top of page

கண்மணி... என் கண்ணின் மணி-24-1

அத்தியாயம் 24-1:


/*வா வா கண்மணி வா வா ஆ கண்மணி

வா வா கண்மணி வாசல் தேடி வா

வா வா கண்மணி வாசல் தேடி வா

வானம் இல்லையேல் வாடும் வெண்ணிலா*/
அந்த பிரமாண்ட பங்களாவின் பரபரப்பும் கோலாகலமும் பார்க்கும் போது… பார்ப்பவரையும் தொற்றிக் கொள்ளும் வகையில் இருந்தது விழாக் கோலம் பூண்டிருந்தது அந்த இல்லத்தின் அந்த மகிழ்ச்சியும் கொண்டாட்டாமும்….


அதிலும் அந்த இல்லம் வாங்கிய பின் முதன் முதலாக நடக்கும் விழா நிகழ்ச்சி என்பதால் அங்கிருந்த ஒவ்வொருவரின் முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவாமாடிக் கொண்டிருக்க… அந்த வீட்டின் மூத்த பெண்மணி இலட்சுமியின் முகத்தில் மட்டுமோ சந்தோஷத்தையும் மீறிய தவிப்பு இருந்தது…


தன் மகளின் நிச்சயதார்த்த விழா என்பதையும் மீறி அந்த தாயின் முகத்தில் கவலைக்கோடுகள் மட்டுமே…


அடிக்கடி வாசலை பார்த்தபடியும்… தன் கையில் இருந்த அலைபேசியையும் நொடிக்கொருதரம் பார்த்தபடியும் இருக்க….தன் அன்னையின் பதட்டத்தை ரித்விகாவும் காலையில் இருந்தே கவனித்துக் கொண்டு இருந்தாள்… காரணமும் அவள் அறியாததா என்ன…


“அம்மா… இப்போ ஏன் இவ்ளோ டென்ஷன்… நீங்க கூப்பிட்டு கண்மணி அண்ணி வராமல் இருக்க போறாங்களா” என்றவள்… தன் அன்னையின் முகத்தை தன் கைகளைப் பிடித்து தன்னைப் பார்க்கும்படி வைத்தவள்…


“நான் பட்டு பாவாடை தாவணில எப்படி இருக்கேன்… சூப்பரா இருக்கேனா… அதைச் சொல்லுங்க… அதை விட்டுட்டு சும்மா அண்ணியை நினைத்து கவலைப்பட்டுட்டு… நம்ம அண்ணிம்மா… நம்மள விட்டுட்டு எங்க போகப் போறாங்க…” என்று தன் தாயை நோக்கிக் கேட்க…


இலட்சுமி… முகத்தில் மெல்லிய புன்னகை…


தன் செல்லமான சின்ன மகளையும் அவளது வளர்ச்சியையும் தாயாக இலட்சுமியின் மனம் தனக்குள் உள்வாங்கிக் கொள்ள… இப்போது இலட்சுமியின் முகம் மீண்டும் மலர்ச்சியை மீட்டெடுக்க…


“இது இதுதான்.. இப்படித்தான் எங்க அம்மா எப்போதுமே இருக்க வேண்டும்… கண்மணி அண்ணியை ஒழுங்கா புரிஞ்சுகிட்டா… இவ்ளோ வருத்தமே பட மாட்டீங்க… இதே சிரிப்போட அப்படியே உங்க மூத்த பொண்ணு ரிதுவைப் போய்ப் பாருங்க… “ என்று பெரிய மனுசி போல் பேசி தன் அன்னையை தன் சகோதரி அலங்காரம் செய்து கொண்டிருந்த அறைக்கு அனுப்பியவள் வேறு யாருமல்ல் ரித்விகாவே தான்


