கண்மணி... என் கண்ணின் மணி-16

அத்தியாயம் 16


விடிந்தும் விடியாமல் இருந்த அந்த அதிகாலைப் பொழுதில்… ரிஷி தன் வீட்டின் போர்டிகோவின் முன் நின்றிருந்தான் தன்னந்தனியாக….

கையில் வைத்திருந்த புகைப்படங்களும்… நீலகண்டனால் அவன் மேல் விசிறி அடிக்கப்பட்டு தரையில் வீழ்ந்து கிடந்த மீத புகைப்படங்களுமே அவனோடு இருக்க… வேறு யாரும் அங்கில்லை…

என்ன நடந்தது என்று அவனது மூளை உணரவே சில நிமிடங்கள் ஆகி இருக்க.. மூளை உணர்ந்து கொண்டதை அவனுக்குள் கடத்தி ஒரு நிலைக்கு வரவே இன்னும் பல நிமிடங்கள் ஆகி இருந்ததது….

காரில் வரும் போதே…. தனக்கு வந்த அலைபேசி அழைப்பின் வாயிலாகவே தந்தையின் கோபம்… மகிளா தந்தையின் கோபம் இரண்டையும் உள்வாங்கியவன்… தயக்கத்தோடும் குழப்பத்தோடும் வாகனத்தை ஓட்டியபடி தனது ஊருக்குள் நுழைந்தான்….

வாயில் கதவை காவலாளி திறக்கும் போது… போர்டிகோவில் நின்ற தந்தை மற்றும் மகிளாவின் பெற்றோரைப் பார்த்த போதே… அவன் மனம் கொஞ்சம் திகிலுறத்தான் செய்தது… அவன் அருகில் இருந்த மகிளாவோ அதை விட இருந்தாள்…

“மாமா… அப்பாக்குத் தெரியாமல் சென்னை வந்தது பெரிய பிரச்சனை ஆகி இருக்குமோ… அப்பா நெக்ஸ்ட் வீக் தானே வருகிறேன்னு சொன்னாரு” மகிளா பீதியுடன் சொல்லிக் கொண்டிருக்க…

ரிஷியின் தாய் லட்சுமி முகத்திலோ யோசனைக் கீற்றுகளுடன் கூடிய பதட்டம் வந்திருக்க … ரிஷியும் தன் வீட்டின் முன் காரை நிறுத்தி இருந்தான்…

அடுத்த நொடி

மகிளா இறங்க முயற்சித்தாளோ இல்லையோ…. அவள் புறம் இருந்த காரின் கதவை கோபத்தோடு திறந்த நீலகண்டன் அதே வேகத்தில் அவள் கன்னத்திலும் அறைந்திருக்க… வலி தாங்காமல் கூடவே அவமானமும் சேர… மகிளாவின் கண்களில் கண்ணீர் கரை புரண்டோட… காரில் இருந்த அத்தனை பேரும் அதிர்ச்சியுடன் ஒன்றும் புரியாமல் இவர்களைப் பார்த்தபடியே இறங்க…

நீலகண்டனுக்கு இன்னும் ஆவேசம் அடங்க வில்லை போல… அடுத்த கன்னத்திலும் மகிளாவை அடிக்கப் போக… வேகமாக லட்சுமி நீலகண்டனின் கைகளைப் பிடித்திருந்தாள்…

கைகள் நீலகண்டனின் கரங்களைப் பிடித்திருந்தாலும்…. கண்கள் தன் கணவரிடம் நிலைத்திருக்க… அவரின் பார்வையோ இங்கில்லை… மகனிடம் மட்டுமே நிலைத்திருந்தது… அந்தப் பார்வையில் லட்சுமி உணர்ந்ததென்ன… அதில் கோபம் இல்லை… மாறாக… எதிலோ தோற்றுவிட்ட நிர்மூலமான பார்வை மட்டுமே இருக்க… லட்சுமிக்கு திக்கென்றிருந்தது தன் கணவரின் பார்வையில்…

இந்த அளவு ஓய்ந்த … கவலை தோய்ந்த கண்களை இதுவரை தன் கணவரிடம் அவர் கண்டதில்லை… சட்டென்று தன் கணவனை நோக்கியவராக..

