top of page

கண்மணி... என் கண்ணின் மணி-24-3

அத்தியாயம் 24 -3


நிச்சய நிகழ்வுகள் அனைத்தும் சுபமாக முடிந்திருக்க… வந்த பொதுவான விருந்தினர் அனைவரும் கிளம்பியிருந்தனர்… இரவு உணவை முடிந்து… மகிளா-பிரேம்.. யமுனா-பார்த்திபன் குடும்பத்தினர் உட்பட அனைவரும் கிளம்பியிருந்தனர்… அதன் பின் கண்மணி-ரிஷி குடும்பத்தைத் தவிர எஞ்சி இருந்தது அர்ஜூன் மற்றும் விக்கி குடும்பத்தினர் மட்டுமே…


காரணம் இல்லாமல் இல்லை… காலையில் விக்கி சொல்லி இருந்தது போல… அர்ஜூன் பிரச்சனை தான் அங்கு மையமாக வீற்றிருந்தது….


அர்ஜூன் இன்னும் திருமணம் செய்யவில்லை… நாரயண குருக்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் அவன் திருமணத்துக்கு சம்மதம் சொல்லவில்லை… உண்மையைச் சொல்லப் போனால் அவனால் கண்மணியை மறக்க முடியவில்லை என்பதே உண்மை… அதிலும் இப்போது அவள் ரிஷியை விட்டு பிரிந்து வந்திருக்க… ஏற்கனவே ரிஷி மேல் கோபம் கொண்டிருந்தவனுக்கு… இன்னும் கோபம் மட்டுமே…


“நீ இளவரசியா வாழ வைக்க ஆசைப்பட்டவ… இனி என் வீட்ல வேலைக்காரியா சாரி சாரி இந்த ரிஷி வீட்டுக்காரியா இருக்கப் போறா… என் மேல கை வைத்ததுக்கு இதுதாண்டா உனக்குத் தண்டனை” என்று ரிஷி தன்னிடம் சொன்னது இன்றும் அவன் காதுக்குள் ஒலிப்பது போலவே இருந்தது அர்ஜூனுக்கு…


ரிஷி அவனிடம் சொன்னது போல… தன்னைப் பழிவாங்குவதாக…. தண்டிப்பதாக கண்மணியை தண்டித்துக் கொண்டிருக்கின்றானோ… அவனுக்குள் இந்த எண்ணங்களே இம்சித்துக் கொண்டிருக்க… இன்னொரு பெண்ணோடு திருமணம் என்று… இவர்கள் வேறு தன்னை இம்சித்துக் கொண்டிருக்கின்றனர்…


விக்கியின் தாத்தாவும்… கண்மணியின் தாத்தாவும் அர்ஜுனிடம் இப்போது அதைப் பற்றி விவாதிக்க ஆரம்பிக்க… ஏற்கனவே காலையில் இருந்து நடந்து கொண்டிருந்த நிகழ்வுகளில்… ரிஷியின் நடவடிக்கைகளில் ஏற்கனவே பொறுமை இழந்து கொண்டிருந்தவன்… இப்போது அனைவரும் நிவேதா விசயத்தை இழுக்க… மொத்தமுமாக பொறுமை இழந்தவனாக கத்த ஆரம்பித்தான்…


”தாத்தா… எனக்கு மேரேஜ் வேண்டாம்னு எத்தனை தடவ சொல்றது...விக்கி இதைப் பேசுறதுக்குத்தான் உன் நிச்சயதார்த்தத்துக்கு அழைப்பு வைத்தாயா… பிடிக்காதவன் வீடுன்னு ஆன போதும்… உனக்காக மட்டுமே வந்தேன்… “ என்ற போதே


விக்கி… வேகமாக


“சார்” என்ற போதே….


”இதுக்கு மேல… யாரும் என்கிட்ட வேற ஏதும் பேச வேண்டாம்… நான் கிளம்புகிறேன்” என்றவன்… இப்போது ரிஷியை ஒரு பார்வை பார்த்து விட்டு… கண்மணியைப் பார்த்தவன்


”கிளம்பு… தாத்தா… பாட்டி நீங்களும் தான்… காரை எடுத்துட்டு வருகிறேன்” என்றபடி வெளியேறப் போக…


அர்ஜூன் கண்மணியிடத்தில் காட்டிய உரிமையில்… ரிஷியின் முகம் மாறியதோ இல்லையோ இலட்சுமியின் முகம் தான் வெளிறியிருந்தது…


கண்மணியிடம் கெஞ்சி கேட்டபோது… நாளைக்கு நிச்சயத்திற்கு வருகிறேன்… ஆனால் அதற்கு மேல் வேறு எந்த உரிமையும் எடுக்கக் கூடாது… அதாவது வீட்டிற்கு வந்து ரிஷியோடு வாழச் சொல்லவெல்லாம் கூடாது என்று அனைவரிடமும் கண்டிப்பாகச் சொல்லி விட்டாளே…