தந்தையின் மரணம் கூட அவளை இந்த அளவுக்கு மாற்றவில்லை… ஆனால் தாய் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையான பின்னர்… தன் அண்ணனோடு சேர்ந்து சென்னையில் வசித்த போது… கண்மணியோடு நெருங்கிப் பழகியபோது…. கண்மணியே அவளுக்கு எல்லாம் ஆகிப் போன போது ரிதிவ்கா இன்னும் பண்பட்டிருந்தாள்… சொல்லப் போனால் கண்மணியின் மற்றொரு பிரதி என்று சொல்லுமளவுக்கு ரித்விகா மாறியிருந்தாள் என்றே சொல்லவேண்டும்… கண்மணியிடம் ப்ளஸ் குறும்புத்தனம் சேர்ந்தால் எப்படி இருப்பாளோ அது ரித்விகா என்றே சொல்ல வேண்டும்…


-----

ரிதன்யாவின் அறைக்குள் நுழைந்த போது மகிளாவும் ரிதன்யாவும் மட்டுமே…


உள்ளே நுழைந்த இலட்சுமி….


”மகிளா…. மாப்பிள்ளை எப்போ வருகிறேன் என்று சொன்னார்” என்றபடியே… ரிதன்யாவின் நெற்றிச் சுட்டியை ஒழுங்குபடுத்தியபடி தன் மகளை நெட்டி எடுக்கவும் மறக்கவில்லை…


“தட்டு மாத்துற நேரம் சரியா வந்துடுவார் அத்தை… ரிதுவுக்கு எல்லாம் கரெக்டா இருக்கானு பார்த்துட்டே இருங்க… பாப்பாவை பார்த்துட்டு வந்துடறேன்… அம்மாகிட்ட விட்டுட்டு வந்து ரொம்ப நேரமாகுது… தேடப் போகிறாள்” என்றபடி மகிளா அங்கிருந்து கிளம்ப…


தான் வளர்த்த பெண்ணின் பொறுப்பு நிதானமும் கண்டு மனம் பூரிக்காமல் இல்லை… நல்ல ஒரு துணை கிடைத்தால் எந்த ஒரு சோகமும்… தோல்வியையும் தாண்டி வந்து விடலாம் என்பதற்கு மகிளா-பிரேம் நல்ல உதாரணம்…


ரிதன்யா தன் அன்னையின் முகத்தைப் பார்த்தபடியே…


“அண்ணிகிட்ட பேசுனியாம்மா…. வருவாங்களா… எல்லாமே என்னாலதான்” என்ற போதே அவளின் கண்களில் இப்போது வரவா இல்லை பிறகு வரவா என்னும் வகையில் நீர் கோர்த்தபடி நிற்க…


இலட்சுமி தன் புடவைத்தலைப்பால் அவளது கண்களைச் சரிசெய்தபடியே…. பெருமையாக முகத்தை வைத்தபடி


“என் மருமகள்… அவளைப் பற்றி யோசிக்கிறதை விட… அடுத்தவங்களைப் பற்றி யோசிப்பவள்… அதுனால கண்டிப்பா வருவாடா” என்று போதே


”அப்போ ஏன் நாம இந்த வீடு மாறினப்போ அவங்க ஏன் வரலை…” வழக்கமாக கண்மணிக்கு எதிராகத்தான் நிற்பாள்… இப்போதும் அவளைக் குறையாகதான் கூறுகிறாள்… ஆனால் கவலையாக


“ப்ச்ச் ரிது… அதெல்லாம் விடு… கண்மணி வருவா… மாப்பிள்ளை வீடு வருகிற நேரம் ஆகிருச்சு… நேற்றே விக்கி தாத்தா சொல்லிட்டாரு… சீக்கிரம் வருவதாக” என்று சொல்லி முடிக்க வில்லை… ரித்விகா கீழிருந்து குரல் கொடுத்தாள்….


