top of page

கண்மணி... என் கண்ணின் மணி -27-2

அத்தியாயம் 27-2:


அர்ஜூனுக்கும் கண்மணி நாராயண குருக்கள் என அனைவருக்குமே நட்ராஜின் வார்த்தைகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன…


“என் பொண்ணுக்கு என்ன தேவைனு எனக்குத் தெரியும்… அது எங்க கிடைக்கும்னு எனக்குத் தெரியும்…அப்படிப்பட்ட ஒருத்தனை ஏற்கனவே அவளுக்கு பார்த்துட்டேன்… ”


இந்த வார்த்தைகளைச் சொன்னவர் யாரென்றெல்லாம் சொல்லவில்லை… அதற்கான விளக்கவுரையும் கொடுக்கவில்லை…


அர்ஜூனிடம் சொன்னவர் ரிஷியின் அருகே செல்ல… அர்ஜூனோ கண்மணியை தன் புறம் கொண்டு வந்திருந்தான்… என்ன நடக்கிறதென்று கண்மணி உணரும்முன்னேயே அர்ஜூனின் கையணைவுக்குள் கண்மணி வந்திருக்க…

“நீயெல்லாம் ஒரு ஆளுன்னு உன் கூட பேசிட்டு இருக்கேன் பாரு… என்னைச் சொல்லனும்… ” கண்மணியை சற்றுத் தள்ளி நிறுத்தியவன்


தன் சட்டையைக் கழட்டி... அவளின் தோள் மேல் போட்டு விட்டு… சோம்பலாக கையை முறித்தவன்…


“அமிஞ்சிக்கரை அம்பியா… இல்லை நட்டு தாதாவா பார்த்துறலாமா?”


அர்ஜூனின் செய்கைகள் ஏதுமே கண்மணியிடம் விரசமாக இல்லை… எல்லாமே அவள் மீதான தன் உரிமையக் காட்டும் விதமாகவேத்தான் இருக்க... இதை எல்லாம் பார்த்த ரிஷிக்கு நட்ராஜிடமே கோபம் வந்தது…


அதே நேரம்… கண்மணியையும் அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை… அர்ஜூன் இந்த அளவுக்கு உரிமையுடன்… கிட்டத்தட்ட மனைவியாகவே அவளை நடத்துகிறான் என்றே தோன்றியது… கண்மணி அவன் செய்கைகளில் பெரிதாக அதிரவும் இல்லை… அதே நேரம் அவனைப் பெரிதாக எதிர்க்கவுமில்லை… சாதரணமாகவேத்தான் நின்றிருந்தாள்…


வாக்குவாதம் மட்டுமே செய்தாள்… அதுவும் அர்ஜூனைப் பார்த்து பயந்தோ… இல்லை அருவருக்கவோ இல்லை என்பதையும் உணர்ந்தான்… இருவருக்குமான காதலில் காதல் இருக்கிறதா என்பதை விட நட்ராஜ் என்பவரே அவர்களுக்கிடையே உள்ள பிரச்சனையின் மையம் என்பதை உணர்ந்தான்… அர்ஜூனுக்கு நட்ராஜை ஏற்பது பிரச்சனை என்றால்… கண்மணிக்கு நட்ராஜை அவன் ஏற்காதது பிரச்சனை என்பது மெல்ல மெல்ல புரிய ஆரம்பித்தது…


இவன் யோசித்துக் கொண்டிருக்க அர்ஜூன் யோசிக்கவெல்லாம் இல்லை… நட்ராஜிடம் பாய்ந்து விட்டிருக்க..


இதுவரை நடந்ததை எல்லாம் பார்வையாளனாகவே மட்டுமே ரிஷி பார்த்துக் கொண்டிருந்தான்…


பைக்கில் வரும் போது… அவன் எதிர்பார்த்தானா என்ன… திடீரென்று வந்து நால்வர் தாக்குவர் என்று… என்ன ஏதென்று உணர்வதற்கு முன்னமே… தலையில் அடித்து விட… ரிஷி மயங்கியதென்னவோ உண்மை… ஆனால்… அடுத்து சுதாரித்து தன்னைக் காத்துக் கொள்ள முயல… தலையில் வாங்கிய அடி… அதன் வேலையைக் காட்ட முற்றிலும் மயங்கி விழுந்திருக்க… அடுத்து அவன் பார்த்தது அர்ஜூன் முகம் தான்…


முதலில் புரியவே இல்லை… ஏன்… இவன் எதற்கு தன்னை ஆள் வைத்து அடித்து இங்கு வர வைத்திருக்கின்றான்… என்பதெல்லாம்…


ஆனால் அடுத்த நொடியே… இவனைக் கால்களால் எட்டி மிதித்து…


‘உனக்கு… உன் வீட்டுக்கு வேலை பார்க்க.. என் வீட்டு இளவரசி தேவைப்படுதாடா..” என்று பேச ஆரம்பிக்க… இளவரசியா… அது யார் என்றுதான் யோசித்தானே தவிர கண்மணி எல்லாம் உடனே ஞாபகத்திற்கே வர வில்லை… சில நிமிட யோசனைக்குப் பின்னேயே கண்மணி என்பதே அவனுக்குப் புரிய…


கண்மணிதான் இதற்கு காரணம் என்று நினைக்க… கண்மணியின் மேல் இருந்தது கோபம் மட்டுமே… ஆனால்… அவளோ வந்து அர்ஜூனோடு சண்டை போட… வந்த கோபம் மட்டுப்பட ஆரம்பித்து இருக்க...


”உன்னையே காதலிக்க யோசித்த எனக்கு…இவனெல்லாம்” என்ற இளக்காரமான வார்த்தைகளில்தான் கண்மணி.. ரிஷியை விட்டு வெகுதூரம் விலகி இருந்தாள்… அதிலும் அவன் வெறுக்கும் நபர்களில் முதல் பெண்ணாக தன் பதிவை பதித்திருந்தாள் கண்மணி…


ரிஷி பெரும்பாலும்… தன்னைக் கீழாக நினைப்பவர்களிடம் தள்ளியே இருக்க வேண்டுமென நினைப்பான்… அப்படித்தான் இருந்தான்…. ஆனால் தன்னை இந்த அளவுக்கு கீழாக நினைக்கும் பெண்ணின் மன ஓட்டம் புரியாமல் அவளின் அருகிலேயே இத்தனை நாள் இருந்திருக்கோமே நினைக்கும் போதே அதிலும் அவளின் ஒவ்வொரு உதவியையும் …ம்ஹூம்ம். உதவியாக நினைத்து அவள் செய்ய வில்லை…பிச்சைக்காரனாக நினைத்து இரந்திருக்கிறாள்…


கழிவிரக்கத்தில் உதட்டைக் கடித்து அழுந்திக் கொண்டான் ரிஷி… சொல்லப் போனால் அவனை விபரம் இல்லாதவன்… சிறு பிள்ளை என்று கை கொட்டி சிரிப்பவர்களை எல்லாம் விட கண்மணி என்பவளை இன்னும் ஒரு படி மேலேயே வெறுத்தான் என்றே சொல்லவேண்டும்… மற்றவர்கள் எல்லாம் இவனை ஒதுக்கி வைக்க… இவள் உதவி என்ற பெயரில் அனைத்தும் செய்து… அசிங்கப்படுத்தியிருக்கிறாள் என்றே தோன்றியது…


இதில் அவள் அந்த அர்ஜூன் அவிழ்த்து விட்ட நாயிடமிருந்து தன்னை காப்பாற்றிய விதம் வேறு ஞாபகத்துக்கு வர…


