கண்மணி... என் கண்ணின் மணி -31

Updated: Feb 25, 2021

அத்தியாயம் 31


”சோ, இதுதான் உன் முடிவா” என்றவாறு தன் முன் நின்ற தன் தங்கை ரிதன்யாவை கேள்வியாக நோக்கினான் ரிஷி…


அதிகாலை 5 மணிக்கே தன் இருக்கும் மாடி அறைக்கு வந்து தன்னை எழுப்பி… தான் வேலைக்குப் போவதாகச் சொல்லும் தன் தங்கையிடம்தான் இந்தக் கேள்வியைக் கேட்டான் ரிஷி…


பெரிதாக அதிர்ந்தெல்லாம் அவன் கேட்கவில்லை… இயல்பாகவே தன் தங்கையை நோக்க….


ரிதன்யாவிடம்தான் அவள் இயல்பு என்பது காணாமல் போயிருந்தது… கண்மணிக்கும் ரிஷிக்கும் திருமணம் நடந்த தருணத்தில் இருந்து…


அத்தை மகளும் தன் அண்ணனை நேசித்தவளுமான தன் தோழி மகிளாவுக்கு உதவ முடியாத வேதனையில்… அவளோடும் பேச முடியாமல் குற்ற உணர்ச்சியிலும்… அதே நேரம் இங்கு நடப்பதை எல்லாம் தடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தவள்… அவளாக இருப்பாளா என்ன… இல்லை அவள் இயல்பில் இருப்பாளா என்ன…


அதிலும் தன் அண்ணன்… திருமணம் முடிந்த கையோடு… அப்படி ஒரு சம்பவம் நடந்த அறிகுறியே இல்லாமல் தினம் இரவு தாமதமாக வருவதும்… வருபவன் வீட்டுக்கும் வராமல்… மாடி அறையில் தஞ்சம் கொள்வதையும் பார்க்க… இன்னுமே கலங்கினாள்… திருமணம் ஆகாதவள் என்றாலும் திருமணத்தைப் பற்றி அறியாதவளா என்ன…


அண்ணனின் மனைவி என்று வந்தவளோ… அருகில் இருந்த வீட்டில் இருந்து இந்த வீட்டிற்கு தன் ஜாகையை மாற்றி இருக்கின்றாள்… அவ்வளவுதான் இந்தத் திருமணம் என்பது போல அவள் நடந்து கொண்டிருந்தாள்…


ஆக இங்கு கேள்வி கேட்பதற்கு யார் இருக்கிறார்கள்… உண்மையிலேயே தன் தந்தை இருந்திருந்தால்… தன் அண்ணனுக்கு இப்படிப்பட்ட இடத்திலா பெண் எடுத்திருப்பார்… எங்களுக்காக என் அண்ணா இருக்கின்றான்.. ஆனால் அவனுக்கு…


இரண்டு வருடம் மட்டுமே ரிஷியை விட சிறியவள் ரிதன்யா… ஆனால் தன் அண்ணன் எப்படி வளர்ந்தான்… எப்படி வளர்த்தார்கள்.. இப்படி இந்த இடத்தில்… இந்த குப்பத்தில் அவன் வாழ்க்கை முடியவா… ஒவ்வொரு நொடியும் தன் அண்ணனுக்காக மட்டுமே கவலை கொண்டிருந்தவள்…


இப்போதெல்லாம் மகிளாவைக் கூடப் பெரிதாக நினைத்து வருந்தவில்லை… பிடிக்காத திருமணம் என்றாலும்… மற்றபடி… வேறு எந்தக் குறையுமில்லையே… எப்படியும் தன் தோழி அவள் வாழ்க்கையை ஆரம்பித்து விடுவாள்… ஆனால் தன் அண்ணன் வாழ்க்கை அப்படியா?… எந்த வகையிலாவது சமாதானம் அடையும் அளவுக்கா இருக்கிறது அவன் திருமண வாழ்க்கை… தனக்குள் நினைத்து நினைத்து குழம்பி குழம்பி ஒரு வாரமே ஓடி இருந்தது….


