top of page

கண்மணி... என் கண்ணின் மணி-20-1

அத்தியாயம் 20-1

நடராஜன் அரைமயக்கத்தில்தான் இன்னும் இருந்தார்... அதன் பின் ரிஷி அவருக்கான மாத்திரைகளை கொடுத்து எப்படியோ அவரை உறங்க வைத்தவன்.... கண்மணியை மீண்டும் போனில் தொடர்பு கொள்ள முயற்சிக்க... அது ஏமாற்றத்தையே தந்தது அவனுக்கு. ஒரு கட்டத்தில் கண்மணி அவள் தாத்தா வீட்டுக்குத்தான் போயிருப்பாள் என்று அவனாகவே அனுமானித்துக் கொண்டவன்…


“சரி வந்துவிடுவாள்” என்று கண்மணிக்காக காத்திருக்க… மணி 11ஐக் கடந்தும் அவள் வராமல் இருக்க சுர்ரென்று அவனுக்குள் கோபம் எட்டிப்பார்க்கத்தான் செய்தது…

ஒருவேளை இன்று இரவு கண்மணி அங்கேயே தங்கி விட்டாளோ என்று மட்டுமே தோன்ற… அதே நேரம் நடராஜனின் அன்னை வந்த போது கண்மணி அந்த வயதான பெண்மணியிடம் நடந்த விதமும் ரிஷியின் ஞாபகத்திற்கு வந்து போக…. நீண்ட நாட்களுக்குப் பிறகு கண்மணியைப் பற்றி தனக்குத் தெரிந்த விசயங்களை நினைவில் கொண்டு வர முயற்சிக்க… பெரிதாக ஒன்றும் வரவில்லை…


தந்தை வழி பாட்டி பிடிக்காது போல… ஆனால் தாய் வழி உறவினர்களைப் பிடிக்கும் போல என்பது மட்டும் புரிந்தது… இனி கண்மணிக்காக காத்திருப்பது வீண் என்று புரிய… வேலனையும் தினகரையும் வீட்டுக்கு கிளம்பச் சொல்ல அவர்களும் எழுந்தனர்

“ப்ச்ச்… கண்மணி அவங்க தாத்தா வீட்டுக்கு போயிருக்கும் போலடா… சரி ஓகே நீங்க கிளம்புங்க… நான் சாரைப் பார்த்துக்கறேன்” என்று ரிஷி அவர்களிடம் சொல்லி அவர்களைக் கிளம்ப வைத்திருந்த போதிலும்… மனதின் ஓரம் சஞ்சலமே… கண்மணி அங்கு இருக்கிறாளா என்று உறுதி செய்து கொள்ளவே நினைத்தான்… அதனால் நாரயண குருக்கள் வீட்டிற்கு போக தீர்மானித்தவன்...

வாசல் வரை போன வேலனையும் தினகரையும் மீண்டும் நிறுத்திய ரிஷி தன் பைக்கை கிளப்பியபடி… அவர்கள் அருகில் வந்தவனாக….

”வேலா… நீ சாரைப் பார்த்துக்கோ…. எதுனாலும் எமர்ஜென்ஸினா உடனே கால் பண்ணு… “ வேலனிடம் சொன்னவன்… தினகரிடம் திரும்பி,…

“நீ ஏறுடா… அந்த நாராயணகுரு வீடு வரைப் போய்ப் பார்த்துட்டு வந்துறலாம்… அவகிட்ட விசயத்தை சொல்லனும்… இல்லைனா நாளைக்கு நீங்க ஏன் சொல்லலைன்னு சண்டைக்கு வந்தாலும் வருவா உங்க மணி அக்கா” என்றபடியே மீண்டும் தன் பைக்கை உதைத்து ஸ்டார்ட் செய்தவன்… அடுத்து நின்றது நாரயண குருக்களின் வீட்டின் முன் தான்…

இவர்கள் இருக்கும் ஏரியா என்பதாலும்… என்றோ நட்ராஜ் சொன்ன அடையாளங்களையும் ஞாபகம் வைத்து எப்படியோ… நாரயண குருக்கள் வீட்டை கண்டுபிடித்து அவர் வீட்டை அடைந்த போது…. அந்த பிரமாண்ட மாளிகையும் அதன் வாயிலில் செக்யூரிட்டியும் இருக்க… புருவ முடிச்சுகளோடு கூடிய யோசனையோடுதான் இறங்கினான் ரிஷி….


