கண்மணி... என் கண்ணின் மணி-19-2

Updated: Nov 13, 2020

அத்தியாயம் 19-2:

கண்மணி பள்ளியின் நுழைவாயிலில் நுழைந்த போது மணி... 10:30....நேற்றே சொல்லி இருந்தாள்… இன்று அவர்கள் இருக்கும் ஏரியாவில் அம்மன் கோவில் விழா… கண்மணி ஒவ்வொரு வருடமும் விரதமிருந்து பொங்கல் வைப்பது வழக்கம்… இந்த வருடமும் அதே வழமையை பின்பற்றினாள் தான்… கடந்த வருடம் வரை மாலை பொங்கல் வைத்து விரதத்தை முடிப்பாள்.. இந்த வருடம் காலையிலேயே எல்லாவற்றையும் முடித்து விட்டு… தந்தைக்கும் கொடுத்து விட்டு… சரியாக இதோ பள்ளிக்கும் வந்து விட்டாள்…

அவளுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த மேஜையில் தனது கைப்பையை வைத்தபடி.... தனக்கு கொடுக்கப்பட்டிருந்த கணிணியை உயிர்ப்பித்தவள்.... தனது வேலையில் மூழ்கினாள்...

இந்த ஐந்து வருடங்களில் கண்மணியின் வாழ்க்கையில் எல்லாமே ஏறுமுகம் தான்… அவள் நினைத்தது போலத்தான்.. அவள் வாழ்க்கையும் போய்க் கொண்டிருப்பதால் அவள் வாழ்க்கையிலும் அவள் குணங்களிலும் பெரிதாக மாற்றமில்லை … தோற்றத்தில் மட்டுமே அவளிடம் வித்தியாசம் அதாவது… இன்று 22 வயது இளம் பெண் அவ்வளவுதான்… அதற்கேற்ற வனப்பும் அழகும் மட்டுமே அவளிடம் இருக்கும் மாறுபாடு…

கண்மணிக்கென்று தோழிகள் கிடையாது... கண்மணி அனைவரிடமும் இன்முகமாக பழகுவாளே தவிர.... நெருக்கம் கிடையாது.... அவளிடம் பழகும் பலருக்கு அவள் தோழியாக இருந்து... அவர்களின் மகிழ்ச்சி... துக்கங்களை கேட்டுக் கொள்வாளே தவிர.... தன் உணர்வுகளை பங்கு போட்டுக் கொண்டதில்லை... அப்படி ஒரு நட்பு அவளுக்கு கிடைக்கவில்லை என்பதை விட.... அவள் அதற்கான சூழலை உருவாக்கிக் கொள்ள வில்லை.... அதுமட்டுமில்லாது தன் வட்டத்திற்குள் அவள் யாரையும் அனுமதிக்கவில்லை என்பதும் உண்மை…. கண்மணியைப் பற்றி... அவளது உணர்வுகளை பற்றி ஓரளவு அனுமானிப்பது அவள் தந்தை நடராஜ் மட்டுமே...

---

மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து வந்த மின் அஞ்சல்களை எல்லாம் குறித்து வைத்துக் கொண்டிருந்தவளை... பள்ளி முதல்வர் ராஜம் தனது அறைக்கு அழைக்க...

“இதோ வருகிறேன் மேடம்” என்றவள் அடுத்த நொடி நின்றது தனது தாளாளர் இராஜம் மேடம் முன்னிலையில் தான்...

வேகமாக உள்ளே நுழைந்தவள் ராஜம் மேடத்தின் முன்னால் அமர்ந்திருந்தவரை.... அவர் முகம் பார்க்காமலேயே அவர் யாரென்று புரிய… தன்னை அழைத்த ராஜம் மேடத்திற்கு வணக்கம் சொன்னபடி அவர் முன் நிற்க.... நாராயண குருக்களோ புன்னகை பூத்த முகத்தவராய் தன் பேத்தியைப் பார்த்தார் விழி அகற்றாமலேயே…

திருவிழாவுக்கென்று பிரத்தியோகமாக எடுத்திருந்த மஞ்சள் நிற பட்டுப்புடவையிலேயே தான் பள்ளிக்கும் வந்திருந்தாள் கண்மணி.. தேவதை போல் மூக்குத்தி ஒளிர… தன் அருகே நின்ற.... தன் பேத்தியையே பார்த்தபடி இருந்தவருக்கு…. கண்மணியைப் பார்க்கும் போதெல்லாம் மகள் பவித்ராவின் நினைவு வருவது போலவே இன்றும் அதே நினைவு

இந்த 5 வருடத்தில்... அதிலும் புடவையில் பார்க்கும் போது இன்னும் வளர்ந்தது போல் இருந்தாள் அவர் பேத்தி ... 22 வயது ஆகி விட்டது தன் பேத்திக்கு... ஆனால் அவளைத் தன் அருகில் வைத்துக் கொள்ள முடியவில்லையே என்பதைத்தான் அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை... மகள் தனக்கு பிடிக்காதவனோடு தன் வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு போய் விட்டாள் என்பதற்காக... அவளையே தள்ளி வைத்தவர்தான்... ஆனால் தன் பேத்தியை அப்படி விட மனதில்லை.... தன் வாரிசான தன் மகள் வயிற்றில் பிறந்த கண்மணி... நடராஜனின் வாரிசு என நினைக்க முடியவில்லை... முழுக்க முழுக்க தன் குல வாரிசாகவே கண்மணி பரிணமித்திருக்கிறாள் என என்று உணர்ந்தாரோ அது முதல் கண்மணியை தன் பக்கம் இழுக்க நினைக்கிறார்.. ஆனால் முடியவில்லை...

