கண்மணி... என் கண்ணின் மணி -26-1

Updated: Dec 28, 2020

அத்தியாயம் 26-1:

/*ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி

ரொம்பத்தானே துள்ளுது

கட்டிப் போட்டு காளையத்தான்

கிட்ட வந்து முட்டுது


போடி போடி நீயும் இந்த

காளக்கிட்ட மாட்டும் போது


நீ கொடுத்தத

திருப்பிக் கொடுப்பேன்

எண்ணிக் கொள்ளடி

என் சின்னக் கண்மணி*/


கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் தொடங்கி இருக்க… அன்றைய தினமும் கண்மணியின் வழக்கமான மற்றொரு பணி நாள் தான்… மாலை 5 மணி என்பதால் பள்ளி வளாகம் மாணவர்களின் ஆரவாரமின்றி நிசப்தமாகவே இருந்தது… பத்து, பதினொன்று மற்றும் பனிரெண்டு என பொதுத்தேர்வு எழுதும் வகுப்பு மாணவர்கள் மட்டுமே பள்ளியில் இருக்க…


அந்தப் பள்ளியின் முதல் தளத்தின்... ஒரு வகுப்பறையில் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தாள் கண்மணி…“கண்மணி மேம்… இப்போ புரியுது… என் ஆன்சர் கரெக்டா” என்று வேகமாகச் சொன்ன ஒரு மாணவன் தனது விடையைச் சொல்ல… கண்மணி முறுவலித்தபடி…“குட்.. மேத்ஸ்… புரிஞ்சுருச்சுன்னா.. அதை விட ஈஸி இல்லை” என்றபோதே மேஜையில் வைத்திருந்த அவளது அலைபேசி… மெஸேஜ் வந்திருப்பதற்கான அறிகுறியாக ஒலியை எழுப்ப... அதை உணர்ந்தாலும்... அந்த ஒலி கண்மணியை பெரிதாகக் பாதிக்கவில்லை…“ஓகே… அடுத்த ப்ராப்ளத்துக்கு போகலாமா.. நோட் பண்ணிக்கங்க… கடைசி ப்ராப்ளம்…” என்ற போதே அடுத்தடுத்து ஒலி எழுப்பி… அவளது அலைபேசி அதிர ஆரம்பிக்க…இப்போது கண்மணியின் கவனம் அந்த அலைபேசிக்கு இடம்பெயர்ந்தாலும்… உடனே எடுக்க முடியாத காரணத்தால்…


“ஒகே ஸ்டூடண்ட்ஸ்… போர்ட்ல எழுதி இருக்கிற சம்மை சால்வ் பண்ணுங்க… “ என்று சொன்னபடி மேஜையில் இருந்த அலைபேசியை எடுத்தபடி வெளியேறி வந்தவள் அதை உடனடியாக திறந்தெல்லாம் பார்க்க வில்லை… அந்தக் காரிடரில் இருந்து இறங்கி.. அருகில் இருந்த ஆசிரியர்கள் ஓய்வறைக்கு போய்க்கொண்டிருக்க…


அப்போதுதான் கவனித்தாள்… சற்று தள்ளி பள்ளி வளாகத்தில் மாணவர்கள் பெற்றோர்களுக்காக காத்திருக்கும் இடத்தில் ரித்விகா அமர்ந்திருப்பதை….


பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு… 4.30 வரைதான் சிறப்பு வகுப்புகள் என்பதால் பெரும்பாலும் கண்மணி கிளம்பும் முன்னரே ரித்விகா கிளம்பியிருப்பாள்… பார்த்ததில்லை… ஆனால் அவள் அண்ணன் தான் அவளை தினமும் அழைத்து செல்வான் என்பது கண்மணிக்குத் தெரியும்…


ரித்விகாவைக் கடந்துதான் ஓய்வறைக்கு செல்ல வேண்டும் என்பதால்… ரித்விகா இருந்த இடத்திற்கு அருகில் வந்த கண்மணி…


“ரித்வி இன்னும் கிளம்பலையா”


வீட்டுப்பாடங்களை செய்து கொண்டிருந்த ரித்விகா... கண்மணியின் குரலில் நிமிர்ந்தவள்… சினேக புன்னகையுடன்


“அண்ணா இன்னும் வரலை… வேலை இருந்திருக்கும் போல இன்னும் காணோம்… வெயிட் பண்ணிட்டு இருக்கேன்…” சொன்னவள் குரலில் தன் அண்ணன் வந்து விடுவான் என்ற நம்பிக்கை மட்டுமே…


அருகில் இருந்த வாட்ச்மேனும் அவரது மனைவியுமே அதைத்தான் வழிமொழிந்தனர்…


”அந்த தம்பி… கரெக்டா… 4.30 க்கு டான்னு வந்து நின்னுருவாரு தங்கச்சியக் இஸ்த்துக்கினு போறதுக்கு மணிக்கண்ணு… இனிக்குத்தான் இன்னும் காணோம்… இதை இஸ்கூல்ல இருந்து இஸ்துகிட்டு போய் வீட்டாண்ட விட்டுட்டு அதுக்கப்புறம் மறுபடியும் வேலைக்கு போகுமாம் அந்தத் தம்பி” கண்மணிக்கு தெரியாத விசயத்தை சொல்வது போல கணவனும் மனைவியும் சொல்ல