யோசனையோடு இறங்கினாலும்… ‘பவித்ரா இல்லம்” என்ற அடையாளமே அது கண்மணியின் தாய் வீடு என்பதை நிச்சயமாகச் சொல்ல, உறுதி செய்து கொண்டவன்… செக்யூரிட்டியிடம் கண்மணியைப் பார்க்க கேட்டு அனுமதி வேண்டி நிற்க… அவனோ ரிஷியை உள்ளேயே விடாமல்…

“சின்னம்மா… அப்போதே 6 மணிக்கே போய்ட்டாங்க” என்று மட்டுமே சொல்ல… கண்மணி இங்கில்லை என்று அவன் சொன்ன பதிலில் ரிஷிக்கு ஒரு நிமிடம் மனம் திடுக்கிட்டாலும்… ஏனோ அந்த காவலாளி பொய் சொல்கிறார் என்றே தோன்ற…

“அதை நாங்க உள்ள கேட்டுக்கிறோம்.. கேட்டைத் திறந்து விடுங்க” என்று இவனும் வாதம் புரிய…. அந்த காவலாளியோ இவனை விடாமல் வாக்குவாதம் செய்ய... அப்போது உள்ளிருந்து காரின் ஒலி கேட்க… வேகமாக காவலாளி கதவைத் திறக்கப் போக… ரிஷி அதைப் பயன்படுத்திக் கொண்டு உள்ளே போக நினைக்க… இப்போது வந்த கார் நின்றது…

ரிஷியை அலட்சியமாகப் பார்த்தபடி… இறங்கிய அர்ஜூனைப் பார்த்து ரிஷியும் திகைத்துதான் நின்றான்…

ரிஷியை அளவெடுத்தபடியே…. காவலாளியிடம் திரும்பிய அர்ஜூன்….

“நீ போ… நான் பார்த்துக்கிறேன்” என்று காவலாளியைக் கிளப்பியவன்… காரின் மேல் சாய்ந்தபடி… புருவம் உயர்த்தினான்….

ரிஷிக்கோ …. ”கண்மணியைப் பற்றி இவனிடம் விசாரிக்கலாமா … வேண்டாமா” என்று அர்ஜூனையும்… உள்ளே வீட்டை நோக்கியும் மாறி மாறி பார்த்தபடி யோசித்தவனாக இருக்க…. அவன் பேச ஆரம்பிக்கும் முன்… அர்ஜூனே பேச ஆரம்பித்தான்…

“காலையில விட்ட சண்டையை… கண்டினியூ பண்ண வந்தீங்களா ப்ரோ… அட்ரெஸ்லாம் கரெக்டா நோட் பண்ணிட்டு வந்துருக்கீங்க… நாளைக்கு வந்துருந்தீங்கன்னா… நீங்க என்னை USல தான் மீட் பண்ணிருக்கனும்… “ என்றவன்… காலையில் ரிஷியைப் போலவே கைச்சட்டையை மேலே ஏற்றி விட்டான்… அதாவது நானும் உன் அளவுக்கு இறங்கி வருவேன் என்று தோன்றும் விதமாக

உண்மையைச் சொல்லப்போனால் ரிஷி சண்டை போடும் மனநிலையில் எல்லாம் இல்லை… ஆனால் அதற்காக வந்த சண்டையை விடும் நல்லவனும் இல்லைதான்… இருந்தும்

“இது என்ன இவன் அடிக்கடி நம்ம லைன்ல கிராஸ் ஆகிறான்… காரோட கார் மோதி… காரோட பைக் மோதி… இப்போ நேருக்கு நேரா மோதல் வேறயா… ரிஷி… இவனோட வம்பு வளர்க்காமல்… வந்த வேலையைப் பார்த்துட்டு … இடத்தைக் காலி பண்ணு” அவன் உள்ளுணர்வு எச்சரிக்கை கொடுக்க…

இப்போது ரிஷி… தன்னிடம் பேசிக் கொண்டிருந்த அர்ஜூனை விடுத்து… உள்ளே போக நினைத்தான்…


இருந்தும் நக்கலாக..

