அத்தியாயம் 20-2
ரிஷி.... தினகர் மற்றும் வேலனோடு தன் அறைக்குச் செல்லும் மாடிப்படியில் அமர்ந்திருந்தான்.… வேலனும் தினகரும் கடைசிப் படிகளில் அமர்ந்திருக்க.. அவர்களுக்கு மேலாக… மேலே இருந்த படியில் ரிஷி அமர்ந்திருந்தான்…
அவனது தலை வேறு விண் விண் என்று வலித்துக் கொண்டிருந்தது..... நேற்றிரவும் ஒழுங்கான தூக்கம் இல்லை.... நேற்று என்றில்லை… பல நாள் அவன் ஒழுங்காகத் தூங்குவதில்லை என்பதே உண்மை… பல நேரங்களில் அவனின் அயராத உழைப்பு அலைச்சல் மட்டுமே அவனுக்கு உறக்கத்தைக் கொடுக்கும்…
இன்றும் காலையில் இருந்தே அவனுக்கு ஓயாத வேலைதான்… திரையரங்கம் சென்றும் அங்கும் உறக்கம் இல்லை… அதன் பிறகு நடராஜுக்காக மருத்துவமனை என அழைந்தது… பின் கண்மணியைத் தேடி… அர்ஜூனோடு சண்டை அவனது அயற்சி இன்னும் அதிகரித்து இருக்க... எப்போதடா படுப்போம் என்றிருந்தவனுக்கு.... அப்போது தெரியவில்லை இன்றும் உறங்கப் போவதில்லை என்பது…
குடும்பம்… அவர்களைப் பற்றிய கவலைகள்… அவர்கள் வாழ்க்கை குறித்த திட்டங்கள்… தொழிற்சாலை வழக்கு என இந்தக் காரணங்கள் தான் இதுவரை அவன் உறக்கத்தை கலைத்திருக்க… அவன் உறக்கம் தொலைந்து போக காரணமான காரணிகளில் முதன் முதலாக கண்மணி என்பவளும் அவன் எண்ணங்களுக்குள் அடி எடுத்து வைத்திருந்தாள்
ரிஷியின் கன்னங்களில் கை பதித்து… அவன் உறக்கத்தை இன்று எடுத்துக் கொண்டவளும் அவள் தான்… அவன் கரங்களைத் தன் கரங்களோடு கோர்த்து அவனின் வறண்ட வாழ்க்கையில் அடி எடுத்து வைத்தவளும் அவள் தான்… அனைத்தும் சரியாகி… ரிஷி தன் வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கும் போது தானாகவே அவனை விட்டு விலகியவளும் இதே கண்மனி தான்
இன்றைய ரிஷி யாரோ ஒரு கண்மணியை சரியாக புரிந்து வைத்திருந்தான் தான்… நட்ராஜின் மகளான கண்மணியை மன்னித்து அவள் செய்த தவறை மறந்து விட்டான்…. ஆனால் கண்மணியின் கணவனாக ரிஷி… அவன் மனைவியை சரியாக புரிந்து வைத்திருந்தானா…
காலத்தின் சுழற்சியில்… பாலைவனமான ரிஷியின் வாழ்க்கையில் அவனோடு வந்து சேர்ந்த கண்மணியை… அதே காலத்தின் சுழற்சியில்…. அவன் நினைத்த வாழ்க்கை வந்து சேர்ந்த போது… கை நழுவவும் விட்டிருந்தான் ரிஷி…
கண்மணி என்பவள்… ரிஷியின் கண்ணின் மணியாக மாறியிருந்த போதிலும்….
----
நடராஜன் எப்போது எழுந்திருப்பார் என்றே தெரியவில்லை.... அது மட்டுமின்றி...
.
‘எழுந்து அவர் மகள் எங்கே என்று கேட்டால்.... என்ன சொல்வது.... இருக்கிற நிலைமையில் நாம் ஏதாவது சொல்லி.... அவருக்கு ஏதாவது ஆகி விட்டது என்றால்...’
“இந்த பொண்ணு எங்க போச்சு...” என்று தனக்குள் சொல்லிக் கொண்டவனுக்கு
”இருந்தாலும் அவளுக்கு கூடுதல் தைரியம் தான்.... அன்றே இவன் பார்த்தான் தானே... நடு இரவு 2 மணிக்கு தைரியமாக ரோட்டில் நின்றவள் தானே....
ரிஷியைப் பொறுத்தவரை.... நடராஜனின் மகள் காணவில்லை.... நடராஜன் சாதரணமாக இருந்திருந்தால் அவனுக்கு இந்த அளவு மன உளைச்சல் இருந்திருக்குமா என்று தெரியவில்லை....
ஒருபுறம் உடம்பு முடியாத நிலையில் நடராஜன்... மறுபுறம்... அவர் மகள் எங்கே போனாள் என்ற எரிச்சல்...
’நமக்கு இருக்கிற நிலைமல இந்த இம்சை வேறா....’
தலையைப் பிடித்தபடி அமர்ந்திருந்தவனைப் பார்த்த வேலன்...
“என்ன அண்ணாத்தே.... உனக்கும் உடம்பு சரியில்லையா..... கண்ணெல்லாம் சிவந்து போய் இருக்கு.... முகமும் வாடிக் கிடக்கு.... நம்ம முதலாளிக்கும் சரி ஆகிருச்சு தானே.... மணி அக்காவை நெனச்சு பயப்புடிறியா அண்ணாத்த…. மணி அக்காவுக்கும் ஒண்ணு ஆகாது.... பயப்படாதீங்க” என்று அவன் இருக்கும் நிலை புரியாமல் பேச....
“ப்ச்ச்… அதெல்லாம் இல்லை.... கண்மணிய தேடுற விஷயத்தை அவ தாத்தா பார்த்துகிறேனு சொல்லிட்டார்.... எனக்கு கவலை.... நடராஜ் சார் எழுந்து கேட்கும் போது என்ன சொல்றதுனுதான்.... அவர் எழுவதற்குள் மணி வந்துட்டா.... ஒரு பிரச்சனையும் இல்லை...” என்று சொல்ல
“ஏண்ணே... ஒருவேளை அவங்க தாத்தாவே கடத்தி வச்சுட்டு ... தெரியலைனு சொல்றாரோ...”
