கண்மணி... என் கண்ணின் மணி -38-2

அத்தியாயம் 38-2


/*டிங் டாங் கோயில் மணி கோயில் மணி நான் கேட்டேன். உன் பேர் என் பெயரில் சேர்ந்தது போல் ஒலி கேட்டேன். நீ கேட்டது ஆசையின் எதிரொலி

ஆ.. ஆ.. நீ தந்தது

காதலின் உயிர்வலி!*/


மகிளா… பிரேம்…. மகிளாவின் தாய் கோதை… நட்ராஜ்…. என ரிஷியின் வீட்டில் சந்தோச கொண்டாட்ட களை வந்திருந்தது… பிரிந்த சொந்தங்கள் மீண்டும் ஒன்று கூடிய தருணம் என்று தோன்றும்படிதான் இருந்தது அங்கு நடந்த ஒவ்வொரு உணர்ச்சி வயமான நிகழ்வுகளும்..


மகிளாவின் தந்தை நீலகண்டன் கூட வந்திருந்தார்… அனைவரும்… ஏன் வீட்டுக்கு வந்த மாப்பிள்ளையே வரும் போது அவர் எப்படி வராமல் போக முடியும்… வந்தும் விட்டார்… மற்றவர்களிடம் எல்லாம் பேசியவர்… ரிஷியோடு மட்டும் பேசவில்லை… பேசப் வில்லை என்பதை விட பேசப் பிடிக்கவில்லை… ஆக பேருக்கு வந்து இலட்சுமியைப் பார்த்து விட்டு உடனே கிளம்பியும் விட்டார்… ரிஷியும் பேருக்கு அவரை வரவேற்றவன் அதன் பின் கண்டுகொள்ளவில்லை… அவர் மேல் பெரிதான வெறுப்பும் இல்லை விருப்பும் இல்லை… அவர் வயதுக்கு மரியாதை கொடுத்தான்… அவ்வளவே…


கிட்டத்தட்ட நண்பகல் 12 மணி….


மகிளா… ரிதன்யா சமையலறையில் இருக்க… கோதை லட்சுமியுடன் இருக்க…. ரிஷி, பிரேம், நட்ராஜ் இவர்கள் மூவரும் வெளியே மாமரத்தடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்… வேலன்… தினகர் கூட அங்கு தான் இருந்தனர்…


வெகு நாட்களுக்குப் பிறகு… கிளீன் ஷேவ்… இறுக்கமற்ற முகமென ரிஷி… இலகுவான பாவனையில் இருந்தான்… அவனது முகத்தில் இதமான புன்னகை ஒட்டிக் கொண்டிருக்க… பேசும் போது கூட புன்னகை மாறாமல் பேசிக் கொண்டிருக்க… வேலன் தினகர் இருவருமே ஆவென்று பார்த்துக் கொண்டிருந்தனர் அவர்கள தலையாகிய ’ஆர்கே’ வை…


அவன் இயல்பான சிரிப்பை பார்க்க வேண்டிய தவமிருந்த ஒரு முக்கியமான நபர் மட்டுமே அங்கு இல்லை… அது யார் என்று சொல்ல வேண்டுமா என்ன… கண்மணியே… ரிஷியின் சந்தோசத்தைப் பார்க்க முடியவில்லை… பரவாயில்லை… இனி அவன் வாழ்க்கையில் அடுத்தடுத்து சந்தோஷ நிகழ்வுகள் மட்டுமே… ரிஷியின் புன்னகை அவளுக்காக இன்றி வேறு யாருக்காக… காத்திருந்தது ரிஷியின் புன்னகை முகமும் அவன் கண்மணிக்காக


ரிஷிக்கு இப்போதும் கனவு போல் தான் இருந்தது… தாயின் உடல்நிலை இந்த அளவுக்கு சரி ஆகிவிடும் என்று கனவில் கூட நினைத்துப் பார்க்காதவனுக்கு இலட்சுமி அவராகவே நடந்து வந்த காட்சியை இப்போது கூட நனவென்று நம்ப முடியவில்லை… ஆக இன்னுமே அவனால் நடந்ததை நம்ப முடியவில்லை… ஆனால் கண்மணி மட்டுமே சொல்வாள்… லட்சுமிக்கான சிகிச்சைகளை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தவள் அவள் தானே… காலையும் மாலையும்… லட்சுமி செய்ய வேண்டிய பயிற்சிகளை எல்லாம் லட்சுமியை செய்ய வைத்து விட்டுத்தான் அவளின் அடுத்த வேலையே இருக்கும்… லட்சுமியின் முன்னேற்றங்களை ஒவ்வொரு நாளும் அவனிடம் சொல்லாமல் இருக்க மாட்டாள்.. சொல்பவள் கூடவே கண்டிப்பாக அத்தை மீண்டும் பழைய நிலைக்கு வருவார்கள் என்றும் நம்பிக்கையோடு சொல்வாள்… அப்போதெல்லாம் ரிஷி நம்பவில்லை… அவன் ஆறுதலுக்காக கண்மணி சொல்கிறாள் என்று நினைத்துக் கொள்வான் ரிஷி… ஆனால் இதோ அவள் சொன்னபடி நடந்து கொண்டிருக்கிறதே…


