top of page

என் உயிரே!! என் உறவே!!! 32

அத்தியாயம் 32

பாலா அந்த கட்டிடத்தினுள் நுழையும் போதே நுழைவாயிலில் நின்ற கீர்த்தியை பார்த்து விட்டான்….அதே நேரத்தில் அவள் முகத்தைப் பார்த்த பாலா…அதிர்ந்தபடி….

“கவி கோபத்தில திட்டிட்டாளோ… அழுதிருப்பா போல…. சேய் இதுக்குதான் கவிய கூட்டிட்டு வந்தோமா…. அவளோட தனிமையா போக்கலாம்னு பாத்தா.. இவ முதலுக்கே மோசம் பண்ணிடுவாளோ” என்று எண்ணியவன்

கவியிடம் திரும்பி….

“ஏங்க கீர்த்திய ரொம்ப திட்டிடீங்களா….. முகமே சரி இல்ல….“ என்று மனதினுள் இருந்த கடுமை தெரியாமல்… கேட்டான்…

“நீங்க வேற சார்… இனிமேதான் இருக்கு அவளுக்கு… நான் இன்னும் பேசவே ஆரம்பிக்கலை…. கவின்னு சொல்லாம நான் ஒரு சின்ன சர்ப்ரைஸ் கொடுத்தேன்… அதுல அம்மணி ஆடிப் போய் நிற்கிறாங்க….. ஆனா அதுக்காக எதுக்கு இங்க வந்து நிக்கறானு தெரியல…” என்று அவளும் யோசனையுடன் சொல்ல….

“அப்படி என்ன சர்ப்ரைஸ்…..” என்றபோது குரலில் லேசாக எரிச்சலும் எட்டிப் பார்க்க

அவனிடமே உன் மனைவி போல பேசினேன் என்றா சொல்ல முடியும்….

கொஞ்சம் வழிந்தவளாய்…

”அது எனக்கும் கீர்த்திக்கும் மட்டும்” என்று சொல்ல…..

“என்ன சொல்லி வச்சாளோ…. இப்படி இருக்காளே” என்றிருந்தது அவனுக்கு

கீர்த்தி நின்ற இடத்தில் காரை நிறுத்தினான்….… கவி இறங்குவதற்காக…..

அவனைப் பார்த்தவளுக்கு அழுகை பொங்கியது அதை அடக்கியபடி நின்றாள்…. கண்களில் கண்ணீர் குளம் கட்டியிருந்தது… எப்போது அணை உடையும் என்று காத்திருந்தன கண்ணீர் துளிகள்..

“என்னாச்சு இவளுக்கு….ஏன் இப்படி நிற்கிறா….”

பாலா மட்டும் அப்போது காரை விட்டு இறங்கியிருந்தால் அவனோடு ஒன்றியிருந்திருப்பாளோ…. என்னவோ… அவன் நேரம் இன்னும் சரி ஆகவில்லை போல அவன் இறங்க வில்லை….

ஆனால்….. இறங்கிய கவியைப் பார்த்தவள்….. ஒரு கணம் அதிர்ந்தாள்….. கண்ணில் இருந்து கண்ணிர் துளிகள் சட்டென்று கரை தாண்டியது ஆனந்தத்தில்… மதுவை எதிர்பார்த்து.. துக்கத்தில் துவண்டிருந்த மனம்…கவியை பார்த்து ஒரு நிமிடம் சந்தோசத்தில் அதிர…. இப்போது கண்கள் கண்ணீரை நிறுத்தி…. சந்தோச அலையை பரவ விட்டன.

கன்னத்தில் வழிந்திருந்த கண்ணீரை…. வேக வேகமாக சந்தோசமாக துடைத்தவள்….

“கவி நீயா…. ” என்ற துள்ளிய படி ஓடி வந்து கட்டிக் கொண்டாள்….

“லூசாடி நீ…… இப்டிதான் பேசுவியா நீ…” என்று முறைக்க…..

தன்னைப் பார்த்ததும் கீர்த்திக்கு வந்த எல்லையற்ற சந்தோசத்தை பார்த்த கவிக்கு அவள் மேல் இருந்த கோபம் எல்லாம் எங்கோ காணாமல் போயிற்று…. அவளுக்கும் உற்சாகம் பிறக்க…. கோபம் எல்லாம் மறந்து தோழியை அணைத்தாள்…

பாலாவிற்கோ

”உள்ளே நுழையும் போது நின்ற கீர்த்தியா இது…. வரும்போது இருந்த முகமும்…. இப்போது இருக்கும் முகமும் ஒன்றா…… எப்படி மாறி விட்டாள்….. திருமணத்திற்கு பின் இத்தனை சந்தோசமாக அவளை பார்ப்பது இதுவே முதல் முறை…. அதை தன் கண்களில் தவறாமல் நிரப்பியபடி” காரை நிறுத்தச் சென்று விட்டான்

கவி…கீர்த்தியிடம்

”உன்கிட்டெல்லாம்….பேசவே கூடாது……போடி….என்ன மறந்துட்டேல்ல……” என கொஞ்சம் வருத்தத்துடனும் பேச….

கீர்த்தி….

“சாரிடி …என் கவிக் குட்டில…என்னப் பார்த்தா பாவமா இல்லை….“ என்று கொஞ்சியவள்

“நான் பண்ணினது… தப்புதான்…. சரினு சொல்லல….ஏன்னு சொல்றேன்…” என்று மெல்லிய குரலில் வருத்தமுடன்….

“சோ..தெரிஞ்சே பண்ணி இருக்க….” என்றவளிடம் தலையை மட்டும் ஆட்டினாள்….

