கண்மணி... என் கண்ணின் மணி-18-3

Updated: Nov 8, 2020

அத்தியாயம் 18-3

ரிதன்யா , ரித்திகா மற்றும் மகிளா மூவரும் கோவிலுக்கு செல்லத் தயாராகிக் கொண்டிருந்தனர்... தனசேகர் இறந்து 45 நாட்கள் முடிந்தபடியால் கோவிலுக்கு செல்ல வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டிருந்ததால் அவர்கள் கிளம்பிக் கொண்டிருக்க… நீலகண்டன் மற்றும் அவரது மனைவி கோதை இருவரும் அவர்களை அழைத்துச் செல்ல காத்திருந்தனர்…

நீலகண்டனுக்கு ரிஷியை பிடிக்கவில்லைதான்…. இருந்தாலும் இந்த நேரத்தில் லட்சுமி குடும்பத்திற்கு இருக்கும் ஒரே ஆதரவு அவர்தான்…. அதே நேரம் ரிஷி அன்று தன்னிடம் பேசிவிட்டு சென்ற பின்னர்… மனம் கொஞ்சம் அமைதியாகத்தான் இருந்தது… தன் மகள் வாழ்க்கையை நினைத்து இனி கவலை வேண்டாம்… என்பதால் பிடிக்கின்றதோ இல்லையோ கடமைக்காகவது வந்து போய்க் கொண்டிருந்தார்,…

அதே நேரத்தில் மகிளாவையும் ரிஷியையும் கண்காணிக்கவும் தவறவில்லை… ஆனால் அவரின் கண்காணிப்பு தேவையே இல்லை என்பது போல… ரிஷி மகிளாவை சந்திக்க என்ன…. நேருக்கு நேராக பார்த்தாலோ… இல்லை அருகில் இருந்தால் கூட கண்டு கொள்ள வில்லை… ஆனால் மகிளாவோ அதற்கு எதிர்மாறாக இருந்தாள்… தன்னை ரிஷி கண்டு கொள்ளாமல் இருக்கிறானே என்று அவளது பார்வை ஏக்கமாய் மாறி அவனையே சுற்றி சுற்றி வந்ததை நீலகண்டனுக்கும் புரியாமல் இல்லை…ரிஷிக்கும் தெரியாமல் இல்லை… அவளை விட்டு அவன் தான் விலக நினைக்கிறானே…. பின் எப்படி அவன் அவளைக் கண்டு கொள்வான் பழகுவான்…

ஒரு மாதிரி… நாட்கள் ஓவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக போய்க் கொண்டிருக்க… இதோ ரிஷி இன்று சென்னை செல்லும் தினம்…

அனைவரும் கிளம்பி கோவிலுக்கு போய் விட…. ரிஷி மற்றும் லட்சுமி மட்டுமே அந்த வீட்டில் இருந்தனர்… லட்சுமி ரிஷி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து முகம் கொடுத்துப் பேசி பல நாட்கள் ஆகி இருந்தது…

சென்னையில் இருந்து வந்த அன்று ரிஷியோடு பேசியவர்தான் லட்சுமி… சண்டை… கணவன் இறப்பு… அதன் காரணமாக மொத்தமாக ரிஷியைத் தள்ளி வைத்து விட்டார்… கணவன் இறந்த வருத்தம்… மகனின் மீதான கோபம்… அவனின் பிடிக்காத யாரையும் மதிக்காத நடவடிக்கை… என இவை மட்டுமே எஞ்சி இருந்தது அவரிடம்…

ரிஷியும் இத்தனை நாட்களில் தன் அன்னையிடம் தன்னைப் பற்றி எடுத்துச் சொல்லவும் முயலவில்லை.... மாறாக அவரை விட்டு முடிந்த அளவு விலகி நின்றான்....

அவனுக்கு இப்போதைய எண்ணம் எல்லாம்.... தன் அன்னை மனதளவில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றார்.. அதில் இருந்து வெளி வர வேண்டும்… அந்த மனக் கஷ்டத்திற்கு காரணமே தான் தான் என்பதும் புரியாமல் இல்லை…. ஆனால் எப்படி தன்னை நிரூபிப்பது… காலம் வரும்… பொறுமையுடன் இருப்போம்… தன் தாய் தன்னை நம்பாமல் யாரை நம்ப போகிறார்… காத்திருப்போம் தன்னைப் பற்றிய தவறான அவரின் எண்ணங்களை எல்லாம் ஒவ்வொன்றாக அகற்ற வேண்டும்… இந்த எண்ணம் தான் அவன் மனதினுள் வேரோடியிருந்தது...

அதற்கு முதல் படி.... தான் பணத்தை ஒரு பொருட்டாக எண்ணவில்லை... அப்பாவின் பணத்தை நம்பி தான் இல்லை.... இதை முதலில் தன் அன்னைக்கு புரியவைக்க வேண்டும்....