“என்னைக் காப்பாற்றுகிறாளாமாக்கும்” தன்னை நினைத்து தானே சிரித்துக் கொண்டாலும்… இன்னொரு புறம் அவனை நினைத்தே அவனுக்கே வெறுப்பாக வர.. கண்மணி மற்றும் அர்ஜூன் இருவருக்கும் இடையேயான வார்த்தைப் போர்களை கண்டு கொள்ளவே இல்லை…


அதோடு கண்மணி அங்கு வந்து மாட்டிக் கொண்டது போலவோ… அர்ஜூனிடம் தப்பித்துச் செல்ல போராடவோ இல்லை… அர்ஜூன் மட்டுமல்லாது கண்மணியின் தாத்தாவும் அங்கிருந்ததாலோ என்னவோ… ஆக மொத்தம் தனியாக கண்மணி மாட்டிக்கொண்டிருக்கின்றாள்… அவளுக்கு உதவி பண்ண வேண்டும் என்ற எந்த எண்ணமும் ரிஷிக்கு ஏற்படவில்லை…


அதே நேரம் இன்னொன்றும் அவனுக்குள் தோன்றியது… கண்மணி மேல் தோன்றிய வெறுப்பில்… அர்ஜூன் கண்மணியிடம் பலவந்தமாக நடந்திருந்தால் கூட உதவி செய்யும் எண்ணம் தோன்றி இருக்குமோ என்னவோ…


“தன்னைத்தான் ஒன்றுக்கும் இலாயக்கில்லாதவன்” என்று கணித்து வைத்திருக்கின்றாளே…பிறகு எதற்கு உதவி செய்ய வேண்டும்… இப்படி நினைத்த போதே… ரிஷியின் மனசாட்சி… ஒரு பொண்ணு உதவிக்கரம்கேட்டு தவிக்கும் போது… உன் ஈகோவை காட்ட நினைக்கிற அளவுக்கு நீ மோசமானவன் இல்லைனு எனக்கு தெரியும் என்று ரிஷியை அறிந்து அவனிடம் சொல்ல…


இப்படி தனக்குள் ரிஷி யோசித்தபடி இருக்கும் போதே நட்ராஜிடம் அர்ஜூன் தன் பலத்தைக் காட்டிக் கொண்டிருக்க… நட்ராஜ் இப்போது தடுமாறிவது போலத்தோன்ற… உற்றுக் கவனித்தான் ரிஷி… அவரின் வழக்கமான மூச்சுத் திணறலில் அவர் தடுமாறிக் கொண்டிருந்தது ரிஷிக்கு நன்றாகவேப் புரிய…அவர் முற்றிலும் நிலைகுலைந்து கொண்டிருக்க… சுதாரித்தவனுக்கு… கண்மணி அர்ஜூன் … ஏன் தன் வேதனை எல்லாம் பின்னுக்கு போக… தன் முதலாளி மட்டுமே அவன் முன்னுக்கு வந்து நிற்க



அர்ஜுனுக்கும் நட்ராஜுக்கும் இடையில் வந்து நின்றிருந்தான் ரிஷி…


”இதுவரை பொறுமையாய் இருந்தேன்… காரணம்… உனக்கும் கண்மணிக்கும் உள்ள பிரச்சனை அது… ஆனால் என் முதலாளி மேல கைய வச்ச …. பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டேன்.. கையை எடுடா…” என்று அர்ஜூனை முறைத்தபடியே தன் முதலாளியிடம்…


“சார்… இவனுக்கெல்லாம் உங்க அருமை எங்க தெரியப் போகுது… நீங்க யாருன்னு புரியாத முட்டாளுங்க” என்றவன்…


“விட்டுட்டு வாங்க சார்… நான் இருக்கேன் உங்களுக்கு” என்ற போது அதன் அர்த்தம் உணர்ந்து இரு விழிகள் அவனை முறைத்தது… வேறு யார்… கண்மணியே தான்


அதே நேரம் ரிஷி தன் தந்தையிடம் சொன்ன வார்த்தைகளை நினைத்து…


“இவனை… இவன் குடும்பத்தைப் பார்ககவே நான் இவனுக்கு தேவைப்பட்டேன்… இவன் என் அப்பாவை பார்த்துக் கொள்ளப் போகிறானாமாக்கும்” என்றுதான் நினைத்தாள்…


ஆக மொத்தம்… ஒவ்வொருவரும் தத்தம் உணர்வில்…. இருக்க.. ரிஷி அர்ஜூன் இருவருக்குள்ளும் சண்டை எந்த நொடியிலும் ஆரம்பிக்கும் என்ற வினாடியில்... பிரச்சனையை முடிக்க எண்ணியவளாக அர்ஜூனை ரிஷியிடமிருந்து தள்ளி நிறுத்தியவள்…


“ரிஷி…இதுல நீங்க தலையிடாதீங்க” என்ற போதே…


“எனக்கும் தேவையில்லைதான்…ஆனால் எனக்கு என் முதலாளி முக்கியம்… உனக்குத்தான் இத்தனை பேர் இருக்காங்கள்ள அவங்களோடேயே போ… நட்ராஜ் சாரை பற்றி நீ கவலைப்பட வெல்லாம் தேவையில்லை… நீ விட்டாலே போதும்… நான் இருக்கேன் அவருக்காக… நாங்க பார்த்துக்கிறோம்…” என்று ரிஷி கையெடுத்து கும்பிட்டு தனக்கிருந்த அத்தனை கடுப்பையும் கண்மணியிடம் காட்டிக் கொண்டிருக்க…


கண்மணி அவன் வார்த்தைகளில்… உக்கிர தேவதையாக மாறிக் கொண்டிருக்க…. நட்ராஜின் மூச்சுத் திணறலும் இப்போது அதிகமாகிக் கொண்டிருக்க… அதே நேரம் கண்மணியின் பாட்டி உள்ளே வர… நிலைமை ஒரே வினாடியில் தலைகீழாக ஆரம்பித்தது….


நாராயண குருக்களையும் அர்ஜூனையும் திட்ட ஆரம்பித்தவர் தான் நிறுத்தவே இல்லை… வைதேகி பெரும்பாலும் பேச மாட்டார்… அப்படி அவர் பேசினால்…. நாரயண குருக்கள் அடங்கி விடுவார் என்றே சொல்ல வேண்டும்…


“என் பொண்ணத்தான் என்கிட்ட இருந்து பிரிச்சீங்க… இப்போ என் பேத்தியையுமா…. இவள நம்மகிட்ட கொண்டு வந்து சேர்க்க.. நான் என்ன பாடு பட்டேன்னு எனக்கு மட்டும்தான் தெரியும்… ஏதோ நாம தனியா கஷ்டப்படுறோம்னுதான் அவ நம்மகிட்ட பாசத்தோட இருக்கா… பாசத்தைக் காட்டி அவளை நம்மளோட வச்சுருப்பேள்ன்னு பார்த்தால்… இப்படி உங்க அதிகாரத்தையும் பணபலத்தையும் காட்டனுமா… பொண்ணை இழந்துட்டோம்,… பேத்தியையும் நாம இழக்கனுமா என்ன… “ என்று தன் கணவனைச் சாடியவர்


”ஏண்டா உனக்கு ஏண்டா இந்த வெறி” என்று ஆரம்பித்தவர்… அர்ஜூனையும் ஒரு வாங்கு வாங்கித்தான் விட்டார்…