“அம்மா… விக்கி மாமா வீட்லருந்து வந்துட்டு இருக்காங்களாம்… விக்கி மாமா போன் பண்ணினாங்க” என்று குரல் கொடுக்க… ரிஷியும் அதே நேரம் ரிதன்யா இருந்த அறைக்குள் நுழைந்தான் தனது அலைபேசியை பார்த்தபடியே…


“அம்மா… தோட்டத்தில விருந்துக்கு எல்லா ஏற்பாடும் தயார் ஆகிருச்சு… விக்கி சைட், நம்ம சைட்… நட்ராஜ் சார் பக்க ஆளுங்க… எல்லாருக்கும் ஸ்பேஸ் அரேஞ்மெண்ட் பண்ணியாச்சு… நீங்க பார்த்துட்டீங்கன்னா ஓகே… வர்றீங்களா” என்றவன் அடுத்தடுத்து நடக்க வேண்டிய… பார்க்கப் பட வேண்டிய… செய்யப்பட வேண்டிய வேலைகளை எல்லாம் தன் தாயிடம் சொல்லிக் கொண்டிருக்க…


தங்களிடம் பேசிக் கொண்டிருந்த அவனையே… அவனது முகத்தையே பார்த்தபடி இருந்தனர் ரிதன்யாவும்… இலட்சுமியும்


காரணம் ரிஷியின் முகத்தில் மனைவியைப் பிரிந்த வேதனையின் சாயலோ இல்லை கண்மணி இன்று வருவாளா மாட்டாளா என்ற கவலைக் கோடுகளோ இம்மியளவும் இல்லை….


இல்லை தங்களிடம் காட்டிக் கொள்ளவில்லையா… அவர்களால் அவனது முகத்தில் இருந்து கண்டுகொள்ளவே முடியவில்லை என்பதே உண்மை….


தெளிவாக… அழுத்தமான பாவனை மட்டுமே… இன்று தன் தங்கையின் நிச்சய விழா… அதில் மட்டுமே அவன் முழுக்கவனமும் என்பது போல பேசிக் கொண்டிருக்க…


இலட்சுமி… கொஞ்சம் தயக்கமாகத்தான் தன் மகனிடம் ஆரம்பித்தார்


“ரிஷிக்கண்ணா… கொஞ்சம் உன் பிடிவாதத்தை எல்லாம் விட்டுட்டு… கண்மணியை” என்ற போதே… சற்று முன் இருந்த முகபாவமே அவனுக்கு மாறி இருக்க


“ம்மா… ஆயிரம் தடவை உங்ககிட்ட சொல்லிட்டு இருக்க முடியாது… அதே மாதிரி யாரையும் இங்கு வெத்தலை பாக்கெல்லாம் வச்சு அழச்சுட்டு இருக்க முடியாது… இது அவ வீடு... நான் சொல்றதை சொல்லிட்டு வந்துட்டேன்… வர்றது வராதது அவ பாடு…” என்று முகத்திலடித்தார்போலச் சொன்னவன்…


”கீழ வாங்க… விக்கி கிளம்பிட்டானாம்… போன் பண்ணினான்… 10 மினிட்ஸ்ல வந்துருவாங்க ” என்று சொல்லிவிட்டு வேக எட்டுக்கள் எடுத்து வெளியேறியவன்… விடுவிடென்று மாடிப்படிகளில் இருந்து இறங்கி… ஹாலுக்கு வர…


பார்த்திபனும், யமுனாவும் அங்கு வந்திருக்க… தாயின் வார்த்தைகளால் சற்று முன் மாறி இருந்த ரிஷியின் முகம் மீண்டும் மென்னகையை மீட்டெடுத்துக் கொள்ள..


அதே புன்னகையோடு இருவரையும் வரவேற்றவன்…


“ஹேய்… புது மாப்பிள்ளை புதுப் பொண்ணு, விருந்தெல்லாம் முடிஞ்சிருச்சா…. சொல்லுங்க பார்த்தி சார்… எங்க ஊர் பொண்ணு உங்க வீட்ல செட் ஆகிட்டாங்களா…” என்றவன் யமுனாவிடம் அவளது தந்தையைப் பற்றி விசாரிக்கவும் தவறவில்லை….


