அத்தியாயம் 20.
பாலா…. வீட்டில் தன் திருமணம் கீர்த்தியுடன்…. என்று அறிவித்த போது சந்தோசம் தான் இருவருக்கும். .ஆனால் அருந்ததிக்குதான் நம்ப முடியவில்லை. ஏனென்றால் கீர்த்தி வீட்டைப் பார்த்ததால் வந்த சந்தேகம். தன் மகன் இன்னொரு பெண்ணை விரும்பியிருக்கிறான் என்று கீர்த்திக்கு தெரியும். அது தெரிந்தும் கீர்த்தி சம்மதம் சொல்லி இருக்கிறாள்… எப்படி என்று அவனிடமே கேட்டாள்…
“ஏம்மா என்னை டார்ச்சர் பண்றீங்க…. லவ் பண்ணின பொண்ணுக்காக காத்திருந்தால் ஏண்டா காத்திருக்கிறாய் என்கிறீர்கள்… கல்யாணம் பண்ணிக் கொள்கிறேன் என்றால்… எப்படிடா ஒனக்கு ஒகேனு சொன்னானு கேட்கிறீர்கள்… என்ன என்னப் பார்த்தால் எப்படி தெரியுது என்று மகன் கோபப்பட்ட போது அவளால் அதற்கு மேல் அவனிடம் அழுத்திக் கேட்க முடியவில்லை… சரி கீர்த்தியிடமே கேட்டு விடுவோம்… என்று அவள் நினைத்தாள்…
இப்போதைக்கு அவன் திருமணம் நடக்க வேண்டும் அவ்வளவுதான்.. கீர்த்தி மேலும் அவள் குடும்பம் மேலும் நல்ல அபிப்ராயம் இருந்ததால் அவர்கள் மேல் சிறிதும் சந்தேகம் வர வில்லை.. அது மட்டுமில்லாமல் மிரட்டி கீர்த்தியையோ இல்லை அவனது குடும்பத்தையோ சம்மதம் சொல்ல வைக்கும் அளவுக்கு தன் மகன் தரம் குறைந்தவன் இல்லை!!!. எப்படியோ கீர்த்தி மாதிரி ஒரு பெண் தான் அவள் நினைத்து வைத்திருந்தது…
அவள் சிந்தனையை தடை செய்தது பாலாவின் பேச்சு..
”அம்மா, கீர்த்திக்கு மட்டும்தான் நான் மதுவை விரும்பியது தெரியும்.. அவங்க அப்பா அம்மாக்கு தெரியாது… இப்போதைக்கு தெரிய வேண்டாம்… கீர்த்தி சொல்ல வேண்டாம் என்று சொல்லி விட்டாள்..” என்றவனை ”இது என்ன கதை” என்றபடி பார்த்தாள் அருந்ததி.
”ஆமாம்மா… இப்போ சொன்னால் அவர்கள் சம்மதம் சொல்ல கொஞ்சம் யோசிப்பார்கள்… இந்த நேரத்தில் வேண்டாம்… என்று சொன்னாள் என்று இழுத்தவன்.. அவளது யோசனையில்
“அப்பாக்கு உடனடியா ஆபரேசன் நடக்க வேண்டும்… அதனாலதான்…” என்று எங்கு அடிக்க வேண்டுமோ அங்கு அடித்தான்…
”அது மட்டுமில்லாமல் திருமணம் முடிந்த பிறகு… தானே … சொல்ல வேண்டுமென்ற சூழ்னிலை ஏற்பட்டால் சொல்லி விடுவதாகவும் சொல்லி இருக்கிறாள்… சொல்லப் போனால் அவளுக்கு மதுவைப் பற்றி அவங்க வீட்டில் சொல்ல இஷ்டம் இல்லம்மா… தனக்கு தெரிந்து தானே திருமணம் செய்கிறேன்… எனக்கு தெரியாவிட்டால் தானே பிரச்சனை என்கிறாள்” என்று அருந்ததியின் வார்த்தைகளுக்கு தற்காலிகமாக முற்றுப் புள்ளி வைத்தாள்.
