கண்மணி... என் கண்ணின் மணி -28

அத்தியாயம் 28


காலை 8:30 மணி அளவில் சென்னையின் வர்த்தக உலகமான தியாகராயநகரின் பிரமாண்ட புடவைக்கடை ஒன்றில்…. பட்டுப்புடவை பிரிவில் அமர்ந்திருந்தான் ரிஷி. கடை சிப்பந்திகளே அப்போதுதான் ஒவ்வொருவராக வந்து கொண்டிருக்க ரிஷியோ முதல் ஆளாக இருந்தான் அந்த கடையில்….


இன்னும் வாடிக்கையாளர் நேரம் ஆரம்பிக்க வில்லை என்பதை அங்கிருந்தவர்கள் சொல்ல… ரிஷி தன் நிலையை எடுத்துக் கூற…. ரிஷியின் நிலைமை புரிந்தும்... அதோடு முதல் வாடிக்கையாளர் என்பதாலும் கடை ஊழியர்களும் ஆர்வமாகவே அவனை வரவேற்று அவன் முன் புடைவைகளை எடுத்துக் போட ஆரம்பிக்க.. ரிஷி அமைதியாக அமர்ந்து அவற்றை பார்வையிட ஆரம்பித்தான். புடவைகளை அதன் விதங்களை வண்ணங்களை…. அவன் மனம் நோக்கியதோ என்னவோ மனம் அதன் விலையைக் கணக்கிட ஆரம்பித்திருந்தது.தன் மனைவிக்கு தான் எடுத்துக் கொடுக்கும் அனைத்தும் தன் சொந்த உழைப்பில் வந்த வருமானத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக நின்றவன் நட்ராஜ் பணம் கொடுத்த போது தனக்கான தொகையை மட்டுமே வாங்கிக் கொண்டான்... அது மட்டும் இல்லாமல் தனக்கென்று உடை வாங்க கொடுத்த மொத்த பணத்தையும் வாங்காமல்… தான் தன் மனைவிக்கு வாங்கும் புடவையின் தொகையோடு கணக்கிட்டு… நிர்ணயம் செய்து வாங்கிக் கொண்டான்.


இந்த ஐந்து வருடங்களில் அவன் சம்பாதித்த பணம் ஓரளவு கணிசமாக இருந்த போதிலும்... தன் அன்னைக்கு உடம்பு சரி இல்லை என்று மருத்துவமனையில் இருந்த போது தானே செலவழிக்க வேண்டுமென்று தான் சம்பாதித்த முக்கால் வாசி பணத்தை செலவழித்தவன்…. மேலும் பணம் தேவைப் பட்ட போதுதான் வேறு வழி இன்றி அன்னையின் வங்கி கணக்கில் கைவைத்தான்.


அனைத்து செலவும் போக அவனது கணக்கில் சொற்ப தொகையே இருக்க... மாங்கல்யம் எடுக்க கால் பவுனில் எடுக்க முடிவு செய்தவன் புடவை முதல் மணமகன் வீட்டில் இருந்து மணமகளுக்கு செய்யும் அனைத்துக்கும் கணக்கு பார்த்துதான் புடவைக் கடைக்கு வந்திருந்தான் ரிஷி...


அவன் சொன்ன தொகைக்கேற்ப பட்டு புடவைகளை அவன் முன் போட ஆரம்பிக்க... ரிஷி பெரிதாகவெல்லாம் யோசிக்க வில்லை... தன் வருங்கால மனைவியை நினைத்து.. ரசித்து பார்த்து புடவை எடுக்கும் மன நிலையிலும் அவன் இல்லை... அவசர கோலமான திருமணம்... ஏன் என்று சரியாகவும் புரியவில்லை... மகிளாவுக்காகவா இல்லை அவனது குடும்ப சூழ்நிலைக்காகவா… பொறுமையாக முடிவெடுக்க முடியாத அளவுக்கு ஏன் இந்த மாதிரியான நிலை... மீண்டும் மீண்டும் நொந்து கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை... இப்படி மனம் முழுதும் பாரத்துடன் தன் திருமணம் நடக்கும் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை ரிஷி...


இதில் ஒரே நல்ல விஷயம் என்னவென்றால்…. இந்த நேரத்தில் மகிளாவை நினைக்கவில்லை அது மட்டுமே…. அதே நேரம் யாருக்காக புடவை எடுக்க வந்தானோ அவளையும் நினைக்கவில்லை என்பது வேறு விசயம்...


இங்கு அவன் இப்படி இருக்க... அவன் வீட்டிலோ ரிதன்யா, ரித்விகா இருவரும் மாறி மாறி அழுது துக்க வீடு போல் அனுஷ்டித்துக் கொண்டிருந்தனர்... இருவராலும் மகிளா இருந்த இடத்தில இன்னொரு பெண்ணை நினைத்துப் பார்க்க முடியவில்லை ... மகிளாவுக்கும் திருமணம் என்பதால் அந்தக் கவலை வேறு சூழ்ந்து கொள்ள... ரிதன்யாதான் இதில் பெரிதும் வருத்தமடைந்தது….