அடுத்து தன் கல்லூரிப் படிப்பு… படிப்பை முடிக்க வேண்டும்... தனக்கான வேலை ஒன்றை தேட வேண்டும்…. இவற்றை எல்லாம் முடித்து விட்டுத்தான் தன் அன்னையிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முடிவு செய்தவன் அதற்கான செயல்களிலும் இறங்கினான்...

இதோ… தன் அன்னையிடம் பேசுவதற்கு சரியான சந்தர்ப்பமாக இன்றைய தனிமை வாய்க்க... லட்சுமியின் முன் நின்றான்...

“அம்மா” என்ற வாஞ்சையுடன் அழைத்தபடி அவர் அருகில் அமர்ந்தவனுக்கு... தன் அன்னை தன்னை நிமிர்ந்து பார்க்காமல் அமர்ந்திருந்தது... மனதில் வருத்தத்தை தந்தாலும்... அதில் தளர்ந்துவிடாமல்..... தான் சொல்ல வந்ததை சொல்லும் முடிவோடு பேச ஆரம்பித்தான்


“அம்மா” என்று மட்டும் அவன் கூப்பிடஅப்போதும் லட்சுமி நிமிரவில்லை...


“இது பாங்க் பாஸ் புக்... உங்க 3 பேருக்கும் ஃபிக்ஸட் பண்ணிட்டேன்.... இது உங்க செலவுக்கான அக்கவுண்ட் தனியா ஒரு பாஸ்புக்.... “ என்று அவரின் கைகளில் திணித்தவன்... இந்த வீடு ,நகை… கொஞ்சம் சேவிங்ஸ் இதுதான் மிச்சம்… வீடை அடமானம் வைத்து ஓரளவு கடன் லாம் செட்டில் பண்ணிட்டேன்…. மற்ற எல்லா ப்ராபெர்ட்டியையும் வித்தாச்சும்மா.... அதெல்லாம் தனித்தனியா உங்க மூனு பேர் பேர்லயும் போட்ருக்கேன்.... மாமாவுக்கு என்னைத்தான் பிடிக்காது.... உங்க எல்லாரையும் நல்லா பார்த்துக்குவாரு..... மாமா வீட்டுக்கு பக்கத்திலேயே உங்களுக்கு தங்க ஏற்பாடு பண்ணிட்டேன்...” என்று எல்லாம் சொல்லி முடித்து அமைதியானான்..


இத்தனை வருடம் இந்த வீட்டில் வாழ்ந்து வந்தவனுக்கு... இனி எப்போது இதை மீட்டெடுத்து மீண்டும் இங்கு குடியேறப்போகிறோமா... என்ற நினைவில் வந்த அமைதி அது...


இருந்தும் இது அமைதிக்கான நேரம் இல்லை என்பதை உணர்ந்தவனாக... மீண்டும் பேச ஆரம்பித்தான்


“நான் சென்னைக்கு கிளம்புகிறேன்....” இந்த வார்த்தையில் இப்போது லட்சுமி அவனைப் பார்க்க... அவர் பார்வையின் அர்த்தம் புரிந்தவனாக

“நீ படிச்ச இலட்சணம் லாம் தெரியுமே… எதுக்கு சென்னை போறேன்னு கேட்காதீங்க… சென்னைல ஏதாவது வேலை பார்த்து என்னோட வாழ்க்கைய நான் பார்த்துக்கிறேன்… வெற்றியோ தோல்வியோ என்னோட போகட்டும்… எனக்கும் இந்த வாழ்க்கைக்குமான போராட்டத்தில்… நீங்களோ ரிது ரிதன்யாவோ எதற்காகவும் கஷ்டப்படக்கூடாது… முக்கியமா பணக்கஷ்டம் வரக்கூடாது… அதற்கான எல்லா ஏற்பாடையும் பண்ணி வச்சுட்டேன்… மாமா உங்க எல்லாரையும் நல்லா பார்த்துக்குவார்…”

லட்சுமி இப்போதும் பேசவில்லை… ஏன் சென்னை செல்கிறாய் என்றும் கேட்கவில்லை… நீ இனி என்ன செய்யப் போகிறய் என்றும் கேட்கவில்லை… அவரைப் பொறுத்தவரை மகன் தவறானவன்…. இந்த எண்ணம் மட்டுமல்லாது தன் கணவரின் இறப்புக்கு மகன்தான் காரணம்… அவனின் நடத்தை தான் முக்கிய காரணம்… தொழிலில் நஷ்டம் எல்லாம் பெரிய காரணமாக இருக்காது என்றே நம்பி இருக்க… ரிஷியை லட்சுமி அறவே வெறுத்திருந்தார்…

ரிஷி அதன் பின் சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்தான்.... தன் அன்னை தன்னிடம் ஏதாவது கேள்வி கேட்பார் என்று... குறைந்தபட்சமாக அவனின் செலவுக்கு என்ன செய்யப் போகிறான் என்றாவது தன் அன்னை கேட்பார் என்று நினைத்தான்... ஆனால் லட்சுமி வாய் திறந்தால் தானே...