“இல்லடா.... நான் போய்க் கேட்கும் போதுதான் அவங்களுக்கே விஷயம் தெரியும் போல...அவங்களோட ரியாக்ஷன் அந்த மாதிரி தோண வைக்கல.... பார்க்கலாம்.... அவரோட செல்வாக்கை வச்சு விசாரிக்கிறேனு சொல்லிட்டார்” என்ற ரிஷிக்கு கண்மணியைப் பற்றி பெரிதாக கவலை இல்லைதான்….
அடுத்த வீட்டுப் பெண் என்ற அளவுகோலினால் அளந்ததால் அவன் கவலையின் அளவு குறைவுதான்… “எங்கே போயிருப்பாள்…” என்று அவன் மூளையில் மட்டும் தான் சிந்தனைகள் ஓடியதே தவிர அவன் இதயம் கண்மணிக்காக பெரிதாக துடிக்க வில்லை….
அது ரிஷிக்கு மட்டும் இல்லை…. இந்த உலகின் பெரும்பான்மையான மனிதர்களின் மனநிலைதான்… அதனால் அவனைச் சொல்லியும் குற்றம் இல்லைதான்…..
ஆக கண்மணியைப் பற்றி அவள் தாத்தா விசாரித்துக் கொள்வார் என்றிருக்க…
“அடப் போண்ணா… உனக்கு விபரம் பத்தலை…. விச்சு புத்துல ” என்று வேலன் ரிஷியிடம் கிண்டலாக பேச ஆரம்பித்தான்... ...
வேலன் விளையாட்டுத்தனமாக இருந்த போதிலும்…. தினகர் கொஞ்சம் தீவிரமாகத்தான் இருந்தான்… வேலனின் கிண்டல் பேச்சை நிறுத்தியபடி
“இவன் ஒருத்தன் ஆ ஊனா பழமொழிய ஆரம்பிச்சுருவான்... சீரியஸா பேசிட்டு இருக்கும் போது...” என்று வேலனை பேசாமல் தடுத்து நிறுத்தியவன்.. ரிஷியிடம்
“அண்ணாத்த... என்னமோ… நாமளே போலிஸ் ஸ்டேசனுக்கு போறதுதான் நல்லதுனு படுது....” என்று கூற...
நாரயணனனே பார்த்துக் கொள்வாரே என்று தோன்றினாலும்… நட்ராஜ் கேட்கும் போது… கண்மணியின் தாத்தா சொன்னதால் காவல் நிலையம் போகவில்லை என்று சொன்னால் நட்ராஜ் தவறாக எடுத்துக் கொள்வாரோ என்ற எண்ணம் வர…. காவல் நிலையத்துக்கு போகலாம் என முடிவு செய்தபடி தினகரையும் தன்னோடு அழைக்க... யோசனை சொன்னவனோ
“அய்யோ ஆர்கே .... எனக்கு போலிஸ் ஸ்டேசன்னா கொஞ்சம் அலர்ஜினா... அதுமட்டும் இல்லை எங்க நைனாக்கு தெரிஞ்ச்சது.... முதுகுத்தோளை உரிச்சுருவாரு... துணைக்கு அவனக் கூட்டிட்டு போங்க..” ... தினகர் அந்தர் பல்டி அடிக்க...
“யோசனை மட்டும் கொடுக்க சாருக்குத் தைரியம் இருக்கு… ஆனால் நேரில் வர தைரியம் இல்லை” தினகரை முறைத்தபடி ரிஷியிடம் சொன்னவன்...
“சரி நீ இரு... நீ வாடா” என்று வேலனை அழைக்க... வேலன் பெரிதாக ஆட்சேபிக்க வில்லை...
“சரி” என்றவன்...
“அண்ணாத்தே... போலிஸ் ஸ்டேசனுக்கு நான் வர்றேன்... ஆனால் எனக்கு ஒரு டவுட்” என்று கூற...
ரிஷியே பொறுமையின் பிறப்பிடம் தான்... அவனே தன் பொறுமையை இழுத்துப் பிடிக்க போராடிக் கொண்டிருந்தான்...
“என்னடா உன் டவுட்..”- கடுப்பாகக் கேட்டான்...
“கோப்படாதீங்க ஆர்கே... சொல்ல வர்றதை கேளுங்க” என்று கூலாகக் வேலன் சொல்ல...
ரிஷி அவன் என்ன சொல்ல வருகிறேன்... என்ற ரீதியில் அவனையே பார்த்துக் கொண்டிருக்க
“ஒருவேளை... இப்படி இருக்குமோ” என்று சிந்தனையின் பிடியில் இருப்பது போல் எங்கோ பார்வையை வைத்தபடி பேச
“டேய்.... ஏதோ கொஞ்சம் நல்லவனா இருக்கேன்.... கொலைகாரனா மாத்திராத...” ரிஷி பொறுமையைக் காற்றில் பறக்க விட்டவனாய்... பல்லைக் கடித்தபடி பேச..
தினகரும் இப்போது
“சொல்லித் தொலைடா...” என்று அதட்ட
“அது...அது நம்ம மணி அக்கா... யாரோடனாச்சும் ரூட் விட்டு ஜூட் விட்ருக்குமோ.....” முடிக்க வில்லை... ரிஷி தன் கையாலேயே ஒரு அடி அவன் முதுகில் வலிக்கும் படி வைத்திருந்தான்......
தன் முதுகைத் தடவியபடியே... “அண்ணாத்தே வலிக்குது” என்று வலியால் வேலன் முணங்க..
“இதுக்கு மேல ஏதாவது பேசுன.... தோதா காலுக்கு கீழ தான் உட்கார்ந்திருக்க… எட்டி உதைச்சேன்னு வை… எங்க விழுவேன்னு எனக்கே தெரியாது… வாய மூடிட்டு என்னோட கிளம்பு... கண்மணியை பற்றி எனக்குத் தெரியும்.... அவ அந்த மாதிரி பொண்ணு இல்லை... அப்படியே லவ் பண்ணினாலும்... இந்த மாதிரி திருட்டுத்தனமா ஒடுற அளவுக்கு பயந்தவளும் இல்லை... புரியுதா” என்று அடித்துச் சொல்ல...
“ம்க்கும்.... என்ன தெரியும் இவருக்கு.......” என்று தனக்குள் நினைத்தவன்...
