top of page

கண்மணி... என் கண்ணின் மணி -10

Updated: Dec 25, 2021

அத்தியாயம் 10:

விக்ரமைக் கேள்விக் குறியாகப் பார்த்தபடி முறைக்க… விக்ரமும் அவனை முறைத்துதான் பார்த்தான் …

“பாவம் பண்ணினாத்தான் பிராயசித்தம் பண்ணனுமில்லை…. அட்வைஸ் பண்ணினாலும் கூட… பண்ணித் தொலைக்கனும் போல… ஏன்னா உன் மூஞ்சிய பார்க்க சகிக்கலை…. ஹாஸ்பிட்டல் வா வான்னு கெஞ்சுனதானே… வா உள்ள போகலாம்…“

இப்போது ரிஷி பெரிதாகச் சிரித்தான் நண்பனின் பாவனையில்… ஆனாலும் நல்லவன் போல

“இந்த உலகத்திலேயே ஃப்ரியா கிடைக்கிறது அட்வைஸ் மட்டும் தான்… அது அப்டியே இருந்துட்டு போகட்டும்… பாவத்துக்கு மட்டும் பிராயசித்தம் பண்ணுவோம் “ என்றபடியே நண்பனோடு மருத்துவமனைக்குள் நுழைந்தான் ரிஷி….

அதே நேரம்

மருத்துவமனையின் வரவேற்பறைக்கு பணம் கட்ட வந்த கண்மணி… நண்பர்கள் இருவரும் உள் நுழையும் போதே பார்த்துவிட…. வேகமாய் அவர்களை நோக்கி மலர்ந்த முகத்துடன் சென்றாள்… விக்கியைப் பார்த்து கூட அவள் சிரித்துதான் வைத்தாள்…

கண்மணியைப் பார்த்த ரிஷியோ…

“ஹேய் மணி… இங்க என்ன பண்ற…” என்றவாறு அவளை நோக்கிப் போக… இங்கோ விக்கியின் காதிலோ புகை….

“நம்மகிட்ட இவ போர்னு சொன்னான்… இப்ப அப்டியே அந்தர் பல்டி அடிச்சு… பல்லைக் காட்டிட்டு நிற்கிறான்…. எப்படித்தான் இப்படி பொண்ணுங்களை மடக்குறானோ… முடியலடா சாமி” என்று மனதினுள் நினைத்தபடி நின்றிருக்க…

மீதமுள்ள தொகையினை செலுத்த வந்ததாக கண்மணி கூற… ரிஷியோ… தானே கட்டி வருவதாக கூறி அவளிடமிருந்து பில்லையும்.. பணத்தையும் வாங்கிக் கொண்டு செல்ல… கண்மணியும் அவன் 2 முறை பணம் கட்டியிருந்ததால் அவனே கட்டட்டும் என்று விட்டு விட்டாள்…

ரிஷி அந்தப் பக்கமாய்ப் போக… கண்மணி விக்கி மட்டும் தனியே நின்றிருந்தனர்…

விக்கியைப் பார்த்து கண்மணி லேசாகப் புன்னகைக்க… விக்கியோ வேறு பக்கமாகப் பார்த்து பார்வையை வீசினான்..

2 நிமிடங்கள் இருவருமே எதுவும் பேசாமல் நின்றிருக்க… விக்கிதான் முதலில் பேச ஆரம்பித்தான்…

“எவ்வளவு செலவாச்சு… எல்லாம் கட்டியாச்சா” என்று ரிஷியின் மேல் பார்வையைப் பார்த்தபடியே கண்மணியிடம் விக்கி கேட்க…

கண்மணியும் செலவான தொகையைச் சொன்னாள்…

“ஹ்ம்ம்ம்ம்ம்……… பெரிய தொகைதான்…… ரிஷி முக்கால்வாசி கொடுத்துட்டான்… மீதிக்கு எந்த இளிச்சவாயன் கெடச்சான்..” நக்கலாகக் கேட்க…

கண்மணி… விக்கியிடம்… மென்னகை புரிந்தபடி நிமிர்வாகப் பார்த்தாள்

“உதவி பண்ணினால் உங்க பாஷையில் இளிச்சவாயன்னு அர்த்தமா… ஆமா உங்களுக்கு என்ன பிரச்சனை… ஆரம்பத்தில் இருந்தே எங்கிட்ட சண்டைக்காரிக்கிட்ட பேசற மாதிரி பேசறிங்க…”

கண்மணி மனதில் மறைக்காது பட்டென்று கேட்டு விட… விக்கியும் விட வில்லை…

“சண்டைக்காரிகிட்ட அப்படித்தான் பேச முடியும்… சண்டைக்காரி மாதிரி என்ன நீ சண்டைக்காரிதான்…. அன்னைக்கு உங்க வீட்டுக் குடித்தனர்க்காரர்கிட்ட நீ சண்டை போடல… “ என்ற போதே…

கண்மணியின் மென்னகை அப்படியே உறைந்து… பார்வையில் அனல் அடிக்க ஆரம்பித்து இருக்க

“ஹலோ… என்ன… பேச்சு ஒரு மாதிரி போகுது…. உங்களுக்கு என்ன தெரியும்… அன்னைக்கு நான் ஏன் சண்டை போட்டேன் என்று ஆரம்பித்தவள்… இவன் யார் இவனிடம் நான் ஏன் படபடக்க வேண்டும்… தேவையே இல்லை… என்று தனக்குள் சொல்லிக் கொண்டவளாக

“நான் எதற்கு உங்களுக்கு விளக்கம் சொல்ல வேண்டும்… என்ன வேணும்னாலும் நீங்க நெனச்சுக்கங்க…” என்று தன் பேச்சை முடித்துக் கொண்டவள்…. ரிஷிக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்…

தன் நண்பனின் பணத்தையும் வாங்கிக் கொண்டு… எகத்தாளமான பதில் வேறயா….