எப்படியாவது தன் அண்ணனிடம் பேசி இன்று மகிளாவை அழைத்து வந்து தங்கள் வீட்டு மருமகளாக்கி விடலாமென்று ரிதன்யா நினைத்திருக்க


காலையில் அடிபட்ட காயங்களுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய ரிஷியைப் பார்த்து பதற ... தனக்கு ஒன்று மில்லை என்று கூறி அவர்களை சில நொடி நிம்மதி அடைய வைத்தவன் அடுத்த நொடி தனக்கும் கண்மணிக்கும் இன்று திருமணம் என்றும் சொல்ல.... லட்சுமியே ஒரு நொடி ஆடித்தான் போனார் மகனது முடிவில்... லட்சுமியின் நிலையே அப்படி என்றால் அவன் தங்கைகள் நிலை எப்படி இருந்திருக்கும் ...


ரித்விகாவுக்கு கண்மணியைப் பிடிக்கும் தான் ஆனால் தன் அண்ணி என்ற அளவில் எதிர்பார்க்க வில்லை... தன் அண்ணன் சொன்ன போது அதை விரும்பவுமில்லை... கண்மணியைப் பிடித்த ரித்விகாவின் நிலையே இப்படி என்றால் ரிதன்யாவின் நிலை கேட்கவா வேண்டும்... பெரிதாக தன் அண்ணனை எதிர்க்க ஆரம்பித்தாள்... மகிளாவையும் முன் வைத்து பேச ... ரிஷியோ ரிதன்யாவிடம் பெரிதாக வாதாடவில்லை .. இது என் வாழ்க்கை ... என் முடிவு... என்று மட்டும் உறுதியாகச் சொல்ல


ரிதன்யாவால் அதற்கு மேல் வாதாட முடியவில்லை... அதே நேரம் தன் அண்ணனின் முடிவை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தவள் அவளையும் மீறி வார்த்தைகளை விட ஆரம்பித்தாள்... தன் அண்ணனை பற்றி பேச முடியாமல் கண்மணியை இழுத்தாள் ரிதன்யா


"கேவலம் இந்த சேரியில் வாழுகிற கண்மணி... உனக்கு மனைவியா… அண்ணா.. எங்களுக்கு அண்ணியா ... நம்ம வீட்டுக்கு வீட்டுக்கு மருமகளா.... நம்ம பரம்பரை என்ன... அதோட பெருமை என்ன...." என்று ஆக்ரோஷமானவள்… என்ன நினைத்தாளோ ... சட்டென்று தணிந்து..."நீ மகிளாவை கூட மேரேஜ் பண்ண வேண்டாம்.. நாங்களும் வற்புறுத்தலை ... ஆனால் தயவுசெய்து கண்மணியை மேரேஜ் பண்ண வேண்டாம்ன்னா" கெஞ்ச ஆரம்பிக்க


தன் தங்கையிடம் எல்லாம் வாக்குவாதம் செய்ய வில்லை ரிஷி..


மாறாக தன் தாயிடம் மட்டுமே பேச ஆரம்பித்தான்...


"அம்மா எனக்கு ஒவ்வொருத்தவங்க கிட்டயும் எடுத்து சொல்ல டைம் இல்ல.. எப்போ அப்பா இறந்தாங்களோ அப்போதிருந்தே நான் எனக்காக எதையும் யோசிக்கலை எனக்காகன்னு எதை நினைத்திருந்தேனோ அதையும் விட்டுட்டேன்.. என்னோட ஒவ்வொரு முடிவுக்கும் பின்னால நீங்க… இவங்க ரெண்டு பெரும் மட்டும் தான்... உங்களை மையமா வைத்தே முடிவுகள் எடுப்பேன்... இப்போதும் அப்படித்தான்... " என்ற போதே


லட்சுமியும் பேச ஆரம்பித்தார்.. தட்டு தடுமாறி அவர் பேசிய வார்த்தைகளின் சாராம்சம் இதுதான்


ரிஷி கண்மணியை விரும்பி திருமணம் செய்ய வந்து கேட்டிருந்தால் லட்சுமி மனப்பூர்வமாக சம்மதம் சொல்லி இருப்பார்... ஆனால் மகன் சொல்வது தங்கள் குடும்ப நலனுக்காக என்பதுதான் அவரது கவலையாக இருக்க... ரிஷி எப்படியோ தன் அன்னையைத் தேற்றியவன் தங்கைகளை எல்லாம் சமாதானம் படுத்தவில்லை... முயலவில்லை என்பதை விட அதற்கு நேரம் இல்லை அவனுக்கு என்பதே உண்மை...


