என் உயிரே!! என் உறவே!!!-43

அத்தியாயம் 43

கடற்கரையின் அலைகள் கால்களை ஈரமாக்க. சிறிது நேரம் நின்ற கீர்த்திகா பின் ஆதியின் அருகில் அமர்ந்தாள்…

“என்ன…விளையாடி முடிச்சாச்சா…” என்று புன்னகைக்க

”நீ ஏன் வர மாட்டேங்கிற…வா என்று அவனையும் இழுத்து அலையில் நனைய வைக்க.. மது இவர்களைத் தூரத்தில் இருந்து பார்த்தபடி… பாலாவுடன் போனில் கலந்திருந்தாள்

“என்னடா பண்ற…. ” என்று கேட்க

“இந்த மரியாதை மரியாதைனு ஒண்ணு சொல்வாங்கள்ள ….அப்படின்னா என்ன மது… அது நமக்கு வரவே வராத… உன்ன விட 3 வருசம் பெரியவன் தானே நான்.. அட்லீஸ்ட் அத்தான் என்றாவது சொல்லலாமே என் மாமன் மகளே என்று கிண்டலடிக்க

”சரிடா அத்தான்… இப்போ என்னடா பண்ற அத்தான்” என்று பதிலுக்கு தாக்க

“சகிக்கலை… அம்மா தாயே நீ அத்தானும் போட வேண்டாம் … ஒண்ணும் போட வேண்டாம்… என்ன டேமெஜ் பண்றதையே பொழப்பா வச்சுருப்ப நீ…. என்ன பண்ணிட்டு இருக்கேன்னா கேட்ட..ஒரு கைல சிகரெட்…ஒரு கைல தண்ணி…என்ன சுத்தி ஒரு நாலே நாலு வெள்ளைக்காரிங்க…. இதை எல்லாம் வச்சுட்டு என்ன பண்ண முடியுமோ அத பண்ணிட்டு இருக்கேன்…என்று கடுப்பேற்ற முயல..

அவளோ…

“அப்போ நான் ஒரு மணி நேரம் கழிச்சு போன் பண்ணவா… சார் முக்கியமான வேலையில இருக்கீங்க போல” என்று போனை வைக்கப் போக

பாலா மதுவிடம் சரணடைந்தான்….

அதன் பிறகு அங்கு அவர்களின் காதல் சாம்ராஜ்ஜியம் போனிலேயே நடக்க ஆரம்பித்தது…

--------------

கையில் பாதி பிரித்திருந்த நிலையில் பெரிய சாக்லேட்டை கீர்த்திகா ஆதிக்கு நீட்ட ஏதென்று கேட்க

அவனது சக வகுப்புத் தோழன் பிரதாப் பிறந்த நாள் என்றும்.. அவன் தனக்கு கொடுத்ததாகவும் கூறியவள்.. அவனிடம் மது செய்த கலாட்டாவையும் கூறினாள்

”எனக்கு கொடுத்ததை மது பறிச்சு சாப்பிடப் போனாளா ஆதி…. அவன் அழவே ஆரம்பிச்சுட்டான்… கீர்த்திக்குதான் வாங்கிட்டு வந்தேன்…. கீர்த்திதான் சாப்பிடனும்னு…. மது அவனோட மல்லுக் கட்டுனா….. ஏன் நாங்கள்லாம் உன் ஃப்ரென்ட்ஸ் இல்லையா எங்களுக்கு எல்லாம் கிடையாதான்லாம் சொல்லி கலாய்க்க ஆரம்பிச்சுட்டா…. அவனப் பார்த்தாலும் பாவமாத்தான் இருந்துச்சு……. அதுக்கப்புறம் நான் இடையில புகுந்து என்றவளை இடைமறித்து

”மதுவுக்கு இல்லாத எதுவும் எனக்கும் வேண்டாம்னு சொல்லி இருப்ப… “ கரெக்டா என்று சொன்னவனை பார்த்து வியந்த கீர்த்திகா

“எப்படி ஆதி …இப்படி நேரில் பார்த்தது மாதிரி சொல்ற” என்றவளை

பின்ன…அங்க உன் புராணம் ஓடும்…இங்க அவ புராணம் ஓடும்…இதுதானே வழக்கமா நடக்குது..

என்றவனை முறைத்தாள் கீர்த்தி…

அங்கு அப்படி நடக்க

-----

கீர்த்தியைப் பற்றிதான் மதுவும் பாலாவிடம் பேசிக் கொண்டிருந்தாள்…. இப்போதும் அவள் பேச்சுதானா என்று பாலா மனதினுள் நினைத்தாலும்…வெளியில் சொல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தான்..