விக்கி அவளை விடும் மன நிலையில் இல்லை… அவளின் தெனாவெட்டான பதிலில் சற்று சூடாக…

“அதுக்கு விளக்கம் வேண்டாம்.. ஆனால் இதுக்கு பதில் சொல்லு… ரிஷிகிட்ட வாங்கின பணத்தை எப்போ கொடுக்கப் போற…”

இப்போது விக்கியின் முகத்தில் கண்மணியை அவமானப்படுத்திய சந்தோசம் அப்பட்டமாகத் தெரிய…. கண்மணி அவனை ஒரு புரியாத பார்வை பார்த்து வைத்தாள்…

“என்ன பார்க்கிற… அவன் நல்லவன்… அவன்லாம் கேட்க மாட்டான்… அவனுக்கு பதில் நான் தான் கேட்பேன்…. பணத்தை அப்படியே சுருட்டிடலாம்னு நெனப்பா” என்று கண்மணியின் முன் நின்று அதிகாரமாய்ப் பேச…

கண்மணி ரிஷியை ஒருமுறை திரும்பிப் பார்த்தாள்…. பின் விக்கியிடம்

“என்ன ரொம்ப மிரட்டுற…. பணத்தை தர மாட்டேன்னா என்ன பண்ணுவ… “ அலட்சியமாகக் கூறியபடியே விக்கியைப் பார்க்க… விக்கியோ ரௌத்திரமாக ஆனான்…

கடன் வாங்கிய அவளுக்கே இவ்வளவு என்றால்… என்று நினைத்தபடி

“ஏய் என்ன…. திமிரா உனக்கு… பத்தாயிரம் இருபதாயிரம் கூட இல்லை…கிட்டத்தட்ட லட்ச ரூபாய்… ஏமாற்றி வாங்கிட்டேனு போலிஸ்கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணிருவேன் ஜாக்கிரதை…” மிரட்டியபடியே …. போலிஸ் என்று சொன்னதால் கண்மணியின் முகத்தில் பய ரேகை ஒடுகிறதா என்று விக்கி கண்மணியின் முகத்தைப் பார்க்க..

அது அவள் முகத்தில் பூச்சியம் என்ன மைனஸ் அளவு கூட இல்லை…

“போலிஸ்னு சொன்னால் கூட பயமில்லாமல் இருக்கிறாள்… என்று மனதுக்குள் நினைத்தபடி இருக்க…

கண்மணி… விக்கியிடம்..

“எங்க வேணும்னாலும் கம்ப்ளைண்ட் பண்ணு…. உன் ஃப்ரெண்டோட மொத்த பணத்தையும் ஸ்வாஹா பண்ணலாம்னு ஐடியாலத்தான் இருக்கேன்… முடிந்தால் உன் ஃப்ரெண்ட என்கிட்ட இருந்து காப்பாத்திக்கோ” என்ற போதே….

அதே நொடி…. பில் கவுண்டரில் நின்றிருந்த ரிஷி… இவர்கள் புறம் திரும்பி….

“கண்மணி” என்று சத்தமாக அழைக்க… கண்மணி இப்போது ரிஷியின் அருகில் நின்றிருந்தாள்…

“சாரி… ஏதாவது எக்ஸ்ட்ரா டீடெயில்ஸ் கேட்டாங்கன்னா… அதான் வரச் சொன்னேன்” என்று தான் அழைத்த காரணத்தைக் கூறியபடி கவுண்டரில் பணம் செலுத்த தன் முறையை எதிர்பார்த்துக் காத்திருக்க… இருவரையும் பார்த்தபடி நின்றிருந்த விக்கியோ அங்கு பல்லைக் கடித்துக் கொண்டிருந்தான்…. அதன் பிறகு… சில நிமிடங்களில் மூவருமாக இருந்தது நடராஜ் அனுமதிக்கப்பட்டிருந்த அறையில் தான்… இந்த இடைப்பட்ட நேரத்தில் கண்மணியும் சரி… விக்கியும் சரி தங்கள் வாக்குவாதங்களை தொடரவில்லை…

மருத்துவமனைக் கட்டிலில் தளர்வாகப் படுத்திருந்தார் நடராஜன்.... ஆனால் உள்ளே நுழைந்த இவர்களைப் பார்த்த்தும் அவர் முகம் பிரகாசமாக படுக்கையில் இருந்து எழுந்து உட்கார முயல... ரிஷியும் விக்கியும் அவரைத் தடுத்தபடி அவரது படுக்கையின் அருகில் இருந்த இருந்த இருக்கையில் அமர்ந்தனர்...

விக்கிக்கு கண்மணியைத்தான் பிடிக்க வில்லை.... நடராஜனிடம் பழகும்போது விக்கி இயல்பாகவே இருந்தான்....

வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு.... சாதரணமாகப் பேசிக் கொண்டிருந்தனர் மூவரும்.... கண்மணி இவர்கள் பேச்சில் எல்லாம் கலந்து கொள்ளவில்லை... அவள் ஒரு ஓரமாக சன்னலின் அருகில் அமர்ந்து வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்...

இவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டும் கேட்காமலும்...... அருகில் இருந்த மரத்தில் இருந்த கூட்டில் இருந்த காக்கையின் செயலை பார்த்தபடி இருந்தாள்....

தாய்க் காக்கை தன் குஞ்சுகளுக்கு உணவை ஊட்டிய விதத்தில்... அதை ரசித்தபடி இருந்தவள்... அப்படியே அதில் மூழ்கியும் விட்டிருந்தாள்...

அப்போது அவள் பெயர் காதில் விழ... திரும்பிப் பார்க்க வில்லை… ஆனால் அவளின் கவனம்... பறவைகளை ரசித்ததில் இருந்து … தன் தந்தையின் பேச்சில் திசைமாறியது

நடராஜன் பேசிக் கொண்டிருந்தார்....