கவிக்கு இப்போது கோபம் அதிகமாக வரத் தொடங்கியது… இருந்தாலும் அடக்கியவள்..

தூரத்தில் பாலா அவர்களை நோக்கி வருவது தெரிய…

“ஆனாலும்…. நீ பாலாக்கு மேரேஜ் ஆனதக் கூட சொல்லலேல….. அதுக்கே உன்ன போட்டுத் தள்ளனும்… அது தெரியாம வழக்கம் போல அவர சைட் வேற அடிச்சுட்டேன்…. எல்லாம் உன்னாலதான்…. பாவி… ” என்று அடிக்க

கீர்த்தி..

“அப்போ நா பேசாதது, கவலை இல்லை…. இதுதான் உனக்கு கோபமா… அதான் போன்ல அப்படி பேசுனியா…. நா பயந்தே போய்ட்டேன்…. “ என்று கூற….

“பயந்துட்டியா…. ஆமா.. நான் கூட கேக்கனும்னு நெனச்சேன்.. மதுன்னு சொன்ன உடனே ஏன் பேயடிச்ச மாதிரி போன வச்சுட்ட… வந்து பார்த்த அந்த கோலத்திலதான் நிக்கிற… அவ பேயா என்ன….. ஆனா…. நம்ம ஆளு…. என்ற போது

முறைத்த கீர்த்தியைப் பார்த்து

“சாரி சாரி….. உனக்கு கோபம் வரும்….என் ஆளு… ” என்றபடி தொடர

இப்போதும் முறைத்த கீர்த்தியைப் பார்த்து

”ச்சேய் இப்போதான் அவர் வேற ஒருத்தி ஆளோ… சொல்ல விடு…. ஆனா…பாலாக்கு மதுனா…ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப இஷ்டம் போல…….” என்றவள் இன்னும் தன் தோழி கோபத்தில் இருப்பதை உணர்ந்து….

“என்னாச்சு இவளுக்கு….என்ன சொன்னாலும் முறைக்கிறா…” என்று தோழியை உற்று பார்த்தவளின் கண்களில் அவளது வித்தியாசங்கள் உறுத்த… கழுத்தில் கிடந்த கனமான சங்கிலியில் அதிர்ந்து….. கால்களைப் பார்க்க..அதில் மெட்டி தெரிந்தது….

அவளுக்கு திருமணம் ஆகிவிட்டதா.. தன்னிடம் சொல்லக் கூட நினைக்க வில்லையே என நினைக்க போன கோவம் எல்லாம் திரும்பி வந்தது … கோபத்தில் கத்த ஆரம்பிக்கும் போது பாலாவும் வந்து விட்டான்…

அவன் வந்ததைப் பார்த்தவள்…. அவளிடம் இருந்த கோபத்தில்… அவளிடம் பேசாமல்

“சார்… நான் கிளம்புறேன்,….. இதுக்கு மேல இங்கிருந்தா… இவ என் ஃப்ரெண்டுனு சொன்னா…. எனக்குதான் அசிங்கம்…”. என்று கிளம்ப…

”என்னாச்சு கவி….ஏன்… கீர்த்தி மேல இவ்ளோ கோபம்….” என நிலைமை தெரியாமல் பாலா கேட்க

அவளின் வித்தியாசங்களை கவி உணர்ந்ததை கீர்த்தியும் உணர்ந்து.. கவியின் கோபத்தின் டென்சனான கீர்த்தி இப்போது பாலாவின் மேல் பாய்ந்தாள்…..

அதில் அவளையுமறியாமல் குரலும் உயர்ந்தது…

“என் கல்யாணத்த அவள்ட்ட ஏன் சொல்லலனு கேக்குறா பாலா சார்…. உங்களுக்கு தெரியுமே ஏன் நான் சொல்லவில்லை என்று…… சொல்லுங்க கேக்குராள்ள எனச் சொல்ல…

அதிர்ந்தாள் கவி…

“என்ன பாலாகிட்ட இப்படி பேசுறா இவள்…. என்ன ஆச்சு இவளுக்கு” என்று யோசித்தவள்…பாலாவை பார்க்க…

அவனோ….

“கீது….என்ன இது… இங்க நின்னுட்டு இந்த ஆர்ப்பாட்டம் பண்ற….வா” என்று கையைப் பிடிக்க…

கவிக்கு தலை சுற்றியது… என்ன நடக்குது இங்க….. இவ ஏன் இப்டி கத்துறா… பாலா வேற கீதுனு கூப்பிடறார்….. அவ கையலாம் பிடிக்கிறார்… என்னவோ நடந்திருக்கிறது தன் தோழி வாழ்வில் என்பதை உணர்ந்தவள்… தன் கோபத்தை எல்லாம் தூரப் போட்டு தோழியின் அருகில் கனிவுடன் செல்ல

அவளின் கனிவில் கீர்த்தி அவள் மேல் சாய்ந்தாள் அழுதபடி ……. யாரிடமும் திறக்காத தன் எண்ணங்களை… பாலாவின் மேல் இருந்த கோபத்தை… இன்று இருக்கும் நிலைமையை….. அவளிடம் கொட்ட வேண்டும் போல் இருந்தது… விளைவு பாலாவைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற ஆரம்பித்தாள்….

“கவி.. நீ.. நீ போன பின்னால்… என்னோட வாழ்கைல என்னவெல்லாமோ நடந்து விட்டது… இவன்….. “ என்று ஆரம்பிக்க….