இதற்கிடையே இலட்சுமியும் கீழே இறங்கி வந்துவிட… பார்த்திபனும்… இலட்சுமியும் பேசிய சங்கேத பாஷைகளை ரிஷி பார்த்தாலும்… கண்டும் காணாதது போல அங்கிருந்து விலகியும் சென்று விட்டான்…


அதன் பிறகு அடுத்த சில நிமிடங்களில்… விக்கி குடும்பமும் அங்கு வந்து இறங்கி இருந்தனர்…


விக்கியின் குடும்பம் கூட்டுக் குடும்பம்… அதன் தலைவர் ஏற்கனவே விக்கியின் மூலமாக நாம் அறிந்ததே… விக்கியின் தாத்தா வேங்கட ரங்காநாதன்… அவர் விரலசைப்புக்கு இல்லையில்லை அவர் கண்ணசைப்புக்கே அந்தக் குடும்பம் இயங்கும் என்று சொல்லும் அளவுக்கு… அந்தக் குடும்பத்தை வழிநடத்திக் கொண்டிருந்தார்… வேங்கட ரங்கநாதன்… அதே நேரம் அவர் வார்த்தைகள், நடவடிக்கைகள் என்றுமே அந்தக் குடும்பத்தின் நன்மைக்கே என்பதை அவர் மூன்று மகன்கள் மட்டுமல்ல… குடும்பத்தின் இன்றைய தலைமுறை வரை உணர்ந்திருந்தனர் என்பதே உண்மை…. அது நிரூபிக்கும் பொருட்டு… அவரது கைகளில் இருந்த கிட்டத்தட்ட இரண்டு வயதான கொள்ளுப் பேத்தி அவரைக் கொஞ்சிக் கொண்டிருந்தாள்…


காரை விட்டு இறங்கிய வேங்கட ரங்கநாதன் குடும்பத்தினரை இலட்சுமி குடும்பத்தினர் வரவேற்க... ரிஷி விக்கியை ஆரத் தழுவியனாக… பின் வேங்கட ரங்காநாதன் – அபிராமி தம்பதியினரின் பாதங்களைத் தொட்டு ஆசிர்வாதம் வாங்க குனிய…


சட்டென்று தன் கையில் இருந்த பேத்தியை மனைவியிடம் மாற்றியவராக… தன் காலில் விழப் போன ரிஷியை தாங்கி நிறுத்தியவராக


“ரிஷி தம்பி எழுந்திருங்க… என் குலத்தை காத்த நாங்க தெய்வமா கும்பிடுகிற… பெண் தெய்வத்தையே உங்ககிட்ட கொடுத்திருக்கோம். நீ என் கால்ல விழக் கூடாதுப்பா” என்றார் வழக்கம் போல கண்மணி புராணத்தை ஆரம்பித்தார்…


’கண்மணி’ என்ற ஒற்றை வார்த்தை போதும்… வேங்கட ரங்கநாதனுக்கு… அந்த ஒரு வார்த்தைக்கே அவரின் உணர்வுகள் பெரு மழையைப் போல பிரவாகமாக உருவெடுக்கும்… அவரைப் பொறுத்தவரை கண்மணி என்பவள்… சாதாரண பெண் அல்ல… மானிட உருவில் நடமாடும் பெண் தெய்வம்….


வழக்கம் போல ரிஷியும்… அவரது உணர்வு மிகுந்த வார்த்தைகளைக் கேட்டும்… முகத்தில் ஒன்றும் காட்டிக் கொள்ளாமல்… உள்ளே நுழைந்தவன் இப்போது விக்கியோடு தனியறையில் இருந்தான்….