“என்ன என் பொண்ணுக்குதான் கொஞ்சம் கஷ்டம்.... நான் பாட்டுக்கு வந்து படுத்துட்டேன்... ஆனாலும் என் பொண்ணு சமாளிச்சுருவா “ என்றபடி அவர் தன் மகளை பெருமையோடு பார்க்க...

விக்கி கொஞ்சம் எரிச்சலுடன் கண்மணியைப் பார்க்க.. கண்மணி இந்தப் பக்கம் திரும்பவே இல்லை...

அப்போது ரிஷி....

“ஆமாம் சார்... ஸ்கூல் போகிற பொண்ணு.... “ என்று அக்கறையாகப் பேச... விக்கி... அவனைப் பார்த்தான்...

“நீ என்னைல இருந்துடா இப்படி மாறின...” என்ற கேள்வி அப்பட்டமாக அவன் கண்களில் தெரிய ரிஷி...

“உனக்கு ஏண்டா இந்த பார்வை.... பொண்ணுக்கு படிப்பு கெட்டா அப்பாவா அவர் ஃபீல் பண்றாரு.... அதுனாலதான்” என்ற போதே.. நடராஜ் சத்தமாக சிரித்தார்.

“ஹா ஹா என் பொண்ணுக்கு படிப்பு கெடுதுனு நான் கவலைப் படுகிறேனா” என்று இன்னும் சிரிக்க...

விக்கிக்கும் ரிஷிக்கு ஒன்றுமே புரியாமல் விழித்தனர்…

“இப்போ என்ன சொன்னோம்னு இவர் இப்படி சிரிக்கிறார்.. அதுவும் வில்லன் சிரிப்பு” என்று தோன்றியது ரிஷிக்கு…

நடராஜன் ரிஷியைப் பார்த்து…

“என் பொண்ணு ஸ்கூல் போகலைனு நெனச்சு நான் கவலைப்படலை… “ என்று இன்னும் சிரிக்க…

விக்கியின் மனதிலோ.. ”சிரிச்சே கொன்னுருவாரு போல”…. என்றிருக்க

“என் பொண்ணு 2 பேருக்கு ட்யூசன் எடுக்குது… அவங்க வேணும்னா மணி அங்க வரலைனு கஷ்டப்படலாம்… என் பொண்ணு 10 த் ல ஸ்டேட் 3ர்ட் தெரியுமா… போட்டோ கூட பேப்பர்ல வந்துச்சு… பார்க்கலையா” என்று தன் மகளின் புராணத்தை ஆரம்பிக்க..

ரிஷி கண்மணியின் புறம் திரும்பியவனாக…

“வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ் கண்மணி நீ அவ்வளவு பெரிய படிப்பு பிள்ளையா…. ஹ்ம்ம்ம்ம்ம்ம்… நான்லாம் அப்படி கிடையாதுப்பா…. இந்த விக்கி உன்னை எல்லாம் ஒரு இடத்தில் வைக்கலாம்… விக்கி கூட “ என்று ஆரம்பித்த போது…. விக்கியின் முறைப்பில் கப்பென்று ரிஷி வாயை மூடிக் கொள்ள

விக்கி உடனே…

“என்னமோ முன்ன பின்ன படிக்கிற பிள்ளைங்கள பார்த்த்தே இல்லாத மாதிரி பேசுகிறாய்.... உன் தங்கை... ரிது கூட 10த்ல ஸ்கூல் ஃபர்ஸ்ட் தானேடா...” என்று பெருமையுடன் சொல்ல...

நடராஜ் விடுவாரா என்ன....

“மத்தவங்களோட என் பொண்ண கம்பேர் பண்ண முடியாதுப்பா... என் பொண்ணு இவ்வளவு மார்க் வாங்கனும்னு கஷ்டப்பட்டு படிக்கலை... போகிற போக்கில எடுத்தது... தெரியுமா...” என்று தன் மகளை இன்னும் ஒரு படி மேலே உயர்த்திப் பேச...

விக்கி.. இதற்கும் ஏதோ பதில் சொல்ல வர... இப்போது கண்மணி தன் கையில் கட்டியிருந்த கைக்கடிகாரத்தைப் பார்த்தபடியே...

“டாக்டர் வருகிற நேரம்... அப்பாவோட மொத்த ரிப்போர்ட்ஸ் வாங்க வரச் சொன்னாங்க…” பொதுவாக சொன்னபடியே

“இந்த டேப்லட் போடுங்க…” என்றபடி தன் அப்பாவிற்கு கொடுப்பதற்காக மாத்திரையை பிரித்தபடி அவர் அருகில் வந்து நிற்க....

அதன் பின் இருவரும்..... நடராஜனிடம் விடைபெற, ரிஷி மட்டும் கண்மணியிடமிருந்தும் விடைபெற்று கொண்டு.. வெளியில் வந்தனர்...

வரும்போதே விக்ரம் ரிஷியைப் பார்த்து...

”யாருடா இவரு…. விட்டால் இவர் பொண்ணு ஸ்கூல் போகாமலேயே மார்க் வாங்கினாள்னு சொன்னாலும் சொல்வார் போலடா... அந்தக் கண்மணிக்கு திமிர் தானா வந்திருக்காதுடா.... இந்தாளு இப்படி பேசிப் பேசியே ஏத்தி விட்ருப்பாருடா..” பொறுமித் தள்ள….

ரிஷி… அவனிடம்…

“கண்மணி திமிர் பிடிச்ச பொண்ணா…. எனக்கு அப்படி தெரியலையேடா…. “ என்று ஆரம்பித்தவன்

“உனக்கு எந்த ஆங்க்கிள்ள அவ திமிரானவன்னு தெரியுது….” என்று நக்கலாகவும் முடிக்க….