மனைவி புலம்ப ஆரம்பித்தால்… என்ன நடக்கும் என்று தெரிந்த்தால்…. அதை உணர்ந்தவன்…. அங்கிருந்த ஆட்டோ ஒன்றில் இருவரையும் ஏற்றி கீர்த்தி வீட்டிற்கு அனுப்பினான்…

கவிக்கு ஒன்றுமே புரியவில்லை…. தோழியின் புலம்பலும் அழுகையும் கவியை தன்னிலையை மறக்கடிக்க…பாலா ஆட்டோவில் ஏறச் சொன்னவுடன் ஏறி விட்டாள்…

கீர்த்தி வீட்டில் கீர்த்தி அம்மா இருப்பார்கள்…. அவர்களைப் பார்த்தால் இவள் சமாதானமாவாள்… எனவே அங்கு செல்வதுதான் சரி என்று ஏறியும் விட்டாள்….

கீர்த்தி சற்று தெளிவில்தான் இருந்தாள்…. அதனால் அமைதியாகவே வந்தாள்…. ஆட்டோவில் மௌனமே ஆட்சி செய்ய… தோழிகள் இருவரும் கீர்த்தி வீட்டிற்கு வந்தனர்…… அவள் வீட்டின் கதவு பூட்டியிருப்பதை பார்த்த கவி…

“ஆன்ட்டி எங்க போயிருப்பாங்க…” என்ற யோசனையில் இருக்க…

கீர்த்தி தன் கைப்பையில் இருந்து சாவியை எடுக்க அதிர்ந்தாள்….கவி…

அவளிடம் சாவியை நீட்டிய கீர்த்தியின் கண்களில்…..வெறுமை குடி கொண்டிருக்க….

கவிக்கோ… கதவைத் திறக்கவே நடுங்கியது அவள் கைகள்…….

அவள் நினைத்ததை எல்லாம்…. கேட்க முடியாமல்…

“ஆன்ட்டி எங்க …… வெளில போயிருக்காங்களா…கீர்த்தி…..” என்று தடுமாறினாள்….

பதிலில்லை கீர்த்தியிடம்

திறந்தாள் கவி….. அதிர்ந்தாள்…. நேராக மாட்டியிருந்த புகைப்படத்தில்…..அவளால் நம்ப முடியவில்லை……கீர்த்தியை பார்த்தவளுக்கு அழுகை ஆறாகப் பெருகியது……

அவளுக்கே தாங்க முடியாமால் கதற… கீர்த்தியோ உணர்வுகளைத் துடைத்தவளாய்…. தன் தாய் தந்தையை பார்த்தபடி….

”என்ன கேட்ட கவி… வெளில போயிருக்காங்கன்னா….. இல்லடி… இந்த உலகத்த விட்டே…. என்னை விட்டே…. ஜோடியா…..போய்ட்டாங்க….. என்ன மறந்துட்டு…… ஏன் கவி….. எனக்கு ஒரே சந்தேகம் தான்…. என்ன விட்டுட்டு போக அவங்களுக்கு எப்படி மனசு வந்துச்சுனே தெரியல…… என்ன அவசரமா போய்டாங்க…. ஆக்சிடென்ட்னு சொன்னாங்க….. போய் பார்த்தா…… அப்பா …என் அப்பா….. கீர்த்தி …கீர்த்திமா…கீர்த்திடனு…வாய் ஓயாமா பேசுவாரு… ஒரு வார்த்தை கூட சொல்லாம…. போய்ட்டார்… என்றவள் கண்ணில் இப்போது நீர் வழிய சுவரில் சாய்ந்தாள்….”

அவளுக்கு ஆறுதல் சொல்லக் கூட முடியாமல்… திணறினாள்…. கவி…. அவளிடம் பேச முடியாமல்… தடுமாறினாள்… அவளாலே முடியவில்லை…. கீர்த்தியை எங்கு சமாதானப்படுத்துவது…. இருந்தும் அவள் அழுவதை தாங்காமல் அவளை ஆறுதல் படுத்த… கீர்த்தியின் புறம் திரும்பியவள் இன்னும் அதிர்ந்தாள்… அங்கு பாலா – கீர்த்தி புகைப்படம் இருந்ததைப் பார்த்து….. அவளால் முடியவில்லை…. அவளுக்கே பயமாய் இருந்தது….. என்னவெல்லாம் நடந்திருக்கிறது …. அவள் தங்கள் திருமண புகைப்படத்தைப் பார்த்து அதிர்ந்ததை கீர்த்தியும் பார்த்தாள்…..

ஆனாலும் தொடர்ந்தாள் கீர்த்தி…. அவளைப் பார்த்துக் கொண்டே

“உனக்கு பாலா சார்னா… ரொம்ப பிடிக்கும்ல கவி….. உனக்கு மட்டும் இல்லை…. என் அம்மாக்கு கூட….. அதான் என்னை விட்டுட்டு போறத பற்றிக் கூட கவலைப் படாம… அவர்கிட்ட நீங்க என் பொண்ண பார்த்துக்குவீங்கன்னு நான் சந்தோசமா போறேன்னு…. அவங்க புருசனோட போய்ட்டாங்க…… ரெண்டு பேரும் என்னப் பத்தி யோசிக்காம….. அவங்களே என்ன நினைக்காம போய்ட்டாங்க…. நான் எதுக்காக அழணும்…. அழ மாட்டேன்…. தெரியுமா” என்றவள் சொன்னதற்கு எதிராக இன்னும் கதற….

கவிக்கு தாளவில்லை அதற்குமேல்…

“கீர்த்தி என்னப் பாரு… என்ன நடந்தது….பாலாவ ஏன் நீ மேரேஜ் பண்ணினாய்…. அவர் மதுவத்தானே லவ் பண்ணினார்னு சொன்ன…. அது சும்மாவா” என்று கேட்க…..