கோபத்துடன் நின்றிருந்த ரிதன்யாவிடம் அவனுடைய டெபிட் கார்டை மட்டும் எடுத்து வர சொல்லி... அதை வாங்கிக் கொண்டு கிளம்பி விட்டான் ரிஷி...


ரிதன்யாவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை அப்படியே அமர்ந்து விட்டாள்... மகிளாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை... மகிளாவுக்கு தான் ஒன்றுமே பண்ண முடியாத சூழ்நிலையில் இனியும் அவளைக் குழப்ப வேண்டாமென்று முடிவு செய்தவள்... அடுத்து என்ன செய்வது என்று வழி தெரியாமல் புரியாமல் அவள் செய்த ஒரே வேலை… தனது அலைபேசியை அணைத்து வைத்ததுதான்.


மகிளா வாழ்க்கை அதுதான் இனி என்பது போல ரிதன்யாவும் முடிவுக்கு வந்தவள் அடுத்து கவலைப்பட்டது தன் அண்ணனுக்காக மட்டுமே... தன் அண்ணனை நினைக்கும் போதே அவளுக்கு கண்களில் கண்ணீர் மல்கியது... வழிந்த கண்ணீரையும் நிறுத்த முடியவில்லை… தனக்காக யோசிக்கவில்லை உங்கள் மூவருக்காகவும் மட்டுமே யோசிக்கிறேன் என்ற தன் அண்ணனின் வார்த்தைகளில் தான் இவள் மிகப் பெரிய மன வலியை அனுபவித்தாள்...

மற்ற அனைத்து விஷயங்களிலும் புத்திசாலி தனமாக இருக்கும் நான்… பெண்ணாக சமையல் மற்றும் வீட்டு வேலையிலும் கருத்தாக இருந்திருந்தால் தன் அண்ணனுக்கு இந்த நிலைமை வந்திருக்காதோ…. அந்த எண்ணம் தந்த குற்ற உணர்ச்சியில் குறுகி ரிதன்யா அமர்ந்திருக்க...ரித்விகா அவள் அருகில் வார்த்தைகளின்றி அமர்ந்திருந்தாள். வெளியே போனால் கண்மணியைப் பார்க்க நேரிடுமோ... அவளோடு பேசினால் தன் சகோதரி திட்டி விடுவாளோ என்று வெளியே கூட போக வில்லை...


இலட்சுமிக்கு மட்டும் எதோ ஒரு நம்பிக்கை தன் மகன் வாழ்க்கையில் ஒளி ஏற்படும் என்று... காரணம் கண்மணி... கண்டிப்பாக ரிஷியின் வாழ்க்கை அவளால் வீழாது… அவளின் பண்பட்ட நடவடிக்கை ரிஷியை மென்மேலும் உயர்த்தும் என்றே நம்பினார்...


அதன் விளைவு அவர் அமைதியாக இருந்து விட்டார்... அதே போல மகனுக்கு பெரிதாக விமரிசையாக திருமணம் நடக்க வில்லை என்றெல்லாம் கவலைப்படவில்லை... ரிஷியின் மாற்றங்கள் அவருக்குள்ளும் சில மாற்றங்களை ஏற்படுத்தி இருக்க... தன் மகனின் முடிவுகளை முழுமையாக ஏற்றுக் கொண்ட அன்னையாக மாறி இருந்தார் என்றே சொல்ல வேண்டும்...


அதனால் ரிதன்யாவையம் ரித்விகாவையும்… ரிஷியின் திருமண விழாவுக்கு தயாராகச் சொல்ல... ரித்விகா மனம் இல்லாமல் தன் அண்ணனின் திருமணத்திற்கு கிளம்ப ஆரம்பிக்க… ரிதன்யா இன்னும் அப்படியே தான் அமர்ந்திருந்தாள்... எண்ணம் எங்கும் குழப்பம் குழப்பம் மட்டுமே... அதில் தலை வலி வேறு வந்திருக்க... அப்போதுதான் அவள் மூளை ஒன்றை எடுத்துக் கொடுத்தது...


ஆம் அவள் ரிஷியிடம் கொடுத்த ரிஷியின் டெபிட் கார்டில்தான்… நேற்று அவளது தொலைதூர படிப்பிற்கான தொகையைக் கட்டி இருந்தாள்… இன்று சொல்லலாம் என்று நினைத்திருக்க… நடந்து முடிந்த களேபரத்தில் அதை மறந்து சொல்லாமல் அவனிடம் கார்டை மட்டுமே கொடுத்து விட்டிருந்தாள்… புடவை மாங்கல்யம் வாங்க என்று சொல்லித்தானே போனான்…பணத்துக்கு அண்ணன் என்ன செய்வான்