top of page

கண்மணி... என் கண்ணின் மணி -32 -2

அத்தியாயம் 32-2

/* ஹே

நெஞ்சுல வீசும் கண்மணி வாசம்

காட்டு செண்பகமே

சங்கதி பேசும் கண்களும் கூசும்

காதல் சந்தனமே


பறவை போல பறந்து போக

கூட சேர்ந்து நீயும் வருவியா

கண்மணியே

வாகொஞ்சிடவே */

“என்ன நெனச்சுட்டு இருக்கார்… நான் ஏதாவது அவரைக் கண்ட்ரோல் பண்றேன்னா… அது மட்டும் இல்லாமல் என்ன தைரியம் இருந்தால்…” என்று யோசிக்கும் போதே,…


“ஒகே… அதைக் கூட விட்றலாம்… ஆனாலும் என் பெர்மிஷன் இல்லாம என் மேல கை வைச்சது தப்புதான்.. ஆனால் இப்போ அது முக்கியமில்ல… அதுனால விட்றலாம்…“ என்று தனக்குள் பேசியபடி மாடிப் படி ஏறியவளை வரவேற்றது ரிஷி இருந்த அறையின் மூடிய கதவுகள் தான்…


வேகமாக கை வைத்து தள்ளப் போனவள் ஒரு நிமிடம் நிதானித்தவளாக..


“கண்மணி… என்னதான் புருசன் பொண்டாட்டினாலும்… கதவைத் தட்டிட்டு போறதுதான் நாகரீகம்…” என்று தன்னைத்தானே குட்டிக் கொண்டபடி… கதவை மெல்லத் தட்ட…


“உள்ள வா… திறந்துதான் இருக்குது” என்று அவன் அழைத்த குரலிலேயே அவனுக்கு தான்தான் வந்திருக்கிறோம் என்று தெரிந்து விட்டது என்பது புரிந்தவளாக… உள்ளே வர… மடிக்கணினியில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தவன்… தன் முன் வந்து நின்றவளை நிதானமாக நிமிர்ந்து பார்த்தபடியே…


”அப்புறம்… சொல்லு… என்ன… சண்டைலாம் போட்டு முடிச்சுட்டு வந்துட்ட போல… “ அவன் குரலில் என்ன இருந்தது என்றே தெரியவில்லை… ஆனால் அந்த முகத்தில் கோபம் இல்லைதான்… ஆனாலும் இருந்ததா… என்ன மாதிரியான பாவம் இது… கோபமா… ஏளனமா.. ஏமாற்றமா… என்று பிரித்தறிய முடியாதபடியில் ரிஷியின் முகபாவம் இருக்க…


கண்மணிக்குத்தான் இப்போது ரிஷியிடம் கடுமையாகப் பேச வந்த மனநிலை மாறிப் போயிருக்க…


“என்னையே பார்த்துட்டு இருந்தா… என்ன அர்த்தம்… ஹ்ம்ம்… சொல்லு… இப்போ எதுக்கு வந்துருக்கீங்க… நீங்கதான் என் பேச்சைக் கேட்க மாட்டீங்க… நான் கேட்பேன்…“ அவளைப் பார்த்தபடியே தன் கையில் இருந்த மடிக்கணியை மூடி மேஜையில் வைக்க…


கண்மணியும் சுதாரித்தவளாக…


அவன் கையில் இருந்து மாறிய மடிக்கணினியை பார்ப்பது போல தன் பார்வையை அவனிடம் இருந்து மாற்றி…


”அ… அது… லேப்டாப் இன்னைக்கு வேண்டுமான்னு கேட்க வந்தேன்… “ நல்ல வேளையால் அந்தக் கணினி கண்மணிக்கு துணை செய்ய…


”ஓஹ்… இன்னைக்கு க்ளைண்ட் ஆஃபிஸ் போற வேலை இல்ல… எடுத்துக்கோ” என்றபடியே….


