கண்மணி... என் கண்ணின் மணி -30

அத்தியாயம் 30


மும்முரமாக தன் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவனுக்கு… கண்மணி கொடுத்த நேரக் கணக்கெல்லாம் ஞாபகத்துக்கு வரவில்லை….


ரிஷிக்குத்தான் உறக்கமென்பதோ களைப்பென்பதோ இல்லை… ஆனால்….கண்மணிக்கோ முந்தைய நாள் உறக்கமின்மை… திருமண அலைச்சல் என அனைத்தும் ஒன்று சேர்ந்ததால் அந்தக் களைப்பில் உறங்கி விட்டிருக்க… அவள் வைத்த அலாரம் கூட உணர முடியாத அளவுக்கு அப்படி ஒரு தூக்கம்…


ரிஷிக்கும் கண்மணி சொன்னது ஞாபகத்துக்கே வர வில்லை… அந்த இயந்திரங்களின் இரைச்சலில்…அடித்துக் கொண்டிருந்த அலார்ம் ஒலியும் அவனை வந்தடையவில்லை… நாளை டெலிவரி செய்யவேண்டும் என்ற ஒரே நோக்கில்… வேலையில் மட்டுமே கவனம் கொண்டிருக்க… இப்போது அங்கிருந்த இயந்திரங்களின் ஒத்திசைவற்ற இரைச்சலையும் மீறி… ஒத்திசைவான ஒலி… தொடர்ந்து ஒலித்து… ஒரு கட்டத்தில் ரிஷியின் காதுகளையும் வந்தடைய… ரிஷிக்கும் பெரிதாகவெல்லாம் யோசிக்கத் தேவையிருக்கவில்லை… அது கண்மணி அவள் அலைபேசியில் வைத்த அலார்ம் சத்தமென்று….

மெஷின்களின் இரைச்சலுக்கே அசராமல் பேய்த்தூக்கம் தூங்கிக் கொண்டிருப்பவளுக்கு அலார்ம் சத்தம் எல்லாம் எம்மாத்திரம்…


கண்மணி படுத்திருந்த நீள் இருக்கையின் அருகே வந்தவன்… கண்மணியை எழுப்பவெல்லாம் இல்லை… மெதுவாக அவள் தூக்கம் கலையாமல் அலைபேசியை எடுத்து அணைத்து வைத்து விட்டு… இதுதான் சாக்கென்று மீண்டும் தன் வேலையில் ஈடுபட… கிட்டத்தட்ட அடுத்த இரண்டு மணி நேரத்தில் அவன் நினைத்தபடி அனைத்தும் முழுமையாக முடிவடைய… அப்போதுதான் அவனுக்கும் நிம்மதியாகி இருந்தது…. கண்மணியிடம் பேச வருவதாகச் சொன்ன அந்த இரண்டு மணி நேரக் காலக் கெடுவுக்குள் முடிக்க முடியாத வேலை… கண்மணி உறங்கிவிட… இதோ வேலையையும் முடித்து விட்டான்…. இனி நாளை பிரச்சனை இல்லை… சொன்னபடி அனைத்தையும் டெலிவரி செய்து விடலாம்….


இயந்திரங்களை எல்லாம் ஆஃப் செய்ததால்… இப்போது அங்கு நிசப்தம் நிசப்தம் மட்டுமே… இப்போது ரிஷிக்குமே அசதி வந்திருக்க… ஆனால் தூக்கம் வரவில்லை… உடல்வலியே… அதையும் இப்போதுதான் உணர்ந்திருக்க… அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து தலை சாய்ந்து… சற்று நேரம் அப்படியே கண்களை மூடியபடி உறங்க முயற்சிக்க… அது வருவேனா என்றிருக்க… அதே நேரம் கண்மணி அவனிடம் பேச வேண்டும்… கட்டாயம் எழுப்ப வேண்டும் என்று சொன்னது கண்ணுக்குள் வந்து நின்றது…


இன்றைய இரவு… என்ன இரவு என்று அவனுக்குத் தெரியாத பாலகனா அவன்… திருமணம்… முதல் இரவு… மணமக்களாக இருவருக்கும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை… முதல் இரவின் முதல் உறவுக்கான படபடப்போடு கலந்த ஆர்வம் இவனிடமும் இல்லை.. கண்மணியிடம்???…


யோசித்தவன்….