இல்லை என்று மறுத்தவாறு சொன்னவள்….

”அவர் மதுவ லவ் பண்ணதினாலதான் என்ன கல்யாணம் பண்ணினார்… “ என்று சொல்ல… கவிக்கு ஒன்றும் விளங்க வில்லை…..

“என்னடி சொல்ற…. எனக்கு ஒண்ணுமே புரியலையே… உன்ன இந்த நிலைமையில பார்ப்பேனு சத்தியமா நான் நினைக்கவே இல்லையே… ஆண்டி..அங்கிள் இல்லாம நீ எப்டிடி… எனக்கே வலிக்குது கீர்த்தி… அவங்கன்னா உயிர விடுவியேடி… அய்யோ இது தெரியாம நான் கோபமா வேற இருந்தேனே. சொல்லுடி என்னடி நடந்தது…. வினோத் கூட உன்ன விட்டுட்டாரா…. பாலாவ எப்படி கீர்த்தி நீ… அவர் இன்னொரு பொண்ண லவ் பண்றாருன்னு தெரியும்ல … தெரிந்தும் நீ ஏன் இப்படி பண்ணின” என்று அவளும் குலுங்கி அழ…..

கீர்த்தி கண்களை வழிந்த கண்ணிரைக் கூட துடைக்க பிடிக்காமல்…. கசந்த வார்த்தைகளாய் பேசலானாள்…

”எல்லாம் என்ன இப்படி அழ விட்டு போயிருக்காங்கள்ள அவங்களுக்காகத் தான்…. ” என்றபடி தன் வாழ்வில் நடந்ததை…..தன் தந்தையின் நெருக்கடி.. அதை பாலாவிடம் சொல்லிய சூழ்னிலை… அதை அவன் தன் சுயனலத்திற்கு பயன்படுத்திய வேதனை… தன் பெற்றோருக்காக தன் வாழ்வை பாலாவிடம் பணயம் வைத்த கொடுமையை….. அது கடைசி வரைத் தெரியாமல் அல்ப ஆயுளில் போன தன் தாய்..தந்தை இறப்பை….. அதில் பரிதாபப்பட்டு தன்மேல் தன் கணவன் கொண்ட காதலை….. மொத்தமும் சொன்னாள்… அவன் மேல் தனக்கு வந்த காதலைத் தவிர…..

பாலாவா…இப்படியா… ஒரு ஹீரோ போல அவனைத் தான் நினைக்க….அவனோ ஒரு சின்னப் பெண்ணின் கஷ்ட கால சூழ்னிலையினை தனக்கு சாதகமாக்கி அவள் வாழ்வை சின்னா பின்னமாக்கி விட்டு….இப்போது காதல் என்ற போர்வையில் அவளை மிரட்டிக் கொண்டிருக்கிறானா…. பாலவின் மேல் அவள் வைத்திருந்த அத்தனை நல்ல அபிப்ரயமும் மணல் மேடு சரிவதுபோல் மண்ணோடு மண்ணாக சரிந்தது.

”ராஸ்கல்..” என்றாள்… கடும் கோபத்தில்….

இப்போதுதான் கீர்த்தி சுயனிலைக்கு வந்தாள்… தன்னவனை….. அதுவும் அவனைப் பிடிக்கும்…ரசிக்கும்… ஒரு பெண்ணின் வாயில் இருந்து வந்த வார்த்தைகளில் தெளிந்தாள்…

”கவி என்ன சொல்ற” என்று கோபமாகப் பார்க்க..

அதையெல்லாம்…. கவனிக்கும் நிலையில் கவி இல்லை…. சூடான மனநிலையில் இருந்தாள்… அவளுக்கு இருந்த மனநிலையில் … அவளைப் பொறுத்தவரை பாலாவை ஒரு காமுகனாக நினைக்கத் தோன்றியது….

கீர்த்திக்கு இஷ்டமில்லாத வாழ்வை அவளிடம் திணித்து விட்டு…. இப்போது அவளைத் தனக்கு இணங்கி நடக்க டார்ச்சர் வேறு செய்கிறானா…. கேட்க ஆளில்லாமல் போய் விட்டாள் என்ற நினைப்பா……என்ற எண்ணங்களில் இருந்தவள்…..

’’கீர்த்தி… நீ… கவலைப் படாத… உனக்கு கேட்க ஆளில்லை என்று நினைத்தானா…. அவன்”

அவள் பாலாவை கண்டபடி ஒருமையில் எல்லாம் பேசுவதை கேட்க முடியவில்லை….கீர்த்திக்கு….

”கவி…” என்றவளைத் தவிர்த்து…. அவள் ஆத்திரத்தில் பேசிக் கொண்டிருந்தாள்

“எல்லாம் பண்ணிட்டு… இப்போ உன்ன தினம் தினம் டார்ச்ச்சர் வேறு செய்கிறானா… அவனோட வாழச் சொல்லி” எனும்போதே

“டார்ச்சாரா… அய்யோ இவ ஏன் இப்படிலாம் பேசுறா…… பேசாம ஒண்ணும் சொல்லாம இருந்திருக்காலாமோ “ என்று நினைத்தவள்…. கவி சொன்ன போலிஸ் என்ற வார்த்தையில் சுத்தமாகத் தெளிந்தாள்…