ராஜத்திற்கு கண்மணியைப் பற்றி கிட்டத்தட்ட அனைத்தும் தெரியும்... என்பது மட்டுமல்லாமல் கண்மணியை எப்படியாவது அவள் தாத்தாவோடு சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைக்கும் நபர்களில் ஒருவர்.... ராஜத்தை பொறுத்தவரை கண்மணியை முற்றிலும் நடராஜனோடு பிரித்துச் செல்லும் எண்ணம் எல்லாம் இல்லை... எப்படியும் கண்மணிக்கென்று ஒரு தனி வாழ்க்கை உண்டு... அது ஏன் நாராயண குருக்களின் குடும்பத்தைச் சேர்ந்த அர்ஜூனாக இருக்கக் கூடாது என்பதுதான் அவரது எண்ணம்...

கண்மணி தன் தாத்தாவைப் பார்த்தெல்லாம் பேசாமல் தன்னை அழைத்த முதல்வர் ராஜத்திடம் என்னவென்று கேட்க…

அவர் நாரயணனைப் பார்த்தபடியே…

“கண்மணி அர்ஜூன் வந்திருக்கான்.... உன்னைப் பார்க்காமல் அமெரிக்கா போக மாட்டேனு சொல்லி ஒத்தக் கால்ல நிக்கிறானாம்....” இராஜம் சிரித்தபடி கண்மணியிடம் சொல்ல... கண்மணி மரியாதை வைத்திருக்கும் நபர்களில் இராஜமும் ஒருவர்... அதனால் அவரிடம் தன் கடுப்பை மறைத்தபடி.. லேசான புன்னகையை தன் இதழ்களில் கொண்டு வந்தவள்..

தனது தாத்தாவைப் பார்த்து முறைத்தாள்...

“கண்மணி போகலாமா... அர்ஜூனுக்கு நைட் ஃப்ளைட்... “ கண்மணியின் முறைப்பை அலட்சியம் செய்தவராய்ப் பேச...

“இல்ல தாத்தா இப்போ நான் வரலை... அர்ஜூன் கிட்டயே சொல்லிட்டேனே… ஈவ்னிங்க் வருகிறேன்னு...” என்று அழுத்தமாகச் சொல்ல... நாராயணனும் இராஜமும் எவ்வளவோ வற்புறுத்தியும் கண்மணி தன் முடிவில் இருந்து மாறவில்லை...

அதன் பின் நாராயணன் தான் கண்மணியின் விருப்பம் போல் மாலை வருமாறு சொல்லி விட்டு செல்ல... கண்மணியும் அங்கிருந்து தன் அறைக்குச் சென்றாள்...

இராஜத்திற்குத்தான் இப்போது பலத்த யோசனை....

“சின்ன விசயம்... இதற்கே இந்தப் பெண் தன் முடிவில் இருந்து மாறாமல் இருக்கிறாள்... இவளை எப்படி நாரயண குருக்கள் தன் வழிக்கு கொண்டு வரப் போகிறார்.... நினைக்கவே மலைப்பாக இருந்தது அவருக்கு...

இன்றைய நிகழ்வு மட்டும் அல்ல... கண்மணியின் குணம் ஓரளவு தெரியும்... அவள் 12 ஆம் வகுப்பு முடித்த போது... அதிலும் மாநில அளவில் 3 வது இடத்தைப் பிடித்திருந்தாள்....

அனைவரும் அவள் மருத்துவம் இல்லை பொறியியல் இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பாள் என எதிர்பார்த்திருக்க.... கண்மணியோ இளநிலை கணிதப் பிரிவு அதையும் தொலைதொடர்பு கல்வி வழி எடுத்து படிக்க போவதாக கூற அர்ஜூனுக்குத்தான் மிகவும் கோபம்…

அவள் பொறியியம் இல்லை மருத்துவம் தான் படிக்க வேண்டுமென்று அவன் சொல்ல… கண்மணி அதை எல்லாம் லட்சியம் செய்தால் தானே… கண்மணியின் மீதுள்ள கோபத்தை நாரயணனிடம் காட்ட… நாரயணன்-வைதேகி இருவரும் பேத்தியிடம் பேச… அவள் பிடிவாதம் அவர் அறியாததா… வேறு வழி இன்றி இராஜத்திடம் சொல்லி அவளிடம் பேச வைக்க… இராஜமோ நடராஜிடம் வந்து நின்றார்…

.

