கண்மணி... என் கண்ணின் மணி-18-2

Updated: Aug 1, 2021

அத்தியாயம் 18-2

தனசேகரின் அலுவலக அறையில்.. இவனுக்காக காத்திருந்த திருமூர்த்தியும், கேசவனும்…ரிஷி உள்ளே நுழையும் போதே இவனைப் பார்த்து முறைப்பாய் பார்வையை வீச..... அவர்களைப் பார்த்தபடியே வரவேற்கும் விதமாக அவர்கள் முன் போய் நின்று பார்வை பறிமாற்றம் நடத்தியவன் … பின் தன் தந்தையின் இருக்கையில் அமர்ந்து அவர்களின் வார்த்தைகளை எதிர்பார்த்து காத்திருக்க…

திருமூர்த்தியும் கேசவனும் இன்னும் உக்கிரமாக அவனை முறைக்க…

அவர்கள் என்ன காரணத்திற்காக வந்திருக்கிறார்கள் என்பது தெரியாதவனா ரிஷி…... இருந்தும் வார்த்தைகள் அவர்கள் வாய் மொழியாகவே வரட்டும்…. என்பது போல ரிஷியின் புருவமுமோ நக்கல் கலந்த கேள்வியாக உயர… கண்களோ அப்பாவியாக பார்வை பார்த்து வைக்க…

கேசவன் தான் ஆரம்பித்தார்...

ஃபேக்டரி விசயம் கேள்விப்பட்டியா… உனக்குத் தெரியுமா தெரியாதா… இல்லை எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கிறியா” என்ற போதே…

”அட அங்கிள்… என்ன இப்டி சொல்லிட்டீங்க…. அந்த கேஸ்தானே அந்த விசயம் தெரியும்… யாரோ நம்ம ஃபேக்டரி மேல ரிப்போர்ட் பண்ணிருக்காங்களாமே…ஸ்டே ஆர்டர் வாங்கி இருக்காங்களாமே… இனி என்ன ஆகும் அங்கிள்… ஆனால் எனக்கு வேற ஓண்ணுமே தெரியாதே… நீங்க ரெண்டு பேரும் தான் எனக்கு அட்வைஸ் பண்ணனும்… எனக்குத்தான் ஒண்ணும் தெரியாதே” என்று அப்பாவியாகக் கேட்டு அவர்களைப் பார்க்க… இவன் லூசா என்பது போல மாறி இருந்தது இப்போது அவர்கள் பார்வை

”ப்ச்ச்… ஆனால் ரொம்ப கஷ்டமா இருக்கு அங்கிள்… நாங்க பார்ட்னர் ஷிப்பை விட்டு வந்த பின்னால இந்த ஸ்டே ஆர்டர் வந்திருக்கலாம்… “ உதட்டைப் பிதுக்கியவனாக ...


பின் கவலையோடு

“இப்போ எங்க கைக்கு வர வேண்டிய கொஞ்ச நஞ்ச பணமும் போச்சு…ஃபேக்டரி ஸ்டே ஆர்டர்ல இருக்கும் வரை பார்ட்னர்ஷிப் கேன்சல் பண்ண முடியாதாமே… அதுதான் எனக்கும் வருத்தம்… என்னை விடுங்க… ஏற்கனவே அப்பா வெளில வர நினைத்த கம்பெனி தானே… உங்க ரெண்டு பேருக்கும்… அதிலும் கம்பெனிய தூக்கி நிறுத்த போராடுன உங்களுக்கு பெரிய இடிதான் இந்த கேஸ் விசயம் … நினைக்கவே கவலையா இருக்கு” இப்போது அப்பாவித்தனம் அவன் குரலில் சுத்தமாக இல்லை… கேலி செய்வது போல் மட்டுமே இருக்க… அவன் சொன்ன விதத்தில் குழம்பிப் போனவர்கள் கேசவனும்… திருமூர்த்தியும் தான்….