“டெய்லி லேட் நைட் முழிக்கிறியா… நான் வரும் போதெல்லாம் லைட் எரியுது… ஆமா நீ எத்தனை ஸ்டோரி எழுதி இருக்க… ” ஒரே நொடியில் பேச்சை திசை மாற்றி இருந்தான்,,,


”அந்த ஸ்டோரி ஃபோல்டர்… என் கண்ண உருத்துது… டைம் இருந்தா பார்க்கிறேன்… பார்க்கலாம்தானே” என்றவனின் வார்த்தைகளில்… பார்வையில்… நக்கலான சிரிப்பு எட்டிப் பார்க்க…


”என்ன இப்படி நக்கலா சிரிக்கிறான்… பார்த்திருப்பானோ… ஃபர்ஸ்ட் டைம் நமக்கு வராத… தெரியாத… ஜானர்ல எழுதிட்டு இருக்கோமே” என்று யோசித்தபடியே…. அவஸ்தையாக லேப்டாப்பை எட்டிப் பார்க்க…


இவனைப் பார்க்கும் போது கூட அவளிடம் இந்த மாதிரியான பார்வை அவன் பார்த்ததில்லை… அதிலேயே அவனுக்கும் அவளிடம் வம்பிழுக்கும் சுவாரசியம் அவனுக்குள் வர


“ஏன் இந்த முழி முழிக்கிற… பஞ்ச தந்திர கதை… நீதிக் கதை… தத்துவக் கதை தானே எழுதுவ நீ…. ரொமான்ஸ் ஸ்டோரிலாம் எழுதுற எஃபெக்ட் கொடுக்கிற… அதெல்லாம் நமக்கு வராதே… நான் சரியாத்தானே சொல்றேன்… சொல்லு… அந்த ஆர்ட்கிள்ள என்ன எழுதி இருந்த… எவ்ளோ ப்ரைஸ் வாங்கி இருக்க… ” என்றவனிடம்


“நீங்க ஒரு டைம்ல ஒரு கொஸ்டீன் கேட்க மாட்டீங்கள்ளா… வரிசையா கேட்டுட்டே இருக்கீங்க… எதுக்கு ஆன்சர் சொல்றது…” பதில் சொல்லாமல் பேச்சை மாற்ற


“எதுக்கு பதில் தெரியுதோ அதுக்கு சொல்லு… ஓ…. மிஸ்ஸுக்கு கேள்வி கேட்டுத்தான் பழக்கமே… பதில் சொல்லி பழக்கம் இல்லை… தெரியுதா… இப்போ… பதில் சொல்றது எவ்ளோ கஷ்டம்னு… கெளம்பு கெளம்பு” என்று ரிஷியும் விடாமல் அவளைக் குழப்ப… அவள் குழம்பியதில்… குழப்பியதில்… உள்ளுக்குள் சந்தோஷத்தில் குதித்துக் கொண்டிருந்தான்…


ஆக… தன்னிடம் கேள்வி கேட்க வந்தவளை…கேள்வி ஏதும் கேட்க விடாமல்… அவளிடமே கேள்வி கேட்டு… அவளையும் … குழம்ப வைத்து … இதோ கண்மணியும் வெளியேறப் போக



”கண்மணி” ரிஷி அழைத்தான்…


திரும்பியவளிடம்…


“கதவை மூடிட்டு போ” என்றவனிடம் முறைத்தபடியே மீண்டும் வெளியேறப் போக


“கண்மணி” என்று மீண்டும் ரிஷி அழைக்க… மீண்டும் திரும்பினாள்… ’இப்போது என்ன’ என்ற பாவனையில்


“இனிமேல் மூணாவது மனுசங்க மாதிரி இப்படி கதவைத் தட்டிட்டுலாம் வராத…”


இப்போது ரிஷியின் புறம் திரும்பவில்லை கண்மணி.. என்ன உணர்ச்சியைக் காட்டுவது… இந்த உலகத்தில் மனிதர்களுக்கு கோபம் தான் சுலபமாக வெளிக்காட்டும் உணர்வு போல…. மற்ற உணர்வுகள் எல்லாம் ஏனோ சட்டென்றும் வருவதில்லையோ… இல்லைத் தோன்றினாலும் காட்ட முடிவதில்லையா… கண்மணியும் கிட்டத்தட்ட அதே நிலையில் இருக்க… கதவை மூடியவளாக இறங்கி விட்டாள்…


”ஹப்பா…” நிம்மதிப் பெரு மூச்சு விட்டவன் வேறு யார்? ரிஷியே….


