கண்மணி... என் கண்ணின் மணி -38-1

அத்தியாயம் 38-1


/*

அதிகாலை நேரம்

கனவில் உன்னைப் பார்த்தேன்

அது கலைந்திடாமல்

கையில் என்னை சேர்த்தேன்


விழி நீங்கிடாமல்

நீந்துகின்ற தென்றலே..ஹோய்..

உன்னை சேர்ந்திடாமல்

வாடும் இந்த அன்பிலே..ஹோய்..

லல..லாலலால..லாலலால... */


அதிகாலை சூரிய உதயம்… மெல்ல மெல்ல பிராகாசிக்க ஆரம்பித்த சூரிய கதிர்கள்… ரிஷியை ஆக்கிரமிக்க ஆரம்பிக்க… அந்த இதமான இளம் சூடை அனுபவித்தபடி தன் இரு சக்கர வாகனத்தில் உல்லாசமாக வந்து கொண்டிருந்தான் ரிஷி ‘கண்மணி’ இல்லத்தை நோக்கி…


கண்மணி மற்றும் ரித்விகாவோடு… பள்ளிக்குச் சென்றவன்… இருவரையும் பேருந்தில் ஏற்றி அனுப்பி விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தான் …


வெகுநாட்களுக்குப் பிறகு… பைக் பயணத்தை அனுபவித்தபடி… ரசித்தபடி… சீட்டி அடித்தபடி வந்து கொண்டிருந்தான்… இதோ ’கண்மணி’ இல்லத்திற்கும் வந்து விட்டான்…


வண்டியை எப்போதும் நிறுத்தும் இடத்தில் நிறுத்தியவன்…. வண்டியை விட்டு இறங்க நினைக்க… சில வருடங்களாக இல்லாத… அவனது பழக்கம்… மீண்டும் வந்திருந்தது…


அதாவது வண்டியை விட்டு இறங்கும் போதே… கண்ணாடியில் தன்னைப் பார்த்து சரி செய்து விட்டு… அந்த இடத்தை விட்டு நகர்வது…


இன்று அவனையுமறியாமல் அந்தப் பழக்கம் வந்து விட… கண்ணாடியைப் பார்த்து தன் முன் தலைக் கேசத்தைக் சரி செய்தவன் ஒரு முறை தன்னையேப் பார்க்க… அவனுக்கே அவன் அந்நியனாகத் தெரிந்தான்…


முகமெங்கும் தாடி… உர்ரென்ற முகம்… தன்னையேப் பார்க்கப் பிடிக்காமல் சில அடி தூரம் போனவன்… மீண்டும் திரும்பி வந்து தன்னையேப் பார்த்தவன்…


“கொஞ்சம் சிரியேண்டா… உனக்காக இல்லாட்டியும் நீ சிரிக்கிறத பார்க்கறதயே ஒருத்தி வாழ்க்கையா வாழுறா… அவளுக்காகவாது..” என்று மனசாட்சி சாட… இப்போது கண்மணியின் முகம் தான் அவன் முன் வந்து நின்றது..கூடவே முந்தைய நாள் இரவின் நினைவுகளும்


நள்ளிரவில் ரிஷிக்கு திடீரென்று விழிப்புத் தட்ட… கண் விழித்துப் பார்க்க… கண்மணி அங்கிருந்த நாற்காலியில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள்… அதைப் பார்த்த ரிஷிக்கு ஒரு நிமிடம் தூக்கி வாறிப் போட்டதுதான்…


”தன் அருகில் இவ்வளவு இடம் இருக்கும் போது… இங்கு வந்து படுக்காமல் ஏன் இப்படி உட்கார்ந்தபடி உறங்குகிறாள்…” யோசனை வந்த போதே… அவன் உணர்ந்து கொண்ட உண்மை அவனையே சுட்டது…