மகனோ அதை விட… எனக்கென்ன வந்தது என்ற ரீதியில் அவன்…



சுயநலமாகத் தோன்றிய போதும் ரிதன்யா திருமணம் முடியும் வரையாவது அவர்களோடு வந்து தங்கி இருக்கக் கூப்பிட்டுப் பார்த்தார்… அதுவும் வேலைக்காகவில்லை…


முதன் முதலாக இன்று இந்த வீட்டுக்குள் அடி எடுத்து வைத்தவளை …ஏதாவது ஒரு காரணம் காட்டி… இங்கேயே தங்க வைத்து விட அவரும் காரணம் தேடிக் கொண்டிருக்க காரணம் தான் கிடைக்கவில்லை... ’ரிதன்யா திருமணம்’ என்று தேடிப் பிடித்து சொன்ன ஒரே காரணத்தையும்… கண்மணி ஒன்றும் இல்லாமல் பண்ணியிருக்க… இந்த அர்ஜூன் வேறு முதலுக்கே மோசடி செய்து விடுவான் போல…


மகன் தவிக்கவில்லை… மாறாக மகனது தாய் தவித்துக் கொண்டிருக்க…


நடராஜோ… வேகமாக கண்மணியிடம்…


“மணி… உன்னை நான் இல்லை மாப்பிள்ளை கூட்டிட்டு வந்து விடுகிறோம்… உன்னை யாரும் இங்க இருக்க கட்டாயப்படுத்தவில்லை… நீ யார் கூடயும் போக வேண்டாம் “


என்ற போதே… ரிஷி அவரிடம்…


“போகட்டும் மாமா… நாம ஏதாவது சொன்னால்… மேடம் ரூல்ஸ்லாம் பேசுவாங்க… அதாவது… காலையில நீங்களா கூட்டிட்டு வந்தீங்கன்னு…” அங்கிருந்த தூணில் சாய்ந்தபடியே கண்மணியைப் பார்த்துப் நக்கலாகப் பேச…


ஏற்கனவே கோபத்தில் இருந்த அர்ஜூனுக்கு... ரிஷியின் வார்த்தைகள் இன்னும் சூடேற்ற…


“என்னடா… நம்பி வந்த பொண்ணை வச்சு வாழத் தெரியலை… உனக்கு நக்கல் பேச்சு வேற” என்று எகிற ஆரம்பித்தவன்… மற்றவர்களை எல்லாம் சிறிது கூட கண்டு கொள்ளாமல் பேச…


ரிஷி… அவனிடம் பேசவில்லை… மாறாக கண்மணியிடம் தான் அவன் பார்வை இருக்க… அவன் பார்வை மற்றவர்களுக்குத்தான் புரியவில்லை… கண்மணிக்கு நன்றாகவே தெரிய… குற்ற உணர்வில் தலை குனியத்தான் முடிந்தது அவளால்…


ரிஷி… இப்போது நிலைமையைக் கையில் எடுத்தவனாக…


”ஹ்ம்ம்ம்…” செறுமியவனாக…


”என் பொண்டாட்டிய எப்போ கொண்டு வந்து விடுறதுனு நான் பார்த்துக்கிறேன்.. இந்த ட்ரைவர் வேலையெல்லாம் பார்க்க… வேற ஆள் யாராவது தேடுங்க…அர்ஜூன் சார்” என்றபடி…


தலைகுனிந்திருந்த கண்மணி.. இப்போது நிமிர்ந்து அவனை முறைக்க… இவனோ பார்வையலாயே மிரட்டினான்…


“நீ அவனோடு போகக் கூடாது” என்பது போல…


கண்மணியோடு கண்களால் பேசிக் கொண்டிருந்தவன்… இப்போது அர்ஜூனிடம் திரும்பி


”அர்ஜூன் சார்… கண்மணி வரமாட்டா… நீங்க கிளம்பலாம்…“ என்று உறுதியாகச் சொல்ல… கண்மணி அதற்கு மேலும் அமைதியாக அமர்ந்திருப்பாளா என்ன… இவன் சொன்னால் தான் இருக்க வேண்டுமா… என்ற எண்ணம் தந்த வேகத்தில் எழ… அதே வேகத்தில் எழ முடியவில்லை… கர்ப்பமாக இருந்த காரணத்தால்…


அர்ஜூன் ரிஷியின் உறுதியான குரலில் திகைத்து நின்றாலும்… எழும் போது தடுமாறிய கண்மணியைப் பார்த்தவன்…. வேகமாக கண்மணி அருகில் வர… அதற்குள் தன்னைச் சமாளித்துக் கொண்டிருக்க…


“ஏன்டி… இப்படி பண்ணின… உன்னை காதலித்த பாவத்துக்கு… யாரோ ஒருத்தன் கிட்ட என் உரிமையெல்லாம் கொடுத்து என்னைப் பழிவாங்கிட்ட… உனக்காக நான் இப்போதும் காத்துட்டு இருக்கேன்…” என்றவனின் தவிப்பில் கண்மணி புருவம் சுருக்க…


அர்ஜூனின் வார்த்தைகளைக் கேட்ட மற்ற அனைவரும்… அதிர்ச்சியில் உறைய… அதிர்ச்சியில் உறைய வேண்டியவனோ.. இயல்பான பாவனையில் அவர்கள் இருவரையும் பார்த்தபடி…


