கண்மணி... என் கண்ணின் மணி -42 -1

அத்தியாயம் 42-1

/* உடைத்துப் பார்க்கும் இதயம் உனது படைத்து பார்ப்பதை அறியாதே குளத்தில் விழுந்து தெறிக்கும் நிலவு நிஜத்தில் உலகத்தில் உடையாதே... உடையாதே..

பூ மீது யானை பூ வலியைத் தாங்குமோ தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ*/


தனக்கு யாரென்று தெரியாத… சம்பந்தமே இல்லாத ஒரு பெண்ணை திடிரென்று அறிமுகப்படுத்திய பார்த்திபனைப் பார்த்து முறைத்தவளுக்கு… அவன் சொன்னவுடன் அவன் பேச்சைக் கேட்டு அங்கு அமரவே பிடிக்கவில்லைதான்… ஆனாலும் சபை நாகரீகம் கருதி… வேறு வழியின்றி யமுனாவின் அருகில் அமர… பார்த்திபனோ கண்மணியின் முறைப்பை நோட்டமிட்டபடியே யமுனாவிடம் திரும்பி பேச ஆரம்பித்தான்…


“மிஸ் யமுனா.. இவங்க மிஸஸ் கண்மணி” ஆரம்பித்து சற்று இடைவெளிவிட்டு ரிஷிகேஷ்... என்று முடிக்க…


அதைக் கேட்ட யமுனாவின் முகத்திலோ ஆயிரம் மின்னல்கள்…


அதிர்ந்தவள் வேறு ஏதும் பேசாமல்… எதிலோ மாட்டிக் கொண்டது போலவும்… அதிலிருந்து தப்பித்து செல்லும் வேகத்தில்... அவசர அவசரமாக எழுந்து அங்கிருந்து கிளம்ப முயற்சிக்க… அதை கண்டுகொண்ட பார்த்திபனோ அவளை விட வேகமாக எழுந்து எட்டி அவள் கைப்பிடித்து அவளை அமர வைக்க முயற்சிக்க… அவன் பிடிக்குள் மாட்டிக் கொண்ட யமுனாவோ அந்த இறுக்கமான கைப்பிடியில் இருந்து தன்னை விடுவிக்க முயற்சித்தபடியே


“மிஸ்டர்… என்ன வம்பு பண்றீங்களா… நான் கத்தினேன்னு வச்சுக்கங்க” பார்த்திபனையே மிரட்ட ஆரம்பிக்க… கண்மணியோ ஒன்றுமே புரியாத பார்வையாளராக மட்டுமே பார்க்க ஆரம்பித்தாள் முதலில்…


அவளும் அங்கு நடப்பதை புரிந்து கொள்ள எவ்வளவோ முயன்றாள்தான் ஆனால் முடியவில்லை… பார்த்திபன் இங்கு தன்னை வரவைத்ததின் நோக்கம் என்ன?… இந்தப் பெண்ணோ என்னைப் பார்த்தவுடன்… அதிலும் தன்னை அறிமுகப்படுத்தியவுடன் அந்தப் பெண்ணுக்கு வந்த பதட்டம் ஏனோ…


எதுவுமே புரியாததால் யமுனா-பார்த்திபன் பேச்சுவார்த்தைகளுக்கு இடையே நுழையாமல் அமைதியாக இருந்தாள் தான் கண்மணி…. ஆனால் அதே நேரத்தில் பார்த்திபன் அந்தப் பெண்ணிடம் வன்மையாக நடப்பதைப் பார்த்த பின்பு… அதைத் தட்டிக் கேட்காமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு சும்மா அமர்ந்திருக்க முடியவில்லை கண்மணியால்