ஜெகநாதன் மகிழ்ச்சிக்கு அளவில்லை. தன் மகனைக் கல்யாணக் கோலத்தில் பார்க்காமல் தனக்கு ஆபரேசன் நடக்கக் கூடாது.. என்ற முடிவில் இருந்தவருக்கு தன் மகனின் முடிவு அமைதி அளித்தது…
அவரின் நெருக்கடியால்தான் ஒரு பெண்ணின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது என்பதை அவரால் உணர முடியவில்லை.. ஆனால் அதை உணர்ந்திருந்த பாலாவின் மனம் அமைதியின்றி தவித்தது.
இத்தனை நாள் இரவும் அவன் மனம் நிம்மதியின்றி மதுவின் நினைவோடு தவித்தது… இப்போதோ குற்ற உணர்ச்சியில் கீர்த்தியின் வேதனையான முகமும்……. அவளின் இக்கட்டான சூழ்னிலையை பயன்படுத்திய தன் சுயநலமும்…. அவனை அலைகழித்தது…
அவள் வாழ்க்கையினை தன்னோடான வாழ்வுக்கு பிறகு எப்படி சீர்படுத்துவது என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்தான் பாலா..தீர்வுதான் கிடைக்கவில்லை…
கீர்த்தியின் மனமோ ஒரு மாதிரியான நிலையில் இருந்தது… அவளுக்கு எதைப் பற்றியும் சிந்திக்கக் கூட முடிய வி்ல்லை.. சிந்திக்க பிடிக்கவும் வில்லை… அவளுக்கு பாலாவின் மேல் பெரிய கோபம் எல்லாம் இல்லை…. அவன் காதல் வாழ . தன் சூழ்நிலையினை பயன்படுத்திக் கொண்டான்… என்ன…. அதற்கு இவள் கொடுக்கும் விலைதான் அதிகம் என்று தோன்றியது…. அவன் மட்டும் இந்த மாதிரி ஒரு இக்கட்டான நிலைமையில் இல்லா விட்டால் கண்டிப்பாக தனக்கு எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவியிருப்பான் என்று நிச்சயமாக நம்பினாள்.. அப்பா அம்மாவுக்கு தன் பண்ணிக்கொண்டிருக்கும் திருவிளையாடல் தெரிய வரும் போது … என்ற கவலைதான் அவளை தற்போது அரித்துக் கொண்டிருந்த்தது… எதுவாக இருந்தாலும் அதை எதிர் நோக்க பழகிக் கொள்ள வேண்டுமென்று… காலத்தின் கைகளில் தன் வாழ்க்கையின் முடிவை விட்டு விட்டாள்…
வினோத் வீட்டில் கீர்த்தியின் காதல் விசயத்தை தெரிவித்த போது… அவர்களாலும் ஒன்றும் சொல்ல முடிய வில்லை. அவர்கள் வளர்த்த பிள்ளை ஆயிற்றே.. அவர்கள் மருமகளாக்கிப் பார்க்க ஆசைப் பட்டார்கள்… இப்போது ராகவ்-மைதிலியோடு தாங்களும் சேர்ந்து இன்னொரு வீட்டிற்கு தாரை வார்த்துக் கொடுக்க வேண்டும் …. எங்கிருந்தாலும் கீர்த்தி சந்தோசமாக இருக்க வேண்டும் என்ற அளவில் அவர்கள் தங்களை ஆறுதல் படுத்திக் கொண்டனர்.