கண்மணி இப்போது தன் பாட்டியிடம்…


“பாட்டி… போலிஸ்லாம் போனால் வேஸ்ட்டுனு எனக்குத் தெரியும் … அத்தனை பேரும் தாத்தாவை, அர்ஜுனை மீறி ஒண்ணும் பண்ண மாட்டாங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்… ஆனால் அது நிரந்தராமாகவே எப்போதும் இருக்காது… சொல்லி வைங்க” என்ற போதே



அர்ஜூன் மற்றும் நாராயணன் கைகளை தன் வார்த்தைகளால் கட்டிப் போட்டவராக… கண்மணியிடம் திரும்பினார் வைதேகி



“நீ போம்மா… அவங்கள ஃபர்ஸ்ட் ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போ…” என்று அவசரப் படுத்த கண்மணி தன் தந்தை நட்ராஜ் மற்றும் ரிஷி இருவரின் உடல்நிலையையும் கருத்தில் கொண்டு… வாக்குவாதத்தை நிறுத்தி வெளியேறி இருந்தாள்…


ரிஷியும் தன்னைச் சமாளித்தவனாக… “சார்… இன்ஹேலர் இருக்கா” என்ற போதே அவரது பைக்கைக் காட்ட… கண்மணியும் ஒடிப் போய் எடுத்துக் கொடுக்க.. அதன் பின்தான் சற்று ஆசுவாசமானர் நட்ராஜ்… அதன் பிறகு ரிஷிதான் முடியவில்லை என்ற போதிலும் வேறு வழி இன்றி ஓரளவு தன்னை சமாளிக்க முடிய… நட்ராஜை மருத்துவமனைக்கு அழைத்து வந்தான்…


நட்ராஜுக்கு வழக்கமான சிகிச்சைதான்…. பெரிதாக நேரம் எடுக்கவில்லை… ரிஷிக்குத்தான் சிகிச்சை அளிக்க நேரம் ஆகியது என்று சொல்ல வேண்டும்… பல இடங்களில் அடிதான்… ஆனால் அர்ஜூன் சொன்னது போல… எங்கேயும் பலத்த அடி இல்லாமல் இரத்தம் மட்டும் வரும் அளவுக்கே அடித்திருந்தனர்…ரிஷி அவர்களிடம் எதிர்த்து போராடாமல் அரை மயக்கத்தில் இருந்ததும் அவனுக்கு பெரிதாக பாதிப்பில்லாமல் போயிருக்க…


மூவருமாக’ கண்மணி இல்லம்’ வந்து சேர்ந்த போது… அதிகாலை மூன்று மணி…


ரிஷி வேலை விசயமாக வெளியூர் வந்திருப்பதாகவும்… காலையில்தான் வர முடியும் என்று ரிதன்யாவுக்கு போன் செய்து பேசிவிட்டதால் ரிஷியின் குடும்பம் உறங்கி இருக்க.. அந்த அதிகாலையில் ரிஷிக்கும் தான் இருந்த நிலையில் அவர்களை தொந்தரவு செய்ய.. கவலை கொடுக்க மனம் வரவில்லை…


காலையில் ஒன்பது மணிக்கு போய்க்கொள்ளலாம்… தன் நிலையைப் பார்த்துக் கேட்டால் சின்ன விபத்து என்று சமாளிக்கலாம் தனக்குள் நினைத்துக் கொண்டபடியே….நட்ராஜை வீட்டிற்குள் கூட்டி வந்து படுக்க வைத்துவிட்டு…ரிஷி நகரப் போக…


தன்னை விட்டு நகர்ந்த ரிஷியை தன் அருகில் அமரச் சொன்னார் நட்ராஜ்…


ரிஷியை அமரச் சொன்னவரோ…. கண்மணியைப் பார்த்து பேசினார்…


“நான் ஆசைப்பட்டது எதுவுமே நடந்ததும் இல்லை… அப்படியே நடந்தாலும் …. எனக்கு நிலைத்ததுமில்லை…” என்றவரின் கண்கள் தன் மனைவி பவித்ராவின் புகைப்படத்தில் நிலைத்து மீண்டது…


”ஆனால் எனக்கு கிடைத்தது எல்லாமே விலை மதிப்பு இல்லாதவை… முதலில் என் மனைவி இப்போ என் பொண்ணு…” பெருமூச்சு விட்டவராக


”என் பவித்ராவைப் பொறுத்தவரை… நான் எதிலயும் குறைவைக்கலை… ஒரு வருசம்னாலும் நிறைவான வாழ்க்கை… ஜென்ம ஜென்மத்துகும் நிறைவான வாழ்க்கை…”


‘ஆனா என் பொண்ணுக்கு நான் “ என்று ஆரம்பிக்கும் போதே அவர் வார்த்தைகள் தடுமாற ஆரம்பிக்க… கண்மணி அருகில் வந்து…


”அப்பா… இப்போ என்ன நடந்து போச்சுன்னு… இவ்ளோ வருத்தபடறீங்க…” சொன்னபோதே… தன்னைச் சமாளித்தபடி


“அர்ஜூன் வேணாம்மா உனக்கு... எனக்குத் தெரியும் என் பொண்ணுக்கு என்ன தேவைனு” நட்ராஜ் தான் அடுத்து சொல்லப் போகும் வார்த்தைக்கு முதல் அடி எடுத்து வைத்தார்…. ஆனால் கண்மணியோ


“இதேதான் என் அம்மாக்கும், அவங்க அம்மா அப்பா சொல்லிருப்பாங்கன்னு நினைக்கிறேன்” பட்டென்று கண்மணி சொல்ல


ரிஷி எரிச்சலாகப் பார்த்தான் கண்மணியை… அவர் எத்தனை உணர்ச்சி பிரவாகத்தில் சொல்லிக் கொண்டிருக்கின்றார்…


“இப்போது இது தேவையா… சொல்லிக் காட்ட வேண்டுமா” என்ற பாவனையில் அவன் இருக்க… கண்மணி தொடர்ந்தாள்…


“சொல்ல வர்றதை சுத்தி வளைக்காமல் சொல்லுங்க” என்று அவர் அருகில் வந்து நிற்க…


”உணர்வுகளை மதிக்க கத்துக்க கண்மணி… அவர் ஏதோ சொல்ல வருகிறார்… இங்க என்ன பேச்சுப் போட்டிக்கா பேசிட்டு இருக்காங்க.. பாயிண்ட்ஸ் மட்டும் பேசுறதுக்கு” ரிஷி கண்மணியிடம் சட்டென்று சொல்ல..


தன்னைத்தான் நட்ராஜ் அவர் மனதில் வைத்து பேசிக்கொண்டிருக்கின்றார் என்று ரிஷி சிறிதளவு கூட நினைக்கவி்ல்லை என்பதே உண்மை… அதனால் அவன் அப்படி சொல்ல… அதே நேரம் கண்மணியோ நட்ராஜ் என்ன சொல்லப் போகிறார் என்று கிரகித்து இருந்தாள்…


”என்ன சொல்லப் போகிறார்னு தெரிஞ்சுருச்சு… அடுத்தவங்க என்ன சொல்லப் போறாங்கன்னு தெரியாத வரைக்கும் தான் வெயிட் பண்ணனும்… என் அப்பாவோட உணர்வுகள் புரிந்ததுனாலதான்… அவர் என்ன சொல்ல வருகிறார்னு என்னால கணிக்க முடியுது… என்னை உணர்வுகளை மதிக்கத் தெரியாதவங்கன்னு சொன்னா… அது என்னோட தவறு இல்லை… அது உங்களோட தவறு” என்று தன்னைப் பற்றி அவன் சொன்ன வார்த்தைகள் தவறு என்று சுட்டிக்காட்டிய கண்மணி… அதோடு மட்டும் ரிஷியை விடவில்லை…