“கண்மணி… அர்ஜூன் சார்கிட்ட கொஞ்சம் நீ தனியா பேசுனா… சார் கொஞ்சம் தெளிவா ஆவார்னு நினைக்கிறேன்… அவர் தெளிவாகிறாரோ… இல்லையோ நீ சார் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லும் போது உனக்கும் கொஞ்சம் தெளியும்னு நினைக்கிறேன்..” என்றவன் இப்போது கண்மணியின் அருகில் வந்து அவளுக்கு மட்டும் கேட்கும் படி


“மேடம் கோவிச்சுக்கலைனா… கடன் கொடுத்த உங்க அறிவை கொஞ்ச நேரத்துக்கு திருப்பித் தருகிறேன்…” என்றவன்… அவள் முறைப்பைப் பார்த்தபடியே


“என்னை முறைக்காத… அவன் இன்னும் உன்னை நினைச்சுட்டுத்தான் இருக்கான்… என் வாழ்க்கையை மட்டும்தான் பாலைவனமா ஆக்கவோ… இல்லை சோலை ஆக்கவோ உனக்கு உரிமை இருக்கு… அவனோட வாழ்க்கையை எல்லாம் இல்லை… அதை அவனுக்கு புரிய வை… அது எப்படின்னு யோசிக்க முடியலைனா… என்கிட்ட வா… இப்போ அவன்கிட்ட பேசிட்டு வா… அவன் வாழ்க்கைல கண்மணி… சாரி சாரி சார் கண்மணினு சொல்ல மாட்டார்ல… அவரோட ப்ரின்சஸ் முடிந்த சகாப்தம்னு… ” என்று சொன்னவன்… அதற்கு மேல் தான் பேசுவதற்கு ஒன்றுமில்லை என்பது போல… கண்மணியும் முடிவெடுத்தவள் போல… அர்ஜூனோடு தனியாகப் பேசச் சென்று விட… அடுத்த அரைமணி நேரத்தில் விக்கி குடும்பத்தாரும் கிளம்பி விட…


ரிஷி நட்ராஜிடம் …


“மாமா இன்னைக்கு நீங்களும் இங்கேயே தங்குங்க… “ என்று அவரிடம் சொன்ன போதே…


“ரிஷி மணி…” அவர் தயங்க…


”அவ ரிதன்யா மேரேஜ் முடியும் வரை இங்கதான் இருப்பாள்… நான் பார்த்துக்கறேன் ” அவருக்கான பதிலைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே… கண்மணியும் வர..


நாரயண குருக்களிடம்..


“சாரி தாத்தா… உங்க பேரன்… பேத்தி ரெண்டு பேர் வாழ்க்கையிலயும் என்னால பிரச்சனை வந்ததுக்கு… ”


”கண்மணியைப் பற்றி நீங்க கவலைப்பட வேண்டாம்… அதை நான் பார்த்துக்கிறேன்… விக்கி அர்ஜூனை நிவேதாகூட சேர்த்து வைக்க போராடிட்டு இருக்கான்… பார்க்கலாம்… அர்ஜூன் கண்டிப்பா ஒரு நல்ல முடிவை எடுப்பார்…”


என்று பேசி முடித்தவனாக…


“அம்மா என் ரூமுக்கு போகிறேன்...” என்று தன் அறையை நோக்கி மாடிப்படிகளில் ஏறியவன்.. பாதிப்படி ஏறியவன் கண்மணியை நோக்கியபடியே…. ரித்விகாவை அழைத்தான்…


“ரிதி… உன் அருமை அண்ணிகிட்ட அவங்க ரூமைக் காட்டிரு…” சொல்லி விட்டு வேகமாக சென்று விட...


ரிஷி மேலே போன சில நிமிடங்களில்… அதை விட வேகமாக அர்ஜுனும் அங்கு வந்தவனாக… கண்மணியை முறைத்தபடி…


”உன்னை அவன் மதிக்க கூட இல்லை…. அவனுக்காக மொத்தமா நீ மாறிட்டேனு சொல்றதை நான் நம்பனும்… என் மனசை மாத்துறதுக்கு வேற ஏதாவது திட்டம் போடு” என்று மட்டும் சொன்னவன்… அதற்கு மேல் வேறு ஏதும் பேசாமல்… பேச வந்த கண்மணியையும் தவிர்த்தவனாக…. வேறு ஏதும் பேசாமல் அங்கிருந்து தன் பாட்டி தந்தையோடு வெளியேற…


ரிதன்யா ரித்விகா… நட்ராஜ் லட்சுமி என அனைவரும் கண்மணியைப் பார்க்க… கண்மணி அமைதியாக சில நிமிடங்கள் அப்படியே அமர்ந்து விட்டாள்…


அவளுக்கு அர்ஜூன் கோபமாக போனதெல்லாம் அவளுக்கு பெரிய விசயமே இல்லை… அவளுக்கு வேறு யோசனை இப்போது அவள் மூளைக்குள் ஓடிக் கொண்டிருந்தது…


