கண்மணி... என் கண்ணின் மணி -33

Updated: Aug 6, 2021

அத்தியாயம் 33:


/*நான் மாட்டிக்கொண்டேன்

உனில் மாட்டிக்கொண்டேன்

உடலுக்குள் உயிரைப் போல

உனில் மாட்டிக்கொண்டேன்


நான் மாட்டிக்கொண்டேன்

உனில் மாட்டிக்கொண்டேன்

உன் குரலுக்குள் இனிமை போல

உனில் மாட்டிக் கொண்டேன்


உந்தன் சுருள்முடி

இருளிலே கண்ணைக்

கட்டிக்கொண்டு தொலைகிறேன்

என்னை நானே கண்டுபிடிக்கிறேன்

பாா்வையில் உன் வாா்த்தையில்

*/


அந்த பரந்து விரிந்த இடத்தில் ஒரு சிறு இடத்தை மட்டுமே நட்ராஜின் பட்டறை ஆக்கிரமித்து இருக்க… இரவு 8 மணி என்ற போதிலும்… ஆள் அரவமற்ற அந்த இடத்தில் ரிஷி மட்டுமே…


கம்பெனியின் பிரதான கதவுக்கு வரும் போது… அடுத்தடுத்து செய்யப் போகும் வேலைகளுக்கான எண்ணங்களை மட்டுமே கணக்கிட்டுக் கொண்டிருந்த ரிஷியின் மனம்… இப்போது அந்த இட அளவையும் கணக்கீடு செய்ய ஆரம்பித்தது… தனக்குள் பலவாறு எண்ணமிட்டபடியே… வெளியே வந்து கதவைப் பூட்டி விட்டு… தன் இருசக்கர வாகனத்தை இயக்க ஆரம்பிக்கப் போக… நொடியும் தாமதிக்காமல் திடீரென்று ஒரு நான்கு சக்கர வாகனம் சட்டென்று வந்து அவன் முன் வந்து நிற்க… முதலில் திகைத்த ரிஷி பின் தன்னைச் சுதாரித்துக் கொண்டு அந்த வாகனத்தோடு மோதாமல் தன் பைக்கை நிறுத்தியவன்… போன முறை போல் இல்லாமல் இந்த முறை சுதாரித்தவனாக… யாராக இருந்தாலும் எதிர்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையோடு… தன்னைத் தயார்படுத்திக் கொண்டு… நிற்கும் போதே… அது எல்லாம் தேவையே இல்லை என்பது போல இருந்தது.. முன் நின்ற வாகனத்திலிருந்து இறங்கிய ஓட்டுநரின் செயல்கள்…


ரிஷி எப்போது வெளியே வருவான் என்று வெகுநேரமாக அவனுக்காகவே காத்திருந்திருப்பான் போல… வந்த அந்த புதியவனின் நடவடிக்கையைப் பார்த்து ரிஷிக்கு அப்படித்தான் தோன்றியது…


ரிஷியை நோக்கி வந்த அந்த ஓட்டுநரோ… நடந்து கூட வராமல் கிட்டத்தட்ட ஓடி வந்தான் என்றே சொல்ல வேண்டும்… அவனின் ஒவ்வொரு செயலிலும் ரிஷியை அவன் எஜமானி என சொல்லும் அளவுக்கு அவ்வளவு பவ்யம்…


”யார் இவன்… தன்னிடம் இந்த அளவுக்கு பம்முகிறான்” ரிஷி யோசனையுடன் அவனை பார்த்துக் கொண்டிருக்கும் போதே…


வந்த அந்த முகம் தெரியாதவனோ... ரிஷியின் முன் வேகமாக வந்து நின்று அவன் கைகளில் அலைபேசியை திணிக்க…


திகைப்பு ஒரு புறம்… யோசனை ஒரு புறம்m… கோபம் ஒரு புறமென… அவனைப் பார்த்தபடியே… ரிஷி அலைபேசியை தன் காதில் வைக்க… பேசியது கண்மணியின் தாத்தா… ’நாரயண குருக்கள்’…


----


ரிஷி ’கண்மணி’ இல்லத்துக்கு வந்து சேர்ந்த போது.. கிட்டத்தட்ட இரவு மணி 10….


ஒன்பது மணிக்கெல்லாம்… வீடு திரும்பி வந்து விடலாம் என்று ரிஷி திட்டமிட்டிருக்க… இடையே நாரயண குருக்கள் மற்றும் வைதேகியின் குறுக்கீடு… அவர்களைப் போய் சந்தித்துவிட்டு வந்தததால் சற்று காலதாமதமாகி இருந்தது


அவர்களைப் பற்றி… பவித்ராவைப் பற்றி… நட்ராஜைப் பற்றி… யோசித்தபடியே… உள்ளே வர… அங்கிருந்த மரத்தடியில் அமர்ந்திருந்தபடி… நட்ராஜ்… ரித்விகா… கண்மணி மூவருமாக காட்சி அளித்தாலும்… ரிஷியின் கண்களோ நட்ராஜிடம் மட்டுமே இருந்தது…


அவன் நினைத்தபடி வந்திருந்தால் நட்ராஜ் உறங்கப் போயிருக்க மாட்டார் என்பது நிச்சயம்… ஆனால் இப்போதோ மணி பத்தாகி இருக்க… ஒரு வேளை நட்ராஜ் உறங்கி இருப்பாரோ… அவரிடம் பேச முடியாதோ என்ற பதட்டத்தில் வந்தவனுக்கு… நட்ராஜ் விழித்துக் கொண்டிருந்ததைக் கண்டு நிம்மதிப் பெருமூச்சை அவனறியாமல் வெளி வந்திருந்தது…