விக்கி இப்போது ஏதோ யோசித்தபடி..…

“11 த் படிக்கிறானு சொன்னேல… ஆனா அதுக்கேத்த மாதிரி பிஹேவ் பண்ணலை.. அவ அப்பாகிட்ட" என்று ஆரம்பித்தவன் வாய் தானாகவே வேலை நிறுத்தம் செய்தது… காரணம் கண்மணி அவர்களின் அருகில் நின்றிருக்க…

பேசிக் கொண்டிருந்த விக்கி ஏன் நிறுத்தி விட்டான் என ரிஷியும் பின்னால் திரும்பிப் பார்த்தான்…

“ஆஹா... பயபுள்ள… மணி அக்காகிட்ட மாட்டிக்கிட்டானா… நெலமைய சமாளிக்கனுமே” இவன் யோசிக்கும் போதே… கண்மணி ரிஷியிடம்…

”லிஃப்ட் வந்துருச்சு…” என்ற அவளின் வார்த்தையில்.... ரிஷி என்ன செய்கிறோம் என்று தெரியாமல் வேகமாய் உள்ளே நுழைய.... கண்மணியும் உள்ளே போக... விக்கி மட்டும் லிஃப்டினுள் செல்லவில்லை...

“ஹப்பா.... இவன் இம்சை தாங்க முடியவில்லையே.... இவன் இவ இருக்கானு உள்ள வர மாட்டேன்னு அடம் பிடிப்பானே” ரிஷி மனதில் நினைத்தாலும்... விக்கியை உள்ளே அழைக்க.... விக்கி ரிஷி நினைத்தது போல் அடம்பிடிக்க...

ரிஷி யோசித்தான்... விக்கி வர மாட்டான்... உள்ளே நுழைந்த லிஃப்ட்டை விட்டு வெளியே வந்தால்....கண்மணியை அவமானப்படுத்துவது போல் இருக்கும்... வராமல் இருந்தால் விக்கி கோபம் கொள்வான்...

நண்பனா... கண்மணியா என்ற நிலையில் ரிஷி இப்போது....

நண்பன் நம்மைப் பற்றி தெரிந்தவன்.... நம் நிலைமையை அவனிடம் விளக்க... காலமும் உண்டு... அவனின் அருகாமையும் உண்டு... ஆனால் கண்மணியிடம் தன் நிலையை விளக்க முடியாதல்லவா... இனி... இவளை பார்க்கும் வாய்ப்பு கூட கிடைக்குமா என்பது சந்தேகம் தான் ... அதனால்... ரிஷி கண்மணியைப் பார்த்து...

”7 த் ஃப்ளோர்ல இருந்து... மாடிப்படி வழியே இறங்கி வர முடியாது என்னால... அர்த்தமில்லாமல்... அவன் பார்க்கிற ஈகோக்கெல்லாம் நான் பலி ஆடு கிடையாது... வா போகலாம்”

என்றபடி தான் போகவிருக்கும் தரைத்தளத்தின் எண்ணை அழுத்த... விக்கியின் கண்கள் வீசிய கோபக்கணையை கொஞ்சம் கொஞ்சமாக மறைத்து லிப்ட் கீழிறங்கத் தொடங்கியது...

கண்மணி மௌனமாகவே இருக்க...

தன் நண்பனின் வார்த்தைகளைக் கேட்டு… கண்மணி கோபமாக இருக்கின்றாளோ என்று… ரிஷி கண்மணியைப் பார்க்க... அவளது முகத்தில் இருந்து எதையுமே கணிக்க முடியவில்லை…

வேறு வழி இல்லாது…. அவளது அருகில் போய் நின்றான்...

தன் அருகில் இன்று நிற்பவள்… யாரோ ஒரு கண்மணி… அவளுக்காக… தன் நண்பனின் வார்த்தைகளால் காயப்பட்டு விட்டாளோ என்று கவலைப்பட்டவனாக சமாதானப்படுத்த வேண்டும் நினைத்தான் ரிஷி… வருங்காலத்திலும் நினைத்திருக்கலாமோ???

“சாரி கண்மணி...”

கண்மணி கேள்விக்குறியாக புருவம் உயர்த்தி அவனைப் பார்க்க...

“விக்கி பேசினதுக்காக.... அவன் நல்லவன் தான்.... ஏன் உன் மேல இவ்வளவு கோபம்னுதான் தெரியலை...” என்ற போதே...

“உங்க ஃப்ரெண்ட பற்றி மாரல் ரிப்போர்ட் கொடுக்கத்தான் என்னோட வந்தீங்களா... “ நிறுத்தி கேட்க...

“இல்ல... இல்ல” என்று அவசரமாக மறுக்க..

கண்மணி தொடர்ந்தாள்...

“எனக்காக ஒண்ணு பண்றீங்களா… உங்க ஃப்ரெண்ட்கிட்ட உங்க மாரலை புரிய வைங்க… நீங்க ஏதோ குழந்தை மாதிரியும்… அவரைத் தவிர உங்களை சுத்தி இருக்கிற மத்தவங்க எல்லாம் உங்களை ஏமாற்றி குழிபறிக்கிற மாதிரியும்… அவர் ஏதோ உங்களுக்கு ஆபத்பாந்தவனா இருக்கிற மாதிரியும் பில்டப் கொடுத்திட்டு இருக்காரு… உங்க மேல இருக்கிற அக்கறைல வந்த கோபமோ… இல்லை என்ன காரணத்தினாலோ என் மேல கோபமா இருக்கட்டும்... அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை... அது எனக்குத் தேவையுமில்லை... இதோட விடலாமே” என்றபடி விக்கியைப் பற்றிய பேச்சை நிறுத்த…

