கண்மணி... என் கண்ணின் மணி-25-2

அத்தியாயம் 25-2:


மெயின் கேட்டை வெறித்தபடியேதான் அமர்ந்திருந்தாள் கண்மணி உச்சக்கட்ட கோபத்தோடு…. ரிஷி என்பவன் மேல் இருந்த ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத அனுதாப உணர்வு முற்றிலுமாக போயிருந்தது அவளுக்கு… வாழ்க்கையை எதிர் நோக்க தெரியாத கோழையாக… வாழ்க்கையின் வலிகளை தாங்கிக் கொள்ள முடியாத முதுகெலும்பு இல்லாதவனாக…. சுயநலக்காரனாக… மட்டுமே ரிஷி அவள் கண்களுக்கு இப்போது தெரிந்தான்


மணி நள்ளிரவு இரண்டாகியிருக்க… ரிஷி இன்னும் வரவில்லை…


ரிஷியிடம் பேச வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக…. இரவு உடைக்குக் கூட மாறாமல்… சல்வாரில் தான் இருந்தாள் கண்மணி…


எப்படியும் அவன் தங்கையை அழைக்க வந்துதானே ஆக வேண்டும்.. அப்போது தான் கேட்கும் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்… மகிளாவால் கேட்க முடியவில்லை பாவம் அவள்.. ஆனால் தான் கேட்டே ஆக வேண்டும்… என்ற கோபம் மற்றும் பிடிவாத உணர்வில்


கண்மணியால் தாங்கவே முடியவில்லை…. அவள் கண்முன் ஒரு பெண்ணுக்கு நடந்த அவமானத்தை….


காதலன் என்ற போர்வையில் ரிஷியும்… தந்தை என்ற பெயரில் நீலகண்டனும்… மகிளாவின் உணர்வுகளை ஒட்டவே வைக்க முடியாத உடைந்த கண்ணாடிச் சில்லுகளாக சிதறடித்து விட்டிருந்தனர்…


மகளிர் காவலர் வந்த போது நீலகண்டன் கண்களில் கூட பயம் இருக்க ரிஷியின் கண்களில் கிஞ்சித்தும் பயம் இல்லை… தைரியமாகவே எதிர்கொண்டான்…


விரும்பினேன்தான்… எப்போதோ அவளிடமிருந்தும் விலகியும் விட்டேன் என்றும்… ஏற்கனவே எல்லாவற்றையும் எதிர்பார்த்து வைத்திருந்திருப்பான் போல… எந்தக் கேள்வி கேட்டாலும்… பதில் கொடுக்க தயங்கவே இல்லை… நீலகண்டனோடு சேர்ந்தே காவலரிடம் பேசினான் ரிஷி… மகிளாவுக்காக அவள் வாழ்க்கைக்காக… இருவருக்குமான மணவாழ்க்கை சரிவராது என்று தான் விலகிய காரணத்தைச் சொல்லி விட்டு… இப்போது இருக்கும் தனது நிலையையும்… தன் அன்னை நிலையையும் விளக்க…மகிளாவும் போராடினாள் தன் காதலுக்காக… கண்மணியும் போராடினாள் மகிளாவுக்காக…


”இன்னைக்கே உங்களை மேரேஜ் பண்ணச் சொல்லலையே ரிஷி… ஜஸ்ட் அவங்களுக்காக நீங்க இருக்கீங்கன்ற நம்பிக்கையைக் கொடுங்கன்னு சொல்கிறேன்” என்று எதிர்வாதம் செய்ய…


ரிஷி… ஒரே வாக்கியத்தில் முடித்து விட்டான்…


“இவர் பொண்ணை என்னால வாழ வைக்க முடியாது… இன்னைக்கு நீங்க எல்லாரும் இருப்பீங்க… நாளைக்கு என்னோட வாழ்கிற வாழ்க்கைல இவ கஷ்டத்தை அனுபவிக்கும் போது… நாட்டாமை பண்ற நீங்கள்ளாம் எங்களை வாழ வைப்பீங்களா… அவ அப்பா மட்டும்தான் இருப்பார்… புரிஞ்சுட்டு விலகிட்டேன்னு… நீங்க அந்தப் பொண்ணை அவரோட அனுப்பி வச்சுருங்க மேடம்… அந்தப் பொண்ணு நல்லா இருக்கனும்னா… அவளுக்கு புத்தி சொல்லி அனுப்பி வைங்க…” என்றவன்…


கண்மணியை நோக்கி…


“என்ன…. எனக்கு எதிரா... வேற ஏதாவது உன் நீதி தராசுல எக்ஸ்ட்ரா போடனுமா…” என்று குரோதத்துடன் கேட்டவன்… மகிளாவின் புறம் திரும்பினான்…


“உனக்கும் தான்… உங்கப்பா பார்த்து வச்சிருக்கிற மாப்பிள்ளை… ரொம்ப நல்லவர்… அவரையே மேரேஜ் பண்ணிக்க… காதலிச்சவங்க எல்லாம் சேர்றதுதான் நீதி நியாயம்னா இங்க அத்தனையும் சூனியம் தான் ஆகி இருக்கும்… புரிஞ்சு நடந்துக்கோ… “ என்றவனை அமைதியாக இருக்கச் சொன்ன ஆய்வாளர்.. மகிளாவிடமும் ரிஷியிடமும் தனித்தனியாக விசாரிக்க… முடிவில் அவர் தெரிந்து கொண்டது இதுதான்…