தன் அன்னையின் கால்களுக்கு பலம் வந்தது போல… அவரது கரங்களும்… வார்த்தைகளும் மெல்ல மெல்ல பழைய நிலைக்கு திரும்பும் என்று ரிஷிக்கு முதன் முதலாக… அசைக்க முடியாத நம்பிக்கை வந்திருக்க… அப்படி ஒரு நிம்மதி கலந்த சந்தோசம் அவனுக்குள்… அதுவும் வெகுநாட்களுக்குப் பிறகு… வெளியில் காட்டிக் கொள்ளாவிட்டாலும்… அந்த நிம்மதி தந்த சந்தோஷம் புன்முறுவலாக அவன் முகத்தில் உறைந்து விட்டிருந்தது… ஆக வெகு நாட்களுக்குப் பிறகு ரிஷியின் கண்களில் புன்னகை குடியேறி இருக்க… அந்த கண்களில் ஜீவன் மீண்டும் வந்திருந்தது..


கண்மணியையும் ரித்விகாவையும் அழைத்து லட்சுமியைப் பற்றி சொல்லலாம் என்று முதலில் நினைத்தான் தான்… ஆனால் அதன் பின்… தன் தங்கையை, அவள் குணத்தை யோசித்தவன்… அந்த முடிவைக் கைவிட்டு விட்டான்


தாயின் உடல்நிலை சரி ஆனதைக் கேட்டால், அவன் தங்கை உடனே மீண்டும் சென்னைக்கு வர வேண்டும் என்று அடம்பிடிப்பாள்… அப்படிப்பட்ட ஆள் தான் அவள்… உடனே தன் அம்மாவைப் பார்க்கவேண்டும் என்று கண்மணியை தொந்தரவு செய்வாள் என்றே தோன்றியது ரிஷிக்கு…


ஆம்… தாயைப் பார்ப்பதை விட அந்த ஊட்டி டூரெல்லாம் ரித்விகாவுக்கு பெரியதாகவே இருக்காது.. எப்படி ஊட்டிக்கு செல்ல வேண்டும் என்று அடம்பிடித்தாளோ அதைவிட பலமடங்காக இங்கு திரும்பி வரவும் அடம்பிடிப்பாள்… என்று ரிஷிக்குத் தோன்ற


ரித்விகா அப்படி அடம் பிடித்தால் கண்மணியும் வேறு வழியின்றி … மகிழுந்தோ… இல்லை பேருந்தோ பிடித்து இருவருமாக தனியாக வர வேண்டும்… அவர்கள் இருவரும் அப்படி தன்னந்தனியாக வருவதில் ரிஷிக்கு உடன்பாடில்லை… இந்தக் காரணத்தினால் ரித்விகா மற்றும் கண்மணியிடம் சொல்லாமல் விட்டு விட்டான்… அது மட்டும் இன்றி… அவர்கள் சுற்றுலா முடிந்து வரும்போது அவர்களுக்கு எதிர்பாரா சந்தோஷமாக இருந்து விட்டுப் போகட்டும் என்று விட்டு விட்டான் ரிஷி…


அதேபோல் பிரேம்-மகிளா இவர்கள் வீட்டுக்கு வந்தது கூட சூழ்நிலைக்கு அசாதாரணமாக இல்லை… இலட்சுமியின் உடல்நிலை சரியாகி விட்டதை கேள்விப்பட்டு எதார்த்தமாகப் பார்க்க வந்தது போல ஆகி விட்டது… பிரேம்-மகிளா முதன் முதலாக வந்த போது வீட்டின் தலைவி கண்மணி இல்லாமல் போனது கூட இப்போது பெரிதாக தெரியவில்லை… கண்மணி இல்லாமல் அவர்கள் விருந்துக்கு வருவது சரியாக இருக்காது என்று ரிஷி எதை நினைத்து கவலைப் பட்டானோ அதுவும் பெரிய விசயமாக ஆக வில்லை….