“அவளிடமுமே இல்லை” என்றுதான் தோன்றியது… இவனிடம் பேச வேண்டும் என்று அவள் சொன்ன அவளது பாவனையில் மிரட்டலுடன் கூடிய அதிகாரம் மட்டுமே இருக்க அதை மீறி வேறொன்றுமில்லை… அவள் உணர்வுகளையும் தனக்குள்ளாக அனுமானித்தவன்… பேச வேண்டும் என்று வந்தவளை அப்படியே தூங்க விட மனதில்லை…


”உன்னிடம் பேச வந்த போது பேசக் கூட இல்லை நீ…” என வருங்காலத்தில் இவர்களுக்கான வாழ்க்கையில் பிரச்சனையாக இந்த இரவு வந்து விடக் கூடாது… இவளுடன்தான் இனி என்னோடான வாழ்க்கைப் பயணம் எனும் போது… இது இருவருக்குமான முக்கியமான நேரம்…” யோசித்தவன்…


தானுமே அவளைத் தவிர்க்க நினைக்கவில்லையே… வேலை முடிந்து வருகிறேன் என்றுதானே சொன்னேன்… அவள்தான் அவசரப்பட்டு இங்கு வந்து விட்டாள்… ஆனால் அதே நேரம் நிச்சயமாக இதையும் சொல்லுவான்.. அவர்கள் மணவாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் மன நிலையிலும் அவன் இல்லை… இதைக் கண்மணியிடமும் சொல்லிபுரிய வைக்கவே நினைத்தான்… இன்றைய தனிமையில்…


ஆக இருவரும் பேசியே ஆக வேண்டிய கட்டாயம்… தன்னை அவளுக்கு புரிய வைத்து விட வேண்டும்… ஆனால் அதற்கு முன் முதலில் அவள் மனதில் என்ன இருக்கிறது… அவள் என்ன பேச வந்தாள்… அதைக்கேட்க வேண்டும்…


நினைத்தவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை… மணிக்கட்டைத் திருப்பி மணியைப் பார்த்தபடியே… எழுந்தவன்…


கைகளை உயர்த்தி நெட்டி எடுத்தபடியே…. கண்மணியின் அருகில் வந்தவன்… ஒரு நிமிடம் தயங்கி நின்றான்தான்… அவள் அருகில்…


“என்னமா தூங்குறா…இவ்ளோ சத்தத்தில….” பொறாமையாகப் பார்த்தபடி தனக்குள் சொன்னவன் வெளியே வந்து தண்ணீரில் முகம் மற்றும் தேகத்தை அலம்பிக் கொண்டவன்… கைக்குட்டையைத் தேட.. அது கண்மணியிடம் கொடுத்தது நினைவுக்கு வர… ஈர முகத்துடன் மீண்டும் உள்ளே வந்தவன்… வேலையின் போது வியர்வையைத் துடைக்க உபயோகிக்கும் துண்டை எடுத்து துடைத்தபடியே கண்மணியின் அருகில் வந்து நின்றவன்..