“ஹ்ம்ம்ம்ம்ம் விச்சு((which) புத்துல விச்சு(which) பாம்போ... கூ(who) நோஸு(knows)” என்று மெதுவான குரலில் முணுமுணுக்க
ரிஷிக்கு முதலில் புரியவில்லை... புரியவில்லை என்பதை விட… கேட்கவில்லை என்பதுதான் உண்மை…
“என்னடா... என்ன சொல்ற...” என்று ரிஷி மீண்டும் கேட்க
“ஒண்ணும் இல்ல... வாய மூடிட்டு வர்றேனு சொன்னேன் ஆர்கே அண்ணாத்த...” வேலன் சொல்ல
“அது ஒண்ணுமில்ல.... எந்த புத்துல எந்த பாம்பு இருக்குமோ... யாருக்கு தெரியும் அதத்தான் அந்த லட்சணத்தில சொல்றான்” தினகர் தான் ரிஷியிடம் எடுத்துக் கொடுத்தான்...
வேலன் சொன்னதை சொல்லிப் பார்த்த... ரிஷிக்குக்கும் சிரிப்பு வந்து விட... இப்போது விளையாட்டாக வேலனை நாலு சாத்து சாத்தியவன்
“அடப்பாவி... விச்சு!!!... புத்துனு!!!! முடியலடா... உங்களை எல்லாம் வச்சுகிட்டு.... ஒரு கொலை கூட சீரியஸா பண்ண முடியாது போலடா” என்று தன் புன்னகை முகம் மாறாமல் சொல்ல… சூழல் கொஞ்சம் கலகலப்பாக... அடுத்த சில நிமிடங்களில்
தினகரை அங்கேயே விட்டு விட்டு.... வேலனுடன் காவல்நிலையத்திற்கு கிளம்ப ஆயத்தமாக.... அப்போது...
கண்மணி....அவள் வீட்டுக் காம்பவுண்ட்டுக்குள் பிரவேசித்தாள்... தன் பைக்கில்.....
ரிஷி வேலன் மற்றூம் தினகர் மூவரும்.... கண்மணியையே பார்த்தபடி இருக்க...
இத்தனை மணி நேரம் கழித்து வரும் ஒரு பெண்ணின் பயம்... கண்மணியின் முகத்தில் கொஞ்சம் கூட இல்லை...
கண்மணி பைக்கை நிறுத்த.... அந்த பைக்கைத் தொடர்ந்து இன்னொரு பைக்கில் ஒரு பெண் காவல் அதிகாரி.... இறங்க... வேலனும் தினகரும்... “ஆ வென்று அதிர்ச்சியில் கண்கள் விரிய நின்றிருக்க.... ரிஷியோ கைகளைக் கட்டியபடி கண்மணியையே பார்த்தபடியே இப்போதும் நின்றிருந்தான்...
கண்மணி... தன்னோடு வந்த...பெண் காவலாளியிடம்
“தேங்க்ஸ் மேடம்....” என்று சொன்னபடி பேச ஆரம்பிக்க... வந்த அந்த பெண் காவலாளி இவர்கள் மூவரையும் நோட்டமிட்டபடி... கண்மணியிடம் ஏதோ கேட்க... தினகர் ரிஷியின் காதில்...
“அண்ணாத்தே.... இது என்ன புதுக்கதை... வாங்க நாம உங்க வீட்டாண்ட போய் நின்னுக்கலாம்... அந்த பொம்பள போலிஸ் பார்க்கிற பார்வையே சரி இல்லை... நான் இன்னைக்கு இங்க வந்திருக்கவே கூடாது...” என்று புலம்ப ஆரம்பிக்க...
வேலன்... ரிஷியிடம்...
“ஆர்கே.. நான் சொன்னதெல்லாம் சும்மா ல்லுலாய்க்கு.... அக்காகிட்ட போட்டு விட்றாதீங்க... அதுபாட்டுக்கு அந்த போலிஸ் அக்காகிட்ட சொல்லிறப் போகுது…” என்று அவன் தன் பங்குக்கு சொல்ல...
ரிஷி அவர்களை… அவர்கள் விளையாட்டுத்தனமான வார்த்தைகளை…. எல்லாம் கவனிக்க வில்லை.. அவன் பார்வை எல்லாம் கண்மணியிடமே என்பது போல… ரிஷி கண்மணியையே பார்த்தபடி நின்றிருக்க..
கண்மணி என்ன சொன்னாளோ... வந்த பெண் போலிஸ் அடுத்த சில நொடிகளிலேயே கிளம்பி விட... கண்மணி.... இவர்களை நோக்கியபடி வந்தாள்...
வரும் போதே இவர்கள் என்ன செய்கிறார்கள் இங்கே.... என்ற ரீதியிலேயே கண்மணியின் பார்வை இருக்க....
“அக்கா.... எங்க போயிட்டீங்க.... உங்களை எங்கெல்லாம் தேடி அலஞ்ச்சோம் தெரியுமா” என அவள் சிந்தனையைக் கலைத்தது வேலனின் குரல்தான்...
ஒருவேளை வேலன் பேசி இருக்காவிட்டால்... கண்மணி அவர்கள் தன் வீட்டின் முன்னால் நின்றிருப்பதை வைத்து... தன் தந்தையினைப் பற்றி எண்ணி இருப்பாளோ என்னவோ... ஆனால் அவளை சிந்திக்க விடாமல் வேலன் பேச ஆரம்பிக்க...
“உனக்கென்ன வேலை இங்க.... அதுமட்டும் இல்லாமல் நீங்க எதுக்கு என்னைத் தேடி அலஞ்சீங்க” சாதரணமாக அலட்சியமாக எதிர்கேள்வி கேட்க...
அவளது அலட்சியமான கேள்வியில் இலேசான கோபம் ரிஷிக்குள்ளும் கோபம் எட்டிப்பார்த்ததுன் தான்…
இருந்தும் அதை அடக்கியபடி ரிஷி எரிச்சலாக கேட்டான்...
“மணி என்ன ஆகுது.... தெரியுமா.... கிட்டத்தட்ட ஒரு மணி… எதுக்கு தேடுனீங்கனு அசால்டா கேட்கிற.... ”
அவனது குரலில் தொணித்த எரிச்சல் கண்மணிக்கு புரிய.... ரிஷியின் முன்னால் வந்து நின்று....
