கண்மணி... என் கண்ணின் மணி-21

அத்தியாயம் 21:


ரிஷி அதிகாலை 5 மணிக்கே எழுந்து விட்டான்....... தூங்கினால் தானே எழுந்திருப்பதற்கு…. படுக்கையில் புரண்டு கொண்டிருந்ததில் இருந்து தன்னை மீட்டெடுத்துக் கொண்டவன்… தன் அறையிலிருந்து வெளியேறி மாடிப்படியில் நின்று அந்த அதிகாலை ரம்மியத்தை ரசித்தபடி நேரத்தை கடத்திக் கொண்டிருந்தவனின் கவனத்தை வாசல் தெளிக்கும் சத்தம் திசை திருப்ப... திரும்பிப் பார்க்க... கண்மணி தான் அது...


வந்தவள்.... பரபரவென்று.... வாசல் தெளித்து... கோலம் போட்டு... அதே வேகத்தில் உள்ளேயும் போனவள்... தன் வேலையில் மட்டுமே கவனம் கொண்டிருந்தாள்.... இவன் இருக்கும் பக்கம் எல்லாம் திரும்பவே இல்லை...


ஆனால் ரிஷி... கண்மணி தன்னைப் பார்க்காத வரை நல்லது.. முறைப்பதற்கு வசதி என்ற ரீதியில் அவளையே முறைத்தபடி நின்று கொண்டிருந்தான்.... அங்கு ஒருவன் தன்னை முறைத்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணமே இல்லாமல் கண்மணியும் தன் கடமையே கண்ணாக இருந்து… தன் வேலையை எல்லாம் முடித்து உள்ளே போக… இவனோ அவள் தன் கண்பார்வையில் இருந்து மறைந்தால் என்ன… அவள் இருக்கும் திசையே போதும் என்று வகையில் முறைத்துக்கொண்டிருந்தான் இப்போதும்… ஆனால் நேற்றிரவு இருந்த அளவுதான் இல்லை….


காரணம் இல்லாமலும் இல்லை… 4 மணிக்கே கண்மணியிடமிருந்து வந்த குறுஞ்செய்தி… அவள் அனுப்பியிருந்த விதம்... மன்னிப்புக் கேட்ட விதம் என அனைத்தும் இவன் கோபத்தை மட்டுப்படுத்தி இருக்க… இந்த வீட்டையே மாற்றி செல்லும் அளவுக்கு கண்மணி மேல் கோபத்தில் இருந்த ரிஷி… கண்மணியின் ஒரு சில குறுஞ்செய்திகளில் தன் மனம் மாறிய விதத்தை நினைத்து தன் மேல் தான் கோபம் கொண்டிருந்தான்…அந்தக் கோபத்தோடுதான் மனசாட்சியோடும் கோபம் கொண்டு சண்டை போட்டுக் கொண்டிருந்தான்


”உன்னை ஒரு பொண்ணு… கன்னத்திலயே அறஞ்சிருக்கா… ஒரு அறையோட நிற்கலை…. உனக்கு மானம் ரோசமே இல்லையா… அவ மன்னிப்பு கேட்டு அனுப்பின ஒரு மெசேஜ்ல கோபமெல்லாம் போயிருச்சா…” மனசாட்சியைக் காறித் துப்பிக் கொண்டிருக்க…


அதுவோ… நான் இன்னும் உன்னுடன் தான் இருக்கின்றேன்… என்ற ரீதியில் அடிமனதில் இன்னும் உயிரோடிருக்க… யாரோ ஒருத்தி அறைந்ததையே துடைத்து தூர தூக்கிப் போட்ட மனசாட்சிக்கு…. தன் உருவமாக இருக்கும் ரிஷியின் வார்த்தைகள் எல்லாம் எம்மாத்திரம்… துடைத்து தூரப் போட்டு விட்டு… திரும்ப இவனுக்கே பதிலடி கொடுத்தது…


“நீ பண்ணினது மட்டும் சரியா என்னா… உனக்கு என்ன உரிமை… அவ கையைப் பிடித்து இழுப்பதற்கு… ஒரு பொண்ணா அவ பண்ணினதுல என்ன தப்பு…” என்று தன் தரப்பு வாதத்தை இவனிடம் வைக்க…


“அந்த ஒரு காரணத்தினாலதான்… நானும் மன்னித்தேன்… மற்றபடி அவள் மெசேஜ் பார்த்தெல்லாம்…. மன்னிக்கவில்லை” என்று இவனும் வீம்பாக நின்றவன்… தன் மனசாட்சியை மீண்டும் தனக்குள் பூட்டியவனாக இருக்க… கண்மணியோ இவன் புறம் திரும்பாமாலேயே போனது அவனுக்கு கடுப்பாகத்தான் இருந்தது…