“இவன் மாதிரி ஆளை எல்லாம்…போலிஸிடம் மாட்டி..விட்டு முட்டிக்கு முட்டி தட்டி.. கம்பி எண்ண வைக்கணும்…. பணம் இருந்தா என்ன வேணும்னாலும் பண்ணுவாங்களா….” என்று பாலாவை ஒரு தேர்ட் ரேட் போல் பேசிக் கொண்டே போக

”ஷட் அப் கவி… விட்டா ஓவரா பேசிட்டே போற… அவரப் பத்தி என்ன தெரியும்னு நீ இப்படிலாம் பேசுற” என்றவளைப் பார்த்து கவி விழிக்க ஆரம்பித்தாள்…

“நாந்தான் அவர்கிட்ட போய் நின்னேன்….. அவர் ஒண்ணும் என்ன கம்பெல் பண்ணி…. கல்யாணம் பண்ணலை… அவரும் என்னதான் பண்ணுவாரு… சொல்லு….. அவர் அப்பாவுக்காக வேற வழி இல்லாம செஞ்சார்… அது கூட குற்ற உணர்ச்சியோடத்தான் இத்தனையும் பண்ணினார்….. அது தெரியாம பேசாத நீ…. என்ன பண்றது எல்லாம் விதி…. அதுக்காக நீ கண்டபடி பேசுற…. அவன் இவன்னு….. டார்ச்சர் பண்றான்னு… நான் சொன்னேனா….. டார்ச்சர் பண்றானாம்… இவ பெருசா வந்து பார்த்த மாதிரி…. லாக்கப்ல தள்ளி முட்டிக்கு முட்டி தள்ளச் சொல்வியா …என்ன சொல்லி… தள்ளுவ…. அதுக்கு நான் விடுவேனா… என்று மூக்கு விடைக்க அவளிடமே சண்டைக்கு வந்த கீர்த்தியை… தன் தோழியை.. புரிந்தும்..புரியாத மாதிரியாக … நம்பியும்… நம்பாத மாதிரியாகப் பார்த்தாள்…. கவி….

கீர்த்தியும் பாலாவை விரும்புகிறாளோ…..தான் அவனைப் பற்றி சொல்வதை அவளால் தாங்க முடியவில்லை என்றால் என்ன அர்த்தம்… தன் கணவனைக் காதலிக்கும் காரணத்தினால் மட்டுமே…. அவனைப் பற்றி தான் சொல்வதைத் கேட்க முடியாமல் அவளுக்கு ஆதரவாக பேசும் தன்னிடமே சண்டை போடுகிறாள்….என்று நினைத்தவள்… இதை அவள் உணர்ந்திருப்பாளா என்ற சந்தேகம் வேறு வந்தது…..

”எப்படி இருந்தவள்… இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டு விட்டானே…” என்று இன்னும் பாலாவின் மேல் கோபம் வருவது போல் இருந்தது அவளுக்கு…..

”கீர்த்தி….” என்றாள் மெதுவாக…

”ப்ளீஸ் கவி… பாலாவப் பத்தி தப்பா பேசாத….என்னால தாங்க முடிய வில்லை….“ என்று தன் தோழியின் முகம் சுருங்கியதைப் பார்க்கப் பிடிக்காமல் சொல்ல…

”’கீர்த்தி என்னப் பாரு… கண்ணைத் துடை. நீ. நீ பாலாவை விரும்புகிறாயா……. என்கிட்ட மறைக்காமல் சொல்லுமா….” என்று அவள் கண்களைப் பார்த்து கேட்க……

தன் காதலை சொல்லாத போதிலும்.. தன் தோழி தன் மனதினை படித்து விட்டதை உணர்ந்து …. அவள் கண்களைப் பார்க்க முடியாமல்…. அவள் சொன்ன வார்த்தையின் உணமையில் தலை குனிந்தவள்…. கண்ணீரை மட்டுமே கவிக்கு பதிலாகத் தந்தாள்…. அவள் நினைத்துக் கேட்ட வார்த்தை உண்மை என்று….

கவி…..கீர்த்தியின் இந்த நிலை தாங்காமல் தன்னுடன் சாய்த்துக் கொள்ள அவள் மடி மீது சாய்ந்தாள்…அவளுக்கும் ஒரு ஆறுதல் தேவையாக இருந்தது….அது கவியின் மடியில் கிடைக்க..இருவரும் ஒன்றும் பேசாமல் அப்படியே இருந்தனர்….

அந்த மௌனத்தை கூட கீர்த்திதான் கலைத்தாள்..

“கவி….” - என்ற கீர்த்தியிடம்

“ம்ம்” என்று மட்டும் சொன்னாள் கவி

“என்னப் பார்த்தா உனக்கு சிரிப்பா வருதுல்ல…

”ஆமா …. நீ வந்ததுல இருந்து எனக்கு காமெடியா சொல்லி கிச்சு கிச்சுக் காட்டற… எனக்கு சிரிப்பு வர வேண்டியதுதான்” என்று கீர்த்தியை பார்த்து முறைக்க

”இல்லப்பா… அன்னைக்கு அவன் வேற ஒருத்திய மனசுல வச்சுருக்கவன்… சும்மா கூட நினைக்க கூடாதுன்னு சொன்னவ…. இன்னைக்கு அவனையே விரும்பறேன்னு சொல்றாளேன்னுதான்” …… எழுந்து அமர்ந்தாள் கீர்த்தி….

புகைப்படத்தில் இருந்த பாலாவைப் பார்த்தபடி பேசினாள்….