”அதை விட நீங்ங்ங்களும் உணர்வுகளை ரொம்ம்ம்ம்ம்ப மதிக்கத் தெரிந்தவர்னு ஒரு பொண்ணோட கண்ணீர் எனக்கு சொல்லிருச்சு…” என்று ரிஷியையும் சொல்லிக் காட்டி முடிக்க… ரிஷி நட்ராஜ் இருக்கின்றார் என்றெல்லாம் பார்க்கவில்லை.. தீப்பார்வை பார்த்தான் கண்மணியை…


அவள் பார்த்தபடியே…


“என்னை அப்புறம் தீப்பார்வை பார்க்கலாம் ரிஷி… அடிக்கடி பார்க்கலாம்… நமக்கு டைம் இருக்குனு நினைக்கிறேன்..… என்னப்பா நான் சொல்றது கரெக்ட் தானே” என்றாள் தந்தை மனதில் கணித்தது தனக்கும் புரிந்து விட்டது என்பதை நட்ராஜிடம் குறிப்பால் உணர்த்த…


இங்கு ரிஷிதான் இப்போதும் ஒன்றும் புரியாமல் இருந்தவனான்… அவனுக்கு இன்னும் புரியவில்லை என்பதை உணர்ந்தவளாக


”எங்க அப்பா என்ன சொல்லப் போறார்னு கேளுங்க… அவர் என்ன சொல்ல வருகிறார்னு உங்களுக்குத்தான் இன்னும் புரியலை… எனக்கு எப்போதோ புரிஞ்சுருச்சு… “ ரிஷியிடம் சாதரணமாகச் சொன்னவள் தன் தந்தையைப் பார்க்க…


நட்ராஜும் மகளைப் பார்க்க… அவரது கண்கள் மகளிடம் தான் சொல்லப் போகும் விசயத்துக்கான சம்மதத்தை எதிர்பார்த்து வேண்ட…


”ஆக்சுவலா உங்க மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் பொண்ணு பொறக்கனும்… நீங்க எப்படி உங்களப் பெத்தவங்களோட ஆசைகளை அவங்க கனவுகளை எல்லாம் தூக்கி தூரப் போட்டுட்டு உங்க வாழ்க்கைதான் முக்கியம்னு வந்தீகளோ… அதே மாதிரி உங்களுக்குக்கும் நடக்கனும்… ஆனா பாருங்க எதிர்மாறா நடக்குது… உங்களுக்கு நீங்க என்ன சொன்னாலும் ஏத்துக்கிற பொண்ணு…” மறைமுகமாக தன் சம்மதத்தையும் தந்தையிடம் தெரிவித்தவள்.. ரிஷியைப் பார்க்க…


உண்மையைச் சொல்லப் போனால் ரிஷிக்கு தந்தையும் மகளும் என்ன பேசுகிறார்கள் என்றே தெரியவில்லை… அந்த வார்த்தைகளின் ஆழம்… அது காட்டும் குறிப்புகளும் புரியவில்லை…


காரணம்.. ரிஷியின் எண்ணங்கள்.. நினைவுகள்… ஒரு நிலையில் இல்லை என்பதே உண்மை… மீண்டும் மீண்டும் கையறு நிலைதான்… அவன் எதை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதையே அவனால் முடிவெடுக்க முடியவில்லை… தான் முன்னேற வேண்டும் என்று நினைக்கும் போது அவன் குடும்பத்தில் ஏதாவது ஒன்று நடந்து அவனை மீண்டும் அதள பாதாளத்தில் தள்ளிவிடுகிறது… தன்னை… தான் யாரென்று நிருபிக்க… காலம் அவனுக்கு வாய்ப்பளிக்கவே மறுத்தது போல இருந்தது… தனக்குத்தான் கனவென்பது ஒன்றே இல்லை என்றே வைத்துக்கொள்ளலாம்.. ஆனால் தன் தந்தையின் கனவு அவரின் கடைசி ஆசையை நோக்கியும் அடி எடுத்து வைக்க முடியவில்லையே… யாருமே நெருங்க முடியாமல் அந்த தொழிற்சாலை துருப்பிடித்தே அழிந்து விடும் நிலைமைக்கு கொண்டு வர வைத்து விட்டானோ…


தன்னைச் சூழ்ந்த இருள் நிறைந்த வாழ்க்கையில்… தான் முன்னேறிச் செல்லும் பாதையைக் காட்ட… தனக்கான சிறு ஒளி கூட கிடைக்காமல்… தடுமாறினான் என்றே சொல்ல வேண்டும்… அடுத்தடுத்து அடிகளே… எழ நினைத்தாலும்… வேறு எதையும் யோசிக்க முடியாத படி வீழ்ந்து கொண்டேதான் இருந்தான் ரிஷி… தோல்வி மட்டுமல்ல கூடவே அவனுக்கு கிடைத்தது அவமானமும்…. ஏளனமும்… பரிதாபங்களும்… இதோ இந்த கண்மணி போன்றவர்களின் பச்சாதாபம் கலந்த உதவிகளுமே…


அதே நேரம் நீலகண்டன்… திருமூர்த்தி, கேசவன்… அர்ஜூன்… கண்மணி என தனக்கு எதிர் திசையில் ஆயிரம் பேர் இருந்தாலும்


இதை எல்லாம் மீறி நட்ராஜ்.. தினகர் வேலன் என்று சில பேர் அவனுக்காக இருந்தனர்… இதை எல்லாவற்றையும் விட… மகிளா… என்னை நான் எப்படி இருக்கின்றேனோ அப்படியே நேசிக்கும் மகிளா… ஒரு நிமிடம் தன் முன்னேற்றம்… பழி வெறி… தன்னைக் கீழாக நினைக்கும் அத்தனை பேருக்கும் தான் யார் என்று காட்டும் வெறி எல்லாம் இல்லாமல்… அவளோடு அவளைக் காதலித்த அந்த ரிஷியாக… மாறி யாரும் கண்காணாத இடத்திற்கு போய்விட தோன்றினாலும்… முடியவில்லையே அவனால்..


கண்கள் கலங்கியது ரிஷிக்கு… இன்னும் இரண்டே நாளில் அவள் யாரோ ஒருவனின் மகிளாவாகப் போகின்றாள்… இவனுக்குத் தெரியும் அவளுக்கு அது எத்தனை வலி… என்று… ஆனால் அவள் தேவதைப் பெண்… இந்த உலகம் ஆயிரம் சொல்லும்… ரிஷி சுயநலமானவன் என்று… ஆனால் மகிளாவைப் பொறுத்தவரை அவன் மகிளாவின் சந்தோஷத்தை மட்டுமே பார்த்தான்… இன்று அவள் வருந்தினாலும்… அவள் கண்டிப்பாக சந்தோசமாக இருப்பாள்… அவளுக்கு எப்போதுமே நல்லது மட்டுமே நடக்கும்… நடக்க வேண்டும்… அவள் அதிர்ஷடசாலி… அதனால் தான் தன்னை விட்டு போகிறாள்… அந்த அதிர்ஷ்டம் தான் நல்ல மனிதனோடும் அவளைக் கொண்டு சேர்க்கும்… ஆணித்தரமாக நம்பினான் ரிஷி…


“எனக்கு நீங்க மருமகனா…மகனா வேண்டும் ரிஷி” கலைத்தன நட்ராஜின் வார்த்தைகள்… ரிஷியின் நினைவுகளை…


காதுகளில் விழுந்த வார்த்தைகள் நன்றாகவே புரிந்தன… இருந்தும் புருவம் சுருங்கின… முகமெங்கும் பலவிதமான உணர்வுக் கலவைகள் ரிஷியிடம் இப்போது


ஏதோ ஞாபகம் வந்தவனாகச் சட்டென்று கண்மணியைப் பார்க்க… வழக்கம் போல… இயந்திரப் பாவை தான் அங்கு வீற்றிருக்க… அந்த பாவையின் பாவம் என்ன என்று முகத்தைப் பார்த்து உணர முடியாத தோல்வியே ரிஷிக்கு


இப்போது நட்ராஜ் அர்ஜூனிடம் சொன்ன வார்த்தைகள் ரிஷிக்கு புரிந்தது… அதே நேரம் அர்ஜூன் இவனிடம் கேட்ட வார்த்தைகளும் எதிரொலித்தது…


”நம்பி உன்னை உள்ள விட்ட வீட்டுக்கு இரண்டகம் பண்ணி விட்டாய்” குற்ற உணர்ச்சி அவனுக்குள் அவனை மொத்தமாக துண்டாடிப் போனது இப்போது…நட்ராஜின் வார்த்தைகளில்..


