருச்சு…
நேத்ரா தெளிவா எல்லாவற்றையும் எழுதி வச்சுட்டு… இறந்துட்டாங்க… எந்த ஒரு விசயத்தை வைத்து என் அப்பாவை மிரட்டுனாங்களோ… அந்த விசயம் மொத்தமாக ஒன்றுமே இல்லாமல் போய் விட்டதுதான் காலத்தின் கொடுமை…
அடுத்து பிஸ்னஸை அவங்க கிட்ட கொடுக்கலைனா அம்மாவை மிரட்டுவேன்னு சொன்னாங்க… ரிது ரிதன்யாவை வைத்து கூட மிரட்டினாங்க…. எல்லாவற்றையும் சமாளித்தேன்… இன்னும் சமாளிச்சுட்டு இருக்கேன்…
ஆனால் எப்போதுமே அம்மா தங்கைகங்க கூடவே இருக்க முடியுமா… சென்னை வர வேண்டிய நிலை… வேறு வழி இல்லை…. மகிளாவை வைத்து நீலகண்டன் மாமாவை மிரட்டினேன்… அவருக்கு அவர் பொண்ணு முக்கியம்… சோ மகிளா பக்கம் நான் வரக் கூடாதுன்னு அவரும் வேற வழி இல்லாமல் என் குடும்பத்தை நல்லாவே பார்த்துக்கிட்டாரு…
கேசவன் திருமூர்த்தி என்னை மிரட்ட மிரட்ட அதை வைத்தே நானும் பலசாலி ஆகிட்டு இருந்தேன்… சத்யாவும் எனக்கு பக்கபலமா இருந்தார்… நான் சென்னைல படிக்கிற காலத்தில… அப்போதான் நட்ராஜ் சார் கிட்ட வேலைக்கு சேர்ந்தேன்… அப்போதா அவரோட வேறொரு கோணம் தெரிந்து கொண்டேன்றது வேறு கதை…
பெருமூச்சு விட்டவனாக… மீண்டும் தன் கதைக்கு வந்தான்
ஒருகட்டத்தில் திருமூர்த்தியை என் கைக்குள்ள கொண்டு வந்தேன்… அவன் பொண்ண வச்சு… அவளோட குணத்தை வைத்து…
நேத்ரா விசயத்தை வைத்து எல்லாம் அவனை மிரட்ட முடியாதுன்னு தெரியும்… என் அப்பா நிலைமைலாம் அந்தாளுக்கு கிடையாது… அவன் அவனோட குடும்பத்துக்கு பயப்பட மாட்டான்… அவர் மனைவி அவன் சொல்ற சொல்லைக் கேட்டு நடக்கிற அடிமைதான்… அவன் எப்படி வேணும்னாலும் இருக்கலாம்… ஆனால் அவன் வீட்டுப் பொண்ணுங்க ஒழுக்கமான பொண்ணா இருக்கனும்… அதை வைத்து அவனை மிரட்டினேன்… இந்த அளவுக்கு பயப்படுவார்ன்னு நானும் சத்யாவும் எதிர்பார்க்கவே இல்லை… மிரட்டி கையெழுத்து வாங்கிட்டேன்… அவனோட பங்கும் இப்போ என்கிட்ட…
அடுத்து கேசவ்… இவன் தான் ரொம்ப டேஞ்சர்… எங்க கம்பெனியோட சேர்ஸ் பாதிக்கும் மேல இவன் கிட்டதான் இருக்கு….