ரிதன்யாவின் கவலைக்கும் காரணம் இல்லாமல் இல்லை… எந்த கணம் கண்மணி அந்த வீட்டில் அடி எடுத்து வைத்தாளோ… அந்த கணமே ரிஷியும்… மாடி அறைக்கு மீண்டும் தன் பொருட்களை மாற்றி விட்டான்…


அவன் அந்த வீட்டில் இருக்கும் நேரம் அதிகாலை 5 மணி முதல் ரித்விகா பள்ளி செல்லும் வரையிலும்… மாலை ரித்விகாவை பள்ளியில் இருந்து வீட்டில் விட்டு விட்டு ஒரு மணி நேரம் இருப்பது… இதில் இந்த மாலை ஒரு மணி நேரம் என்பது மட்டுமே ரிதன்யாவுக்கு நிம்மதியான பொழுது… ஏனெனில் அப்போது கண்மணி பள்ளியில் இருந்து வந்திருக்க மாட்டாள்… அந்த நேரமே ரிதன்யா தன் குடும்பத்தோடு உண்மையாக செலவழிக்கும் நேரம்… தான், தன் தாய்… தங்கை… அண்ணன்… தன் குடும்பம் மட்டுமே…


காலையில் கண்மணி பள்ளிக் கூடம் கிளம்பிச் செல்லும் வரை அந்த அறையை விட்டு வெளியே வர மாட்டாள் ரிதன்யா… மாறாக அவள் அண்ணன் எப்போதும் போல அதிகாலையிலேயே எழுந்து… கீழே வீட்டுக்கு வந்து விடுவான்… முன்பு, தங்களை உதவியாக வைத்துக் கொண்டு சமையல் செய்பவன்… இப்போது மனைவிக்கு அவள் சமைப்பதற்கு உதவியாக இருக்கிறான்…


அதே போல ரிஷிக்கான இரவு உணவு மாடிக்கு சென்று விடும்… தன் அண்ணனின் மனைவியாக கண்மணி மற்றதெல்லாம் சரியாக செய்கிறாளோ என்னவோ… இதை மட்டும் சரியாகச் செய்து விடுவாள்…


இதற்கு பெயர் திருமணமாம்… யாரை ஏமாற்றுகிறார்கள்…. இவன் தான் இப்படி இருக்கின்றான் என்றால் வந்தவளோ அதற்கு மேல்


அண்ணனிடம் தன் வேலை விசயமாக பேச வந்தவள்… தன் முன் இருந்த ஹாட் பாக்ஸை வெறித்தபடியே நினைவு சுழலில் சுழன்றபடி… கோபத்தில் தனக்குள் பல்லைக் கடித்துக் கடித்துக் கொண்டாள்… என்னவென்று கேட்பது… எதையென்று கேட்பது…


இவள் தான் எனக்கு மனைவியாக வேண்டும் என்று தன் அண்ணன் இந்தக் கண்மணியைப் பிடித்து திருமணம் செய்திருந்தாலாவது… எப்படியோ போய்த் தொலை.. உன் விருப்பம் உன் வாழ்க்கை என்று மனதை ஆற்றுப்படுத்தி இருப்பாள்…


ஆனால்… அவன் விருப்பத்துடனா இந்த வாழ்க்கையை ஏற்றுக் கொண்டான்…


இப்படி வாழ்வதற்கு இந்த திருமணம் அவசியமா என்று தன் அண்ணனின் சட்டையைப் பிடித்து உலுக்கி கேட்க வேண்டும் போல் தான் ஆத்திரம் வருகிறது ரிதன்யாவுக்கு… ஆனால் முடியவில்லையே….


ஆக ரிதன்யாவைப் பொறுத்தவரை… கண்மணி இல்லத்தில்… அகதியாக வாழ்ந்து கொண்டிருப்பது போன்ற உணர்வு… அந்த உணர்வு மட்டுமே


அதே நேரம்… இதுதான் சாக்கென்று ஏதாவது ஒரு வேலையை தேடிக் கொண்டு… வீட்டை விட்டு வெளியேறவும் மனம் வரவில்லை… காரணம் தன் அன்னையின் நிலை… கண்டிப்பாக அப்படி ஒரு சுயநலமான முடிவை அவளால் எடுக்க முடியாது… அதே நேரம் கண்மணியோடு அதே வீட்டில் அவளாலும் இருக்க முடியவில்லை.. தன் குடும்பத்தை விட்டும் போக முடியவில்லை… கண்மணியையும் தன் குடும்பத்தில் ஒருத்தியாக நினைக்க முடியவில்லை… இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவித்தவளுக்கு… ஆறுதலாக கிடைத்த ஒரே தீர்வுதான்… இந்த இரவு நேர வேலை…


