கண்மணி... என் கண்ணின் மணி-22-2

அத்தியாயம் 22-2:


ஆயிரம் முறை ரிஷி கேட்டு விட்டான்…


இதோ இப்போதும் கேட்டுக் கொண்டிருக்கிறான்…


”ரெண்டு நாள் இங்க தங்குறதுல பிரச்சனை இல்லையா உங்களுக்கு….எந்த வசதியுமே இங்க இல்லயேம்மா…. ஊர்ல ரிது ரிதன்யா…. வேற தனியா இருப்பாங்க… ஏன்மா இப்படி… நான் கஷ்டப்படலாம் இல்லை….. எதுக்குமா இப்படி ஒரு முடிவெடுத்தீங்க…”


“என் பையனோட ரெண்டு நாள் தங்குறதுக்கு உனக்கு எதுக்குடா இத்தனை கேள்வி… உனக்கே ஒரு கஷ்டம் இல்லை எனும் போது உன்னை பெத்தவ எனக்கு எங்க இருந்து கஷ்டம் வரப் போகுது… அதுமட்டுமல்ல ரெண்டு நாள்ள உங்க ஒண்ணு விட்ட பெரியப்பா பொண்ணோட மேரேஜ்… அதுனால எல்லோரும் வர்றாங்கன்னு சொல்லிட்டேனேடா… ரிது ரிதன்யா வெல்லாம் தனியாவா இருக்காங்க… உங்க அத்தை வீட்லதான் இருக்காங்க… நீலகண்டன் அண்ணா முன்ன மாதிரிலாம் இல்லை…” என்ற சொல்லியபடியே தன் மடியில் படுத்திருந்த தன் மகனின் தலையைக் கோதிக் கொடுக்க…


மகிளாவின் முகம் கண்முன் வந்து நிற்க… உதட்டைக் கடித்து அவள் நினைவுகளை கடந்து வர முயன்றவனுக்கு… தன் அன்னை சொன்ன அந்த திடீரென்று முளைத்த பெரியப்பா யார்…. அது யாரென்று யோசிக்க ஆரம்பித்தவன்… கண்டுபிடிக்க முடியாமல் முடிவில் தன் தாயிடமே கேட்க…


“உனக்கு தெரியாதுடா… ரொம்ப நாளா அவங்க நம்மளோட பேசாமல் இருந்தாங்க… “ என்ற போதே…


“இப்போ என்ன திடீர்னு… நம்ம உறவு வேணும்னு வந்திருக்காங்க” என்று ஒரு மாதிரியான பாவனையில் கேட்க…


“ப்ச்ச்… உறவுன்னா அப்டித்தான் இருக்கும்டா ரிஷிக்கண்ணா… உன்னைக் கூட அவர் பார்க்கனும்னு சொன்னார்… மேரேஜ்ல பார்க்கலாம் “ என்க … ரிஷியும் அத்தோடு அந்த பேச்சை விட்டு விட்டான்…


தனக்கும் தாய்க்கும் பேச ஆயிரம் விசயங்கள் இருக்கும் போது புதிதாக முளைத்த பெரியப்பா குடும்பத்துக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுக்க நினைக்கவில்லை….


லட்சுமி இப்போது தன் மகனிடம் அடுத்து ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார்….

“ரிஷி… நீ ஊருக்கு வரமாட்டேன்னு சொல்லிட்ட… ஆனால் நான் வரக்கூடாதுன்னு சொல்லமுடியாதுதானே… ரிது ரிதன்யா கூட நான் இங்க வரப் போகிறேன்… இத்தனை வருஷமா என் புள்ளய கஷ்டபடுத்திட்டேன் இனி அவன் வேலைக்கு போகிறதை பக்கத்தில் இருந்து பார்க்கனும்னு ஆசை…. ” என்ற போதே அவரைத் தடுத்து ரிஷி ஏதோ சொல்லப் போக…