ஆனால் அவன் பையன் விசயத்தில ரொம்ப வீக்… அவனைப் போட்டுத் தள்ளினா இந்தாளு காலி…. ஆனால அவன் பையன் பெரிய இடம்… புத்திசாலி… அவன் தான் என்னோட டார்கெட்… கொஞ்சம் கஷ்டமான வேலையும் கூட… பார்க்கலாம்… என்னோட வெற்றியோட நாள் எப்போன்னு “ என்று முடித்தவன்
“இதில் நான் எதிர்பார்க்காத ஒண்ணு… என் அம்மாவோட நிலைதான்… அது மூலமா நீ என் வாழ்க்கைல வந்தது” என்று கண்மணியைப் பார்க்க முடியாமல் தலை குனிந்தவன்…
“அந்த அர்ஜூனுக்கு உன்னைப் பிடிக்கும்னு தெரிந்தும்… உன்னை என் வாழ்க்கைல கொண்டு வந்தேன் தான்” என்றவன்
”நானும் லவ் பண்ணிருக்கேன் கண்மணி… அதோட வலி எனக்கும் தெரியும்…” உண்மையாக குற்ற உணர்ச்சியோடு சொன்னவன்… அடுத்த நொடியே
“ஆனால் அதெல்லாம் பார்த்தால்… இந்த ரிஷியை ஏறி மிதிச்சுட்டு போயிருவாங்க… ஏன் நான் மட்டும் தான் எல்லா வலியும் அனுபவிக்கனுமா… யான் பெற்ற துன்பம் எல்லாருமே பெறட்டுமே… ” திமிராகச் சொன்னவன்…
கண்மணியின் திகில் கலந்த முறைப்பான பார்வையில்…
“என்ன… என்னப் பார்த்தால் வில்லன் மாதிரி இருக்கா இல்லை சைக்கோ மாதிரி இருக்கா… சொல்லு“ வாய் விட்டுச் சிரித்தான்… வெகு நாட்களுக்குப் பிறகு…. ரிஷி
இவள் பார்த்த… இப்போது தேடிக் கொண்டிருக்கும் கள்ளம் கபடமற்ற அவனது சிரிப்பு இனி ஒருபோதும் அவனிடம் வரவே வராது என்பதை இந்தச் சிரிப்பு சொல்லாமல் சொன்னது கண்மணிக்கு…
“ஆக மொத்தம்… ஒருத்தவங்க வாழ்க்கை… எந்த நொடியிலும் திசை மாறிப் போகலாம் அது என் அப்பாக்கு நடந்தது… அவர் மூலமாக எனக்கு நேர்ந்தது… ஆனால் என் அம்மாவையோ என் தங்கைகளையோ திசை மாற விட மாட்டான் இந்த ரிஷி… என் குடும்பத்தை அதோட கூட்டுக்குள்ள மறுபடியும் சேர்க்கும் போது அந்த துரோகிங்களுக்கும் பாடம் கற்பித்திருப்பேன்… அந்த நாளுக்காக மட்டுமே நான் காத்துட்டு இருக்கேன் கண்மணி… ஒருவேளை அதுக்குப் பின்னாடி ரிஷி பழைய ரிஷியா மாறுவேனோ என்னவோ… ஆனால் என் பழைய வாழ்க்கைல இருந்த எதுவுமே என்கிட்ட இருக்காதே…?? ஆக இந்த ரிஷிதான் இனி எப்போதும்… ”
வலி நிறைந்த வாழ்கைக்கு நான் விரும்பின மகிளாவை பலி கொடுக்க விரும்பலை… அவளை விட்டுட்டேன்… அதைவிட இந்த உறவுகள் என்ற வார்த்தைக்கு இனிமேலும் அடிமையாக விரும்பல… என் அம்மா தங்கைகளோட அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன்…”
கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் சொன்னவனை கண்மணி அதிர்ந்த பார்வை பார்க்க… அதைப் பார்த்தபடியே
“மகிளாவுக்கு மட்டுமல்ல… கண்மணிக்குமே பொருந்தும் … அன்னைக்கு நீ கேட்ட தானே… மகிளாவை லவ் பண்ணின… அவ நல்லா வாழனும்னு விட்டுட்ட… ஒரு வேளை மகிளா உன் வாழ்க்கைல வந்த பின்னால இந்த நிலைமை வந்திருந்தால் மனைவி என்ற உறவை விட்டுக் கொடுத்துருப்பியான்னு…. ஹ்ம்ம்… நானா போன்னு சொல்லியிருக்க மாட்டேன்… ஆனால் என்னை விட்டுப் போகனும்னு நினைத்தால் இருக்கவும் சொல்லி இருக்க மாட்டேன்…” சொன்னவன் ஓரக்கண்ணால் கண்மணியைப் பார்த்தபடியே…
“உனக்குமே இதுதான் என் பதில்… ஒருவேளை என்னோட இந்த வாழ்க்கை உனக்கு பிடிக்கலை… இல்ல நான் தேவையில்லை… இவன் அயோக்கியன் இனிமேல இவனோட என்ன வாழ்க்கைனு நீ நினைத்தால்… உன்னை நான் ஸ்டாப் பண்ணவே மாட்டேன்… ஐ மீன் உனக்காக உனக்குப் பிடிக்காத விசயங்கள் நான் பண்ணத்தான் செய்வேன்… ஆனால் அதெல்லாம் சகிச்சுட்டு என்கூட வாழனும்னு அவசியம் இல்லை… அதே மாதிரி உனக்கு ஏத்தவனா என்னை மாத்தனும்னு நீ ஏதாவது நினைத்தால்… அதுவும் ஒருகாலும் நடக்காது… “ என்றவன்