“ஒருத்தனை நேத்து கன்னம் மாறி மாறி அடிச்சுட்டு… கொஞ்சம் கூட திரும்பிப் பார்க்கிறாளா… திமிரு… விக்கி சொல்கிற மாதிரி இவளுக்கு திமிர் தான் போல… நாமதான் தப்பா நினைத்து வைத்திருக்கோம்”


ஆக மொத்தம் அவள் போனில் மன்னிப்பு கேட்டதாலோ எதுனாலோ… கண்மணி மேல் கோபம் என்பது போய்… திமிர் பிடித்தவள் என்றளவில் இறங்கியிருந்தான் ரிஷி… உடல் அலைச்சல் , மன உளைச்சளையும் மீறி அவமான உணர்வு அவனை நேற்றிரவு உறங்க விடாமல் பாடாய் படுத்தி இருக்க… இப்போது அவமானம் என்ற எண்ணம் போய்... மனதிற்குள் அவனையுமறியாமல் நிம்மதி ஏற்பட்டிருக்க… உறங்க வேண்டும் போல் தோன்றியது ரிஷிக்கு…தினகரன் மற்றும் வேலனுக்கு தான் தாமதமாக வருவதாக கூறி… நேற்று அவர்களும் அத்தனை மணி நேரம் இவனோடு இருந்த காரணத்தால் அவர்களையும் தாமதமாகவே வர சொல்லிவிட்டு…. கண்ணயர்ந்தான் ரிஷி… வெகு நாட்களுக்குபிறகு அவனுக்குப் பிடித்த அதிகாலை உறக்கம்… ரிஷிக்கு அன்றுதான் கிடைத்தது…

….


தன் தந்தையின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால்... கண்மணி அன்று வேலைக்கு செல்லவில்லை.. அதிகாலையிலேயே ரிஷி அறைக்குப் போகப் பிடிக்கவில்லை… ஆனால் 6 மணிக்கெல்லாம் தொழிற்சாலைக்கு கிளம்புவன் என்பதால் தன் வீட்டு வாசலிலேயே அவனுக்காக காத்திருக்க… அவனோ வரவே இல்லை… அதே நேரம் தான் அனுப்பிய குறுஞ்செய்திக்கு பதில் வராவிட்டாலும் அவன் பார்த்திருக்கின்றான்… படித்திருக்கின்றான் என்பது தெரிய… எப்படியும் அவன் வரும் போது பைக் சத்தம் கேட்கும் தானே… அப்போது அவனோடு பேசிக் கொள்ளலாம்… மன்னிப்பும் கேட்டுவிடலாம்… என்று தனக்கான அன்றைய வழக்கமான வேலைகளில் தன்னை மூழ்கடித்துக் கொண்டாள் கண்மணி…. இதற்கிடையே நடராஜனை எழுப்பி… அவருக்கான காலை உணவையும் மருந்தையும் கொடுத்து முடித்திருக்க… உட்கொண்ட மருந்துகளின் விளைவால் நட்ராஜ் மீண்டும் உறங்கி இருந்தார்…


கிட்டத்தட்ட... 9 மணி அளவில்... தபால்காரர்… வந்து இவர்கள் வீட்டு தபால் பெட்டியில் ரிஷிக்கு வந்திருந்த தபாலைக் கொண்டு வந்து தர… வீட்டு வேலையில் மூழ்கி இருந்தவள் அப்போதுதான் வெளியே வந்தாள்… பதிவுத்தபால் என்று ரிஷியைக் கேட்க… கண்மணியும் அவன் இருக்கும் வீட்டு முகவரியைச் சொன்னாள்…


தபால்காரர் ரிஷியின் வீட்டை நோக்கிப் போக… கண்மணியும் ரிஷி வருவதற்காக காத்திருக்க… அவனோ வெளியே வந்து அவனுக்கான பதிவுத்தபாலைப் பெற்றபடி மீண்டும் வீட்டுக்குள் சென்றுவிட்டான்… இவள் இருந்த புறம் கூட இப்போது ரிஷி திரும்பவில்லை…


அதே நேரம் ரிஷி… வெளியே கிளம்பத் ஆயத்தமாக இருந்ததைப் போல… கண்மணியின்.. மனதுக்குள்... தோன்ற


“பட்(ட)றைக்கு கிளம்பிட்டாங்களா… இப்போ விட்டா… நைட் லேட்டாத்தான் வருவாங்க.. ” என்று யோசித்தவள்…


“போ கண்மணி… போ போ” என்று அவளை அவள் மனசாட்சி உந்த…


அடுத்த நொடி…. ரிஷி தங்கியிருந்த அறையின் வாசலின் முன் நின்றிருந்தாள் கண்மணி….