“என்னாச்சு பார்த்திபன் உங்களுக்கு… ஃபர்ஸ்ட் அவங்க கைய விடுங்க… இந்த மாதிரி… அதுவும் பொது இடத்திலேயே இப்படி நடந்துக்கறீங்க… இங்கே இருக்கறதும் இல்லாததும் அவங்க இஷ்டம்… அதை தடுக்க உங்களுக்கு என்ன உரிமை… உங்களுக்குத் தெரிந்தவங்கன்னா கூட.. லிமிட்டுனு இருக்கு” என்று அவனைக் கண்டிக்க ஆரம்பிக்க… பார்த்திபன் என்ன நினைத்தானோ இப்போது யமுனாவின் கைகளை விட்டு விட்டான்…


கண்மணி நினைத்தது போல கோபமாகவோ… இல்லை யமுனா நினைத்தது போல தவறான எண்ணத்திலோ அவன் யமுனாவின் கைகளைப் பிடிக்கவில்லை… எங்கே இப்போதும் யமுனா தன்னை விட்டுப் போய் விடுவாளோ என்ற பதட்டத்தில் வந்த அவசரகுடுக்கைத் தனம் அவனையும் மீறி யமுனாவின் கைகளைப் பிடிக்க வைத்து விட்டது… தன்னையே அவன் திட்டிக் கொண்டு இருக்க.. யமுனாவோ மீண்டும் தான் இருந்த இருக்கையிலேயே அமர்ந்திருந்தாள் இப்போது…


கண்மணியின் ஆதரவான ஆதுரமான பேச்சோ இல்லை எதுவோ யமுனாவை அனிச்சையாக அமர வைக்கச் செய்திருக்க… அமர்ந்தவளோ குனிந்தபடி அழ ஆரம்பித்திருந்தாள்… பார்த்திபனோ அவளைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தான்…


கண்மணி இருவரையும் பார்த்தபடியே


“என்ன நடந்தது… யார் இவங்க… என்னை எதுக்கு இங்க கூப்பிட்டீங்க… இவங்க ஏன் அழறாங்க” என்று வரிசையாகக் கேள்விக் கணைகளைப் பார்த்திபனிடம் தொடுக்க ஆரம்பித்தவள்…


“மிஸஸ் கண்மணி ரிஷிகேஷ்”


பார்த்திபன் தன்னை யமுனாவிடம் அறிமுகப் படுத்திய விதம் இப்போது அவளுக்குள் மின்னலாய்த் தோன்றி மறைய… யமுனாவை யோசனைப் பார்வைப் பார்த்தபடியே… பார்த்திபனிடம் திரும்பியவள்…


“ரிஷிக்கும் இவங்களுக்கும் என்ன சம்பந்தம் பார்த்திபன்…” என்று கேட்ட கண்மணியிடம் துளி கூட பதட்டம் என்பதே இல்லை… ‘என்ன விசயம்’ என்று தெரிந்து கொள்ளும் சாதாரண உத்வேகம் மட்டுமே… அதுகூட தன் கணவன் என்பதாலேயே வந்த வேகம் அது… மற்றபடி கண்மணியிடம் எந்த அதிர்வும் இல்லை…


“இவங்க ரிஷியோட காதலியாம்… ரிஷி அவங்கள மேரேஜ் பண்ணிக்கிறேன்னு ஏமாத்திட்டாராம்” இப்போது பார்த்திபன் யமுனாவை நக்கலாகப் பார்த்தபடியே கண்மணியிடம் சொல்ல.. பார்த்திபன் சொல்லி முடிக்கவில்லை… ரிஷிக்கு அழைத்திருந்தாள் கண்மணி…


“ரிஷி…!!! மாமாவோட பார்ட்னர் பொண்ணுன்னு நினைக்கிறேன… உங்ககிட்ட பேசனும்னு… இங்க ஸ்கூல் வாசல்ல வெயிட் பண்றாங்க… உங்களால இப்போ வர முடியுமா…” என்று யமுனாவைப் பார்த்தபடியே ரிஷியிடம் அலைபேசியில் கேட்டுக்கொண்டிருக்க…