ரிஷிக்கு இப்போது புரிந்தது… இவன் பில் கட்டும் சமயத்தில் ஏதோ நடந்திருக்கிறதென்று… ஏதோ நடந்திருக்கிறது என்று மட்டுமில்லை என்ன நடந்திருக்கிறதென்றும் கண்மணியின் வார்த்தைகளில் இருந்து புரிந்து கொள்ள முடிய…

அவனது கை அவன் முன் நெற்றிக் கேசத்தை அழுத்தமாக அவனையுமறியாமல் கோத…

“ஓ காட்” வார்த்தைகள் வாயிலிருந்து அனிச்சையாகவே வர… அடுத்த நொடியே

“விக்கி பணத்தை பற்றி கேட்டானா… சாரி சாரி கண்மணி… அவனச் சொல்லி தப்பில்லை… என் மேலதான் தப்பு…. நேத்து நீ பணம் கொடுத்ததை நான் அவன்கிட்ட இன்னும் சொல்லலை….” என்ற போதே

அவள் இறங்கும் தளம் வந்து விட…

“பரவாயில்லை… நானும் கெஸ் பண்ணினேன்… பை” என்றபடியே வெளியேறிய கண்மணி… விடை பெறப் போக…

”கண்மணி” என்றான் அவசர அவசரமாக…

“என்ன” என்ற பார்வை மட்டுமே ரிஷியிடம் அவள் வைக்க

“நீ தைரியமான பொண்ணுன்னு தெரியும்... அதுக்காக ஒரு ஆட்டோ டிரைவர் கூட மிட் நைட்ல எல்லாம் தனியா வருவது.... மித மிஞ்சிய தைரியம்..... இனிமேல் இது போல பண்ணாதே“ என்று அறிவுரை போல் சொன்னவன் முகத்தில் உணமையாகவே தீவிரத் தன்மை இருக்க...

கண்மணி அவனிடம் பதிலுக்கு

”அந்த ஆட்டோ டிரைவர் தனக்குத் தெரிந்தவர்தான்” என்று சொல்லத் தோன்றினாலும் ஏனோ ரிஷியின் வார்த்தைகளுக்கு எதிராக வழக்காடாமல்.... தன்னையுமறியாமல் ரிஷியின் வார்த்தைகளுக்கு ஆமோதிப்பாகத் தலை ஆட்டினாள்…. விடைபெற்றும் சென்றாள்…

---

ரிஷி கீழே இறங்கி… அடுத்த சில நிமிடங்களில் விக்கியும் வந்திருக்க…

ரிஷி அவனிடம் கண்மணி பணத்தை திருப்பிக் கொடுத்ததைச் சொல்ல…. வரும் வழியில் ரிஷி விக்கியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதை வார்த்தைகளால் விளக்க வேண்டுமா என்ன…. நினைத்ததை விட அதிகமாகவே வாங்கினான் என்றுதான் சொல்ல வேண்டும்…

“ஏண்டா இதை என்கிட்ட சொல்லலை… அவ கொடுத்திருந்தால் கூட அவளப் பற்றின என் எண்ணம் மாறப்போறதில்லை” என்று அசட்டையாகச் சொன்னவனுக்கு அப்போதுதான் ஞாபகம் வந்தது… ரிஷி தன்னை விட்டு விட்டு அவளோடு லிஃப்ட்டில் இறங்கி வந்தது… இந்த ஞாபகம் வந்த போது இன்னும் காண்டானவன்….

”என்னை விட அவள் உனக்கு முக்கியமாக போய்ட்டாள்ள” இந்தக் கேள்வியைக் கேட்டே ரிஷியை விக்கி திணறடிக்க

விக்கியிடமிருந்து தப்பிக்க என்ன செய்யலாம்… என்று யோசித்த ரிஷிக்கு , இந்த கோடை விடுமுறைக்கு, அவனது தாய் மற்றும் தங்கைகள் சென்னைக்கு வந்து ரிஷியோடு ஒரு வாரம் தங்க வருவதாக சொன்ன விஷயம் ஞாபகத்துக்கு வர…

“விக்கி…. அவள விடுடா… அதை விட ஒரு முக்கியமான ஒரு விஷயம் உனக்கு சொல்ல மறந்துட்டேன்…” என்று நிறுத்த….

விக்கி வண்டியின் வேகத்தை மெதுவாகக் குறைத்தான்… ரிஷி சொல்ல வருவதைக் கேட்கும் விதமாக…

“அம்மா…. ரிது…. ரித்தி மூணு பேரும் வர்றாங்க.. “ என்று முடிக்கவில்லை…

விக்கியோ அவனையுமறியாத சந்தோசத்தில் வேகமாக பைக்கை நிறுத்தினான்….

அவன் நிறுத்திய வேகத்தில்… அதை எதிர்பாராத ரிஷி அவன் மேல் மோதி விட…

“சாரிடா… சாரிடா”… என்று வழிந்தவனாக…

“உங்க அம்மா வர்றாங்கனு சொன்னவுடனே எனக்கு அவங்க சமையல் ஞாபகம் வந்து என்னை மறந்து ப்ரேக் போட்டுட்டேன்…

விக்கி கொஞ்சம் தடுமாறி… பின் தன்னைச் சமாளித்து… இருந்தும் ரிஷியிடம் உளறிக் கொட்டிக் கொண்டிருந்தான்… காரணம்

புகைப்படத்தில் மட்டுமே ரிதன்யாவை பார்த்திருந்த விக்கி அவளை நேரில் பார்க்கப் போகும் சந்தோசத்தில்… உற்சாகத்தில் பேசிக் கொண்டிருக்க...

அவன் நிலை புரியாத ரிஷி... புரியாத பார்வையில்

“அடப்பாவி... எங்க அம்மா சாப்பாடுக்கு இப்படி ஒரு ரசிகனா... “ என்று அவனை ஏற இறங்கப் பார்க்க....

விக்கி இப்போதும் அசடு வழிந்தவனாய் நிற்க...