மூவரையும் ஒரே பார்வை பார்த்தவள்...
“எதுக்கு தேடுனீங்கனு கேட்கலை...” நிறுத்தியவள்
மூவரையும் சுட்டு விரலால்.. ஒன்று சேரச் சுட்டிக் காட்டியபடி...
“நீங்க எதுக்கு தேடுனீங்கனு கேட்டேன்....” நிதானமாக அதே நேரத்தில் ‘நீங்க’ என்ற வார்த்தையில் அழுத்தம் வைத்து கேட்க...
இப்போது ரிஷிக்கு கோபம் தலைக்கேறியதுதான்.... ஆனாலும் அவளிடம் காட்டாமல்...
“டேய் நீங்க கிளம்புங்கடா” என்று வேலன் தினகரை கிளம்பச் சொல்ல...
அவர்களும் சரி என்றபடி தலையாட்டியபடி அங்கிருந்து நகர....
ஏனோ இப்போதும் ரிஷிக்கு போக மனமில்லை... அவளின் அலட்சிய பாவம் புரிந்த போதும்... அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கண்மணியிடம்
“எங்க போன... ஏன் இவ்வளவு நேரம்.... யாரு அந்த லேடி போலிஸ்” என்று கோபமெல்லாம் இல்லாமல் சாதரணமாகத்தான் விசாரித்தான்... இப்போதும் அவன் நடராஜைப் பற்றி சொல்லவில்லை என்பது அவனுக்குத் தோன்றவில்லை…
அடுத்தடுத்த கேள்விகள்… அதுவும் தனக்குச் சம்பந்தமில்லாத மூன்றாம் நபரிடமிருந்து வர… ஒரு மாதிரியான அதிருப்தியான முக பாவனை கண்மணிக்குள் வந்திருக்க
கண்மணி..... ரிஷியை நேருக்கு நேராக ஒரு பார்வை பார்த்தாள்...
அதில் “இந்த கேள்விக்கெல்லாம் உனக்கு ஏன்.. நான் பதில் சொல்லியாக வேண்டும்.. .” என்ற தொணி அவள் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது...
ஆக மொத்தம்...கண்மணி அவன் கேட்ட கேள்விக்கெல்லாம் பதிலாக தன் வெற்றுப் பார்வையைத் தந்துவிட்டு.... அவனைக் கடந்து தன் வீட்டை நோக்கிப் போக...
அவளின் அலட்சியம் ரிஷியை அவனையும் மீறி அவனைக் கத்த வைத்தது....
“ஏய் உங்கிட்ட தானே கேட்கிறேன்...” கண்மணியின் முதுகைப் பார்த்து சத்தமாக கேட்க… கண்மணி அப்படியே நின்றாள்….
“என்ன... ஏய். யா.. வார்த்தைய பார்த்து பேசு” என்று எகிற ஆரம்பிக்கத்தான் நினைத்தாள்... ஆனாலும் தன்னைக் கட்டுக்குள் கொண்டு வந்து வார்த்தைகளை முழுங்க்கியவள்.. பின் ரிஷியின் புறம் திரும்பி அவனை எச்சரிப்பது போல சுட்டு விரலை அவள் முன் உயர்த்தியவள்... அதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றுமில்லை என்பது போல மீண்டும் திரும்பி நடக்க... ரிஷி சற்று எம்பி... சட்டென்று அவள் கரத்தைப் பிடித்து இழுக்கத்தான் நினைத்தான்.... அவளை போவதை நிறுத்த வேண்டும் என்ற நோக்கில்
அந்தோ பரிதாபம்…. அவன் நேரம் என்றுதான் சொல்ல வேண்டும்… கண்மனி கொஞ்சம் எட்ட போக… கண்மணியின் கைகளுக்குப் பதிலாக… அவளின் முந்தானையில்தான் அவன் கரம்பட்டிருக்க… வேகமாய் நீட்டிய கைகளை எடுக்க முடியாமல்… முந்தானையில் இலேசாக கைப் பட்டு இழுக்கப்பட்டும் விட… ரிஷியும் நொடியில் தவறு புரிந்து சட்டென்று விட்டு விட்டான் தான்…
ரிஷி விட்டு விட்டான் தான்… ஆனால் கண்மணிதான் விட வில்லை… அவன் கை அவளது முந்தானையைத் தொட்டு விட்ட அதே நொடி… கண்மணியின் கரங்கள் வேகத்தோடு ரிஷியின் கன்னங்களில் தன் பதிவைப் பதிந்திருக்க… ரிஷியே இதை எதிர்பாக்கவில்லை… அதிர்ச்சியோடு ரிஷி நின்றிருக்க…. அவள் ரிஷியை அங்கு அறைந்த சத்தம் வாசல் நோக்கி சென்று கொண்டிருந்த வேலன் தினகர் காதில் விழ… அவர்களும் ஒரு நொடி ஸ்தம்பித்து நின்று இருவரையும் நோக்கி நோடி வந்தனர்…
அடித்ததோடு மட்டுமல்லாமல் கண்களில் கனன்ற கோபத்தோடு அவனை உருத்து விழித்தவள்…ஒற்றை விரலைக் காட்டி பத்திரம் என்பது போல ரிஷியிடம் இப்போதும் முறைத்தவள்.…
“இந்த மாதிரி ஏதாவது என்கிட்ட வச்சுக்கிட்ட… இது சேம்பிள் தான்.. நீ யாரு என்கிட்ட கேள்வி கேட்க… ” கண்மணி பேசிக் கொண்டிருக்கும் போதே
ரிஷியும் அவன் பங்குக்கு ருத்திரனாக மாறியிருந்தான் என்றே சொல்ல வேண்டும்… தெரியாமல் பட்டால் என்னைப் பற்றி இவளுக்குத் தெரியாதா என்னைப் பற்றி இந்த ஐந்து வருடத்தில் அவள் அருகில் தானே இருக்கின்றேன்… அவன் எண்ணம் அவனுக்குள்… அந்த ஆற்றாமை தந்த ஆத்திரம் அவன் கண்ணை மறைக்க…… இப்போது வேண்டுமென்றே தன் வலது கையால்… கண்மணியின் வலது கைப்பற்றி இழுத்தவன் தன் அருகில் அவளைக் கொண்டு வர…
கண்மணி அதிர்ந்தது… சில நானோ நொடிகளே… அடுத்த நொடி… கண்மணியின் இடது கரம் ரிஷியின் கன்னங்களை மாறி மாறி பதம் பார்க்க…. தினகருக்கும்… வேலனுக்கும் முற்றிலும் எதிர்பாராத அதிர்ச்சி சம்பவமாக மாறி இருக்க…
ரிஷி முற்றிலும் தன் நிதானத்தை இழந்தவனாகக்… இப்போதும் கைகளை விடாமல் கண்மணியின் கைகளை இறுகப்பிடித்து தன் முகத்துக்கு நேராக அவளைக் கொண்டு வந்து நிறுத்த… இப்போது கண்மணியால்… அவனை அறைய முடியவில்லை…அதே நேரம் கைகளையும் அவனிடமிருந்து விலக்க முடியவில்லை
முதலில் தடுமாறியவள்... அதன் பின் சுதாரித்து தன்னை நிலைப்படுத்தி திரும்பியவள்... ரிஷியையும்... தன் கைகளைப் பற்றியிருந்த அவன் கைகளையும் மாறி மாறி பார்த்தவள் கண்களில்.. கோபம் தீப்பிழம்பாக மாறி இருக்க...