எதிர்முனையில் ரிஷி என்ன சொன்னானோ இவர்களுக்குத் தெரியவில்லை… ஆனால் அவன் சொன்னதைக் கேட்டு ‘சரி’ என்று தலை ஆட்டியபடி போனை வைத்த கண்மணியை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தனர் இருவரும்


பார்த்திபன் தன்னைப் பற்றி சொல்லியும் தன்னிடம் கொஞ்சம் கூட மேல் கோபம் கொள்ளாமல்… அதே நேரம் கணவனையும் சந்தேகிக்காமல் கண்மணி பேசிய விதம் யமுனாவை இன்னும் நிலைகுலைய வைக்க… இன்னும் வேகமாக அழ ஆரம்பித்திருக்க… அதைப் பார்த்த கண்மணியோ அவளுக்கு எந்த ஒரு ஆறுதலையும் சொல்லவில்லை…


மாறாக எழுந்தவள்…


“பார்த்திபன்! ரித்விகாவுக்கு ஸ்கூல் விடற டைம் ஆகிருச்சு… அவள நான் வீட்ல விட்டுட்டு வந்துடறேன்… ரிஷி இவங்கள பீச்ல மீட் பண்ணலாம்னு சொன்னாங்க… அங்க வரச் சொல்லிருக்காங்க”


“ரிஷியைப் போய்ப் பார்ப்பதா???!!… இந்த தருணம் அவள் இத்தனை நாள் எதிர்பார்த்திருந்த தருணம்தான்… ஆனால் ஏனோ இப்போது உள்ளுக்குள் ஒரு உதறல் வந்திருக்க… அது யமுனாவின் விழிகளில் பயம் கலந்த மிரட்சியைக் கொண்டு வந்திருந்தது


யமுனாவின் மிரண்ட விழிகளைப் பார்த்த கண்மணிக்கோ… அவள் மேல் தவறான அபிப்ராயம் தோன்றவில்லை… ரிஷி என்று சொன்னவுடன் யமுனாவின் கண்களில் எந்த அளவுக்கு கோபம் முதலில் தெரிந்ததோ அந்த அளவுக்கு மிரட்சியும் இப்போது அவள் கண்களில்… அதைப் பார்த்த கண்மணி என்ன நினைத்தாளோ தெரியவில்லை…. ஆனால் யமுனாவின் பயத்தைப் போக்கும் விதமாக... பார்த்திபனைக் கைகாட்டியபடி


“சார் எனக்குத் தெரிந்தவர்தான்… இவரை உங்களோட கூட்டிட்டுப் போங்க… அப்படி பார்த்திபன் கூட போக இஷ்டமில்லைனா… 10 மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க… நான் வந்த பின்னால நாம ரெண்டு பேரும் சேர்ந்தே ரிஷிய மீட் பண்ணப் போகலாம்…”


கண்மணி யமுனாவிடம் இவ்வளவு சொல்லியும்… யமுனா அப்போதும் மௌனித்து இருக்க… பார்த்திபனோ யமுனாவிடம் ஒரு வார்த்தை கூடக் கேட்காமல்…


“நீ போ கண்மணி… நான் பார்த்துக்கிறேன்” பார்த்திபன் சொல்லி விட கண்மணியும் கிளம்பிவிட்டாள்…


---


சென்னைக் கடற்கரை…


கண்மணி தனியாக ஒரு புறம் நின்றிருக்க… பார்த்திபன் யமுனா இருவருமாக சேர்ந்து மறுபுறம் நின்றிருக்க… பார்த்திபன் அவளோடு ஏதோ பேசியபடியே இருந்தான்… யமுனாவும் முதலில் மிரண்டு விழித்தது போல இல்லாமல் கொஞ்சம் இயல்பு நிலைக்கு மாறியவளாக அவன் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்…


கண்மணி கூட ரித்விகாவை வீட்டில் விட்டு விட்டு ரிஷி சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தாள்… ஆனால் அவர்களை அங்கு வரச் சொல்லி இருந்தவனோ இன்னும் வரவில்லை…