ஆக எல்லாமே இயல்பாக நடந்து கொண்டிருக்க… ரிஷிக்குத்தான் அங்கு இருக்க முடியாத சூழ்நிலை… முக்கியமான வாடிக்கையாளர் சந்திப்பு…


“பிரேம் எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங்… லஞ்ச் முடிந்தவுடன்… கிளம்பிடுவேன்.. உங்களுக்கு கம்பெனி கொடுக்க முடியாத நிலை” எனத் தர்மசங்கடத்துடன் பிரேமிடம் ரிஷி சொல்ல…


“அதப் பாருங்க ப்ரோ… நான் எங்க போகப் போகிறேன்… ஈவ்னிங் வந்து கூட பேசிக் கொள்ளலாம்.” என்று பிரேமும் ரிஷியைக் கிளம்பச் சொல்லி விட்டான்…


ரிஷி அங்கிருக்க முடியாத சூழ்நிலை ஆகிவிட… மருமகனுக்குப் பதிலாக வீட்டுத் தலைவனாக நட்ராஜ் அன்றைய பொறுப்பை ஏற்க… ரிஷியும் கிளம்ப ஆயத்தமானான்…


என்னதான் பிரேம் சொன்னாலும்… ரிஷிக்கு அவனுடன் இருக்க முடியவில்லை என்ற கவலை இருக்கத்தான் செய்தது…. ஆனால் பிரேம் நட்ராஜோடு தீவிரமாகத் தன்னை மறந்து அளவளாவிக் கொண்டிருந்த காட்சியைப் பார்க்க அந்தக் கவலையும் அவனையும் விட்டு மறைந்திருந்தது…


நட்ராஜுடன் பேசிக் கொண்டிருந்த பிரேமுக்கோ….. நட்ராஜுக்கு கனரக வாகனங்கள் பற்றி தெரிந்த விசயங்கள்… அவனை ஆச்சரியப்படுத்த… பிரேம் அவருடன் இயல்பாக உரையாட ஆரம்பிக்க… அவன் தன் தொழிலுக்குத் தேவையான குறிப்புகளைக் கேட்டறிய இப்படியாக அவனது நேரம் பயனுள்ளதாகவும் போக ஆரம்பித்திருந்தது…


இதற்கிடையே ரிஷிக்கு தாமதமாக… மணியைப் பார்த்தபடியே… சமையல் முடிந்து விட்டதா எனப் பார்க்கப் போக… ரிதன்யாவும்… மகிளாவும்… சமையலறையை அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்தனர்… மகிளாவா!!! என்று ரிஷியே ஆச்சரியப்படும் வகையில் அத்தனை உணவு பதார்த்தங்கள்…


கண்டிப்பாக ரிதன்யாவெல்லாம் காரணம் இல்லை என்று தெரியும்… அதனால் அவனையுமறியாமல்


“மகி…“ அழைத்தவன் ஆச்சரியத்தில் கண்களை விரிக்க… மகிளா அவனைப் பார்த்த ஒரே பார்வையில்… தானாகவே அடங்கினான் ரிஷி…


காரணம்


“இதெல்லாம்… இது போல பொறுப்பாக என்னால் எதுவும் செய்ய முடியாது… இந்தக் குடும்பத்தைத் தாங்க முடியாது என்று தானே என்னைத் தள்ளி வைத்தாய்… இப்போது என்ன சொல்கிறாய்” என்ற கேள்வியைத் தாங்கிய குற்றம் சாட்டிய பார்வையே மகியின் பார்வை முழுவதும்… அதன் வீச்சைத் தாங்காமல் வேறு புறம் திரும்பியவன்… நொடியில் தன்னைச் சமாளித்தபடி…


“லேட்டாகிருச்சு… அதுதான் வந்தேன்” என்றான் மகிளா ரிதன்யா இருவரிடமும் பொதுவாக…


சொன்னவன் அதற்கு மேல் அங்கு இருக்காமல்… சமையலைறையை விட்டு வெளியே வந்து விட்டவன்… தன் தாய் இருந்த அறைக்குள் வந்து விட… கூடவே மகிளாவும் ரிதன்யாவும் அவனோடு வந்தனர்…


ரிதன்யாதான் ஆரம்பித்தாள்…


“அத்தை… ரித்விகா மட்டும் தான் மிஸ்ஸிங்… அவ மட்டும் இருந்திருந்தா… அவளைக் கையில பிடிச்சுருக்கவே முடியாது… ஆனா நான் இதைச் சொல்லியே ஆகணும்…. மகிளா வீட்டுக்கு வர்றான்னு சொன்ன உடனேயே… எல்லாமே மாறின மாதிரி ஃபீல் அத்தை… ஏதோ பழைய வாழ்க்கைக்கே திரும்பினா மாத