காலையில் நடந்ததைக் கூறியவள்…

“பாலா..அவனோட பீஹேவியர் வித்தியாசமா இருந்துச்சு… கீர்த்தி கையில இருந்த சாக்லேட்டை நான் வாங்கியவுடனே அவன் முகம் ஒரு மாதிரி… எப்டி சொல்றது…. டோட்டலா வேற மாதிரி ஆகியிருச்சு…. அத எனக்கு சரியா சொல்லத் தெரியல… பயங்கரமா என்னை முறைத்தான்…. அவன் என்னதான் பண்றானு பார்ப்போம்னு நானும் அவனிடம் விளையாண்டேன்…. நான் மட்டும் சாப்பிட்டு இருந்தா என்னை அடித்தே போட்டிருப்பான் போல்… கீர்த்தி வந்து இடையில பேசின பின்னாடிதான் நார்மல் ஆனான்… அவன் கொஞ்சம் சாதுவான டைப் பாலா…. ஆனா அந்த நிமிசம் அவனை அப்படி நினைக்கத் தோணல… சம்திங் இஸ் ராங் இன் ஹிஸ் பிகேவியர்…. அவன் கீர்த்திய லவ் பண்றானோனு தோணுது என்ற போது…

பாலாவும்.

“ஆமாம் மது… கீர்த்திய நான் அன்னைக்கு ஆடிட்டோரியத்தில திட்டுய போது கூட அவன் தான் என்கிட்ட கீர்த்திக்கு பரிந்து பேசினான்னு நினைக்கிறேன். அவன்லாம் ஒரு ஆளுன்னு நீ பயப்படுறியா… புள்ளப் பூச்சி அவன்லாம்… என்று அவளைத் தேற்றியவன்…

“எப்போ பாரு கீர்த்தி…கீர்த்தினு…எரிச்சலா வருது… “

“ஏண்டா உனக்கும் அவளுக்கு ஒத்தே வர மாட்டேங்குது..” என்க

“சே சே அப்டிலாம் இல்ல… அவள பார்த்த முதல் சம்பவமே கொஞ்சம் எனக்கு சரியா இல்ல… எல்லாரும் அவளுக்கு சப்போர்ட் பண்ணி என்கிட்ட கோபமா பேசினாங்களா…. அது வேற… என்னதான் அவ உனக்கு முக்கியம் என்று தோணினாலும்…சில நேரம் இப்படி பேசி விடுகிறேன்…. சாரி.. ” என்றவனிடம்

”சரி விடு…. நீ என்னைக்குதான் மாறப் போறியோ….. கொஞ்சம் சுயநலமா இருக்கியோனு தோணுதுடா…. உனக்கு நீ… உன் சம்பந்தப் பட்ட விசயம்னா என்ன வேணும்னாலும் பண்ற… அடுத்தவங்க விசயத்தில அதை யோசிக்க மாட்டேங்கிற…. இதுதான் எனக்கு உன்கிட்ட பிடிக்காத விசயம்…” என்று சலிப்பாகச் சொல்ல

“ஒரே பையனா வளர்ந்திட்டேன் மது… இப்போ தான் உன்னைப் பார்த்த பின்னாடி…. உன் குணத்தைப் பார்த்த பின்னாடிதான் நானே கொஞ்சம் கொஞ்சமா மாத்திக்க ட்ரை பண்ணிட்டு இருக்கேன் மா….என்று.. தன் குணம் புரிந்து பணிந்து அன்று சொன்னவன்தான்… பின்வரும் தன் வாழ்க்கையில்…. கீர்த்தனா என்ற பெண்ணிடம் தன் சுயநலத்தை தப்பிதம் இல்லாமல் நிறைவேற்றினான்..

------------------

கல்லூரி வளாகத்தில் கீர்த்திகாவும் மதுவும் அளவளாகிக் கொண்டிருக்க….அவர்களின் முன் பிரதாப் வந்து நின்றான்…. கீர்த்திகா அவனைச் சாதாரணமாகப் பார்த்து ஹாய் சொல்ல.. மதுவோ அவனை.. அவன் பார்வை மாற்றங்களை நோட்டம் விட ஆரம்பித்தாள்…

”கீர்த்தி நான் உன்கிட்ட தனியா பேசனும்… மதுவ போகச் சொல்லு….என்றவன்

மதுவிடம்..