தன்னவன் சொன்னது போல… அர்ஜூனிடம் பேசிய பின்னால்... ஏதோ புரிவது போல இருக்க…


தானே சொல்லிக் கொள்வது போல… தன் கணவன் கிண்டல் செய்வதைப் போல… உண்மையிலேயே தான் அறிவில்லாமல் தான் நடந்து கொண்டிருக்கின்றோமா… தான் தான் தவறு செய்து விட்டோமோ முதன் முதலாக யோசிக்கத் தொடங்கி இருக்க… அவளையுமறியாமல்… எழுந்தவள்… மாடியை நோக்கிப் போக… ரிதி வேகமாக சந்தோஷத்தோடு…


“அண்ணி… அண்ணா ரூம்…” என்று அவளருகே போனபோது…


“நான் பார்த்துக்கிறேன் ரிதி” அவளிடம் சொன்னபடி… சரியாக தன்னவன் அறையைக் கண்டுபிடித்து அவனது அறையிலும் நுழைந்திருந்தாள் கண்மணி…


இவள் உள்ளே சென்ற போது அதிர்ந்து அவனைப் பார்த்தது கண்மணியே தவிர ரிஷி இல்லை…


காரணம்…


அந்த அறை அப்படியே கண்மணி இல்லத்தில் அவர்கள் இருந்த வீட்டின் அறையின் அச்சு அசலாக இருக்க… கண்மணியின் கண்கள் இப்போது கலங்கியிருக்க… இருந்தும் தன்னைச் சமாளித்தவளாக… கட்டிலில் அமர்ந்தவள்… அவனிடம் ஏதும் பேசாமல் கண்களை மூடி உறங்குவது போல பாவனை செய்ய…


கட்டிலில் கைகளைக் கட்டியபடி அமர்ந்திருந்தவன்…… அமைதியாக அவளது நடவடிக்கைகளைப் பார்த்துக் கொண்டிருந்தானே தவிர… இவனும் அவளிடம் ஏதும் பேசவில்லை…


கண்மணி படுத்தபின்.. அவனும் கட்டிலின் அடுத்த ஓரத்தில் படுத்தவன்… மனைவியின் முகத்தைப் பார்த்து ரசித்தபடியும்… அதே நேரம் அவளின் பிடிவாதத்தை நினைத்து அவளை மனதுக்குள் திட்டிக் கொண்டும்… சில பல நிமிடங்கள் இருந்தவனுக்கு… ஒரு கட்டத்தில் அவன் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் போக… அவள் புறம் நெருங்கியிருந்தான்….


கண்மணியும் உறங்கவில்லை என்று தெரியும்… இருந்த போதும்… தைரியமாக நெருங்கியவன்… இல்லையில்லை உரிமையாக நெருங்கியவன்


“நீ தூங்கலைன்னு தெரியும்டி… இருந்தாலும் அப்டியே மெயிண்டைன் பண்ணு” என்று தன் இதழை அவள் மூக்குத்தியில் பதித்து அதன் தொடர்ச்சியாக அவள் கன்னக் குழியிலும் பதித்தவன்… இவனது இதழ் தீண்டலில்… இலேசாக துடித்த இதழ்களை அவன் பார்த்த போதும்… இலேசாகத் சிலிர்த்த அவள் தேகம் இவன் உணர்ந்த போதும்… அவன் எல்லைகளை மீறும் உரிமை இருந்த போதிலும்… தன்னைக் கட்டுப்படுத்தியவனாக…. இருவரின் ஆதார பந்தமாக வரக் காத்திருக்கும் தன் உயிர் வாரிசை சுமந்து கொண்டிருந்த அவள் வயிற்றில் கரம் வருடி தன் இதழ் பதித்தவன் கண்களில் இப்போது நீர் கசிய… அதன் பிறகு பெரிதாக அவளைத் தொந்தரவு செய்யாமல்… வேறெந்த நினைவுகளையும் தனக்குள் கொண்டுவராமல்… தன்னவளின் அருகாமையே தனக்கு போதும் என்ற நிம்மதியில் கண் உறங்க… அடுத்த சில நிமிடங்களிலேயே உறங்கியும் போக….


கண்மணி விழித்திருந்தாலும்… ரிஷி அவளை நெருங்கி தீண்டியதை எல்லாம் தடுக்கவே இல்லை…


இப்போது கண்மணி தன் இமைகளைத் திறந்து இமைக்காமல் தன்னவனை மட்டும் தன் கண்மணிக்குள் நிரப்பியவள்… நிம்மதியாக அவன் உறங்கும் முகத்தைப் பார்த்தபடியே இருந்தாள்…


எத்தனையோ நாட்கள்… அருகில் இருந்து அந்த முகத்தை அவள் பார்த்திருக்கின்றாளே… நிம்மதியின்றி அலைப்புறுதலோடு தூக்கமின்றி தவிக்கும் தவிப்பை… தன் கணவன் முகத்தில் இந்த நிம்மதியைப் பார்ப்பதற்காக… இவள் அத்தனை பாடு பட்டாள்… ஆனால் அவளே அவன் வாழ்க்கையில் மீண்டும் நிம்மதி இழக்க காரணமாகிவிட்டாளே…