“என்னடா... இப்படி நிற்கிற.... இறங்குடா.... நீ பின்னால உட்காரு... நா ஓட்றேன்... “ என்றவன் நண்பனை வித்தியாசமாகப் பார்த்தபடியே முன்னால் நகர்ந்து பைக்கின் ஓட்டுனர் இருக்கையைக் கைப்பற்ற... விக்ரமோ ரிஷியின் பின்னால் அமர்ந்தான்.... ரிஷியின் தங்கை ரிதன்யாவின் நினைவுகள் மட்டுமே விக்கியைச் சூழ்ந்திருக்க… இதுவரை அவனறியாத ஏதோ ஒரு உணர்வு… நேரில் கூட பார்க்காத பெண்ணின் மேல்… அவள் குரலை மட்டுமே கேட்டிருந்த நிலையில்… அவளை நேரில் பார்க்கப் போகின்றோம் என்று நினைக்கும் போது உள்ளம் உற்சாகம் கொள்வதென்ன… இதற்கு பெயர்தான் காதலா…

எண்ணம் வந்த போதே தலையை உலுப்பிக் கொண்டான் விக்கி…

”ச்சேசேய்… இது என்ன எண்ணம்…. சில மணி நேரங்களுக்கு முன்புதான் நண்பனுக்கு தான் அறிவுரை கூறினோம்… இப்போது எனக்கு என்ன வந்தது… ஒரு வேளை வெறும் ஈர்ப்பா…” இந்த எண்ணமும் அவனுக்குப் பிடிக்கவில்லை…

தனக்கு வந்த உணர்வுக்கு பெயர் காதலும் இல்லை.... ஈர்ப்பும் இல்லை என்றால் இந்த மன நிலைக்கு என்ன காரணம் என்று அவனுக்கும் புரியவில்லை...

அதே மனநிலையில் வீடும் வந்தும் சேர்ந்திருக்க… நண்பன் ஒரு மாதிரி காற்றில் மிதப்பவன் போலேயே இருப்பது போல் ரிஷிக்குத் தோன்ற…

“மாப்பி… ஹாஸ்பிட்டல்லருந்து வெளிய வருகிற வரைக்கும் நல்லாத்தானே இருந்தான்…. இப்போ என்னாச்சு… இடைப்பட்ட நேரத்தில என்ன நடந்திருக்கும்…” யோசித்தாலும் புரிபடவில்லை அவனுக்கு…. கேட்கலாம் என்று நினைத்த போது… மகியின் அலைபேசி அழைப்பும் வந்து விட… விட்டு விட்டான் ரிஷி… அலைபேசியோடு தன் அறைக்குள் சென்று விட்டான்…

----

ரிஷிக்கு இலேசாகக் கண்கள் சொக்கியது… தூக்கம் வருவது போல இருக்க… இருந்தும் போனை வைக்க மனம் இல்லை….

கொட்டாவி விட்டபடியே…. மணியைப் பார்க்க… அது ஒன்றைத் தாண்டியிருக்க….

மகியோடு நீண்ட நெடிய காதல் உரையாடல் இப்போது முடிவுக்கு வராது என்பது போல பேசிக் கொண்டே இருந்தவனுக்கு தண்ணீர் தாகம் வர…. அவனது அறையை விட்டு வெளியே வந்த ரிஷி… அப்படியே ஸ்தம்பித்து நின்றிருந்தான்….

காரணம் என்னவாக இருக்கும் அவனது நண்பன் விக்கியே…

நட்ட நடு ஹாலில் படுத்தபடி… இவன் வந்தது கூடத் தெரியாமல் விட்டத்தை வெறித்துக் கொண்டிருப்பவனை பார்த்து ரிஷி ஸ்தம்பித்து நிற்காமல் நின்றால் தான் ஆச்சரியம்…

“டார்லா… நீ தூங்கு… நாளைக்கு பேசிக்கலாம்… உம்மா பை” என்றபடியே மகியுடனான பேச்சைத் துண்டித்து… போனை வைக்க… விக்கி இப்போது ரிஷியைத் திரும்பிப் பார்த்தான்… அதுவும் முறைப்போடு

ஆம்… ரிஷி அழுத்திய ’உம்மா’ என்ற வார்த்தையில்தான் விக்கியின் கவனம் சிதறியிருந்தது…

’இவன் நம்ம முன்னால இப்டி பேசிப் பேசியே நல்லா இருந்த என் மனசையும் கெடுத்து வச்சுட்டான் படுபாவி…’ விக்கியின் மனம் நண்பனைப் பார்த்து இப்படிக் குமுறிக் கொண்டிருந்ததது…

அதே நேரம் விக்கியின் மனசாட்சியோ…

‘சும்மா பொய் சொல்லாதடா… நீ அடிக்கடி ரிஷியோட மொபல் ஸ்க்ரீன் சேவர முறச்சு முறச்சு பார்க்ககும் போதே நீ இங்கதான் வந்து நிற்பேன்னு தெரியும்” என்று குற்றம் சாட்ட..

