என் உயிரே !!! என் உறவே ???- 5

அத்தியாயம் 5:

ஹோட்டல் ஆதித்யாவில் சௌந்தர்யாவிற்காக பாலா காத்துக் கொண்டிருந்தான் பாலா. கிட்டத்தட்ட அரைமணி நேரமாகியும் அவள் வராததால், கொஞ்சம் கடுப்பானவன் மீண்டும் அவளுக்கு கால் செய்தான்.அடுத்த முனையில்

இதோ வந்துட்டேன் பாலா. சிக்னலில் நிற்கிறேன். எனக்காக என்னென்னவோ செய்யப் போகிறீர்கள், ஒரு அரை மணி நேரம் காத்திருக்க மாட்டீர்களாஎன்று கொஞ்சலாகக் கூறியவளின் வார்த்தைகளில், எரிச்சல் அடைந்தவன் அதற்கு மேல் அவளிடம் பேசப் பிடிக்காமல் அழைப்பை கட் செய்தான்.

சுற்றியிருந்தவர்களின் மேல் பார்வையினை சுழல விட்டான். வந்தவர்களில் முக்கால் வாசி பேர் காதலர்கள்.அவர்களைப் பார்த்தவன், மதுவின் நினைவுகளுக்கு தாவினான். இன்று காத்திருப்பது போல் ஒருநாள் கூட அவன் அவளுக்காக காத்திருந்தது கிடையாது. எப்படியாவது அவள்தான் முன்னால் வந்து காத்திருப்பாள். இன்று யாரோ ஒருத்திக்காக காத்திருக்கிற தனது விதியினை நொந்தபடி அமர்ந்திருந்த பாலா , தூரத்தில் சௌந்தர்யா வருவதைப் பார்த்தான். யாரையும் உறுத்தாத ஒரு அலங்காரத்தில், ஜீன்ஸ் மற்றும் டாப்ஸ் அணிந்திருந்தாள். கையில் கார் சாவியினை சுழற்றியபடி வந்த சௌந்தர்யாவின் கண்களில் பாலா தென்பட்டதும் அவள் கண்கள் சந்தோசத்தினில் சற்று சுருங்கி, விரிந்தது. அங்கிருந்த படியே அவனைப் பார்த்து கையசத்தவள், பாலாவினை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி அவனை நோக்கி வந்தாள்.