இன்று ஒரு வார்த்தை சொன்னானே…


“என் வாழ்க்கையை மட்டுமே பாலைவனமாகவும்…சோலையாகவும் மாற்ற உனக்கு உரிமை என்று”


அவன் வாழ்க்கையை பாலைவனமாக மாற்றவா அவனோடு சேர்ந்தாள்… கண்களில் அவளையுமறியாமல் கண்கள் நீரை உகுக்க… கண்மணிக்கே அவளது இந்த நிலை…பிடிவாதம் எல்லாம் பிடிக்கவில்லைதான்… ஆனால்…


கண்மூடி சில நிமிடங்கள் இருந்தவள்… இன்று அர்ஜூனிடம் தன் கணவன் மீதான தன் காதலை புரிய வைக்க அவனிடம் போராடிய போது… அவள் சொன்ன வார்த்தைகள் இப்போது அவளிடமே திரும்பி வந்து அவளை தாக்கிக் கொண்டிருந்தன…


”ரிஷியை நான் லவ் பண்றேண்றதை… அவர் இல்லேன்னா நான் இல்லைன்றதை … அவர் எனக்கு எவ்வளவு முக்கியம்.. இதை எல்லாம் வாய் வார்த்தைல சொல்லி யாருக்கும் புரிய வைக்கனும்னு அவசியம் இல்லை… அது அவருக்கு தெரியும்…” அர்ஜூனிடம் தன் கணவனின் மீதான தன் காதலைச் சொல்லி விட்டாள்…


இதே போலத்தான் ரிஷியும்… விக்கி பேசிய வார்த்தைகளுக்கெல்லாம் அமைதியாக இருந்தானா… என் மீதான அவன் காதலை அவன் நேசத்தை எதற்காக ரிஷி விக்கியிடம் விளக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன்…

நான் தவறு செய்கிறேன் என்று தெரிகிறது… இருந்தும் மாற்றிக் கொள்ள முடியாமல் தவிக்க காரணம் என்ன…


கேள்வி கேட்டுக் கொண்டவளுக்கு… பதில் கிடைத்ததா இல்லையா… அவளுக்கே தெரியவில்லை… குழப்பமான மனநிலையுடன் தான் இப்போதும் இருந்தாள்… ஆனால் நீ எனக்கு வேண்டாம் என்று அவனைத் தள்ளி வைத்தாலும்… அவன் அருகாமை எனக்கு பேரமைதி ஏன் தருகிறது…


கணவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள்…


நன்றாக உறங்குகிறான் என்பதை உணர்ந்தவளாக… அவனருகில் நெருங்கிப் படுத்தவள்… அவன் முன் உச்சிக் கேசத்தை விலக்கி அவன் நெற்றியில் இதழ் பதித்தவள்… நிம்மதியோடு அந்த அறையைப் பார்க்க… அங்கிருந்த சுவரில் இருந்த இணைந்திருந்த இரட்டை இதயங்களைப் பார்த்து அவளையுமறியாமல் புன்னகை விரிய… அன்று அவனும் தானுமாக சுவரில் வண்ணம் அடித்த தினத்திற்குச் செல்ல அதைத் தொடர்ந்து…. கூடவே திருமதி.ரிஷிகேஷாக ஆன சம்பவங்களும் அவளை ஆட்கொள்ள… நினைவுச் சூறாவளியால் அடித்துச் செல்லப்பட்டாள் கடந்த காலத்திற்கு…

----


அன்று மருத்துவமனையில்

லட்சுமியின் நிலை குறித்து 24 மணி நேரத்துக்குப் பின் தான் சொல்ல முடியும் என்று சொல்லி விட


கிட்டத்தட்ட 12 மணி அளவில்… ரிஷி… ரிதன்யா…ரித்விகா மூவருமாக வெளியே வந்திருந்தனர்…


ரிஷி சிலை போல அமர்ந்திருந்தான்… அவனின் இருபுறமும் அவன் தங்கைகள் அமர்ந்திருந்தனர்.. ரிதன்யா அவன் தோள் சாய்ந்திருக்க… ரித்விகா.. அவன் மடியில் சாய்ந்தபடி இன்னும் அழுது கொண்டிருக்க… ரிதன்யா பெரிதாக அழவில்லைதான் அடிக்கடி கண்களைத் துடைத்துக் கொண்டவளாக அமர்ந்திருந்த விதமே அவளும் உடைந்து போய்தான் இருக்கின்றாள் என்பதை உணர்த்தியது


ரிஷியால் அழக் கூட முடியவில்லை… முடியவில்லை என்பதை விட… அவன் உடைந்தால் ஆறுதல் சொல்ல அவன் ஏங்கும் தோள் அங்கு ஏதுமே இல்லை… அவன் அப்பா இறந்த போது கூட இந்த மாதிரி உணர்வு அவனுக்கு ஏற்படவில்லை… புத்தி தெளிந்ததுதான் என்று சொல்ல வேண்டும்… இன்றோ அன்னையின் நிலையில் இந்த உலகமே சூனியமாக காட்சி அளித்தது… அவனுக்கு அருகில் இருந்தவர்கள்… சுற்றி இருந்தவர்கள் அனைவருமே அந்நியர் மட்டுமே… மனதுக்கு நெருக்கமானவர்கள் அனைவருமே ஒவ்வொருவராக அவனை விட்டு சென்று கொண்டிருக்கின்றனரே…