”நீங்க இடத்தைக் காலி பண்ணுங்க பாஸ்… இங்க உங்களைத் தேடி யாரும் வரலை” என்றபடியே போக

அர்ஜூன் வேகமாக அவன் வழியை மறித்தவன்…

“ஏய்… என்னது நான் இடத்தைக் காலி பண்ணவா… திமிரா உனக்கு”… அர்ஜூன் கத்திக் கொண்டிருக்க… ரிஷியோ காதில் வாங்காமல் போய்க் கொண்டிருக்க


“நான் இங்க பேசிட்டு இருக்கேன்… போய்ட்டே இருந்தா என்ன அர்த்தம்”

“அப்டின்னா... உங்களைப் பார்க்க வரலேனு அர்த்தம்…” ரிஷி பட்டென்று சொல்லிவிட்டு வீட்டின் வாயிலை நோக்கிப் போக…

காவலாளி இப்போது ரிஷியைத் தடுக்கப் போக நி்னைக்க… அர்ஜூன் அவனைத் தடுத்தவனாக… ரிஷியின் அருகில் நின்று…. இப்போது யோசனையுடன் முறைத்துக் கொண்டிருந்தான்…


“தன்னை இல்லையென்றால்… வேறு யாராக இருக்கும்” என்ற யோசனைதான் அர்ஜூனுக்கு வந்த யோசனையாக இருக்க,…


ரிஷியோ அவனைக் கண்டு கொள்ளாமல்

”கண்மணி” என்று அங்கிருந்தபடியே கத்தி அழைக்க…


“கண்மணியா” அதிர்ந்தான் அர்ஜூன்


அவ்வளவுதான் அர்ஜூன் அதற்கு மேல் கோபத்தை இழுத்துப் பிடித்தெல்லாம் வைக்கவில்லை… ரிஷியின் சட்டையைக் கொத்தாகப் பற்றியவன்…

“என்னடா… எவ்ளோ தைரியம் இருந்தா… அவ பேரைச் சொல்லி ஏலம் போடுவ” என்று அவன் கழுத்தை இறுக்க..

இப்போது ரிஷியோ… “லூசா நீ” என்பது போல அர்ஜூனைப் பார்த்தபடி…

“கண்மணியை கண்மணினு தான் சொல்ல முடியும்” என்று அவனிடம் சொன்னபடியே… வீட்டின் உள்புறமாக நோக்கி

“மணி” என்று இப்போது இன்னும் சத்தமாக அழைக்க…


அர்ஜூனுக்கு எகிறியது இவனின் ஒவ்வொரு அழைப்பிலும்.. ஏற்கனவே மாலையில் அவனுக்கும் கண்மணிக்கும் நடந்த வாக்குவாதம் மற்றும் சண்டையின் தாக்கமே இன்னும் இவனுக்குள் குறையாத போது யாரோ ஒருவன் வேறு இவர்களுக்கு இடையில்…. அதிலும் அவனது ஒவ்வொரு கண்மணி என்ற ஓவ்வொரு விளிப்பிலும்… அர்ஜூனுக்குள் இருந்த மிருகம் மெல்ல மெல்ல எழ ஆரம்பிக்க…

விளைவு… ரிஷியின் சட்டையைப் பற்றியிருந்த கை இப்போது ரிஷியின் கழுத்தையும் இறுக்க ஆரம்பிக்க… அதற்கு மேல் ரிஷியும் விடுவானா என்ன…. இப்போது ரிஷியின் கரங்களும் அர்ஜூனின் கரத்தை சுற்றி வளைக்க… அர்ஜூனின் கரங்கள் ஜிம்மில் மெனக்கெட்டு உடற்பயிற்சி செய்து மெருகேற்றிய கரங்கள்… ஆனால் ரிஷியின் கரங்களோ இரும்போடு நேரடியாக உறவாடிய கரங்கள்… அதானால் அர்ஜூனால் அதிக நேரம் தாக்குப் பிடிக்க முடியாமல் போக… சட்டென்று ரிஷியின் கழுத்தில் இருந்து எடுக்க… ரிஷியோ… இப்போதும் பிடித்திருந்த கைகளை எடுக்காமல் கரங்களின் பிடியை மட்டும் தளர்த்தியவனாக அர்ஜூனை நேருக்கு நேராகப் பார்த்தவன்… அர்ஜூனின் சட்டைக் காலரைச் சரி செய்தவனாக… கைகளை எடுத்தபடி….