“எப்டிடி எனக்கு இவன் மேல காதல் வந்தது….. என்னோட சூழ்னிலையினை தந்திரமாகப் தன் வாழ்க்கையில் பயன்படுத்தியவன்…. இன்னொரு பெண்ணை நேசித்தவன்….. நான் எப்படி இவன் மேல் பைத்தியம் ஆனேன்… எனக்கே தெரிய வில்லை….. என் பாலா தானே அவர் ….. கவி….”. என்று கவியைப் பார்த்து பொம்மைக்கு ஏங்கும் குழந்தை போல கேட்டாள்….

கவிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருக்க.. கீர்த்தியே தொடர்ந்தாள்..

ஆனால்… மது வந்து இதே கேள்விய கேட்டால் நான் என்ன சொல்வேன் கவி…….. பாவம் பாலா.. நான் தான் அவர டார்ச்சர் பண்ணிட்டு இருக்கேன் தெரியுமா….. எனக்கு பாலாவை ரொம்ம்ம்ப பிடிக்கும்….ஆனா….. என்னால் அவரோட செர்ந்து வாழ முடியல்லையே …. என்னால முடியல….. அவர் என்னை நெருங்கும் போதெல்லாம் மதுவோட ஞாபகம்தான் வருது.. அந்தப் பொண்ணுக்கு துரோகம் பண்ற மாதிரிதான் தோணுது கவி….. நான் அவர்கிட்ட மாட்டல.. என்கிட்ட மாட்டிகிட்டு அவர்தான் ரொம்ப கஷ்டப்படுகிறார்…..

என்றபடி… எழுந்து அந்த புகைப்படத்தை எடுத்து தன் கையால் அவனது முகத்தை தடவியவள்….. அதில் இருந்த அவன் முகத்தை ரசித்தவள்….

“கவி….உன்ன சொல்வேன்ல….சைட் அடிக்காதேன்னு…..ஆனா நான் என் ஆளப் பார்த்து செமையா சைட் அடிப்பேன் தெரியுமா…. இப்போதான் அடிக்க முடிய வில்லை… ” என்றவள்….. சட்டென்று நிமிர்ந்து….

“இனிமேல நீ பார்த்த அவர… அவ்ளோதான்….. நீ வேற ஆளப் பார்த்துக்கோ….. எனக்கு மட்டும் தான் அவர்…. ப்ச்ச்ச்…. இல்ல அவர் மதுவோட பாலா….. அவருக்கு மதுவ எவ்ளோ பிடிக்கும்னு தெரியுமா…. ஏன் கவி பாலா வாழ்க்கைல மதுவுக்கு முன்னால் நான் வரல… அப்போ அவர் என் பாலாவாத்தனே இருந்திருப்பார்….” என ஆரம்பித்த இடத்திற்கே வர

அவள் புலம்பல்களில் கவிதான் அடி வாங்கினாள்… எப்படி இருந்த கீர்த்தி இந்த அளவிற்கு மாறி இருக்கிறாள்… ஓரளவிற்கு திடமாக முடிவெடுப்பவள்… அவளே இந்த அளவிற்கு குழம்பி இருக்கிறாள்..என்றால்… அதற்கு …தன் திருமண வாழ்க்கையின் நிச்சயமின்மை பற்றிய பயமே காரணம் என்று தோன்றியது..

மது என்ற ஒரு வார்த்தையிலேயே கலங்கி நின்றிருந்த தன் தோழியின் முகம் கண் முன் தோன்றி கவியை கலங்கடிக்க…

கீர்த்தி வாழ்க்கையை பற்றிய கவலையில் ஆழ்ந்தாள் கவி…………

பாலாவின் மனநிலையோ அங்கு அலுவலகத்தில் இருப்பு கொள்ளவில்லை.. மனம் தன் மனைவியைச் சுற்றியே வர… மதியத்திற்குமேல் கிளம்பி விட்டான்…

------------------------

மணி இரண்டு ஆகி இருந்தது…… கீர்த்தி பேசி பேசி….ஒரு கட்டத்தில் சோர்விலோ இல்லை…தன் மன பாரத்தை எல்லாம் கவியிடம் இறக்கி வைத்தாலோ தூங்கி விட்டாள் ….. கவிக்கு தூக்கம் எல்லாம் வரவில்லை….. காலையில் சாப்பிடாமல் வேறு வந்தது….. பசி வயிற்றைக் கிள்ள உட்கார்ந்திருந்தாள்…. .கீர்த்தி பற்றிதான் அவள் எண்ணமெல்லாம் சுற்றி வந்தது…

அழைப்பு மணி அழைக்க கதவைத் திறந்தாள்….. பாலாதான் ….. கையில் சாப்பாடு பார்சலோடு வந்திருந்தான்…. ஒன்றும் சொல்லாமல்… வழி விட்டாள்… அவளது செய்கையிலேயே அவளுக்கு ’எல்லாம்’ தெரிந்து விட்டது என்பதை உணர்ந்தான் பாலா….அவன் ’எல்லாம்’ என்று நினைத்தது…… எல்லோருக்கும் தெரிந்தது போல் பாலா-கீர்த்தி காதல்…கல்யாணம் என்ற வரையில் தான்….. கீர்த்தி அழுதிருப்பாள்… என்றால் அது பெற்றோரின் மரணத்தை நினைத்து கவியிடம் சொல்லி அழுதிருப்பாள்…. அந்த வகையில்தான் அதிகப்பட்சமாக நினைத்தான்….. வேறொன்றும் தோன்ற வில்லை… வினோத்திடமே சொல்லாதவள்…. கவியிடமா சொல்லி இருப்பாள் என்றே நினைத்தான் பாலா

உள்ளே நுழைந்தவன்…..கீர்த்தியை பார்வையால் தேட…..