தன் சாய்ந்திருந்த ரிதன்யாவிடம் திரும்பியவன்…


“என்னடா நடந்துச்சு… மகிளாவுக்கு மேரேஜ்… அதற்கு ஏன் ரிது… அம்மா இந்த அளவு ஆனாங்க… அப்பா இறந்தப்போ கூட அம்மா தைரியமாத்தானே இருந்தாங்க..” கலங்கிய குரலில் அவன் கேட்க… ரிதன்யா அழுதபடியே விளக்கினாள்


மகிளாவுக்கு பிரேமுக்கும் திருமணம் செய்யவிருப்பதாக நீலகண்டன் லட்சுமியிடம் தெரிவிக்க… லட்சுமியோ அதற்கு பெரிதாக ஆட்சேபம் தெரிவித்திருக்க… அதிலும் தன் மகனின் ஆசை… அவனது விருப்பம் அனைத்தும் மகிளா மட்டுமே… அவள் இல்லாமல் தன் மகன் துடித்து விடுவான்… என்று பெரிதாக கத்தி சத்தம் போட்டு வாதிட ஆரம்பிக்க… ஒரு கட்டத்தில் நீலகண்டன் பொறுமை அற்று… … ரிஷி தன்னிடம் செய்து கொடுத்த வாக்குறுதியைச் சொல்லி முடித்து… அதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றுமல்ல என்பது போல அவர் தாங்கி இருந்த ஹோட்டல் அறைக்குப் போய்விட…


அப்படியே கல்லாகச் சமைந்து அமர்ந்து விட்டார் லட்சுமி… அவனுக்கு பிடித்த மகிளாவையே தங்களுக்காக விட்டுக் கொடுத்து விட்டானா… அதுவும் ஐந்து வருடத்துக்கு முன்னாலேயே… தங்களுக்காக ஓவ்வொரு நொடியையும் யோசித்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டானா… அதை எல்லாம் தெரிந்து கொள்ளாத தாயாகத்தான் தான் இத்தனை நாளாக இருந்திருக்கின்றேனா…


ஆக மொத்தம் என் மகனின் வாழ்வை என் பிடிவாதமும்… வறட்டு கௌரவமும் சூறையாடிச் சென்று விட்டனவா… அவன் முகத்தில் நான் எப்படி இனி விழிப்பேன்…


இப்போதும் ஞாபகம் இருக்கின்றதே… ’மகிளா எனக்கு ரொம்ப பிடிக்கும்மா… சின்ன வயதில் இருந்தே அவளைப் பிடிக்கும்’ என்று தன்னிடம் சொல்லி அவன் கொஞ்சியதெல்லாம் ஞாபகத்துக்கு வர… தாயாக குற்ற உணர்வில் குறுகியவருக்கு… இனி ரிஷியை எப்படி பார்ப்போம்… இனி உனக்கு மகிளா இல்லை… என்று தன்னால் எப்படி அவனிடம் சொல்ல முடியும்… இதே உணர்வுகள் அவரைப் பாடாய்படுத்த… ஒருகட்டத்தில் ரிதன்யாவிடம் புலம்ப ஆரம்பித்தவரை ரிதன்யா தேற்ற முடியாமல் ரிஷிக்கு போன் அடிக்க…. ரிஷி வேறு எடுக்காமல் போக… ஒரு கட்டத்தில் மன அழுத்தம் தாங்காமல் மயக்கத்திற்கு போக… ரிதன்யா வேறு வழியின்றி… நீலகண்டனின் துணையோடு மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்திருந்தாள்…

ரிஷி ரிதன்யா சொன்ன அனைத்தையும் கேட்டபடி அமர்ந்தவன் தான் வேறு ஒன்றும் சொல்லவில்லை….


வேலன் தினகர் நட்ராஜ் மூவரும் ரிஷிக்கு இப்போது ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்க… கண்மணி தனியாகத்தான் நின்று கொண்டிருந்தாள்…


ரிதன்யாவிடம் கண்மணி பேச முயற்சித்த போது… கண்மணியை ஒரு பொருட்டாகவே அவள் மதிக்கவில்லை என்றே சொல்ல வேண்டும்…கண்மணியாக அவளிடம் கேள்வி கேட்டதால்…பேருக்கு பதில் அளித்தாள் அவ்வளவுதான்…


சூழ்நிலை இப்படி போய்க் கொண்டிருக்க…


அப்போது அங்கிருந்த செவிலிப்பெண்… ஒருவர் மட்டும் தான் இருக்க வேண்டும் என்று சொல்லி அனைவரையும் கிளம்பிப் போகச் சொல்ல… ரிதன்யாவை மட்டும் அங்கு விட்டு விட்டு… மற்ற அனைவரும் மருத்துவமனை வளாகத்துக்கு வெளியே வந்தனர்…