“ப்ரோ… நான் சண்டை போட வர வில்லை…” என்று அவனிடம் சமரசமாக பேச ஆரம்பிக்கும் போதே… வயதான தம்பதியர் இருவர் உள்ளே இருந்து வெளியே வர… ரிஷிக்கு அவர்கள் யாரென சொல்லாமலேயே புரிய… கண்கள் அவர்களையும் தாண்டி… பின்னால் நோக்கியது… கண்மணியை எதிர்பார்த்து…

இப்போது ரிஷி அவர்கள் பார்க்கும் முன்பேயே… தன்னை மாற்றிக் கொண்டவன்... முகத்தை சாதரணமாக வைத்தபடி இருவரையும் பார்க்க…

“யாருப்பா நீ... என்ன விஷயம்” என்று ரிஷியை விசாரித்தார் நாராயண குருக்கள்... பார்வை அவ்வப்போது தன் பேரனின் முகத்திலும் படிந்து கொண்டிருந்ததுதான்…

நாரயண குருக்களும் அவர் மனைவி வைதேகியும் மாலை வீடு திரும்பும் போது… கண்மணி இல்லை…. ஆனால் அர்ஜூன் முகத்தில் எள் போட்டால் வெடிக்கும் அளவுக்கு சூடாக இருக்க… இவர்கள் என்ன விசயம் என்று கேட்ட போதும் சொல்லாமல் … கிளம்ப ஆரம்பித்து விட்டான் அர்ஜூன்…


அவனுக்கும் கண்மணிக்கும் இடையில் பெரிதாக வாக்குவாதம் நடந்திருக்கின்றது என்பதை ஏர்போர்ட்டுக்கு கிளம்பும்முன் பேசிய பேச்சில் இருந்துதான் தெரிந்தது…

“உங்க பேத்திக்கிட்ட சொல்லி வைங்க… நெக்ஸ்ட் டைம் வரும்போது மிஸஸ் அர்ஜூனா மாற தயாரா இருக்கச் சொல்லுங்க… இனி யாருக்காகவும்… ஏன் அவளுக்காகவும் காத்திருக்க தயாரா இல்லை… அம்மா அப்பாட்ட பேசிட்டு… கல்யாண நாளைக் குறித்து விடலாம்” என்று படபடவென சொல்லி விட்டு… காரைக் கிளம்பியவன்…


“போகாமல் இங்கு ஏன் நிற்கிறான்… இப்போது என்ன ஆனது… அவனருகில் நிற்கும் புதியவன் யார்” என்று மனதுக்குள் குழம்பியபடியே… ரிஷியிடம் திரும்பி யாரென்று விசாரிக்க… ரிஷி பெரியவர் முன் சாந்தமான குரலில்…

“சார் நான் நடராஜன் சார் பட்டறையில் வேலை பார்க்கிற பையன்... என் பேர் ரிஷி” என்று தன்னை அறிமுகப் படுத்திய ரிஷியை அர்ஜூன் இப்போது இன்னும் அதிகமாக உன்னிப்பாக உக்கிரமாக கவனிக்க ஆரம்பித்தான்....


அதேநேரம் நடராஜ் என்ற பெயரைக் கேட்டால் அர்ஜூனுக்கு மட்டுமல்ல நட்ராஜின் மாமனாருக்கும் இனிக்குமா என்ன…

“என்ன விஷயம்.... உனக்கு என்ன இங்க வேலை” கடு கடு வென ஆரம்பித்தார் நாரயண குருக்கள்...

நொடியில் கடுவண் பூனையாக மாறிய நாரயணின் முகத்தை ரிஷியும் உணர்ந்தான் தான்… அதனால்…. சுற்றி வளைக்காமல்...