இவள் அறைக்கு முன் சென்று நின்ற அதே நொடி… ரிஷியும் கதவைத் திறந்து… ஒரு கையில் ஹெல்மெட், இன்னொரு கையில் தோளில் மாட்டும் பேக்… என ரிஷி இரு கையிலும் பொருள்களை வைத்தபடி வெளியே வர நினைக்க… கண்மணியைப் பார்த்தான் தான் அவனும்…. ஆனாலும் பேசவில்லை….


கதவுக்கும் மாடிப்படியின் சுவருக்கும் இடையில் ஒருவர்தான் நிற்க முடியும்... இரண்டு பேர் என்றால் கொஞ்சம் கஷ்டம் தான்... அப்படிப்பட்ட இடத்தில் ஏற்கனவே கண்மணி நின்று கொண்டு இருக்க... ரிஷி அறையை விட்டு வெளியே வந்து கதவை பூட்ட நினைத்தால் கண்மணியின் மீதுதான் மோதிக் கொள்ள நேரிடும்....


அதனால் கதவைப் பூட்டாமல் வெளியே வராமல் அறையின் நிலைப்படியிலேயே நின்றபடி கண்மணியை என்னவென்று என்பது போல் பார்க்க... அவனின் அந்தக் கோபம் என்னமோ பள்ளி செல்லும் சிறுவனின் கோபம் போல… மனதில் வஞ்சம் இல்லாத போல் கண்மணிக்குள் இருக்க… அதுவே கண்மணிக்கு மனதினுள் நிம்மதியை வார்க்க…


அதே நிம்மதியில்…. கண்மணி தன் வழக்கமான புன்னகையின் அளவை இன்னும் கொஞ்சம் அதிகரித்து...

“குட்மார்னிங்க்” என


ரிஷி.... அதற்கு பதில் கூற வில்லை.... ஆனால் அதற்கு பதிலாக.... தன் மணிக்கட்டில் இருந்த கைக்கடிகாரத்தை திருப்பிப் பார்த்து


“இன்னைக்கு டேட் என்ன... ஃபைவா...” என்றான் நக்கலாக... அவன் எதற்காக அப்படி கூறுகிறான் என்பது புரிந்த மாத்திரத்திலேயே கண்மணியின் முகம்... சற்று முறைப்புடன் கூம்ப...


அவள் கூம்பிய முகம் தந்த திருப்தியோடு…


“இல்ல ஐந்து தேதிக்குள்ள வாடகை தரலைனாத்தானே.... நீ வாடகை வசூலிக்க அந்தந்த வீட்டுக்கு போவ.... அதுனாலதான் கேட்டேன்... நீ கரெக்டாத்தான் இருப்ப.... நான் காலெண்டர்லாம் பார்க்கவே தேவையில்லை… என் வீட்டுக்கு வந்திருக்கேன்னா இன்னைக்கு டேட் ஃபைவ் தானே” என்றவன் குரலில் டன் டன்னாக நக்கல் கொட்டிக் கிடந்தது...


“ஹலோ.... ஹலோ… நிறுத்துறீங்களா.... போன வாரம் வாடகை கொடுத்த உங்களுக்கு அது ஞாபகம் இல்லையா... நானும் நம்பிட்டேன்...” என்று அவனின் குத்தலுக்கு.. பதிலாக அதே தொணியில் இவளும் கூற...


“பின்ன எதுக்கு… இந்தப் பக்கம்... மணியோசை ஒலிக்குது” என்று கடுப்பாக முகத்தை வைத்து கேட்ட போதும் ரிஷிக்குமே நேற்று இருந்த கோபமெல்லாம் வடிந்துதான் போய் இருந்தது....


“நேத்து வீட்டையே மாத்தலாமானு யோசிச்சவனாடா நீ... இப்போ இப்படி பேசிட்டு இருக்க... இதுதானடா உன் கோபத்தோட இலட்சணம்” என்று மனதின் குரல் எங்கோ ஒலிக்க… அதற்கு பதில் சொல்லாமலேயே மீண்டும் பூட்டி வைத்தவன்... கண்மணியைப் பார்த்து....


“எக்ஸ்கியூஸ்மி! ஹவுஸ் ஓனரம்மா.... நான் கம்பெனிக்கு போகனும்.. . சோ… வீட்டைப் பூட்டனும்... அதைச் செய்யனும்னா... நீங்க அடுத்தபடில இறங்கி நிற்கனும்... இல்ல... மேல ஏறனும்... எனக்கு லேட் ஆகிருச