ரிஷி… ரித்விகாவை பிடித்த கையை விடவே இல்லை…


நட்ராஜ் தான் பணவிவகாரம் அனைத்தையும் கவனித்துக் கொண்டார்… நட்ராஜ் என்று கூட சொல்ல முடியாது… கண்மணிதான் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டாள்…


அனைவரிடமும் கை கூப்பி நன்றி சொன்னவனிடம்…


“அம்மாக்கு ஒண்ணும் ஆகாது ஆர்கே அண்ணாத்த…” வேலனும் தினகரனும் கூட சொன்னார்கள்.. அவர்களுக்கும் அதிர்ச்சியே… ரிஷி என்பவன் சாதாரணமானவன்.. தங்களில் ஒருவன் என்று நினைத்திருக்க… ரிதன்யா ரித்விகா… மகிளாவின் தோற்றமும் பேசும் தோரணையுமே… அவர்கள் உயரம் சொல்ல… ரிஷியை இப்போது இன்னும் ஆச்சரியமாகப் பார்க்க ஆரம்பித்தனர் என்றே சொல்ல வேண்டும்…


வேலன் தினகர் இப்படி இருக்க… தன்னை ஆறுதலாக அணைத்த நட்ராஜிடம்…


“இதை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் சார்…. என்னோட ரத்த பந்தம் கிட்ட நான் சம்பாதிக்காததை உங்ககிட்ட சம்பாதித்திருக்கின்றேன்… “ என்றவன்


“இனி நான் பார்த்துக்கிறேன் சார்… இதோ இங்க இடம் இருக்கு… நானும் ரிதியும் இங்க இருந்தால்… ரிதன்யா ஏதாவது எமர்ஜென்சினா நான் போக வசதியா இருக்கும்” என்று விடை அனுப்பி வைக்க…


விடைபெற்று அனைவரும் செல்ல…


கண்மணி மட்டும் ரித்விகாவைப் பார்த்தபடியே… ரிஷியின் அருகில் வந்தாள் தயங்கியபடியே


கண்மணிக்கு ரிஷி மகிளாவிடம் நடந்து கொண்ட முறை பிடிக்கவில்லை தான்... அதே நேரம்… ரித்விகாவை தன்னோடே வைத்துக் கொண்டிருந்தால்… அவளை தனியே விட்டு விட்டு எங்கும் போக முடியாது… திடிரென்று ரிதன்யா அவனை அழைத்தால்… ரித்விகாவோடு தான் செல்லவேண்டும்… இங்கு தனியாக நடுவீதியில் அவளை விட்டுச்செல்ல முடியாது… வேலன் தினகர் இருந்தாலும் கூட… ரிஷி அவர்களை நம்பி அவள் தங்கையை தனியே விட மாட்டான் என்றே தோன்றியது…


அதுமட்டும் அல்லாமல் ரிதன்யா ரித்விகா மகிளா மூவருமே மேல்தட்டு வர்க்க வாசிகள் என்பது அவர்களைப் பார்க்கும் போதே தெரிந்தது… அந்த மருத்துவமனை பெரிய பணக்காரர்கள் சிகிச்சை பார்க்கும் மருத்துவமனைதான்… அங்கு இருப்பவர்களே இந்த மூன்று பெண்களையும் ஆவென்று பார்க்கும் அளவுக்கு சினிமா நட்சத்திரங்களையும் மிஞ்சும் பேரழகு…


ரிஷியும் அதை உணர்ந்திருப்பான் போல… ரிதன்யாவை அங்கு அறையில் விட்டு விட்டு வரும்போதும்… ரிதன்யாவிடம் ஆயிரம் பத்திரங்களைச் சொல்லிவிட்டு தயங்கி தயங்கித்தான் வெளியே வந்தான்…


இதோ ரித்விகாவையும் ஒரு நிமிடம் கூட தன் கைவிட்டு பிரிக்காமல் தன் அருகிலேயே வைத்திருப்பதையும் கண்மணி கண்டு கொண்டாள் தான்…


தன்னோடுகூட அனுப்புவானா என்பது சந்தேகம் தான்… இருந்தாலும் கேட்காமல் போகவும் கண்மணிக்கு மனம் இல்லை…


“ரிஷி… ரித்விகாவை நான் வீட்டுக்கு கூட்டிட்டு போகவா…”


கண்மணி கேட்டவுடனேயே …. ரித்விகா அரண்டவளாக…


“வேண்டாம்னா.. நான் உன்கூடவே இருக்கிறேன்…“ என்று ரிஷியின் கைகளை இறுக்கமாக பற்றிக் கொள்ள…


ரிஷிக்கு தன் தங்கையை கண்மணியோடு அனுப்ப விருப்பமில்லை என்றாலும்… ரித்விகாவின் பாதுகாப்பு மட்டுமே இப்போது முக்கியம் என்பதால் கண்மணி கேட்டதும் சரிதான் என்றே தோன்ற… அவனுக்கு வேறு வழி இல்லையே…