ஆம்… ரிஷியின் மொபைலில் இருக்கும் ரிதன்யாவை அடிக்கடி பார்த்தும் வைப்பான் தான்… மனசாட்சியால் கையும் களவுமாக பிடிபட்டவனுக்கு கோபம் வருவதற்கு பதில் கள்ளச் சிரிப்பு வர… அதே நேரம் இப்போது வேறொன்றும் தோன்றியது… அதில் மனம் திடுக்கிடவும் செய்ய

இவன் பார்த்தது போலத்தானே… இவனோடு நண்பர்கள் என்று சுற்றிக் கொண்டிருக்கும் அந்தக் கூட்டமும் பார்த்து வைத்திருக்கும்… அதிலும் இன்று ரிஷி சொன்ன அவர்கள் பற்றிய தகவல்களை எல்லாம் கேட்ட போது… அவனையுமறியாமல் ஏதேதோ எண்ணங்கள் சூழ…. ரிஷியிடம் சொல்லி முதலில் அவன் மொபைலில் வைத்திருக்கும் அவனது குடும்ப புகைப்படத்தை ஸ்க்ரீன் சேவரில் இருந்து மாற்றச் சொல்ல வேண்டும் என்று நினைத்தவனாக இருக்க…

ரிஷியோ…. விக்கியின் எண்ண ஓட்டங்களை எல்லாம் அறியாமல் இப்போது நண்பனின் அருகில் தானும் படுக்கையை விரித்து அதில் படுத்தபடியே…. விக்கியின் புறம் திரும்பி…

“மச்சி… ஏதோ ஒரு பட்சிகிட்ட வசமா மாட்டிகிட்ட போல” அவனைப் பார்த்து கண்சிமிட்டிய படியே குஜாலாகக் கேட்டவனைப் பார்த்து விக்கி இப்போது அனல் பார்வை பார்த்தவன்…

”நீ கூடத்தான் வசமா படுத்திருக்க… இருக்கிற ஆத்திரத்துக்கு காலால எட்டி உதச்சேன்னு வை… பட்சி கிட்சினு பேசுன “ என்ற போதே…

“ஒகே ஒகே… வாபஸ் வாபஸ்… சிஸ்டர் யாரு… இது ஓகேயா… “ என்று அவனையுமறியாமல் சொன்னவன்… அதே வேகத்தில்

“ஹலோ… எங்க குடும்பத்துக்கு மீ ஒரே ஆண் வாரிசுடா… வம்சம் தழைக்கனும்” என்று வேகமாக பயந்த பாவனையைக் காட்டியபடி…. விக்கிக்கும் தனக்கும் இடையில் தலையணையை வைத்தவனாக நண்பனைப் பார்த்தவன்…

“அந்தப் பயம் இருந்தா உன் ரூமுக்குப் போ…. இல்லை கேள்வி கேட்காமல் கண்ணை மூடித் தூங்கு…” என்றவனிடம் அதற்கு மேல் ரிஷியும் பேசவில்லை… உண்மையிலேயே அவனுக்கும் தூக்கம் கண்களைத் தழுவ…. சில நொடிகளிலேயே உறங்கவும் ஆரம்பித்திருக்க… நல்ல உறக்கத்தில் இருந்த ரிஷி மீண்டும் நண்பனால் எழுப்பப்பட்டான்…

ஏதோ நல்ல கனவில் இருந்திருப்பான் போல ரிஷி… அது களைந்த கடுப்பில்

“ஏண்டா… செம்ம கனவு… கெடுத்துட்ட போ… என்னடா” என்று முகத்தைச் சுண்டியவனாகச் சொல்ல…

“கனவு தானே… அது… உன் வாழ்க்கையையே கெடுத்த மாதிரி ஏன் இப்டி முகத்தை தூக்கி வச்சுருக்க… அதெல்லாம் விடு எனக்கு ஒரு டவுட்” என்று நிறுத்த

தூங்கி வழிந்த முகத்தோடேயே…

“உனக்கே டவுட்டா… ” பெரிதாக வாய் பிளந்தவன்

“ஃபர்ஸ்ட் என் கையைக் கிள்ளு… நான் கனவுல இருக்கேனா… இல்லையானு பார்க்கனும்” என்று அப்போதும் ரிஷி நண்பனைக் கலாய்க்க…

விக்கிக்கு கோபம் வந்த போதும்… அதைக் காட்டாமல்

“டேய் லவ்னா எப்டி இருக்கும்டா… அதை எப்டிடா ஃபீல் பண்ண முடியும்….” என்று பரிதாபமாகக் கேட்ட நண்பனை அவனை விட பரிதாபமாகப் பார்த்த ரிஷி… சில நிமிடங்கள் யோசித்தவனாக…

“உன் தாத்தா ஞாபகம் இருக்காடா உனக்கு…. அவரை மீறி அந்தப் பொண்ணு ஞாபகம் வந்துச்சுனா அது கன்ஃபார்மா லவ் தான்” என்று ரிஷி அவன் போக்கிலேயே விக்கிக்கு காதலுக்கு விளக்கம் சொல்லிக் கொடுக்க… அது சரியாக வேலை செய்ய…

இப்போது அமைதியாக அடங்கினான் விக்கி… அவனது தாத்தாவை எதிர்த்து… அவர் வார்த்தையை மீறி அவனால் காதல் திருமணம் செய்ய முடியுமா… மனம் சுணங்கியது… இப்போதைக்கு அவனால் முடியாது…. தனக்கென்று ஒரு இடம்… தன்னை இந்த சமுதாயத்தில் ஒரு வெற்றியுள்ள ஆண்மகனாக நிலைநாட்டிய பின்னால்தான் தன் தாத்தாவிடம் முன் நின்றே பேச முடியும் எனும் போது… காதல் என்பதெல்லாம்… நினைக்கும் போதே மனம் தண்ணிரில் தள்ளாடும் ஓடம் போல கொஞ்சம் தடுமாற… ரிதன்யாவின் நினைவுகளை மீண்டும் தன் மனதின் அடி ஆழத்தில் புதைத்து வைத்தான் விக்ரம்…

இன்னும் சில நாட்களில் அவள் இங்கு வரும் போது கூட… தன் மனதை அவள் அறியாமல் வைத்திருக்க முடிவு செய்தவனாக… காலம் வரும் போது… அப்போதும் ரிதன்யாதான் என்று மனம் சொன்னால் முடிவு செய்து கொள்ளலாம் என்று இப்போதைக்கு தன் காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த போது அவன் மனம் தெளிவாகி இருந்தது…

அவன் இவ்வாறு முடிவு செய்ததற்கு ரிஷியின் காதல் அவனுக்கு சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றியதும் காரணமாக இருந்ததோ என்னவோ…