“கண்மணி இன்னும் வீட்டுக்கு வரலை... உங்கள பார்க்க போறேனு சொல்லிருக்கா... எங்க சார்க்கு உடம்பு சரி இல்லை...” என்று ஆரம்பித்து நடராஜனின் நிலையைப் பற்றியும் சுருக்கமாகச் சொல்லி முடிக்க...

நாரயணனுக்கு அவரது மனைவிக்கும் முகத்தில் பதட்டம் வந்தது... பதட்டத்துக்கு காரணம் நட்ராஜின் உடல்நிலையை நினைத்து அல்ல… தங்கள் பேத்தி கண்மணி இன்னும் வீடு போய்ச் சேரவில்லை என்பதை நினைத்து

இங்கு அர்ஜூனோ அவர்களைப் போலெல்லாம் பதட்டமடையவில்லை… கண்மணியைப் பற்றி அவன் ஓரளவு அறிந்திருந்ததால்...


ஆனால் ரிஷியின் முகத்தையே பார்த்தபடி இருந்தான்...

நடராஜன் பட்டறையில் வேலை பார்க்கும் பையனா.. ரிஷியின் உயரமும்.... கம்பீரமான தோற்றமும்.... தங்கள் வசதியைப் பார்த்து சற்றும் மிரளாத அவனது அலட்சியமான கண்களும்.... எதிர்மாறாக இருக்கிறதே என எடை போட்டுக் கொண்டிருந்தன....

அதே நேரம் ரிஷியின் குரலிலும் சரி... அவன் முகத்திலும் சரி... பெரிதாக பதட்டம் என்பது இல்லை என்பது ரிஷியைப் பார்த்த மாத்திரத்திலேயே அர்ஜூனுக்கு புரிய அவனால் ரிஷியைப் பற்றி வேறு எந்த தவறான கோணத்திலும் நினைக்கத் தோணவில்லை… நட்ராஜுக்காகவே கண்மணியைத் தேடி வந்திருக்கின்றான் என்று மட்டுமே தோன்றியது… ஆனாலும் அந்த நட்ராஜ் இப்போதும் பட்டறையில் தனக்கு கீழ் ஆட்களை வைத்திருக்கி்ன்றானா… ஒரு முறை பட்ட வேதனையான அனுபவம் கூட அந்த ஆளுக்கு புத்தியில் உறைக்கவில்லையா….

நட்ராஜுன் மேல் உள்ளுக்குள் கனன்ற கோபத்தை மறைத்தபடி…


“ஆக அந்தாளு உயிரோடத்தான் இருக்கிறான்… ஒண்ணும் ஆகலையா… ஹ்ம்ம்ம்” என்று பெருமூச்சு விட்டவனாக


“மண்டையப் போட்ருந்தா இங்க பல பேருக்கு பல பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி கிடைச்சிருக்கும்” இப்போது நக்கலாக சொன்னபடியே


தனது தாத்தா பாட்டியைப் பார்க்க... அவர்கள் முகத்தில் பதட்டமும் அதிர்ச்சியும் அப்பட்டமாகத் தெரிய.... வேறு வழியின்றி

“இனி ஃப்ளைட்ட பிடிச்ச மாதிரிதான்...” என்றபடி அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தவனின் கைகள் அனிச்சையாக கண்மணியின் அலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ள ஆரம்பிக்க…

அர்ஜூன் அப்படி என்றால் ரிஷியோ.... கண்மணி இங்கு இருக்கிறாளா இல்லையா........ அதுதான் அவனுக்குத் தேவை..... என்பது போல.... நாரயணனின் பதிலுக்காக அவரை நோக்க....

“நாங்க வருவதற்கு முன்னாடியே… அவ கிளம்பிட்டாளே… அர்ஜூன்!! கண்மணி எங்க போறேனு உன்கிட்ட ஏதாவது சொல்லிட்டுப் போனாளா” நாராயணன் படபடப்பாக பேச…

“உங்க பேத்தி அப்படியே சொல்லிருவா…” என்ற நோக்கில் அர்ஜூன் அவர்களை முறைத்து விட்டு மீண்டும் அலைபேசியில் தன் கவனத்தை வைக்க

அந்த மூத்தவர்களின் கவலையும்.... அதிர்ச்சியும் புரிய... கண்மணி அங்கு இல்லை என்பது ரிஷிக்கும் தெரிந்தது இப்போது......