கண்மணி அவர்கள் சொன்னதை மட்டும் உள்வாங்கியபடி… வேறெதுவும் பேசாமல்… அவர்களுக்கு புன்சிரிப்பை மட்டும் கொடுத்தவள்…


“ரித்வி… எனக்கும் க்ளாஸ் 10 நிமிசத்தில் முடிந்துவிடும்… நான் கிளம்புகிறவரை உங்க அண்ணா வரலைனா… எங்கூடவே கிளம்பிரு” என்றவளிடம்…


“அண்ணா வந்திருவாங்க…” என்று ரித்வி சொல்லும் போதே… கண்மணியின் உரிமை கலந்த முறைப்பில்…


ரித்வி அவளையுமறியாமல் தலையை ஆட்டி வைக்க…


“உங்க அண்ணா வரலைனாதான் சொன்னேன்… சரியா… திங்க்ஸ் எடுத்துட்டு வருகிறேன்” என்று ஓய்வறைக்கு சென்றவள்… அலைபேசியை மேஜையில் வைத்து விட்டு… தனது பொருட்களை எல்லாம் சேகரித்து ஹேண்ட் பேகையும் மாட்டும் போது மீண்டும் அலைபேசி ஒலி அடிக்க… அப்போதுதான் அலைபேசியின் ஞாபகமே வர… சாவதனமாகவே எடுத்தாள் கண்மணி…


பதிவு செய்யப்படாத எண்ணில் இருந்து… ஏகப்பட்ட செய்திகளாக இருக்க… யோசனையுடன் அதை திறந்து பார்த்தவளுக்கு… புருவங்கள் அதிர்ச்சியில் சுருங்க… கண்மணிகளோ விரிந்தன… அதிர்ச்சியில்…


வேக வேகமாக வந்திருந்த அத்தனை புகைப்படங்களையும் பார்த்து முடித்தவளுக்கு… குப்பென்று வியர்த்தது… அதிலும் தனக்கு ஏன் இந்த புகைப்படங்களை அனுப்ப வேண்டும்…


புகைப்படங்கள் அனைத்திலும் ரிஷி மட்டுமே.. அதிலும்… மயக்க நிலையில் .. முகமெங்கும் ரத்த வெள்ளத்தில்… குற்றுயிரும் குலை உயிருமாக… தரையில் கிடந்த நிலையில் ரிஷி


கண்மணிக்கு படபடவென்று இதயம் அடித்துக் கொள்ள… அதைவிட… மூளை துரிதமாக யோசித்துக் கொண்டிருந்தது….


“மகிளாவுக்கு திருமணம் இன்னும் மூன்றே நாட்களில்... அப்படிப்பட்ட சூழ்நிலையில் ரிஷி இந்த நிலையில்” கண்மணி இப்படி யோசிக்கும் போதே


அவன் இப்படி இருக்கும் புகைப்படத்தை தனக்கு அனுப்பி இருக்கின்றார்கள் என்றால் என்ன காரணமாக இருக்கும்… யாராக இருக்கும் யோசித்தவளுக்கு…. கிடைத்த பதில்


“அர்ஜூன்”


புகைப்படத்தில் ரிஷியை அந்தக் கோலத்தில் பார்த்ததை விட… இதயம் இன்னும் வேகமாக அடித்துக் கொள்ள… முகத்தில் இப்போது வியர்வை முத்துக்கள்…


ரிஷிக்கு இப்படி ஆகி விட்டதென்று என்ற கவலையை விட… இதை அர்ஜூன் செய்திருக்கக் கூடாது என்ற கவலையே அவளை அதிகமாக ஆக்கிரமிக்க தொடங்கி இருக்க…. வேகமாக அந்த புகைப்படங்களை அனுப்பிய எண்ணுக்கே அழைக்க… இவளது அழைப்பு எடுக்கப்படவில்லை…


இப்போது அவளையுமறியாமல் அர்ஜூனின் வாட்சப் எண்ணிற்கு கை அழுந்தப் போக… இருந்தும் அவன் மீது இன்னும் நம்பிக்கை இருக்க… அதே நேரம் அவன் இருக்கக்கூடாது என்று மனம் உறுதி செய்து கொள்ள ஆசைப்பட்டது…. அதன் காரணமாக அர்ஜூன் எண்ணிற்கு பதிலாக அவளது பாட்டி வைதேகியின் எண்ணிற்கு அவளது அழைப்பு இப்போது மாறி இருக்க…


அழைப்பு இணைக்கப்பட்டவுடன் வேகவேகமாக உள்ளடக்கப்பட்ட ஆத்திரத்துடன் கண்மணி பேச ஆரம்பித்தாள்…


“பாட்டி… அர்ஜூன் கிட்ட ரிஷியைப் பற்றி நான் சொன்னதை சொன்னேளா…” நேரடியாகக் கேட்க…


வைதேகி இப்போது படபடத்த குரலில்…


“என்னடா குழந்தை.. ஏன் ஒரு மாதிரி பேசுற… ஏன் என்னாச்சு“


“ப்ச்ச் பாட்டி…. ரிஷி என்கிட்ட மேரேஜ் பண்ணக் கேட்டதை அர்ஜூன் கிட்ட சொன்னீங்களா” பற்களுக்கிடையே கடித்த வார்த்தைகளாக பாட்டியிடம் கடுப்பாக கேட்க“அன்னைக்கு நீ சொன்னதைக் கேட்டு எனக்குத் தாள முடியலை… அர்ஜூன்ட்ட எவ்வளவுக்கெவ்வளவு சீக்கிரம் முடியுமோ இந்தியா வந்து உன்னை மேரேஜ் பண்ணிக்கச் சொல்லி சொன்னேன்…”


சொன்னவர் இப்போது தயக்கத்துடன் தொடர்ந்தார்…”அதோட அவன்கிட்ட கிட்ட போன்ல எல்லாத்தையும் கொட்டிட்டேன்…”“ஏன் கண்மணி… உன்கிட்ட வந்து அர்ஜூன் சண்டை போட்டானா என்ன… அவன் இந்தியா வந்ததை உன்கிட்ட சொல்லக்கூடாதுனு நேக்கும் உங்க தாத்தாக்கும் மட்டும் ஆர்டர் போட்டுண்டு… உன்கிட்ட வந்து சண்டை போட்டுண்டு இருக்கானா” அடுத்த குண்டை அதிராமல் தூக்கிப் போட்டார் வைதேகி


“அர்ஜூன் இங்கதான் இருக்காரா…” மிதமிஞ்சிய அதிர்ச்சியோடு வாய்விட்டே சத்தமாகச் சொன்னவளாக அதற்கு மேல் பாட்டியிடம் பேசவில்லை.. அழைப்பைக் கட் செய்தவளுக்கு இப்போது திண்ணமாக விளங்கிவிட்டது… ரிஷியின் இந்த நிலைமைக்குக் காரணம் அர்ஜூன் என்பது…


தலையில் கை வைத்து அமர்ந்து விட்டாள் கண்மணி…


ஆனால் இப்படி அமர்ந்திருப்பது வேலைக்காகாது என்று தோன்ற… அடுத்த நொடியே தன்னைச் சுதாரித்தவளாக…

‘அடுத்து என்ன செய்வது… அடுத்து என்ன செய்வது... அர்ஜூன் செய்து கொண்டிருக்கும் இந்த முட்டாள் தனத்தை எப்படி தடுப்பது’ என்று யோசிக்க ஆரம்பித்தது அவள் மூளை…


முடிவில்....அர்ஜூனுக்கு போன் செய்ய… அவன் எடுத்தால் தானே… ஆனால் ஒரு செய்தி மட்டும் வந்தது…


“பிரின்சஸ்… ஆர் யூ ஹேப்பி நவ்…” என்ற தகவலைத் தாங்கியவாறு… மகிழ்ச்சியான ஸ்மைலிகளை அர்ஜூன் அனுப்பி வைக்க…


கண்மணி உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளாகி இருந்தாள் என்பதே உண்மை


“அர்ஜூன் பிக் மை கால்” என்று அடுத்த செய்தியை அனுப்பும் போதே வாட்ச்மேன் உள்ளே வர… வந்தவர் இவளைப் பார்த்து


”அந்தப் பொண்ணு ரித்வி இன்னும் அவங்க அண்ணனுக்காக காத்துட்டு இருக்கும்மா” என்று சொல்லி விட்டுப் போக…


அர்ஜூனிடம் போராடுவதை தற்காலிகமாக ஒத்தி வைத்துவிட்டு… வேக வேகமாக வெளியே வந்த கண்மணி… ரித்விகாவின் முன் நின்றாள்….


“ரித்வி… உங்க அண்ணாக்கு ஏதோ முக்கியமான வேலை வந்துருச்சாம்… உன்னைக் கூட்டிட்டு போகச் சொல்லி எனக்கு மெசெஜ் அனுப்பிட்டாரு… வெயிட் பண்ணு… நான் க்ளாஸை வைண்டப் பண்ணிட்டு வந்துறேன்” என்று அவள் முகம் பார்க்கக் கூட முடியாமல் அவசர அவசரமாக சொல்வது போல.. ரித்விகாவுக்கு சந்தேகம் வராமல் எப்படி சொல்ல முடியுமோ அப்படி சொல்லி வைக்க… ரித்விகாவும் பெரிதாக அவளிடம் விசாரிக்க வில்லை…


அதே நேரம் கண்மணி யோடு அவள் பைக்கில் பின்னால் அமர்ந்து பயணிக்கும் போது அண்ணனைப் பற்றி மீண்டும் கேட்க ஆரம்பிக்க… வண்டி ஓட்டும் போது பேசக் கூடாது என்று சொன்னவளாக அப்போதும் ரித்விகாவை திசைமாற்றினாள் கண்மணி…


அடுத்த அரை மணி நேரத்தில் கண்மணி இல்லத்தை அடைந்து ரித்விகாவை இறக்கி விட்டவள்… அர்ஜூனுக்கு செய்திகளையும்… அழைப்பையும் மாறி மாறி அனுப்பிக் கொண்டிருக்க…


அவனோ இவளின் அழைப்புகளையும்… குறுஞ்செய்திகளையும் அலட்சியப்படுத்திக் கொண்டே இருந்தான்..


ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தவளாக…


“அர்ஜூன்… ரிஷிக்கு மட்டும் ஏதாவது ஆச்சு… அதுக்கபுறம் நான் உங்க முகத்தில கூட விழிக்க மாட்டேன்”


பதில் இல்லை இப்போதும்…


”இதுக்கும் மேல எனக்கும் பொறுமை இல்லை… போலிஸ் கிட்ட கம்ப்ளெயிண்ட் பண்றதைத் தவிர எனக்கும் வேறு வழி இல்லை” என்று இவள் அனுப்பினாளோ இல்லையோ… அடுத்த நொடி… இவளுக்கு அவனிடமிருந்து அழைப்பு வந்திருக்க..


பட்டென்று எடுத்தவளிடம்..


”வரே வாவ்… ஏன்டி… நீ கஷ்டப்பட்டது தாங்காமல்… அங்கேயிருந்து ஓடி வந்து அதுக்கு காரணமானவனுக்கு தண்டனை கொடுத்தால் என்னையே நீ போலிஸ்கிட்ட கம்ப்ளெயிண்ட் பண்ணுவியா… தாராளமா கூட்டிட்டு வா… இந்தப் பொறுக்கிய அள்ளிட்டு போக வசதியா இருக்கும்…” என்றவனின் எகத்தாளமான பேச்சில்…


“அர்ஜூன்… வார்த்தைகளைப் பார்த்துப் பேசுங்க… ரெண்டாவது நான் கஷ்டப்பட்டேன்னு எப்போ சொன்னேன்.. நீங்க தப்பா புரிஞ்சுண்டு…” என்ற போதே…


”வாயை மூடுறியாடி… நீ முதல்ல கிளம்பி வா.. உன் அட்வைஸ் ஆணிலாம் இங்க வந்து பிடுங்கு… என்று அவன் கெஸ்ட் ஹவுஸ் முகவரியையும் அனுப்ப… அதற்கு மேல் பேசாமல் வைத்து விட்டு மரத்தடியிலேயே செயலற்று அமர்ந்திருக்க… ரித்விகா இப்போது அவள் முன் நின்றவள்…


“அக்கா… நானே டீ போட்டேன்… நல்லாருக்கா” என்று அவள் முன் நீட்டியவளைப் பார்த்தவளுக்கு கண் கலங்கினாலும் …. அதை மறைத்துப் புன்னகை காட்ட…


“அம்மாக்கு நானே ஃபிஷியோ பண்ணிவிட்டேன்.. அக்காவையும் நானே கவனிச்சுட்டென்… வாசல் தெளித்து கோலம் போட்டுட்டேன்… குக் பண்ண மட்டும் கத்துகிட்டா… நானும் உங்களை மாதிரி ஆகிருவேன் தானே… நான் பெரிய பொண்ணாகிட்டேன் தானே… அண்ணாக்கு கொஞ்சம் பார்டன் குறையும் தானே… ” என்று சந்தோஷமாகச் சொன்ன ரித்விகாவின் கண்கள் இப்போது கலங்கி இருக்க…


“ரித்விம்மா…” என்றபடி சட்டென்று அணைத்துக் கொண்டவளாக… உணர்ச்சி வசப்பட்டவள்…


“ரித்வி… அக்கா இப்போ அவசர வேலையா வெளியில கிளம்புகிறேன்… நைட் எப்போ வருவேன்னு… சரியா சொல்ல முடியாது… சட்னி ஃப்ரிட்ஜ்ல இருக்கு… தோசை வார்க்க தெரியும் தானே… “


என்ற போதே… அவள் புரியாமல் தலை ஆட்ட…


“ஆண்டிக்கு டேப்லட்… அக்காகிட்ட கேட்டு கொடு… அக்காவை கஷ்டப்படுத்தாத… அவங்க ரெஸ்ட் எடுக்கட்டும்” என்று அடுத்தடுத்து ரித்விகாவுக்கான பணிகளை இட்டவள்… உடனடியாக தனது வாகனத்தை எடுத்துக் கொண்டு அர்ஜூன் சொன்ன முகவரியை நோக்கி பயணப்பட்டவளுக்கு…புகைப்படத்தில் பார்த்த ரிஷியின் முகம் அவள் நெஞ்சை வாள் கொண்டு அறுக்க… மனம் பின்னோக்கி பயணபட்டது….