இந்த கம்பெனி விவகாரம்… கோர்ட் கேஸ் வரை போகும் என்று நினைத்ததுதான் …. ஆனால் அவர்கள் நினைத்தது வேறு மாதிரி…

எப்படி என்றால்..ரிஷிதான் கோபத்தில் கோர்ட்டுக்குப் போவான்… அப்படி ரிஷி கேஸ் போட்டாலும்… பார்ட்னர்ஷிப் விவாகரத்தை வைத்துதான் கேஸ் போடுவான்… அந்த வழக்கும் பெரிதாக நிற்கப் போவதில்லை…. 2 மாதம் இல்லை மூன்று மாதத்தில் வழக்கை முடித்து… தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளலாம் என்று ஈஸியாக நினைத்து வைத்திருக்க கோர்ட் மூலம் வந்ததோ… வேறு விசயமாக ஸ்டே ஆர்டர்…


இவர்கள் நினைத்தது போல ரிஷி போடவில்லை… யாரோ போட்டிருந்தார்கள்… சூழ்நிலை மாசுபடும் விதமாக இவர்கள் தொழில் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்… என்று… அதற்கான ஆதாரங்கள் எல்லாம் அக்குவேறு ஆணி வேராக அங்கே வைக்கப்பட்டிருக்க… அதைக் காரணம் காட்டி…. ஸ்டே ஆர்டரும் போடப்பட்டிருக்க… அதனால் பார்ட்னர் ஷிப்பையும் கேன்சல் பண்ண முடியாமல் போக… ஆக தனசேகர் கம்பெனியை வைத்து அவர்கள் போட்ட அத்தனை திட்டமும் பாழாகி விட்டிருந்தது…

இதன் பின்னணியில் ரிஷி இருப்பானோ என்று நினைத்தாலும்… இத்தனை நாள் பார்த்த விதத்தில்… அவனோடு பழகிய விதத்தில்… தனசேகர் சொன்னதை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது… ரிஷியை அப்படி எல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை… இருந்தும் கொஞ்சம் சந்தேகம் இருக்க… அதே நேரம் ஒருவேளை நீலகண்டன் ரிஷியின் பின்னால் இருந்து செயல்படுகிறாரோ… வருங்கால மருமகன் என்று அவனுக்கு எல்லாம் சொல்லிக் கொடுக்கின்றாரோ… சந்தேகம் இன்னும் கூடுதலாக வர… அதன் நிமித்தமே இந்த சந்திப்பு…

அதுமட்டுமல்லாமல் ரிஷியும் ஆரம்பத்தில் அப்பாவியாக பேசி வைக்க… இருவருமே குழம்பினர்… அது இருவரின் முகத்திலும் நன்றாகவே பிரதிபலிக்க… ரிஷி அவர்களின் குழப்பத்தைக் கண்டுகொண்டவனாக… இதழ் ஓர ஏளனத்தை அவர்கள் காணாமல் அடக்கியவனாக…

“அப்புறம் அங்கிள்… ” என்று அவன் அவர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தையை முடிக்கும் விதமாக கேட்டு வைக்க…

இருவராலும் ரிஷியை சந்தேகமே படமுடியவில்லை… இனி இவனிடம் பேசி பிரயோஜனம் இல்லை… என்று தங்களுக்குள் முடிவு செய்தவர்கள்… ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டபடி… எழுந்தவர்களாக அவனிடம் விடைபெற்று அந்த அறை வாசலை நோக்கிப் போக… அவர்களை அறை வாசல் வரை போக விட்டான் ரிஷி...


கதவருகில் போனவர்களுக்கு…விரல் சுண்டி அழைக்கும் ஒலி காதில் விழ…. வேகமாக இருவரும் திரும்பி பார்க்க… அழைத்தது வேறு யார்… ரிஷியேதான்… கோப முகமாக அவனைப் பார்த்து திரும்பி நிற்க

“ப்ச்ச்… பதில் தெரியாமல் போறிங்களே… வயசானவங்க வேற… இவ்வளவு தூரம் வந்துட்டு… பதில் தெரியாமல் போகவிட மனசு வரலையே பாவமா இருக்கு… “ என்று பாவமாகப் பேச ஆரம்பித்தவன்…

“அந்தக் கேஸ் நான் தான் போடச் சொன்னேன்… “ என்ற போதே… இருவரும் ஆக்ரோஷமாக அவன் முன் வர…

