கண்மணி... என் கண்ணின் மணி-40-2

Updated: Jul 18, 2021

அத்தியாயம் 40-2:


/*காஞ்சி பட்டு ஒண்ணு நான் கொடுப்பேனே

காலமெல்லாம் உன்னை நான் சுமப்பேனே

மாமன் உன்னை கண்டு ஏங்கும் அள்ளி தண்டு

தோளில் என்னை அள்ளி கொண்டு

தூங்க வைப்பாய் அன்பே என்று

என் கண்ணில் நீ தானம்மா */

சபையில் நடுநாயகமாக அமர்ந்திருந்த ரித்விகாவின் அருகில் பிரேம்- மகிளா ஒருபுறம் நிற்க… ரிஷி கண்மணியோ மறுபுறம் நின்றிருந்தனர்…

“தாய் மாமாவைக் கூப்பிடுங்க… அவர் செய்ய வேண்டியதெல்லாம் செய்யச் சொல்லுங்க” புரோகிதர் அழைக்க அதன் பிறகே நட்ராஜ் சபை முன்வந்து நின்றார்…

அதன் பின் இலட்சுமியின் சகோதரனாக… நட்ராஜ் அத்தனை சடங்குகளையும் செய்ய… மகிளா அவரோடு சேர்ந்து அனைத்தையும் நிறைவு செய்தாள்… இறுதியாக ரிஷியும் கண்மணியும் மாமன் வீட்டுச் சீரை தம்பதி சகிதமாக வாங்கிக் கொள்ள… ஒரு வழியாக சபை சடங்கெல்லாம் நல்லவிதமாக நடந்தும் முடிந்தது…


பிரேம்தான் எல்லாவற்றையும்… அதாவது தன் குடும்பத்தை மட்டுமல்ல… வந்தவர் போனவர் அத்தனைப் பேரையும் சாதுரியமாகச் சமாளித்தான்... ஆரம்பித்து வைத்தவன் அவனாயிற்றே... நல்லபடியாக விழா முடிய வேண்டுமென்று உண்மையாகவே மெனக்கெட்டான்.

ஆக யாருக்கு சந்தோசமோ… இல்லையோ மகிளாவைத்தான் கையில் பிடிக்க முடியவில்லை… ரிஷி தன்னை கைவிட்டுவிட்டதை நினைத்து அவன் வருந்த வேண்டும் என்றுதான் முதலில் நினைத்திருந்தாள் மகிளா… ஆனால் அவள் கணவன் பிரேமின் செயல்களில்… அவனது குணத்தில்… அவள் மனதில் ஒரு ஓரமாக எங்கோ ரிஷி என்று அவ்வப்போது ஒலித்த பெயர் கூட இப்போது சுத்தமாக அழிந்து போயிருந்தது… முதல் இரவில் தன மாமன் மகன் ரிஷியைத்தான் தனக்குப் பிடிக்கும் என்று அகங்காரங்கமாகச் சொல்லி பிரேமை அதிர்வடையச் செய்தாள்தான் இந்த மகிளா… ஆனால் பிரேம் மனம் வருந்தாமல்… மெல்ல மெல்ல அவளின் பிடிவாதத்தை… அவள் மனதை என அனைத்தையும் பொறுமையான தன் இனிய குணத்தால் மாற்றி இருந்தவன்… இன்று மொத்தமாக அவள் உலகத்தை அவனாக மாற்றி இருக்க ரிஷி என்பவன் மகிளாவின் வாழ்க்கையில் திரும்பிப் படிக்க முடியாத பக்கங்களாக மாறி இருந்தான்…

விழா சிறப்பாகவே நடந்து கொண்டிருந்தது…

ரிஷி அருகில் நின்றிருந்த கண்மணியை யார் என்று அங்கு பல பேருக்குத் தெரியவில்லை…. தெரியாதவர்கள் அனைவருமே… ரிஷியின் அருகே நிற்பது யார் என்று தெரிந்த மற்றவர்களிடம் கேட்டுத்தான் அவளைக் கண்டு கொண்டனர்…

கண்மணி!!! அவள் தோற்றத்திலும் சரி… அவள் பேசிய விதத்திலும்… ரிஷியின் உறவினர்களுக்கு அங்கு பெரிய ஆச்சரியத்தைத் தரவில்லை…

ஆக அதே பேச்சுக்கள் இங்கும் தொடர்ந்தன…

“நம்ம ரிஷிக்கா… இந்தப் பொண்ணு”

“நம்ம வீட்டுப் பொண்ணுங்க கால் தூசிக்கு கூட வரமாட்டா… ரிதன்யா மகிளா அழகுக்கெல்லாம் ஏணி வச்சா கூட எட்ட மாட்டா இந்தப் பொண்ணு… நம்ம இனக் களையே இல்லை “

கண்மணி காதில்… ஏன் நட்ராஜ் காதில் கூட சில வார்த்தைகள் விழ… தந்தை மகள் இருவருமே அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை…

அதே போல… கண்மணிக்குள் எண்ணங்கள் பல ஓடிக் கொண்டிருந்தது… அங்கிருந்த இரண்டு தாய்மார்கள் தங்களுக்குள் பேசிய பல வார்த்தைகளில் ஒன்றைப் பிடித்துக் கொண்டு ஊசலாடிக் கொண்டிருந்தது

”உன் பொண்ணுக்கு சடங்கெல்லாம் அவ கல்யாணத்துக்கு முன்னாடி நாள் பண்ணிட்டதான… நான் உன் பொண்ணு மேரேஜுக்கு வரலை… அதுதான் கேட்டேன்”

