கண்மணி... என் கண்ணின் மணி -34

Updated: Mar 30, 2021

அத்தியாயம் 34:இந்த எபிக்கான பாடல்... முடிஞ்சா கேட்டுப் பாருங்க ஃப்ரெண்ட்ஸ்... ஐ தின்க் இட்ஸ் ஸ்லோ பாய்சன்...

https://gaana.com/song/naan-maati-konden


/* எல்லை மீறாமலே

சிறு நெருக்கம் நெருக்கம்

கைகள் தீண்டாமலே

உன் இதயம் திறக்கும்!

இசையாய் விரிந்தாய்

நிறமாய் இறைந்தாய்

மணமாய் நிறைந்தாய்

சுவையாய் கரைந்தாய்


நான் மாட்டிக்கொண்டேன்

உனில் மாட்டிக்கொண்டேன்

தமிழுக்குள் போதை போல

உன்னில் மாட்டிக்கொண்டேன்


வேண்டி மாட்டிக்கொண்டேன்

உனில் மாட்டிக்கொண்டேன்

கவிதைக்குள் குழப்பம் போல

உன்னில் மாட்டிக்கொண்டேன்


*/


மீண்டும் மீண்டும் கையில் வைத்திருந்த காகிதங்களை சரிபார்த்துக் கொண்டிருந்தான் ரிஷி…. நட்ராஜ் உறங்கச் சென்று அரை மணி நேரத்துக்கும் மேலாகி இருக்க… ரிஷி இன்னும் அதே இடத்தில் தான் இருந்தான்… கடைசியாக எல்லாவற்றையும் முழுமையாக பார்த்து முடித்து வைத்தவனுக்கு… அவனையுமறியாமல் நிம்மதிப் பெருமூச்சு வர… கூடவே பசி வேறு வயிற்றைக் கிள்ள… அதுவரை காரியமே கண்ணாக இருந்தவன் இப்போது நிமிர்ந்தான்… தன் வீட்டை நோக்கிய பார்வையை வீசியபடியே…

அவன் வீட்டுக்கதவு ஒருக்களித்துச் சாத்தப்பட்டிருக்க… வீட்டின் வரவேற்பறையிலும் இன்னும் விளக்கு எரிந்து கொண்டுதான் இருந்தது… ஆக கண்மணியும் இன்னும் தூங்க வில்லை என்று நினைத்துக் கொண்டான் ரிஷி… ஒருவேளை தனக்காகத்தான் தூங்காமல் காத்துக் கொண்டிருப்பாளோ… என யோசித்த போதே… தனக்காக இல்லாவிட்டாலும் கதை எழுதுகிறேன் பேர்வழி என்று அதற்காகவாது தூங்காமல் இருப்பாள்… என்று நினைத்தவனுக்கு… தான் அவளிடம் நடந்த முறையில் கோபமாக இருப்பாள் என்றெல்லாம் நினைக்கத் தோன்றவில்லை…

இந்த இரண்டு மாதங்களில்… கண்மணி என்பவள் ரிஷியின் மனைவியாக ஒருநாளும் அவனிடம் அதிகப்படி உரிமை எடுத்துக் கொண்டதில்லை… எல்லாவற்றையும் புன்னகை முகமாக… கடந்து செல்லும் கண்மணியாகத்தான் அவளைப் பார்த்திருந்தான்…இன்றும் அதே போலத்தான்…. பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டாள் என்றே நினைத்துக் கொண்டான்.. அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும் … அவள் தன்னிடம் கேட்கா விட்டாலும்… தான் அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டான்…

கண்மணியைப் பற்றிய ரிஷியின் கணிப்பு இவ்வாறாக இருந்தாலும்… ரிஷிதான் மற்ற நாட்களைப் போல இல்லை… காலையில் இருந்தே கண்மணிக்கும் அவனுக்கும் இடையில் நடந்த நிகழ்வுகளால் இன்று கண்மணியின் நினைவு அவனுக்குள் சற்று அதிகமாகவே இருக்க… அவளை முதன் முதலாக அவளை பார்த்த நொடிகளில் வந்து விழுந்தது… இதோ இதே இடத்தில் அமர்ந்திருந்த போதுதான் அவளை முதன் முதலாக பார்த்தது… பள்ளிச் சீருடையில் கண்மணியைப் பார்த்தது நியாபகம் வந்து போக… அவனது உதடுகள் மென்னகையில் விரிய…

“சொர்ணாக்கா…” ரிஷியின் இதழ்கள் முணுமுணுத்தன செல்லமாக… அவனையுமறியாமல்…

”முதல்ல இந்தப் பேர மாத்தனும்டா… அந்த லேடி டானுக்கு ” மனதுக்குள் நினைத்தபடியே… தன் வீட்டுக்குள் நுழைய… அங்கு கண்ட காட்சியோ???…

யார் அவனுக்காக உறங்காமல் காத்துக் கொண்டிருப்பாள் என்று நினைத்தபடி உள்ளே வந்தானோ… அவளோ அவளை மறந்து உறங்கிக் கொண்டிருந்தாள்… அதுவும் அனைத்தையும் அப்படி அப்படியே போட்டபடியே… ஒரு புறம் பாடப்புத்தகம் இன்னொரு புறம் அவளது முதுகலைப் படிப்புக்கான புத்தகங்கள்... இன்னொரு பக்கமோ அவள் மடிக்கணினி… என அவளைச் சுற்றி பரப்பப் பட்டிருக்க… கண்மணி எதையுமே எடுத்து வைக்காமல் அப்படியே தூங்கியிருந்தாள்