”ஹப்பா… தப்பிச்சேன்… இல்ல… வச்சு செஞ்சுருப்பா… சண்டை போடத்தான் வந்தா… எப்டியோ.. ஆக இவ எழுதுறதைப் பற்றி கேட்டா… ஆள் கொஞ்சம் வேற மாதிரி ஆகுற.. அப்படி என்ன எழுதுறான்னு ரிஷி பார்க்கனும்டா…” என்று தனக்குள் யோசித்தபடியே… உடை மாற்ற ஆரம்பித்தான் ரிஷி…


இங்கு கண்மணியோ… யோசனையுடனேயே ஒவ்வொரு படியிலும் கால் வைத்தபடி மெது மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தாள்…



“நாம எதுக்கு மேல போனோம்… சண்டை போட… ஆனா கடைசியா நம்மைக் குழப்பி அனுப்பி வைச்சுட்டானே… பாவமா மூஞ்சிய வச்சுருக்கானேன்னு… நாம பேச்சை மாத்துனா…. நம்மள பாவம் பார்க்க வச்சுருவான் போல… “ என்று யோசித்தபடியே அடுத்த அடி படி என்று நினைத்து வைக்க… அதுவோ தரையாக இருக்க… கொஞ்சம் தடுமாறி கீழே விழப் போனவள்… நல்லவேளை சுதாரித்து… மாடிப்படி சுவரின் கைப்பிடியை பிடித்து தன்னை சரிபடுத்திக் கொள்ள… இப்போது கண்மணியின் தன்மானம் இங்கு விழித்துக் கொள்ள…


“கண்மணி… என்ன பேசப் போனியோ… அதைக் கேட்டுட்டு வந்துரு… இல்ல இன்னைக்கு ஃபுல்லா… இப்டி தான் சுத்திட்டு இருக்கனும்..” அவளுக்குள்ளிருந்த அதிகாரக்குரல் அவளை இயக்க… இப்போது பழைய பன்னீர்செல்வமாக மாறி இருந்தாள்….


மீண்டும் ரிஷியின் அறையை நோக்கி திரும்பியவள்… முதலில் வந்த வேகத்தை விட வேகமாக மாடிப்படி ஏறியவள்… மூச்சிறைக்க அதே வேகத்தில் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே போக…


அங்கோ… ரிஷி அப்போதுதான் சட்டையை அணிய ஆயத்தமாகி இருக்க… கண்மணியைப் பார்த்த அவசரத்தில் அதை அப்படியே விட்டு விட்டு


“ஏய் … இப்போ என்னடி” பதறியபடி கண்மணியை நோக்க…


கண்மணிக்கோ…


“ஐயகோ” என்ற நிலைமை…


’இவன் தானே கதவைத்தட்டிட்டுலாம் வர வேண்டாம்னு சொன்னான்… இன்னைக்கு என்ன நடக்குது… இல்ல எனக்கு என்ன ஆச்சு…’


தனக்குள் முணங்கியவளுக்கு… மீண்டும் திரும்பிப் போகவும் மனம் இல்லை… அதே நேரம் அறைக்குள் வந்தவளுக்கு ரிஷியை நோக்கி அடுத்த அடி எடுத்து வைக்கவும் முடியவில்லை


அப்படியே நிற்க…


“என்னடி பிரச்சனை உனக்கு… லாஸ்ட் படி போய்ட்டு திரும்பி வந்தியா… நல்லவேளை… பரதேவதையே… முன்னாடி வந்திருந்த” என்று அவனும் படபடப்பில் பேச ஆரம்பித்தவன்… அவனாகவே நிறுத்த…


“எ… எனக்கு உங்ககிட்ட பேசணும்… அதுக்குத்தான் வந்தேன்… முதல்ல வந்தப்போ…” என்று இவள் தடுமாறி ஆரம்பிக்கும் போதே…


ரிஷியோ இப்போது இலகுவாக சட்டையை அணிந்தபடியே…. ஒவ்வொரு பட்டனாக போட்டபடியே அவளருகே வந்தவன்…