----


மகிளா விசயமாக இருவருக்கும் பிரச்சனை வந்த அடுத்த நாள் கண்மணி ரிஷியைப் பார்த்து வீட்டு முன்பணத்தை கொடுக்க வர நினைத்தாளோ இல்லையோ அதற்கு முன்னதாகவே ரிஷி சாவியுடன் வந்து நின்றிருந்தான் கண்மணியின் வீட்டு முன்னே…


ரித்விகா கண்மணி வீட்டில் இன்னும் உறக்கத்தில் தான் இருந்தாள்… கண்மணியும் அவனிடம் பேச்சு வார்த்தையில் எல்லாம் ஈடுபடவில்லை… அதே நேரம் ரித்விகா இன்னும் தூங்குகிறாள் என்பதை மட்டும் சொல்ல எத்தனிக்க… அதற்கு முன்னேயே ரிஷி… மாலை வந்து தன் தங்கையை அழைத்துச் செல்வதாக சட்டென்று சொன்னவன்… அதற்கு மேல் இருவருக்கும் பேசுவதற்கு ஒன்றுமில்லை என்பது போல எங்கோ பார்த்தபடி முகத்தை வேறு திசையில் திருப்பிக் கொள்ள…


’இவ்வளவு ரோசமுள்ளவன்… அவன் தங்கையை மட்டும் மாலை வரை பார்த்துக்கொள்ள நான் வேண்டுமா…’ என்று கண்மணிக்குத் தோன்ற…


அதே நேரம் அதைச் சொல்லிக் காட்டவும் கண்மணிக்கு வாய் வரவில்லை… இவர்கள் இருவருக்குமான நீயா நானா என்ற போட்டியில் ரித்விகாவை ஏனோ அவளுக்கு கஷ்டப்படுத்த இயலவில்லை என்பதே உண்மை… அதனால் தப்பித்தான் ரிஷி கண்மணியிடமிருந்து….


இவளும் அவனோடு வழக்காடாமல் ... உள்ளே போய்… பணத்தை எடுத்துக் கொண்டு வந்தவள்…. அதை மீண்டும் சரிபார்த்தபடி… அவன் கைகளில் பணத்தைக் கொடுத்து விட்டு சாவியை வாங்கியவள்… பணத்தைச் சரிபார்க்க சொல்ல… அவனோ அதெல்லாம் தேவையில்லை என்ற தொணியில்… பணத்தை எண்ணாமலேயே பேண்ட் பாக்கெட்டில் வைத்துவிட்டு திரும்ப… அதே நேரம் நட்ராஜ் கண்மணி இல்ல பிரதான வாயிலை திறந்தபடி உள்ளே நுழைந்தவர்… ரிஷி மற்றும் மகளைக் கண்டதால் அவர்களைப் பார்த்தவாறே மலர்ந்த புன்னகையுடன் உள்ளே வர… ரிஷி இப்போது போகாமல் நிதானித்தான்... நட்ராஜைப் பார்த்ததால்…


கண்மணியும் உள்ளே போகாமல் அங்கேயே நின்று விட… இருவரின் அருகில் வந்த போதுதான் நட்ராஜுக்கே நிலவரம் அங்கு சரியில்லை என்று புரிந்தது… இருவரின் முகமும் அப்பட்டமாக அதைக் காண்பிக்க… நட்ராஜ் கேள்வியுடன் மகளைப் பார்க்க… கண்மணி சொல்ல வாயெடுக்கும்முன்… ரிஷி…


“சார்… நான் வீட்டைக் காலி பண்றேன்… அட்வான்ஸ் வாங்கிட்டேன்… மேடம்கிட்ட கீ கொடுத்துட்டேன்… “ என்று படபடவென்று சொன்னவன்…


“இதுக்கும் நான் உங்ககிட்ட வேலை பார்க்கிறதுக்கும் சம்பந்தம் இல்லை.. இல்ல மேடம் டெஷிசன் தான் அங்கேயும்னா… கேட்டு சொல்லுங்க… வீடு தேடுகிறதோட வேலையும் தேட ஆரம்பிக்க வேண்டும்” என்று நிறுத்தாமல் பேச


“இருப்பா இருப்பா…. என்ன ஆச்சு… ஏன் இத்தனை படபடப்பு… பேசலாம்” என்று ரிஷியை ஆசுவாசப்படுத்த… முதன் முதலாக கண்மணி தன் தந்தையை நம்ப முடியாத பாவனையில் வெறித்தாள் கண்மணி என்றே சொல்ல வேண்டும்… தன் வார்த்தைக்கு மறு வார்த்தை… மறு வார்த்தை என்ன… அது என்ன என்று கூட கேட்காமல் என்ன செய்தாலும் தன் மகள் செய்தது என்றால் சரியாகத்தான் இருக்கும் என்ற அவரின் நடவடிக்கை சற்று மாறினாற் போல இருக்க…


அதே நேரம் நட்ராஜ்… கண்மணியைப் பார்த்து என்ன நடந்ததென்று விசாரிக்க ஆரம்பிக்க… கண்மணியும் முந்தைய தினம் நடந்த அனைத்தையும் சொன்னவள்… அன்றைய தின அர்த்த ராத்திரியில் இருவரும் போட்ட சண்டையை மட்டும் சொல்லாமல் விட… ரிஷியோ அதைக் கூட விட்டு வைக்கவில்லை… கண்மணி சொல்லாமல் விட்டதையும் இவன் சொல்லி முடிக்க…


நட்ராஜால் ரிஷியின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிந்தது என்பதே உண்மை… அதிலும் தன் மகள் மறைக்க நினைத்த விசயத்தைக் கூட ரிஷி மறைக்காமல் சொன்னது இன்னமுமே ரிஷியின் புறம் அவரை ஈர்த்தது என்றே சொல்ல வேண்டும்….