“நீ கொஞ்சம் போறியா… ” என்று தைரியமாக சொன்னான்

“எப்போ பாரு அவ கூடவே ஒட்டிகிட்டு…” என்று சற்று மெல்லமாக முணுமுணுக்க

“நான் போக மாட்டேன..என்ன பண்ணுவ” என்ற அவள் குரலில் இன்றோடு அவனுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று உறுதி இருக்க

கீர்த்தியும் அவனிடம்… ஆமா… ப்ரதாப்… அவ இல்லாம எனக்குனு ரகசியம் எதுவும் இல்லை” என்றவளை… கடுமையாகப் பார்த்தவன்

“அப்போ அந்த ஆதிகூட இருக்கும் போது மட்டும் உனக்கு இவ ஞாபகம் வராதா…. இவளும் அவன் கூட மட்டும் தான் உன்னைத் தனியா விடுவாளா…. நல்லா மாமா வேல பார்க்கிறா… நேத்துதானே பார்த்தேன்…. உன்னை அந்த ஆதி கூட…“ என்று வேக வேகமாகப் பேசியவனை ஆச்சரியமாகப் பார்த்தனர்.. தோழியர் இருவரும்….

அமைதியாக கல்லூரிக்கு வருவான் போவான்… அவனுக்குள் இத்தனை ஆவேசமா… என்று தோன்ற…

மதுவுக்கு கீர்த்திகாவின் மீதான அவன் காதல் புரிய… அவனை சமாதானப்படுத்தும் விதமாக… முதலில் தண்மையாகத்தான் பேசினாள்

“ப்ரதாப்…. உனக்குதான் தெரியுதுள்ள அவ ஆதிய லவ் பண்ரானு…. அது தெரிந்தும் நீ இப்படி பேசுறது நல்லா இல்ல…. ”

“என்ன நல்லா இல்ல… என்ன நல்லா இல்ல… இவ என் கீர்த்தி… எனக்கு மட்டும்..எனக்கு மட்டும் தான்… எனக்கு இவ இல்லேனா…. முடியாது… இவள நான் வேற யாருக்கும் விட்டுத் தர மாட்டேன்.. விட்டுத் தர மாட்டேன் என்று…” அவன் சொன்ன வார்த்தைகளையே சொன்னபடி படபடத்தவனை

கீர்த்தி பயந்த விழிகளால் நோக்க.. மதுவுக்கோ சுர்ரென்று ஏரியது..

“லூசாடா நீ அவ இன்னொருத்தன லவ் பண்றான்னு தெரிஞ்சும்…. இப்படி பேசுற… அறிவு இருக்கா… இல்லையா உனக்கு…. இன்னொருத்தன நினைக்கிற அவ உன்னை எப்படி…. கண்டபடி உளர்ற… கீர்த்தி வா… நாம போகலாம்…” என்று கோபமாகப் பேசியவள் கீர்த்தியை இழுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகல முயல…

நகன்ற கீர்த்திகாவின் கைகளை பிடித்து அவனும் இழுக்க…

“மது இவன் கைய விட மாட்டேங்கிறான்….“ என்றவளிடம் வார்த்தைகளை விட கண்ணீரே நர்த்தனமாட… மது கீர்த்தியின் கண்ணீரைத் தாங்குபவளா என்ன…

காளி அவதாரமானாள் மது

“அவ கைய விடுடா” என்று சொன்னவளின் கோப விழிகளை அலட்சியம் செய்தவனாய் தான் பிடித்த நிலையிலே இருக்க

எவ்வளவு சொல்லியும் அவன் ஒரு கல்லூரி மாணவன் போல் இல்லாமல்…. கையை விடாமல் கீர்த்திகாவை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தவனை… ஒரு கட்டத்திற்கு மேல் தாங்காமல்

மது… கோபத்தில் தன் காலில் இருந்த செருப்பைக் கலட்டியவள்…

“நீ இப்போ விடலைனா.. இதுதான் பிய்யும்…. ஒழுங்கா விடுடா அவள…” என்ற போதும் அவன் அவள் கைய விடாமல் கீர்த்தியை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான்….

கூட்டம் வேறு கூட… அதை எல்லாம் அலட்சியம் செய்தவனாய்ப் பேசிக் கொண்டிருந்தான் பிரதாப்

“கீர்த்தி கண்ணம்மா…. நீ என்ன லவ் பண்றேனு சொல்லுடா… நான் உன்னை எவ்வளவு விரும்பறேனு தெரியுமா…. இவ என்னைப் போய் உன்னை விடச் சொல்றாடா… நீ நல்ல பொண்ணுதான்… உன்னை இவதான் மாத்தி இருப்பா…. I Love u da…” என்று கொஞ்சல் மொழிகளை எடுத்து விட

கொண்டவனின் கொஞ்சல் மொழிகள் காதில் தேனுற்றும்… கொண்டவன் இல்லாத மற்றவனின் வார்த்தைகள் தேனையா ஊற்றும் தீயைப் பாய்ச்சின…

அதுவும் தங்களைச் சுற்றி கூட்டம் கூட … அதைத் தாங்க முடியாதவளாய்….