வேலனும் தினகரும்…பதட்டத்தோடு…
“அக்கா… அண்ணா” என்று அவர்கள் அருகில் வந்து விட
“நீலாம்… உன்னைலாம் நான் வேற ஒரு இடத்தில வச்சுருந்தேன்… நீ இவ்ளோதான்னு காட்டிட்ட… ” என்று ரிஷி உணர்ச்சி வேகத்தோடு பேச…
கண்மணியும் அதே தொணியில்
“நீயும் தான்… நீ யாருன்னும் எனக்கு காட்டிட்ட… யாரை எந்த இடத்தில வைக்கனும்ன்றதையும் புரிய வச்சுட்ட” என்ற போது அவளின் உக்கிரம்… அவள் மூக்குத்தியின் ஒளியிலும் இருந்ததோ என்னவோ… பளீரென்று மின்ன…
அந்த மூக்குத்தியின் ஒளி ரிஷிக்குள் என்ன மாயம் செய்ததோ... அவனுக்கே தெரியவில்லை... தன் உக்கிரம் குறைந்தவனாக…
“நடராஜ் சாரோட பொண்ணா மட்டும் நீ இல்லைன்னு வச்சுக்கோ” என்று மட்டும் சொன்னவனாக… அவளை தள்ளி விட்டுப் போக நினைக்க…
இப்போது கண்மணி
“என்ன… என்ன பண்ணுவ நீ… நீ யாருன்னு காட்டு… நான் … இந்த மணி யாருன்னு நானும் உனக்கு காட்டுகிறேன்… உனக்கு ஒண்ணு ஆனதுனா.. கேட்கிறதுக்கு கூட ஆள் இல்லை… உன்னைப் பற்றி தெரியாதா எனக்கு… பாவம் பரிதாபம்னு உனக்கு உதவி பண்ணுனா என்கிட்டேயே உன் வேலையைக் காட்டுவியா… நீ நட்ராஜ் பொண்ணுனு என்னைப் பாவம் பார்த்து விட்டுட்டு போறியா” என்று கேள்வி கேட்டு…. சளைக்காமல் அவனை விட்டு தள்ளி நிற்காமல் நின்றவளுக்கு… வார்த்தை மட்டுமின்றி அவள் சொன்ன விதமும் திமிராக மட்டுமே இருந்தது...
அதே நேரம் இவனுக்கா நாம் பாவம் பார்த்தோம் என்ற எரிச்சல்… மற்றபடி ஒரு பயமும் இல்லை… பதட்டமும் இல்லை…
விக்ரம் அடிக்கடி சொல்வான்… இவளைப் பற்றி… அதே போல் உணர்வு இப்போது ரிஷிக்கும் வந்திருக்க… அந்த அசூசை உணர்வில் கைகள் அனிச்சையாகவே அவள் கரத்தை விட்டு தன் கரத்தை விட்டு எடுக்க...
வேலனும் தினகரும் வேறு.... இதையெல்லாம் பார்த்தபடி... அதிர்ச்சியில் நிற்க... ரிஷி... வேறு எதுவும் சொல்லாமல்
“ச்சேய்.... நீ இவ்வளவுதானா...” என்றபடி.... தன் அறையை நோக்கி மாடிப்படியில்… ஏறியவன்... ஒரு நிமிடம் நின்று வேலன் தினகரைப் பார்த்து...
“இங்க என்ன வேடிக்கை.. கிளம்புங்க” என்று கோப முகமாகச் சொல்லியபடி விடுவிடுவென்று மாடி ஏறியவன் தன் அறைக்குள் சென்றும் கதவை அடைக்க...
இப்போதும் முறைத்துக் கொண்டுதான் நின்றிருந்தாள்…
வேலனும் தினகரும் கண்மணியிடம் தயங்கியபடியே
“அக்கா... முதலாளிக்கு உடம்பு சரியில்ல... ஆர்கே அண்ணாத்த தான் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போய்ட்டு வந்தாரு... சார் ஒண்ணுமே சொல்லாம மயக்கமாயிட்டாரு... அதுனாலதான் நாங்க உங்கள தேடுனோம்... “ என்று உடனடியாக நடந்ததை விளக்கிய போதுதான் கண்மணிக்கும் ஒரளவு புரிய… கண்மணியின் கோப முகம் சட்டென்று மாறியது ஒரே நொடியில்…. எப்படி கோபப் பட்டாளோ அதே போல தன் தவறையும் உடனடியாக உணர்ந்து கொண்டாள்….