இருவருமே வெகு நேரம் வரை அமைதியாக மட்டுமே இருக்க… அந்த மௌனத்தை உடைத்தது விக்கியே…


“ரிஷி… “ என்றான் விக்கி உள்ளே போன குரலில்…


அவன் என்ன கேட்கப் போகின்றான் என்று ரிஷியும் தெரிந்தவனாக


“வரலடா மச்சான்… நேத்து அவ்ளோ பேசியும்… ஒரு “ என்றவன்… நண்பனிடம் என்ன சொல்ல வந்தானோ அப்படியே… வார்த்தைகளை தனக்குள் முழுங்கியவனாக தன்னை நிலைப்படுத்தியபடி…


”இம்மியளவு கூட மதிக்கலை…. நீ என்ன சொல்றது… நான் என்ன கேட்கிறதுன்னு… திமிர்ன்லாம் சொல்லமாட்டேன்… அது என்னைக்குமே அவளுக்கு இருந்ததில்லை… ஆக மொத்தம் வரலை அவ… “ நண்பனின் முகத்தைக் கூடப் பார்க்கவில்லை அவன்… தன் கைகளைக் கோர்த்தபடி விரல் நகங்களைப் பார்த்தபடியே சொன்ன நண்பனிடம்


“சாரிடா மச்சான்… எல்லாமே என்னாலதான்… ஒழுங்கா போயிட்டு இருந்த உன் வாழ்க்கைல… “ என்ற போதே


“ப்ச்… விடுடா… உன்னால எல்லாம் கிடையாது… நீ ஜஸ்ட் சொல்றதுக்கு ஒரு காரணம்… என்றைக்காவது ஒருநாள் வெளி வந்திருக்கனும்… அது உன் மூலமா… பிரச்சனை ஆகிருச்சு… அவ்ளோதான்… நீ இல்லைனாலும்… வேற ஏதாவது ஒரு காரணத்தில அவ அவுட்பர்ஸ்ட் ஆகிருப்பா… விடு… எங்க போகப் போகிறா… பார்த்துக்கலாம்.. இன்னைக்கு இது உன்னோட டே… சும்மா என்னாலதான்… நான் தான்னு… குழப்பிக்காமல்… மாப்பிள்ளைப் பையனா எங்க சங்கத்தில ஜாயின் பண்ணு” என்ற போதே பிரேமும் பார்த்திபனும் உள்ளே வர… அதன் பிறகு… வேறென்ன நடக்கும்… திருமணமான மூன்று சம்சாரிகள்… ஒற்றை ஆளாக மாட்டிக் கொண்ட பிரம்மச்சாரியை வைத்து செய்து கொண்டிருந்தனர்….


அரைமணி நேரம் கடந்திருக்க…. ரிஷி இப்போது….


பிரேம் மற்றும் பார்த்திபனிடம்…


“ஒகே ஃப்ரெண்ட்ஸ்… நான் இடத்தைக் காலி செய்கிறேன்… பொண்ணு வீட்டுக்காரனும் உங்க கூட அரட்டை அடிச்சுட்டு இருந்தால் வேலை எல்லாம் ஹோஹயாதான்…” என்றபடியே கிளம்ப எத்தனிக்க… திடீரென்று ஒரே சத்தம்… அதிலும்


விக்கியின் தாத்தாவின் சத்தம்… அவர் குரலின் சந்தோஷம் அந்த வீடு முழுக்க எதிரொலிக்க… அவரது குரலைக் கேட்டு… ரிஷி மற்றும் அனைவரும் எழுந்து பால்கனி வழியே வந்து பார்க்க… அவர்கள் நினைத்தது போல… கண்மணியே


நட்ராஜ் அதிகாலையிலேயே வேலன் தினகரோடு இங்கு வந்துவிட்டர் மருமகனுக்கு துணையாக…


அதனால்… கண்மணி அவளது தாத்தா பாட்டியுடன் வந்திறங்கினாள்… கண்மனி வந்து விட்டாள் என்ற போதெல்லாம் ரிஷியின் முகத்தில் பெரிதாக மாற்றமில்லை… உணர்வுகளை துடைத்தார் போல பாவனைதான் அங்கு இருந்தது