வினோத்தால் அவர்கள் அளவிற்கு உடனே சமாதானம் முடியவில்லை. விசயம் எப்போது அவனுக்கு தெரிவிக்கப்பட்டதோ உடனே கீர்த்தியை அழைத்து விட்டான்…
அவனின் அழைப்பை எடுத்த கீர்த்திக்கு அவனிடம் பேசத் தயக்கம் இல்லை…
எப்போதும் போல் “ சொல்லுடா வினோத்” என்ற கீர்த்தியின் குரலில் அவனுக்கு தான் என்ன பேசுவது என்ற தயக்கம் வந்து விட்டது…
அவளை அவனால் திட்டக்கூட முடியவில்லை…. என்னிடம் இல்லாதது அவனிடம் என்ன இருக்கிறது என்ற அரதப் பழசான காதலில் ஏமாற்றப் பட்டவன் கேட்கும் வார்த்தையைக் கூட அவளிடம் அவன் கேட்க முடியவில்லை… காரணம் அவர்கள் இருவருக்கும் காதலைக் காட்டிலும்… அவள் மேல் இருந்த பாசம்… அவர்கள் இடையேயான இருந்த உறவில் உரிமை இருக்கும் அளவிற்கு ஒரு சிறு நாகரீக இடைவெளி இருக்கும்.. அது கூட அவனே ஏற்படுத்திக் கொண்டதுதான்… இல்லையென்றால் அண்ணன் தங்கை போல்தான் அவர்கள் தெரிவார்கள்.. அந்த இடைவெளிதான் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்ற முடிவை அவர்கள் பெற்றோருக்கு உருவாக்கித் தந்தது. அது அவர்களுக்கிடையேயான திருமணத்தில் பிணைக்கப் பட்டிருந்தால் அது பிரிக்க முடியாத கணவன் – மனைவி தாம்பத்திய பந்தமாயிருந்திருக்கும்… ஆனால் அது விதியின் விளையாடலால் முடியாமல் போய்விட்டது…
மெலிதான குரலில்
“என்னால நம்ப முடிய வில்லை கீர்த்தி… நீ லவ் பண்ணுகிறாய் என்பதை “
“ஏன் வினோத் …. உன்னால நம்ப முடியவில்லை… நீ நம்பித்தான் ஆக வேண்டும்.. எனக்கே தெரிய வில்லை…. நீ என்னை திருமணம் செய்து கொள்ளப் போகிறாய் என்று தெரிந்து தான் பேசி இருக்கிறேன்.. ஆனால் திருமணம் முடியும் வரை உன் நினைவுகளை என் அந்தரங்க மனதில் வர விடமால் கட்டி வைத்திருந்தேன். அங்கு வேறு நினைவுகளுக்கும் இடம் தராமல் வைத்திருந்தேன்.. ஆனால்……
இந்த வார்த்தைகளை கீர்த்திக்கு சொல்ல இஷ்டம் இல்லைதான் …. வேறு வழியில்லையே…
“பாலாவின் காதல் என்னிடம் அனுமதி இல்லாமல்… என் வேலிகளைத் தாண்டி என் மனதில் அமர்ந்து விட்டது. சத்தியமாய் இதற்குப் பெயர்தான் காதலா என்று தெரியவில்லை...”
வினோத்திற்கு நன்றாகப் புரிந்தது…
“நீ தான் வருங்காலக் கணவன் என்று சொல்லிய போதும் வராத காதல் எனக்கு வேறொருவனிடத்தில் பழகிய சில நாட்களில் வந்து விட்டது என்று அவள் சொல்லிக் காட்டிய விதத்தில் புரியாமல் இருக்கு அவன் என்ன தத்தியா?”
அவனுக்கு கோபம் வந்ததுதான் ஆனால் அவளிடம் காட்ட முடிய வில்லை.. ஏதோ தடுத்தது…
அதன் பின் பாலாவினைப் பற்றி விசாரித்தான்.. அவளும் அவன் நம்பும் படி எல்லாவற்றையும் சொன்னாள்.. தற்போது அவன் தந்தையின் உடல்நிலை காரணமாக நடக்கப் போகும் திருமண விபரம் வரை சொன்னாள்.
கீர்த்தியின் மேல் காதல் மட்டும் வைத்திருந்தால் விநோத்திற்கு என்ன பண்ணி இருந்திருப்பான் என்று தெரியாது…. கூடவே அவன் பாசமும் வைத்திருந்தான்… அவள் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று ஏங்கிய மனம் ,அதை வெறொருவன் கையில் எதிர்பார்த்து நிற்க வேண்டிய நிலைதான் பிடிக்கவில்லை… என்னவோ திடிரென்று கீர்த்திக்கு அண்ணணாகி விட்டது போல் உணர்ந்தான். அவன் வேண்டும் என்றே ஏற்படுத்தி இருந்த நூழிலை இடைவெளியை அவன் மனம் மாங்கல்ய பந்தத்திற்கு பதில் சகோதரப் பந்ததத்தால் இணைத்துப் பார்க்க தொடங்கியது போல் இருந்தது. அதற்கு மேல் அவனும் என்னதான் செய்ய முடியும்.. விதி நினைப்பதை அவன் மட்டும் தடுக்க முடியுமா என்ன? அதன் வழியில் செல்ல முடிவு செய்தான்
அடுத்த இரு நாட்களில் பாலா ராகவனின் பணப் பிரச்சனையை தீர்த்து வைத்தான்.அதோடு தான் அவர்களுக்கு பணம் கொடுத்த விசயம் தன் பெற்றோருக்குத் தெரிய வேண்டாம் என்றும் சொல்லிவிட்டான்.
