கண்மணி... என் கண்ணின் மணி-25-1

அத்தியாயம் 25:


/*கானல் நீரால் தீராத தாகம்

கங்கை நீரால் தீர்ந்ததடி

நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை

நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை


கேளடி கண்மணி பாடகன் சங்கதி

நீ இதைக் கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி*/


’அத்தியாயம் 26’: இந்த ஒரு வார்த்தையே வெகுநேரமாக வெண் திரையை ஆட்சி செய்து கொண்டிருந்தது

கண்மணியின் கண்கள் கணினித்திரையில் இருந்தாலும்… விரல்கள் வெகுநேரமாக விசைப்பலகையில் உறவாடிக் கொண்டிருந்தாலும்… அந்த அத்தியாயத்திற்கான காட்சி அமைப்புகள் அவளுக்குள் சுழன்று கொண்டிருந்தாலும்… ஏனோ அழுத்தமான வார்த்தைகள் எண்ணங்களில் இருந்து வெளிவரவில்லை… அதையும் மீறி விரல் வழியாக வந்த வார்த்தைகளுக்கும் மூளை அதற்கான அனுமதி அளிக்காமல் இருக்க… மூளையும் எண்ணமும் சமன்படாமல் போட்டிப் போட்டுக் கொண்டிருந்ததால் வெண் திரை வெற்றுத் திரையாக மட்டுமே காட்சி அளித்தது…


கட்டிலில் சாய்ந்து அமர்ந்தபடி எழுதுவதற்கு ஏதுவாக வைக்கப்பட்டிருந்த மேசையில் இருந்த வைக்கப்பட்டிருந்த கணினியை வெறித்தபடி கதாசிரியராக அமர்ந்திருந்த நம் நாயகி தடுமாறிக் கொண்டிருந்த காட்சி அமைப்பு இதுதான்…


’நாயகன்… மட்டுமே போதுமென்று… தாய், தந்தை, செல்வம்… தனக்கான தகுதி.. அனைத்தையும் துறந்து நாயகனோடு செல்லும் காட்சி…’


‘எப்படி யோசித்தாலும் அவளுக்கு அந்தக் காட்சியை உயிர்ப்போடு எழுத முடியவில்லை… ஏனென்றும் தெரியவில்லை… அதெப்படி… அப்படி எல்லாம் ஒரு பெண் இருக்க முடியும் என்று கண்மணியின் மூளை கண்மணியாக மட்டுமே யோசித்துக் கொண்டிருக்க… அந்த கதையின் பாத்திரமாக மாறி கதாசிரியராக யோசிக்க முடியவில்லை… யோசித்தபடியே கண்கள் அறையைச் சுழற்றி வட்டமடிக்க… அந்த அறையில் இருந்த தன் தாய் பவித்ராவின் புகைப்படத்தில் வந்து நின்றது…


அதே நேரம் வெளியே கூடத்தில் படுத்திருந்த தந்தையின் புறமும் கவனம் சிதற… தந்தையையே பார்த்திருந்தவளுக்குள் அவளையும் மீறி அவளுக்குள் மெல்லிய புன்னகை…


‘அடங்காத காளை ஒன்று அடிமாடா போனதடி“ என்ற பாடல் யாருக்கு பொருந்துமோ இல்லையோ தன் தந்தை நடராஜ்க்கு பொருந்தும்… அவரை அப்படி மாற்றிய பெருமை… புகைப்படத்தில் புன்னகையோடு இருந்த அவளது அன்னையை மட்டுமே சாரும்…


அழகான… அறிவான…. பணக்கார வீட்டுப் பெண்… முரட்டுத்தனமும்… திமிறிய இளமையும், தெனாவெட்டுமான இளைஞன்… இவர்களுக்கிடையே மோதல் காதல்… வாழ்க்கை என ஒரு ஜனரஞ்சகமான நாவலுக்குத் தேவையான அனைத்து அம்சங்களும் கொண்ட தன் தாய் தந்தை வாழ்க்கைப் பாதை…. கட்டுரைகள்… தகவல்கள் என எழுதிக் கொண்டிருந்த கண்மணியை…. அவளையுமறியாமல் கதாசிரியராக மாற்றி இருக்க… ஓரளவு தாய் தந்தை வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளைச் சேகரித்து கிட்டத்தட்ட கதையின் கடைசி கட்டத்துக்கு வந்து விட்டாள்… அதில் முக்கியமான பகுதி நாயகி நாயகனுக்காக அனைத்தையும் துறந்து வீட்டை விட்டு வெளியேறும் காட்சி… அந்தக் காட்சிக்காகத்தான் வார்த்தைகளைக் கோர்க்க தவித்துக் கொண்டிருந்தாள் அந்தக் கதையின் ஆசிரியரான நம் கண்மணி… வெகுநாட்களாக இந்த அத்தியாயம் எழுத முடியாமல் கதையையே கிடப்பில் போட்டு விட்டாள் என்பது வேறு கதை…