“சொல்லு… என்ன விசயம்” என்று அருகில் நெருங்கியவனிடம்… கண்மணியும் விலகவில்லை… எதற்கு வந்தோமோ… அதைக் கேட்டு விட்டுப் போக வேண்டும் என்ற நோக்கம் இப்போது அவளிடம் இருக்க…


“நான் உங்க விசயத்துல ஏதாவது தலையிடுறேனா” என்று சட்டென்று கேட்டாள்…


“புரியல” ரிஷி யோசனையுடன் புருவம் உயர்த்த


“அதாவது… நீங்க இப்படி இருக்கனும் அப்படி இருக்கனும்னு… நான் சொல்றேனா… எனக்கும் அதே மாதிரிதான்… என் விசயத்திலயும் நீங்க தலையிடாதீங்க… தலையிடக் கூடாது” என்ற போதே



முகம் சுருக்கினான்… ரிஷி…


“இப்போ கூட எனக்கு நீ ஆர்டர்தான் போடறேன்னு நினைக்கிறேன் …” என்றான் எரிச்சல் இழையோடிய குரலில்..


”ப்ச்ச்… இந்த மாதிரி இல்லை… எனக்கு பிடிக்காத விசயத்தை செய்யச் சொன்னீங்கள்ள… அந்த மாதிரி” என்றவளிடம்


“ஓ…” நெற்றியில் கை வைத்து யோசித்தவன்… சில நொடிகள் கழித்து


“ஒகே… இனி பார்த்து நடந்துக்கறேன்… போதுமா… எதுக்கும் உன்னைக் கம்பெல் பண்ண மாட்டேன்” என்று சட்டென்று சொல்லி முடித்து அவளைப் பார்த்தான்..


ஆக இப்படி அவன் எந்த ஒரு கோபமுமில்லாமல் பதில் சொல்லி விட… இதற்கு மேல் கண்மணியும் என்ன கேள்வி கேட்க… அமைதியாக நிற்க


“வேற என்ன” ரிஷி கேள்வியாய் நோக்க…


“ஒகே.. இதுதான்… அவ்ளோதான்… நான் கிளம்பறேன்” என்று சொல்லி விட்டு… கண்மணி திரும்பப் போக… ரிஷி இப்போது…


“ஒரு நிமிசம்… நில்லு”


“உனக்கு பிடிக்காத விசயத்தை நான் கம்பெல் பண்ணது தப்புதான்… ஆனால்… எங்கேயோ இடிக்குதே…”


”உங்க விசயத்தில நான் தலையிட்டிருக்னான்ன்னு கேட்டியே… அப்படி என்ன உனக்கு பிடிக்காத விசயத்தை நான் பண்ணிட்டு இருக்கேன்” ரிஷி கேள்வி மட்டும் கேட்காமல்… அவள் கைகளையும் பிடித்திருக்க… இறுக்கமான அந்தப் பிடியே… அவன் கேள்விக்கு கண்டிப்பாக பதில் சொல்லி ஆக வேண்டிய நிர்பந்தத்தையும் கொடுத்தது


கண்மணி யோசித்தாள்… யோசித்தாள்… யோசித்துக்கொண்டே இருந்தாள்… இருந்தால் தானே கிடைப்பதற்கு…


ஏதோ ஒரு பேச்சு வாக்கில் சொல்லி விட்டாளே தவிர… இந்த இரண்டு மாதங்களில் ரிஷி இவள் மனது நோகும் படி ஒரு நாள் கூட நடந்தது இல்லையே…


“சொல்லுன்னு… சொன்னேன்… அப்படி என்ன… நான்… உன்கிட்ட… பிடிக்காத மாதிரி நடந்துக்கிட்டேன்… மேடமும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போய்ட்டு இருக்கீங்க” அவன் புருவம் உயர்த்தி நெற்றி சுருக்கி.. ஒவ்வொரு வார்த்தையாக…. மென்குரலில் கேட்டாலும்.. அதிலும் கறார் குரல் வெளிப்படச் செய்ய…