“என்கூட உன் வாழ்க்கை எவ்வளவு தூரம் போகும்னு எனக்குத் தெரியலை கண்மணி… உன்னோட குணமும் என்னோட குணமும்… எதிர் எதிர் பாதைல… உன்னை நான் கட்டுப்படுத்த முடியாது… கட்டுப்படுத்தவும் மாட்டேன் அது எனக்குத் தேவையும் இல்லை… அதே நேரம் நீ என்னைக் கட்டுப்படுத்த நினைக்கிற… என்னை மாத்தனும்னு நினைக்கிற… இது எல்லாமே எனக்கு தெரியாமலேயே செய்ய நினைக்கிற… அதோட விளைவுதான் என் மேல நீ காட்ற அளவு கடந்த பாசம்…”
கண்மணி ஏதோ சொல்ல நினைக்க
“எனக்கு எல்லாமே தெரியும் கண்மணி… உன் பாசம்ன்ற வேலில நான் என்னைக்குமே மாட்ட மாட்டேன்… ஆனால் அதுக்காக எவ்வளவோ கஷ்டப்படற… உன் இயல்பை எல்லாம் எனக்காக மாத்திட்டு என் கூட வாழ நினைக்கிற”
கண்மணி அடிபட்ட வலியோடு அவனை நோக்கியவள் வேறு ஏதுமே பேசவில்லை
“எல்லாமே புரியுது… ஆனால் அது வேஸ்ட் கண்மணி…. ஒண்ணே ஒண்ணு சொல்றேன்… ஆஸ்திரேலியா போகிற இந்த இடைவெளியை யூஸ் பண்ணிக்கோ… உனக்கு யோசிக்க டைம் கொடுக்கிறேன்…. “ என்று அவன் ஆரம்பிக்கும் போதே…
கண்மணி அவனை நிறுத்தியவள்…
“என்னை விடுங்க… இப்போதைக்கு…. உங்க குறிக்கோள் நோக்கியே போங்க… தவறான வழில நீங்க போக மாட்டீங்கன்னு எனக்கு எப்போதுமே ஒரு மனசு சொல்லும்… யமுனா உங்களால இல்லேன்னாலும்… அவ குணத்துக்கு கண்டிப்பா யார்கிட்டயாவது ஏமாந்துதான் போயிருப்பா… ஆனால் உங்க மூலமா அவளுக்கு சரி எது தவறுன்னு யோசிக்கிற அளவுக்கு மூளை வளர்ந்திருக்கு… யோசிப்பா… கண்டிப்பா நல்ல முடிவு எடுப்பா” என்றவள்…
“யார் வாரிசுக்கோ… நீங்க ஏன் ரிஷி கார்டியனா இருக்கீங்க… அது மட்டும் தான் எனக்கு சந்தேகம்..”
”அது இறந்த என் அப்பாவோட ஆத்மாவோட ஆசை… அந்தப் பையனை நான் விடக்கூடாது… இது மட்டும் தான் அவரோட கடைசி ஆசையா எழுதி இருந்தார்… என் அம்மா தங்கைகளை நான் விட மாட்டேன்னு தெரியும்… சோ அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட அவர் என்கிட்ட சொல்லல… அந்தப் பையன் ஹர்ஷித் அவர் பையன்னு நினைப்போடேயே இறந்துட்டாரு… அது என்னவோ சொந்த மகனா நினைத்ததினாலயும்… அதைச் சொல்ல முடியாத குற்ற உணர்வும் … அந்த அளவுக்கு என்கிட்ட பிச்சை கேட்கிற மாதிரி எழுதி வச்சுட்டு போய்ட்டாங்க…. என் அப்பாவோட இந்த மனசுதான் கண்மணி அவர இந்த நிலைமைக்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கு… வளர்ந்த என்னையவே அவர் குழந்தையாத்தான் பார்ப்பாரு… அந்த சின்னக் குழந்தை விட்ருவாரா என்ன… அதுமட்டும் இல்லாமல் நேத்ராவும் சில விசயங்கள் சொன்னாங்க… ஹர்ஷித்துக்கும் கம்பெனில பங்கு இருக்குனு சொன்னாங்க… சோ நான் கார்டியனா இருந்தால் தான் அதை என்னோட கைக்கு மாற்ற முடியும்… கொஞ்சம் சுயநலமும் இதுல இருக்கு… ஆனால் ஹர்ஷித் செம்ம ப்ரிலியண்ட்… சின்ன வயசுல இருந்தே பெருசா உறவுகளை அவன் தேடினது இல்லை… சந்தோசமா அவன் வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்கான்… இவர்தான் உன் அப்பா… அது இதுன்னு உறவுகளைக் காட்டி அவனை ஏமாத்த வேண்டாம்னு அவன் வாழ்க்கையை அவன் போக்குலேயே விட்டுட்டேன்… திருமூர்த்திலாம் அவனை ஏத்துக்குவாரா என்ன… சான்சே இல்லை… தேடிப் போனா அவனுக்கு அவமானமும் மன வலியுமே மிஞ்சும்… தெரியாமலேயே இருக்கிறதுதான் அவனுக்கு சந்தோசம்… ”
கண்மணி… இப்போது சிரித்தாள்…. அந்தச் சிரிப்பில் யாருமே தெரிந்து கொள்ள முடியாத வலி….