நடராஜனுக்குத்தான் படிக்க வைக்க வசதியில்லையோ… மகள் வாழ்க்கையில் முட்டுக்கட்டை போடுகிறாரோ… என்று என்று நடராஜனை வரவழைத்து விசாரிக்க... அவரோ தன் மகள் மருத்துவம் என்ன அவள் ஆசைப்பட்டால் வெளிநாடு அனுப்பியே படிக்க வைக்க தன்னால் முடியும் என்று சொல்லிவிட்டு.... கண்மணியின் விருப்பம் எதுவாக இருந்தாலும் அதற்கு தான் தடையாக இருக்க மாட்டேன்.... அவள் விருப்பம் எதுவோ அதுவே படிக்கட்டும் என்று முடித்து விட.... அத்தனை பேருக்கும் நடராஜிடம் இன்னும் கோபமே… முடிவெல்லாம் கண்மணி எடுக்க… அவளிடம் பேசி ஜெயிக்க முடியாத இயலாமையை … நடராஜிடமே காட்டினர் அனைவரும்…

இராஜம் தானே கண்மணியிடம் பேசிப் பார்த்தார்... அவளது மதிப்பெண்.. அவளின் எதிர்காலம்...என அவளுக்கு அறிவுரை சொல்ல...

“இந்தப் படிப்பு படித்தால்.... என்ன குறைச்சல்... எனக்கும் இலட்சியம் இருக்கு மேடம். எனக்கு டீச்சர் வேலைனா ரொம்ப பிடிக்கும்.... அது மட்டும் இல்லை .... ஒரு பள்ளிக் கூடம் நானும் ஆரம்பிக்க வேண்டும்... ஏழை மாணவர்களுக்கு குறைந்த பட்சம் ஆரம்ப கல்வியை அளிக்கக் கூடிய அளவிலாவது அது இருக்க வேண்டும்... அதற்கு எனக்கு பொறியியலும் மருத்துவமும் தேவையில்லை.... கொஞ்சம் பணமும்.... அதற்கான.. கல்வித் தகுதியும் போதும்...” என்ற போது சோர்ந்தவர் நாரயணன் தான்… இந்த பள்ளி… அறக்கட்டளை எல்லாம் இவள் பெயரில் இருக்கும் போது இன்னொன்றா…

அதை விட…

இது தான் என் இலக்கு எனும் போது ஏன் பணத்தை மருத்துவம் பொறியியல் என வீணாக்க வேண்டும்... முடிந்தால் எனக்கு ஒரே ஒரு உதவி... எனக்கு இந்த ஸ்கூல்ல அட்மின்ல வேலை போட்டுக் கொடுங்க.... ஆசிரியர் வேலையை கற்றுக் கொடுக்க படிப்பு இருக்கிறது... பள்ளியை நிர்வகிக்கும் அனுபவத்தை உங்ககிட்ட இருந்து கற்றுக் கொள்கிறேன்” என்பதுதான் உச்சகட்ட அதிர்ச்சி… உரிமையானவளே… வேலைபார்க்கும் கொடுமையை என்ன சொல்வது….

கண்மணி இந்த அளவுக்கு தெளிவாக இருக்கும் போது... இராஜமும் அதைப் புரிந்து கொண்டு... நாரயணனிடம் பேசினார்… பிற்காலத்தில் அம்பகம் அறக்கட்டளையை அவள் தானே பார்க்கப் போகின்றாள்… அவளது இந்த முடிவும் நாரயண குருக்களுக்கு சாதகமானதே என்று சொல்ல… ஒரு வழியாக நாரயணம்…அர்ஜூன் ஓரளவு சமாதானமாகினர்..

அதன் பின் அந்தப் பள்ளியிலேயே தன் சிபாரிசு என்பது போல நிர்வாகத்தில் அவளை ஈடுபடுத்தினார் இராஜம்… அது மட்டும் இல்லாது... 10 ஆம் வகுப்பு , 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்கவும் அனுமதி அளித்தார்....

இராஜத்தின் புதல்வன் பார்த்திபனின் வழிநடத்தலின் படி… அந்த பள்ளியின் அனைத்து விபரங்களும் கண்மணியின் கீழ் அவளறியாமலேயே அவளுக்கு தெரியவைக்கப்பட ஆரம்பித்து இருந்தது… இது எல்லாமே அர்ஜூனின் கட்டளைகளுக்கு ஏற்ப நடந்தது என்பது வேறு விசயம்

...

வருடம் இருமுறை இந்தியா வந்தாலும்… நாரயணன் குடும்பத்தை அவன் கீழ்தான் வைத்திருந்தான் அர்ஜூன்… குடும்பம் மட்டுமல்ல… அவரின் தொழில், நிதி விவகாரம் அனைத்துக்குமே அர்ஜூன் தான் பாதுகாவலனாக இருக்கின்றான்… அவனைப் பொறுத்தவரை இது அவனுக்கு மிகப் பெரிய பொறுப்புதான்… ஆனால் வயோதிக நிலையில் யாரும் இல்லாத அவர்களை… அதிலும் வாரிசே இல்லாத செல்வந்தர்களாகி இருப்பவர்களை… வேறு வழியில்லாமல் இவன் பார்த்தாக வேண்டிய சூழ்நிலை… அடுத்து…