“எப்படிப்பட்ட மனிதர்… ஆனால் நான்… இவருக்கு கால் தூசி பெறாதவன்… இவருக்காகவே இவரது மகளைவிட்டு தள்ளி நிற்க வேண்டும்… அவள் மீதான தன் துவேசத்தை அடக்க வேண்டும்” என்றே தோன்றியது ரிஷிக்கு..


“அந்த அர்ஜூன் என் பொண்ணோட ஆசை இதுதான்னு… அவனே மனசுல செட் பண்ணிட்டு அதை எல்லாம் கொடுக்கனும்னு நினைக்கிறான்… அது அவன் தப்பில்லை… ஆனால் அவனோட அந்தக் காதல் மறுபடியும் என் பொண்ணை இப்போ இருக்கிற அதே இடத்துல தான் கொண்டு வந்து நிறுத்தும்… “


கண்மணிக்கே தன் மனதின் ஓட்டம் புரிந்தது போல இருக்க… அமைதியாக தன் தந்தையைக் கவனிக்க…


ரிஷியோ நட்ராஜை சட்டென்று தடுத்து நிறுத்தினார்…


“உங்க ஒவ்வொரு வார்த்தையிலயும்… என்னை சாட்டையால அடிக்கிறீங்க சார்… நீங்க கோபுரக் கலசம் சார்… நான் குப்பை மேடு சார்… உங்க மனசுக்கு… நீங்க எப்படியோ இருக்க வேண்டிய ஆளு… கடவுள் கல்லுனு இதுனாலதான் சார் எனக்குத் தோணுது” சட்டென்று சொல்ல


சிரித்தார் நட்ராஜ்…


“எனக்கு என்ன குறைச்சல் ரிஷி… ஒரு வருசமேனாலும்… நிறைவான வாழ்க்கையைக் காட்டிட்டு போன என் பொண்டாட்டி”


“ப்ச்ச்… அது தெரியாமல் அவளை நெனச்சு என் பத்து வருட வாழ்க்கையை வீணாக்கிய பாவி நான்” மனைவியைப் பற்றி பேசிய போது அவரது கண்களில் நிறைவு மட்டுமே.. அதில் வேதனையோ வருத்தமோ இல்லை… அவனால் நட்ராஜ் கண்களில் இருந்த அவர் மனைவியின் மீதான காதலை உணர முடிய… அதன் விளைவு ரிஷியின் முகமும் நெகிழ்ந்தது…


“எனக்கு வரம் கொடுத்துட்டு போயிருக்கான்னு தெரியாத பாவி நான்…” சற்று முன் காதலில் நெகிழ்ந்த கண்களில் இப்போது வலி… கண்மணியைத்தான் வரம் என்று சொல்கின்றார் என்று இவனுக்கும் புரிய… அந்த வார்த்தைகளை ரிஷி ரசிக்கவும் இல்லை… நட்ராஜின் மகளுக்கான வலியும் அவன் உணரவில்லை


அதேநேரம் அவர் சொன்ன கருத்தையே பிடித்துக் கொண்டான்… அதை வைத்தே பேச ஆரம்பித்தான்


“வரம்னு நீங்களே சொல்லிட்டீங்க சார்… அந்த வரத்தை வாங்குகிற அளவுக்கு தகுதியானவன் நான் இல்லை…” கண்மணியைப் பார்த்துக் கொண்டே சொன்னான்…


கண்மணி யோசனையுடன் அவனைப் பார்த்த போதே…


“இந்த வரத்தை வாங்குவதற்கு தவம்லாம் செய்றவங்களப் பார்த்தேனே” சொன்னவன்… பெரிதாகவெல்லாம் மழுப்பி பேச வில்லை… சட்டென்று மறுத்தும் விட அதேபோல் கண்மணியிடம் அன்று அவளைத் திருமணம் செய்யக் கேட்டதையும் கூறி அவரிடம் மன்னிப்பு வேண்டியும் நிற்க…


நட்ராஜ் வேறு ஏதும் பேசவில்லை… வற்புறுத்தவும் இல்லை…. ஆனால் மனதிலோ…


“என் பொண்ணு வந்தா உனக்கு உன் குடும்பத்துக்கு நல்லதுன்னு நீ நினைக்கிற… ஆனால் என் பொண்ணுக்கு நீ புருசனா வந்தா அவ சராசரிப் பொண்ணா மாறுவான்னு நான் நினைக்கிறேன்…” யோசித்தபடி வேறு ஏதும் சொல்லாமல்…


“உடனே உங்க சம்மதத்தை கேட்கல தம்பி… ”


“இதை டாப்பிக்கை இதோட க்ளோஸ் பண்ணிறலாம் சார்… இதை மறந்துறலாம்… வழக்கம் போல முதலாளி தொழிலாளின்னே நம்ம உறவை தொடருவோம் …” என்றபடியே எழுந்தவன்… இதற்கு மேல் அங்கு நிற்க வில்லை ரிஷி


வேக வேகமாக தான் தங்கி இருந்த அறைக்கு மேலே இருந்த மொட்டை மாடியில் போய் நின்றிருந்தான்…


நன்றாக விடிந்ததும் வீட்டிற்கு போய்க் கொள்ளலாம்… என்று முடிவெடுத்திருந்தால் அங்கு போய்விட்டான்


கைப்பிடிச் சுவரைப் பிடித்தபடி… நொந்து நின்றவனுக்கு உடலின் வலியை விட… மனதின் வலி ஆயிரம்…


அவனுக்கு இன்னும் அனுபவம் போத வில்லை… தன்னைப் பற்றி… நன்றாகத் தெரிந்தது… உயரப் பறக்கத்தான் நினைக்கின்றான்… அவமானங்களும் தோல்விகளும் உள்ள மீள முடியாத பள்ளத்தாக்கே உன் இடம் என மீண்டும் மீண்டும் தள்ளப்படுகின்றான்…


இதோ இந்த இருளைப் போல மட்டுமே அவன் வாழ்க்கை…


அதோ அங்கு தெரியும்… கீழ்வானின் விடிவெள்ளியாக அவனுக்கு சிறு வெளிச்சம் கிடைக்குமா… ஏங்கியது மனம்..


திடிரென்று அவனருகில் சிறு வெளிச்சம்… திரும்பிப் பார்க்க… கண்மணி நின்றிருந்தாள் அவனருகில்… கூடவே அவளது கையில் இவனது அலைபேசி… அப்போதுதான் அவனுக்கு புரிந்தது… தன் அலைபேசியை அவள் வீட்டிலேயே விட்டு விட்டு வந்தது…


அவள் கையில் தன் அலைபேசி இருக்கிறது என்று தெரிந்தும் கை நீட்ட வில்லை… பேசவும் இல்லை இவன்… கண்மணியிடம் முகம் கொடுத்து பேச அவனுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை… அதே நேரம் அவளிடம் அதைக் காட்டவும் பிடிக்கவில்லை… கைகளைக் கட்டியபடி… அவளுக்கு முதுகைக் காட்டியபடி மீண்டும் வெளியே வெறிக்க ஆரம்பிக்க…


“அர்ஜூன் பண்ணினதுக்கு நான் மனப்பூர்வமா நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன் ரிஷி” என்று கண்மணி மன்னிப்பு கேட்க… கைப்பிடிச் சுவரைப் பிடித்திருந்த இவன் கைகளோ இன்னும் இறுக்கி அந்த சுவற்றைப் பற்ற… பல்லைக் கடித்து தன் கோபத்தை அடக்கியவன்…


“இவ அவனுக்கு பதிலா மன்னிப்பு கேட்டா அவனை நான் மன்னிக்கனுமா என்ன” மனதினுள் நினைத்தவன்…


“நான் அவனை சாரி சாரி உங்க அவரை மன்னிக்கிற அளவுக்கெல்லாம் பெரிய ஆள் கிடையாதும்மா… நீங்க பெரிய ஆளுங்கள்ள… கிடையாதுங்கம்மா” என்றவன்… அதற்கு மேல் பேசாமல் திரும்ப


கண்மணிக்கும் அவன் கோபம் புரிய… வாக்குவதாம் செய்ய வில்லை… தேவையுமில்லை அது… அவன் வலி இவளுக்குமே புரிய விட்டு விட்டாள்…


“மகிளா கால் பண்ணாங்க… அதான் கொண்டு வந்தேன்” சொல்லிவிட்டு அலைபேசியை கைப்பிடிச்சுவரில் அவன் அருகே வைத்தபடி… கீழே இறங்கத் திரும்ப… சரியாக மகிளாவின் அழைப்பும் வந்தது…


மணி 3.30… மகிளாவிடமிருந்து அழைப்பு வந்த மணி நேரம்… எத்தனையோ நாள்… இதைத் தாண்டியெல்லாம் மகிளாவோடு சங்கீத ஸ்வரங்கள் பாடியவனுக்கு ரிஷிக்கு அது ஆச்சரியமோ வியப்போ இல்லை…


அலைபேசியை எடுக்காமல் அதை வெறிக்க… அதன் ஒலி இருளைக் கிழித்துக் கொண்டு ஒலித்து பின் அடங்க… கண்மணி சரியாக படிகளின் அருகில் போகும் போது மீண்டும் அழைப்பு… நின்றாள்… ரிஷி எடுப்பான் என்று பார்க்க… அதற்கான சிறுமுயற்சியும் இல்லாமல் ஜடத்தைப் போல வெளியே பார்த்தபடியே இருக்க…


மீண்டும் வந்தவள்…


”ஏகப்பட்ட மிஸ்ட் கால் ரிஷி… ப்ளீஸ் என்னன்னு கேளுங்க…” கண்மணி அவள் இயல்புக்கு மாறி அவனிடம் இறங்கி வேண்ட…


“மற்றதெல்லாம் விடுங்க… அட்லீஸ்ட் அவங்க என்ன சொல்ல வர்றாங்கன்னு கேட்க கூட முடியாதா ரிஷி… “ அசையவில்லையே அவன்…


கடுப்பானாள் கண்மணி… கொஞ்சம் அதிகப்படிதான் என்றாலும்… அடுத்தவர்களின் வாழ்க்கையில் மூக்கை நுழைக்கின்றாள் என்று தெரிந்த போதும்… அவளால் தவிர்க்க முடியவில்லை…


அடித்துக் கொண்டிருந்த அலைபேசியை எடுத்து சட்டென்று அட்டெண்ட் செய்தவள்… ஸ்பீக்கரில் போட்டு … இருந்த இடத்திலேயே மீண்டும் வைத்துவிட்டு… தன் பணி முடிந்தது என்று விடு விடென்று கீழே இறங்கி அந்த இடத்தை விட்டும் அகன்றிருந்தாள்…


”ரிஷி மாமா…” தேம்பல் குரலில் மகிளாவின் குரல் தேய்ந்து ஒலித்தது…


”நான் சென்னை வந்துட்டேன் மாமா… இன்னும் எனக்கு நம்பிக்கை இருக்கு மாமா… எனக்காக வருவேன்னு… கடைசி நொடி வரை உனக்காக காத்துட்டு இருப்பேன் மாமா… ” நம்பிக்கையோடு ஒலித்த அவளின் குரலோடு… நாயின் குரைப்ப்பொலியும் ஒலிக்க…


அந்தக் குரலில் ரிஷியின் முகம் போனை நோக்கித் திரும்பியது


“நம்ம ஃபிண்டு கூட வந்துருக்கு மாமா... நம்ம பேபி மாமா “ என்ற போதே அவள் மீண்டும் அழ ஆரம்பிக்க…


அதற்கு மேல் அவனால் முடியவில்லை அவள் பேசுவதையும் கேட்க முடியவில்லை… சட்டென்று கட் செய்து விட்டான்…


“என்னை மன்னிச்சுரு மகி …” வானம் எட்டும் அளவுக்கு கத்த வேண்டும் போல இருந்தது… ஆனால் கத்த வில்லை அவன்… மனதுக்குள் மட்டுமே சொல்லிக் கொண்டான்…


’ஒரு சிறு பெண்ணின் மனதை எந்த அளவுக்கு காயப்படுத்திக் கொண்டிருக்கொன்றோம் அவனுக்குத் தெரியும்… அதே நேரம் தன் நிலையிலிருந்து தன்னை மாற்றி… தன்னையும் மறந்து அவள் அவள் வாழ்க்கையையும் வாழ்வாள்…’ இத்தனை நாள் அவளோடு பழகியிருக்கும் அவன் இதை மட்டும் ஆணித்தரமாக நம்பினான்


அதே நேரம்

’என்னவெல்லாம் சொல்லக் கூடாதோ… பேசக் கூடாதோ… எல்லாவற்றையும்… காதலிக்கிறேன்… என் உரிமை என அவளிடம் பேசி அவளை இந்த நிலைக்கு கொண்டு வந்து வைத்திருக்கும் நான் எவ்வளவு பெரிய அயோக்கியன்” அந்த கோவாவில் பார்த்தவர்களை விட கேடு கெட்டவனே … தன் மீதே கோபத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் சுவற்றில் குத்தியவன்…. வலித்த போது, வலி மரத்துப் போகும் அளவுக்கு மீண்டும் மீண்டும் குத்திக் கொண்டிருக்க…


மீண்டும் மீண்டும் மகிளாவிடமிருந்து தொடர் அழைப்புகள்…


எடுக்கவில்லை… ஆனால்…மகிளா போனில் சொன்ன ஃபிண்டு வந்த தினம்… ஞாபகத்திற்கு வந்தது இப்போது…


இவன் மகிளாவிடம் காதல் சொன்ன பின் மகிளாவுக்கு வந்த முதல் பிறந்த நாள் அது… அன்றைய இரவு 12 மணி….


”ஹேய் மகி டார்லா…” தன் காதின் அருகே கேட்ட கிசுகிசுப்பான குரலில் படுக்கையில் படுத்திருந்த மகிளா பதறி துள்ளிக் குதித்து எழ…


அவள் படுக்கையில… அவள் முன்… மண்டியிட்டபடி ரிஷி… கையிலோ ஒரு பெட்டி


யாரோ என்ற பதட்டம் குறைந்தாலும்…. தன் ரிஷி மாமா இந்த நேரத்தில்… எப்படி வந்தான்… ஆராயவெல்லாம் அவன் விடவில்லை…


“ரிஷியோட அத்தைப் பொண்ணு மகிளா… இந்த ரிஷி மாமாவோட டார்லாவா மாறின பின்னால வருகிற ஃபர்ஸ்ட் பேர்த்டே..”


தன் வாழ்த்துக்களைக் கூறியவன்… அடுத்து அவன் கொண்டு வந்த பெட்டியை நீட்ட


”உனக்கும் எனக்கும் பிடிச்ச பப்பி”


அவ்வளவுதான்… பதட்டமெல்லாம் மறைந்து… துள்ளிக் குதித்த மகிளாவின் வாயைப் பொத்தியவன்…


“வில்லன் எழுந்துக்கப் போறாரு… ” கிசுகிசுத்த குரலில் சொன்னவன்…


“ஏற்கனவே தனியா பார்த்து பேசி… கிடைச்ச பாட்டெல்லாம் போதும்… வீட்டுக்கு போறேன்… போன்ல பேசு… “ என்று உடனடியாக இறங்கிப் போனவன் தன் வீட்டை அடைந்து வீடியோ காலில் வந்தும் இருந்தான்…


“டார்லா… கோபமா… அங்க இருந்தா… அப்புறம்… உன் கைல பப்பி இருக்காது…” என்றவன் இடைவெளி விட்டு… கண் சிமிட்டியபடி


“பத்து மாசத்துல பேபி தான் நம்ம கைல இருக்கும்” மகிளாவின் முகம் செவ்வானமாக…


“ஹையோ இந்த வெக்கம் தாண்டி… என்னைப் பார்க்க முடியாம… வெட்கப்படுற இதுதான்… இதுதான் உன் பின்னாடி என்னை சுத்த வைக்குது” என்றபடியே… உற்சாகத்துடன்


“ஹேய் டார்லா… எனி வே… இதுதான் நம்ம ஃபர்ஸ்ட் பேபி…”


“ஆன்னு என்னை லுக் விட்றதை விட்டுட்டு… நம்ம பேபிக்கு என்ன பேர் வைக்கலாம்…”


பேச்சுக்கள் தொடர்ந்தன… விடிகாலை வரை…


நினைவுகள் தந்த ரண வேதனை ஒரு புறம்… அலைபேசியின் அழைப்பு ஒரு புறம் என….அவனை இம்சைப்படுத்த…. இருந்த கோபம் அனைத்தையும் அவனது அலைபேசியில் காட்ட… சில்லு சில்லாக அலை பேசி சிதறியிருந்தது…


அலைபேசியின் ஓசையை அடைத்து விட்டான்… மனதின் ஓசையை அடைக்க முடியவில்லை


”ஒன்றா இரண்டா… பேசியதெல்லாம் ஆசை வார்த்தைகள் தான்… பேசும் போதும் மயக்கும் கண்ணனாக காதல் வசனங்கள் பேசி… காதல் வசனங்கள் மட்டுமா… பார்க்கும் போதெல்லாம் அத்தை மகள் என்ற உறவின் உரிமை… சின்ன சின்ன தீண்டல்கள்… அந்த அறியா பருவ மங்கையை தன்னை மீண்டும் மீண்டும் நாட வைக்கும்… ஏங்க வைக்கும் முற்றுப் பெறாத சில்மிஷங்கள்” என… மகிளாவை தன் வசப் படுத்தி வைத்திருந்தை நினைத்துப் பார்த்த ரிஷி… ஓவேன்று கதற ஆரம்பித்திருந்தான் ரிஷி……


இப்போது சுற்றம் பார்க்க வில்லை… இரவின் நிசப்தம் பற்றி யோசிக்கவில்லை…


விளைவுகள் தெரியாமல்... தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறவள் தானே மகிளாவிடம் செய்த பருவக் குறும்புகள்… கோவாவில் ஞானம் பிறந்ததுதான்… மகிளா மனைவியாக தன் உரிமையாக வரும்வரை… அவளை விட்டு தள்ளி பழகவேண்டும் என்று முடிவெடுத்துதான் வந்திருந்தான்… இப்படி மொத்தமாக அவளை விட்டு தள்ளிப் போவான் என்று நினைக்கவில்லையே…


திடீரென்று ஒரு மனம்… மகிளாவிடம் அவன் வசம் கொண்டு வந்து சேர்க்கச் சொல்ல… அடுத்த நொடியே… மகிளா நன்றாக இருப்பாள்… நன்றாக இருப்பாள் இதையே ஜபம் போல் ஜபித்தவன் ஒரு கட்டத்தில்…


”மகிளா இனி உனக்கில்லை…. “ உறுதி செய்து நிமிர்ந்தவனை


அத்தனை எதிரிகளும்… ஒரு புறமிருந்து கைகொட்டி சிரிக்க…


தந்தை தனசேகரும் அவன் குடும்பம்… ஒருபுறம் கவலையோடு பார்க்க…


நட்ராஜ் மட்டுமே கனிவான பார்வையைக் கொடுக்க… அவர் அருகில் நின்ற அவர் மகளோ… பரிதாபமாகப் பார்த்தாள்….


ரிஷிக்கு உண்மையிலேயெ தனக்கு பைத்தியம் பிடித்துவிட்டதோ எனும்படியான நிலை…


அதே நேரம் மகிளா இனி தன்னை நினைக்கக் கூடாது… அவள் மணமேடையில் ஏறும் போது நீ அவள் ரிஷி மாமா இல்லை… தனக்காக வர மாட்டான் என்ற நினைவோடுதான் ஏற வேண்டும்…


என்ன செய்ய… என்ன செய்ய மனம் பரபரத்தது…. கண்களை மூடியவனின் கண்களில் கடைசியாக தன்னை பார்த்த அந்த ஒருத்தியின் பரிதாபமான பார்வை மட்டுமே வந்து நின்றது…


‘உன் மீதே காதல் வர வில்லை… இவன் மீதா வரப் போகிறது…’


காதுகளில் வார்த்தைகள் எதிரொலிக்க…


இப்போது அந்த அர்ஜூனின் குரல்…


‘உனக்கெல்லாம் இவளா…’


நான் விளையாட்டாக கேட்டு வைத்தது போல… நட்ராஜ் சார் தீவிரமாக கேட்டது போல… எனக்கும் கண்மணிக்கும் திருமணம் நடந்தால்…


’கண்மணி என் மனைவி’ இந்த ஒரு வார்த்தை பல பேருக்கு… பல கேள்விகளுக்கு பதிலடி…


மகிளா சந்தோஷமாக வாழ… தன் குடும்பத்துக்கு ஏற்ற பெண்… அந்த அர்ஜூனுக்கு பதிலடி… உதவி என்ற பெயரில் பிச்சை போட்ட அந்தக் கண்மணியை நான் ஏன் திருமணம் செய்யக் கூடாது…. காதல் இருந்தால் மட்டும்தான் திருமணம் செய்ய வேண்டுமா… தகுதிதானே வேண்டும்… காதல் இனி வரப்போவதில்லை… தகுதி வருமே…


ஆம் காதலில்லா… தகுதி மட்டுமே கூடிய திருமணம்… என் அடுத்த தலைமுறையை உலகுக்கு அறிமுகப்படுத்த மட்டுமே கண்மணி …