கண்மணியும் இப்போது கண்மணியாக மாறி இருந்தாள்..…


“பிடிக்காத விசயம்னு இல்லை… ஆனால் பிடிச்ச விசயத்தை பண்ணலைன்றதும் அந்த கேட்டகிரில தான் வரும் ரிஷி.. எனக்கு பிடிச்சமாதிரி நீங்க இல்லைன்றதையும் சொல்லலாம்ல…” இப்போது கண்மணி கண்சிமிட்டி… புருவம் உயர்த்த


பார்த்த ரிஷிக்குள் இரத்தம் ஒரே நொடியில் சூடாகி… சட்டென்று குளிர்ந்தது போன்ற உணர்வு…


மனதுக்குள்ளேயோ….


“இவ என்ன சொல்ல வர்றா… இவளுக்கு பிடித்த மாதிரின்னா” உமிழ்நீர் விழுங்கியதை அவன் தொண்டையின் ஆதாம் ஆப்பிள் மறைத்ததா… எடுத்துக் காட்டியதா?


அவனைப் பார்த்தபடியே


“அதாவது… ரித்திய நான் ஸ்கூலுக்கு கூட்டிட்டு போய்ட்டு வரலாம்னு நினைத்தேன்… நீங்க அதைச் செய்ய விடலை… அப்போ எனக்கு பிடித்த விசயத்தை செய்ய விடலதானே… அப்போ நான் பிடிவாதம் பிடிச்சேனா… தலையிடல தானே”


அவளைப் பிடித்திருந்த கையை விட்டவன்…


”ஊப்ப்… ஓ… இதுதானா… நான் வேற பயந்துட்டேன்” என்ற போதே… தலையைச் சாய்த்து அவனைப் பார்த்த கண்மணி


“என்ன ரிஷிக்கண்ணா… வேற ஏதோ நெனச்சு பயந்துட்டீங்களா..” என்று இதழ்களுக்குள் சிரிப்பை அடக்கியவனாக…



“அடிங்.. ரிஷிக் கண்ணவா…”


”எஸ் கண்ணா… கண்மணி… கண்ணா… செமையா இருக்குதானே… அத்தை உங்கள அப்படித்தானே கூப்பிடுவாங்க… நானும் கூப்பிட்டுட்டு போகிறேன்” என்று சகஜமாக அவனிடம் பேச ஆரம்பித்தவளிடம்… இவனும் சகஜமாகி இருக்க…


“நடத்து நடத்து… ஆனால்… இந்த தைரியம் எப்போதும் இருக்குமா… காலையில லைட்டா கை பட்டவுடனேயே… யாரோ ஷாக் ஆன மாதிரி ஃபீல் கொடுத்தாங்களே… ” என்று இன்னும் நெருக்கமாக அவளருகில் வந்து நிற்க…


“அதுக்கு தனியா மண்டகப்படி இருக்கு ரிஷிக் கண்ணா… அது வேற கணக்கு..” என்றபடியே அதற்கு மேல் நிற்காமல் வேகமாக வெளியேற…


“அது என்ன கணக்கு” சத்தமாகக் கேட்டவனிடம்… திரும்பிப் பார்த்தவள்…


“அந்த 0.999 லவ்… அப்புறம் தகுதி விகுதி ஈகுவல் லாம் முடிந்த பின்னால வர்ற கணக்கு” என்றபோதே ரிஷியின் வெட்கச் சிரிப்பில் கன்னக் குழி தன் இருப்பிடத்தை அவன் முகத்தில் கொண்டு வந்திருந்தது…

----

இதோ இப்போதும் அந்தப் புன்னகை…. அவன் கம்பெனி வந்து சேர்ந்த போது மிச்சம் இருந்ததோ என்னவோ… ரிஷி மலர்ந்த முகத்தோடேயே இருந்தான்…


“என்ன அண்ணாத்த முகத்தில கொஞ்சம் எக்ஸ்ட்ரா வால்ட் பல்ப் மாட்டின மாதிரி இருக்கு… என்னவாடா இருக்கும்”


ரிஷிக்கு கேட்காமல்... தினகரும்… வேலனும்… தங்களுக்குள் முணுமுணுத்துக் கொள்ளும் அளவுக்கு ரிஷி முகமெங்கும் ஒளி வட்டத்துடன் நடமாடிக் கொண்டிருந்தான்…