“அது எப்படி பண்ணாமல் இருக்க முடியும்… தீட்டக் கழிச்சால் தானே கல்யாணமே பண்ண முடியும்… மாங்கல்ய பாக்கியம் இருக்கே” என்று சொல்ல… கண்மணிக்குள் புயல்…

நேராக போய் நின்றது நட்ராஜிடம் தான்

“அப்பா” என்று அழைக்க…

“என்னடாம்மா…”

“இதெல்லாம்... இந்த சடங்கெல்லாம் பண்ணாமல் மேரேஜ் பண்ணக் கூடாதா…” மகள் தயங்கிக் கேட்ட தோரணையில் புன்னகைத்தவர்…

“யாருடா சொன்னது இப்படி எல்லாம்… அப்படிலாம் ஒண்ணுமில்லடா... அதெல்லாம் மூடநம்பிக்கை… இதெல்லாம் நம்புற ஆளா என்ன நீ... ” என்று மகள் கேட்ட கேள்விக்கு ஆறுதலாகச் சொன்னவர்...

“ஏண்டா தீடீர்னு... என்னாச்சுடாம்மா… இங்க வா” மகளின் முகவாட்டம் தாங்காமல் தன் அருகே அழைக்க… கண்மணியோ அவரை நெருங்கவில்லை மாறாக

“ப்ச்ச்… எனக்கு ஒரு மாதிரி இருக்குப்பா… மாங்கல்ய பாக்கியம் அது இதுலாம் சொல்றாங்கப்பா… ஏன்ப்பா இப்படில்லாம் பேசறாங்க… இப்டிலாம் கனெக்ட் பண்ணுவாங்களா என்ன” சந்தேகத்தோடு கேட்டவளின் கவலை இப்போது புரிய… மகளைப் பார்க்க… குழம்பிய பாவம் அவளிடம்

குழம்பி நின்ற மகளைப் பார்க்கத் தாளாமல் அவளாகத் தன்னருகே வர வேண்டும் என்று எதிர்பார்க்காமல்… அவள் கையைப் பிடித்து தன் அருகே அமர்த்திக் கொண்டவர்…

“குட்டிம்மாக்கு என்னடா ஆச்சு… நம்ம மனசுதாண்டா எல்லாத்துக்கும் காரணம்… நாம எதையாவது நினைத்து பயந்தோம்னா… அது நம்ம சந்தோசத்தைத்தான் கெடுக்கும்… இதை உனக்கு நான் சொல்லனுமா… “ என்ற போதே…

பதில் ஏதும் சொல்லாமல் சில நிமிடங்கள் அமைதியாக குனிந்து அமர்ந்திருந்தவள்…

“ப்பா” தழுதழுப்பான குரல் தான் வந்தது கண்மணியிடமிருந்து… நிமிரவில்லை…

”சொல்லுடாம்மா” நட்ராஜிடமிருந்து வந்தது வழக்கமான அழைப்பே…

கண்மணிக்குத்தான் இப்போது தாங்கமுடியவில்லை… அழத் தோன்றியதுதான் ஆனால் அழுகை வரவில்லை… சட்டென்று நிமிர்ந்தவள்

“சாரிப்பா…” சொன்னவள் சாதாரணமாகச் சொல்லவில்லை… அவர் கண்களைப் பார்த்து மனபூர்வமாகச் சொல்ல… மகளை அணைத்துக் கொள்ள அவரது கைகள் பரபரத்தன தான்… ஏனோ நட்ராஜாலும் முடியவில்லை… அமைதியாகி விட்டார்... தந்தை மகள் இருவருமே உணர்வுகளின் பிடியில் இருக்க...


கண்மணி சுலபமாக தன்னை மீட்டெடுத்து.... நட்ராஜின் கைகளை தன் கைக்குள் வைத்துக் கொண்டவளாக

“ஏன் அப்படி நடந்தேன்னு… இப்போ ஃபீல் பண்றேன்பா… ரிஷி இதெல்லாம் என்னோட உரிமைன்னு கோபப்பட்டபோது… எனக்கு உங்க ஞாபகம் தான்ப்பா வந்துச்சு… என்னால இனி எதையும் மாத்த முடியாது ஆனால்..ரொம்ப ரொம்ப சாரிப்பா… ” என்ற போதே மகளின் உதட்டில் விரல் வைத்து அவளை மேற்கொண்டு பேச விடாமல் நிறுத்தியவர்

“அப்போ நான்லாம் எவ்வளவு மன்னிப்பும்மா கேட்கிறது… என் ஆயுளுக்கு மன்னிப்பு கேட்டுட்டே இருக்கனும்மா… நீ பிறந்ததுலருந்து நான் பண்ணின காரியங்களுக்கெல்லாம்… இவ்வளவு ஏன்… கண்மணின்ற பேர் கூட நான் வச்சதில்ல… அந்த அளவு கேவலமான அயோக்கியன்கிட்ட போய் நீ மன்னிப்பு கேட்டுட்டு இருக்க…” நட்ராஜ் தன்னையே திட்டிக் கொண்டு மகளிடம் பேச ஆரம்பிக்க…

கண்மணி திகைத்தாள்…

“இது அவளது அம்மா அவளுக்கு வைக்க வேண்டுமென்று ஆசைப்பட்ட பெயர் தானே…” பவித்ராவின் தோழி கிருத்திகா சொல்லக் கேள்விப்பட்டிரு