“உள்ள படுத்துருக்கா…” என்ற கவியின் வார்த்தையில்

தங்கள் அறையினுள் அவளைப் பார்க்கச் சென்றான்….. அவர்களது புகைப்படம் கட்டிலில் கிடக்க….. ’இது ஏன் இங்க இருக்கு….’ என்றபடி அதை எடுத்தவன் வெளியே வந்தான்….

கவியிடம்

”ரொம்ப அழுதாளா என்ன…..” என்று கேட்க….

தலையை மட்டும் ஆட்டினாள் கவி….

“ப்ச்ச்…. உங்களுக்கே தெரியும் அவ அப்பா.. அம்மான்னா அவளுக்கு எவ்வளவு இஷ்டம் என்று சொல்ல ஆரம்பிக்க

கவியோ நேரடித் தாக்குதலில் இறங்கினாள்

“ஏன் பாலா சார் இப்படி பண்ணுனீங்க….. நீங்க இப்படிலாம் செய்வீங்கன்னு நான் எதிர் பார்க்க வில்லை?” என்று குரல் கம்மக் கேட்டவளை

சட்டென்று நிமிர்ந்து பார்த்தான் பாலா…. அடிபட்ட புலியின் வலியின் வேதனையுடன்… சத்தியமாக அவன் எதிர்பார்க்க வில்லை… கீர்த்தி இவளிடம் எல்லாம் சொல்லி இருப்பாள் என்று

“என்..என்ன கவி “ என்று தடுமாற….

”எனக்கு எல்லாம் தெரியும் சார்….. சொல்லிட்டா கீர்த்தி….. அவ என்ன பாவம் பண்ணினாள்….. அப்பா.. அம்மா மேல் பாசம் வைத்த ஒரே காரணத்தினால் மட்டுமே இன்று இந்த நிலைமையில் இருக்கிறாள்….. நீங்க நெனச்சுருந்தா அத மாத்திருக்கலாம்தானே….சார்…..அவளுக்குத் தேவையான பணத்தினை உங்களால் கொடுத்திருக்க முடியும் தானே சார்…. அவளோட நிலைமைய பயன் படுத்திக்கிட்டீங்க….. எப்டி முடிந்தது இது உங்களால….. உங்களுக்கு கீழ எத்தனையோ பொண்ணுங்க வேலை பார்க்கிறோம்….. ஏதோ ஒரு நம்பிக்கைல எங்க அப்பா அம்மாலாம் அனுப்பறாங்க…. ஒரு முதலாளியா எங்கள காப்பாத்தறத விட்டுட்டு….. நீங்க கூட எங்க சூழ்னிலைய யூஸ் பன்ற ஒரு அதிகார வர்க்கமாத்தான் இருந்துருக்கீங்க…..உங்க கிட்ட இத எதிர்பார்க்கவில்லை சார்….

அவ்வளவா நான் பழகுனதில்லை உங்க கூட…. ஆனாலும் உங்க குணம் எனக்கு பிடிக்கும்…..எவ்வளவு பெருமையா சொல்லிட்டு இருப்பேன் தெரியுமா… கீர்த்தி கூட கிண்டல் பண்ணுவா…. பாலா சார்க்கு ஏன் இவ்ளோ சப்போர்ட் பண்ணுறேன்னு…. நான் சொல்வேன் உங்க பார்வைல இருக்கிற கண்ணியம் ஒன்று போது உங்கள சப்போர்ட் பண்ண ஆனா…இன்னைக்கு அத்தனையும் கீர்த்தி சொன்ன வார்த்தைகளில் போய் விட்டது.... உங்க காதல காப்பாற்ற ஒரு அப்பாவி பொண்ண பலிகடா ஆக்கும் அளவிற்கு மனசாட்சி இல்லாத ஆளா நீங்க… உங்க பார்வைல கண்ணியம் இருந்து என்ன பிரயோசனம்… யார நம்புறதுன்னே தெரியல….. நல்லவர்னு நம்பித்தானே உங்ககிட்ட சொல்லி மோசம் போனா கீர்த்தி…. ….சத்தியமா…. எனக்கு கோபம் ஆரல எனக்கு…. ஆனா அந்த லூசு உங்க மேல பைத்தியமாயிருக்கா….அதான் இவ்ளோ பொறுமையா பேசுரேன் நா…. நீங்க மட்டும் அந்த மது….

என்றவளை இடையில் நிறுத்தினான் பாலா….

”நீங்க… என்னைப் பற்றி… கீர்த்தி பற்றி எல்லாம் பேசலாம்…. மதுவப் பற்றி பேசாதீங்க… எனக்கும் மதுவுக்குமான உறவைப் பற்றி உங்களிடம் பேச நான் விரும்ப வில்லை…. அது எனக்கும் கீர்த்திக்கும் உள்ள பிரச்சனை… ” என்று கவி மதுவைப் பற்றி பேச வருவதை விரும்பாமல் தடை செய்தான்…

தான் செய்து வைத்திருக்கிற காரியத்தால் மதுவை யாரும் தப்பாக பேசுவதை அவனால் அனுமதிக்க முடியவில்லை….