“ரிதிம்மா… இவங்க வீட்லதான் அண்ணா வாடகைக்கு இருக்கிறேன்.. சொல்லி இருக்கிறேன்ல… அவங்க கூட இன்னைக்கு நைட் மட்டும் இருடா… அண்ணாவைப் புரிஞ்சுக்கோடா” என்று அவளுக்கு புரியும்படி எடுத்துச் சொல்ல… ரித்விகா இப்போது தயங்கியபடியே சம்மதம் சொல்ல


ரித்விகாவை கண்மணியிடம் ஒப்படைத்தவன்…


“கண்மணி… உன்னை நம்பித்தான் அவளை அனுப்பறேன்.. ப்ளீஸ்… பார்த்துக்கோ “ என்றவனின் கலக்கமான குரலே… தங்கையை அவனை விட்டு அனுப்பவெ விருப்பமில்லாமல்தான் தன்னோடு அனுப்புகிறான்… என்று தெள்ளத் தெளிவாக காட்டியது கண்மணிக்கு…


ஆம் ரிஷியின் நிலைமையுமே அதுவே…


தன்னையே திரும்பி திரும்பி பார்த்துச் சென்ற தங்கையின் தலை மறையும் வரை அவளையே பார்த்தபடி இருந்தவன் அப்படியே தலையில் கைவைத்து அங்கிருந்த கல்லில் அமர்ந்து விட்டான்…


தந்தை இல்லாத இடத்தை விட அன்னை இல்லாத இடத்தை பூர்த்தி செய்வது பெரும் கடினமாக இருக்கும் என்றே தோன்றி இருந்தது… இந்த சிலமணி நேரங்களிலேயே ரிஷிக்கு … தங்கைகளைத் தாங்கியபடியே இருந்த தோள்களின் வலியும் அவனுக்கு அதைச் சொல்லாமல் சொல்லியது என்றே சொல்ல வேண்டும்…


தந்தையுமானவன் மட்டுமல்ல தாயுமானவனாகவும் இனி தன் தங்கைகளுக்கு மாற வேண்டும் என்பது அவனுக்கு புரிந்த போதுகூட பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை… ஆனால் அந்த நிலைக்கு தள்ளப்பட்ட போதுதான்… இதுவரை அவனுக்கு வந்ததெல்லாம் சவால் இல்லை… இனிமேல் தான் பெரிய சவால் என்பதே புரிந்தது…


ஆக மொத்தம் ரிஷிக்கு ஜாண் ஏறினால் முழம் சறுக்கும் கதைதான்… இதை இப்படி கூட சொல்லலாம்… ஏற்றமே இல்லாமல்… முழம் சறுக்கும் கதைதான் ரிஷியின் வாழ்க்கை…


அதே நேரம்… ரித்விகாவோடு நடந்து சென்ற கண்மணி எதேச்சையாக ரிஷியைத் திரும்பிப் பார்க்க… ரிஷி தலையைத் தாங்கிப் பிடித்தபடி அங்கிருந்த திண்டில் வெறித்தபடி இவர்களையே பார்த்தபடி அமர்ந்திருக்க…


அவனை முதன் முதலாக பார்த்த போது இதே போல ஒரு கல்லில் தான் அமர்ந்திருந்தான் அவளது இல்லத்தில்… காதில் ஸ்டைலாக ஹெட்செட் வைத்தபடி… அதில் ஒலித்த பாடலை சத்தமாகப் பாடியபடி…


அன்றைய ரிஷிக்கும்… இன்றைய ரிஷிக்கும் ஆயிரம் மாற்றங்கள் கண்டுபிடிக்கலாம்… என்றே அவளுக்குத் தோன்ற…


அதே கண்மணிக்கும் காலம் ஆயிரம் மாற்றங்களை கொடுத்திருந்தது என்றே சொல்லவேண்டும்… நடராஜன் மகளாகவும்… திருமதி ரிஷியாகவும்….


-----

/*தேவனின் தீர்ப்பிது

யார் இதை மறுப்பது

காதல் தான் என்றுமே

கடைசியில் ஜெயிப்பது


வா வா மன்னவா வாசல் தேடி வா

வா வா மன்னவா வாசல் தேடி வா

வானம் இல்லையேல் வாடும் வெண்ணிலா*/



3,441 views0 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின் புதிய இல்லத்துக்கான முதல் கல்லை அடிநாட்டினாள்… அதன் பின் பள்ளி

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை அலைகழித்திருக்க… மருது ’மணி’ என்று தானே அழைப்பான் யோசித்தாலும்….

கண்மணி... என் கண்ணின் மணி- 94-3

அத்தியாயம் 94-3 சில வாரங்களுக்குப் பிறகு… வீட்டில் கண்மணி மட்டுமே இருந்தாள்… சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க… மணி 11 க்கும் மேலாக ஆகியிருக்க… நட்ராஜுக்காகவும் மருதுவுக்காகவும் காத்திருந்தாள் கண்மணி…. இப்

© 2020 by PraveenaNovels
bottom of page