ஆம்! கண்மணி எதார்த்தமாக அவனை நெருங்கும் போதெல்லாம்… இவன் தள்ளி தள்ளி விலகி நின்ற வழக்கம்… இப்படி அவளை முடிவெடுக்க வைத்து விட்டதா???.. அதாவது தன்னருகே உறங்குவதைத் தவிர்த்திருக்கிறாள்…


சட்டென்று எழுந்து அமர்ந்து விட்டான் ரிஷி… அவள் அருகே வரும் போதெல்லாம் தான் முன்னெச்சரிக்கையாக அவளை விட்டு விலகி நிற்கும் பாவனை… தன் மனைவியை எந்த அளவு பாதித்து இருக்கிறது… அதை அவளும் உணர்ந்து… எந்த அளவு தன்னால் இங்கிதமாக நடக்க முடியுமோ அந்த அளவு நடந்து கொண்டிருக்கின்றாள்… உணர்ந்து கொண்டான்…


உணர்ந்து கொண்டவன்… தன்னையே தலையிலடித்துக் கொண்டவனாக அவளருகே சென்றவன்…


“நான் ஒரு லூசுடி… ஆனால்.. என்னை விட நீ லூசா இருக்கியே?!!” அவளருகில் நின்றபடி உரத்த குரலில் பேச ஆரம்பித்தவன்… கண்மணியைப் பார்க்க… அவளிடமிருந்தோ எந்த ஒரு அசைவும் இல்லை…


அவளின் ஆழ்ந்த நித்திரையை உணர்ந்தவன்… சில நிமிடங்கள் அவளையே பார்த்தபடி அமர்ந்து விட்டான்… உறங்கும் போது அந்த முகத்தில் தெரிந்த குழந்தைத்தனத்தில்… இவளுக்கா நாம் ‘சொர்ணாக்கா’ என்று பெயர் வைத்தோம் என்றுதான் ரிஷிக்குத் தோன்றியது… தனக்குள் சிரித்துக் கொண்டபடியே… மனைவியை ரசிக்க ஆரம்பித்திருந்தான் ரிஷி…


விடிவிளக்கின் மெல்லிய வெளிச்சமும்… இலேசாக காற்றில் அசைந்த கேசமும் போட்டி போட்டபடி… கண்மணியின் முகத்தின் மீது உறவாடிக் கொண்டிருந்தன…


ரிஷி அவள் முகத்தில் அசைந்து அவள் தூக்கத்தைக் கெடுக்க நினைத்த கேசத்தை சரி செய்து விட்டு அவளைப் பார்க்க… இப்போது தெளிவாகத் தெரிந்த கண்மணியின் நெற்றியில் ஆங்காங்கே ஈர முத்துக்கள்… அவனையுமறியாமல் அந்த அறையின் மேலே ஓடிக் கொண்டிருந்த காற்றாடியில் பார்வை பதிந்து… மீண்டும் மனைவியிடம் வந்து நின்றது… கூர்ந்து கவனித்தன அவனது கண்மணிகள் அவனது ’கண்மணி’யை


புடவையோடே உறங்கியிருந்தாள்… அதுவும் பள்ளிக்கு அணிந்து சென்ற புடவை…


நேற்று வந்ததில் இருந்து… புடவையைக் கூட மாற்றக் கூட நேரம் இல்லையா இவளுக்கு… நினைத்தப்போதே…


“இவனும் …இவன் தங்கைகளும் நேற்று ஆடிய ஆட்டம்…” ஞாபகத்திற்கு வர…


“நம் குடும்பத்தோடு போராடவே இவளுக்கு நேரம் சரியாக இருக்க… இதற்கெல்லாம் நேரம் இருக்குமா”