ரிஷி என்றில்லை… எந்த ஒரு ஆண்மகனாக இருந்திருந்தாலும்… இவள் கை அவளைத் தொட்டவனைப் பதம் தான் பார்த்திருக்கும்… பெண்ணாக இவள் சரியாகத்தான் செய்தாள்… இப்போதும் அவனை அறைந்ததை நினைத்து அவள் வருத்தப்படவில்லை…
இங்கு யார் எப்போது எப்படி மாறுவார்கள் என்றே தெரியாத நிலையில்… நம்பிக்கை வைக்க முடியாத சூழ்நிலைதானே… அனுபவித்தவளாக எச்சரிக்கையாக இன்றும் இருக்க…
அதே நேரம்… ரிஷியாக இருக்கும் பட்சத்தில் யோசித்திருக்கலாமோ என்று மட்டுமே தோன்றியது… அதே போல் அவன் மேல் தவறில்லை என்று தெரிந்து விட்டதுதான் … ஆனால் இரண்டாம் முறை அவள் கையைப் பிடித்து இழுத்தபோது… அவன் ஆண்மகனாகத்தான் தன் வலிமையை இவளிடம் வன்முறையைக் கையாண்டானே… அது தவறில்லையா
யார் மேல் குற்றம் சொல்வது… தான் செய்தது தவறு என்றால் அடுத்து அவன் நடந்ததும் தவறுதான்… மனம் அவனுக்கு எதிராக வாதாட ஆரம்பிக்க…
“தவறே செய்யாதவனை அடித்த உன் நடவடிக்கையால் தான் அவன் அவ்வாறு நடந்தான்… அவனைத் தூண்டியது நீதானே அதை நீ முதலில் ஒத்துக் கொள்…”
எப்போதும் ரிஷிக்காக பரிதாபப்படும் மனம் இன்றும் தன் வாதங்களை எல்லாம் வைத்து கண்மணியை தன் புறம் ஜெயித்து விட்டிருக்க…
தான்தான் அவசரப்பட்டுவிட்டோம் என்று தனக்குள் தன் தவறை ஒத்துக் கொண்டவளாக…தன் முட்டாள் தனத்தை நினைத்து வெட்கியவளாய்... நெற்றியில் கைவைத்து கவலையாகத் தேய்த்தவளின்… கண்கள் ரிஷி இருந்த அறையை நோக்க… அங்கு இருள் மட்டுமே சூழ்ந்திருக்க… மனமோ உடனே அவனிடம் மன்னிப்பு கேட்க துடிக்கத்தான் செய்தது…. ஆனாலும் இப்போது… இந்த அர்த்த ராத்திரியில் ரிஷியின் அறைக்குச் செல்வது உசிதமல்ல இருக்காதே… என்று தோன்ற…
“சரி நீங்க போங்க....சாரி.... அப்புறம் தேங்க்ஸ்...” என்று சமாதானமாய்ப் பேசியபடி அவர்களை அனுப்பி வைத்தவள்.... தன்னைத் திட்டிக் கொண்டே தன் வீட்டினுள் நுழைந்தாள்...
ஹாலில் உள்ள கட்டிலில் படுத்திருந்த தன் தந்தையின் அருகில் அமர்ந்தவள்… அவரின் ஓய்ந்த தோற்றத்தைப் பார்த்தபடி…. சில நிமிடங்கள் அமர்ந்திருந்தவள்.... அருகில் இருந்த மருத்துவச் சீட்டையும்... மருந்து மற்றும் மாத்திரைகளையும் பார்த்தவள்.. வழக்கமாக அவருக்கு வரும் மூச்சுத்திணறல் தான் என்று உறுதி செய்தவளாய்.... ஒரு வழியாக தன்னை நிதானபடுத்திக் கொண்டாள்...
தந்தை படுத்திருந்த கட்டிலின் அருகில் தரையில் படுக்கையை விரித்து படுத்தவளுக்கு... தூக்கம் என்பதே வரவில்லை... மனம் விரும்பியவனிடம்??? சண்டை… பெற்ற தந்தையின் உடல்நிலை… இதை எல்லாம் மீறி ரிஷியிடம் அவள் நடந்து கொண்ட விதம் வேறு…
தந்தையின் உடல்நிலை அடிக்கடி அவள் பார்த்திருப்பதால் இன்றும் அதே போல் தான் என்று பெரிதாக வருத்தப்படவில்லை … ரிஷியிடம் மன்னிப்பு கேட்க முடிவு செய்தவளுக்கு காலை வரை காத்திருக்க வேண்டுமே என்று கவலையாக இருக்க… நேரில் கேட்கத்தான் காலை வரை காத்திருக்க வேண்டும்… இருக்கிறதே கையிலேயே அலைபேசி… அவன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்ப முடிவு செய்தவளுக்கு அதுவுமே தவறாகப்பட… காலை எழுந்தவுடன் மன்னிப்பு வேண்டி குறுஞ்செய்தி அனுப்பி விடலாம்… பின் நேரில் போய்க் கேட்கலாம் என்று முடிவு செய்தவளுக்கு… இப்போது அர்ஜூனின் நினைவுகள் தான் நெருஞ்சி முள்ளாக குத்திக் கொண்டிருந்தன
”நீ அருகே நெருங்கி… உன் விரல் என் தேகம் தீண்டித்தான் என் காதல் உனக்குப் புரியுமா… என் கண்களில் உனக்கான காதல் புரியவில்லையா…” அர்ஜூனிடம் நேருக்கு நேராக பேசிய கண்மணியின் நேர்ப்பார்வையில் அர்ஜூன் அப்படியே நின்றும் விட்டான் தான்…
அர்ஜூனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை… அவள் பார்வையில் தனக்கான காதல் இருக்கின்றதா… அவனால் ஏனோ அதை உணர முடியவில்லை… தன்னைக் காதலிக்கிறேன் என்று சொல்பவள்தான் அவள் தந்தையையும் விட்டு வர மாட்டேன் என்கின்றாள்… தனக்கான காதல் அவளிடம் இருக்கின்றதா… தான் நேசிக்கும் அளவு தன்னையும் அவள் நேசிக்கிறாளா என்று யோசித்தானே தவிர… அவன் பக்கம் இருக்கும் தவறை எல்லாம் நினைக்கவில்லை…