ஆக நட்ராஜ் கண்களுக்கு வளர்ந்த குழந்தைகளாகவே இருவரும் தோன்றினர்… ஒருவருக்கொருவர் பார்க்காமல் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்த பாவனையில்


விளையாடிக் கொண்டிருந்த சிறு குழந்தைகள் சண்டை போட்டுக் கொண்டு பெற்றோர்களிடம் தங்கள் நியாயங்களை சொல்வது போலத்தான் அவருக்குத் தோன்ற…


அனைத்தையும் இருவர் வாயிலாகவும் கேட்டறிந்த நட்ராஜ் வேறெதுவும் கேட்கவில்லை…


“டாக்டர் கிட்ட போகலாமா ரிஷி… செப்டிக் ஆகிறப் போகுது” ரிஷியின் வலது கையை பற்றியவர்.. அதை ஆராய்ந்தபடியே கேட்க… ரிஷியின் கண்கள் அவனையுமறியாமல் நட்ராஜின் அக்கறையில் ஈரம் கோர்க்க… இருந்தும் சமாளித்தவனாக…


“அத்… அதெல்லாம் ஒண்ணுமில்லை சார்…” எனும் போதே….


“அடிபட்டிருக்கிறதை பார்க்காமல்… அப்படி என்ன கோபம்… அது சின்ன பொண்ணு… அது சொன்னுச்சுனு… அதுகூட போய்ப் போட்டி போட்டுகிட்டு… சாவியை எடுத்துக்கிட்டு வந்து நிக்கனுமா… “ என்றவர் மகளின் முகத்தைப் பார்க்கமலேயே… சொல்ல…


கண்மணி இமைக்க மறந்து கோபத்துடன் கூடிய அதிர்ச்சியில் தன் தந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்…


“கண்மணி சாவியைக் கொடும்மா… நீ ஏதோ கோபத்தில் சொன்னதை எல்லாம் மனசுல வச்சுகிட்டு… தம்பி வந்துருச்சு… “ எனும் போதே கண்மணி


“அப்பா” என்று வார்த்தைகள் வெளிவராமல் பல்லைக் கடித்தாள்… தன் தந்தையின் நடவடிக்கைகளில்


நேற்று அவன் நடந்து கொண்டதென்ன… அவனின் ஆக்ரோசம் என்ன… அது எல்லாம் அறியாமல் இவர் இப்படி பேசுகிறார் என்று தோன்றும் போதே… நட்ராஜ் வீட்டினுள்ளே சென்று கண்மணியை அழைத்தவர்…


“சாரிடாம்மா… ரிஷின்னு வரும்போது… எனக்கு வழக்கம் போல நீ சொல்றதை மட்டும் கேட்கனும்னு தோணலை… அவன் நிலைமை தெரிஞ்ச நீயே இப்படி நடக்கிறதை நினைத்தால் தான் எனக்கு வருத்தமா இருக்கு… உன்கிட்ட இதை எதிர்பார்க்கலைமா… ” என்றவர்…


“சாவியைக் கொடுத்துட்டு… கொடுத்த அட்வான்ஸை திரும்ப வாங்கிட்டு வா” என்று முடித்தபோது… அவரின் வார்த்தைகளில் அவ்வளவு அழுத்தம்… கண்மணி இதுவரை அவரிடம் பார்க்காத அழுத்தம்…மறுத்து பேச முடியாதவாறு இருந்தது அவரின் முகம்…


கண்மணி உதட்டை அழுந்த கடித்தபடி… கோபத்தை தனக்குள் அடக்கியவள்… தனக்குள் முடிவெடுத்தவளாக…


“நீங்க சொல்றீங்கனுதான்… அவருக்கு இந்த சான்ஸ் கொடுக்கிறேன்… இது மாதிரி இன்னொரு முறை நடந்தால் நீங்க சொன்னால் கூட கேட்க மாட்டேன்” என்று மட்டும் சொன்னவளுக்கு… தந்தையின் மேல் பெரிதாகக் கோபம் வரவில்லை… ரிஷி அந்தளவுக்கு அவரின் மனதில் இடம் பிடித்திருக்கின்றான் என்பது அவளுக்கும் புரிந்தது… அதில் ஆச்சரியமும் இல்லை… காரணம் இவளுக்குமே ரிஷியைப் பிடிக்கும் என்பதே உண்மை… அதே நேரம் இவளின் கோபம் எல்லாம் அவன் நேற்று நடந்து கொண்ட முறைக்காக மட்டுமல்ல… மகிளாவின் மேல் இவளுக்கு எழுந்த பரிதாப உணர்வின் உச்சகட்டம் என்பதும் புரியாமல் இல்லை…


யோசித்தபடியே வெளியே வந்தவள் ரிஷியைப் பார்க்க… அங்கு அவன் முகத்திலோ அப்படி ஒரு மலர்ச்சி…கூடவே இவளை நக்கலாக பார்த்த பார்வையோடும்….