இப்போதும் மைதிலி தான் காரணம் கேட்டாள்…
அவளை அமைதியாகப் பார்த்த பாலா
“கீர்த்தியை பார்த்து என் பணத்துக்காகத்தான் என்னைக் கல்யாணம் பண்ணீயிருக்கிறாள் என்று என் தாய் தந்தை உட்பட யாரும் கூட கேட்க நினைக்க கூடாது. நீங்க கூட நினைத்தீர்கள்…. கீர்த்தி என்னை பணத்திற்காகத்தான் மணக்கிறாள் என்று.. ஏன்?.... எங்கள் திருமணத்திற்கு சம்மதம் வாங்க வரும்போது இடையில் பணம் வந்ததால்தானே…. இதே போல் நான் பணம் கொடுத்த விசயம் என் வீட்டிலும் தவறாக நினைக்க வைத்தால்… கீர்த்தியின் மனம் தாங்காது… அவள் எங்கள் வீட்டில் மருமகளாக காலடி வைக்கும் போது மனதில் எந்த உறுத்தலும் இல்லாமல் காலடி எடுத்து வைக்க வேண்டும்…”
என்ற போதே பாலாவை அவன் மனச் சாட்சி ”டேய் பாலா நாக்குல உனக்கு நரம்பே இல்லயா…. அநியாயத்துக்கு இப்படி பொய் பேசுற.. இது நல்லதுக்கு இல்ல… அவ எந்த உறுத்தலும் இல்லாமல் காலடி எடுத்து வைக்க வேண்டுமா? வழக்கம் போல் தன்னைக் கொல்லும் மனச் சாட்சியை தனக்குள்ளாக புதைத்தவன்
“சொல்லுங்க அத்தை என் அப்பா அம்மாக்கு இப்போதும் தெரிய வேண்டுமா…” என்று கேட்க
ராகவனோ… ” என் பொண்ணு எதற்காகவும் தலை குனியக் கூடாது… அதற்கு நாங்களும் வழி வகுக்க மாட்டோம்… என்று சொன்னவர் மனதிற்குள்ளாக
”தன் மகள் இப்போது கூட மிகவும் சந்தோசமாக இல்லை… விரும்பியவரையே கைப்பிடிக்கும் சந்தோச மன நிலையில் கூட இல்லை…எல்லாம் தன்னால்தான்… இது அவளுக்கு தன்மானப் பிரச்சனை …. தன் அப்பா தன் கணவனிடம் கடன்பட்டிருக்கிறார் என்பது அவள் மனதின் ஓரத்தில் முள்ளாகத் தான் குத்திக் கொண்டிருக்கும்.. எப்படியாவது நான் அந்தப் பணத்தை மாப்பிள்ளையிடம் திருப்பிக் கொடுத்து அவளை சந்தொசப்படுத்த வேண்டும்… என்று தனக்குள்ளாகச் சொல்லிக் கொண்டார்…
முதன் முதலாக மைதிலிக்கும் பாலாவின் மேல் மருமகன் என்ற எண்ணம் வந்திருந்தது. அவன் பணம் கொடுத்து உதவி செய்த போதெல்லாம் சாயாத மனம்….மகளின் மனம், தன்மானம் பற்றி அவன் யோசித்த இடத்தில் சாய்ந்தது…. அந்த நிமிடத்தில் அவனை மருமகனாக ஏற்றுக் கொள்ள பழகிக் கொண்டாள்…
இரண்டு நாட்களாக மைதிலி இதைத் தான் யோசித்துக் கொண்டிருந்தாள்…. புகுந்த வீட்டில் செய்ய வேண்டியைதை எல்லாம் செய்து அனுப்பும் பெண்களுக்கே பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கும் காலத்தில்… தன் மகளின் நிலை வாழப்போகும் வீட்டில் எப்படி இருக்கும் என்று மனம் குமைந்து கொண்டிருந்தாள்…
பாலாவின் யோசனை அதற்கு வடிகாலாக அமைய தன் மகள் வாழ்க்கை பற்றி இனி நாம் கவலைப்பட வேண்டாம் என்று தவறாக முடிவெடுத்தாள்…