“என்னங்க… அண்ணன் மகிளாவை அடிக்கிறாரு…. நீங்க பார்த்துட்டு நிற்கறீங்க… உங்ககிட்ட கேட்டுட்டுத்தானே கூட்டிட்டுப் போனேன்” என்ற போதே ரிஷியும் காரை நிறுத்தி விட்டு இறங்கி மகிளாவின் புறம் வந்திருக்க….

தனசேகரிடமிருந்தும் இப்போதும் பதில் இல்லை…

தாய் மகிளாவுக்கு ஆதரவாகப் பேசிக்கொண்டிருக்க… தந்தையின் மௌனத்தையும் அதே நேரம் தன்னை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அவரின் பார்வையையும் ரிஷி உணராமல் இல்லை…

மகிளாவை சென்னைக்கு அழைத்து வந்தததால்… நீலகண்டன் பிரச்சனை பண்ணி இருக்கின்றார்…. இது அவன் மனம் உணர்ந்த முடிவாக இருக்க… தந்தையின் பார்வை சொன்னதோ வேறு, மகிளா விசயம் மட்டுமே பிரச்சனை இல்லை… என்பதைக் கணபொழுதில் ரிஷி உணர்ந்து கொண்டான்…

மகிளாவின் தந்தை நீலகண்டனைச் சமாதானப்படுத்துவதெல்லாம் தன் தந்தைக்கு பெரிய விசயமில்லை… என்பதை ரிஷி நன்றாக அறிவான்…

பின் வேறென்னாவாக இருக்கும்… தந்தையின் பார்வையில் மனம் கவலை கொள்ள ஆரம்பிக்க… அதைப் பின் தள்ளியபடி… வேகமான நீலகண்டனின் அருகில் ரிஷி வந்தவன்….

“மாமா… எதுவா இருந்தாலும்… எந்த கோபமா இருந்தாலும் என்கிட்ட காண்பிங்க… அவள அடிக்கிற வேலை வச்சுக்கீட்டீங்க…” என்று அவமானத்திலும் வலியிலும் அழுது கொண்டிருந்த மகிளாவைத் தன் புறம் இழுக்கப் போக…. அடுத்த கணம்…

“என் பொண்ணு மேல கைய வச்ச” என்று தீப்பார்வை பார்த்தவராக… தன் மகளைத் தன்புறம் இழுத்தபடி..

லட்சுமியிடம் திரும்பியவர்…

”நல்ல குணமான மகனைப் பெத்து வச்சுருக்கேன்னு…. என் பொண்ண வேற கூட்டிட்டுப் போயிருக்க நீ… உனக்கும் தானே ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க… உன் பொண்ணுங்க இந்த மாதிரி எவன் கிட்டயாவது அழைச்சுட்டுப் போவியா… “

என்றவர்… தன் மனைவியை நோக்கி

“மத்தவங்களை எல்லாம் சொல்லி குத்தமில்லை… உன்னைச் சொல்லனும்டி…” என்றவர்… இருந்த மொத்த கோபத்தையும் தன் மனைவியின் கன்னத்தில் காட்டி வைக்க… தங்கை அறை வாங்கியபோதும்….. அப்போதுமே தனசேகர் அமைதியாகத்தான் இருந்தார்….

நீலகண்டன் மனைவியை அறைந்தும் அவரைத் திட்டுவதை நிறுத்தவில்லை

”அண்ணன் பையன்… அண்ணன் பையன்னு என் பொண்ணு வாழ்க்கையை பாழடிக்கப் பார்க்க இருந்த… நல்ல வேளை நான் பிஸ்னஸ் விசயமா கோவா போனது நல்லதா போயிருச்சு…. அங்கதான் இவன் குணமெல்லாம் தெரிய வந்தது…. ஏதோ நான் பண்ணிய புண்ணியம் இவன்கிட்ட இருந்து என் பொண்ணைக் காப்பாத்திருச்சு”

என்ற போதே… லட்சுமி மனம் தாங்காமல்….