தன்னையே திட்டிக் கொண்டவன்… அவளருகே குனிந்தான்… காற்றை உள்ளிழுத்து வாயை அழுந்த மூடியவன்… தன் மொத்த உடல் பலத்தை எல்லாம் தன் கைகளில் கொண்டு வந்தான்… அப்போதுதான் அவன் அவளைத் தூக்கும் அழுத்தம் கூட அவள் உணர முடியாது… என்பதால் அப்படி செய்து... அதே போல் அவளைத் தூக்க… கண்மணியாலும் உணர முடியவில்லை… அப்படியே உணர்ந்திருந்தாலும் காற்றில் மிதப்பது போல்தான் அவளுக்கு இருந்திருக்கும்


”தாய்மை கொண்ட கைகளுக்கு மட்டுமே உரித்தான பழக்கம்… குழந்தை தூங்கும் போது அது உணராமல் இடம் மாற்றும் தாயின் பழக்கம்…” அப்படி குழந்தையை ஏந்தும் அன்னையைப் போலவே கண்மணியைக் கையாண்டாண் ரிஷி என்றால் மிகையாகாது


கண்மணியும் எழ வில்லை… எப்படி அவள் உணராமல் தூக்கினானோ அப்படியே படுக்கவும் வைத்தவன்… தானும் அவளருகே படுத்தபடி… இப்போது அவள் முகத்தில் பூத்திருந்த வியர்வை அரும்புகளைத் துடைத்து விட்டவன்… தன் வலிமையான கரங்களில் அவள் தலையைச் சாய்த்தபடி… தன் மற்றொரு கரத்தை அவள் மேல் போட்டுக் கொண்டவனாக… அடுத்த சில நிமிடங்களியே ரிஷி மீண்டும் கண் அயர்ந்தான் …


எத்தனை மணி நேரங்கள் கடந்திருக்கும் என்று தெரியவில்லை… கண்மணியின் அலைபேசி அடிக்க… வித்தியாசமான அலார்ம் அழைப்பில் முதலில் விழித்தவன் அவன் தான்… சட்டென்று கண்களைத் திறந்து… கண்மணியைப் பார்க்க அவள் இமைகளுக்குள் அவளின் கண்மணிகள் மெல்ல மெல்ல அசைய… பட்டென்று தன் இமைகளை மூடிக் கொண்டான்…


கண்மணி சில வினாடிகளுக்குப் பின் கண் விழித்ததை அவள் அசைவின் மூலமாகவே உணர்ந்து கொண்டான் ரிஷி… ஆனாலும் ரிஷி எழவே வில்லை… தூங்குவது போலவே பாசாங்கு செய்தபடி படுத்திருக்க… அடுத்த சில நிமிடங்களில்… நிமிடங்கள் கூட இல்லை… சில நொடிகளில் அந்த அறையை விட்டு கண்மணி வெளியேறி இருந்தாள்…


அடுத்து இவன் கீழே இறங்கி வந்த போது கூட… பள்ளிக்குச் சென்ற போதோ… ஏன் பேருந்தில் ஏறும் போதோ… கண்மணியிடம் பெரிதாக வித்தியாசம் இல்லை… இவனும் கண்டுகொள்ளவில்லை… பேருந்தும் கிளம்பி விட… பைக்கில் சாய்ந்து நின்றபடியே கை அசைத்தபடியே வழி அனுப்பி வைத்தான் ரிஷி மனைவிக்கும் தங்கைக்கும்…


பேருந்தும் கிளம்பி சில அடி தூரம் சென்றுவிட..


’சரி நாம் இனி வீடு திரும்பலாம்’ என்று ரிஷி பைக்கில் ஏறப் போகும் போது… கண்மணியிடம் இருந்து அழைப்பு வர… இப்போதுதானே ஏற்றி விட்டோம்… அதற்குள்ளாக என்ன அலைபேசியில் அழைப்பு என்று யோசித்தபடியே… சற்று தூரத்தில் சென்ற பேருந்தை நோக்கியவனாக…. கண்மணி அமர்ந்திருந்த சன்னலோர இருக்கையைப் பார்த்தபடியே… அலைபேசியை எடுத்து காதில் வைக்க…</