“கண்மணி” என்று அழைக்க… கண்மணியிடத்தில் இவன் அழைப்புக்கான எந்த ஒரு பிரதிபலிப்பும் இல்லை…


“மணி” இன்னும் கொஞ்சம் சத்தமாக அழைக்க… இப்போது இலேசாக அசைந்தாள் கண்மணி… அவ்வளவே


”எழுந்துக்க மாட்டேங்கிறாளே… என்ன செய்வது… தூங்கட்டும்னு விட்ருவோமா” யோசித்தவன்…


“இப்போ எழுப்பி விட்றதுக்கே சொர்ணாக்கா அவதாரம் எடுப்பாளானு தெரியலை… இதுல தூங்க விட்டா அவ்வளவுதான்… முழுக்க முழுக்க சந்திரமுகியாத்தான் பார்ப்போம்… “ என்று கண்மணியை அறிந்தவனாக உஷாராகி இருந்தான் ரிஷி….


வந்தது வரட்டும் என்று… அவள் தோளைத் தொட்டு எழுப்ப… அரண்டடித்துக் கொண்டு எழும்பினாள் கண்மணி…. கண்களைக் கட்டியபடி இருந்ததாலோ என்னவோ…


இவன் என்னமோ மெதுவாகத்தான் அவள் தோள்களைத் தொட்டு எழுப்பினான்… ஆனால் பதட்டத்தில் அவள் கொடுத்த எதிர்வினைதான் அதிகமாக இருக்க…


“ஹேய்… நான்… நான்… நான் தான்” என்று ரிஷியும் பதற


அவன் குரலில் சில நொடிகளுக்குள் தன்னைச் சுதாரித்தவள்.. இருந்தும் கண்களைக் கட்டியிருந்ததால் தடுமாற… ரிஷிதான் அவளைப் பிடித்து ஒழுங்காக அமர வைக்க…


கண்மணியும் இப்போது கண் கட்டை அவிழ்த்துப் பார்த்தவள் தன் முன் நின்ற ரிஷியைப் பார்த்ததும் தான் இயல்பாகி அமர்ந்தாள்…


தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கிறோமே… எந்த இலட்சணத்தில் இருக்கிறோம் என்று தன்னை அறியாமல் பதட்டத்தோடே தன்னையும் ஒரு முறை சரிபார்த்துக் கொள்ள… நல்லவேளை சுடிதார் என்பதால் வேறு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் போக… இப்போது ரிஷியைப் பார்த்தாள் கண்மணி…


ரிஷி அவளின் நடவடிக்கைகளை எல்லாம் கண்டு கொண்டாலும் … காணாதது போல


“பேசலாமா…” என்று மட்டும் உதட்டில் மறைத்த புன்னகையோடு ரிஷி கேட்க…


இன்னும் தூக்கத்தில் இருந்து விடுபடவே இல்லை கண்மணி… முதலில் யார் எழுப்பியது என்று தெரியாமல் எழுந்தது… அடுத்து எங்கு இருக்கிறோம்.. என்று புரியாமல் குழம்பியது… இப்போது என்ன பேச… என்று யோசித்தவளுக்கு மெல்ல மெல்ல மூளை விழிப்படைய ஆரம்பிக்க…


“ஆஹா,,, நாமதானே அலார்ம்லாம் வச்சு படுத்தோம்… எழுந்துக்கலையா” வேகமாக அலைபேசியை எடுக்க…


கைகளைக் கட்டியபடி அவளை விட்டு தள்ளி எல்லாம் அமராமல்… அவள் அருகிலேயே இயல்பாக அமர்ந்தவன்… அவளிடம் திரும்பி…


“நீ கொடுத்த டைம்லாம் லிமிட் தாண்டி இப்போ மணி மார்னிங் 4… பேசலாமா… வீட்டுக்கு போகலாமா”


வேகமாக தலை அசைத்தாள்… இடவலமாக…


“இல்லல்ல பேசனும்…” சட்டென்று சொன்னவளிடம்


“அப்போ ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வா… நான் பைக் ஷெட்ல வெயிட் பண்றேன்… இங்க ஒரே ஹீட்டா இருக்கு… வெளில கொஞ்சம் நல்லா இருக்கும்” என்றபடியே எழ…


”ஹ்ம்ம்..2 மினிட்ஸ்” என்றபடி அவனைக் கடந்தவள்…