கவியும் அமைதி ஆகிவிட்டாள்…. …அவன் மதுவை விட்டுக் கொடுக்காமல் பேசியது வேறு அவளுக்கு மனதின் ஒரத்தில் வலிக்க அவன் பேசுவதை வேதனையோடு கேட்க ஆரம்பித்தாள்

”ஆமாம்…. நா …கீர்த்தியோட நிலைமைய யூஸ் பண்ணிக் கொண்டேன்….. அதற்காக இப்போது வருத்தப்படவில்லை… ஒரு காலத்தில் வருத்தப்பட்டேன்….. கீர்த்திக்கு துரோகம் செய்கிறோமோ என்று….. ஆனால் இப்போதெல்லாம் அதற்காக … சந்தோசம்தான் படுகிறேன்…. என் காதல் உட்பட…. மதுமேல் எனக்கு வந்த காதல்… முதல்… கீர்த்தியின் பிரச்சனை வரை…..கீர்த்தி எனக்கு கிடைப்பதற்கான முழு முதற் அடிப்படைக் காரணங்கள் எனும் போது நான் ஏன் வருத்தப் பட வேண்டும்….. இவை எல்லாம் எங்கள் இருவரின் வாழ்வில் வராவிட்டால்… நான் ஒரு மூலையில்… அவ ஒரு மூலையில் என்று வேறு யாருடனாவது இணைந்திருப்போம்…. என் கீர்த்தி எனக்கு கிடைக்கவே மது மூலம் எனக்கு காதலை உணர வைத்து… அதன் காரணமாக கீர்த்தியை என் வாழ்வில் இணைக்க முடிந்தது… இதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வலிதான்…. ஆனாலும் … வலிகள் மட்டுமே இல்லை வாழ்க்கை… அதில் சுகங்களும் இருக்கும்….அதைத் தேடிப் போனால் வலியின் சுவடுகள் மெல்ல மெல்ல மறையும்… கீர்த்தி அப்பா..அம்மா இறந்ததிலதான் தான் பரிதாபப்பட்டு அவளை ஏத்துக்கிட்டேனு நினைக்கலாம்… நீங்க என்ன அங்க அழுதழுது படுத்திருக்காளே என் மனைவி அவகூட அப்படிதான் நினைக்கிறா…. ஆனா…. எனக்கு கீர்த்தி மேல காதல் வந்ததுக்கு அது மட்டும் காரணம் இல்லை…… அவளின் காதலும்….. அவள் எனக்கு உணர்த்திய கணவன் என்ற உரிமையும் மட்டுமே தான்…. என்று நிறுத்தியவன்…

“என் மேல அவளுக்கு இருக்கும் உரிமை…. அவளுக்கு மட்டும் என்று நினைக்கும் வரையில் அவ என்னோட வாழ மாட்டா…. அது எனக்குத் தெரியும்……ஆனா கண்டிப்பா ஒரு நாள் உணர்வாள்…. அந்த நாள் விரைவில் வரும்….. அதனாலதான் என் மேல அவளுக்கு இருக்கும் காதல் எனக்குத் தெரிந்தும் அவளாக என்னிடம் சொல்லும் வரையில் காத்திருக்கிறேன்…என்று முடித்தான் பாலா…

அவன் வார்த்தைகளின் உண்மை….காதல் புரிய கவியும் மௌனமானாள்… ஆனாலும் மதுவை இப்போதும் அவன் விட்டுக் கொடுக்காமல் பேசியதும் அவளுக்கு கொஞ்சம் வருத்தம்தான்… கவியும் பாலாவிடம் அதற்கு மேல் தன் பேச்சை வளர்க்கவில்லை… பாலா கீர்த்தியை பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையும் ஓரளவு வர சமாதானமானாள்…

அதன் பிறகு பாலாவே பேச்சை மாற்றினான்….

”கவி கீர்த்திக்கு உங்கள மாதிரி ஒரு ஃப்ரெண்ட் கிடைக்க அவ கொடுத்து வைத்திருக்க வேண்டும்… அவள் கொஞ்சம் பழையபடி மாற வேண்டும் என்றால் நீங்க அவ கூட இருக்க வேண்டும்… ப்ளீஸ்” என்று கூறி சினேகமாய் புன்னகைத்து… அவளை அழைத்து வந்த தன் காரணத்தையும் சொல்லாமல் சொல்ல.

அவன் மனதில் உள்ளதை தெளிவாகச் சொன்னதால்…. கவிக்கும் அவன் மேல் முழுமையாக என்றில்லாவிட்டாலும்… நம்பிக்கை உண்டாக….

அவள் பாலாவுடன் செர்ந்து வாழ தன்னால் ஆன முயற்சிகளை செய்ய வேண்டும் என்று நினைத்தாள்……

பாலா தான் வாங்கி வந்திருந்த சாப்பாடை அவளைச் சாப்பிடச் சொல்லிவிட்டு மனைவியைத் தேடிச் சென்றான்..

மனைவியின் அருகில் வந்தவன்… அவளையே பார்த்தபடி அமர்ந்துவிட்டான்…. கவியிடம் தன்னைப் பற்றி அவள் சொன்னது அவனுக்கு மனதில் வலிதான் என்றாலும்… தன் மனதில் இருப்பதை எல்லாம் அவளிடமாவது கொட்டியிருக்கிறாளே என்ற வகையில் அவனுக்கு நிம்மதிதான் அளித்தது

பாலா அலுவலகத்தில் ….கீர்த்திக்காக …அவள் வாழ்க்கைக்க்காகவே …. சேர்ந்தாள் கவி……


1,221 views0 comments

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று கொண்டிருந்தனர்……… கீர்த்தி பின்னால் திரும்பி வினோத் மற்றும் கீர்த்திக

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.. கீர்த்திகாவின் வீட்டிலேயே தங்கி தங்கள் மகளைக் கவனித்துக் கொண்டனர்.…………. பாலா

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில் இருந்தாள்………… ”பாலா…… மது…………. உங்க கிட்ட ஒண்ணு கூட கேட்க வில்லையா” “இல்

Comentários


© 2020 by PraveenaNovels
bottom of page