“இங்கயும் அவ இல்லையா” இப்போது ரிஷியின் மனதுக்குள் சலிப்பாக எண்ண ஓட்டம் ஓட....... அவன் முகத்திலும் அது வெளி வந்திருந்தது......


இனி இங்கிருந்து என்ன பிரயோசனம்.... சொல்லிக் கொண்டு கிளம்பலாம் என முடிவு செய்தவனாய் கிளம்ப நினைக்கும் போதே… கண்மணியை வீட்டுக்குள் வைத்துக் கொண்டே இவர்கள் தன்னிடம் ஏமாற்றுகிறார்களோ என்ற எண்ணம் ஏனோ வந்து போக… பார்வை அவனையுமறியாமல்… வீட்டினுள் சென்று ஆராய ஆரம்பிக்கப் போக…

“அவள உள்ள வச்சுட்டு… என்கிட்ட மறைக்கனும்னு நினைத்தீங்க” என்று எச்சரிக்கும் பாவத்தில் ரிஷி சொன்ன போதே போதே… போனைப் பார்த்துக் கொண்டிருந்த அர்ஜூன் சட்டென்று நிமிர்ந்தான்… அதிலும் ரிஷி ‘அவள் இவள்’ என்று கண்மணியை அழைப்பதே அவனுக்கு நாராசமாக இருக்க… ஆனாலும் ரிஷிக்கு கண்மணியைப் பற்றி ஏதும் தெரிந்திருக்க வில்லை என்பதை அவன் பேசும் வார்த்தைகளை வைத்தே புரிந்து கொண்டவனாக…

“உனக்கு அவள பத்தி எதுவும் தெரியாதா....” நக்கலாகக் கேட்க... புரியாமல் பார்த்தான் ரிஷி...


அர்ஜூன் ரிஷியின் குழப்பமான முகத்தினைப் பார்த்தபடி....


“இல்ல உன் முதலாளியோட பொண்ணு இந்த உலகத்தில எந்த மூலையில வேணும்னாலும் இருக்கலாம்... ஆனால் இந்த வீட்டுக்குள் அவ காலடித் தடம் கூட வராதுனு தெரியாதா.... அதுனால கேட்டேன்....”


ரிஷி இன்னும் புரியாமல் விழிக்க…


“இன்னும் புரியலையா.... இந்த வீட்டுக்கு வருவாள்… உள்ள வர மாட்டாள்.... இது தெரியாம இங்க வந்து தேடுறியா… ரெண்டாவது… அவ எவ்வளவு தைரியமானவள்னு தெரியாதா உனக்கு… அவள நாங்க அடைச்சு வச்சுருக்கோமா” வார்த்தைகளை முடிக்கும் போது.... ரிஷி விழித்த விதமே.... கண்மணி பற்றி ரிஷிக்கு அரிச்சுவடி கூட தெரியாது என்பதை அர்ஜூன் உணர்ந்து கொண்டான்.... எங்கோ ஒரு ஓரம் அவனுக்கும் இப்போது நிம்மதி வந்து விட… வார்த்தைகளில் அவனையுமறியாமல் அர்ஜூனுக்கு நக்கல் தூக்கலாகத்தான் இருந்தது…


“அர்ஜூன்... என்ன நக்கலடிச்சுட்டு இருக்க... கண்மணி எங்க போய்ட்டானும் தெரியல.... எங்க தேடுறது.... ஒண்ணும் புரியல.... நீ என்னடான்னா இவ்வளவு கூலா பேசிட்டு இருக்க.... “ என்று வைதேகி அதாவது கண்மணியின் பாட்டி அதட்ட...


அர்ஜூனோ...


“அட போங்க பாட்டி.... உங்க பேத்தி.... விரல் சூப்புற சின்னக் குழந்தைனு நெனப்பா..” என்று எரிச்சலாகக் கேட்டான்....


ரிஷிக்கு அவன் கேள்வியில் ஆத்திரம் வந்து விட்டது....