”இதுக்கு மேல ஏதாவது பேசுன…” என்று செல்லமாக கடிந்தவர்…


“இங்கே நம்மளால இருக்க முடியாதுப்பா… வேற வீடு பார்க்கலாம்… சரியா” என்று கேட்க… ரிஷியால் அதற்கு மேல் மறுத்துப் பேச முடியுமா என்ன… சந்தோஷத்தோடு தலையாட்ட… லட்சுமி தொடர்ந்தார்…


”அப்புறம் நீலகண்டன் அண்ணாகிட்ட பேசனும்… உனக்கும் மகிளாவுக்கும் மேரேஜ் விசயமா பேச ஆரம்பிக்கனும்” என்றபோதே


ரிஷி… சட்டென்று….


“ம்மா… எனக்கு இருக்கட்டும்… முதலில் ரிதன்யாவுக்கு “ என்ற போதே


“ஹ்ம்ம்…. எல்லாம் தெரியும்… அவளுக்கு தோசம் இருக்காம்… பரிகாரம் பண்ணச் சொல்லி இருக்காங்க… அவங்க சொன்ன அம்மனுக்கு விரதம் இருக்கனுமாம்…. அந்த அம்மன் அனுக்கிரகம் கிடைத்தால் தான் வழி கிடைக்குமாம்… அது மட்டும் இல்லை… உனக்கு திருமணம் முடித்த பின்னாலதான் ரிதன்யாவுக்கு திருமணம் நடக்குமாம்… அதுனால தான் உனக்கும் மகிளாவுக்கும் முதல்ல” என்ற போதே இலட்சுமி முடிக்க வில்லை…

ரிஷி சுள்ளென்று விழுந்தான்…


“எந்த மடையன் சொன்னான்… அம்மன் அனுக்கிரகம்… ஏன் அந்த அம்மனோட பார்வை நம்ம மேல படலேன்னா ஒண்ணும் நடக்காதா என்ன… ஃபர்ஸ்ட் இந்த மூட நம்பிக்கை எல்லாம் தூக்கி தூரப் போடுங்கம்மா… அம்மனாம் கடவுளாம்… அவங்கதானே நம்ம வாழ்க்கைய சரிப்படுத்த வரப் போறாங்க” என்று இகழ்வாகப் பேசிக் கொண்டிருக்கும் போதே

கதவு தட்டப்படும் ஓசை கேட்க.… சட்டென்று பேசிக் கொண்டிருந்த தன் வார்த்தைகளை நிறுத்தினான் ரிஷி…


அதே நேரம்… வந்திருப்பது கண்மணி தான் என்பது தெரிந்ததால்… “வா மணி… கதவு சும்மாதான் சாத்தியிருக்கு” என்று உள்ளிருந்தே ரிஷி குரல் கொடுக்க… கண்மணியும் கதவைத் திறந்து உள்ளே வந்தாள்…

கண்மணி வந்ததின் காரணம்…


தாயும் மகனும் ’கண்மணி இல்லம்’ மீண்டும் திரும்பி வர… குழந்தைகளுக்கு ட்யூஷன் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த கண்மணியும் ஊருக்கு கிளம்புவதாகச் சொன்ன இலட்சுமி மீண்டும் வந்ததை ஆச்சரியமாகப் பார்க்க.. ரிஷி… தன் அன்னை இன்னும் இரண்டு நாட்கள் இங்கே தங்கப் போவதை அவளிடம் தெரிவித்தான் முகமெங்கும் புன்னகையோடு…


அதன் நடராஜன் எதுவும் கூறாமலே… ரிஷி அவர்களுக்கான அன்றைய இரவு உணவை தயாரிக்க ஆரம்பித்தாள்… ரிஷி மற்றும் லட்சுமியிடமும் சொல்லி விட்டாள்…


லட்சுமியையும் ரிஷியையும் தன் வீட்டுக்கு அழைக்க நினைத்தாள் தான்,…. ஆனால் ரிஷி காலையிலேயே சாப்பிட வராமல் போனது ஞாபகத்திற்கு வர… உணவைத் தயார் செய்து…ரிஷியின் அறைக்கே கொண்டு சென்றிருந்தாள்…

---

உள்ளே நுழைந்தவளுக்கு… தாய் மகன் அமர்ந்திருந்த விதம் ஒரு அழகான பாசக் கவிதை போல் தான் தோன்றியது….