ஆனால் இன்று ரிஷிக்காக…. அவனது காதலி மகிளா துடித்த உணர்வுகளைக் கண்முன் கண்ட போது… அவளையுமறியாமல்… கதைக்கான அவளது எண்ண ஓட்டங்கள் தூண்டப்பட்டிருந்தது…


இதற்கிடையே… அவளோடு வந்திருந்த ரித்விகாவும் தூங்காமல் வெகுநேரம் அழுதுகொண்டே இருக்க… அவளை எப்படி சமாதானப்படுத்தினாலும் அவள் அழுகையை நிறுத்தவும் முடியவில்லை… உறங்க வைக்கவும் முடியவில்லை… அவள் அழுது அழுது ஒருவாறாக மூன்று மணி அளவில் தூங்கி விட… இவளுக்கோ அதன் பிறகும் உறக்கம் வரவில்லை….


பிறகென்ன… பாதியில் விட்ட கதையை…. தூசு தட்டி எழுத ஆரம்பித்தவளுக்கு இப்போதும் வார்த்தைகள் கண்ணாமூச்சி ஆட்டம் காண்பிக்க.. இன்றும் ஒரு வார்த்தை கூட எழுத முடியாமல்… கணினித் திரையை மூடியவள்.. அருகில் படுத்திருந்த ரித்விகாவுக்கு போர்வையை சரிப்படுத்தியபடி தானும் உறங்க ஆயத்தமாக… கண்மணி இல்லத்துக்குள் பைக் நுழையும் சத்தம்… அது ரிஷியின் பைக் என்பது அதன் சத்தத்தை வைத்தே உணர்ந்து கொண்டாலும்… அவன் எப்படி இப்போது வருவான்… சந்தேகமும் கூடவே வர… அவள் வீட்டின் அழைப்பு மணியின் ஓசை ஒலி… அவனே என்பதையும் கிட்டத்தட்ட உறுதி செய்ய… கண்மணி எழுந்து வெளியே வருவதற்கு முன் நட்ராஜ் கதவைத் திறந்திருக்க… வந்திருந்தது…. ரிஷியே…


ரித்விகா இவளோடு வந்து 4 மணி நேரம் கூட ஆகவில்லை… வந்து நின்றிருந்தான் ரிஷியும்…


ரிஷியிடம் நட்ராஜ்… லட்சுமியின் உடல்நிலையைப் பற்றி… கேட்க… இன்னும் அப்படியேதான் இருக்கின்றார் என்று நட்ராஜிடம் சொன்னாலும்… ரிஷியின் பார்வை வீட்டினுள் அலைந்தது தங்கையைத் தேடி…


“ரித்தி இதுவரை நாங்க யாருமே இல்லாமல் தனியா இருந்தது இல்லை… அதுமட்டுமில்லாமல் அவள் அதிகமாக அழுதா… காய்ச்சல் வேற வந்துரும்… அப்பா இறந்த பின்னால அவ ரொம்பவே வீக் ஆயிட்டா… அதுதான்… அங்க இருக்க முடியலை…” என்று தயங்கியபடி சொன்னவனிடம்…


கண்மணி பெரிதாக ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை…. கோபமா என்றால் கோபம் என்றும் சொல்லலாம்… அதே நேரம் ரிஷி சொன்னது போல ரித்விகாவிற்கு இலேசாக உடல் சூடும் இருக்க… அவனிடம்


“லைட்டா ஜுரம் இருக்கு… இப்போதான் தூங்கினா… இங்கேயே தூங்கட்டுமே” என்று சொல்ல…


“இல்லையில்லை … நான் கூட்டிட்டு போகிறேன்… ரூமை ஓபன் பண்ணிட்டு வருகிறேன்” என்று போனவன்…


கண்மணியிடம் திரும்பி….