அதன் பிறகு பாலா வீட்டில் இருந்து ஒரு நாள் அந்த வாரத்தில் கீர்த்தி வீட்டிற்கு வந்திருந்தனர்… ஜெகநாதனுக்கு கீர்த்தியை மிகவும் பிடித்திருந்தது. அவளின் குடும்பத்தையும் பார்த்தவுடன் பிடித்துவிட்டது. அருந்ததி ஏற்கனவே சொல்லி இருந்தாள் தான்… நேரில் பார்த்தவுடன் அவருக்கும் மிகவும் பிடித்து விட்டது…
எல்லாம் நல்ல படியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. நாள் குறிக்கும் இடத்தில்தான் பிரச்சனை வெடித்தது. அடுத்த முப்பது நாட்களில் எந்த ஒரு நாளும் நல்ல நாள் இல்லாமல் போக மைதிலி.. அதற்கு அடுத்த மாதத்தில் வரும் முதல் முகூர்த்த நாளைக் காட்டி அருந்ததி, ஜெகநாதனிடம் கேட்க அவரும் சரி என்று சொல்லி விட்டார்….ஆனால் திருமணம் முடிந்த பிறகே தனக்கு ஆபரேசன் நடக்க வேண்டும் என்றும் குண்டைப் போட்டார்…
கீர்த்தி இதுநாள் வரை எந்த முடிவிலும் தலை இடவில்லை… அவள் பாலா நடத்தும் நாடகத்தில் முடிந்தவரை அமைதியாகவே இருந்தாள்… அலுவலகம் வீடு என்று போய் வந்தாலும் அவள் பாலாவின் வட்டத்திற்குள்ளாகவே இருந்ததால் பாலாவும் அவளை ஒன்றும் சொல்ல வில்லை… ஏதாவது கூற வேண்டும் என்றால் கூட அலுவலகத்திலே சொல்லி விடுவான்…
இப்போதும் அப்படித்தான்… கீர்த்தியை அழைத்து பிரச்சனையை சொல்ல அவளும் மைதிலியிடம் போய் ஜெகநாதனின் ஆபரேசனைப் பற்றி நினைவுறுத்தி ,தங்கள் திருமணம் உடனடியாக நடக்க வேண்டும் என்றும் அழுத்திச் சொல்ல … மைதிலியோ பிடிவாதாமாக மறுத்து விட்டாள்…. வேண்டும் என்றால் நிச்சயம் செய்து கொள்ளலாம்… ஆனால் மகள் கழுத்தில் தாலி ஏறும் நேரம் நல்ல நேரமாக அமைய வேண்டும் என்று தன் பிடிவாதத்திலேயே நின்றாள்..
கீர்த்திக்குதான் தாயின் பிடிவாதத்தில் கோபமும்…. எரிச்சலும் வந்தது.
”நல்ல நாளில் தாலி ஏறினால் மட்டும் எனக்கு வாழ்க்கை சீராகிடுமா என்ன … இந்த அம்மா வேற.. இந்த கல்யாணத்துக்கு நல்ல நாள் ஒண்ணுதான் குறை”
என்று மனதிற்குள் நினைத்தபடி ராகவனைப் பார்க்க அவரும் மைதி சொல்வதும் எனக்கு சரி தான் என்று படுகிறது என்று ஜகா வாங்கினார்…
ஜெகநாதனோ அதற்கு மேல்… நிச்சயதார்த்தம் எல்லாம் வேண்டாம்.. எனக்கு என் மகனின் மணக்கோலம் தான் பார்க்க வேண்டும் என்று தன் பிடிவாதத்தில் நிற்க
கடைசியாக டாக்டர் முரளியிடம் போய் நின்றனர்…
அவரும் ஜெகநாதனின் உடல் நிலையை பரிசோதித்து விட்டு ஒரு மாதம் கழித்து தாராளமாகப் பண்ணலாம்….. ஆனால் அதற்கு மேல் தள்ளிப் போடக் கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்.