லட்சுமி நாற்காலியில் அமர்ந்திருக்க…. ரிஷி தரையில் அமர்ந்திருந்தபடி… தன் தாயின் மடியில் தன் தலை சாய்ந்திருக்க… அந்த 25 வயது இளைஞனை… குழந்தை போல் தலை கோதி சீராட்டிக் கொண்டிருந்தார் அந்தத் தாய்…


தன்னையுமறியாமல் அவர்களை ரசித்தபடியே கண்மணி உள்ளே வர… அப்போதும் ரிஷி தன் தாயின் மடியின் சாய்த்திருந்த தலையை எடுக்க வில்லை…. அதே நிலையில் இருந்தபடியே… கண்மணியைப் பார்த்து புன்னகைத்தவன்…


அவள் கையில் உள்ள பாத்திரங்களையும்… அதைக் கீழே விழாமல் கவனமுடன் அவள் கொண்டு வருவதையும் பார்த்தவுடன்… இப்போது எழ முயல… அதற்குள் கண்மணி அவன் எதிரில் லாவகமாக அமர்ந்து தான் கொண்டு வந்த பாத்திரங்களை வைக்க… ரிஷி…. அவற்றைப் பார்த்தபடியே…

“ஏன் மணி… இதெல்லாம்…. நாங்களே வந்திருப்போம்ல…. உனக்கு ஏன் இவ்வளவு சிரமம்” என்று தணிந்த குரலில் அவளின் உதவியை ஏற்றுக் கொண்ட தொணியில் பேச…


“ஹ்ம்ம்ம்ம்… உங்களாலதான் இவ்வளவு சிரமம்…. சார் காலையிலேயே எங்க வீட்டுக்கு வராம போய்ட்டீங்க… தன்மானச் சிங்கம் இப்பவும் அதே மாதிரி போய்ட்டீங்கன்னா…. எனக்கு சாப்பாடை வேஸ்ட் பண்றது பிடிக்காது… அதுனாலதான் இங்கேயே கொண்டு வந்துட்டேன்…” என்று பொய்யான கோபத்துடன் கூற… லட்சுமி மலர்ந்த முகத்தோடேயே தன் இரு புறமும் அமர்ந்திருந்த இருவரையும் பார்த்தபடி இருக்க..


கண்மணி சுற்றும் முற்றும் பார்த்தவளாக


“ஓ… சாப்பாடுத் தட்டு… ஒண்ணுதான் இருக்கா… ஒரு நிமிசம்…. எடுத்துட்டு வந்துறேன்…” என்றபடி மீண்டும் கீழ் இறங்க…


ரிஷி அவளிடம்


“கண்மணி… அது போதும்” என்று வேக வேகமாகச் சொல்ல… அதற்குள் கண்மணி கீழ் இறங்கியிருக்க…ரிஷி… தலையைச் சிலுப்பியபடி.. திரும்ப… லட்சுமி… எழுந்திருந்தார்… கண்மணி கொண்டு வந்திருந்த இரவு உணவைப் பார்வையிட்டபடியே தட்டை எடுத்து கழுவ ஆரம்பிக்க…


“ரொம்ப நல்ல பொண்ணுடா… கண்மணி… நமக்காக காலையிலும்… இப்போ நைட்டும் டிபன்… ” என்ற போதே…


“ரொம்ம்ம்ம்ம்ப நல்ல பொண்ணுதான் தான் அம்மா…” என்று சத்தமாகச் சொன்னவன்…


அடுத்து தாய்க்கு கேட்காத குரலில் தனக்குள் பேசிக் கொண்டான்