“எழுப்பிறாத… நான் வந்து தூக்கிட்டு போகிறேன்” என்று சொல்லியபடி தன் அறைக்குப் போய் திறந்து தங்கைக்கு படுக்கை விரித்தவன்… அடுத்த சில வினாடிகளில் மீண்டும் இவள் வீட்டுக்கு வந்தவன்… கண்மணியின் படுக்கையறையில் படுத்திருந்த தன் தங்கையை அவள் உறக்கம் கலைக்காமல் கைகளில் ஏந்திக் கொண்டவன்… தனது அறையில் கொண்டு வந்து படுக்க வைத்தபோதும் அவள் உறக்கம் கலையாதபடி கவனமாகக் கையாண்டான்…


நட்ராஜ் அதன் பிறகு உறங்கவில்லை… ரிஷியோடு பேசச் சென்று விட… இப்போது கண்மணிக்கு உறக்கம் வந்தாலும்… உறங்க முடியவில்லை… தந்தை ரிஷி இருவருக்கும் தேநீர் தயாரிக்க ஆரம்பித்தவள்… அதை எடுத்துக் கொண்டு மாடிக்குப்போக… ரிஷி… நட்ராஜின் முன் அமர்ந்திருக்க… அவன் உடல் குலுங்கியதே அவரிடம் ஏதோ சொல்லி அழுது கொண்டிருக்கின்றான் என்பதை உணர்த்த… இவள் வந்ததை உணர்ந்த ரிஷி… சட்டென்று கண்களைத் துடைத்தபடி… வெறித்து அமர்ந்து விட… நட்ராஜ் ஆறுதலாக அவன் தோள்களை அணைத்தார்…


“ப்ச்ச்… எனக்கு ஏன் சார் இவ்வளவு சோதனை… எதுக்காக… நான் ஒருத்தன் கஷ்டப்படுகிறேன் என்றால் அது எனக்கான தண்டனைனு நினைக்கலாம்.. இன்னைக்கு ரிது.. ரிதி… எல்லாருமே… இன்னும் கொஞ்ச நாள்ள சென்னைல எல்லோரும் என்கூட செட்டில் ஆகிறலாம்னு சொன்ன அம்மா சுயநினைவில்லாமல்… ரிது தனியா ஹாஸ்பிட்டல்ல… ரிதி இங்கனு… எனக்கு என்ன செய்றதுன்னே தெரியலை… இதெல்லாம் அனுபவித்து… இதெல்லாம் தாண்டி… பயமா இருக்கு சார்… ” நட்ராஜிடம் புலம்பிக் கொண்டிருக்க…


நட்ராஜ் அவரால் முடிந்த அளவு அவனைத் தேற்றிக் கொண்டே இருக்க… சில நிமிடங்கள் அவர்களோடு இருந்த கண்மணி… அதன் பிறகு இருவருக்கும் தனிமை கொடுத்து கீழே வந்து விட்டாள்…


----


கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் கழிந்திருந்தது…. லட்சுமி… ஆபத்துக் கட்டத்தைத் தாண்டிவிட்டார் என்றாலும் பெரிதாக முன்னேற்றம் இல்லை… ஆனாலும் அன்னை ஆபத்துக் கட்டத்தை தாண்டி விட்டார் என்பதே ரிஷிக்கு பெரிய அமைதியாக இருக்க… ரிஷிக்கு இன்னொரு பிரச்சனை ரிதன்யாவின் மூலம் வந்தது… அதற்கு காரணம் ரித்விகா…


ரித்விகா பகல் வேளைகளில் மருத்துவமனைக்கு வருவதும்…. இரவில் கண்மணி இல்லத்திற்கு போவதுமாக இருக்க… அன்று இரவும் ரிஷி ரித்விகாவை கண்மணி இல்லத்துக்கு அழைத்துக் கொண்டு போக நினைக்க… ரித்விகா கண்களால் தன் சகோதரிக்கு சைகை காட்ட...ரிதன்யா ஆரம்பித்தாள்


“அண்ணா… இங்க ஏதாவது பக்கத்தில… ரூம் பாருண்ணா… ரித்தி நம்மகூடவே இருக்கட்டும்… நீயும் அவகூட நைட் தங்கிட்டு இங்க வந்துறலாம்” எனும்போதே ரிஷி இருவரையும் பார்த்தபடி…. சில நொடிகள் இருந்தவன்… ரித்விகாவை அழைத்தான்…


“சொல்லு… உனக்கு என்ன பிரச்சனை… எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லிருக்கலாம்ல… ரிதன்யா ஏன் இப்படி சொல்றா.. அண்ணாகிட்ட சொல்றதுக்கு என்னடா கஷ்டம்” த