கண்மணி... என் கண்ணின் மணி-17

Updated: Oct 19, 2020

அத்தியாயம் 17

கல்லூரியில் இருந்து அழைப்பு வந்து… அதன் காரணமாக தந்தைக்கும் மகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு… தந்தையின் கைகளால் அடி வாங்கிய ரிஷி நேராக தன் அறைக்குள் போய் முடங்கி விட… தனசேகரோ வேலை என்று வெளியே கிளம்பி விட்டிருந்தார்… தன் மனைவியிடம் கூட கோப முகத்தைக் காட்டி விட்டுத்தான் கிளம்பிச் சென்றிருந்தார்…

லட்சுமியோ அப்படியே ஸ்தம்பித்து ஹாலிலேயே அமர்ந்திருக்க… ரிதன்யாவும் ரித்விகாவும் தன் அன்னையுடனே அமர்ந்து விட்டனர்… வீட்டின் நிலைமை சரி இல்லை என்பது மட்டுமே ரித்விகாவுக்குப் புரிய… ரிதன்யாவுக்கு நடக்கும் நிலைமை அனைத்தும் புரிந்தும் என்ன செய்வது என்று தெரியாமல்… அண்ணன் மீது கோபம் மட்டுமே கொள்ள முடிந்தது…

இந்த மாதிரியான சூழ்நிலை அவர்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை ஒரு அசாதரணமான நிலைமைதான்… லட்சுமியை விட தனசேகர் தான் மக்களுக்கு சலுகைகள் கொடுப்பவர்… பொறுமையாக இருப்பவர்…. எந்த ஒரு விசயத்திலும் மக்களை விட்டுக் கொடுக்காதவர்… மக்கள் முகம் இம்மென்று முகம் சுருக்கினால் போதும்… அடுத்த நொடி… அதைச் சரிப்படுத்தி விட்டுத்தான் அடுத்த வேலையே பார்ப்பார்…

மகிளா ரிஷி இருவர் காதல் பற்றி தெரிந்து இரு குடும்பத்திற்கும் இடையே பிரச்சனை பெரியதாக வந்து நின்ற போது கூட தனசேகர்தான் தலையிட்டு சுமூகமாக முடித்து வைத்திருந்தார்… மைத்துனன் நீலகண்டனைச் சமாதானப்படுத்தியது மட்டுமல்ல தன் மனைவி லட்சுமியைக் கூட சமாதானப்படுத்தி… மகிளாவை மருமகளாக நினைக்க வைத்தது வரை அவர்தான்…

அப்படிப்பட்ட தங்கள் தந்தை இந்த அளவுக்கு கோபப்படுகின்றார் என்றால் விசயம் இல்லாமலா இருக்கும்… இது ரிதன்யாவின் எண்ணப் போக்கு… மகிளா வேறு ரிதன்யாவுக்கு அடிக்கடி குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருந்தவள்… அவளோடு பேசிக் கொண்டிருக்க… திடீரென்று மகிளாவிடமிருந்தும் செய்தி வராமல் போக… மகிளாவின் நிலைமை அங்கு என்னவோ என்று ரிதன்யா தன் தோழியை நினைத்து வேறு கவலை கொண்டிருந்தாள்….

ஆக மொத்தம் அந்தக் குடும்பத்தின் ஒட்டு மொத்த நிம்மதியையும் பறித்திருந்த ரிஷியோ.... தன் அறையில் படுத்து விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தான்…

மகிளாவின் அழைப்புகளும், குறுஞ்செய்திகள் அவன் அலைபேசியில் மட்டுமே நிரம்பிக் கொண்டிருக்க… அவன் மனதிலோ வெற்றிடம் மட்டுமே…


மகிளாவின் எந்த குறுஞ்செய்திக்கும் அவன் பதில் சொல்லவும் இல்லை… அவள் அழைப்பையும் எடுக்கவில்லை… அவனுக்குத் தெரியும் இந்த உலகில் தன்னை நம்பும் ஒரே ஜீவன் என்றால்… அது மகிளா மட்டுமே என்று…

ஆனால் சந்தோஷமாக இருக்கும் போதெல்லாம் மகிளாவின் துணையை நாடியவன்… தன் மகிழ்வான தருணங்களை எல்லாம் அவளிடம் பறிமாறிக் கொண்டவனுக்கு… தன் மன வருத்தங்களை… தன் புலம்பல்களை… தன் மனம் படும் பாடை எல்லாம் அவளிடம் சொல்லி ஆறுதல் தேட வேண்டுமென்று ஏனோ தோன்றவில்லை… இன்று மட்டுமல்ல… கோவாவில் நடந்த விசயங்களைக் கூட அவளிடம் பகிர்ந்து கொள்ள முடியவி்ல்லை…

