கண்மணி என் கண்ணின் மணி-39

அத்தியாயம் 39


/* உன்னை பார்க்கும் முன்பு நான் காகிதத்தின் வெண்மையடி உன்னை பார்த்த பின்பு நான் வானவில்லின் வண்ணமடி

தோளில் சாயும் போது தோழி நீயடி

மடியில் சாயும் போது தாயும் நீயடி

எங்கே இருந்தாய் எங்கே இருந்தாய்

எப்படி நீயும் என்னுள் வந்தாய்

கண்ணில் விழுந்தாய் நெஞ்சில் நுழைந்தாய்

நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்*/


”மணிம்மா” என்று நட்ராஜ் சத்தமாக குரல் கொடுக்க… கண்மணியும் நட்ராஜ் தங்கியிருந்த வீட்டிலிருந்து வெளியே வந்தாள் கேட்ட தந்தையின் குரலில்…


“மாப்பிள்ளை வீட்லருந்து அவங்க சொந்தக்காரங்க எல்லாரும் வந்துட்டாங்கம்மா” என்ற போதே ரிஷியும் அவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்தவன்…


நீலகண்டனோடு வந்திருந்த அவர்களது மற்ற மிக நெருங்கிய சொந்தங்களைப் பார்த்தவன்… நட்ராஜ் அருகில் நின்றிருந்த கண்மணியை கண்களாலேயே அழைக்க… கண்மணியும் அவன் அருகில் வர… இருவருமாக அவர்களை வரவேற்றனர்…


கண்மணிக்குத்தான் என்ன சொல்லி… எப்படிச் சொல்லி வந்தவர்களை வரவேற்பது என்று தெரியவில்லை…


பரிதாபமாக ரிஷியைப் பார்க்க… அவன் இவளைப் பார்த்தால் தானே… அப்படியே பார்த்தாலும்… பேசிவிட்டுத்தான் மறுவேலை…


இந்த பத்து நாளாக ரிஷி இவளோடு முகம் கொடுத்துக் கூடப் பேசவில்லை… அதிலும் இவர்கள் ஊட்டியில் இருந்து திரும்பிய இரண்டு மூன்று நாட்களில் ரிஷி வெளியூர் கிளம்பி விட்டான்… முந்திய தினம்தான் வந்தான்… திரும்பி வந்தவன் தேவை என்றால் மட்டும் கண்மணியோடு பேசிய போதே தெரிந்து விட்டது… கண்மணி மேல் அவனுக்கு இன்னும் கோபம் போகவில்லை என்று…


அவனை எப்படி சமாதானப்படுத்துவதுதான் என்று தெரியவில்லை… சாதாரண கொஞ்சல் மொழிகளே அவளது அகராதியில் பெரிதாக இல்லை எனும் போது மனைவியாக கொஞ்சல் மொழிகள் இன்னுமே கடினமாக… அப்படியே விட்டு விட்டாள்… ஆனால் ரிஷி பேசா விட்டால் என்ன… எப்போதும் தான் இருப்பது போலவே கண்மணி இருந்தாள்


இன்றும் அப்படித்தான் இருக்கப் போகின்றான்… நினைத்தவாறே அமைதியாக இருக்க… கண்மணியின் அமைதியை உணர்ந்தவனாக… அவள்புறம் திரும்பியவன்… அதன்பின்தான் தன் தவறு புரிந்தவனாக… கண்மணியை அவர்களுக்கு அறிமுகப்படுத்தியனாக… அவர்களையும் ஒவ்வொருவராக அவளுக்கு அறிமுகப்படுத்தவும் செய்தான்…


பொதுவாக “வாங்க” என்று மட்டும் சொல்லி இன்முகமாக கண்மணி வரவேற்க…


வந்த ஒவ்வொருவரின் பார்வையும் கண்மணியில் தொடங்கி… பின் அங்கிருந்த சுற்றுப்புறத்தையும் ஒரு வட்டமடித்து ரிஷியிடம் வந்து நின்றது… அது மட்டுமல்லாமல்… அவர்களுக்குள்ள்ளாக கிசுகிசுக்கவும் ஆரம்பித்துக் கொண்டனர்…


”தனசேகர் குடும்பத்துக்கு வந்த சோதனையைப் பாரு..”


“எப்படி இருந்த குடும்பம்”


“இலட்சுமி நிலையும் இப்படி ஆகி இருக்கக் கூடாது” என தங்களுக்குள்ளாகப் பேசிக் கொண்டிருக்க…


மகிளாவும் கோதையும் முதல் நாளே அங்கு வந்து விட்டதால்… வீட்டில் இருந்து வெளியே வந்தவர்கள்… வந்த அனைவரையும் உறவு முறைகளைச் சொல்லி வரவேற்க… அதிலும் மகிளா வரவேற்கும் பொறுப்பை ஏற்று… செவ்வனே செய்து முடிக்க… ரிஷி-கண்மணிக்கு பெரிய சுமை தீர்ந்தார்ப் போல இருந்தது…


வந்தவர்கள் மகிளா கோதையோடு ஐக்கியமாகி விட… அதன் பின் கண்மணி ரித்விகாவிடம் போய் விட்டாள்…