ஆனால்


காரில் அர்ஜூனோடு வந்து இறங்கிய போதுதான் ரிஷியின் முகம் மாறி கண்கள் இடுங்கின… அதிலும் ஓட்டுனர் இருக்கையில் இருந்த அர்ஜூன்.... முன்னிருக்கையில் அவனருகில் அமர்ந்திருந்த கண்மணி அசிரத்தையாக கஷ்டப்பட்டு இறங்க முயற்சித்ததை அறிந்தவனாக.. வேகமாக இறங்கி வந்து அவளுக்கு கதவைத் திறந்து விட…


அர்ஜூன் என்னவோ சாதராணமாகத்தான் செய்தான்… கண்மணிக்கு மட்டுமல்ல… பின்னால் அமர்ந்திருந்த அவர்களது தாத்தா பாட்டிக்கும் அவன் தான் கதவைத் திறந்து விட்டான்


மற்றவர்களுக்கு இயல்பாகத் தோன்றுவதுதான்…. ஆனால் அர்ஜூனின் அந்த நடவடிக்கைகளில் ஒவ்வாத பாவனையைக் ஒட்டிக் கொண்டது ரிஷியின் முகம் மட்டுமே…


அதில் தோன்றிய எரிச்சலை மட்டுப்படுத்த… ரிஷியின் கைகள் பால்கனிச் சுவரின் கைப்பிடியில் இறுகியதே மிச்சமாக இருக்க…


”நான் தாண்டா இன்வைட் பண்ணேன் அர்ஜூன் சாரை… நிவேதா விசயமா தாத்தாகிட்ட பேசி இருந்தேன்… பார்க்கனும்னு சொல்லி இருந்தார்… ” என்று விக்கி தயங்கியபடி சொன்னபோதே… நொடியில் தன் முகத்தை மாற்றிக் கொண்டவனாக…


“நத்திங்டா… எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை” என்று விக்கியிடம் ரிஷியிடம் வாய் பதில் சொன்னாலும்… பார்வை மொத்தமும் கண்மணியிடம் குவிந்திருந்தது…


ரிஷியின் மொத்தப் பார்வையும் மனைவியிடம் மையம் கொண்டிருக்க… கண்மணியின் சிறு பார்வை மைக்ரான் அளவு கூட கணவன் புறம் திரும்பவில்லை… தன்னை அவள் மேலிருந்து பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்று தெரிந்த போதும் …


ரிஷி மற்றும் கண்மணியின் நிலை இப்படி இருக்க… இவர்களைத் தவிர மற்ற அனைவரின் முகங்களிலும் நிம்மதி விரவ ஆரம்பித்திருந்தது கண்மணியின் வருகையில்…


மேலே நின்றிருந்ததால் வந்தவர்களை வரவேற்க கீழே போக வேண்டும் என்பதால்… விக்கி ரிஷியை கீழே அழைக்க…


“நீங்க போங்க…” சொன்னவனின் பார்வை இப்போதும் கீழே காரை விட்டு இறங்கிய மனைவியிடம் தான் நிலைத்திருந்ததே தவிர…. வேறெங்கும் செல்லவில்லை என்றே சொல்லவேண்டும்…


மற்றவர்களும் அவன் நிலை புரிந்து வேறு ஏதும் பேசாமல் கீழே இறங்கிப் போய்விட….


ரிஷி வெளியே நின்றிருந்த அனைவரும் உள்ளே செல்லும் வரை மேலேயே நின்றிருந்தவன்… அதற்கு மேலும் இங்கேயே நின்று கொண்டிருப்பது வந்தவர்களுக்கு கொடுக்கும் மரியாதை இல்லை என்பதை உணர்ந்தவனாக கீழே இறங்கியவன்… நாராயணன் வைதேகி இருவரிடமும் வந்து நின்றவன்… அவர்களின் ஆசீர்வாதங்களையும் வாங்கத் தவறவில்லை