உண்மையிலேயே சொல்லப் போனால்… ரிஷி அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தான் என்றே சொல்ல வேண்டும்… காரணம் நட்ராஜிடம் இருந்து வந்த தனக்கான வார்த்தைகள் என்பதை சொல்ல வேண்டுமா என்ன…


தன்னையும் நினைக்க… தன்னை எல்லா சூழ்நிலையிலும் புரிந்து கொண்டு ஆதரவாகப் பேச ஒரு ஜீவன்.. ஒரே ஜீவன்… தன் முதலாளி… அதிலும் மகள் வார்த்தைக்கு மறுவார்த்தை பேசாதவர் தனக்காக பேசுகிறார் எனும் போது… அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்று சொல்ல வேண்டுமா என்ன…


கரை கடந்த மகிழ்ச்சி… வீட்டுக்குள் தந்தையோடு நடந்த பேச்சு வார்த்தையில் தோல்வி பெற்று தன் முன் வந்து நிற்கும் கண்மணியையும் விட்டு வைக்க வில்லை…


கோபத்தோடு அவன் முன் வந்து நின்றவள்… நிமிர்ந்து பார்க்க… அவன் வெற்றிப் பார்வையில்… மீசைக்கடியில் இதழோரம் கடித்து மறைத்த கன்னக் குழியோடு கூடிய குறும்புப் புன்னகையில்… ஏனோ முதலில் இருந்த கோபம் எல்லாம் கண்மணிக்கு இப்போது இல்லை என்றே சொல்ல வேண்டும்… இருந்தும் தான் இன்னும் கோபமாக இருப்பது போல முகத்தை தூக்கி வைத்தபடியே அவன் தன் புறம் நீட்டிய உள்ளங்கையின் மேல் சாவியைச் சற்று தூக்கிப் பிடித்து வேகமாக பட்டென்று போட..


இப்போது ’ஆ’ வென்று கத்தியபடி கைகளை உதறிக் கொண்டிருந்தான் ரிஷி… கண்மணியை முறைத்தபடியே….


காரணம்… மரியாதைக்காக இடது கையை நீட்டாமல் கைகளில் கட்டு போடப்பட்டிருந்தாலும்…. காயம் பட்ட வலது கையை ரிஷி நீட்ட… கண்மணி மிச்சம் மீதி இருந்த இருந்த கோபத்தை அதில் காட்டி… தன் மொத்தக் கோபத்தையும் தீர்த்துக் கொள்ள…


ரிஷி… அவளை முறைத்துக் கொண்டே…கையை உதறியபடியே… பேண்ட் பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து கண்மணியிடம் கொடுத்தவன்…. இன்னும் நடராஜ் தனக்கு ஆதரவாக பேசியதில் இருந்து என்பதே உண்மை


அந்த மகிழ்ச்சியில் கண்மணி கைகளுக்கு அவள் கொடுத்த பணமே சென்றவுடன்…


“நீ கொடுத்ததை திருப்பிக் கொடுத்தேன் எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி கொண்டாட்டம் டம் வேணாம் தாம் தூம்…”


கவனமாக ’என்’ என்ற வார்த்தைகளை நீக்கி விட்டு அவளைச் சீண்டும் விதத்தில் பாட ஆரம்பிக்க… கண்மணி முறைப்புடன் உள்ளே போக… இவனும் விடாமல்… உற்சாகமாகப் பாட

“இட்டதிங்கு சட்டம் என்றுதான் மானே எண்ணுவது இன்று இனிக்கும்”


இப்போது கண்மணி முறைப்புடன் அவனை நோக்கி வர… சட்டென்று பாடல் வரிகளை நிறுத்தியவன்… வேகமாக


“பை கண்மணி…. அது என்னமோ தெரியலை… மறுபடியும் மறுபடியும் அதே புள்ளியில வந்து நின்றோமே… யோசிக்க வேண்டிய விசயம் தான்… “ என்றவன் சல்யூட் சொல்வது போல இரண்டு விரல்களை நெற்றி பொட்டில் வைத்தபடி…


“வரட்ட்ட்டா… ஹவுஸ் ஓனர் மேடம்… க…. இல்லல்ல்ல சொர்ணாக்கா…” என்றவன்… தனக்கிருந்த உற்சாகத்தில்…. அவள் முகத்தில் இருந்த தீவிர பாவம் கண்டும் கூட அடங்காமல்


“அப்பாகிட்ட கம்ப்ளெயிண்ட் பண்ண போறிங்களா மணி கண்ணு…. ப்ச்ச்… நட்ராஜ் சார்…” என்று மீண்டும் அவள் அருகே வந்தவனாக…


“இப்போ என் பக்கம்… என் முதலாளி”


” உன் மிரட்டல் உருட்டல் எல்லாம் இனி செல்லாது” என்றவனின் முகத்தில் அத்தனை சந்தோசம்…


தன் முன் சந்தோச உற்சாகத்தில் துள்ளளாக பேசிக் கொண்டிருந்தவனைப் பார்த்து கண்மணி தன் தீவிர பாவம் எல்லாம் தொலைத்து… ஒரு நொடி அவளே ஸ்தம்பித்து நின்று விட்டாள்...