அதன்பிறகு பாலா-கீர்த்தியின் திருமணம் மைதிலியின் விருப்பப்படி, அவள் சொன்ன தேதியிலேயே உறுதி செய்யப் பட்டது
பாலாவின் நிலைமைதான் இப்போது இருதலைக் கொள்ளியாக மாறியது…. என்னவென்றால் … இந்த முப்பது நாட்களில் ராகவனுக்கு பணம் கிடைத்து விட்டால்??? கீர்த்தி தன் மேல் இருக்கும் கோபத்தில் அவள் பாட்டுக்கு பணத்தைக் கொடுத்து விட்டு நீயாச்சு உன் அப்பாவாச்சு…. என்று கழட்டி விட்டு விட்டால் என்று கலக்கமானான்.
இப்போதெல்லாம மதுவைப் பற்றி நினைக்கும் நேரத்தினை விட, இவனுக்கும் கீர்த்திக்கும் நடக்க இருக்கும் திருமணத்தைப் பற்றி நினைத்தே தலை வெடித்தது…. ஆக மொத்தம் அவனின் சொந்த வாழ்க்கை எப்போதும் பிரச்சனைதான்…. நல்ல வேளை அவனின் தொழில் நன்றாகப் போய்க்கொண்டிருந்ததால் அது வேறு அவனுக்கு பாராமாக வில்லை
இதற்கு மேல் கீர்த்தியிடம் இதைப் பற்றி தெளிவு படுத்திக் கொள்ளாவிட்டால் அது சரி வராது…. என்று நினைத்தவன் அவள் என்ன சொன்னாலும் எப்படி அவளை தன் வழிக்கு கொண்டு வர வேண்டும் என்று ஓரளவிற்கு தன்னைத் தயார் செய்தவன்… கீர்த்தியை தன் அறைக்கு அழைத்தான்…
அவனின் சந்தேகங்களை கூறி அவளின் பதிலை கேட்டான்…
கீர்த்தியோ அவன் நினைத்தபடி இல்லாமல்….
”பணம் என்று உங்கள் கைக்கு வருகிறதோ அன்றே நான் போய் விடுவேன் என்று சொல்லி இருக்கிறேன் தான் பாலா… ஆனால் அது நீங்கள் தாலி கட்டிய பிறகுதான் என்று சொல்லி இருக்கிறேன்….”
நீங்கள் எனக்கு கொடுத்த வாக்குறுதிப்படி என் அப்பாவின் பிரச்சனையை தீர்த்து விட்டிர்கள்… என் வாக்குறுதிப்படி உங்கள் அப்பாவின் ஆபரேசனுக்கு என்னால் எந்த ஒரு பங்கமும் வராது… இடையில் எனக்கு பணம் கிடைத்தால் கூட…
இனிமேல் இதைப் பற்றி, என்னைப் பற்றி நினைத்து குழம்ப வேண்டாம்… வழக்கம் போல் நீங்கள் உங்கள் மது கிடைக்க வேண்டும், உங்கள் அப்பா சரி ஆக வேண்டும் என்று உங்களைப் பற்றியே என்ணுங்கள் என்று “என்னை ,உங்கள் மது, உங்களில்” எல்லாம் அழுத்தம் கொடுத்தபடிகூறி வெளியேறிவளை, ஆச்சரியமும் அதே நேரத்தில் மனதில் வலியுடனும் பார்த்தான்…
அவளுக்கு பணம் கிடைத்து விட்டால் என்று யோசிக்கிறாயே பாலா… ஒருவேளை உன் மது கிடைத்து விட்டால் என்று அவன் யோசிக்க… அவள் கிடைத்து விட்டால்,, தன்னால் மாட்டிக் கொண்டிருக்கும் கீர்த்தி என்ற சின்னப் பெண்ணின் வாழ்க்கை சீராகி விடும்…. கடவுளே கீர்த்தியின் வாழ்க்கைக்காகவது… என்னால் பாழாகிக் கொண்டிருக்கும் அவள் வாழ்வு சீராக வேண்டுமென்றால் இந்த முப்பது நாட்களுக்குள் என் மது எனக்கு திரும்பக் கிடைக்க வேண்டும் என்று வேண்ட ஆரம்பித்தான்.
கடவுள் வழக்கம் போல அவனது வேண்டுதலை நிராகரித்து விட்டார் என்றுதான் அவன் உணர வில்லை…..
Comments