ஆனால் ரிஷியின் அந்த புன்னகை எல்லாம்… சத்யாவிடமிருந்து அழைப்பு வரும் வரைதான்… எப்போது சத்யாவின் அழைப்பு வந்து அதை எடுத்து ரிஷி சத்யாவிடம் பேச ஆரம்பித்தானோ…. அவன் முகம் கொஞ்சம் கொஞ்சமாக தீவிர பாவத்திற்கு மாற ஆரம்பித்து… ஒரு கட்டத்தில் அவன் முகம் முழுவதும் இருண்டது….



சத்யா முதலில் ஆரம்பித்தது என்னவோ சந்தோசமான விசயம் தான்…


“பாஸ்… அந்த ஆர்டர் உங்க முதலாளிக்கு கம்பெனிக்குத்தான்” என்றபோதே…


”ஹ்ம்ம்… அப்போ லீகலா பேப்பர்ஸ் ப்ரிப்பேர் பண்ண ஆரம்பிச்சுரலாமா… நட்ராஜ் சார் கிட்ட இன்னைக்கு பேசுறேன்…“ என்று அதைப்பற்றி பேசி முடித்தவன்…


“தென்… இருநூறு பேர் செலெக்ட் பண்ண சொன்னேனே”


“அதெல்லாம் பக்காவா இருக்காங்க… அதிகமாகவே இருக்காங்க… நீங்க வந்து இண்டெர்வியூ பண்ணி… ஃபைனல் லிஸ்ட் எடுக்கிறதுக்காகத்தான் வெயிட்டிங்” என்றபோதே


“இல்ல சத்யா… நீயே எல்லாம் பார்த்துக்க.. நான் அடிக்கடி ஊர்ப் பக்கம் வர்றது சரியா இருக்காது… நான் உன்னை நம்புறேன்… நீ வேற நான் வேற இல்லை”



“புரியுது ஆர்கே.. ஆனால் இன்னொரு விசயம்… நீங்க இங்க வர்றது முக்கியம்னு நினைக்கிறேன்” என்று சத்யா இழுக்க


ரிஷி மௌனமாக சத்யாவின் வார்த்தைகளுக்காக எதிர்முனையில் காத்திருக்க…


“திருமூர்த்தி ஹார்ட் அட்டாக்… ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணியிருக்காங்க…” சத்யா இழுத்தான்


ரிஷியின் முகத்தில் சிறு கவலை கூட படரவில்லை மாறாக … ஏளனமாக…


“ஓ….அவ்ளோ ஈஸியாலாம் அந்தாளு போக மாட்டாரு விடு… இதுக்காக நான் வரனுமா…” என்ற போதே


”கொஞ்சம் சீரியஸான மேட்டர் ஆர்கே… திருமூர்த்திக்கு மட்டும் பிரச்சனை இல்லை… அவர் பொண்ணு அந்த யமுனா விசம் குடிச்சுட்டா… ஆனால் காப்பாத்திட்டாங்க… அந்த அதிர்ச்சிலதான் இவருக்கு ஹார்ட் அட்டாக் ”


சொன்ன போதே ரிஷியின் முகம் கருக்க ஆரம்பிக்க… பதட்டம் ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல்..


“ஏன் காதல் தோல்விய ஏத்துக்க முடியலையா… பெரிய ரோமியோ ஜூலியட் காதல்… நல்ல பசங்கள லவ் பண்ண பொண்ணுங்களே… கல்யாணம்னு வந்துட்டா… புருசன் குடும்பம் குழந்தைங்கன்னு வாழ ஆரம்பிச்சுடுறாங்க… இந்த பொண்ணுக்கு என்னவாம்… அந்த ராஸ்கல மறக்க முடியலையா என்ன…”


என்று கடுகடுத்தவாறே கேட்க…


“நல்ல பையன்னா விட்ருந்துருப்பானே பாஸ்… அந்த ராஸ்கல் நமக்குத் தெரியாம அந்தப் பொண்ண மிரட்டி இருக்கான்… அதோட அவன அந்தப் பொண்ண லவ் பண்ணச் சொல்லி நடிக்கச் சொன்னது நீங்கன்றது வரை… எல்லாத்தையும் உளறிட்டான்…” என்ற போதே…


ரிஷி பல்லைக் கடித்தபடி…


“சரி… சரி …. அந்த ஆள் போய் சேர்றதுக்குள்ள… நாம அந்த ஆள் கிட்ட பேசிறலாம்… நான் வருகிறேன்” என்று போனை வைத்தவனுக்குள்… பல எண்ணங்கள் ஓட….