அதைப்பற்றிய ஆராய்ச்சி எல்லாம் அவன் எண்ணங்களில் இல்லை… அவன் மனதிலோ ஏதேதோ எண்ணங்கள்…

அவன் மனதைக் கசக்கும் நிகழ்வுகளே ஏன் நடக்கின்றன… அடுத்தடுத்தும் தொடர்கின்றன… ஏன்… எதற்கு என்று விடை தெரியாத வினாக்கள் மட்டுமே அவனுக்குள் எஞ்சி நின்றன…

தானும் சந்தோஷமாக இருக்க வேண்டும் தன்னைச் சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்று நினைப்பன் ரிஷி… தான் இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பாக இருக்க வேண்டுமென்று நினைப்பவன்… ஆனால் இன்று தன்னால் அந்த மாதிரி மாற்ற முடியவில்லையே… தன்னாலும் மாற முடியவில்லையே… தனக்குள் தன்னை மாற்றவே போராடிக் கொண்டிருந்தான்… ரிஷி…. தன் இயல்புகள்… அவன் அறிந்தே கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டிருக்கும் நிலை தெரிந்தும் அதைத் தடுக்க முடியாமல் தடுமாற ஆரம்பித்தான் ரிஷி…

இதோ இன்றைய பிரச்சனையில் கூட அவனுக்கு பெரிதாக வருத்தமில்லை… தவறு என்பது அவனிடத்தில் இல்லாத போது வருத்தம் ஏன்… அவனுக்கு இல்லை தான்… அதே போல தன் தந்தையிடம் எந்த இடத்திலும்… தன்னை நிரூபிக்க ரிஷி நினைக்கவில்லை… ஆனால் தாயிடம் தன்னை நிரூபிக்க நினைத்தான் தான்… தன் தாயிடம் பேச நினைக்க… ரிஷியிடம் லட்சுமி பேசத் தயாராக இருந்தால் தானே… பேச என்ன… இவன் முகத்தைக் கூட திரும்பிப் பார்க்க நினைக்கவில்லையே …

தன் அன்னையின் சிறு முகச் சுழிப்பைக் கூட தாங்க முடியாமல் தன் புன்னகையால்… இல்லை தன் குறும்பு வார்த்தைகளால் அவரை மாற்றித் தன் வழிக்கு கொண்டு வந்துவிடுவான் ரிஷி… லட்சுமியும் அப்படியே…. அப்படிப்பட்ட தன் அன்னை இன்று… நினைத்தபோதே கண்களில் கண்ணீர் கசிந்தது ரிஷிக்கு

ஒரு வேளை சாப்பிடாமல் இருந்தால் கூட பொறுக்காத தன் தாய்… சிறு அழைப்பு கூட கொடுக்கவில்லை… என்ற கழிவிரக்கமே ரிஷியை மொத்தமாக உடைத்து விட….

”தந்தை தன்னை புரிந்து கொள்ள வில்லை என்பதைக் கூட அவன் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை…. ஆனால் தன் தாய் தன்னைப் புரிந்து கொள்ளவில்லையே” மனம் வலிக்க ஆரம்பிக்க… அறைக்குள் இருக்க பிடிக்காமல்…. மொட்டை மாடிக்குச் சென்றவன்தான்…..

நண்பகல் மாலை ஆகியது… இரவாகியாது… நள்ளிரவாகியது… அவனைத் தேடி… ஒருவர் கூட வராமல் போக… ஒரே நாளில் அநாதை ஆகியது போன்ற உணர்விற்கு தள்ளப்பட்ட ரிஷி… அதற்கு மேல் அன்றைய நிகழ்வுகளின் கனம் தாங்காமல் தனக்குள்ளேயே உடைந்து அழ ஆரம்பித்தவன்… ஆரம்பித்தவன் தான்…. ஒரு கட்டத்தில் அவனால் அழுகையை நிறுத்தவே முடியவில்லை… கால்களை கட்டிக் கொண்டு கால்களுக்கிடையில் முகத்தை புதைத்து அழ ஆரம்ப்பித்தவன்…. அழுது கொண்டே இருக்க…. தனக்கென்று யாருமில்லையே… தன் ஒரு வார்த்தையைக் கேட்க இந்த உலகில் யாருமில்லையா… ஆண்மகன் என்ற வார்த்தைகளை எல்லாம்… தன் கண்ணீரில் கரைக்க ஆரம்பித்திருந்தான் முதன் முதலாக…