“உண்மை ரிஷி… நாம யார்னு தேடிக் கண்டுபிடிக்க ஆரம்பிக்கும் போதுதான் வலியும் வேதனையும்… வரும்…” என்று அவள் உணர்ந்து சொல்ல… கண்மணியையே பார்த்துக் கொண்டிருந்தவன் அவளின் வார்த்தைகளின் வலியை உணரவில்லை…
”என் அப்பா இறந்த பின்னால அவருக்கு என்ன தெரியப் போகுது… ஆனாலும் என் மனசு அவரோட ஒவ்வொரு ஆசையையும் நிறைவேத்தனும்னு துடிக்குது… சொல்லு கண்மணி இறந்தவங்க ஆசையை நிறைவேற்றுனா உண்மையிலேயே அவங்க ஆத்மா சாந்தி அடையுமா என்ன” – ரிஷி தன் சந்தேகத்தைக் கேட்க
“ஹ்ம்ம்… அப்படித்தான் சொல்வாங்க… நிறைவேறாத ஆசைகள் அவங்கள இந்த பூமிய விட்டு போக விடாதுன்னு சொல்வாங்க… உங்களுக்குத்தான் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லையே… இதெல்லாம் உங்களுக்கு எதுக்கு”
“உனக்கு நம்பிக்கை இருக்கா??… இல்லையா அதைச் சொல்லு” ரிஷி கொக்கியாக கேள்வியைக் கேட்க…
“எனக்கு தெய்வ நம்பிக்கை இருக்கு ரிஷி… சில விசயங்களை நான் நம்புவேன்…”
அமைதியாக சில நிமிடங்கள் இருந்தவன்…
“உன் அம்மாவோட ஆசை உனக்கு தெரிய வந்தால் நீ நிறைவேற்ற நினைப்பியா என்ன??…” அவன் குரலே இப்போது உள்ளே போயிருக்க…
கண்மணியிடம் பதில் இல்லை… இப்போது…. தூரத்தில் கடலை மட்டுமே வெறித்திருக்க…
”எனக்கு உங்க மாதிரி அனுபவம் இல்லை ரிஷி… அதாவது அம்மா.. அவங்க பந்தம்… அவங்க பாசம் அதை அனுபவிச்சுருந்தால்… ஒரு வேளை இந்தக் கேள்விக்கு பதில் கிடைத்திருக்கலாம்… ” என்றவள்…
அவன் புறம் திரும்பி….
“இருந்தாலும் எனக்குத் தெரிய வேண்டாம்…“ கண்மணி முடித்த போது ரிஷியின் அலைபேசி ஒலிக்க…
அவன் அலைபேசியின் அழைப்பு ஒலியோ இன்று வேறாக இருக்க… ஏன் மாற்றி விட்டான் என கண்மணியின் புருவம் கேள்வியில் நெறிந்தாலும்… இதை விட பெரிய விசயமெல்லாம் அவன் அவளிடம் பகிர்ந்திருக்க… இந்த அழைப்பு ஒலி எல்லாம் அவளுக்கு பெரிய விசயமாக இருக்குமா என்ன… பெரிதுபடுத்த வில்லை… அதைப்பற்றியும் கேட்கவில்லை…
ரிஷியின் கடந்த கால நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும்… கண்மணிக்கு அவன் மூலமாகவே தெரியப்படுத்தப்பட்டிருக்க… கண்மணியின் கடந்த காலம் ரிஷி அறியும் காலம் எப்போதோ…
ரிஷி ஆழிக்கடல் என்றால் கண்மணி அந்த ஆழிகடலின் அடி ஆழத்தில் புதைந்திருக்கும் பாறை போன்றவள்… கண்மணி எப்போதுமே அவள் கடந்த காலம் சொல்ல மாட்டாள்… அது உறுதி…
ரிஷி கண்மணியின் கடந்த காலம் பற்றி அறிந்து கொள்வானா… ???
Comments