சற்று முன் இருந்த அப்பாவித்தனமோ… கிண்டலோ சுத்தமாக ரிஷி முகத்தில் இல்லை

“ஹலோ.. ஹலோ…. பார்த்துங்க… வயசான காலத்துல… எதுக்கு இவ்ளோ ஆக்ரோஷம்… கோபம்லாம்… ஏதாவது ஆகிறப் போகுது… தண்ணி குடிங்க… “ என்றபடியே மேஜையில் இருந்த வாட்டர் பாட்டிலை அவர்களை நோக்கி தூக்கிப் போட… அதை இருவராலும் பிடிக்கமுடியாமல்… அது கீழே விழ

ரிஷி… இப்போது தன் இருக்கையில் எழுந்து அவர்கள் முன்னே வந்தவனாக... கீழே கிடந்த வாட்டர் பாட்டிலை காலில் தட்டி... கைக்கு கொண்டு வந்தவன்... அதை திருமூர்த்தியின் கையில் திணித்தான்... திமிராக... தெனாவெட்டாக... மரியாதை என்பது துளி கூட இல்லை என்ற தொணியில் இருந்தது நடவடிக்கை எல்லாமே... இருவருமே உறைந்து நிற்க

“என்ன… நான் உங்க ரெண்டு பேருக்கும் எதிரா கேஸ் போடுவேன்னு எதிர்பார்த்தீங்களா என்ன… அப்படி நினைத்திருந்தீங்கன்னா… ப்ச்ச்… அது தப்புக் கணக்கு…”

”சிம்பிள் லாஜிக்… எனக்கு ஒரு கண் போனால் கூட பரவாயில்லை… எதிரிக்கு ரெண்டு கண்ணும்… சாரி சாரி… நீங்க ரெண்டு பேர்ல… நாலு கண் போகனும்… அந்த லாஜிக் தான் அங்கிள்… “ என்றவனின் முகம் இன்னும் இறுகி இருக்க…

“என்னடா… வார்த்தை எல்லாம் வேறு மாதிரி வருதே….” திருமூர்த்தி சட்டென்று அவன் சட்டைக் காலரைப் பிடிக்க… அதையெல்லாம் ரிஷி லட்சியமே செய்யாமல்…

“இல்லையே… இதுவரை மரியாதை இல்லாமல் பேசலையே…” என்றான் நக்கல் மட்டுமே தூக்கலாக

கேசவன் அவன் அருகில் வந்து….

“சின்னைப் பையன்னு பார்த்தால்… ஓவரா ஆடற… உன் இலட்சணம்லாம் தெரியும் தம்பி… உன்னை எப்படி வழிக்கு கொண்டு வர்றதுன்னு … எங்களுக்கும் தெரியும்” என்றார் மிரட்டலாக…

திருமூர்த்தி இன்னும் ரிஷியை விடாமல் பற்றி இருக்க… ரிஷி இன்னும் வெகு அலட்சியமாக கேட்டான்…

“என்ன பண்ணுவீங்க…“

கேசவன் இடியெனச் சிரித்தபடி…

“நீ ஆம்பளைப் பையன்… உன்னை ஒண்ணும் பண்ண முடியாது… உனக்கு ரெண்டு தங்கைகள் இருக்காங்க… அந்த பயம் இருக்கா” என்ற போதே… ரிஷியோ கேசவன் சிரித்ததை விட அதிகமாக அவர்களைப் பார்த்து சிரித்து வைக்க…


இவன் ஏன் இப்படி சிரிக்கின்றான்... என்று புரியாமல் ... இப்போது அதிர்ச்சியில் அவனைப் பார்த்தபடியே இருவரும் நிற்க… சிரித்து முடித்தவன்… நிதானமாக

“யமுனா… வயசு 20… எத்திராஜ்... ஃபைனல் இயர்…. டாட்டர் ஆஃப்” என்று யோசனையோடு இழுக்க... இப்போது ரிஷியைப் பிடித்திருந்த திருமூர்த்தியின் கைகள் மெதுவாக அவனிடமிருந்து மெதுவாக விலக…

“ஓ… அப்போ யமுனா அப்பா… நீங்களா… கை தானா விலகுதே…” திருமூர்த்தியைப் பார்த்து நக்கலாகக் கேட்டவன்… கேசவனைப் பார்த்து…