விக்கி, ரிதன்யாவுக்கான அவன் மனதை மீண்டும் மீட்டெடுக்க காலம் காத்திருக்க வேண்டியிருக்க…

அதே காலம், விக்கி - ரிதன்யாவை விட்டு விட்டு... ரிஷியை நோக்கி தன் பார்வையைத் திருப்பியது…

கண்மணி என்பவள்… தன் வாழ்க்கையில் வருவாள் என்றெல்லாம் சிறு அணு அளவும் எண்ணம் இல்லாதவனாக ரிஷி நிம்மதியாக உறங்கியிருக்க…

அதே நேரம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணாத்தில் உள்ள ஹூஸ்டன் நகரின் 70வது தளத்தில்… தன் அலுவலக அறையில் அமர்ந்திருந்தவனோ…. தன் முன் இருந்த மானிட்டரில் பார்வையைப் பதித்திருந்தான்…. கண்களில் காதலோடு….

உதடுகளோ…. “லவ் யூ மை பிரின்சஸ்… கமிங் டு மீட் யூ சூன் மிஸஸ் அர்ஜூன்” என்றவனின் முன் இருந்த கண்மணியின் கண்மணிகளிலும் அதே காதலைக் காண அவன் மனம் எதிர்பார்க்க… அவனின் மனசாட்சியோ…

“டேய் அவ ஸ்கூல் படிக்கிற பொண்ணுடா… உன் வேகம்லாம் அவளுக்கு தாங்காதுடா…” என்று அறிவுரை கூற…

”அவ என்னை நேர்ல பார்க்கிற முதல் நொடியே அவளை என்னை நினைக்க வைக்கலை… நான் அர்ஜூன் இல்லை” தனக்குள் தன் மனசாட்சியோடு போட்டி போட்டுக் கொண்டிருந்தவனின் வார்த்தைகளில் இருந்த தீவிரம்…. அவன் எண்ணங்களிலும் வந்திருக்க… அந்த உறுதியோடு காதலையும் தேக்கியவனாக கண்மணியை நோக்கினான் அர்ஜூன் எனும் அந்த 25 வயது ஆண்மகன்…

5 வருடங்களுக்கு முன் தன் பெற்றோரோடு இங்கு புலம் பெயர்ந்தவன்… இரண்டு வருடத்திற்கு முன் தொழில் ஆரம்பித்து அதில் குறிப்பிடத் தகுந்த வெற்றியை அடைந்திருப்பவன்… தன் ஒன்றுவிட்ட அத்தை பவித்ராவின் கரம் பழகி நடை பழக ஆரம்பித்தவன்…. அந்த அத்தை பெற்ற அவரது ஒரே மகளின் கரம் பிடிக்கவும் ஆவலாகக் காத்திருந்தான்…

தங்களை விட்டு தடம் புரண்டு விலகி… கடைசியில் மரணித்தும் போன தன் அத்தை பவித்ராவின் வாரிசையாவது தங்களோடு மீண்டும் இணைக்க தன்னால் மட்டுமே முடியும் … என்று நினைத்த அவன் மனதில் நடராஜனின் முகம் வந்து போக… இதுவரை அவன் கண்ணில் இருந்த காதல் போய்… காதல் மட்டுமல்ல… சாந்தமும் போய்… உக்கிரம் வந்திருக்க…

தன் மனம் கவர்ந்தவள் குழந்தைப் பருவத்திலேயே பட்ட வேதனைகள் எல்லாம் கண் முன் வர… சில நிமிடங்கள் அப்படியே அமர்ந்திருந்தான்…

தன் தாத்தாவின் மூலம் அந்த விசயங்களை எல்லாம் கேட்டறிந்த போதே அந்த நடராஜின் மீது கொலை வெறிதான் வந்தது… இங்கு நடராஜின் மீதான கோபத்தைக் காட்டுவது அழகும் அல்ல… அறிவும் அல்ல…. அவனது மனதில் இதய ராணியாக வீற்றிருப்பவளே முக்கியம்… ஆக மொத்தம்…. அந்த நடராஜிடமிருந்து அவர் மகள் கண்மணியாக இருப்பவளைப் பிரித்து தன் மனைவியாக கொண்டு வரும் நாளுக்காக தவமிருந்தான் அர்ஜூன்… இதோ அதன் முதல் படியாக இன்னும் சில நாட்களில் இந்தியா செல்லவும் போகின்றான் வெகு நாட்களுக்குப் பிறகு….

ஆம்… அர்ஜூன் தனக்குள் சபதமிட்டது போல…. தன் முதல் பார்வையிலேயே கண்மணியை அவனை நோக்கி இழுக்கவும் செய்திருந்தான்…. அதுவும் ரிஷி அருகில் இருந்த போதே….

அர்ஜூன் – முதல் பார்வையியேலேயே கண்மணியை தனை நோக்கி இழுத்தவன் காதலனாக வென்றானா?

கண்மணியின் மீதான அர்ஜூனின் அதீத காதலே கண்மணியை ரிஷியின் மனைவியாக கொண்டு வந்து சேர்த்திருக்க

ரிஷி- தலைகீழாக மாறிய தன் வாழ்க்கையினால் காதலனாகத் தோற்றவன் கண்மணியின் கணவனாக வென்றானா?

கண்மணி … யாரின் கண்ணின் மணி...??? இனி வரும் அத்தியாயங்களில்….

3,077 views0 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின்...

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை...

கண்மணி... என் கண்ணின் மணி- 94-3

அத்தியாயம் 94-3 சில வாரங்களுக்குப் பிறகு… வீட்டில் கண்மணி மட்டுமே இருந்தாள்… சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க… மணி 11 க்கும் மேலாக...

Comments


Commenting has been turned off.
© 2020 by PraveenaNovels
bottom of page