“தான் வெளியே அமர்ந்திருந்ததால் தான்… கதவைக் கூட மூடாமல்… விளக்கைக் கூட அணைக்காமல் அவளையும் அறியாமல் உறங்கி விட்டாளோ” இப்படித்தான் ரிஷிக்குத் தோன்றியது…


இப்படி கண்மணி தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்த போது…. விக்கி நியாபகம் தான் வந்தது ரிஷிக்கு… விக்கியும் இப்படித்தான் பல நேரங்களில் படித்துக் கொண்டிருக்கும் மேஜையின் மீதே விழுந்து தூங்கி இருப்பான்… பார்ட்டி அது இது என்று இவன் தாமதமாக வரும் சில சமயங்களில் ஓரளவு சுயநினைவில் இருக்கும் போது… ரிஷி அவனது பொருட்களை எல்லாம் எடுத்து வைத்து விட்டு… அவனை எழுப்பி தூங்கப் போகச் சொன்னதெல்லாம் இப்போது நியாபகம் வர… மனம் அன்றைய நாட்களுக்கு பின்னோக்கி பயணிக்க ஆரம்பித்து இருந்தது…


அது கூட சில நிமிடங்கள் தான்…. ஏமாற்ற பெருமூச்சு விட்டவனாக“தான்தான் அவனைப் பற்றி எல்லாம் நினைக்கிறோம்.. அவனெல்லாம் தன்னை எப்போதோ மறந்திருப்பான்… அதே போல்… அவனது அறிவுக்கும்… திறமைக்கும் ஐந்து வருடத்திற்கு முன் தன் நண்பனாக இருந்த விக்கி இப்போது எங்கோ போயிருப்பான்… விளையாட்டுத்தனங்கள் நிரம்பிய அந்த வயதிலேயே தன் வாழ்க்கை குறித்த இலட்சியங்கள் கொண்டவன்.. கண்டிப்பாக பெரிய ஆளாகத்தான் இருப்பான் என்று நினைக்கும் போதே… தான் எங்கிருக்கிறோம் என்று தன்னை நினைத்த போதே மீண்டும் பெரு மூச்சு மட்டு்மே… அதை மீறி ஏதுமில்லை… ரிஷி என்பவனிடம்…

கண்மணியை சுற்றி இருந்த புத்தகத்தை எல்லாம் எடுத்து மூடி… அருகில் இருந்த மேஜையின் மேல் வைத்தவன்… மடிக்கணியை எடுத்துப் பார்க்க… அவள் கதை எழுதிக் கொண்டு இருந்திருப்பாள் போல… அந்தப் பக்கங்கள் பட… முதலில் படிக்கத் தயங்கியவன் பின் வாசிக்க ஆரம்பித்தான்


ஏதேதோ எழுதி இருந்தாள்… என்னென்னவோ எழுதி இருந்தாள்… இப்படித்தான் ரிஷிக்குத் தோன்றியது… ஆக மொத்தம் தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை… மூடி வைத்து விட்டான்…

உறங்கிக் கொண்டிருந்த கண்மணியை தொந்தரவு செய்யாமல் அனைத்தையும் ஒழுங்குபடுத்தி விட்டு…. தங்கையும்… தாயும் படுத்திருந்த உள் அறையைப் பார்த்தவன்… அவர்கள் உறக்கம் கலைக்காமல் அவர்களையும் பார்த்து விட்டு வந்தவன்… கடைசியாக சமையலறைக்குப் போக… அங்கேயோ… மிகப்பெரிய வரவேற்பு தான் கிடைத்தது… அதாவது… இவனுக்காக எந்த ஒரு உணவுமே இல்லை… வேக வேகமாகச் சுற்றி முற்றி பார்த்து … அங்கிருந்த அத்தனை பாத்திரங்களையும் திறந்து பார்க்க… கண்மணி எடுத்து வைத்திருந்தால் தானே… இருப்பதற்கு…. பசியோடு ஏமாற்றமும் எரிச்சலும் வர.... ஹாலில் உறங்கிக் கொண்டிருந்த கண்மணியை எட்டிப் பார்த்தபடியே

“அடிப்பாவி… ஒரு பேச்சுக்கு சொன்னா… உண்மையிலேயே எதுவும் பண்ணலையா” மனைவியை சந்தோசமாக??? மெச்சிக் கொண்டபடியே

“ஓகே… ரிஷிக்கண்ணா… டீல்ல விட்டா உன் பொண்டாட்டி…. உன் கையே உனக்கு உதவி… களத்துல இறங்குடா ரிஷிக் கண்ணா…” தனக்குள் சொன்னபடியே அணிந்திருந்த சட்டையைக் கழட்டிவிட்டு… முகத்தை அலம்பி வந்தவன்… அங்கிருந்த கொடியில் தொங்கிக் கொண்டிருந்த துணியை எடுத்து முகத்தை துடைத்துவிட்டு பின் அதே துணியை எடுத்து தலையில் முண்டாசு போலக் கட்டிக் கொண்டபடி சமைக்க இறங்கினான்…