ஒரு கட்டத்தில் கண்ணீர் கூட வற்றி… அவனிடமிருந்து தேமல்கள் மட்டுமே வந்து கொண்டிருக்க… அப்போது

திடீரென்று அவன் முதுகை ஒரு கரம் ஆறுதலாகத் தடவ…. நிமிரவில்லை ரிஷி… தன்னை தொட்டுக்கொண்டிருக்கும் கரங்கள் யாரென்று நிமிர்ந்து பார்த்து உணரும் கரங்களா என்ன…

அவன் இந்த உலகிற்கு வரக் காரணமான உயிர்துளியின் முதல் காரணகர்த்தாவை அவனுக்கு தெரியாமல் இருக்குமா….

தலையை உயர்த்தவே இல்லை ரிஷி…

“என்னை நீங்க நம்பலைதானேப்பா… இப்போ எதுக்கு வந்தீங்க… ஐ ஹேட் யூப்பா”…. என்று பிடிவாதக் குரலில் பேச ஆரம்பித்தவன் அடுத்த நொடியே

”நான் தப்பு செய்யலை டாடி… ” என்று பெருங்குரலெடுத்து கதற ஆரம்பித்தவன்…

“என்னால முடியல டாடி… அதே நேரம்… நான் தப்பானவன் இல்லைனு நிருபிக்கவும் பிடிக்கலை டாடி… அம்மா என்கிட்ட முகம் கொடுத்து கூட பேசக் மாட்டேங்கிறாங்க… அவங்க பேசாம இருக்கிறதை பார்க்கிறதவிட நான் சாகலாம் போல இருக்கு டாடி” என்றவன்… இன்னும் தந்தையை நிமிர்ந்து கூட பார்க்காமல் அழுது கொண்டே இருக்க…

தனசேகர்… ரிஷியின் தாடையை தொட்டு தன் முகத்தை பார்க்குமாறு நிமிர்த்தியவர்… அழும் தன் மகனையே சில நொடிகள் பார்த்தவராக அவர் முன் அமர்ந்திருந்தவர்… மெதுவாக அவன் கண்களைத் துடைத்தபடியே…

“என்னைப் பாருடா… நான் உன்னை நம்புறேன் ரிஷி… ” என்று அமைதியான… ஆறுதலான குரலில் மனதை வருடும் தொணியில் பேச ஆரம்பிக்க…. இமை கொட்டாமல் தந்தையையே பார்த்திருந்தான் ரிஷி….

தனசேகர் தொடர்ந்தார்….

”நான் இருக்கிற நிலைமையில்… இருந்த நிலைமையில்… உன்னைப் பற்றி அடுத்தடுத்து கேட்ட விசயங்கள் என்னை யோசிக்க விடலை ரிஷி… ” என்ற போதே… அன்றைய தினத்தில் கேட்ட… அவனுக்கான முதல் ஆதரவான வார்த்தைகள்…. ரிஷியின் கண்களில் கண்ணீர் துளிகள் மெது மெதுவாக தன் வரவினைக் குறைக்க ஆரம்பித்திருக்க… நம்ப முடியாமல் தன் தந்தையைப் பார்க்க

”ஆமாம் ரிஷி… உன்னை நம்புகிறேன் ரிஷி…. உங்க மாமா உன்னைப் பற்றி சொன்ன விசயங்களைக் கேட்ட போது நீ பதட்டமடையவில்லை… ஆனால் உன் காலேஜ்ல இருந்த போன்காலைச் சொன்ன போது… அந்த விசயங்களைக் கேட்டு உன்னோட முகம் மாறியதுதான்… ஆனால் அந்த விசயத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூட நீ கேட்கவில்லை…. மாறாக… என்னை நீங்க அந்த மாதிரிப் பையன்னு நினைக்கிறீங்களா… இந்த வார்த்தைகள் தான் உன்னிடமிருந்து வந்தது … தனியா யோசிச்சுப் பார்த்தேன் ரிஷி… உன்னைப் பெத்த நாங்க உன்னை தவறா நினைச்சுட்டோமோ இந்தக் கவலைதான்… உன்னோட முகத்தில கோபமா வந்தது… எங்களோட நம்பிக்கை உன் மேல இல்லைன்ற ஆக்ரோஷம் தான் முகத்தில் இருந்தது” என்று தனசேகர் நிறுத்த