எப்படிப்பட்டவனை காலம் என்னும் அரக்கன்… தன் கைகளுக்குள் அடக்கி சுருட்டி வைத்து பந்தாட்டிக் கொண்டிருக்கின்றது… நிதர்சனம் உணர்ந்தவளாக யோசித்தபடியே கோபம் மறந்து கைகளைக் கட்டியபடி அவனையே பார்த்துக் கொண்டிருக்க… ரிஷி… இப்போது அவளை விட்டு பைக் அருகில் சென்றான்…

கொஞ்சம் துள்ளல்… கொஞ்சம் வேகம் என கைகளில் வைத்திருந்த பைக் கீயைத்தூக்கிப் போட்டபடி முன் உச்சிக் கேசம் பறக்க அதே வேகத்தில் சென்றவன்… ஸ்டைலாக அதில் ஏறியும் அமர்ந்து தன் முகத்தைப் பார்த்து… தலை முடியைக் கோதியபடி இருந்தவனைப் பார்த்தபடியே நின்றிருந்தவளைப் பார்த்து திரும்பிய ரிஷி… சற்று முன் இருந்த அத்தனை முக பாவனையையும் மாற்றி…. இப்போது கனிவுடன் கை ஆட்ட… கண்மணி புருவம் சுருக்கினாள்… இவ்வளவு பாசமாக தனக்கா… என்று யோசிக்கும் போதே…


“பை ண்ணா…” ரித்விகா குரல் அவளருகே ஒலிக்க… கண்மணி தனக்குள்ளாக அசடு வழிந்தவளாக…


“ப்ப்பூபூ….” என்று பெருமூச்சு விட்டவளாக தலையைச் சிலுப்பியவள்….


“கண்மணி… நல்லவேளை… சுதாரிச்ச… இல்லை… அவன் உனக்குத்தான் கை காட்டினான்னு… நீ பை சொல்ல கை தூக்கியிருப்ப… உன் இமேஜ் மொத்தமா டேமேஜ் ஆகியிருக்கும்” அவளது மனசாட்சி கூட அவளிட பதவிசாக எடுத்துச் சொல்ல… கோபம் எல்லாம் இல்லாமல் அழகாக தனக்குள் சிரித்துக் கொண்டவள்…. தன் தலையில் செல்லமாக தானே தட்டியபடியே… வழக்கத்துக்கும் மீறிய மலர்ச்சியுடன்…. ரித்விகாவுடன் வீட்டுக்குள் நுழைந்தாள் கண்மணி…


அவள் அப்படி உள்ளே போக… ரிஷியோ வெகுநாட்களுக்குப் பிறகு… மிதமிஞ்சிய சந்தோஷத்தில் மித மிஞ்சிய வேகத்தில் கண்மணி இல்லத்தை விட்டு தன் இருசக்கர வாகனத்தில் வெளியேறி இருந்தான்… அவன் இயல்பான வழக்கமான உற்சாகத் துள்ளளோடு….


எவ்வளவுதான் ரிஷி தனக்குள் தன் இயல்பை திருப்பிக் கொண்டு வர நினைத்தாலும்… அதற்கு பல மடங்காக காலம் திருப்பி வைத்திருக்கும் என்பதையும் உணர்ந்திருக்க வேண்டுமோ


ஆம் வழக்கம் போல மருத்துவமனைக்குச் சென்று தாயைப் பார்க்கச் சென்றவனுக்கு மருத்துவர்கள் குழு சொன்ன செய்தி அவனை மீண்டும் கூட்டுக்குள் அடக்கியது….

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி -27-2

அத்தியாயம் 27-2: அர்ஜூனுக்கும் கண்மணி நாராயண குருக்கள் என அனைவருக்குமே நட்ராஜின் வார்த்தைகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன… “என் பொண்ணுக்கு என்ன தேவைனு எனக்குத் தெரியும்… அது எங்க கிடைக்கும்னு எனக்கு

கண்மணி... என் கண்ணின் மணி -27-1

அத்தியாயம் 27-1: தன்னருகில் சிலையாக நின்றிருந்தவளை அர்ஜூன் இன்னும் அருகே அழைத்து தோளில் கை போட்டபடி… கண்மணியைப் பார்க்க… அவளுடைய பார்வையோ ரிஷியின்புறம் தரை தாழ்ந்திருந்தது… அர்ஜூனின் மேல் கட்டுக்கடங்க

கண்மணி... என் கண்ணின் மணி -26-3

அத்தியாயம் 26-3 கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகி இருக்க… கண்மணிதான் ரிஷி வீட்டின் முழுப்பொறுப்பையும் ஏற்றிருந்தாள்… பள்ளிக்கும் விடுமுறை போட்டு விட்டாள்… ரித்விகாவை பள்ளிக்கு அனுப்புவது… வீட்டு வேலை… சமையல்…

Developed by Varuni Vijay

© 2020 by PraveenaNovels

  • Grey Facebook Icon