அதே நேரம் வேகமாக நட்ராஜை அழைத்தபடி…


“மாமா… நம்ம வீட்டாளுங்க வந்திருக்காங்க… கவனிக்கலையா… “ என்று கேட்டவன்…


“நட்ராஜ்… என்னோட மாமா… அதைவிட என்னோட குரு…“ என்று வேண்டுமென்றே அறிமுகம் செய்தபோது… அர்ஜூனின் தீப்பார்வை ரிஷியை மேல் பாய… ரிஷி அதை எல்லாம் கண்டு கொள்ளாமல்… சாதரணமாக அவனைப் பார்த்தபடியே புன்னகைத்தவனாக கைகளைக் கூப்பியவனாக…


“வாங்க அர்ஜூன் சார்” என்றபடியே அவன் அருகில் அமர்ந்திருந்த கண்மணியைப் பார்த்தவன்… நொடியும் தாமதிக்காமல்…


“கொஞ்சம் உன்கிட்ட பேசணும்… உள்ள வர்றியா” என்று அதிகாரமாக கூடுதல் உரிமையாக அழைத்தவனை இப்போது கண்மணி உறுத்து விழிக்க… மற்றவர்களோ இப்போது ரிஷியை தவிப்பாக பார்த்தனர்…


காரணம்… தாம்பூல தட்டு மாற்றும் நிகழ்வு இன்னும் சிறிது நேரத்தில்… நல்ல விசயம் நடக்கும் நேரத்தில்… ரிஷி கண்மணியோடு ஏடாகூடமாக ஏதாவது பேசி பிரச்சனை வந்துவிட்டால்…


கண்மணி வந்ததே பெரிய விசயம் என்று ரிஷி அமைதியாக இருந்து விடுவான் என்றே அனைவரும் நினைத்திருக்க.. இப்படி அதிரடியாக அவளிடம் தனியே பேச அழைப்பான் என்றெல்லாம் யாரும் நினைத்துக் கூட பார்க்கவில்லை…


அதிலும் விக்கியின் தாத்தா… ரிஷியிடம்…


“நல்ல நேரம் முடிந்த பின்னால” என்று ஆரம்பித்த போதே…


“தாத்தா… ப்ளீஸ்… எனக்கு அவகிட்ட பேசனும்” என்ற போதே…


“இருக்கட்டும்பா… நல்லா பேசு… யார் வேண்டாம் என்று சொன்னது ஆனால் ஃபங்ஷன் முடிந்த பின்னால” என்று இலட்சுமி இழுக்க…


கண்மணி எழுந்திருந்தாள் இப்போது …


’போக வேண்டாம்… பிரச்சனை வேண்டாம்’ என்று அனைவரும் தடுக்க…


தன்னை சுற்றி இருந்த அனைவரையும் அமைதியாக இருக்கச் சொல்லி பார்வையாலே அடக்கியவளாக எழுந்து நடக்க ஆரம்பிக்க…. ரிஷியும் அவள் பின்னாலேயே போக முற்பட்டவன்… என்ன நினைத்தானோ அங்கு அமர்ந்தவர்களிடம் மீண்டும் வந்தான்… அதுமட்டுமில்லாமால் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமான பாவனைகள்… பார்த்தவனின் மனதுக்குள் எரிச்சல் மண்டியபோதும்…


”எனக்குப் புரியலை… இப்போ எதுக்கு இவ்ளோ ஓவர் ரியாக்ட் பண்றீங்க எல்லாரும்… ” என்றவனின் கோபம் புரிந்தவனாக…


இலட்சுமி…


“ஒண்ணும் இல்லை ரிஷி… நீ போய் பேசிட்டு வா… நேரம் போயிட்டு இருக்கு” என்று சமாளிக்கும் பாவனையில் பேசியவர்… அதேநேரம்…


”பார்த்துப் பேசுப்பா… கண்மணி மனசை நோகடிக்கிற மாறி” என்ற ஆரம்பித்த போதே…


“கொஞ்சம் நிறுத்தறீங்களா” என்று இருக்கும் இடம் மறந்து…. தன்னை மறந்து… பொறுமை இழந்து…. கத்தியவன் வேறுயாருமல்ல… ரிஷியே… இவன் கத்தலில் முன்னே சென்று கொண்டிருந்த கண்மணி கூட சற்று நின்று திரும்பிப் பார்த்து… பின் நடக்க ஆரம்பிக்க…