பவித்ரா என்ற பெண்ணால் தன் உலகத்தை எல்லாம் உதறி விட்டு… கேவலம் ஒன்றுக்கும் உதவாத நட்ராஜ் பின்னால்… அவனே உலகம் என்று போக முடியும் என்றால்…
எல்லா வகையிலும் உயர்ந்த இடத்தில் இருக்கும் தன்னை நம்பி ஏன் இவளால் வர முடியவில்லை… காதல் ஒரே மாதிரியாகத்தானே இருக்க வேண்டும் இதுதான் அர்ஜூனின் வாதமாக இருந்தது கண்மணியிடத்தில்
அடுத்தடுத்து அவன் இவள் மனதைப் புரிந்து கொள்ளாமல் திருமணம் என்று பேசி வைத்தவன்… ஒரு கட்டத்தில்… இவள் காதலையும் கேள்விக்குறியாக்கி விட… வாக்குவாதங்கள் மட்டுமே மிச்சமாகி நின்றிருக்க…
உடனடியாக… அங்கிருந்து கிளம்பிவிட்டாள் கண்மணி…
கண்மணியைப் பொறுத்தவரை… இன்று அவளே உலகம் என்று வாழும்… நட்ராஜ்… நாரயணன் வைதேகி என இவர்கள் யாருமே இவளை முதலில் மனுசியாகவே நினைக்காதவர்கள் தான்… வேண்டாமென்று துரத்தி துரத்தி அடித்தவர்கள் தான்… அப்படிப்பட்டவர்கள்தான் இன்று இவள் மேல் பாசத்தை பொழிகின்றனர்… இவள் மேல் அன்பை வாறி இறைப்பவர்கள்… அதனால் தான் என்னவோ… கண்மணி அனைவரையும் விட்டு ஒரு அடி தள்ளி நிற்பாள்…
அப்படிப்பட்ட கண்மணிக்கு அர்ஜூன் என்பவன் முதன் முதலாகப் அவளைப் பார்த்த போதே… இவள் எதிர்பார்க்காமலேயே இவள் மீதிருக்கும் நேசத்தை வெளிப்படுத்த… அவன்புறம் மனம் சாய்ந்தது தான்… ஆனால் அவனின் காதல் ஏன் இவளுக்கு விலங்காகத் தோன்றுகிறது என்றும் தெரியவில்லை… ஏதோ ஒன்று அவனோடு ஒன்ற முடியாமல்.. அவனுக்காக உருக முடியாமல் இவளை தடுத்துக் கொண்டே இருக்க.. எவ்வளவு யோசித்தாலும் அவளால் காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை…
சில சமயம்… அவன் கூறுவது போல… தான் அவனை நேசிக்கவில்லையோ என்று கூடத் தோன்றுகிறது… இந்த எண்ணமெல்லாம்… அவளைச் சூறாவளியாகச் சுழன்றடிக்க... அதே நேரம் அவள் உள்ளங்கைகளை விரித்துப் பார்த்தாள் கண்மணி… மனம் உற்சாகமாகத்தான் ஆனது…
ரிஷி… அர்ஜுன் எல்லாம் பின்னுக்குப் போக… தன் கைகளில் முதன் முதலாக ஒரு சிசுவை ஏந்திய கரங்களை தன் முகம் முன் வைத்துப் பார்த்தவளுக்கு… அந்தச் சிசுவின் அன்னை… முகமெங்கும் மகிழ்ச்சியோடு… தன் குழந்தையை உச்சி முகர்ந்து முத்தமிட்ட அந்த நொடியில்… அவள் அன்னை பவித்ராவின் முகம் தான் வந்து போனது… இதே போல் என்னைப் பார்த்து விட்டு… புன்னகைத்திருப்பாளா என் அன்னையும்… உச்சி முகர்ந்திருப்பாளா என் அன்னையும்… அது போதும் எனக்கு… அந்தப் புன்னகையோடேயே தன்னை விட்டும் போய்விட்டாளோ…
நினைவு தெரிந்த நாளில் இருந்து தேடுகிறாள் அந்த தாயின் அன்பை தான்... பார்க்கும் ஒவ்வொரு இடத்திலும்… பார்க்கும் ஒவ்வொரு நபரிலும்… ஏனோ யாரிடமே அது கிடைக்கவில்லை என்பதே உண்மை…
இவள் தேடிய போது கிடைக்காத மற்ற அன்பு எல்லாம்… இன்று தெவிட்ட தெவிட்ட கிடைத்த போதும் ஏனோ மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது…
அர்ஜூனின் காதலில்… தாயின் அன்பையும் தேடுகின்றாளா… இவளுக்குத் தெரியவில்லை… இளவரசியைப் போல உன்னை வைத்து நான் பார்த்துக் கொள்கிறேன்… என்றவனின் அன்பை விட வேறு என்ன வேண்டும் எனக்கு… பத்து வயது வரை என்னைக் கண்டுகொள்ளாத தந்தையின் மீது அப்படி என்ன எனக்கு பாசம்…
விட்டத்தை இவள் வெறித்துக் கொண்டிருந்தாள்…
அன்னையின் அன்பைத் தேடி அலைந்த கண்மணி… அதைக் கணவனிடத்தில் கண்டும் கொண்டாள் தான்… அவன் ஒருவனிடம் தான் தன் தேடல் முழுமை பெறும் என்று உணர்ந்து அவன் மேல் காதல் கொண்டவளை… அவள் காதலை அவள் கணவன் உணர்ந்தானா… தங்கைகள்… அன்னை என்ற அவனின் குடும்ப தவத்தை கண்மணியால் கலைக்க முடிந்ததா… சிப்பிக்குள் இருக்கும் முத்தைப் போல… கண்மணியின் காதலும்… அவள் ஆழ்மனதில் புதைத்து வைத்திருந்த அத்தனை காதலையும் அவனுக்காக மட்டுமே காட்ட… அவனிடம் மட்டுமே கொட்ட… ரிஷி கண்டு கொண்டானா… ???? இல்லை வழக்கம் போல இவள் ஏங்கும் போது கிடைக்காத பாசம்…இவள் எதிர்ப்பார்க்காத போது மழையென இப்போது கிடைக்கிறதே அதுப்போல ரிஷியின் காதலும் இவளுக்கு எதிர்பார்த்தபோது கிடைக்காமல் போனதா…
