கண்மணி... என் கண்ணின் மணி-19-1

அத்தியாயம் 19-1:

சென்னையின் பரபரப்பான காலைவேளை.... செல்லும் வாகனங்களுக்குள் பந்தயம்தான் நடக்கிறதோ என்று தோன்றுவது போல இரு சக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும் ஒன்றையொன்று போட்டி போட்டுக் கொண்டு சாலைகளில் பறந்து சென்று கொண்டிருக்க.. நடை பாதை ஓரத்தில் நடந்த மக்கள் கூட அந்த வாகனங்களுக்கு இணையாக அதே வேகத்தில்தான் இருந்தனரோ… தங்கள் கால்களில் சக்கரம் மாட்டியிருப்பதைப் போல் அவர்களிடமும் வேகம் வேகம் மட்டுமே..

இப்போதிருக்கும் மக்களுக்கு ஒரு நாளின் 24 மணி நேரம் போதவில்லை என்பதே உண்மை... இந்த வேகம்தான்… நாட்களையும்…. வாரங்களையும்…. வருடங்களையும் மின்னல் வேகத்தில் தாண்டிச் செல்ல காரணமாயிருக்கிறது போல… அதனால்தான் என்னவோ... நம் நாயகன் ரிஷியும் தனது 5 வருடங்களை இந்த பரபரப்பான சென்னையில்... அதே வேகத்தோடு கடந்தும் விட்டான்

ஆனால் இன்று

அவனின் பரபரப்பையும் வேகத்தையும் கட்டுப்படுத்துவது போல் ஒரு பெரிய சிக்னலில் மாட்டியிருந்தான் ரிஷி... வெயில் வேறு... 8 மணிக்கே சுள்ளென்று அடித்தது…. ஹெல்மெட் அணிந்திருந்த காரணத்தால் முகம் முழுவதும் வியர்த்துக் கொட்ட… தான் செல்லும் வழிக்கான பச்சை விளக்கின் தரிசனத்திற்காக காத்துக் கொண்டிருந்தான்… ஆனால் அது இரக்கமே காட்டாமல அதன் தரிசனத்தைத் தராமல் இருக்க…