இப்போது ரிஷி சூழல் உணர்ந்து… தன் குரலின் உச்சஸ்தாயைக் குறைத்தபடி அதே நேரம் அழுத்தமாக… அங்கிருந்த அனைவரையும் பார்த்து கைகளை தலைக்கு மேலே உயர்த்து கும்பிட்டவனாக…


“தயவு செய்து… கெஞ்சிக் கேட்டுக்கிறேன்… அவளைத் தலைமேல தூக்கி வச்சுட்டு ஆடறதை நிறுத்தறீங்களா… கொஞ்சம் இறக்கி விடுங்க…


அவ என்ன செய்தாலும் சரி சரின்னு…. அவகிட்ட பேசாம இப்படியே விட்ற சொல்றீங்களா…” என்றவனின் வார்த்தைகளில் இருந்த உண்மை அனைவருக்கும் புரிந்த போதிலும் யாரும் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க…


“பேசிறாதீங்க… இப்படியே இருங்க… பேசறவனையும் விட்றாதீங்க” என்றவன் அதற்கு மேல் அங்கு நிற்காமல் வேக எட்டுக்கள் எடுத்து தன் மனைவியின் அருகில் வர… அவன் பேசியது எல்லாம் கண்மணியின் காதுகளில் விழாமல் எல்லாம் இல்லை… என்ன அதற்கான பிரதிபலிப்பு தான் அந்த முகத்தில் இல்லை என்று சொல்ல வேண்டும்…


நெருங்கிய சொந்தங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பித்து இருக்க… ரிதன்யாவுக்கும் மகிளாவும் இதெல்லாம் அறியாமல் மேலே மாடியறையில் தனித்து இருக்க… நண்பனின் நடவடிக்கைகளில் விக்கிக்கு மட்டுமே நெஞ்சுக்குள் கலக்கம்…


பின்னே இருக்காதா என்ன… வினை விதைத்தவன் வினை அறுப்பான் எனும் பழமொழிக்கேற்ப… நன்றாக குடும்பமாக இருந்த தம்பதியினரின் இடையில் பிரிவு வர இவன் முக்கிய காரணமாகப் போய்விட்டானே… கூடுதலாக ரிதன்யா வேறு அவள் பங்குக்கு… கண்மணியிடம் நடந்திருக்க…


இப்போது அவன் கவலை எல்லாம்…. இன்றைய நிச்சய விழா ஒழுங்காக நடக்குமா? நடக்காதா என்ற யோசனையில்


நண்பனும் அவன் மனைவியும் போன திசையையே வருத்ததோடு பார்த்துக் கொண்டிருந்தான்…


அங்கு …

ரிஷி கைகாட்டிய அறையில்… கண்மணி உள்ளே நுழைய… அவளுக்குப் பின்னால் சென்ற ரிஷி… தானும் உள்ளே சென்று நிதானமாக அறைக்கதவை பூட்டினான்.


-----

3,610 views0 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின் புதிய இல்லத்துக்கான முதல் கல்லை அடிநாட்டினாள்… அதன் பின் பள்ளி

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை அலைகழித்திருக்க… மருது ’மணி’ என்று தானே அழைப்பான் யோசித்தாலும்….

கண்மணி... என் கண்ணின் மணி- 94-3

அத்தியாயம் 94-3 சில வாரங்களுக்குப் பிறகு… வீட்டில் கண்மணி மட்டுமே இருந்தாள்… சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க… மணி 11 க்கும் மேலாக ஆகியிருக்க… நட்ராஜுக்காகவும் மருதுவுக்காகவும் காத்திருந்தாள் கண்மணி…. இப்

댓글


댓글 작성이 차단되었습니다.
© 2020 by PraveenaNovels
bottom of page