ரிஷிக்கு தன் மீதான கழிவிரக்கத்தில் அழுது விடுவான் போல் தோன்ற.... அறையை விட்டு வெளியே வந்து விட்டான்...

ஹாலில் வந்து கண்மூடி எத்தனை மணி நேரம் அமர்ந்திருந்தானோ தெரியவில்லை.. ரிதன்யா ரித்திகா.... வரும் சத்தம் கேட்ட போதுதான் கண் திறந்தான்....

ரிதன்யா நல்ல மதிப்பெண்கள் எடுத்தும்... தன் அன்னையை விட்டு செல்ல பிரியம் இல்லாததால் இங்கேயே கலைக்கல்லூரியில் சேர முடிவு செய்திருந்தாள்... ரிஷியும் அவளை அவள் விரும்பிய படிப்பிலேயே சேர வற்புறுத்தினான் தான்... ஆனால் அவள் மறுத்து விட்டாள்... ரித்விகா... அடுத்த வகுப்புக்கும் சென்று விட்டிருந்தாள்... என அவனது குடும்பம் நடைமுறை வாழ்க்கைக்கு பழக ஆரம்பித்து இருக்க ரிஷியும் சென்னைக்கு கிளம்ப முடிவு செய்திருந்தான்....

ரிதன்யா... ரித்திகா குரல்கள் கேட்ட போதே அவர்கள் நினைவுகளுக்கு தாவிய போதே… மகிளாவின் குரலையும் அவன் செவிகள் தேட.... அது ஏமாற்றத்தைத்தான் பிரதிபலித்தது... ஆனாலும் மகிளா நன்றாக இருக்க வேண்டும் என்றால் தன்னை விட்டு பிரியத்தான் வேண்டும் என்று மனதில் நினைத்து விலகி விட்டான் தான்.... ஆனாலும் அவன் மனம் இன்னும் அதற்கு பழக வில்லை போல... மகிளாவை நினைக்கும் போதெல்லாம் மனம் வலித்தது... ஆனாலும் மகிளாவின் நினைவுகளுக்கு முன்னால் அவனின் குடும்பம் நிற்க... காதலை புறம் தள்ளினான்...

காதல், காதலி இதெல்லாம்....... வாழ்க்கையில் தோல்வியுற்ற ஒருவனுக்கு அத்தியாவசியம் இல்லை… அதெல்லாம் அனாவசியம் மட்டுமே என்று தனக்குள் பலமுறை சொல்லிக் கொண்ட வார்த்தைகளை இப்போதும் தனக்குள் சொல்லிக் கொண்டபடி... கண் திறக்க… அவன் முன் நின்றிருந்ததோ மகிளா...


அவளை எதிர்பார்க்காதவன்… தடுமாறி பின் உடனே தன்னைச் சமாளித்தபடி...

“என்ன மகி” என்று அவளைப் பார்த்து வலிய புன்னகைக்க முயற்சித்தான்… அது மகிளாவுக்கும் புரிய

“ஏன் மாமா உன்னையே இப்படி வருத்திக்கிற... நீ கவலைப்படாமல் சென்னை போ மாமா… அப்பா என்ன சொன்னாலும் நான் உன்னைத்தான் மேரேஜ் பண்ணிக்கிருவேன்... உனக்காக காத்திருப்பேன்… இப்போ என்ன உனக்கு என்ன கவலை… யார் உன்னை நம்பாவிட்டாலும்.. நான் உன்னை நம்புறேன் மாமா.... அந்த பணம் விவகாரம்… நீ ஏன் அந்த பொண்ணுக்கு கொடுத்த… இதெல்லாம் எனக்கும் தெரியுமே மாமா.. நான் அத்தைகிட்ட சொல்றேனு சொன்னால் சொல்லக் கூடாதுனு மிரட்டுற....” என்று அவன் தோள் மீது சாய்ந்தவளை... அவளறியாமல் நாசுக்காக… அவளை விட்டு தள்ளி அமர்ந்தவன்....

“ப்ச்ச்.. அதெல்லாம் ஒரு வருத்தமும் இல்லை… நல்லா படி... மாமா சொல்றதைக் கேளு.... பிடிவாதம் பிடிக்காதே.... என்னால முன்ன மாதிரி அடிக்கடி போன் செய்ய முடியாது... அடிக்கடி என்ன... என் போனை எதிர்பார்க்காத....” சிறு பிள்ளைக்கு கூறுவது போல சொல்ல...

தான் சொன்னதிற்கெல்லாம் அப்பாவியாய் தலை ஆட்டியபடி தொலைக்காட்சியில் ஓடிய பாடலில் கவனத்தை வைத்திருந்தவளை... கண்களில் வலியோடு பார்த்திருந்தான் ரிஷி...