தினகர்… வேலனை அழைத்தான்…


”நீங்க இன்னைக்கு போகலாம்… உங்களுக்கு லீவ்… நான் முதலாளிகிட்ட சொல்லிக்கிறேன்…”


கேட்ட ஆரவாரமாக வேலனும்… தினகரும் கத்தி உற்சாகம் போட


“தலை நீங்களும் வர்றீங்களா… படத்துக்கு” என்ற போதே ரிஷி முறைக்க



‘ஓ ஒகே ஒகே… இப்போ கண்மணி சேனல் சப்ஸ்கிரிப்ஸன்ல லாக் ஆகிட்டீங்க…” என்ற போதே


“ஒழுங்கா லீவ்னு சொன்ன உடனேயே ஓடிப் போய்ருங்க… இல்லை ஷிஃப்ட் போட்டு லாக் பண்ணிருவேன்… அடுத்த ஒரு மாதத்துக்கும்… பரவாயில்லையா”



ரிஷி சொல்லி முடிக்கவில்லை… சிட்டாக பறந்திருந்தனர்… தினகரும் வேலனும்…


அவர்கள் கிளம்பிய அடுத்த நொடி… ரிஷி… மேஜையில் இருந்த சாவிக் கொத்தை எடுத்தபடி… நட்ராஜ்.. பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருக்கும் அந்த அறையை நோக்கிப் போனவன்… அங்கிருந்த பழைய பீரோவைத் திறக்க…


இவன் திறந்த வேகத்தில்… அங்கிருந்த பொருட்கள் சில விழ.. அதில் சில டைரி… பவித்ரா நாம கரணத்தில் இருக்க… அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் எடுத்து மீண்டும் உள்ளே வைத்தவனுக்கு.. அங்கிருந்த நட்ராஜின் சில டாக்குமெண்ட்டுகள் மட்டுமே முக்கியம் என்பதால் கவனமாகத் தேடி அத்தனையையும் எடுத்தவன்… வெளியேறி… அதன் நகல்களை எடுத்துக் கொண்டு… மீண்டும் மூல பத்திரங்களை மீண்டும் உள்ளே வைக்கப் போன போது…


கண்மணி… என்ற பெயரிடப்பட்ட ஒரு நோட்டு கண்களில் பட… எடுத்தவன்… அவனையுமறியாமல் அதன் ஒவ்வொரு பக்கத்தையும் திருப்ப ஆரம்பிக்க…


பெண் குழந்தை ஒன்று பிறந்ததில் இருந்து…. அந்தக் குழந்தையின் ஒவ்வொரு பருவமும்… அதன் திருமணம்…. வளைகாப்பு வரை…. அழகாக வரையப்பட்டிருந்தது… அதற்கு மேல் இல்லை


கடைசிப்பக்கத்தில்…



“நினைவின் ஓவியங்கள்…


நிஜமாக… நிஜமாக்க


உன் வரவுக்காக காத்திருக்கிறேன்...


என் கண்ணே... கண்மணியே


- பவித்ரா ராஜ்…” என்று முடித்திருக்க…


மீண்டும் மீண்டும் அந்த நோட்டை திருப்பி திருப்பிப் பார்த்தான் ரிஷி…. மனம் கனத்தவனாக அமைதியாக அப்படியே அமர்ந்து விட்டான்...



பவித்ரா என்ற பந்தத்தை தவற விட்டது… நட்ராஜ் மட்டுமல்ல.. கண்மணி மட்டுமல்ல… தானுமே என்பது நன்றாகப் புரிய… அதே நேரம் இந்த ஓவியத்தை நட்ராஜ் தன் மகளிடம் காட்டவே இல்லை என்பதையும் அவனால் புரிந்து கொள்ள முடிந்தது….