ஆம்…தந்தை பாசத்திற்கு ஏங்கிய கண்மணிக்கு அது கிடைத்தபோது ஏற்க முடியவில்லை… தாத்தா,பாட்டியிடம் ஏங்கி அவர்கள் வாசலில் பிச்சைக்காரியாக நின்ற போது… நாயை விட்டு துரத்தியவர்கள்… இன்று அவளுக்காக மாளிகை வாசலில் காத்திருந்த போதிலும்… உள்ளே செல்ல மனம் வரவில்லை… அதே போல ரிஷியின் காதலும் அவளால் நிராகரிக்கப்படுமா…
இந்த உலகத்தில் கண்மணியிடம் இப்போதும்… பாசமில்லாமல் இருப்பது அவளைப் பிடிக்காமல் இருப்பது… நட்ராஜின் தாய் தந்தை தான்… மற்றவர்களின் பாசத்தை ஏற்க முடியாமல் இருப்பவள்… ஏனோ தந்தை வழி பாட்டி தாயின் வெறுப்பை விரும்புவாள்… இவளும் அவர்களிடம் துடுக்காகப் பேசுவாள்… அவர்கள் பேசும் போதும் உண்மையான வெறுப்பு இருக்கும்… ஏனோ அது அவளுக்குப் பிடிக்கும்…
பிடிக்கவில்லையோ பிடித்திருக்கின்றதோ… கொடுமைப்படுத்தினார்களோ இல்லையோ… பத்து வயது வரை… திட்டிக் கொண்டே சோறு போட்டவர்கள் அவர்கள் மட்டுமே… அவர்கள் இல்லையென்றால் இவள் இன்று உயிரோடு இருந்திருப்பாளோ என்னவோ… அவர்களிடமே தெனாவெட்டாக விசம் வைத்துக் கொல்லப் போவதாக அவர்களை மிரட்டும் தன் மிரட்டலை நினைத்து…. தனக்குள் சிரித்துக் கொண்டாள் கண்மணி…
அவர்கள் கொடுமை தாங்காமல் தான் நடராஜிடம் வந்து சேர்ந்ததே…அதன் பின் தான் தன் தாய் வழி உறவுகளை எல்லாம் கண்டு கொண்டது…. அதுமட்டுமா என பின்னோக்கிச் சென்ற மனது…இப்போது அதற்கு மேல் யோசிக்க விடாமல் கடிவாளம் இட்டுக் கொள்ள…
ஆக திருக்குறளில் ’சுற்றந்தழால்’ என்னும் அதிகாரம் சொல்லும் குறள்களுக்கேற்ப… குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்ற பழமொழிக்கேற்ப… உறவுகளோடு வாழப் பழகி இருந்தாள் கண்மணி… ரிஷியோடான வாழ்க்கையிலும்… அவன் உறவுகளிடமும் இதே முறைதான் கடைபிடித்தாள்… ஆனால் ரிஷியோடான காதலில் தன்னை சமரசம் செய்துகொண்டாளா… பொறுத்திருந்து பார்க்கலாம்…
…
கண்மணி தன் கடந்த காலமும்… இன்றைய நிகழ்வுகளுமாக பயணித்து உறங்கி இருக்க…
அதே நேரம்…
இங்கு ரிஷிக்கோ... அன்று சுத்தமாக உறக்கம் என்பது வரவில்லை... கண்மணியிடம் முறைத்தபடி வேகமாக வந்தவன் தான்... தனது அறைக்குள் நுழைந்து அறைக்கதவைச் சாத்தியவன் அதே வேகத்தில் படுக்கையில் விழுந்தான்... பழைய ரிஷியாக இருந்திருந்தால்... அவனது கோபத்தை குறைந்தபட்சம் கதவிலாவது காட்டி இருந்திருப்பான்.... அது கூட முடியாத நிலையில் படுத்திருந்தவன் மனதில்... தனக்கு மரியாதை இல்லாத இடம் இது என்று எப்போது தீர்மானித்தானோ அப்போதே…. இனி இங்கிருக்கக் கூடாது… என்ற எண்ணம் மட்டுமே இருந்தது அவனிடம்....
அதனோடு... அவன் தந்தை.... அவர் இறப்பு... அதன் பின் நடந்த நிகழ்வுகள்... தற்போது அவன் குடும்பம் ... என எதையெல்லாம் அவன் மறக்க நினைத்து அல்லும் பகலும் உழைப்பென்னும் மருந்தால் மறக்கடித்து தன் உறக்கத்தை தேடிக் கொண்டானோ.... அவை அனைத்தும் இன்று மொத்தமாக அவன் முன் நின்று அவன் உறக்கத்தை பறித்துக் கொள்ள.... அவன் உடலும் கண்களும் தூக்கத்துக்காக போராடினாலும்... அவன் மனமோ... அவனைத் துயில விடாமல் அலைகழிக்க...
ஒரு பெண்ணின் கையால்… அடி வாங்கிய நிகழ்வு… அவ்வளவு சீக்கிரமாக மறக்க முடியுமா என்ன… அவமானமாக உணர்ந்தான்… அதை விட… தினகர் வேலன் முன்னிலையில் வேறு... நினைக்க நினைக்க அவனுக்கே அவனை நினைத்து கேவலமாக இருக்க… அதே நேரம் அவளை ஒன்றும் செய்யாமல் அமைதியாக வந்த அவன் செயலை நினைத்து அவன் மீதே அவனுக்கு கோபம் கோபமாக வந்தது தான்…
கண்மணி இருந்த இடத்தில் ஒரு ஆண்மகன் இருந்திருந்தால்… அவன் நிலை கந்தல் கந்தலாகியிருக்கும்…
நட்ராஜின் மகள் என்று சொன்னதெல்லாம் வாய் வார்த்தைக்காகவே மட்டுமே…
ஒரு பெண்ணிடம் அவள் செய்த செயலுக்காக… பழிவாங்க ஒழுங்கீனமான பதிலடியைக் கொடுக்க அவன் விரும்பவில்லை… அப்படி அவன் செய்யவும் முடியாது… காரணம் பெரிதாக என்ன இருக்கப் போகின்றது… ஒரு அன்னையின் மகனாக… தங்கைகளின் சகோதரனாக அவனால் இப்படித்தான் இருக்க முடியும்… வேறு ஒன்றும் பெரிதாக செய்ய முடியாது… குறைந்த பட்சம் கண்மணியின் கண்பார்வையிலிருந்து தானும்… தன் கண்பார்வையிலிருந்து அவளையும் தள்ளி வைக்க நினைத்தவன்…
படுக்கையில் படுத்தபடி விட்டத்தை வெறித்தவனாய்க் கண் விழித்திருந்தான் ரிஷி...
Komentarze