“என்னங்க இப்படி பேசுறீங்க... வயசுப் பொண்ணு.... இன்னும் வீட்டுக்கு வரலைனு.. யாரோ ஒரு மூணாம் மனுஷன் எனக்கே கவலையா இருக்கும் போது..” என்று அர்ஜூனை பார்த்தவன்.. யோசனையோடு


“நீங்க அவ ரிலேட்டிவா தான் இருப்பீங்கனு நினைக்கிறேன்.... உங்களுக்குத்தான் உங்க வீட்டுப் பொண்ணுனு அக்கறையில பதட்டம் வந்திருக்கனும்.... நீங்க என்னடான்னா.... விரல் சூப்புற குழந்தை அது இதுனு காமெடி பண்றீங்க....” காட்டமாக எகிறினான் ரிஷியும்....


நாரயணனுக்கு யாரோ ஒருவன்.... தன் பேரனைத் திட்டுவது பிடிக்காமல்...


“அர்ஜூன்... சும்மா இருக்கியா... அப்புறம் நீ நாளைக்குப் போய்க்கலாம்....” என்று கண்டிப்போடு சொன்னவர்... வைதேகியை நோக்கி...

.

“போனை எடுத்துட்டு வா… கோதண்டத்துக்கு கால் பண்ணலாம்… அவன் டிபார்மெண்ட் வழியா பார்த்துப்பான்“ என்று சொல்லிவிட்டு


ரிஷியிடம் இப்போது திரும்பியவர்...


“கண்மணி இங்க இல்லைனு தெரியுதுதானே.... இன்னும் என்ன இங்க நிற்கிற... நீ கிளம்பு..” என்று விரட்டும் தொணியில் சொன்னவர்...

.

“அவன்கிட்டசொல்லி வை... என் பொண்ணத்தான்… அவ வாழ்க்கையைத்தான் நாசமாக்கிட்டான்... என் பேத்திய ஒழுங்கா எங்கிட்ட சேர்க்கலை... அப்புறம் இருக்கு அவனுக்கு....” என்று நடராஜனுக்கான மிரட்டலையும் சேர்த்து ரிஷிக்கு சொல்லி அனுப்ப...


“இவங்க பாலிட்டிக்ஸுக்கு நாமதான் கிடைத்தோமா” மனதுக்குள் நொந்து கொள்ளத்தான் முடிந்தது ரிஷிக்கு... பதில் எதுவும் பேச வில்லை...


ரிஷிதான் நாரயணனிடம் எதிர்த்துப் பேச வில்லை.... ஆனால் அர்ஜூனோ...


“தாத்தா நான் கிளம்புறேன்.... உங்க பேத்திக்குலாம் ஒண்ணும் ஆகாது.... வேணும்னா இப்படி இருக்கலாம்... அவளால நாலு பேருக்கு பாதிப்பு உண்டாகலாமே தவிர.... அவளையெல்லாம் அசைக்க முடியாது.... அதனால நிம்மதியா போய்த் தூங்குங்க...” என்றவன் முகத்தில் கண்மணியின் மீதான கோபம் மட்டுமே இருக்க.... ரிஷியும் இவர்கள் உரையாடலைக் கேட்டபடியே போய்க் கொண்டிருக்க...


“உனக்கு கொஞ்சமாவது அக்கறை இருக்கா......“ என நாரயணனிடம் போனைக் கொடுத்தபடியே கண்மணியின் பாட்டி... புலம்ப..


“ஹா ஹா... அக்கறை... அவ மேல.... என்னை விட இங்க யாருக்கும் இருக்குமா என்ன… அவளுக்கும் அது தெரியவில்லை… இப்போ உங்களுக்கும் சந்தேகமா ” என்றவன்… தன் தாத்தா பாட்டியின் முகத்தைப் பார்த்தவனாக

“ப்ச்ச்.... அவளுக்கு ஒண்ணும் ஆகாது தாத்தா... கூல்… நான் பார்த்துக்கிறேன் விடுங்க… உங்க பேத்திய உங்க கண்ல காட்டிட்டே நான் கிளம்புகிறேன்” என்று சமாதானமாகப் பேச ஆரம்பிக்க....


இவற்றையெல்லாம் கேட்டபடியே தன் பைக்கை ஸ்டார்ட் செய்யப் போன ரிஷிக்கோ....