மீண்டும் அதன் கடைசி ஓவியத்தைப் பார்த்தான்… கண்மணி நிறைமாத கர்ப்பிணியாக வரையப்பட்டிருந்த ஓவியம்…மீண்டும் மீண்டும் பார்த்தவன்… முற்றுப் பெறாத அந்த ஓவியத் தொடர் எதிர்மறையாக யோசிக்க வைத்து அவன் மனதைப் பிசைய…



அதை முற்றுப் பெற வைக்க… பட்டென்று யோசனை தோன்றியதுதான்… ஆனால் அந்த நோட்டில் இப்போது அதில் என்ன மாற்றம் செய்தாலும்… நட்ராஜ் எடுத்துப் பார்க்கும் தன்னைக் கண்டுபிடித்துவிடுவார் என்று உணர்ந்தவனாக… வைக்க மனதில்லாமல் அந்த நோட்டு இருந்த இடத்திலேயே வைத்தவன்… சில நிமிடங்களில்… மீண்டும் தன்னிலைக்கு வந்து… செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் செய்து முடித்து… கையில் வைத்திருந்த பேப்பர்களோடு… நட்ராஜ் பீரோவில் எடுத்த நகல்களையும் இடையில் செறுகியவன்…



அங்கிருந்த பவித்ராவின் புகைப்படம் போய் முன் நின்றான்…



23 வயதே ஆன இளமையான பெண்ணாக மட்டுமே அவன் பார்த்த அத்தனை புகைப்படங்களிலும் பவித்ரா இருப்பாள்… அதிலும் கண்மணியின் ஒட்டு மொத்த சாயலும் அதில் இருக்கும்… இதுவரை பவித்ராவின் புகைப்படத்தை நொடி நேரத்திற்கும் அதிகமாக பார்த்ததில்லை ரிஷி…


ஆனால் இன்று முதன் முறையாக கண்மணியின் அன்னையாக… தன் அத்தையாக மனதில் அவரை மனதில் நினைத்தவனாக…


“எனக்கு எல்லாம் நல்லபடி முடிய உங்க ஆசிர்வாதம் வேண்டும்… இது உங்க இலட்சியமும் கூடன்னு எனக்குத் தெரியும்… உங்க ஆசிர்வாதம் என் கூட இருக்கும்னு நினைக்கிறேன்” வேண்டியவன் … வழக்கமான தன் பின்னிரவு வீடு திரும்பும் பழக்கத்தை கைவிட்டவனாக… அன்று மட்டும் இரவு எட்டு மணிக்கெல்லாம் ’கண்மணி’ இல்லம் நோக்கிச் சென்றான்…


----


/*ஒத்தையடி பாதையில

தாவி ஓடுறேன்

அத்த பெத்த பூங்குயில

தேடி வாடுறேன்


சந்தன மாலை

அள்ளுது ஆள

வாசம் ஏருது

என் கிளி மேல சங்கிலி போல

சேர தோணுது

சக்கர ஆல சொக்குது ஆள

மாலை மாத்த

மாமன் வரட்டுமா


கண்மணியே

ச த நி ச

த நி ச ம க ம க ச

த நி ச க க ச

த ப க ச க க

ச நி த நி ச*/

2,735 views0 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின் புதிய இல்லத்துக்கான முதல் கல்லை அடிநாட்டினாள்… அதன் பின் பள்ளி

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை அலைகழித்திருக்க… மருது ’மணி’ என்று தானே அழைப்பான் யோசித்தாலும்….

கண்மணி... என் கண்ணின் மணி- 94-3

அத்தியாயம் 94-3 சில வாரங்களுக்குப் பிறகு… வீட்டில் கண்மணி மட்டுமே இருந்தாள்… சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க… மணி 11 க்கும் மேலாக ஆகியிருக்க… நட்ராஜுக்காகவும் மருதுவுக்காகவும் காத்திருந்தாள் கண்மணி…. இப்

© 2020 by PraveenaNovels
bottom of page