இந்த வேலையால் பகல் முழுவதும் வீட்டில் இருக்கலாம்… கண்மணியையும் பார்க்கத் தேவையில்லை… தன் அன்னையையும் கவனித்துக் கொள்ளலாம்… மாலை இவள் அலுவலகம் கிளம்பி விட்டால்… கண்மணி மற்றும் ரித்விகா இருவரும் வீட்டில் இருப்பார்கள்… தாயைப் பற்றிய கவலை இல்லை… ஒருவழியாக தன் மனக் குழப்பங்களுக்கு தற்காலிகமாக தீர்வு கிடைத்துவிட…


உடனடியாக அந்த வேலையில் சேர்ந்து கொள்வதாக ஒப்புதல் அளித்து… முந்தின நாள் இரவு மின்னஞ்சல் அனுப்பியவள்… அதன் பின்தான் இதோ இந்த அதிகாலையில் தன் அண்ணனிடமே விசயத்தைச் சொல்ல வந்தாள்…. அது கூட தகவலாக மட்டுமே…


கேள்வி கேட்ட அண்ணனிடம் பதில் சொல்லாமல் நடந்ததெல்லாம் நினைந்தபடி தலை குனிந்து அமர்ந்திருந்தவள்… இனியும் மௌனமாக இருப்பது சாத்தியமில்லை என்பதை உணர்ந்து


”இது முடிவு இல்லண்ணா… சில பிரச்சனைகளை அவாய்ட் பண்றதுக்கு எனக்கு கிடைத்த வாய்ப்பு… “ தன்னிடம் முடிவா என்று கேட்ட அண்ணனிடம் பதிலாகச் சொன்னவள்… ’கண்மணி’ என்று சொல்லாமல் ’பிரச்சனை’ என்று முடிக்க…


ரிதன்யா ’கண்மணி’ என்று நேரடியாக சொல்லவில்லை என்றாலும் பிரச்சனை என்று சொல்வது கண்மணியைத்தான் என்பதை ரிஷியும் புரிந்துகொண்டான்தான்… எனினும் அதைப் பற்றி பேசவில்லை… தங்கை சொன்ன தகவலை மட்டுமே கவனத்தில் கொண்டான்


ரிஷி தன் தங்கையின் முடிவை விரும்பவில்லை… அதைச் சொல்ல வாயெடுக்கப் போக…


“ப்ளீஸ்ணா ஏதாவது சொல்லி என்னை தடுக்கப் பார்க்காத… உன் அளவுக்கு அதிரடியான முடிவெல்லாம் எடுக்கலை நான்… நீ சொன்னியே இன்னும் 4 மணி நேரத்துல உனக்கு மேரேஜ்னு… அந்த அளவுலாம் இது அதிர்ச்சி தரக் கூடிய விசயம் இல்லை… நான் வேலைக்கு போகனும்… படிச்சுட்டு இந்த மாதிரி வீட்ல அடஞ்சு கிடக்க முடியல என்னால… இதுவரை அம்மாவோட ஹெல்த் பெரிய காரணமா இருந்துச்சு… ஒத்துக்கறேன்… இப்போ கூட அம்மாவோட உடம்பு சரியாகல… நானும் மொத்தமா ஒதுங்கிப் போகலை… அதுனாலதான் இந்த நைட் ஷிஃப்ட்… பகல்ல அம்மாவைப் பார்த்துக்கறது என்னோட பொறுப்பு” என்றவள்… தன் அண்ணனைப் பார்க்க … அவனோ அமைதியான பாவனையோடு மட்டுமே இருக்க


ரிஷியின் இந்த அமைதியை சாதகமாகப் பயன்படுத்தியவளாக…


“கண்மணியை நீங்க மேரேஜ் பண்ணினது உங்க தனிப்பட்ட விருப்பமா இருக்கலாம்… சாரி சாரி.. விருப்பம்னு சொல்ல முடியாது… இந்த வீட்டு சூழ்நிலைக்காக மேரேஜ் பண்ணிக்கிட்டீங்க… அது என் புத்திக்கு புரியுது… ஆனால் மனசுக்கு…


“மகிளாவைத்தான் நீங்க மேரேஜ் பண்ணிருக்கனும்னு நான் எதிர்பார்க்கலை… அதுக்காக நானும் சண்டை போடலை… ஆனால் இந்தத் திருமணம்… அந்தப் பொண்ணு… என் அண்ணனுக்கு தகுதியானவங்களா” என்று நிறுத்த…


ரிதன்யாவின் வார்த்தைகளில்… இப்போது ரிஷி அவனை நினைத்து … கண்மனியை நினைத்து… தம் தங்கையின் வார்த