“இனி இவள எங்க போய்த் தேடுவது... அவ அப்பாவைப் பார்ப்பதா... இல்லை இவளத் தேடுவதா... நடராஜ் சார் நன்றாக இருந்திருந்தால் கூட.... அவருக்கு தன் மகள் எங்கெல்லாம் போவாள் என்று தெரியும்.... அதைக் கேட்டாவது தேடி இருக்கலாம்... “ என்று யோசித்தவனுக்கு...வேறு வழிகள் எதுவும் புலப்படாமல் இருக்க... அப்போது நாரயணன் ரிஷியைக் கைத்தட்டி அழைத்தார் அதிகாரமாக...


“தம்பி.... இனி எங்க வீட்டுப் பொண்ணத் தேடி.... அவ பேரைச் சொல்லிட்டு அலையுற வேலை எல்லாம் வேண்டாம்... நாங்க பார்த்துக்கிறோம்…” என்று சொல்ல… அதில் அதிகாரம் மட்டுமல்ல


“எங்க வீட்டுப் பெண் விசயத்தில் நீ தலையிட வேண்டாம்” என்ற மிரட்டலும் தெளிவாகவே தெரிய


அது புரிந்த ரிஷி…… முகத்தை அலட்சியமாக மாற்றியபடி… கையெடுத்துக் கும்பிட்டபடியே


“சந்தோசம் சார்... ரொம்ப ரொம்ப சந்தோசம் சார்... முதல்ல அதைப் பண்ணுங்க.... எனக்கும் யார் யாரையோ எல்லாம் தேடி அலையிற தேவையில்லாத அநாவசிய வேலை மிச்சம்...“ என்று பட்டென்று கூறி விட்டு....


“டேய் தினாகர் வாடா… ” என்று தினகரையும் தன்னோடு இழுத்துக் கொண்டு வந்தவனுக்கு… தனக்கே இந்த நிலைமை என்றால்…. நடராஜை எந்த அளவுக்கு இவர்கள் கீழாக நடத்துவார்கள்… என்று தோன்ற… அதே நேரம்

‘ஆக அந்தாளு உயிரோடத்தான் இருக்கிறான்… மண்டையப் போட்ருந்தா இங்க பல பேருக்கு பல பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி கிடைச்சிருக்கும்’


அர்ஜூன் இவனிடம் கேட்ட வார்த்தைகள் வேறு அவனுக்குள் கோபத்தை பற்ற வைத்தது… கண்மணியைப் பற்றி… அவள் எங்கு போனாள் என்ற கவலையை விட… நட்ராஜைப் பற்றிய எண்ணங்களே ரிஷியை பந்தாடிக் கொண்டிருக்க… அந்த எண்ண ஓட்டம் ஒரு வித பதட்டத்தைத் தர… இந்த குடும்பம் அவரைப் பற்றிய பேசிய பேச்சுக்களால் ஏற்பட்ட கோபம் வேறு ஒருபுறம் என…. தன் அனைத்து உணர்வுகளையும் ஒன்று சேர்த்து தன் வண்டியைக் கிளப்புவதில் காட்டினான் என்றே சொல்ல வேண்டும்… உயிரற்ற வண்டி எதையும் உணரவில்லை… அவன் பின்னால் அமர்ந்திருந்த தினகருக்குத்தான் வீடு வந்து சேரும் வரை உயிரைக் கையில் பிடித்து வைத்துக் கொண்டு வர வேண்டிய அவஸ்தை… அதை எல்லாம் ஆர்கேயும் புரிந்து கொள்ள வில்லை… அந்தப் பெயரைச் சுமந்திருந்த அவனது வண்டியும் உணரவில்லை… என்பதே உண்மை

2,625 views0 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின்...

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை...

கண்மணி... என் கண்ணின் மணி- 94-3

அத்தியாயம் 94-3 சில வாரங்களுக்குப் பிறகு… வீட்டில் கண்மணி மட்டுமே இருந்தாள்… சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க… மணி 11 க்கும் மேலாக...

Comments


Commenting has been turned off.
© 2020 by PraveenaNovels
bottom of page