இப்படி ரிஷியின் எண்ணங்களில் நட்ராஜ் மட்டுமே இருக்க… கண்மணியின் எண்ணங்களிலோ அவள் கணவன் மட்டுமே…. அதன் விளைவு… ரிஷி உள்ளே வந்து நுழைந்ததில் இருந்து… அவனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள் என்று சொல்ல வேண்டும்…


அப்படி அவள் பார்த்துக் கொண்டிருக்க காரணம் இல்லாமலும் இல்லை… காரணம் சற்று முன் தான் அவள் பாட்டி வைதேகி அவளுக்கு அலைபேசியில் அழைத்திருந்தார்…


அவளது தாத்தா அழைத்து ரிஷி அங்கு வந்ததையும்… அந்தக் குடும்பத்தின் ஒரே வாரிசான தங்களது ஒரே பேத்தி கண்மணிக்காக…அவள் கணவன் ரிஷியை நம்பி அவர்களது மொத்த குடும்ப சொத்தையும் நாரயண குருக்கள் ரிஷியிடம் நீட்டிய விதத்தையும்… ஆனால் ரிஷியோ எதையுமே கண்ணெடுத்து பார்க்காமல்… நட்ராஜை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று கேட்டதையும்… நாரயண குருக்கள்… அதற்கு மறுத்ததையும்… நட்ராஜை விடுத்து தனக்கு வேறு ஏதும் பெரிதில்லை என்று நாராயண குருக்களிடம் ரிஷி சொல்லி விட்டு வந்ததையும் அப்போதுதான் பேத்தியிடம் சொல்லி இருக்க…


அந்த காரணத்தினாலோ என்னவோ… தன் கணவன் எப்போது வந்தானோ அப்போதிருந்தே கண்மணியின் பார்வை… அவனை… அவனை மட்டுமே தொடர்ந்து கொண்டிருக்க…


தன் விழியாளின் பார்வையை எல்லாம் அறியாமல்…. மூவருக்கும் அருகில் வந்தவன்… தன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி… தலைக்கவசத்தைக் கழட்டியபடியே…


“சார்… ஒரு ஹேப்பி நியூஸ் சார்… உங்ககிட்டதான் முதல்ல சொல்ல வந்தேன்… தூங்கிருப்பீங்களோன்னு நெனச்சுட்டே வந்தேன்… நல்ல வேளை… நீங்க தூங்கலை… வெயிட் பண்ணுங்க… பைக்கை நிறுத்திட்டு வர்றேன்” என்றவனின் குரலில் அத்தனை குதுகலம்…


பெரிதாக சிரிக்கவில்லை என்றாலும்… ஏதோ ஒன்று பெரிதாக இருக்கின்றது என்பது ரிஷியின் குரலிலேயே தெரிய… கண்மணியும்… ரித்விகாவும் தங்களுக்குள் கண்சைகையாலேயே பேசிக் கொண்டனர்…


“என்னவா இருக்கும் அண்ணி…தெரியுமா உங்களுக்கு” ரித்விகா கேட்க…


கண்மணியோ தனக்கும் ஏதும் தெரியாதென்று தோளைக் குலுக்கி உதட்டைப் பிதுக்க…. இவர்களின் கண்ஜாடைகளுக்கிடையில் ரிஷி அங்கிருந்து அகன்று பைக் நிறுத்துமிடத்திற்கு விரைய…


நட்ராஜிடமிருந்தோ வழக்கமான பாவம் மட்டுமே… அவரிடமிருந்து பெரிதாக ஆச்சரியமோ… என்னவாக இருக்கும் என்ற முகபாவனைகளோ இல்லை….


கிட்டத்தட்ட அவரைப் போலதான் கண்மணியுமே… ஆனால் அவள் தந்தை அளவு இல்லையென்றாலும்…. ரிஷி சொல்லப் போவது என்னவாக இருக்கும் என்ற சிறு யோசனை மட்டுமே அவளுக்குள் இருக்க… பெரிதாக குழம்பாமல் மீண்டும் தன் வேலையில் மூழ்கினாள்…


ஆனால் இந்த இருவருக்கும் மாறாக ரித்விகா தான் அங்கு உணர்ச்சி வசப்பட்டவளாக இருந்தாள்…


வெகு நாட்களுக்குப் பிறகு… தன் அண்ணனின் முகத்தில் அவள் கண்ட சந்தோஷமான துள்ளலைப் பார்த்ததாலோ என்னவோ தெரியவில்லை…


“அண்ணி… வாங்க… வாங்க… அது என்ன… நம்மகிட்ட சொல்லாமல்… நட்ராஜ் மாமாகிட்ட… ஃபர்ஸ்ட்… சொல்லுவாராம்… நாம தான்… இல்ல இல்ல… நீங்கதான் ஃபர்ஸ்ட்… உங்ககிட்ட தான் ஃபர்ஸ்ட் சொல்லனும்… வாங்க வாங்க… எழுந்திருங்க” துள்ளல் பாதி… உற்சாகம் பாதி… உரிமை பாதி என கண்மணியின் கையைப் பிடித்துக் கொண்டு இழுத்து நடந்தாள்… தன் அண்ணனை நோக்கி


ரித்விகாவைப் பொறுத்தவரை தன் அண்ணன் அவர்கள் இடத்திற்கு வரும் வரை கூட பொறுமை இல்லை… விசயம் என்னவென்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் மட்டுமே… விளைவு தன் அண்ணியோடு தன் அண்ணன் முன் போய் நிற்க…