அன்று ஊட்டியில்…


ஒவ்வொருவராக… ரித்விகாவைத் தேட… ரித்விகாவோ.. சற்று தள்ளி இருந்த ஓய்வறையில் இருக்க… அனைவரும் அங்கே செல்ல…


அவளோ… இவர்கள் அனைவரையும் ஆச்சரியமாகப் பார்த்தபடி… கொஞ்சம் பதட்டத்துடன் இருந்த கண்மணியைப் பார்த்து


“என்ன அண்ணி… இவ்ளோ டென்சன்” என்றவள்…


தன் அண்ணியை மட்டும் தனியே அழைத்து… அவளுக்கு ஏற்பட்ட மாற்றங்களைச் சொன்னவள்…


“உங்கள கூப்பிடலாம்னு இருந்தேன்… ஆனால் நீங்க ஏற்கனவே சொல்லி இருந்த மாதிரி… நானே எல்லாம் பண்ணிட்டு உங்களக் கூப்பிடலாம்னு இருந்தேன்… நாம இதுக்காக டூரெல்லாம் கேன்சல் பண்ண வேண்டாம் அண்ணி… நான் ஓகேதான்… வீட்ல எல்லாம் சொல்ல வேண்டாம்… டூர் முடிந்து போய்ச் சொல்லிக்கிறலாம்” என்று சாதாரணமாகச் சொல்லி தன் அண்ணியைப் பார்க்க…


கண்மணி அவள் உச்சியில் முத்தம் இட்டவளாக… அவளை அரவணைத்துக் கொண்டாள்… உணர்வுகளை பெரிதாக காட்ட வில்லை என்றாலும்… கண்மணி ரித்விகாவை நினைத்து பெருமை கொண்டாள் தான்…


இருந்தாலும்… ரிஷியிடம் சொல்லாமல் இருக்க முடியுமா என்ன… வெகுநாட்களாக லட்சுமி கவலை கொண்டிருந்த விசயம்… அந்தக் குடும்பத்தில் அடுத்த சந்தோஷம்…


ரித்விகா … பெரிய பெண்ணாகி விட்டாள்… என்ற தகவலைத் தெரிவிக்க… அதன் தொடர்ச்சியாக மகிளா ரிதன்யா கோதை என சந்தோசத்தை ரித்விகாவிடம் பகிர்ந்து கொள்ள… அதே போல தன் அன்னையின் உடல்நிலை கேள்விப்பட்டு ரித்விகா அடைந்த சந்தோஷத்திற்கும் அளவில்லை…


இலட்சுமியின் நிலையைக் கேட்கவா வேண்டும்…


ரித்விகா பிடிவாதம் பிடிக்கவில்லை… மாறாக இலட்சுமிதான் பிடிவாதம் பிடித்தார் மகளை உடனே காணவேண்டும் என்று…


ரித்விகாவை உடனே அழைத்து வரலாம் என்று மொத்தக் குடும்பமும் முடிவெடுக்க.. அங்குதான் கண்மணிக்கும் ரிஷிக்கும் பிரச்சனை ஏற்பட்டது…


பிரேமும் ரிஷியும் சென்னையில் இருந்து கிளம்பி கண்மணி ரித்விகாவை அழைத்து வருவதாக முடிவெடுத்தவர்கள் கண்மணியிடம் சொல்ல… கண்மணிக்குச் சுத்தமாக அதில் உடன்பாடில்லை… அவர்கள் வந்து அதன் பின் இவர்கள் செல்வதா… நேர விரயம் தான்…


எனவே தானே ரித்விகாவை அழைத்து வந்து விடுவதாகச் சொல்ல… அதைக்கூட இயல்பாகவேத் தான் சொன்னாள்…


“நான் சொல்றதைப் பண்ணு… நீயா முடிவெடுக்காத கண்மணி” ரிஷி வார்த்தைகளை விட்டான் கண்மணியிடம்


“கேட்க வேண்டியதை மட்டும் தான் கேட்க முடியும் ரிஷி… முட்டாள் தனமா கண்ண மூடிட்டு நீங்க சொல்ற எல்லாத்துக்கும் தலை ஆட்ட முடியாது “ கண்மணியும் பட்டென்று சொல்லி விட்டாள்…


ரித்விகா காணவில்லையென்று கேள்விப்பட்டவுடன்… ரிஷி காட்டிய முக பாவனைகளில்… வேதனைகளில்... பதட்டத்தில் கண்மணிக்கும் அவன் உணர்ச்சிகளின் வேகம் தாக்கி… அவளை யோசிக்க வைக்க விடாமல் வைத்து விட்டதே… அந்த கடுப்பில் கண்மணியும் இப்போது பேசிவிட…


ரிஷி விடவில்லை…


“உன் கூட இருக்கிறது என் தங்கச்சி… அவ விசயத்துல நான் என்ன சொல்றனோ அதைத்தான் அதை மட்டும் தான் நீ செய்ய வேண்டும்… உனக்கான விசயங்கள்ள கேட்க வேண்டியதை மட்டும் கேட்டுக்கோ… சாரி… நான் அதுல தலையிடக் கூட மாட்டேன்”


“என்னோட விசயங்கள்ள நான் கேட்க மாட்டேன்னு நீங்க தலைய