அந்தக் கண்மணி முன்… இல்லையில்லை என் மனைவியாக என் முன் நிறுத்தி… தினம் தினம் என் தகுதியை தேடி… எனக்கான உயரத்தை நோக்கி… ஓடுவதை ஞாபகப்படுத்திக்கொள்வேன்


இத்தனை நாள்… தனசேகர் என்ற மனிதனின் கனவை நோக்கி ஓடினேன்… இனி எனக்கான… என் இலக்கு… கண்மணி என்ற பெண்ணிற்கான… அவளது கணவனுக்கான தகுதிகள்…


ஒவ்வொரு காலையின் முதல் விழிப்பிலும்… இரவின் கடைசி உறக்கத்திலும்… அவளைத் தன்னருகே வைத்துக் கொண்டே என் உயர்வை அவளிடம் காட்ட வேண்டும்… வித்தியாசமான பழி வாங்குதல்… தனக்குப் பிடிக்காதவர்களை அவர்களை வருத்தி பழி வாங்காமல்… தன்னை உயர்த்தி…அவர்களைத் தலைகுனிய வைப்பது… கண்மணிக்கும் அதே தண்டனைதான்… உனக்கான தகுதி என்னிடம் வந்து விட்டது… ஆனால் காதல் என்றுமே கிடைக்காது என்று சொல்லிக் காட்ட வேண்டும்…


இப்படி நினைக்கும் போதே…


நட்ராஜ் ஞாபகம் வர… தான் மதிக்கும் மனிதன்… அவர் மகள் கண்மணி என்பதும் வந்து போக


“அவர் பொண்ணைக் கொடுமையா படுத்தப் போகிறோம்... எனக்காக என்றுமே நல்லது நினைப்பவர்… அந்த நல்லவருக்காக… இதை மட்டுமே செய்ய முடியும்… இந்த ஜென்மம் என் மனைவி என்றால் அவர் மகள் தான்… வேறு யாருக்கும் அந்த உரிமை இல்லை…”


எங்கோ ஆரம்பித்து கண்மணியில் முடிந்தது இல்லையில்லை ஆரம்பித்தது ரிஷியின் அடுத்த பயணம்…


முடிவெடுத்தவன்… அதற்கு மேல் யோசிக்க வில்லை… நட்ராஜின் வீட்டுக் கதவைத் தட்டி இருந்தான்… அதிகாலை 5 மணிக்கு…


திறந்தது வேறு யாராக இருக்கும்… கண்மணியே


”சார்கிட்ட பேசனும்” -


“உடனே இப்போதே” -ரிஷி


கைகளைக் கட்டியபடி அவனையேப் பார்த்தபடி இருந்தவள்… கதவின் மேலேயே சாய்ந்தபடி இருந்தவள்… வழி விடாமல்


”என்கிட்ட சொல்லுங்க…”


முறைத்தவன்…. அவளைத் தாண்டி…. உட்புறம் பார்த்து


“சார்… நட்ராஜ் சார்” என்று கத்த ஆரம்பிக்க… இப்போது வழியை விட்டவள்…. அவன் உள்ளே போக அனுமதி அளித்தவளாக…


“மகிளா போன் வந்த உடனேயே இந்த முடிவை எடுத்துட்டு வருவீங்கன்னு தெரியும் ரிஷி சார்”… அவன் புறம் திரும்பவில்லை


சட்டென்று நின்ற ரிஷியும் அவள் புறம் திரும்ப வில்லை…


“அண்ட் இன்னொரு விசயம்… என்கிட்டதான்… நீங்க கடைசியா வரணும்…”


”அதாவது என் அப்பாகிட்ட என்ன சொன்னாலும்… என் அப்பா என்கிட்ட கேட்காமல் எதையும் முடிவெடுக்க மாட்டாரு… அன்னைக்கு சொன்னேன்ல… என் அப்பா சம்மதம்னு சொன்னா என்ன பண்ணுவேன்னு கேட்டிங்கள்ள… அதுக்கான பதில் தான் என் மௌனம்… என் சம்மததிற்கான மௌனம் ” என்ற போதே நட்ராஜும் இவன் குரலில் தூக்கம் கலைந்து வெளியே வர..


ரிஷி… கண்மணியிடம் வேறெதுவும் பேசவில்லை… மாறாக நட்ராஜிடம் நேரடியாகக் கேட்டான்…


“நான் கண்மணியை மேரேஜ் பண்ணிக்கிறேன்… ”


“அதுமட்டுமில்லாமல்… இன்னைக்கே… “


“உங்க ரெண்டு பேருக்கும் சம்மதம்னா… சொல்லுங்க”


தந்தை மகள் இருவருக்கும் இடையில் ரிஷி நிற்க…


நட்ராஜ் ஏதோ சொல்லவர…


கண்மணி அவன் முன் வந்து நின்று…


“எனக்கும் சம்மதம்”


”மகிளா… வருத்தத்தோடுதான் மணமகளாக மேடை ஏறுவாள்… ஆனால் அவளோட கண்மூடித்தனமான காதலை தூக்கி எறிந்து விட்டிருப்பாள்… ” – இப்படித்தான் கண்மனி நினைத்தாள்… நட்ராஜ் இருந்த போதும் இதைச் சொல்ல அவள் தயங்க வில்லை…


அதுமட்டும் இல்லை… அர்ஜூன் மீதான தெளிவில்லாத தன் காதலுக்கும் இது முற்றுபுள்ளியாக இருக்கட்டும்


சொன்னவளுக்குத் தெரியவில்லை… ரிஷிக்கு இவள் மேல் இருந்த வன்மம்…


இயந்திரப் பாவையவள் இதயம் அது இளகப் போகும் இடம் நோக்கி… அதாவது ரிஷியின் இதயம் நோக்கி பயணிக்கப் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருந்தாள் கண்மணி…


இன்று


காதலில்லாத... சுயநலத்தோடு கூடிய மணவாழ்க்கை…- ரிஷியைப் பொறுத்தவரை


எதிர்பார்ப்பில்லாத மணவாழ்க்கை— கண்மணியைப் பொறுத்தவரை


சுயநல… காதலில்லாத… எதிர்பார்ப்பில்லாத இந்த இரு உள்ளங்கள் இணைந்தபோது புரிதல் இருந்தது…


ஆனால் காதலோடு எதிர்பார்ப்பும் வந்த போது…. நாயகியிடம் மட்டும் புரிதல் காணாமல் போயிருந்தது…


தகுதியோடு உன் முன் வளர்ந்துகொண்டிருக்கின்றேன்… என்ற ரிஷியின் ஆணவம் கண்மணியிடம் மண்டியிட்டு நின்ற போது…


நாயகனின் தகுதிகளே அவனை நாயகியிடமிருந்து தள்ளியும் வைத்திருந்தது…


முதல் பாகம் முற்றும்…



3,700 views0 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின் புதிய இல்லத்துக்கான முதல் கல்லை அடிநாட்டினாள்… அதன் பின் பள்ளி

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை அலைகழித்திருக்க… மருது ’மணி’ என்று தானே அழைப்பான் யோசித்தாலும்….

கண்மணி... என் கண்ணின் மணி- 94-3

அத்தியாயம் 94-3 சில வாரங்களுக்குப் பிறகு… வீட்டில் கண்மணி மட்டுமே இருந்தாள்… சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க… மணி 11 க்கும் மேலாக ஆகியிருக்க… நட்ராஜுக்காகவும் மருதுவுக்காகவும் காத்திருந்தாள் கண்மணி…. இப்

© 2020 by PraveenaNovels
bottom of page