”நான் என்னைக்குமே என் பொண்ணுங்க வேற மகிளா வேறன்னு நினைத்தது இல்லை அண்ணா.. ஏண்ணா இப்டிலாம் பேசறீங்க” வேதனையுடன் கண்ணீர் மல்க கேட்க…

“அப்டியா… ” ஏளனமாக இதழ் வளைத்தார் நீலகண்டன்…. பார்வை ரிஷியிடம் நிலைத்திருக்க… அந்தப் பார்வை ரிஷியை நோக்கிய மொத்த ஏளனத்தையும் குத்தகை எடுத்திருந்தது…

ரிஷிக்கு அவரின் கோபம் கூட பெரிய விசயமாகத் தெரியவில்லை…. ஆனால் அவரின் ஏளனப் பார்வை… மனதின் ஆழத்தில் சுருக்கென்று குத்தியது…

ரிஷியிடமிருந்த பார்வையை திருப்பிய நீலகண்டன்… லட்சுமியிடம் திரும்பி,….

”என்ன சொன்ன… என்ன சொன்ன… உன் பொண்ணுங்க மாதிரியா”

”ம்ஹ்ம்ம்ம்… உன் பொண்ணுங்களை இந்த மாதிரி பையனுக்கு கட்டிக் கொடுப்பியா லட்சுமி… கொஞ்சம் இதைப் பார்த்துச் சொல்லு ” சொன்ன அடுத்த நிமிடம் அவரது கையில் ரிஷியும் அவனது நண்பர்களும்… மது பாட்டிலைக் கைகளில் வைத்திருந்தபடி கும்பலாக நிற்கும் புகைப்படம் இருக்க…

லட்சுமி அவமானமும் வலியும் நிறைந்த பார்வையோடு மகனைப் பார்க்க..

வேகமாக அன்னையின் அருகில் வந்தபடி அவர் கையில் இருந்த புகைப்படத்தை வாங்கிப் பார்த்தவனுக்கு… இப்போது தந்தையின் மௌனமும்… நீலகண்டனின் கோபமும் புரிய… மேல் உதட்டைக் அழுந்தினான் தன் பற்களுக்கிடையில்… தன் நிலைமை புரிந்த காரணத்தால்…

உண்மையைச் சொல்லப் போனால்… பெரிதாக தவறாகப் படவில்லை அவனுக்கு… மாறாக தன்னுடைய இந்தப் பழக்கமெல்லாம் பெற்றவர்களுக்குத் தெரிந்து விட்டதே என்ற எண்ணம் மட்டுமே… பெரியவர்களின் கோபம் புரிந்தது… ஆனால், தான் அவ்வளவு பெரிய தவறு புரியவில்லை என்ற எண்ணம் மட்டுமே அவனுக்கு…

பற்களுக்கிடையில் அழுந்தப்பட்டிருந்த இதழ்களின் வலி புரிந்தும் அதை விடுவிக்காமல் அமைதியாக தலை கவிழ்ந்து நின்றான்… அவ்வளவே அவன் வருத்தம்….

அடுத்த சில நிமிடங்களில் மகிளாவை அழைத்துக் கொண்டு நீலகண்டன் கிளம்பி விட… ரிஷியும் அவனது குடும்பம் மட்டுமே அங்கே…

லட்சுமி… மகன் ஏதாவது பேசுவான் என்று அவனைப் பார்க்க… ரிஷி பேசினால் தானே… யாரையும் பார்க்கப் பிடிக்காமல் தலை கவிழ்ந்து நின்றபடியே இருக்க….

தனசேகர் எதுவுமே சொல்லாமல் உள்ளே சென்று விட…. அவரைச் சமாதானப்படுத்தும் விதமாக…. அவர் பின்னாலேயே லட்சுமி அவசர அவசரமாகச் சென்று விட… ரிதன்யாவுக்கும்… ரித்விகாவிற்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை…