அத்தியாயம் 19
திங்கள் கிழமை காலை பாலா ராகவனின் அலுவலகத்தில் இருந்தான், ராகவனும் பாலாவை ஏற்கனவே பார்த்திருந்ததால் அவனை அடையாளம் காண்பதில் சிரமம் இல்லை. ஆனால் இவன் எதற்கு இங்கு வந்திருக்கிறான் என்று யோசித்தபடி இருந்தார்.
அவரது சிந்தனையைக் கலைத்தபடி பாலா பேச ஆரம்பித்தான்.
”அங்கிள் உங்களிடம் நான் தனியாக சில விசயங்கள் பேச வேண்டும்… நீங்க ஃப்ரியாக இருந்தால் இப்போதே பேசலாம்.. விசயம் அந்த அளவு பெரிது …. எனக்கு இன்றே பேசித் தீர்வு காண வேண்டும் …” என்று அவருக்கு என்ன ஏது என்பதை தெரிவிக்காமல் அதிரடியாக ஆரம்பித்தான்.
ஏற்கனவே பல குழப்பத்தில் இருந்த ராகவன்…… பாலாவின் பேச்சில்……, அவருக்கு பல வேலைகள் இருந்த போதும்…….. இதை வேறு ஒத்தி வைத்து அதை நினைத்து குழம்ப மனம் இல்லை. அனைத்தையும் தள்ளி வைத்து விட்டு அவனிடம் பேச தயாரானார்.
அவனுக்கு நம்மிடம் பேச என்ன இருக்கிறது என்ற யோசனையே அவரிடம் இருந்தது… கீர்த்தனா பற்றியெல்லாம் நினைக்கவே இல்லை. லோன் டீடையில்ஸ் ஏதும் கேட்க வந்திருப்பானா என்ற அளவிலேயே இருந்தது… அதுவும் அவன் அவரது வங்கிக்கு வந்திருப்பதால்….. அது மட்டும் இல்லாமல் கீர்த்தனாவை அவனோடு சம்மந்தப்படுத்தி யோசிக்கும் அளவிற்கெல்லாம் தோணவில்லை. ஏனென்றால் அவர் மகள் எதையும் அவரிடம் மறைக்க மாட்டாள்… அது மட்டுமில்லாமல் தற்போதைய குடும்பச் சூல்நிலையினை சொல்லியிருப்பாளோ என்றும் கூட தோணவில்லை. அதற்கும் காரணம் இருந்தது…. மூன்றாம் மனிதர்களிடம் தன் கவலையெல்லாம் புலம்பும் படி அவள் மெச்சூரிட்டி இல்லதாவள் இல்லை ஆனால் விதி ஏனோ அவளிடம் பாலாவே அவள் பிரச்சனையை கேட்டு வாங்கும்படி வைத்ததை அவர் உணர முடியுமோ… இந்த காரணங்களினால் அவர் மனம்ம கீர்த்தனாவை அந்த இடத்தில் சம்பந்தப்படுத்தி யோசிக்கவில்லை. ஒருவேளை தான் ஒரு பெண்ணிற்கு தந்தை என்ற நினைவை விட தற்போதைய தன் அலுவலக பிரச்சனைகள் அவரது நினைவுகளில் ஆதிக்கம் செலுத்தி இருந்ததால் அவருக்குத் தோணவில்லையோ என்னவோ… கீர்த்தியை அந்த இடத்தில் நினைக்கவில்லை.
ஆனால் அதையெல்லாம் தவிடு பொடி ஆக்கும் வகையில் இருந்த பாலாவின் பேச்சில் அதிர்ந்தார்…
பாலா கீர்த்தியிடம் பேசி ஓரளவு அவளைப் பற்றிய விபரங்களை சேகரித்து இருந்தான்…. அதில் விநோத்தின் விபரங்களும் இருந்தன… அவன் தன் தந்தையின் நண்பரின் மகன் என்றும்… இரு பெற்றோருக்கும் இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கும் எண்ணம் இருந்ததையும் சொல்லி இருந்தாள். அவளுக்கு எந்த எண்ணமும் இல்லை என்பதையும் சொல்லி இருந்தாள். பாலாவிற்கு கொஞ்சம் பயம்,சந்தேகம் கூட இருந்தது.. எங்கே அவள் அவனை விரும்பியிருப்பாளோ என்று…. ஆனால் அவன் அதை பற்றி அப்போதைக்கு விட்டு விட்டான். கீர்த்தி தன் நிலைமையினை தெளிவாக கூறிவிட்டாள்… தன் தந்தையின் நிலைமை சரி செய்ய வேண்டும் அது மட்டும் முக்கியம் என்று… அதே போல் அவனைப் பற்றிய விவரங்கள் அவர்களுக்கு எந்த அளவில் அவர்களுக்கு தெரியும் என்பதினையும் கேட்டுக் கொண்டான். முக்கியமாக தன் காதல் அவர்களுக்கு தெரியுமா? என்பதினையும் கேட்டுக் கொண்டான். கீர்த்தி கவியைத் தவிர வேறு யாரிடமும் சொல்ல வில்லை என்பதால் … அவர்களுக்கு தான் சொல்ல வில்லை என்பதையும் சொல்லி இருந்தாள்.
எல்லாவற்றையும் மனதில் வாங்கி அனைவரையும் தன் வழிக்கு கொண்டு வர ஓரளவிற்கு தயார் செய்திருந்தான் .அதன் படி
”அங்கிள் ஏன் என்னை பிடிக்கவில்லை … எங்கள் காதல் பிடிக்கவில்லை… என்று கீர்த்தியிடம் சொன்னீர்கள்..” என்று கொஞ்சம் கூட மனச்சாட்சியே இல்லாமல் நிதானமாக கேட்டான்
அவன் பதறாமல் கேட்டாலும் மொத்தமாய் ஆடிப் போனவர் ராகவன் தான்… அவருக்கு பல அதிர்ச்சிகள்… என்ன கீர்த்தி காதலிக்கிறாளா… அது கூட அவரை பாதிக்க வில்லை… தன்னிடம் சொல்ல வில்லை.. என்பதுதான்… மொத்தமாய் ஆட வைத்தது…. சொல்லாமலேயே தனக்கு அவனைப் பிடிக்க வில்லை என்றும் கூறி இருக்கிறாள்… என்ன நடக்கிறது தன் வீட்டில்….. மைதிலியின் கண்களுக்கு தப்பாமல் போகாதே….. என்று குழப்பினார்..இல்லை இல்லை அதிர்ந்தார்
ஆனால் அவர் அதிர்ந்ததை உணர்ந்தான் தான் பாலா… அவர் மேலே யோசிக்கும் முன் அவன் பேசத் தொடங்கினான்.. தான் முடிக்கும் வரை அவரை பேச விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தவன் ..
நான் தான் அவளிடம் என் விருப்பத்தை கூறினேன்… முதலில் தயங்கினாள் … அதன் பிறகு வினோத் பற்றி கூறினாள்… ஆனால் அவளுக்கு எந்த எண்ணமும் இல்லை அவன் மேல் என்றும் கூறினாள்… நான் அவளை அவள் உணர வேண்டும் என்று அவளை அதன் பிறகு தொந்தரவு செய்ய வில்லை. அதன் பிறகு அவளாகவே வந்து உங்கள் இருவரிடமும் கேட்க வேண்டும் என்று சொன்னாள்… அவள் அவ்வாறு சொன்ன போதே அவள் மனம் விளங்கி விட்டது… ஒருவேளை ஒத்துக் கொள்ளாவிட்டால் என்ன செய்வாய் என்று அவளை வேண்டுமென்றே குழப்பினேன். அதன் பிறகு அவள் யோசித்திருப்பாள் போல.. என்னிடம் சம்மதம் சொன்னாள்…. பின் உங்கள் இருவரிடமும் தகுந்த நேரத்தில் சொன்னால் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வீர்கள் என்று சொல்லியிருந்தாள்… ஆனால் அவள் சொல்வதற்கு முன் எனக்கு என் தந்தையின் உடல்நிலை காரணமாக உடனே திருமணம் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறேன்… கடந்த வாரம் அதைப் பற்றி அவளிடம் சொல்லி இருந்தேன்… என் பெற்றோரை என்று உங்கள் வீட்டுக்கு வர சொல்லலாம் என்று கீர்த்தியின் பதிலை நான் எதிர்பார்த்து காத்திருக்க அவளோ உங்களுக்கு இஷ்டம் இல்லை… என்றும் அதனால் இப்போதைக்கு திருமணம் செய்ய முடியாது என்றும் ….. காத்திருக்க முடியும் என்றால் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை… ஆனால் உடனே என்றால் தன்னால் முடியாது என்றும் .. தன்னை வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறிவிட்டாள் … இப்போ சொல்லுங்கள் அங்கிள் எதனால் என்னைப் பிடிக்க வில்லை என்று முற்றிலும் பொய்யாய் முடித்தான்…
இப்போது பாலா பதட்டமாய் இருந்தான் … பின்னே ஒரு கட்டுக் கதை சொல்லியவனை அவன் மனசாட்சி நார் நாராய் கிழித்துக் கொண்டிருந்தது.
ஆனால் ராகவனின் தந்தையுணர்வு முற்றிலும் விழித்து மேலொங்கியிருந்தது. அவன் சொன்ன எதையுமே அவரால் நம்ப முடியவில்லை…ஏனென்றால் கீர்த்தியை முற்றிலுமாக அறிந்தவர் அவர்…. அவளின் ஒவ்வொரு அசைவும் அவருக்கு அத்து படி…தன் மகள் இந்த அளவெல்லாம் குழம்புவள் இல்லை… அப்படியே அவள் குழப்பாமான மன நிலையிலிருந்திருந்தாலும் அவர் கண்களுக்கு தப்பி இருக்காது. இந்த ஒருவாரத்தில் வேண்டுமென்றால் அவளை அவர் கவனிக்காமால் இருந்திருக்கலாம்… ஆனால் அப்போதும் மைதிலியிடம் அவள் தப்ப முடியாது….என்னவோ நடந்திருக்கிறது… அதே நேரத்தில் பாலா சொல்வதையும் அவரால் விட முடியவில்லை. ஒரு பொறுப்பானவன்… ஒரு கம்பெனியை ஏற்று நடத்துகிறவன் … ஏனோ தானோ வென்று முடிவுகளை எடுக்க மாட்டான்…. எடுத்தோம் கவிழ்த்தோம் என்றும் பேச மாட்டான். அதனால் அவன் சொல்வதையும் அலட்சியப் படுத்த முடியவில்லை.. அவனது தீவிரமான முக பாவம் முடிவு வேண்டும் என்பது போல் இருந்தது
கொஞ்சம் சகஜ நிலைக்கு திரும்பியவர்… நான் உங்களுக்கு பதில் சொல்கிறேன்… ஆனால் கீர்த்தியும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.. என் குடும்ப விசயம் என்பதால் வீட்டில் பேசலாம்… என்றபடி அவனைப் பார்த்தார்….
அவரின் பார்வையிலேயே அவர் அவனை நம்ப வில்லை என்பதை உணர்ந்தான்… இதற்கு மேல் எப்படி சொல்வது …
“டேய் பாலா கீர்த்தி அங்க சொதப்பினால் எல்லாம் கோவிந்தா … கடவுளே நீதான் காப்பாற்ற வேண்டும்” என்று மனதில் பேசிக் கொண்டிருந்தான்…
அவனின் தவிப்பு அவனது முகத்தில் தெரிந்தது ராகவன் அதைக் கவனிக்காமல் இல்லை…
மைதிலிக்கு போன் செய்து தான் வீட்டிற்கு வந்து கொண்டிருப்பதாக கூறினார். மைதிலி பதறிப்போய் என்ன ஆஃபிஸில் ஏதாவது … என்று இழுக்க …. அதெல்லாம் ஒன்றுமில்லை… இல்லை இது வேற விசயம்… என்ற படி பாலாவைப் பார்த்தார்… அவனது காரில்தான் இருவரும் வந்தனர். அவர் வந்ததால் அவன் கீர்த்தியிடமும் பேச முடியவில்லை… ஒரு வித தவிப்புடன் வந்தான்…
மைதிலி மறுபடியும் அவரிடம் என்ன என்று கேட்க சற்று கோபத்துடன் வந்துட்டு இருக்கேன்னு சொல்றேன்… அது வரைக்கும் பொறுமை இல்லையா என்று கேட்ட வுடன் .. இங்க ஒருத்தி ஆஃபிஸ் போகலையா என்று கேட்டாள் பதில் சொல்ல மாட்டேங்கிறாள்…. அவங்க MD காலையில் இருந்து கால் பண்ணினால் எடுக்காமல் உட்கார்ந்து இருந்து விட்டு… நான் பேசச்சொன்ன வுடன் அவரிடமே எரிந்து விழுகிறாள்… கேட்டால் அவள் லீவ் போட்டால் கூட வேலை என்று தொல்லை கொடுக்கிறார்கள் … என்று எரிச்சல் வேறு… என்று மகளைப் பற்றி சரியான நேரத்தில் ராகவனிடம் போட்டுக் கொடுத்தாள் …. மைதிலி தொடர்ந்தாள்…
”நம்ம பிரச்சனையில் ஏன் அவரிடம் எரிச்சலாக பேசுகிறாய் என்றால் அதற்கும் பதில் சொல்லாமல் போய் அவள் ரூமில் இருக்கிறாள் நீங்க என்னவென்றால் இப்படி” என்று தன் குமுறலை சொல்லி விட்டு போனை வைத்தாள்.
கீர்த்தியைப் பற்றி அவன் சொன்னது உண்மையோ எனும் படி மைதிலியின் புலம்பல் இருந்தது
வீட்டில் நுழைந்தபோது ஹாலில் மைதிலி மட்டுமே இருந்தாள்…. ராகவனை எதிர்பார்த்தபடி இருந்தவளுக்கு பாலாவை அவருடன் பார்த்தவள் ஒன்றும் புரியாமல் ராகவனை பார்த்தாள்.
மைதிலியின் பார்வையை உணர்ந்தபடி … கீர்த்தியை அழைத்தார்…. இந்த நேரத்தில் அப்பாவா என்றபடி அறைக்கதவைத் திறந்தவள் பாலாவும் அங்கு இருந்ததை பார்த்து அவனைப் பார்த்து அதிர்ந்தாள்… அவள் கண்களில் அதிர்வு ,கோபம் கலக்கம் எல்லாம் ஒன்றன் பின் ஓன்றாக வந்ததை ராகவன் உணர்ந்த போது கீர்த்தியை அவரால் அனுமானிக்க முடிந்தது…. பாலாவிற்கும் அவளுக்கும் மத்தியில் ஏதோ ஒன்று இருக்கிறது… மகள் மறைத்து விட்டாள்… என்பதை நினைத்த போதே மனதின் ஒரம் வலித்தது… அந்த ஏதோ ஒன்று பாலா சொன்ன விசயமாக இருந்தால் அவளின் மூலமாக தெரிய வேண்டும்… உண்மை இருக்கும் பட்சத்தில் அவருக்கும் பெரிய எதிர்ப்பெல்லாம் இல்லை.. அவரும் காதல் திருமணம் செய்தவர்தான்.. அவள் இப்போது திருமணம் வேண்டாம் என்று சொன்னது கூட தங்கள் நிலைமையினை எண்ணிதான் என்பது அவருக்கு விள்ங்கியது….
முதலில் பாலாவை அப்பாவுடன் பார்த்தவள் அதிர்ந்தாள்…. ஒன்றும் சொல்லாமல் வீட்டிற்கு வந்திருக்கிறான்… தன்னிடம் சொல்லாமல் ஏன் வந்தான்… என்று கோபம் வந்தது.. என்ன சொல்லி வைத்திருக்கிறானோ… அப்பா என்ன கேட்க போகிறாரோ என்ற போது கலக்கம் வந்து விட்டது…..
அவளின் அனைத்து மனநிலையும் ராகவனுக்கு உணர்ந்ததை அறியாமல்…
”அப்பா பாலா…சா.. பாலா எப்படி இங்கு” என்று தடுமாறியவள் மேலே பேச முடியவில்லை…
மைதிலியும் அவளது தடுமாற்றமான பேச்சில்தான் கீர்த்தியை கவனிக்க ஆரம்பித்தாள். ராகவனை என்ன நடக்கிறது இங்கு என்பது போல் பார்க்க அவர் மனைவியிடம்…
”நம்ம பொண்ணு வளர்ந்துட்டான்னு… உங்களுக்கு சொல்லிட்டே இருக்கணும்னு அடிக்கடி சொல்வியே மைதிலி.. இன்னைக்கு பாலா கூட அதைச் சொல்லாமல் சொல்லிட்டாரு”…என்று கீர்த்தியை பார்த்தார்….
அவளோ…..அவர் பார்வையை சந்திக்க முடியாமல் குனிந்தாள்…. இதுநாள் வரை கீர்த்தி தன்னிடம் தலை குனிந்து பார்த்ததில்லை.. முதல் முறை …. இதுதான் முதல் முறை….
மைதிலிக்கோ அவர் என்ன சொல்கிறார் என்றே புரியவில்லை…. பாலாவைப் பார்த்தால் அவன் கீர்த்தியை பார்த்துக் கொண்டிருந்தான்… கீர்த்திகோ அவன் என்ன சொன்னான் …. இப்போ அப்பா என்ன கேட்கப் போகிறாரோ என்றிருந்தது…..
“கீர்த்தி எனக்கு பாலாவை பிடித்து இருக்கிறது …. “ என்றார் மொட்டையாக
மைதிலிக்கு சத்தியமாய் ஒன்றும் புரியவில்லை... கீர்த்திக்கும் தான்.. புரியாமல் விழித்தவள்… பாலாவை பார்த்து முறைத்தாள்… பாலா ராகவன் சொன்னவுடன் கீர்த்தியைத்தான் பார்த்தான்… அவன் சொன்னதற்கு மாற்றாக ஏதும் சொல்லி விடுவாளோ என்று … கீர்த்தியிடம் அவன் சொன்னதைப் பற்றி விசாரிப்பார் என்று பார்த்தால் இப்படி பேசுகிறாரே என்று இருந்தது…
பாலாவை கோபமாய் பார்த்தவளை பார்த்தவர் ராகவன்… கிட்டத்தட்ட பாலா சொன்னதெல்லாம் உண்மை என்று முடிவுக்கு வந்து மைதிலியிடம் பாலா கூறியவை எல்லாம் கூறினார்…
இப்போது மைதிலிதான் மலை ஏறி இருந்தாள்…
“என்னடி நடக்குது … அவர் சொல்வதெல்லாம் உண்மையா”
மைதிலியின் குரலின் கடுமை மட்டுமே கீர்த்தி கேட்டாள்…குனிந்த தலை நிமிர வில்லை … அவள் பதில் சொல்லாமல் இருப்பதை பார்த்து இன்னும் மைதிலிக்கு இன்னும் கோபம் அதிகமாகியது…. அவளது கோபத்தை உணர்ந்த பாலா…
”கீர்த்தி பதில் சொல்லு …” என்று அவள் பெற்றோர் முன்னே அவளிடம் உரிமையுடன் பாலா பேச ஆரம்பிக்க…. கீர்த்தி சட்டென நிமிர்ந்து அவனை முறைக்க…. இவ இப்டி மொறச்சு மொறச்சு பார்த்தே காரியத்தையே கெடுத்து விடுவாள் போல என்று பாலாவுக்கு தோண்றினாலும்… அவளிடம் சொல்லியிருந்தால் நம்மைப் போலவே அவளும் நடிக்க ஆரம்பித்து இருப்பாள்… ஒவர் டோஸ் ஆகி இருக்கும் போல் தோன்றியது.. ராகவன் அவனது பேச்சினை நம்ப வில்லை ஆனால் கீர்த்தியின் பார்வை மாற்றங்கள்தான்… அவரை …பாலாவின் கூற்றை நம்ப வைத்திருக்கிறது என்பது அவரையே பார்த்திருந்ததினால் உணர முடிந்தது அவனுக்கு
”அவரை எதுக்குடி பார்க்குற …. என்னப் பாரு … எப்ப இருந்து இதெல்லாம் நடக்குது… அவர் சொல்ரதெல்லாம் உண்மையா” என்று கேட்க… வெள்ளி அன்று அவள் அழுதது வேறு மைதிலிக்கு ஞாபகம் வந்தது…. இவனிடம் மறந்து விடு என்று சொல்லி விட்டுதான் தன் மடியில் விழுந்து அழுதாளா என்று நினைக்கையில் இன்னும் கோபம் தான் வந்தது
ராகவன் ” சொல்லுமா … இப்பக் கூட நீ சொல்லும் வரை நான் நம்ப மாட்டேன் … “ என்று மகளைப் பார்க்க
மைதிலியோ ”இன்னும் என்ன.. அவ இருக்கிற தோரணயே சொல்லுதே” என்றாள் கோபம் கலந்த கேலியாக…
அவளின் கேலிப்பேச்சில் நிமிர்ந்தவள்… கண்களில் நீருடன்
“ஏம்மா எனக்கு ஒருத்தரை பிடிக்க கூடாதா இல்ல…. லவ் வரக் கூடாதா… ” என்றாள் …இப்போதும் அவள் நேரடியாய் சொல்ல வில்லை
அவளின் கண்ணீரைப் பார்த்த ராகவனுக்கு அதற்கு மேல் தாங்க வில்லை…
”அப்போ ஏன்மா அவரை வேறு பெண்ணை திருமணம் செய்ய சொன்னாய்” என்று கேட்க
”நான் ஏன் சொன்னேன் என்று உங்களுக்கு தெரியாதாப்பா….”
மைதிலி ”என்னங்க நீங்களும் அவளோடு பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.. அவளைக் கண்டிப்பதை விட்டு” என்க
இப்போது பாலா அவர்கள் பேச்சில் இடையிட்டான்…
“என்ன பிரச்சனை அங்கிள்….” என்று எதுவும் தெரியாதது போல் வினவ
”எனக்கு யாரையும் பிடிக்கக் கூடாதானு கேட்க தெரியுதுல்ல…. எங்களைப் பார்த்து… என்ன பிரச்சனை என்று…. அந்த பிடித்தவரிடம் ஏன் சொல்ல வில்லை”
என்று மறுபடியும் மைதிலி கீர்த்தியிடமே வந்தாள்… அவளுக்கு வினொத் இனி மருமகன் இல்லை என்ற வருத்தம் தான் இப்போது …. ஏனோ ராகவனை போல் பாலாவை ஏற்றுக் கொள்வதற்கு மனம் இல்லை….
மைதிலி என்று அவளை அடக்கியவ ராகவன்… கொஞ்சம் கூட தயங்காமல் பாலாவிடம் தன் நிலமையினை விளக்கினார்… பாலாவும் என்னவோ அப்போதுதான் கேட்பவன் போல் கேட்டான்… அவன் நினைத்த மாதிரியே ஒவ்வொன்றும் நடந்து கொண்டிருப்பதில் அவனுக்கு சந்தோசமே…
ராகவன் முடிக்கும் வரை அமைதியாக இருந்தவன் கீர்த்தியை பார்த்து முறைத்தான்….
மைதிலிக்கோ இவங்க ரெண்டு பேருக்கும் முறைப்பதைத் தவிர வேறு ஏதும் தெரியாதா… இதுக்கு பேர் காதலாம்.. என்றெல்லாம் நினைத்தபடி இருந்தாலும் தங்கள் பெண்ணை அவர்களுக்கு முன் அவன் முறைத்தது அவளுக்கு பிடிக்கவில்லை.
கீர்த்தியை கூர்மையான கண்களில் நோக்கியவன் “இதை ஏன் என்கிட்ட சொல்லலை” என்று அதட்டினான்…
இத்தனை வருடம் வளர்த்த எங்களிடமே உன்னைப் பத்தி சொல்லலை.. இப்போ பழகின உன்னிடம் சொல்ல வில்லை என்று உனக்கு கோபம் வேறா என்று மனதிற்குள் புளுங்கினாள் மைதிலி….
ராகவனுக்கும் அதே விசயம்தான் தோன்றியது…
தன் பெற்றோரின் முன்னிலையில் அவன் அவளை அதட்டியது …சுர்ரென்று தலைக்கு ஏறியது
”ஏன்… சொல்லி இருந்தால் என்ன பண்ணியிருப்பீர்கள் … சொல்லுங்க ” என்று சூடாக கேட்டாள்…..
”நான் ஏன் உனக்கு சொல்லனும்… என்ன பண்றேனு பாரு” என்ற படி போனில் யார்க்கோ தொடர்பு கொண்டான்… மறுமுனையில் தொடர்பு கிடைத்ததும் அதை ஸ்பீக்கரில் வேறு போட்டான்…. கீர்த்திக்கோ அன்று அவள் கேட்ட போதும் இப்படித்தான் செய்தான் என்பதால் பெரிதாய் ஆர்வம் காட்டவில்லை…
எதிர் முனை பேச ஆரம்பிக்கும் முன்னரே பாலா பேச ஆரம்பித்தான்…
”ஹேய் சந்தோஷ் நீ ரொம்ப நாளாய் கேட்டுக் கொண்டிருந்தாயே… அந்த ப்ரொபெர்டிய நான் சேல் பண்ண டிசைட் பண்ணிட்டேன்… என்ன பண்ணுவியோ தெரியாது. எனக்கு மிக விரைவில் பணம் வேண்டும்…” என்றபடி பேச.
சந்தோஷ் என்பவனோ
”டேய் என்னடா இவ்ளோ பெரிய சர்பிரைஸ் தந்துட்ட… என்னடா எதும் பணப் பிரச்சனையா… கிட்டத்தட்ட 2 வருசமாய் கேட்டுட்டு இருக்கேன்… அப்போதெல்லாம் முடியாதுன்னு சொல்லிட்டு ஏண்டா…” என்றவனிடம்
சொன்னதை மட்டும் செய் … நான் அப்புறமாய் பேசுகிறேன்… என்றவன்.. அதைத் தொடர்ந்து
ஆடிட்டராய் இருக்கும் அவன் நண்பனிடம் பேசினான்…. பிறகு இன்னும் ஓருவரிடம் பேசினான்… இப்போது எழுந்து வெளியே போனான்
”நாளைக்கே வேணும் எனக்கு… பணம் கிடைத்த பின்னர் அனைத்து டாக்குமெண்டையும் என்னிடம் ஒப்படைத்து விட வேண்டும்… இப்போ வைக்கிறேன் ” என்றபடி முன்னர் அமர்ந்த இடத்தில் வந்து அமர்ந்தான்…
கீர்த்தி ,ராகவன் மற்றும் மைதிலிக்கு…. இன்று வரை அவர்களுக்கு கிடைக்குமா? எப்படி தயார் செய்வது….. என்ற பணம் அரை மணி நேரத்தில் அவனுக்கு எப்படி சாத்தியமாயிற்று என்று யோசிக்கும் போதே பாலா ராகவனிடம்
“Sorry Uncle … நானே நீங்க கேட்ட அடுத்த நிமிடமே உங்களுக்கு தந்திருக்கலாம் … என்று அரை மணி நேரம் கூட அவனுக்கு அதிகம் தான்… என்று அவர்களை அதிர வைத்தான் ….
“ஆனால் தேவை இல்லாத tax ப்ராப்ளம் வரும் என்றுதான் தரவில்லை…. லேண்ட் கூட சந்தோஷ் பேர்லதான் இருக்கு…. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்துதான் வாங்கினோம்… அதில் மால் கட்ட வேண்டும் என்று நினைத்தான்…எனக்கு பிடிக்க வில்லை.. அதனால் எனக்கு சேர்ந்த பகுதியை தராமல் இழுத்துக் கொண்டிருந்தேன்.. இப்போதான் அதற்கு நேரம் வந்தது போல் என்று” கூடுதல் தகவலும் தந்தான்..
இப்போது கீர்த்தியை பார்த்தான் …
“அவளிடம் 1 week டைம் உன்னால் வேஸ்ட்” என்று கூறி பார்க்க…
”ராகவனுக்கு நம்பவே முடியவில்லை….. பாலா” …என்றவரிடம்… அவர் பணம் கிடைத்து விட்டதா என்று நம்ப முடியாமல்… தான் தப்பித்து விட்டோமா என்று உணர்ச்சி வயப்பட்ட நிலையில் இருக்க …. அவருக்கு அதைத்தாண்டி வேறொன்றும் தோன்ற வில்லை
“என்ன மாமா என்னை ஒங்க மருமகனா ஏத்துக்கறீங்களா… என்றபடி… ”சாரி சாரி நீங்கதான் ஏற்கனவே என்னை பிடிச்சிருக்கு என்று சொல்லி விட்டீர்களே” என்றபடி மைதிலியை நோக்கினான் அவளது சம்மதத்துக்காக
அதைப் பார்த்த ராகவன் அவள் மட்டும் என்ன சொல்லப் போகிறாள் என்று நினைத்தார்.
ஆனால் மைதிலியோ ….
”தம்பி இந்த பணம் தருவதற்கு என் பொண்ணு உங்களிடம் எதை பணயம் வைத்தாள்….” என்று கண்களில் கூர்மையுடன், கொஞ்சம் நடுக்கத்துடன் கேட்டாள்….
மைதிலியின் கேள்வியில் பாலாவே ஆடிப் போய் விட்டான்.. இருந்தாலும் இவ்வளவு புத்திசாலியாக இருக்கக் கூடாது என்று எண்ணம் தோண்றியது..
கீர்த்தி அப்படியே மலைத்து விட்டாள்…
ராகவனோ ஏன் எனக்கு இந்த எண்ணம் தோன்றவே இல்லை… என்று மனம் குமைந்தார்..
இதெல்லாம் ஒரு நொடிதான்… பாலாவிடமேவா…
”இப்படி ஒரு எண்ணம் வந்த பிறகு …. நான் பணம் தருவதில் அர்த்தம் இல்லை… நான் பணம் கொடுப்பதால் எனக்கும் கீர்த்திக்கும் உள்ள காதல் பணயப் பொருளாக மாறுவதில் எனக்கும் விருப்பம் இல்லை. அதனால் …. என்று நிறுத்தினான்
இப்போது கீர்த்திக்கு ஒரு பக்கம் அவனிடம் இருந்து தப்பித்த நிம்மதியும், மறுபக்கம் ராகவன் கவலையும் மாறி மாறி வந்தது..
”உங்க பொண்ண மட்டும் கல்யாணம் பண்ணிக் கொடுங்கள்… அப்போ உங்களுக்கு சந்தேகம் வராது இல்லையா… எனக்கும் இப்போ பணம் தரும் மனநிலை இல்லை…. இன்னைக்கு உங்களுக்கு வந்த சந்தேகம் யார் யாருக்கு வருமோ… என் காதலை அப்படி ஒரு இடத்தில் இருத்த மனம் இல்லை என்றவன்…
ராகவனிடம் “என்ன மாமா என்னோட நிலைமையினை சொல்லி விட்டேன்… அப்பா அம்மாவை எப்போ வரச் சொல்ல…. என தன் பிடியில் நிற்க…
மைதிலி நிலைமைதான் இப்போது சொல்லும் படி இல்லை…
கீர்த்தி பாலா பேசியதில் , அவன் சமாளித்த விதம் ஆச்சரியமாக இருந்தது… எப்படி இப்படி கொஞ்சம் கூட யோசிக்காமல் தன் வியூகத்தை கொண்டு செல்கிறான்.. அவன் நினைத்தது மட்டுமே நடக்க வேண்டும் என்ற பிடிவாதம்…. ஆச்சரியம் இப்போது கோபமாக மாறியது…
காதலாம் காதல் அப்படியெல்லாம் இல்லை… நீ போடா வெளியே அவள் அம்மா அப்பாவிடம் தான் அவர்களின் மகள்தான்…. அவர்களிடம் சொல்லாமல் தான் எதையும் மறைக்க வில்லை என்று கத்த வேண்டும் போல் இருந்தது…
ஆனால் முடியவில்லை…
ராகவனுக்கு அவனிடம் என்ன பதில் சொல்ல என்று தெரியவில்லை… மைதிலியோ பாலா உண்மையிலயே நேசம் வைத்திருக்கிறானோ என்று தோன்றியது….
இந்த நிலைமையினையும் பாலாவே சமாளித்தான்…
மைதிலியை பார்த்தான்…
”அத்தை… நான் உங்களை அப்படி கூப்பிடலாம்தானே என்றபடி…. பணம் ஒரு பிரச்சனை இல்லை உங்களைப் பொறுத்தவரை என்றாலும்…. ஆனால் எனக்கு கீர்த்தியை உடனே திருமணம் செய்ய வேண்டும்… என் தந்தைக்காக… அவரது ஆபரேசன் நடக்கும் முன்னர் அவர் மகன் திருமணத்தை பார்க்க வேண்டும் என்கிறார்… அதனால்தான் இந்த அவசரம்… வேறு எந்த காரணமும் இல்லை….ஆனால் கீர்த்தி உங்கள் பிரச்சனை தீராமல் என்னுடன் திருமண வாழ்வைத் தொடங்குவாளா? சொல்லுங்கள்… அவள் மன நிம்மதியுடன் என்னுடன் சந்தோசமாக இருக்க வேண்டும் என்றால் தயவுசெய்து என் உதவியை ஏற்றுக் கொள்ளுங்கள்….” என்று அவள் நம்பும்படி பேசி மைதிலியை பார்த்தான்….
இதற்கு மேலும் அவள் மறுத்தால் அது அவள் குணத்திற்கு மாறானது… அவள் ராகவனை சம்மதம் சொல்லுங்கள் என்பது போல் தலை ஆட்ட ராகவன் தன் சம்மதத்தை சொன்னார்.
கீர்த்திக்கோ….தன் வாழ்க்கை இவ்வளவு தான் …என்று முடிவுக்கு வந்தாள்
பிறகு கீர்த்தியை தனியாக அழைத்தான்… பெற்றொரை பார்த்து தயங்கியவளை பாலா “இன்னும் என்ன கீர்த்தி… என அவளைப் பார்த்தபடி “கொஞ்சம் கார் பார்க்கிங் வரை கீர்த்தியை கூட்டிட்டு போகலாமா “ என்று அவள் பெற்றோரிடம் அனுமதி கேட்க
மைதிலியோ ”அதுதான் வாழ்க்கை முழுக்க உங்களோடு வருவதற்கு அனுமதி கொடுத்தாயிற்றே ….என்றாள் ஒரு மாதிரியான குரலில் பட்டென்று….
இது மைதிலியின் குணம் இல்லைதான்…. ஏனோ அவள் மனம் பாலாவை ஏற்க தயங்கியது… இல்லை அவள் உள்ளுணர்வு ஏதோ சரி இல்லை என்று மட்டும் சொன்னது
கீர்த்திக்கே அவள் தாயின் பேச்சில் ஒரு மாதிரி ஆகி விட பாலா என்ன நினைப்பானோ என்று பாலாவை சட்டென்று பார்த்தாள்… அவன் முகத்தில் சிறு புன்னகை மட்டுமே இருந்தது.
அவன் இப்போது கூப்பிட்டது கூட அவர்களின் நாடகத்தின் ஒரு அங்கமே
இவ்வளவு பேசியவன் கீர்த்தியிடம் ஒன்றும் பேசாமல் போகிறானே என்று நினைத்து விட்டால்….. அதிலும் மைதிலியிடம் மாட்டாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே தனியாக அழைத்தான்
கீர்த்தி ஏதும் பேச வில்லை அவனிடம் பேசத் தோன்றவில்லை…
விடை பெறும் போது
“கீர்த்தி நீ ஸ்மார்ட்னு எனக்கு தெரியும்..ஆனால் அது எங்கிருந்து வந்திருக்கிறது என்பது இப்போது தான் தெரிகிறது… என்று மைதிலியை மனதில் வைத்து பேசினான்.. உங்க அம்மாலாம் business பக்கம் வந்தால் என்னை மாதிரி ஆட்கள் எல்லாம் வீட்டில் தான் குப்பை கொட்ட வேண்டும்” என்று சொல்லி விட்டு சென்றான்…
”ஆமாம்… எங்க புத்திசாலித்தனத்தை நீ தான் மெச்சிக் கொள்ள வேண்டும்….அதைத் தான் பணத்தை வைத்து அடித்து விட்டாயே… இப்போது பாராட்டு வேறா….” என்று நினைத்தாள்… மனதினுள் மட்டுமே
ராகவன் – மைதிலிக்கு வினோத்தை எப்படி எதிர் கொள்வது என்று இருந்தது… கீர்த்திக்கு வாழ்க்கையில் இனி என்ன என்பது போல் இருந்தது. இப்போதைக்கும், இனிமேலும் தன் பெற்றோர் மற்றும் அவர்களின் சந்தோசமே!!! தன் வாழ்க்கை அவ்வளவுதான்…. அவளுக்கு வினோத்தை பற்றியெல்லாம் பெரிதாக கவலை இல்லை…. பாலாவிற்க்கோ குற்ற உணர்ச்சிதான் மேலோங்கியிருந்தது…. அவன் அப்பா மட்டும் இந்த நிபந்தனை விதிக்காவிட்டால் என்றிருந்தது…
யாருக்கும் அங்கு முழு சந்தோசம் இல்லை…
Comentarios