ரிஷி…. மகிளா நல் வாழ்க்கைக்காக மட்டுமே இவ்வாறு நடந்து கொள்கிறான் என்பதையும்… அதே நேரம் மகிளாவை வேறு எந்த முறையிலும் அவன் ஏமாற்றிவிட்டு தப்பிக்க வில்லை என்பதையும் புரிந்து கொள்ள… அதே நேரம் நீலகண்டனும் அவர் பங்கு வாதங்களை தகப்பனாராக வைக்க… ரிஷி நீலகண்டன் பக்கம் சாய்ந்தது ஆய்வாளரின் தீர்ப்பு…


முடிவு… மகிளாவுக்கு ஆயிரம் அறிவுரைகள் சொல்லப்பட்டு நீலகண்டனோடு அனுப்பி வைக்கப் பட்டிருந்தாள்… உயிருள்ள ஜடமாக…


---


கண்மணியின் நீண்ட காத்திருப்புக்கு பிறகு… கிட்டத்தட்ட மூன்று மணி அளவில் வந்த ரிஷி வழக்கம் போல பைக்கில் இருந்தபடியே கேட்டைத் தள்ள… கதவு திறக்க வில்லை… புருவம் சுளிப்போடு பார்க்க… பெரிய இரும்புச் சங்கிலியோடு கேட் பூட்டப்பட்டிருக்க… நெற்றி சுருக்கமே அவன் யோசிக்கின்றான் என்று சொன்னது…


எப்போதுமே கேட் பூட்டப்பட்டிருக்காதே… எத்தனையோ முறை நேரம் கெட்ட நேரத்தில் வந்திருக்கின்றானே… அப்போதெல்லாம் திறந்தே இருக்கும் கதவுக்கு இன்று என்ன ஆனது யோசித்துக் கொண்டிருக்கும் போதே… கண்மணி அவள் வீட்டில் இருந்து வெளியே வந்தவள்… மெயின் கேட்டையும் திறந்து விட…


இருவருமே ஒருவர் மேல் ஒருவர் கோபமாக இருக்க… இருவரும் ஒருவரை ஒருவர் நேர்கோட்டில் சந்தித்த பார்வையிலும் நெருப்பின் பொறிதான் பறந்தது…


அதே நேரம்… ரிஷி தன் பக்க நியாயத்தையோ… இல்லை அதிகப்பிரசிங்கித் தனமாக அவள் தன் பிரச்சனையில் குறுக்கிட்டதையோ மீண்டும் விவாதிக்க தயாராக இல்லை என்றே சொல்ல வேண்டும்…


அதனால் அவளை முறைப்போடேயே கடந்து சென்றவன்… வழக்கம் போல அறைக்கதவை திறந்து வைத்து விட்டு… ரித்விகாவை அழைத்து வரலாம் என்று தன் பைக்கை நிறுத்திவிட்டு படிகளில் தாவ….


“எனக்கு உங்ககிட்ட பேசனும்…” கண்மணி உரத்துச் சொல்ல…


ஏறியவன்… நிதானித்தான்


“என்ன விசயம்…” – ரிஷி அழுத்தமாக கேட்டான் திரும்பாமலேயே


”இப்போ இல்லை மார்னிங்”- கண்மணி அதே அழுத்ததோடு சொல்ல


கண்மணியின் புறம் திரும்பியவனாக… கூர்பார்வை பார்த்தவன்


“அது மகிளா விசயம்னா… இப்போ இல்லை எப்போதுமே எனக்கு உன்கிட்ட பேச விருப்பம் இல்லை… அதைத் தவிர வேறெதுனாலும்… இப்போதே நான் ரெடி” இப்போது அவளை நோக்கி கீழே படிகளில் இறங்க எத்தனிக்க


இவளும் கைகளைக் கட்டிக்கொண்டபடி


“மகிளா விசயம் தான் நான் பேசனும்… “ அழுத்தமாக ஆணித்தரமாக தன் கருத்தை எடுத்து வைத்து ரிஷியைப் பார்க்க


”உன்னிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை” எள்ளல் பார்வை பார்வை பார்த்தவனாக… அடுத்த வார்த்தை பேசாமல்… மீண்டும் மேலே ஏற ஆரம்பிக்க…


”உங்களை ஒரு பொண்ணு நம்பி வருதுன்னா… அந்தப் பொண்ணு உங்க மேல அவ்வளவு நம்பிக்கை வைத்துதானே ரிஷி… மகிளா உங்க மேல வச்சிருந்த நம்பிக்கைல ஒரு பெர்சண்ட் கூட நம்பிக்கை நீங்க ஏன் உங்க மேல நம்பிக்கை வைக்கலை…”


ரிஷி இப்போதும் நிற்கவில்லை… மாறாக அவனின் வேகம் அதிகரிக்க…


“கேள்விக்கே பயந்து ஓடுகிற ” என்றவள் நிதானித்தவளாக


”கோழை… உங்ககிட்ட பேசி பிரயோஜனமில்லை ….” என்று முடிக்கவில்லை… ரிஷி நின்று விட்டான்… நெற்றிப் பொட்டில் மொத்த கோபமும் முடிச்சுட்டு இருக்க… கண்களை மூடி உஷ்ணப் பெருமூச்சுகளை விட்டு தன்னை அடக்கியவன்… இறங்கியிருந்தான்… அதுவும் ஒவ்வொரு படியாக நிறுத்தி நிதானமாக… வந்தவன் கண்மணியின் அருகில் போய் நிற்காமல் நிறுத்தியிருந்த பைக்கின் மேல் ஏறி அமர்ந்தவனாக…


மணிக்கட்டை இறுகப்பிடித்திருந்த கைப்பட்டன்களை விடுவித்தவன